•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, June 19, 2015

தமிழர்க்குத் தலைகுனிவு !

மூபத்து ஆண்டுகளாய் மூர்க்கர் எமக்கிழைத்த
ஆபத்து மீண்டும்எம் அரும்மண்ணில் தோன்றியதோ?
தாபத்தால் காமம் தலைக்கேறி நாய் ஒத்தோர்
பாபத்தைச் செய்தார்கள் பதைக்கிறதே நெஞ்செல்லாம்.

மாற்றார் செய் கொடுமைகளை மண்ணில் சகித்திருந்தோம்
வேற்றார் தம் செயலென்று வெம்பித் தணிந்திருந்தோம்
நேற்றிந்த வரலாறு நீங்கிற்று என நினைக்க
கூற்றொத்த கொடியர் பலர் கூடிச் செயல்புரிந்தார்.


மெல்ல இதழ் விரித்து மேதினியில் மலர்ந்த ஒரு
கள்ளமில்லாப் பூவை கயவர்களும் கள்வெறியில்
உள்ளம் நடுங்க உலகமெலாம் விதிர் விதிர்க்க
அள்ளிச் சிதைத்து அசிங்கங்கள் செய்தார்கள்.

உறவென்றறிந்திருந்தும் உண்மத்த நாய்கள் அவை
விறகாய் நினைந்தந்த வெண்மலரைச் சிதைத்தனவாம்
நறவில் மதி மயங்கி நமைக் கேட்க யாரென்று
தரமற்ற நாயொத்தோர் தம்காமப் பசிதீர்த்தார்

கல்விக் கண் திறக்கும் கனவோடு சென்றவளை
அள்ளிச் சென்றந்த அசிங்கம் பிடித்தவர்கள்
துள்ளித் துடிதுடிக்க துன்பத்தணல் ஏற்றி
கொள்ளிக்களித்தார்கள் கொடுமை பல செய்தார்கள்.

தமிழர்க்குத் தலைகுனிவு தரம் மிகுந்த ஈழத்தின்
அமிழ்தொத்த பண்பாட்டின் அழகுக்குத் தலைகுனிவு
நிமிர்ந்துலகில் நீதிக்கு நேர் நின்று குரல் கொடுக்கும்
எமதினத்தின் குன்றாத இயல்புக்குத் தலைகுனிவு.

புலம்பெயர்ந்து ஓடிப்போய் பொன்னாகக் கொணர்ந்திங்கு
நலங்கள் பல செய்வார்கள் நம்மவர்கள் என நினைந்தோம்
விலங்காக மாறித்தன் வெறும் பணத்தால் நீதியதை
துலங்காத வழி செய்யும் துஷ்டனையா எதிர்பார்த்தோம்?

உலகெல்லாம் சென்றங்கு ஒன்றாகக் குரல் கொடுத்து
நலம் இங்கு சேரவென நாளுந்தான் பாடுபடும்
உலைகின்ற நெஞ்சங்கள் ஒருவனவன் செயலதனால்
தலைகுனிந்து நின்றால் இத்தரணியது சிரிக்காதா?

தாபத்தால் கீழோர் செய் தரமற்ற செயலதனின்
ஆபத்தால் நெஞ்சம் அதிர்ந்து சிதைந்தாலும்
கோபத்தால் நாம் எங்கள் கொள்கை பிழையாது
பாபத்தை நீதியினால் பறித்திடலே நெறியாகும்!
-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
வலம்புரி 24.05.2015

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...