•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, July 3, 2015

தூண்டில் - 4 (கேள்வி பதில்கள்)


இந்தவார தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதி பதில்கள். 

நீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (Inbox) அனுப்பி வைக்கலாம்.
கேள்விகளை  Kambavaruthi Jeyaraj  எனும் Facebook பக்கத்திற்கோ அல்லது kambanlanka@gmail.com எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
உங்கள் கேள்விகளும் பதிலும் இத்தளத்தில் வெளிப்படையாக பிரசுரமாகும். —
********************************************************************


கேள்வி எண்:01

Kandasamy Vaheesar
இலக்கியவாதியாய் இதயம்(இமயம்) தொட்டவர் அரசியல் பேசி இதயம் கிழிப்பதேன்?

Like · Comment · 9 minutes ago ·
331 people like this.
 • பதில் முதலில் பாராட்டுக்கு நன்றி. 
  கற்பனைப்பாத்திரமான தசரதனையும் இராமனையும் வைத்து அறம் சொன்னபோது உங்களுக்குப் இனித்தது. நிஜப் பாத்திரங்களை வைத்து அறம் சொல்கிறபோது உங்களுக்குக் கசக்கிறது. 'உண்மை சுடும்" என்றான் ஜெயக்காந்தன். தாயின் சூடுபட்டால்தான் முட்டையிலிருந்து குஞ்சு வரும். அதுவந்த பின்பு அரசியலிலும் என்னைப் பாராட்டுவீர்கள்.
  11 minutes ago · Like ·  99
 • Mr.கூத்தாடி சில முட்டைகள் கூழாவும் போயிடும்.
  11 minutes ago · Like ·  694


கேள்வி எண்:02
Varnan Neethirajah
மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவுக்கு, இலக்கியம் என்று வருகின்ற போது நீங்கள் ஓர் அதி உன்னத ஜாம்பவான். அது தொடர்பில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் தங்களின் அரசியல் முகம் தொடர்பாக அண்மைக்காலங்களில் வெளிவரும் பதிவுகளைக் காணும் போது சந்தேகங்கள் எழுகின்றன. உண்மையில் உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு? அல்லது என்ன பிணக்கு? தங்கள் வாயிலிருந்தே உண்மைகளைத் தெரிய விரும்புகிறோம்.

Like · Comment · 9 minutes ago ·
2237 people like this.
 • பதில் நீங்கள் ஒருவராவது நேரில் கேட்டீர்களே. நன்றி. மிகவிரைவில் இதே பகுதியில் 'கம்பன்கழகமும் புலிகளும்" எனும் தலைப்பில் விரைவில் தொடர் ஒன்றை எழுதப்போகிறேன். அதில் அனைத்து உண்மைகளையும் சொல்வேன்.
  11 minutes ago · Like ·  137
 • Mr.கூத்தாடி அவையள் இருக்கேக்க எழுதியிருக்கலாமே.
  11 minutes ago · Like ·  7863


கேள்வி எண்:03
Rajeevv Karan
புலம்பெயர் தமிழர்களின் சந்ததியினர் அடுத்தடுத்த தலைமுறைகளில் வேற்றினத்தவராய் மாறிவிடப் போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். சூழலுக்கேற்ப மனிதர் மாறுவது இயற்கை. அப்படியிருக்க வெறுமனே குற்றம் சாட்டி என்ன பயன்? அவர்களை இழிவு செய்வதுதானா உங்கள் நோக்கம்?

Like · Comment · 19 minutes ago ·
325 people like this.
 • பதில் நீங்கள் ஒருவராவது உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. 
  அவர்களை இழிவு செய்வதால் எனக்கு என்ன பயன்?
  என்னைச் சார்ந்த பலபேரும் அங்குதானே வசிக்கிறார்கள். 
  சூழலுக்கேற்ப மாறுவது என்பது இயற்கை என்கிறீர்கள். அது உண்மை மறுக்கவில்லை!
  அந்த உண்மையைத் தெரிந்து கொண்டால், 
  நம் சந்ததி, நம் சந்ததியாகவே இருக்கக் கூடிய, 
  சூழலை உருவாக்க வேண்டியது அவசியமல்லவா?
  வெளிநாடுகளில் அது சாத்தியமா என்று கேட்பீர்கள்?
  சாத்தியம்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சொல்கிறேன்.
  தமிழ்நாட்டில் ராஜபாளையம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. 
  அங்கு வாழ்பவர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள்,
  ஆந்திராவிலிருந்து வந்து குடியேறிய தெலுங்கர்கள்.
  அவர்கள் தங்களை ரவிகுல சத்திரியர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
  கிருஷ்ணதேவராயரின் படையினரான அவர்கள், 
  600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி நாட்டின் மீதான மைசூர் படையெடுப்பை முறியடிக்க, 
  பாண்டி நாட்டுக்குத் துணையாய், போர் புரிய வந்தவர்கள்.
  போரின் வெற்றிக்குப் பிறகு தமிழ்நாட்டின் செழிப்புக்கண்டு,
  பொருளாதார வளம் பெருக்க இங்கேயே தங்கிவிட்டார்களாம். (நம்மவர்களைப் போல)
  இன்று ராஜபாளையத்தில் கம்பன்கழகம், சேக்கிழார்மன்றம், திருக்குறள் அமைப்பு என,
  பல தமிழ் இலக்கிய அமைப்புக்களை அவர்கள்தான் நடத்தி வருகிறார்கள்.
  தமிழில் பேரறிவு கொண்டு திகழ்கிறார்கள். 
  தமிழ் இலக்கியத்தின் பரம ரசிகர்கள்.
  இனித்தான் முக்கிய விசயம் சொல்லப்போகிறேன்.
  இன்றும் அவர்கள் தங்கள் வீடுகளில்,
  தெலுங்கைத்தவிர வேறு எந்தப் பாஷையும் பேசுவதில்லை.
  கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரும்,
  தங்களுக்குள் தாய்மொழிதான் பேசுகிறார்கள்.
  நண்பர்கள், உறவினர்கள் என எவர் சந்தித்தாலும் மற்றவர்களைப் பற்றிய கவலையின்றி,
  அவர்களை அறியாமல் அவர்கள் வாயில் தெலுங்கு வந்துவிடுகிறது.
  தொழில் நிமித்தம் அவர்களின் புதிய தலைமுறையினர்கள் பலரும்,
  வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
  அங்கு வாழும் மூன்றாந் தலைமுறைப் பிள்ளையும் இங்குள்ள பேரனைக் கண்டதும்,
  தெலுங்கில் சரளமாக 'மாட்டலாடுகிறது." - ஆச்சரியப்பட்டுப் போனேன்.
  விசாரித்ததில் ஓர் உண்மை தெரிந்தது.
  தம்சந்ததி தம்சந்ததியாகவே இருக்க அவர்கள் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு இருக்கிறார்கள். -எப்படி என்கிறீர்களா?
  அங்கு வாழத்தொடங்கும்போதே பலம் வேண்டி குழுக்களாய் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
  ஊரில் வாழும் அத்தனை பேரும் நான்கு குழுக்களாய்ப் பிரிந்து,
  ஒவ்வொரு கூட்டத்தையும் ஒரு கோட்டை என்கிறார்கள்.
  தங்கள் பெயர்களின் முன்னால், ஊர்ப்பெயரையும் 'இனிஷலா"கச் சேர்த்துக்கொள்கிறார்கள்.
  பின்னால் தம் ராஜவம்சப் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள்.
  பெரும்பாலும் வெளியில் திருமணம் செய்வதில்லை.
  நன்மை, தீமை என்றால் எல்லாக் குழுவினரும் உடன் ஒன்று சேர்கிறார்கள்.
  குலதெய்வ வழிபாடு, திருமண சம்பிரதாயம் ஆகியவற்றில், மொத்தப்பேரும் இணைகிறார்கள்.
  இந்தியாவின் முதன்மைக் கோடீஸ்வரர்களாக இடம்பிடித்திருக்கிறார்கள்.
  எல்லாவற்றிலும் முக்கியமாக தங்களுக்குள் அவர்கள் வேறு பாஷை மறந்தும் பேசுவதில்லை.
  அவ்வளவு தூரம் ஏன் போவான்?
  நம் நாட்டிலேயே இஸ்லாமியர்களுக்குள் 'மேமன்" என்று ஓர் இனம் இருக்கிறது. 
  அவர்களும் மேற்சொன்ன அதே லட்சணத்தோடு பல நூற்றாண்டுகளாய் இங்கு வாழ்கிறார்கள்.
  நான் கனடா சென்றபொழுது,
  அங்கிருந்தவர்களோடு, இப்படி வாழ்வது பற்றிப் பேசியிருக்கிறேன்.
  இடம்பெயர்ந்த மொத்தத் தமிழர்களும் மாடித்தொடர்களில் குழுவாய் வாழுமாப்போல்,
  ஏதாவது ஒழுங்கு செய்து கொள்ளுங்கள்.
  தொடர்ந்து வருகிறவர்களையும் அவ்விடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  வீட்டிலும், நம்மவர்களுக்குள்ளும், கட்டாயம் தமிழ் பேசும் ஒழுங்கைக் கொண்டு வாருங்கள்.
  ஒரு சமுதாயமாக பலத்தோடு வாழலாம் என்றேன்.
  'ஐயோ 'வெல்(கு)பெயார்" கேசுகளோட சேர்ந்து வாழுறதோ?
  எங்கடைகளோட ஒருநாளும் சேர்ந்து வாழ ஏலாது. வெள்ளைகளோட இருந்தா நிம்மதி.
  இங்கேயே எங்கட சனம் கூடிப்போச்சுதெண்டு தூரப்போகலாமெண்டிருக்கிறம்" என்பதுதான்.
  அவர்களில் பெரும்பாலோர் சொன்ன பதில்,
  இந்த லட்சணத்தில் இனமுமாச்சு குணமுமாச்சு.
  27 · Like ·  0
 • Mr.கூத்தாடி முயல் பிடிக்கிற நாய்கள மூஞ்சியில தெரியும்.
  33 · Like ·  -322கேள்வி எண்:04
ஹரி கரன் (எ) இ. ரவிபாலன்
ஐயா! புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பொருளாதார பலத்தால், ஈழத்தில் வாழும் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இச் சவாலை முறியடிக்க வாய்ப்புள்ளதா?

Like · Comment · 9 minutes ago ·
9 people like this.
 • பதில் போராட்டங்கள் தொடங்கும் முன்பு நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் சந்தையிலிருந்து இறை சந்நிதி வரை எந்தவிடயத்திலும் முதல் தேர்வுகள் இங்கு வாழ்ந்த சிங்கப்பூர் பென்சனியர்க்காய் இருந்தது. இன்று அது புலம்பெயர் தமிழர்க்காகியிருக்கின்றது. சவால்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன்.
  சவால் 1
  அவர்கள் அனுப்பும் பணத்தால் இங்கு நிரந்தரமற்ற ஒரு பொருளாதார மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. உடல் உழைத்து பொருள் சம்பாதிக்க இன்று இங்கு யாரும் தயாரில்லை. வறுமை வறுமை என்கிறார்கள். யாழ்ப்பாணத்திற்கு வந்து பாருங்கள் எந்த வேலை செய்யவும் இன்று ஆட்கள் இல்லை. சம்பளம் கொடுப்பவர்கள் நிபந்தனைகள் போட்டது போய், வேலை செய்பவர்கள் நிபந்தனை போடும் நிலைமை வந்திருக்கிறது. அடுத்த தலைமுறை வர உடல் உழைப்புப் பழக்கமும்போய், வெளிநாட்டுப் பணமும் போய் தத்தளிக்கப் போகிறோம். 
  சவால் 2
  உழைக்காமல் வரும் பணத்தால் இங்குள்ளவர்களின் ஆடம்பரச்செலவு எல்லையற்று அதிகரித்துப் போயிருக்கிறது. ஒரு திருமணப்பெண்ணை அலங்கரிக்கும் செலவு இலட்சத்தையும் கடந்திருக்கிறது. அத்தனையும் புலம்பெயர் பணத்தால் வந்த விளைவு. 
  சவால் 3
  அழகான பெண், படித்த மாப்பிள்ளை, நல்ல குருக்கள், திறமான கலைஞர் என முதல்தரமான அனைத்தும் புலம்பெயர் தமிழர்களின் பணத்தால் வாங்கப்படுவதால், இந்த மண்ணில் கஷ்ரப்பட்டு வாழ்வோருக்கு இரண்டாந்தர விடயங்களே கிடைக்கின்றன. அதனால் புலம்பெயரும் விருப்பு இன்று விசராகவே ஆகியிருக்கிறது.
  சவால் 4
  புலம்பெயர் மேற்கு நாட்டார் காட்டும் எடுப்பால் நமது பாரம்பரிய மொழி, சமயம், கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பவற்றையெல்லாம் தாழ்ந்தவையாய்க் கருதும் மனப்பாங்கு இளையோர் மத்தியில் நாளுக்குநாள் வளர்கிறது. இரண்டும் கெட்டானாய் அவர்கள் வாழ்வு சிதைகிறது.
  சவால் 5
  புலம்பெயரும் ஆசையாலும் திடீர்ப்பணத்தாலும் இங்கு அன்பும், பாசமும், உறவும் தேவையற்றவைகளாகி இருக்கின்றன.
  இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
  சவாலை முறியடிக்க முடியாதென்றில்லை. அதற்கான வழியை நான் சொன்னால், எல்லோரும் என்னோடு சண்டைக்கு வருவீர்கள். எதற்கு வம்பு விடுங்கள்!
  11 minutes ago · Like ·  23
 • Mr.கூத்தாடி இவர் சொல்றது வாலறுந்த நரியிட கதையோ! உண்மையோ!
  11 minutes ago · Like ·  47


கேள்வி எண்:05
Shobisan Senthilnathan
வருகிற தேர்தலில் வெற்றி பெற கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும்?

Like · Comment · 8 minutes ago ·
223 people like this.
 • பதில் பதில் சொல்வதற்கு முன் ஒருகதை. 
  ஒரு சர்வாதிகாரி தான் வந்தால் தனது ஊரில் உள்ள சேர்ச்சுகளில் எல்லாம் கட்டாயம் மணி அடித்து மரியாதை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானாம். அங்கிருந்த ஒரு ஒற்றைப்போக்குப் பாதிரியாருக்கு இது பிடிக்கவில்லை. அரசன் வந்தபோது மணி அடிக்காமல் விட்டுவிட்டார். அவரை அரண்மனைக்கு இழுத்து வந்தார்கள். மணி அடிக்காததன் காரணம் என்ன என்றான் அரசன். விறுசுப் பாதிரி அதற்கு 21 காரணங்கள் இருக்கிறது என்றார். அரசனுக்குக் கடுங்கோபம். 21 யும் ஒவ்வொன்றாய்ச் சொல்லும் என்றான். அதற்கு பாதிரியார் இப்போது 21 யும் சொல்ல நேரமில்லை. முதல் காரணத்தைச் சொல்லுகிறேன். அதை நீக்கு பின்னர் மற்ற 20 காரணத்தையும் சொல்கிறேன் என்றாராம். அரசனுக்கு உச்சக்கோபம். சரி முதற்காரணத்தைச் சொல்லும் என்றான். பாதிரியார் வெகு கூலாக மணி அடியாததன் முதல் காரணம் கோயிலில் மணி இல்லை என்பது. இருந்தாலும் அடிக்காமல் விடுவதற்கு இன்னும் 20 காரணம் இருக்கிறது. முதலில் சேர்ச்சில் மணியைக் கட்டு. பின்னர் மற்ற 20 காரணத்தையும் சொல்கிறேன் என்றாராம்.

  இங்கும் அதே கதைதான். வெற்றி பெற 21 காரியங்கள் செய்யலாம். நானும் முதல் காரியத்தைச் சொல்லுகிறேன். அதைக் கடைப்பிடித்தால் மற்ற 20 காரணத்தையும் பின் சொல்கிறேன்.

  அதென்ன முதல்காரணம் என்கிறீர்களா?

  கூட்டமைப்பு முதலில் கூட்டு அமைப்பாய் இருக்கவேண்டும். பிறகு மற்றவை பற்றி யோசிப்போம்.

  11 minutes ago · Like ·  374
 • Mr.கூத்தாடி அந்தச்சாமி இந்தச் சாமியைவிட பரவாயில்லைப்போல.
  -11 minutes ago · Like ·  111


கேள்வி எண்:06
புருஜோத்மன்
தேர்தல் காலத்தில் வாரிதியார் அரசியல் வெடிகளை அவிழ்க்கும் நோக்கம் என்ன? பட்டிமன்ற ஆசை முடிந்து பாராளுமன்ற ஆசை வந்துவிட்டதா?

Like · Comment · 9 minutes ago ·
447 people like this.
 • பதில் அருவருப்பான இந்தக்கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். இந்தச் சின்னத்தனங்களெல்லாம் என்னிடம் என்றைக்கும் வராது. இலக்கிய உலகில் பலபேரின் முயற்சியால் இடப்பட்ட 35 வருட அத்திவாரத்தில் கட்டப்பட்ட அசையாத கம்பன்கழகத்திற்குள் போட்டியில்லாத பதவியில் உட்கார்ந்திருக்கிறேன். ஆறு வருடத்திற்கு ஒருதரம் மாறும் இந்தப்பதவி யாருக்கு வேண்டும்? நான் ஸ்திரமாவதற்காக அரசியல் எழுதவில்லை. இனம் ஸ்திரமாகவே அரசியல் எழுதுகிறேன்.
  11 minutes ago · Like ·  111
 • Mr.கூத்தாடி அப்ப அசையாத பதவி என்டா ஆசைப்படுவார் போல!
  11 minutes ago · Like ·  173


கேள்வி எண்:07
ஹரி கரன் (எ) இ. ரவிபாலன்
நீங்கள் சமூக வலைதளங்களுக்குள் நுழைந்ததன் நோக்கம் கம்பனைப் பெருமைப்படுத்தவா? இல்லை உங்களைப் பெருமைப்படுத்தவா?

Like · Comment · 47 days ago ·
983 people like this.
 • பதில் இரண்டும் இல்லை. 
  கம்பனுக்கு இனிப் பெருமை வரவேண்டும் என்பதில்லை. 
  எனக்குப் பெருமை வரும் இலட்சணத்தை நீங்களே பார்க்கிறீர்கள்தானே.
  11 minutes ago · Like ·  654
 • Mr.கூத்தாடி இரண்டும் இல்ல. பேச்சு வாங்க.
  11 minutes ago · Like ·  1274கேள்வி எண்:08

வம்பன் வள்ளுவன்
கூட்டமைப்பில் அப்படி என்னதான் கோபம்; உங்களுக்கு?
Like · Comment · 3 days ago ·
633 people like this.
 • பதில் அவர்களோடு எனக்கென்ன கோபம். சினேகம்தான் அதிகம். வடமாகாண சபைமுதல்வர் எங்கள் கழகத்தின் 'கோட்பாதர்", வடமாகாணசபை முதலமைச்சர் பல வருடங்களாக எங்கள் கழகத்தின் பெருந்தலைவராய் இருந்தவர், கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எனதும் கழகத்தினதும் ரசிகர், வடமாகாணசபை விவசாய அமைச்சர் என் கல்லூரிக்கால நண்பன், வடமாகாண சபை உறுப்பினர் சித்தார்த்தன் என்னில் அன்பும் மதிப்பும் கொண்டவர். இப்படி அவர்களில் நிறையப்பேரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே உறுதியாய்ச் சொல்லுகிறேன். எனக்கு அவர்களோடு எந்தக் கோபமும் இல்லை.


  விமர்சனம் என்பது கோபத்தின் வெளிப்பாடு இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் விமர்சனம் அவசியமானது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரை இன்றியும் கெடும் என்கிறார் வள்ளுவர். எங்கள் அரசியலில் பல தசாப்தங்களாக அரசியலாளர்களை விமர்சிப்பது குற்றம் என்றாற் போல் ஓர் பழக்கத்தை உருவாக்கிவிட்டோம். அதனால்தான் நெறிசெய்வாரின்றி நம் தலைமைகள் தாமும் அழிந்து, இனத்தையும் அழித்தன. விமர்சனம் தவறாயிருந்தால் அதை அரசியலாளர்கள் சுட்டிக் காட்டலாம். சரியாயிருந்தால் தம்மைத் திருத்திக்கொள்ளலாம். அது அனைவருக்குமே நல்லது.

  லைட் போடவும் றோட்டுப் போடவும் இம்முறை தேர்தலில் நாம் நிற்கவில்லை. தனியீழத்திற்காகவே இந்தத் தேர்தலில் நிற்கிறோம் என்று பிரகடனப்படுத்தி அப்போது தேர்தலில் குதித்த கூட்டணியினர் வென்ற பிறகு மாகாணசபையை ஏற்று அரசு வழங்கிய வாகனங்களை ஆர்வத்தோடு பெற்றனர். மாதகலில் நடந்த ஒரு கூட்டத்தில் அமிர்தலிங்கம் மேடையில் இருக்கத்தக்கதாக பேசவந்த ஒரு இளைஞன் இதுபற்றி;க் கேள்வி எழுப்பினான். அமிர்தலிங்கம் ஆத்திரப்பட்டு அவனது சேட்டை பிடித்து இழுத்து உட்கார வைத்தார். இக்காட்சியை நான் கண்ணால் கண்டேன். 

  பின்னர் வந்த இயக்கங்கள் அத்தனையும் இதே கொள்கையைத்தான் பின்பற்றின. விமர்சித்தவர்கள் ஒன்று கொல்லப்பட்டார்கள் அல்லது துரோகிகளாய் முத்திரை குத்தப்பட்டார்கள். 1995 இடப்பெயர்வோடு கொழும்பு வந்த பின்னர்தான் இஸ்லாமியர்களை ஒரே நாளில் யாழிலிருந்து துரத்தியது தவறென்று பேராசிரியர் சிவத்தம்பி விமர்சிக்கத் துணிந்தார். 1995 இல் சாவகச்சேரியில் நான் இடம்பெயர்ந்து இருந்த பொழுது என்னைச் சந்தித்த யோகி விமர்சனங்களை ஏற்கமறுத்ததுதான் நாங்கள் செய்த தவறென்று என்னிடம் நேரே வருத்தப்பட்டார்.

  இப்போது கூட்டமைப்பினரும் இதே பாணியைப் பின்பற்ற நினைக்கின்றனர். அதுதான் பிரச்சினை. பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகளுக்கு கூட்டமைப்பினர் பெரும்பாலும் பதிலுரைப்பதில்லை. உயிரைப் பணயம் வைத்த போராளிகள், விமர்சனத்தைத் தவிர்த்ததுகூட விளங்கமுடிகிறது. ஜனநாயகப் பாதைக்கு வந்துவிட்டதாய்க் கூறும் இவர்கள் அங்ஙனம் நினைப்பதை ஏற்க முடியவில்லை. முன்பு முதலமைச்சருக்கு ஒரு விமர்சனக்கடிதம் எழுதினேன். அதுபற்றி அவரிடமிருந்து எந்தப்பதிலும் இல்லை. அவரை விமர்சித்தேன் என்பதற்காக எங்கள் கம்பன்விழாவிற்கு வருகைதரச் சம்மதித்த வடமாகாணசபை முதல்வர் சீ.வி.கே. சிவஞானம் பின் அதைத் தவிர்த்தார். அதுபோலவே நீண்டநாள் பழக்கமுள்ள கூட்டமைப்புத் தலைவர் மாவை சேனாதிராஜா ஒரு கூட்டத்தில் என்னைச் சந்தித்தபோது ஏதோ உறவுப்பகை போல முகம் திருப்பிக்கொண்டார். நண்பர்களான சரவணபவன், சிறீதரன் ஆகியோரும் எனது விமர்சனங்களுக்காய் முகம் சுழித்தனர். இது தவறென்பதை அவர்கள் உணர வேண்டும்;. ஆதரவுத் திமிரில் முன்னர் விமர்சனங்களைத் தவிர்த்தவர்கள் பின்னர் கேட்பாரின்றி வீழ்ந்து போனார்கள். இது கூட்டமைப்புக்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே விமர்சனங்களை முன் வைக்கிறேன். மற்றும்படி வேறு தனிப்பகை ஏதும் இல்லை.

  11 minutes ago · Like ·  63
 • Mr.கூத்தாடி இது கேள்வி பதிலா கட்டுரையா? ஆனா மனுசன் சொன்ன விஷயம் உண்மை.
  11 minutes ago · Like ·  113


**************************************************************
கேள்விகளை Facebook இனூடாக அனுப்பி வைக்க இங்கே கிளிக்கவும்
ஈ மெயிலினூடாக அனுப்பி வைக்க இங்கே கிளிக்கவும் 
**************************************************************
நன்றி: http://simitator.com/generator/facebook/status

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...