•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, July 15, 2015

இரண்டுபட்டு மூன்றுபட்டு இழிந்து தாழ்ந்தோம்!


ஊரிருக்கும் நிலைமையினை உற்றுப் பார்த்தால்
உயிர்நடுங்கித் துடிக்கிறது! தருமம் சொல்லும்
நீதி, நியாயம்…அநீதிகளால் தாக்கப் பட்டு
நிலைகுலைய, நீதிமன்றும் நொருங்க லாச்சு!
வேலியில்லை, காணியில்லை, மீட்பர் இல்லை,
வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் யதார்த்தம்…ஏய்த்து!
மேல்நாட்டு மோகம் அற்பப் பகட்டு வாழ்வு
‘விசம் கலந்த மகி - நூடில்ஸ்’…தவிர்ப்போம் பார்த்து!


பொதுநலத்தை மறந்துவிட்டோம்: சிறிய வட்டம்
போட்டு நம் நலம்செழிக்கப் பழிபாவத்தை
விதைத்தறுக்க நாம்தயங்கோம்! வீழு கின்றோம்!
வேரைவெட்டி விழுதுகளா தளைத்து வாழ்வோம்?
சதி எவரும் செய்யவில்லை…மண்ணை நாமெம்
தலையிலள்ளிக் கொட்டுகிறோம்! ஒன்று பட்டு
எதுஞ்செய்யா எம்பிறவிக் குணத்தால்…இன்றும்
இரண்டுபட்டு மூன்றுபட்டு இழிந்து தாழ்ந்தோம்!

பயம், வெட்கம், ரோசம், சூடு, சுரணை, மானம்,
பற்றியெல்லாம் கவலையற்று உழைத்தால் போதும்…
உயர்ந்திடலாம் என்போரும்: முயற்சி கல்வி
ஊக்கமின்றிக் குறுக்குவழி சென்றும் ஊரின்
உயிர்பறித்தும் சுலப சுக வாழ்வு தேடும்
உலுத்தர்களும்: ஜெயிக்க…, மரியாதை மானம்
உயர்பண்பு விழுமியம்நற் சமய வாழ்வு
உயிரென்போர் தோற்பதா நம் தமிழர் சாபம்?

இராப்பகலாய் மரணத்தின் மடியில் தூங்கி,
இடர்களுடன் முட்டிமோதி, உறவைச் சேயை
இரையாகப் போர்க்கழுகு பறிக்க வாடி,
“இழக்கஇனி ஏதுமில்லை” எனவும் பாடி,
கரைதெரியாத் துயர்க்கடலிற் தவித்தோர்…சின்னக்
கட்டுமரம் ஏறி… நேற்றை மறந்து போனோம்.
விரைந்தெம்மை மீட்டு வெற்றிடம் நிறைத்து
விளைந்தெழாமல் கற்பனைக்குள் விரய மானோம்.

ஒற்றுமை ஓர் மருந்துக்கும் எமக்குள் இல்லை.
ஒருவன் ஒன்று சொல்ல அதை எதிர்ப்ப தன்றி
மற்றென்ன செய்தோம்? விட்டுக் கொடுத்தோ மில்லை.
முரண் வளர்த்தோம் அறுபதாண்டாய்… புரிந்துணர்ந்து
சுற்றயலின் நிலை, யதார்த்தம், உலகின் போக்கு
சொல்வதெது? நாமறியோம்! எம்மை மேய்ப்போர்
வெற்றிகொள்வார் எம்மைவைத்தே…அறியா தெம்முள்
வேற்றுமையை  நோண்டி நம்புண் வளர்ப்போம் நாமே!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...