•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, August 31, 2015

அரசியற்களம் 10: நிஜத்தைத் தரிசிப்போம் !

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
ண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு,
இப்பொழுது வெள்ளி திசைதான் நடக்கிறது போலும்.
தமிழ்மக்கள் நம்பிக்கையோடு தந்த வெற்றியால்,
இன்று அவர்கள் முன் தங்கத்தாம்பாளங்களில் வைத்து பதவிகள் நீட்டப்படுகின்றன.
யாரை எதிரிகளாய்க் கருதினார்களோ அந்தப் பேரினவாதிகளே,
இன்று இவர்களை நோக்கிப் பதவிகளை நீட்டுகிறார்கள்.
அதுதான் ஆச்சரியம்!
ஒரு தாம்பாளத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவி,
மற்றையதில் தேசிய அரசோடு இணையவரும்படியான அழைப்பும்,
அதனால் கிடைக்கக்கூடிய அமைச்சர் பதவிகளும்.
திக்குமுக்காடி நிக்கிறது கூட்டமைப்பு.
*~*~*

கடந்த தேர்தல் காலத்தில்,
பதவி ஆசையின் முன் ஒற்றுமை, இனம், உரிமை என்பதெல்லாம்,
இரண்டாம் பட்சம்தான் என்பதை, தமக்குள் நடந்த பதவிப்போட்டிகளால்,
கூட்டமைப்பினர்  தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.
அதனால்  இப்பதவிகள் இரண்டிலும் உள்ளூர அவர்களுக்கு ஆசை இருக்கலாம்.
ஆனால் ஈழத்தினுள்ளும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ்மக்கள் மனதில்,
தேர்தல் வெற்றிக்காக அவர்களே மூட்டிய இனப்பற்று,
அவர்கள் அமைச்சுப்பதவிகளை ஏற்றால் அவர்களை நிச்சயம் துரோகிகளாய் இனங்காட்டும்.
*~*~*

எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் 
ஓர் அமைச்சருக்குரிய அத்தனை சலுகைகளையும் உட்கொண்டதே!
எனினும் அந்தப்பதவியை ஏற்பதில் கூட்டமைப்பினருக்கு ஒருவசதி இருக்கிறது.
பதவிப் பெயரில் 'எதிர்' என்ற சொல் வருவதால்,
இவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என நினைத்து,
அப்பாவித் தமிழர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள்.
அது தெரிந்து கூட்டமைப்பு இப்போதைக்கு
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கோரி நிற்கிறது.
ஆனால் இப்பதவியை ஏற்பதால்
தமிழினத்திற்கு ஏற்படப்போகும் நன்மைதான் என்ன?
ஒன்றே ஒன்றை உறுதியாய்ச் சொல்லலாம்.
எதிர்க்கட்சித்தலைவராய் தமிழ் இனத்தின் உரிமை பற்றி,
சம்பந்தன் பாராளுமன்றத்திற்குள் எழுப்பப்போகிற குரல்,
ஈழத்தமிழர் பிரச்சினையை வழமையை விட சற்று அதிகமாய்
உலக சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும். அவ்வளவுதான்!
ஆனால் இன்றைய நிலையில் அதனால் விளையப்போகும் பயன் என்ன?
ஆராய வேண்டியது அவசியம்.
*~*~*

இன்றைய உலக சமுதாயம்,
அமெரிக்காவின் வல்லரசுப்பலத்தின் முன் சரணாகதியாகி இருப்பது வெளிப்படை.
இலங்கை, சீனச் சார்போடு இருக்கையில்,
தமிழருக்குச் சார்பாக ஐ.நா.சபையில் இலங்கையை எதிர்த்த அமெரிக்கா,
நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை தன் சார்பானோரின் கைவயப்பட்ட மறுநிமிடமே,
இலங்கையை ஆதரிக்கப் போவதாய் அறிக்கை விட்டிருக்கிறது.
வல்லவன் வகுத்ததே வழி என்று இனி உலகமும் அதனோடு சேர்ந்து நிற்கும்.
*~*~*

அமெரிக்காவை ஓரளவு எதிர்க்கக் கூடிய ரஷ்யாவும், சீனாவும்.
இனப்பிரச்சனையில் முன்பு இலங்கையை ஆதரித்தவை.
இப்போது தமிழர்சார்பாக அவை மாற பெரும்பாலும் வழி இல்லை.
இந்தியாபோல ஈழத்தமிழரோடு உறவுரிமை பாராட்டும் தகுதியும் அவற்றுக்கு இல்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவராகி
உலக சமுதாயம் நோக்கி சம்பந்தர் கொடுக்கப்போகிற குரல்,
இனி உலகைப் பொறுத்தளவில் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அமெரிக்காவிடம் இத்தகு சுயநலமாற்றம் நிகழும் என்று,
முன்னரே எதிர்பார்த்து நம் ஏகத்தலைமை தீர்க்கதரிசனமாய் ஏதும் செய்திருக்கவில்லை.
எனவே நிச்சயம் அடுத்து வரப்போகிற காலங்களில்,
உலக அரங்கில் ஈழத்தமிழர்கள், அரசியல் அனாதைகளாய்த்தான் நிற்கப்போகிறார்கள்.
முப்பதாண்டுப் போரில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழர்க்கு,
இனி அமெரிக்காவின் தூண்டுதலில் பேரினவாதிகள் பிச்சையாய்ப் போடப்போகும்,
சில சலுகைகளை ஏற்பதைத்தவிர  வேறு வழி இருக்கப்போவதில்லை.
*~*~*

இந்நிலையில் 'எதிர்க்கட்சித்தலைவர்' பதவியால்,
தமிழர்க்கு ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது திண்ணம்.
கூட்டமைப்பு அப்பதவியை ஏற்பதைவிட,
தேசிய அரசில் இணைவது பற்றி சிந்திப்பது நல்லதாய்ப்படுகிறது.
போரிழப்புக்களால் பாதிக்கப்பட்டோர்தம் மறுவாழ்வு,
இராணுவம் கைப்பற்றிய நிலங்களை மீட்டெடுத்தல்,
தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்தல்.
விசாரணையின்றி பல ஆண்டுகளாய் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை மீட்டல் என,
இனநலம் நோக்கி அவசரமாய் உடன் செய்யவேண்டிய வேலைகள் பல காத்திருக்கின்றன.
தேசிய அரசில் இணைந்து,
நீதி, மீள்குடியேற்றம், மறுவாழ்வு, மொழி அமுலாக்கல் முதலிய அமைச்சுப்பதவிகளை.
தம்வயப்படுத்தினால் மேல் விடயங்களைச் சுலபமாய்ச் சாதிக்கலாம்.
நம் எண்ணங்களை பேரின அரசு நிறைவேற்ற விடுமா? கேள்வி பிறக்கும்.
கேள்வி நியாயமானதே.
நமக்கு அவர்கள் செங்கம்பளம் விரிக்கும் காலமிது.
எனவே முயன்று பார்க்கலாம்.
முடியாதபட்சத்தில் பதவிகளை தூக்கிஎறிந்து வெளிவருவதை யாரும் தடுக்கப்போவதில்லை.
இதுவும் ஒரு வகையில் இனநலம் நோக்கிய முயற்சியே.
*~*~*

தமிழர்தம் உரிமை நோக்கிய பயணத்தில்,
உடன் செய்யவேண்டிய காரியங்கள்,
நிதானமாய்ச் செய்யவேண்டிய காரியங்கள் என,
இருவகைக் காரியங்கள் உள்ளன.
தமிழ்த்தலைமைகள் அவற்றை வேறுபடுத்தி  செயற்படவேண்டிய காலம் இது.
புலிகளுக்குப் பின்னான பாராளுமன்ற இருக்கைகளாலோ,
போராடிப்பெற்ற மாகாணசபைப் பதவிகளாலோ,
மேற்சொன்ன விடயங்களில் ஏதும் உருப்படியாய் நடந்ததாய்த் தெரியவில்லை.
எனவே அதிகார மையத்தின் 'மூலத்தை' கைப்பற்றி செயல்படுவதே.
தமிழர்க்கு இருக்கக் கூடிய ஒரே வழி.
*~*~*

அதற்கான காலம் கனிந்திருக்கிறது.
வரலாற்றில் என்றும் கிடைக்காத வாய்ப்பாக,
ஆட்சியில் அமரக்கூடிய பேரினவாதக்கட்சிகள் இரண்டும்,
முதல்முறையாய் ஒன்றுபட்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி அதிர்ஷ்டவசமாய்,
ஜனாதிபதி, பிரதமர் என்கின்ற இருகட்சிகளின் தலைவர்களும்,
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என நினைப்பவர்களாய் இருக்கிறார்கள்.
இது தமிழினத்தைப் பொறுத்தவரை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.
சாம, தான, பேத, தண்டம் (போர்)எனும் போர் முறைகளையெல்லாம் கையாண்டு,
தோற்றுப்போய் நிற்கிறோம்.
இனியும் தண்டம் பற்றிப் பேசிப் பயனில்லை.
பழையபடி சமாதானத்திலிருந்து தொடங்கவேண்டியதுதான்.
*~*~*

இது யதார்த்தம்.
எனவே வெறுமனே எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்று,
உணர்ச்சிகளைக் கிளப்ப சங்கூதி மீண்டும் தோற்றுப்போவதைவிட,
யதார்த்தம் உணர்ந்து தேசிய அரசில் இணைவது பற்றி,
தமிழ்க்கூட்டமைப்பு நினைப்பது நல்லது.
கூட்டமைப்பு தமக்கு நல்லது செய்யும் எனும் நம்பிக்கையிலேயே,
அவர்களுக்குத் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
போர் பற்றிய சலிப்பு அவர்களுக்கு வந்துவிட்டது.
அதனாற்றான் கடந்த தேர்தலில் போராளிகளை ஓரளவு நிராகரித்தும் இருக்கிறார்கள்.
*~*~*

தம் இனத்தாரின் பெரும்பான்மைக் கருத்திற்கு முரணாய்,
இன்று துணிந்து தேசிய ஐக்கியம் பற்றிப்பேசும்,
மைத்திரி, ரணில் போன்ற பேரின அரசியல்வாதிகளை முன் உதாரணமாய்க் கொண்டு,
வெறும் உணர்ச்சியாளார்களின் கூக்குரலுக்கு அடிபணியாது,
கூட்டமைப்பும் புரட்சியாய் சிந்தித்தால்த்தான் தமிழினம் உய்யும்.
*~*~*

உலக அரசியல்,  பிராந்திய அரசியல், தேச அரசியல் இவற்றினை நிராகரித்து,
நிச்சயம் தமிழர்தம் அரசியல் இருக்கமுடியாது.
இந்த உண்மையைச் சொல்பவன்,
உணர்ச்சியாளர்களால் வெகுசன விரோதியாய்க் கருதப்படுவான்.
அதுபற்றி எனக்குக் கவலையில்லை.
கனவுலகை விட்டு என்றோ ஒருநாள் உண்மையை நாம் தரிசிக்கத்தான் வேண்டும்.
இவையெல்லாம் கூட்டமைப்பினர்க்குத் தெரியாத விடயங்கள் அல்ல.
இதுவரை தாம் போட்ட பொய் வேஷம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக,
உண்மையைத் துணிந்து பேசாது இனியும் அவர்கள் ஒதுங்குவார்களானால்,
தமிழினத்தின் தலைவிதி இன்னும் சரியாகவில்லை என்று தான் அர்த்தம்.
*~*~*

எண்பதுகளிலும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பு உருவானது.
அங்ஙனம் உருவான தமிழர் விடுதலைக்கூட்டணி தேர்தலில் பெருவெற்றி பெற்றது.
அப்போதும் எதிர்க்கட்சித்தலைவர் பதவி தமிழர்களைத் தேடிவந்தது.
அவ்வளவும் இப்போதும் நடந்திருக்கின்றன.
ஆனால் அப்போது அவற்றைத் தொடர்ந்து நடந்தவற்றை நினைக்க நெஞ்சுநடுங்குகிறது.
இனக்கலவரம், யுத்தம், பேரழிவு என்பவை அப்போதைய வெற்றிகளைத் தொடர்ந்த சம்பவங்கள்.
இனியும் அதுதான் நடக்குமா?
இல்லை அவ்வெற்றிகளைக் கொண்டு,
இம்மண்ணில் தமிழினத்தை கூட்டமைப்பு தலைநிமிரச்செய்யுமா?
இன்று எழுந்திருக்கும் விஸ்வரூபக்கேள்வி இது?
விடையைக் காலந்தான் சொல்லவேண்டும்.
*~*~*~*~*


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...