•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, August 20, 2015

அதிர்வுகள் 09 | “சித்தம் தெளிய”

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா “ஹோட்டல்” முன் நிற்கிறேன்.
நேரம் இரவு எட்டு மணி.
தூறல்களால் பூமிப்பெண்ணை மெல்லச் சீண்டத்தொடங்கிய வானம்,
உணர்ச்சி மிகுந்து மழையாய்க் கொட்டி,
தன் காதலின் உச்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது.
திரண்ட மேகத்தால், இருண்ட வானம் மேலும் இருள,
மின்னல், இடி, மழை என, காலியைத் தொட்ட வீதி,
அல்லோலகல்லோலப்பட்டது.
தற்செயலாய் கையில் கொண்டுவந்த என் சிறு குடை,
பெரிய என் உடம்பை,
காற்றின் அதிர்வுகளுக்கிடையிலிருந்து காப்பாற்ற முயன்று,
தோற்றுக் கொண்டிருந்தது.
அருகில்தான் வீடு, சென்றுவிடலாம் என நினைந்து,
மழையைப் பொருட்படுத்தாது வீதியில் கால் வைக்கிறேன்.
ஜெயராஜ் அண்ணை கொஞ்சம் நில்லுங்கோ!’,
பொருந்தாச் சூழலில் அசந்தர்ப்பமாக ஓர் இளைஞனின் குரல் அழைக்க,
எரிச்சல் வந்தாலும் நின்று  திரும்பினேன்.

****

மெலியதோர் இளைஞன் அங்கு நின்றிருந்தான்.
நிமிர்ந்து பார்க்கும்படியான உயரம்.
அவனது குழிவிழுந்த கண்களைச் சுற்றி இருள்வளையம் சூழ்ந்திருந்தது.
அடிக்கடி நிகழ்ந்த மூக்கு விடைப்பு,
அவன் தூரத்திலிருந்து ஓடி வந்திருக்கிறான் என்பதை உணர்த்திற்று.
எனது நேர்ப்பார்வையை அவனது விழிகள் தவிர்த்தன.
விநாடிக்கு விநாடி அவனது முகபாவம் தானாய் மாறிக்கொண்டிருந்தது.
சற்றுக் குழப்பமானவனாய்த் தெரிந்தான்.
எனது குடையைப்போலவே அவனது சிறு குடையும்,
அவனை, மழையிலிருந்து காப்பாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
அடைமழை! இந்த நேரத்தில், தொல்லையாய் யார்  இவன்? என நினைந்தேன்.
****

அண்ணே! நான் உங்கட ரசிகன்.
யாழ்ப்பாணத்தில நீங்கள் பேசேக்க ஒரு பேச்சும் தவறவிடமாட்டன்.
ஒரு பேச்சு முடிச்சு அடுத்த பேச்சுக்கு நீங்கள் காரில போகேக்க,
சைக்கிள்ல கலைச்சுக்கொண்டு வர்றனான்.
உங்களைக் காணவேண்டும் என்று  கனநாளாத் தேடித்திரிஞ்சனான்.
நல்ல நேரத்தில சந்திச்சிட்டன்.
அந்த அடைமழை நேரத்தை,
நல்ல நேரம் என்று கூறும் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.
தென்றல் வீச பூங்காவின் மரநிழலில் நின்று பேசுபவன்போல,
அவ் அடை மழையில் நனையும், தன்னையும் கவனிக்காமல்,
என்னையும் கவனிக்காமல் நிதானமாகப் பேசத்தொடங்கினான்.
****

நனையும் உடம்பு, தொடரும் மழை,
மின்னலும், இடியும் தந்துகொண்டிருந்த அச்சம்,
வீதியில் மழையைக் கடக்க நினைந்து ஓடும் வாகனங்களின் தறிகெட்ட வேகம்,
இவை எது பற்றியும் கவலையில்லாமல் பேசத்தொடங்கிய,
அந்த இளைஞனின்மேல் எரிச்சல் உண்டாயிற்று.
ஆனாலும், அவன் வார்த்தைகளில் பொதிந்திருந்த என்மீதான புகழ்ச்சியில்,
அச் சூழ்நிலையிலும் உள்ளம் சற்று மயங்கிற்று.
****

அப்படியோ, கேட்கச் சந்தோஷமாக இருக்கு,
பார்க்கவே நல்ல பிள்ளையாய்த் தெரியிறியள்,
ஒரு நாளைக்கு வீட்ட வாங்கோ ஆறுதலாய் பேசலாம்.
“லூசாய்”இருப்பானோ? என மனதில் எழுந்த எண்ணத்தை மறைத்து,
தப்பிக்க நினைந்து பொய்யாய் வார்த்தையில் தேன் பூசினேன்.
பொறுங்கோ!, பொறுங்கோ! என்ன அவசரப்படுறியள்,
‘பிளட்போமில’ ஏறுங்கோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேணும்.
கையைப் பிடித்து பலவந்தமாய் ‘பிளட்போமில்’ என்னை ஏற்றி நிறுத்தினான்.
****

அவன் செயலில் தெரிந்த சிறிய முரட்டுத்தனம் சற்று அச்சத்தைத் தர,
உதவிக்கு யாரும் நிற்கிறார்களா? என்று சுழன்று தேடிக் கண்கள் தோற்றன.
எது பற்றியும் கவலையில்லாமல் அவன் பேசத்தொடங்கினான்.
அண்ணே! பத்தாம் திகதி எனக்குக் கல்யாணம்,
இங்க கதிரேசன் “ஹோல்ல” தான் நடக்கப்போகுது,
வேற மண்டபங்கள் பார்த்தவையள்,
கதிரேசன் மண்டபம்தான் வேண்டும் என்று மாமாட்ட உறுதியாய்ச் சொல்லிப்போட்டன்.
எனக்கு நிறைய “ஃபிறன்ட்ஸ்”, சொந்தக்காரரும் கனக்கத்தான்.
எல்லாரையும் அடக்கவேண்டாமே”?
அவன் பேச்சின் நீளம் காலியையும் தாண்டும் போலிருந்தது.
நல்லது தம்பி நல்லாய் இருக்க வேணும் கட்டாயம் வர்றன்,
மழை கடுமையாய் இருக்கு, பிறகு சந்திப்பம்”,
மெல்லக் ‘காய்வெட்டப்’ பார்த்தேன்.
****

என் பேச்சு அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
அப்போது, வெள்ளவத்தையே நடுங்கும்படி முழங்கிய இடியைப்பற்றி,
சற்றும் கவலைப்படாமல் அவன் பேச்சைத் தொடர்ந்தான்.
அண்ணே பொம்பிளை யார் தெரியுமே?
முந்தின உடுவில் ‘ஏ.ஜி.ஏ’ யிட மகள்தான்,
நான் மாட்டன் மாட்டன் எண்டு சொல்லியும்,
என்னைத்தான் செய்ய வேணும் என்று ஒற்றைக்காலில நிக்கிறா.
மாமாவும் காலிலவிழாத குறையா கெஞ்சுறார்” என்று,
எனக்கு வேண்டாத விசயங்களையெல்லாம் கேட்காமலேயே அடுக்கினான்.
****

‘டுடும்......’  மீண்டும் ஒரு இடி இறங்கியது.
அவன் காதில் அப்பெரிய சத்தம் விழுந்ததாகவே தெரியவில்லை.
எனக்கு இவ்வாண்டில் ஒரு தத்து இருப்பதாய்,
சாத்திரியார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அவன் எந்தக் கவலையுமின்றித் தொடர்ந்தான்.
நான் ‘ஸ்ரிக்ரா’ சொல்லிப்போட்டன்,
சாறியைத் தவிர, ‘சுடிதார், கிடிதார்’ எல்லாம் தொடப்படாது எண்டு,
நாங்கள் ஆர்? உங்கட பேச்சுக் கேட்டு வளந்தனாங்கள் எல்லே!
சின்னனில ஒரு நாள் எங்கட வீட்டுக்கு அவா…….” என,
அவன் கதையை நீட்டத்தொடங்கி,
பாலகாண்டத்தை முடிக்கப் பத்து நிமிஷமாயிற்று.
****

அடுத்த காண்டங்களின் அளவுபற்றி என் நெஞ்சம் கவலைப்படத் தொடங்கியது.
யார் முகத்தில் முழித்தேனோ என உள்ளத்தில் சினத்தேடல்.
தம்பி நான் கொஞ்சம் அவசரமாய்ப் போகவேணும்,
முனங்கலாய் என் கருத்தைத் தெரிவிக்க,
என்னண்ணை உங்கட பேச்ச எத்தனை மணித்தியாலம் நிண்டு கேட்டிருக்கிறம்,
இப்ப கொஞ்சநேரம் என்ர பேச்சைக் கேக்கிறியள் இல்ல.
மூக்கு விடைக்கக் குரல் உயர்த்திச் சொன்னான் அவன்.
உச்சியில் சம்மட்டி அடி விழுந்தாற்போல் அதிர்ந்துபோனேன்.
****

அவனிடம் இருந்து தப்பி வந்த கதையைச் சொன்னால் நீண்டு விடும்.
அன்று இரவு முழுக்கத் தூங்க முடியவில்லை.
பெரிய உத்தியோகத்தில் இருப்பவன்.
அதை நம்பி நடக்கப்போகும் கல்யாணம்.
பெரிய வீட்டுப் பெண்பிள்ளை,
இவன் மனக்கோளாறு தெரிந்திருக்குமா?
எப்படி இவனை அவள் சகிக்கப்போகிறாள்?
இந்தக் கல்யாணம் எத்தனை நாள் தாங்கும்?
கேள்விகள் மனதைக் குடைய,
மனம் கவலைப்படத்தொடங்கியது.
****

சாதகம், சாத்திரம் எனத் தேடித்திரிந்து,
சனிபுத்தி பற்றியும், செவ்வாய்புத்தி பற்றியும் ஆராயும் பெற்றோர் பலர்,
மாப்பிள்ளையின் புத்தி பற்றி ஆராய்கிறார்களா?
உன் பேச்சுக்களைக் கேட்டுத்தான் என் புருஷன் கெட்டான்,
என் வாழ்க்கைக்குப் பதில் சொல்” என்று,
தலைவிரி கோலத்துடன் ஒரு பெண்,
அன்றிரவு முழுவதும் என் கனவில் வந்து கேட்டபடி இருந்தாள்.
****

நேற்றுச் சந்தித்த நீண்ட நாள் நண்பர் ஒருவர்,
கோயில் கட்டிறது, குளம் கட்டிறது எல்லாம் இருக்கட்டும்,
உங்களுக்குக் கடவுள் தந்த கொடை பேச்சுத்தான்.
அதை தொடர்ந்து செய்யப்பாருங்கோ” என்றார்.
ஏனோ அந்த ஒல்லிப்பையனும், தலைவிரிப் பெண்ணும் என் நெஞ்சில் வர,
நண்பரைச் சலிப்புடன் முறைத்துப் பார்த்தேன்.
******

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...