•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, August 17, 2015

அரசியற்களம் 07: கட்சியை சீர்திருத்த கூட்டமைப்புக்குச் சில ஆலோசனைகள்

உலகம் எதிர்பார்த்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்,
இன்று நடந்து கொண்டிருக்கும்.
சிங்களவர் மத்தியில் ரணிலா? மஹிந்தவா? என்ற வினா,
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
தமிழர்கள் மத்தியிலும் இம்முறை வழமைபோல் அல்லாமல்,
தேர்தல் முடிவுகள் பற்றி வேறுவேறான ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வடக்கில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
டக்ளஸ் தேவானாந்தாவின் ஈ.பி.டி.பி.,
ஐக்கியதேசியக் கட்சி,
ரிஷாத் பதியூதினின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை,
தமிழர் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளும் என்று ஊகங்கள் நிலவுகின்றன.
வித்தியாதரனின் புதியபோராளிகளின் கட்சியின் வெற்றி பற்றி ஐயப்பாடு நிலவுகிறது.
***

கூட்டமைப்பு முதல் முறையாக,
தேர்தல் களத்தில் கைவீசி நடக்கமுடியாமல்,
இம்முறை சற்றுத்திண்டாடியிருக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி,
வித்தியாதரனின் அணி என,
விலக்கமுடியாத சில எதிர்ப்புக்களைச் சந்திக்கவேண்டிய,
துர்ப்பாக்கிய சூழல் ஒருபுறம்.
கூட்டமைப்புக்குள் பகிரங்க ரகசியமாய் இருக்கும் உள்குத்துக்கள் ஒருபுறம்.
உலகம் சுற்றி விட்டு வந்து கடைசி நேரத்தில்,
முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி முடிவு இன்னொருபுறமுமாக,
பல சங்கடங்களை விழுங்கி யே,
கூட்டமைப்பு இம்முறை தேர்தல் களத்தில் நிற்கவேண்டியிருந்தது.
***
எது எப்படியோ,
அதிசயங்கள் ஏதும் நடந்தால் அன்றி,
வடக்கைப் பொறுத்தவரை நிச்சயம் பெரும்பான்மை வெற்றி,
கூட்டமைப்புக்குத்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அங்ஙனம் வெற்றி பெறும் பட்சத்தில் இனியும் கூட்டமைப்பு,
தமிழ்மக்களின் ஏமாளித்தனத்தை மட்டும் முதலாய் வைத்து
அரசியல் நடத்த நினைத்தால்,
அது நிச்சயம் அவர்களுக்கு ஆபத்தாய்த்தான் முடியும்.
***
தேர்தல் வெற்றியோடு தமது நிர்வாகத்தை,
கூட்டமைப்பினர் சீர்செய்ய வேண்டியது அவசியமாகிவிட்டது.
இனியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும்,
ஒருவர் சாட்டிய குற்றத்திற்கு மற்றவர் பதிலுரைக்காமல் விடுவதும்,
ஒருமைப்பாடின்றி அவரவர் தத்தம் பாட்டிற்கு அறிக்கைகள் விடுவதும்,
தேர்தல் காலத்தைத் தவிர மற்றைய காலங்களில்,
மக்கள் தொடர்பு பேணாமல் இருப்பதும்,
மர்மமான தமது செயற்பாடுகளுக்கான காரணங்களை,
மக்களுக்கு உரைக்காமல் விடுவதும்,
தம் முயற்சி ஏதுமின்றிப் பிறநாடுகளின் துணையால் மட்டுமே,
தீர்வுகளைப் பெறலாம் என்று கருதுவதுமாக,
இதுநாள் வரை செய்த விளையாட்டுக்களை,
கூட்டமைப்பு இனியும் செய்ய நினைத்தால்,
அது அவர்கள் தலையில் அவர்களே கொள்ளி வைத்துக்கொண்டதாய் முடியும்.
***
தேர்தல் வெற்றியோடு கூட்டமைப்பின் தலைமை,
இனித்தனிமனிதர், தனி அமைப்பு என,
எவரையும் முக்கியப்படுத்தாமல்,
அமைப்பை சீர்செய்ய சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதோடு,
இன நன்மையைக் கருத்திற்கொண்டு,
எதிர்காலம் பற்றிய சில திட்டமிடுதல்களை உடன் வகுத்தாகவேண்டும்.
வெறுமனே உரிமை, சுயாட்சி என்பதாய்ப் பேசி,
மக்களை மயக்கி அரசியல் செய்யும் விளையாட்டை,
இனியும் அவர்கள் செய்ய நினைத்தால் அது பெரும் தவறாகிவிடும்.
***
முன்பு இந்திராகாந்தி,
இந்தியாவில் தான் கொண்டு வந்த
அவசரகாலச்சட்டத்தின் எதிர்விளைவுகளால்
1977 இல் இந்தியப்பாரளுமன்றத் தேர்தலில் தன் தொகுதியிலும் தோற்றுப்போனார்.
ஜனதாக்கட்சி பெரும் வெற்றியடைய
இந்திராகாந்தியின் தோல்வியை வைத்து காங்கிரஸ் இரண்டாக உடைந்து போனது.
முக்கியமானவர்கள் பலர் இந்திராகாந்தியை விட்டு விலகிப்போக
அப்போது கர்நாடக முதலமைச்சராய் இருந்த தேவராஜ்அர்ஸ் மட்டுமே
அம்மையாருக்கு மாநில ஆட்சிப்பலத்தோடு உறுதுணையாய் நின்றார்.
உடனேயே இந்திராகாங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி
இந்திராவின் மீள் எழுச்சிக்குப் பெரிதும் துணை செய்தார்.
மூன்றாண்டுகளுக்குள் ஜனதாக்கட்சியிலிருந்த
மூத்த தலைவர்களுக்குள் பகை வெடிக்க,
ஜனதாக்கட்சியின் அரசு வீழ்ந்தது.
மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் வர
இந்திராவின் வளர்ச்சிக்குத் துணை செய்த துணிவில்
தேவராஜ்அர்ஸ்,
அத்தேர்தலில் அம்மையாருக்குச் சிலகட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தார்.
தேர்தலுக்கு முகம் கொடுத்து தனித்து நின்ற இக்கட்டான அந்நேரத்திலும்
தன் தலைமைப்பண்பை விடாத இந்திராகாந்தி அம்மையார்
துணிந்து முடிவெடுத்து தேவராஜ்அர்ஸை கட்சியிலிருந்து வெளியேற்றினார்.
அப்போது அம்மையாரின் துணிவு பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.
அந்தத் தேர்தலில் இந்திரா
கர்நாடகத்திலேயே சிக்மக;ர் தொகுதியில் நின்று பெருவெற்றி பெற்றார்.
அத்தோடு தேவராஜ்அர்ஸின் அரசியல் வாழ்வு முடிந்து போயிற்று.
***
அசையாது முடிவெடுக்கும் மேற்குறிப்பிட்ட பண்பு
தலைமைக்கு அவசியமானது.
அப்பண்பு தற்போதைய கூட்டமைப்புத் தலைமiயில் சிறிதும் இல்லை.
அவர், இவர், அது, இது எனச் சமாளிக்கும் இயல்புகளை விட்டுவிட்டு
இனியேனும் அப்பண்பை உருவாக்கி,
சில நட்டங்களைச் சந்தித்தாலும்
துணிந்து செயற்பட கூட்டமைப்பின் தலைமை முடிவுசெய்யவேண்டும்.
அந்த ஆண்மைதான் கூட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
***
இதுவரை கூட்டமைப்பு
பெயரளவில் கூட்டமைப்பாய் இருக்கிறதே தவிர
எந்தவகையிலும் அவ் அமைப்புக்குள் இருப்போர்க்கிடையில்
உறவோ ஒருமைப்பாடோ வளர்க்கப்படவில்லை.
நான் அறிந்த ஓர் உதாரணத்தைச் சொல்லமுடியும்.
***
2015 ஆம் ஆண்டுக் கம்பன்விழாவில்
வடமாகாணசபை முதல்வரான சி.வி.கே. சிவஞானம் அவர்களை
கம்பன்கழகம் கௌரவித்தது.
அதே விழாவில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுக்கும்
கம்பன்கழகம் 'கம்பன்புகழ்விருதினை" வழங்கியது.
இவ்விருவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என்பதை உலகறியும்.
அவர்களுக்கு கௌரவங்கள் நிகழ்ந்த அன்று
ஆயிரக்கணக்கான தமிழ்மக்களும்,
இஸ்லாமிய, மலையகத் தலைவர்களும் கூடியிருந்த விழாச்சபைக்கு
கூட்டமைப்பைச் சேர்ந்த
பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களில்
ஒருவர்தானும் வருகை தந்திருக்கவில்லை.
கௌரவம் பெற்ற சபை முதல்வர்
தன்னந்தனியாக வருகை தந்து சபையின் கரகோஷத்திற்கு மத்தியில்
விருதுபெற்றுச் சென்றார்.
அன்றைய தினத்தில் வடமாகாண முதலமைச்சர் உட்பட
கூட்டமைப்பின் உறுப்பினர் பலரும்
கொழும்பில் நின்றார்கள் என்பதுதான் கொடுமை.
இந்தச் சம்பவம்
கூட்டமைப்பினர் தமக்குள்ளும் மக்களுடனும் உறவு பேணுவதில் காட்டும்
அலட்சியத்திற்கான ஒரு சான்று.
***
இனியும் இப்படியே இவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தால்
அது எதிராளிகளுக்கு இவர்கள் விரும்பி விருந்து வைப்பதாய் முடிந்துபோகும்.
விமர்சிப்பவர்கள் எல்லாம் பகைவர்கள் எனும் கருத்தை மாற்றி
முகம் நோக்கி விரல் நீட்டிக் குற்றம் சொல்வோரின் கருத்தை உள்வாங்கி
அமைப்பின் பலயீனங்களைச் சீர்செய்தால்
நிச்சயம் கூட்டமைப்புப் பழையபடி பலம் பெறும்.
***
தமிழர் பிரச்சினைகளைக் கையாண்ட மூத்த தலைவர்களை
தன்னகத்தே கொண்டு திகழும் தகுதி,
அறிவார்ந்த அங்கத்தவர்களைக் கொண்டு திகழும் தகுதி,
இங்கு வாழும் தமிழர்களதும்,
புலம்பெயர் தமிழர்களதும் அங்கீகாரம் பெற்ற தகுதி,
உலகத்தலைவர்களால் ஏற்கப்பட்ட தகுதி
எனும் பல தகுதிகள் கூட்டமைப்புக்கான இன்றைய தனித்தகைமைகள்.
இத்தகைமைகளைப் புதிதாய் வரும் தலைமைகள் பங்குபோட்டுக் கொள்ளாமல்
பாதுகாத்துக் கொள்வது கூட்டமைப்பின் பொறுப்பு.
***
அவர்களின் நன்மைகருதி
கூட்டமைப்பினர் தம்மை மறுசீரமைக்க
சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவர்களைப் பொறுத்தது.

** கூட்டமைப்பினர் முதலில் அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகள் பற்றி தங்களுக்குள் சேர்ந்து பேசித் தீர்வு கண்டதன் பின்னர்தான் கட்சிசார்ந்த எவரும் சமூகத்திற்குக் கருத்துரைப்பது என்று முடிவெடுக்கவேண்டும். அல்லது கட்சியின் பேச்சாளர் என ஒருவரை நியமித்து அவரைக் கொண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி கட்சியின் கருத்தை வெளியிடச் செய்தல் வேண்டும். (தற்போது இருப்பதுபோல் பெயரளவில் இல்லாமல்)
** கட்சியால் ஒருமித்து எடுக்கப்படும் முடிவே கட்சிசார்ந்த அனைவரதும் முடிவாய் இருத்தல்வேண்டும்.
** கட்சி எடுக்கும் முடிவை மீறுபவர் எவரானாலும் உடனடியாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க கட்சிக்குள் நடுநிலையான ஒரு விசாரணைக்குழுவை அமைத்தல் வேண்டும். அக்குழுஉறுப்பினர்களுள் கட்சிக்கு வெளியில் இருக்கும் சமூகப் பிரமுகர்களில் ஓரிருவர் இருந்தால்கூட நல்லது.
** ஒரு தனி மனிதரோ தனி அமைப்போ தனது செல்வாக்கைக் கொண்டு கட்சிக்குள் மேலாதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. அங்ஙனம் எவரும் செலுத்த முயலின் உடன் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
** தற்போது கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என இரு பகுதியினர் தமிழர் சார்பான நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்து வருவதால் முதலில் அவ்விரு பகுதியினரும் நிர்வாகத்தில் தமது செயற்பாட்டு எல்லைகளை பேசி வகுத்துக்கொள்ளவேண்டும். வகுத்தபின்பு ஒருவர் நிர்வாக எல்லைக்குள் மற்றவர் தலையிடாமல் இருக்கவேண்டும். தலையிடும் தேவை வந்தால் சம்பந்தப்பட்ட இரு நிர்வாகமும் பேசி அது பற்றித்  தீர்வு கண்டு முரணின்றிச் செயற்படவேண்டும்.
** பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் எனும் இவ்விரு பகுதியினரும் நிர்வாக அமைப்பில் பிரிந்து செயற்பட்டாலும் கட்சி என்ற அமைப்பில் ஒருமைப்பாட்டுடன் ஒரு தலைமைத்துவத்தின்  கீழ் இயங்குதலை உறுதிசெய்தல் வேண்டும்.
(பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர் எவர் என்றாலும் அவர்கள் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்டவர்களே. அவர்களைக் கட்சியின் பிரதிநிதிகளாய்த்தான் மக்கள் காண்பர். எனவே எவ்வுறுப்பினரானாலும் அவர்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்குள் கட்டாயமாக அமைந்து நடத்தல் வேண்டும் என்பதைக் கட்சிக்குள் சட்டமாக்கவேண்டும்.)
** கட்சிக்குள் இருக்கும் தனி அமைப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறை ஒதுக்கி, கட்சிக்கென்று தனித்த ஒரு அலுவலகத்தை அமைக்க வேண்டும். வாரம் ஒருதரம் அனைத்துக் கட்சிகளின் தலைமைப் பிரதிநிதிகளும் கட்டாயம் இங்கு ஒன்றுகூடி அவ்வக்காலத்துப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து ஒருமித்து முடிவெடுக்கவேண்டும். தாம் எடுத்த முடிவுகள் பற்றி தத்தம் கட்சியில் இருப்போர் விமர்சிக்காத வண்ணம் அவ்வத் தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
** அரசாங்கம் தரும் வளர்ச்சித்திட்டங்களை செயற்படுத்தும் உரிமையைப் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களுக்குத் தனித்து வழங்காமல் மொத்தக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து திட்டமிட்டு அவ் வளர்ச்சித் திட்டங்களை பகுத்து பிரதேசம் முழுவதற்குமான முன்னேற்றத்தில் சமனிலை பேணும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
** கட்சி வளர்ச்சிக்கென்று தனித்த வைப்புநிதியை உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் திட்டத்தைக் கொணர வேண்டும் அதனோடு அந்நிதியைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறையும் அதனைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையும் சட்டபூர்வாக உருவாக்கப்படவேண்டும். அரசு உதவ முன்வராத நேரத்தில் தாயகத்தின் வளர்ச்சிக்கு அவசியம் தேவையான திட்டங்களை இந்நிதியைக் கொண்டு கட்சி சுயமாய்ச் செயற்படுத்தலாம்.
** ஒரு அமைப்பின் வளர்ச்சியில் இன்றைய நிலையில் ஊடகங்களின் உதவி அவசியமானது. எனவே கட்சியின் சார்பில் ஒரு பத்திரிகையையும், வானலை, தொலைக்காட்சி ஊடகங்களையும் கட்சியின் நிதி கொண்டு உருவாக்கவேண்டும். அவ் ஊடகங்களின் துணை கொண்டு அன்றாடம் தமது செயற்பாடுகளையும், கொள்கைகளையும் வளர்த்தெடுக்க முயலவேண்டும். அதே நேரத்தில் அவ் ஊடகங்களின் துணையால் கட்சியின் நிதி வளத்தை பெருக்கவும் ஆவன செய்யவேண்டும்.  அங்ஙனம் கட்சிக்கென சுயமான ஊடகபலம் இருக்குமெனின், ஊடகச் செல்வாக்குக்காக தனிமனிதர்களிடம் பணிந்துபோகும் தேவை கட்சிக்கு உருவாகாது.
** கட்சிக்கென உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளத் தனித்திட்டம் வகுக்கவேண்டும். தேர்தல் காலத்தில் என்றில்லாமல், இம்முயற்சி நாள்தோறும் நடைபெறவேண்டும். இதற்கென ஓர் தனிக்குழு இயங்கவேண்டும். இக்குழு வருடந்தோறும் மேலிடத்திற்கு தாம் புதிதாய்ச் சேர்த்த அங்கத்தினர் பற்றி அறிவித்தல்வேண்டும். சேர்க்கப்படும் அங்கத்தினர்க்குக் கட்சியின் சார்பில் அடையாளஅட்டையும், ஒழுக்கக் கோவையும், பணிவரையறை நெறிமுறை வழிகாட்டல் பத்திரமும் வழங்கப்படல் வேண்டும். வருடம் ஒருதரமேனும் மொத்த உறுப்பினர்களையும் ஓர் இடத்தில் கூட்டி கட்சிமாநாட்டினை பிரமிக்கும்படியாக நடாத்தல் வேண்டும்.
** இங்ஙனம் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் செயற்பாட்டுத்திறனை அடிப்படையாய்க் கொண்டே கட்சிப்பதவிகளும் பாராளுமன்ற மாகாணசபைப் பதவிகளும் வழங்கப்படவேண்டும். அரசினூடு கிடைக்கும் பதவிச்சலுகைகளில் இவர்களின் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
** கல்வி, பொருளாதார வளர்ச்சி, சட்டஒழுங்கு, குடியேற்றம், விவசாயம், மறுவாழ்வு எனும் விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுத்தத்தக்க அறிஞர் குழுக்களை அமைத்து மாதந்தோறும் அவர்கள் அறிக்கையைப் பெற்று அதனைச் செயற்படுத்த தனி அமைப்பை உருவாக்கவேண்டும். அவ் அமைப்புக்களின் செயற்பாட்டு வெற்றியை வருடாந்த மாநாடுகளில் மக்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
** முக்கியமாகக் கல்வி, பொருளாதாரம், விவசாயம் ஆகிய விடயங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தவும் புதிய திட்டங்கள் தீட்டவும் இங்குள்ள அறிஞர்களதும், புலம்பெயர்ந்து வாழும் அறிஞர்களதும் ஆலோசனைகளைப் பெறுவதோடு, மொத்தத்; தமிழர்களது நிதிப்பலத்தையும் ஒன்று திரட்ட வேண்டும்.
** பொருளாதார வளர்ச்சியில் போடப்படும் திட்டங்களில் பொதுமக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் பங்குதாரர்களாக்கி அவர்களிடம் நிதித்துணையைப் பெறுவதோடு அவர்களும் பயனுறும் வண்ணம் செயலாற்றவேண்டும்.
** புலம்பெயர்ந்த தமிழர்களதும் இங்கு வாழ் தமிழர்களதும் நிதி ஆற்றலை ஒன்றுதிரட்ட தமிழர்க்கென ஒரு நிதிநிறுவனத்தை (வங்கி) உருவாக்கவேண்டும். இத்துறையில் புலமைபெற்ற அறிவாளர்களைக் குழுவாய் அமைத்து இத்திட்டத்தை  நெறி செய்யலாம். இவ்வங்கி மூலம் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தம் சுயமுயற்சியால் முன்னேற கடனுதவி முதலியவற்றை வழங்கலாம்.
** அதுபோலவே கல்வி விடயத்திலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு அப்பால் நமது பிரதேச கல்வி வளர்ச்சியை உலகத் தரத்தோடு  சமநிலைப்படுத்தும் வண்ணம் மாகாண அமைச்சின் வழியாக ஆவன செய்தல்வேண்டும்.
** விவசாயத்திலும் நமது மண்வளம், நீர்வளம் என்பவை கணிக்கப்பட்டு நவீன முறைகளை உள்வாங்கி பிரதேசத்தின் இயற்கை விவசாயத்திறனைக் கருத்திற்கொண்டு அதனை மேலோங்கச் செய்ய வெளிநாட்டு விவசாய அறிஞர்களின் உதவிகளைப் பெற்று புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
** விவசாய உற்பத்திகளை உடன் ஏற்றுமதி செய்து பயன்பெறவும், சேமித்துப் பின் ஏற்றுமதி செய்து பயன்பெறவும், உற்பத்திகளின் பயன்பாட்டை பன்முகமாய் விரிவித்துப் பயன்கொள்ளத்தக்க தொழிற்சாலைகளை அமைத்திடவும், தனித்திட்டங்கள் அமைப்பதன் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெருக்கிட வழிசெய்தல் வேண்டும்.
** தேர்தல்களில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவென ஒரு நடுநிலையான குழுவினை உருவாக்கவேண்டும். அக்குழுவினரே வேட்பாளர் பற்றிய இறுதி முடிவினை எடுக்கவேண்டும். முக்கியமாக அக்குழுவில் இருப்போர் தேர்தலில் தாங்கள் போட்டியிடக்கூடாது எனும் நிபந்தனையை விதித்தல் வேண்டும். இன மேம்பாட்டிற்கு அவசியமானவர்கள் தவிர  மற்றைய வேட்பாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றப்படவேண்டும். தேர்வுக்குழுவினர் ஏதேனும் ஒரு நிறுவனத்தைக் கொண்டு தொகுதிகளில் வேட்பாளர்களின் செல்வாக்கைக் கணித்தும் அவர்களுக்கு மீண்டும் இடம் கொடுப்பது பற்றி சிந்திக்கலாம்.
** பாராளுமன்றங்கள் கூட்டப்படும் போது யார் யார் எந்தெந்த விடயம் பற்றி பேசுவதெனக் கூடி ஆராய்ந்து பின்னர் அவ்வுரைகளை அறிஞர்களின் ஆலோசனையோடு தக்கபடி அமைத்துக் கட்சிக்கூட்டத்தில் அனைவரும் அதனை ஆராய்ந்து தெளிந்ததன் பின்னர்தான் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுதல் வேண்டும். இக்காரியங்களுக்குத் துணை  செய்யவும் ஒரு குழு அமைத்தல்வேண்டும்.
** இன்றைய நிலையில் நம் இனம் இன அடையாளம் வேண்டி நிற்பதால் கலை, இலக்கியம், சமயம், பண்பாடு ஆகிய விடயங்களை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கவும் இவற்றுள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவுமாகத்  தனித்தகுழு அமைக்கப்படவேண்டும். இக்குழுவில் ஏலவே சமூகத்துள் இத் துறைகள் பற்றி செயற்பட்டு வரும் பெரியோர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.
** சமூகத்தின் பல்துறை சார்ந்த அறிஞர் குழு ஒன்றை அமைத்து மாதம் ஒருதரம் கட்சித்தலைவர்கள் அவர்களுடன் கலந்து பேசவேண்டும். அவர்கள் மூலம் கட்சியின் கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதோடு மக்களின் கருத்தையும் தாம் அறிந்து கொள்ளவும் வழி சமைத்தல் வேண்டும். இதனால் மக்கள் தொடர்பு கட்சிக்கு நிலைக்கும்.
** அனைத்து மதத்தலைவர்களை ஒன்றிணைத்து மதம் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள நடுநிலைமையான ஒரு குழுவினை நியமிக்கவேண்டும்.
** அயல்நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கென உலக அரசியல் தெரிந்த அறிஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயற்படவேண்டும். அதுபோலவே பேரினவாதத் தலைமைகளுடன் தொடர்புகொண்டு நட்பை வளர்த்தெடுக்க தகுதியுள்ள குழு ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.
** பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் தம் பதவிக்காக அரசிடம் பெறும் சலுகைகளை மக்களுக்காக எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும், பொதுமக்களுடனான தொடர்புக்காக மாதாந்தம் அவர்கள் செய்யும் செயற்பாடுகள் பற்றியும் அறிக்கை மூலம் தலைமையகத்திற்கு தெரிவிக்கச் செய்தல் வேண்டும்.
** பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதியில் குடும்பத்துடனான நிரந்தர வாழ்வைக் கொண்டிருக்கவேண்டும்.
** பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் தத்தம் தொகுதியில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வலியுறுத்தப்படவேண்டும்.
** வறுமையுற்றவர்களுக்கான இலவச சட்ட ஆலோசனைக் குழுவொன்று கட்சி அலுவலகத்தில் இயங்கவேண்டும்.
** ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பிரதேசங்களின் வளர்ச்சிக்கென நிதிதிரட்ட தனி உறுப்பினர்களையும் அலுவலகங்களையும் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் திரட்டப்படும் நிதியினைச் சட்டப்படி நாட்டுக்குள் கொணர அரசுடன் பேசி அரசின் உறுப்பினர்களையும் உள்வாங்கிய ஓர் நிர்வாகத்தை அமைத்தல் வேண்டும்.
** பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களால் தத்தம் தொகுதிக்கான அவசிய தேவைகள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு கட்சிப் பொதுக் கூட்டத்தில் அவை தலைவர்களால் ஆராய்ந்து பகுக்கப்பட்டு பின் வரிசைப்படி அச்செயற்திட்டங்களை மேற்படி நிதியுதவியைக் கொண்டு நடைமுறைப்படுத்தவேண்டும்.
***
இவை என் மனதில் உதித்த சில எண்ணங்கள்.
இன்னும் பல அறிஞர்களது ஆலோசனைகளையும் பெற்று
முறைப்படியான ஓர் நிர்வாகத்திட்டத்தைத் தீட்டி
கூட்டமைப்பு செயற்படுமானால்
அக்கட்சி தன்மீதான தமிழர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெறுவதோடு,
இனத்தின் வளர்ச்சியையும் உறுதிசெய்யலாம்.
எதிரிகளிடம்  உரிமைகளை எதிர்பார்த்து நிற்பதைவிட
நாமாக நம்மைப் பலப்படுத்துவது மிக அவசியமானது.
தமிழனத்தின் தலைமை கொள்வோர் எவராயினும்
இக்கருத்துக்களைப் பரிசீலிப்பது நல்லது.
******

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...