•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, August 28, 2015

அரசியற்களம் 09: அப்பாவித் தமிழன் மனதில் தோன்றும் சில அசட்டுக் கேள்விகள்!

-ஜெயம்கொண்டான்

1. திரும்பத் திரும்ப குறித்த சிலருக்கே தேர்தலில் நிற்கும் வாய்ப்பைக் கூட்டமைப்பு வழங்குவதன் காரணம் என்ன? மத்தியில் ஜனாதிபதி தேர்தலில், முன்பு ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நிற்கமுடியாது என்றிருந்தாற்போல கூட்டமைப்புக்குள்ளும் ஓர் கட்டுப்பாட்டை ஏன் கொண்டுவரக் கூடாது?

2. தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்குவது மக்கள் கருத்தை நிராகரிப்பதாகும் என கஃபே அமைப்பு சொல்லியிருக்கிறது. அப்படியானால் தேர்தலில் நின்று தோற்ற இருவருக்கு இடம் வழங்கியதன் மூலம் கூட்டமைப்பும் தனக்கு ஆதரவான தமிழ்மக்கள் கருத்தை அலட்சியம் செய்கிறதா?

3. தோற்றவர்களுக்கு இடம் வழங்குவதானால் தோற்றவர்களில் அதிக வாக்குப் பெற்றவர்களுக்கு வழங்குவதுதானே நியாயமாகும். அந்த ஒழுங்கினைக் கடைப்பிடிக்காதது ஏன்?


4. தேசியப்பட்டியலில் கிடைத்த இரண்டு இடங்களை கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் பகிர்ந்து கொள்ளாமல் தமிழரசுக்கட்சி மட்டும்  அவ்விரண்டு இடங்களையும் எடுத்துக் கொண்டது எங்ஙனம் நியாயமாகும்?

5. தேசியப்பட்டியலில் கிடைத்த இடங்களை யாருக்கு வழங்குவது என்பது பற்றி கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆராய்ந்து பெரும்பான்மை பற்றி முடிவெடுத்தார்களா? இல்லை தமிழரசுக்கட்சி மட்டும் தனித்து முடிவெடுத்ததா?

6. கூட்டமைப்பின் வெற்றி என்பது கட்சியின் மொத்த வெற்றியா? அல்லது தமிழரசுக்கட்சியின் தனி வெற்றியா?

7. தமிழரசுக்கட்சியின் தனி வெற்றி எனின், அக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா அல்லவா தேசியப்பட்டியலுக்குரியவர்களைத்  தேர்ந்தெடுக்க வேண்டும்? அவர் அத்தேர்வு பற்றி ஏதும் இதுவரை பேசவில்லையே? அங்ஙனமாயின் அவரும் வெறும் பெயரளவுக்குத்தான் தலைவராய் நியமிக்கப்பட்டிருக்கிறாரா?

8. கூட்டமைப்பில் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன? அணிகளின் பெரும்பான்மைக் கருத்திற்கேற்ப எடுக்கப்படுகிறதா? அல்லது தமிழரசுக்கட்சியே முடிவினை எடுக்கிறதா? தமிழரசுக்கட்சியிலும் முடிவெடுக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?

9. கூட்டமைப்பிலுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தேசியப்பட்டியலில் ஓர் இடத்தை தோல்வியுற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கட்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அக்கோரிக்கை சிறிதும் மதிக்கப்படாதது ஏன்?

10. அவர்கள் கோரிக்கையை நிராகரித்தது யார்? சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவரா? தமிழரசுக்கட்சியின் தலைவரா? கூட்டமைப்பின் தலைவர் மற்றைத் தலைவர்களின் கருத்தை சிறிதும் மதியாமல் நிராகரித்ததன் நோக்கம் என்ன? தமிழரசுக்கட்சி கூட்டமைப்பில் இருக்கும் மற்றைத் தலைவர்களை வெறும் போடுதடிகளாய்த்தான் நினைக்கிறதா?

11. தமிழரசுக்கட்சி தமது செயல்களால் மறைமுகமாய் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் நடந்து கொண்டும் மற்றைய அமைப்புக்கள் இன்னும் கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டிருப்பதேன்? விலகினால் இருக்கும் பதவிகளும் போய்விடும் எனும் அச்சந்தான் காரணமா?

12. தேசியப்பட்டியலில் தமிழரசுக்கட்சியின் சார்பில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திற்கு இடம் வழங்கப்போவதாக முதலில் சொல்லப்பட்டது. பின்னர் காரணமின்றி அக்கருத்து நிராகரிக்கப்பட்டது. பேராசிரியரைவிட தற்போது தமிழரசுக்கட்சி இடம் தந்த இருவரும் எந்தவிதத்தில் கட்சிக்கு முக்கியமானவர்கள்?

13. தனது வெற்றிக்கு தமது கட்சியினர் சிலரே தடைபோட்டும் அதனை மீறி தன்னை வெல்லவைத்த மக்களுக்கு நன்றி என்று மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பத்திரிகைகளில் தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லும் கட்சியினர் யார்? தலைமைப்பீடம் இதுபற்றி விசாரிக்குமா?

14. தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியுற்ற அருந்தவபாலன் தனக்கு சதி நிகழ்ந்ததாய் இணையத்தில் அறிக்கை விட்டிருக்கிறார். இச்செய்தி யாழ்ப்பாணத்தில் பரபரப்பாகியது. அதுபற்றி கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எதுவும் பேசாதது ஏன்? அவரது வாயை மூடவைக்கத்தான் அவருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிப்பதாய்ச் சொல்லப்படுகிறதா?

15. கூட்டமைப்பின் முடிவுகள் எதேச்சாதிகாரமாய் ஓரிருவரால் மட்டும் எடுக்கபடுவதாய்த் தெரிகிறது. தமிழரசுக்கட்சித் தலைவருக்குக் கூட முடிவெடுப்பதில் உரிமை இருப்பதாய்த் தெரியவில்லை. கூட்டமைப்பும் அதனுள் இருக்கும் அணித்தலைவர்களும் வெறும் பொம்மலாட்ட பொம்மைகள் தானா? அதை ஆட்டுவிக்கும் நூல் எவர் கையில் இருக்கிறது?

16. சம்பந்தனால் தொகுதிக்குப் போய்வர முடியாதுள்ளதால்தான் துரைரட்ணத்திற்குத் திருமலையில் இடம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தொகுதிக்கே சென்று வரமுடியாதவர் தேர்தலில் ஏன் நின்றார்? வேறொருவருக்கு அதனை வழங்கியிருக்கலாமே?

17. கூட்டமைப்பினர் கேட்ட சமஷ்டித்தீர்வை திடமாக  ஐக்கியதேசியக்கட்சி நிராகரித்த நிலையில் ரணில் கேட்பதற்கு முன்பே அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என்று சம்பந்தன், மாவை ஆகியோர் அறிக்கை விட்டது எதனால்? அவர்கள் வைத்த சமஷ்டிக் கோரிக்கை வெறும் பேச்சுக்குத்தானா?

18. அல்லது தாம் கேட்ட சமஷ்டிக்கு அடுத்தபடியாக புதிய அரசிடம் எதையேனும் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக உள்ளனரா? அங்ஙனமாயின் அது எது?

19. அடுத்த தேர்தலின் முன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என கூட்டமைப்புச் சொல்லியிருக்கிறது. சமஷ்டியும் தரமாட்டோம் என்ற கட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராகும் நிலையில் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக எதனைப் பெறப்போகிறது?

20. ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை முடிவை தற்போதைய அரசு நிராகரித்தால் அடுத்து கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது?

21. ஆட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராhனவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இனத்திற்கு நன்மைகளைச் செய்யத் தயங்குவது ஏன்? இரண்டுக்குமான வித்தியாசங்கள் என்ன?

22. தேர்தல் முடியும்வரை ஊமையாய்த்தான் இருக்கப்போகிறேன் என்று சொல்லி வந்த வடக்கின் முதலமைச்சர் இன்னும் வாய்திறக்காமல் இருப்பது ஏன்? அவர் மனதில் போட்ட தேர்தல் கணக்குப் பிழைத்துவிட்ட சோகந்தான் காரணமா?


23. முதலமைச்சர் கூட்டமைப்பை ஆதரிக்காததன் காரணம் பற்றி தேர்தல் முடிந்ததும் கேட்கப்படும் என்று பேட்டியளித்த சம்பந்தன், இதுவரை அதுபற்றி விசாரிக்காததன் காரணம் என்ன?

24. உண்மையில் முதலமைச்சர் நடுநிலை வகித்தது யாருக்கும் யாருக்குமிடையில்?

25. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறது. அமைச்சர் பதவியை நிராகரித்த கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் பதவி கிடைத்தால் ஏற்பார்களா? இல்லையா?

*****

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...