Wednesday, September 2, 2015

அதிர்வுகள் 11 | “முற்பகல் செய்யின்...”


லகியலை விளங்குவது மிகக் கடினம்.
ஆயிரம் அற விதிகள் விதிக்கப்பட்டிருந்தாலும்,
அவ்விதிகளுக்கு மாறான விதிவிலக்குகளும்,
உலகில் இருக்கத்தான் செய்கின்;றன.
கெட்டவனின் உயர்ச்சியும் நல்லவனின் வீழ்ச்சியும், சிந்திக்கத்தக்கன” என்று,
வள்ளுவரே விதிவிலக்கினையும் அங்கீகரிக்கிறார்.
இந்த விதிவிலக்குகளையே விதி என நம்பி,
தவறிழைத்தும் வென்றுவிடலாம் எனப் பலர் நினைக்கின்றனர்.
அவர்களே வாழ்க்கையில் வீணாய்த் தோற்றுப்போகின்றனர்.
நாம் பின்பற்ற வேண்டியவைகள் விதிகளே அன்றி, விதிவிலக்குகள் அன்றாம்.
***

சரி சரி, நம் அறநூல்கள் விதித்த அறவிதியை, சுருங்கச் சொல்லும்!” என்கிறீர்களா?
சொல்கிறேன்!
மனதாலோ, வார்த்தையாலோ, உடம்பாலோ, நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும்,
சமமான எதிர் வினையை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.
இதுதான், தத்துவக்காரர் சொல்லியிருக்கும் வினைக்கொள்கை.
“எந்த ஒரு தாக்கத்திற்கும் எதிரானதும் சமமானதுமான, மறுதாக்கம் உண்டு” என்ற,
நியூட்டனின் இன்றைய விஞ்ஞானக் கொள்கையும்,
இவ்விதிக் கொள்கையின் மறுபதிப்பேயாம்.
இவ்வடிப்படை கொண்டே,
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்” எனும் பழமொழியும் உண்டாயிற்று.
ஆயிரம் படித்தாலும் அனுபவம்போல் வருமா?
எனவேதான், இவ்வார அதிர்வில்,
மேற்பழமொழிக்கான அனுபவப் பதிவொன்றினை எழுதவிருக்கின்றேன்.
***
என் அம்மாவோடு உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர்.
என் ஆச்சியுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர்.
அவர்களுள் ‘புண்ணியமூர்த்தி மாமா’ என்று, எங்கள் அம்மாவாலும்,
புண்ணியம் தாத்தா’ என்று எங்களாலும் அழைக்கப்படுகின்றவரே,
நான் சொல்லப்போகும் கதையின் கதாநாயகன்.
***
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது,
புண்ணியமூர்த்தி தாத்தாவின் மகன், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
சண்டிலிப்பாயில், எங்கள் உறவுக்கென்றே ஓர் ஒழுங்கை இருந்தது.
அந்த ஒழுங்கை பூராவும் எங்கள் உறவினர்கள்தான் இருந்தார்கள்.
தேன்கூடுபோல் உறவுகள் கூடிவாழ்ந்த காலமது.
உறவினருள் ஓரிருவர்தான் வெளியூர்களில் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுள் புண்ணியம் தாத்தாவும் ஒருவர்.
கொக்குவிலில் கலியாணம் செய்ததால்,
தாத்தா குடும்பம் அங்கேயே வாழ்ந்து வந்தது.
தாத்தாவிற்குப் பெண்ணும் ஆணுமாய் இரண்டே பிள்ளைகள்.
மகன்தான் இளையவன்.
தாத்தாவிற்கு அந்த மகன்மேல் கொள்ளைப்பிரியம்.
எப்போதாவது அவர் மகனோடு எங்கள் ஊருக்கு வரும்போது,
உறவுகள் அவர்பற்றிப் பல கதைகளைச் சொல்லும்.
அக்கதைகளுள் எனது மனதில் பதிந்தவை இரண்டு.
அதில் முக்கியமானதைப் பிறகு சொல்கிறேன்.
***
முதற்கதை, மாமா மகன்மேல் வைத்திருந்த அன்பைப்பற்றியது.
எங்கள் ஆச்சி அடிக்கடி சொல்லுவா,
“புண்ணியத்திற்கு தன்ர பொடியனில அப்பிடியொரு அன்பு.
மகன் குழந்தையாய் இருக்கிறபோது,
அவனைக் கடகப் பெட்டிக்குள்ள இருத்தி,
தலையில தூக்கி வைச்சுக்கொண்டு ஊரெல்லாம் திரிவான்.”
ஆச்சி சொல்ல, என் மனத்தினுள் அக்காட்சி விரியும்.
“எங்கட அப்பா, எங்கள எப்பயாவது அப்பிடித் தூக்கினவரே?” என,
அம்மாவை ஏக்கமாய்க் கேட்பேன்.
புண்ணியம் மாமாவிற்கு விசரெண்டால்,
கொப்பருக்கும் அப்பிடித் திரிய என்ன விசரே?” என,
அலட்சியமாய்ச் சொல்லிப் போவார் அம்மா.
ஆனாலும், தாத்தாவின் அந்த அன்புச் செயற்பாடு,
எனக்கு விசராய்ப் படவே படாது!
***
தாத்தாவைப் பற்றிய மேற்சொன்ன கதைக்கு நேர் எதிரானது,
ஊர் அவரைப்பற்றிச் சொல்லும் அடுத்த கதை.
அதைத்தான் முக்கியமான கதை என்று சொன்னேன்.
அப்போது தாத்தாவிற்கு இருபத்தைந்து வயது இருக்குமாம்.
ஊரே கண்டு நடுங்குகின்ற சண்டியராய்த் தாத்தா இருந்தாராம்.
எடுத்ததற்கெல்லாம் அடிதடிதானாம்.
கட்டுக்கடங்காத காளையாய் அவர் இருந்தபோதுதான்,
அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாம்.
***
ஒருநாள், சீரணி நாகம்மாள் கோயில் திருவிழாவில் நடந்த,
சின்ன மேளத்தைப் பார்க்கச் சென்ற புண்ணியமூர்த்தியின் கண்களில்,
கட்டுடை சிவத்தாரின் மகள் பட்டிருக்கிறாள்.
அழகி என்றால், அப்படிப்பட்ட அழகி.
சண்டியனான புண்ணியமூர்த்தி,
அவ்வழகியைப் பார்த்ததும் சரணாகதியடைந்திருக்கிறான்.
கல்லுக்குள் ஈரம் ஊறினாற்போல் அச்சண்டியனின் மனதில் காதல் ஊறியிருக்கிறது.
சண்டித்தனத்தில் எவ்வளவு முரட்டுத்தனம் இருந்ததோ,
அவனுடைய காதலிலும் அதேயளவு முரட்டுத்தனம் இருந்திருக்கிறது.
அந்தப் பெண்ணும் தன்னைக் காதலிப்பதாய் இவனாகவே நினைத்துக்கொண்டு,
மனதினுள் காதற்கோட்டை கட்டி வாழ்ந்திருக்கிறான் புண்ணியமூர்த்தி.
ஒருநாள், இடிவிழுந்தாற்போல் அச்செய்தி வந்திருக்கிறது.
அப்பெண்ணுக்கு அடுத்த நாள் திருமணம்.
வந்த செய்தி இதுதான்.
அச்செய்தி அறிந்து அதிர்ந்துபோன புண்ணியமூர்த்தி,
அடுத்த நாள், திருமணமாகி மணமக்கள் அழைத்து வரப்படுகையில்,
வழியில் நின்ற மகிழ மரக்கிளைகளுக்குள் ஒளிந்து நின்று,
மணமக்கள் அருகில் வந்ததும் மரத்தால் குதித்து,
மடியிலிருந்த கத்தியால் ஒரே குத்தாய்க் குத்தியிருக்கிறான்.
மணமகளுக்கல்ல! மணமகனுக்கு.
தன்னால் விரும்பப்பட்டவள்,
வேறொருவனின் சொத்தாகி விடக்கூடாது என்னும் பிடிவாதம் அவனுக்கு.
அதே இடத்தில் மணமகன் இறந்துபோனானாம்.
பின் வழக்கு நடந்து,
புண்ணியமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாம்.
***
புண்ணியமூர்த்தியின் நல்ல காலம்,
சிறையில் அவன் இருந்தபோது,
அவனுக்குப் பெரியம்மை நோய் வந்திருக்கிறது.
அந்தக்காலத்தில் பெரியம்மை நோய் வந்தவர்கள் தப்பமாட்டார்களாம்.
நிச்சயம் இறந்து விடுவான் எனும் எண்ணத்தினாலும்,
மற்றக் கைதிகளுக்கும் அந்நோய் பரவி விடக்கூடாது என்பதனாலும்,
புண்ணியமூர்த்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறான்.
எங்கள் அம்மாவின் தாத்தா சிறையிலிருந்து மகனை அழைத்துவந்து,
ஊருக்கு வெளியேயிருந்த ஒரு பாழடைந்த வீட்டில் வைத்து, வைத்தியம் செய்திருக்கிறார்.
அதிர்ஷ்டவசமாய் நோய் மாறி, புண்ணியமூர்த்தி நலமடைந்தானாம்.
அதன் பிறகு, திருந்தி நடந்த அவனுக்கு,
திருமணம் செய்து வைத்தார்களாம்.
இதுதான் புண்ணியம் தாத்தாவைப்பற்றி,
உறவு சொல்லும் இரண்டாவது கதை.
***
மகன்மேல் அன்புப் பைத்தியமாய்த் திரிந்த தாத்தாவை,
ஒரு கொலையாளியாய் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
மகன் கால்தடக்கி விழுந்தால்கூட,
அவர் பதறிக் கண்கலங்குவதைப் பலதரம் பார்த்திருக்கிறேன்.
ஒருநாள் தாத்தாவின் மகன்,
ஒருவருக்கும் சொல்லாமல் பக்கத்து வீட்டிற்கு விளையாடப்போக,
மகனைக் காணவில்லையென்று வீட்டார் தேடத் தொடங்கியிருக்கின்றனர்.
அன்று, தாத்தா பட்ட பாட்டையும்,
பதறிய பதற்றத்தையும் அழுத அழுகையையும் பற்றி,
இப்போதும் ஊரார் சொல்லிச் சிரிப்பார்கள்.
“சின்ன வயசில, தான் செய்த பிழை,
மகனத் தாக்கிப்போடும் எண்டு அவனுக்குப் பயம்,
அதுதான் அப்பிடிப் பதறினவன்” என்று,
ஆச்சி தம்பிக்காக வக்காலத்து வாங்குவார்.
இப்படிப்பட்ட மென்மையான தாத்தாவா ஒருவனைக் கொன்றிருப்பார்,
ஏனோ என் மனம் அக்கதையை நம்ப மறுக்கும்.
***
ஒருநாள் தாத்தா ஆச்சி வீட்டிற்கு வந்திருந்தார்.
அவரது முகம் என்றுமில்லாமல் சோர்ந்து கிடந்தது.
இரவு முழுக்க அழுதாற்போல் கண்கள் சிவந்திருந்தன.
ஆச்சிக்கு, தம்பியார்மேல் அளவற்ற அன்பு.
தம்பியின் முகம் வாடிக்கிடந்ததைக் கண்டு ஆற்றாத ஆச்சி,
கால் நீட்டி இலுப்பங்கொட்டை உடைத்தபடி,
“என்ன புண்ணியம், என்ன பிரச்சினை?” என்றார்.
கொஞ்சநேரம் ஒன்றும் பேசாத தாத்தா,
குரல் கம்ம, “சின்னவன் சோதினையில ‘பெயில்’ விட்டதால,
தன்ன வெளிநாட்டுக்குப் போகவிடச் சொல்லி பிடிவாதம் பிடிக்கிறான்.
அவன விட்டுட்டு இஞ்ச நான் எப்பிடி உசிர் வாழுறது” என்றார்.
நாட்டுச் சூழ்நிலையைக் காரணங் காட்டி,
அப்போதுதான் வெளிநாட்டிற்கு ஆட்கள் போகத் தொடங்கியிருந்தார்கள்.
வெளிநாட்டுப் பயணங்கள் ‘றிஸ்க்காக’ இருந்த நேரமது.
தாத்தா சொன்னதைக்கேட்டுக் கோபப்பட்ட ஆச்சி,
“அவனுக்கென்ன விசரே!
வெருட்டிப் பேசாம இஞ்ச இருந்து வேற வேலையைப் பார்க்கச் சொல்லு” என்றார்.
சொல்லிப் பார்த்தனான், கேக்கிறானில்லை அக்கா.
அனுப்பாட்டி நஞ்சு குடிச்சுச் செத்துப்போவன் எண்டு வெருட்டுறான்.
அதுமட்டுமில்ல அக்கா,
இப்ப பெடியள் எல்லாம் இயக்கம் இயக்கமெண்டு அதிலபோய்ச் சேருறாங்கள்.
அதனால, இஞ்ச அவன வைச்சிருக்கவும் எனக்குப் பயமாயிருக்கு
சொல்லும்போதே தாத்தாவின் குரல் நடுங்கியது.
அந்த நடுக்கத்தில் அவரது உள்ளத்தின் உள்ளிருந்த பயம் வெளிப்பட்டது.
தான் முன்பு ஒருவனைக் கொன்றிருந்ததால்,
தன் பிள்ளைக்கும் அப்படி ஏதாவது வந்துவிடுமோ எனும் பயம்,
அவருக்குள் எப்போதும் இருந்திருக்க வேண்டும்போல.
***
பிறகு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.
தாத்தாவின் மகனின் பிடிவாதம் முடிவில் வென்றது.
இயக்கங்களுக்குப் பயந்து,
தாத்தா ஏஜென்சி மூலம் மகனை ஜேர்மனிக்கு அனுப்பவென,
மனைவியின் தாலிக்கொடி, வீடெல்லாம் அடகுவைத்து ஒழுங்கு செய்தார்.
ஏனோ தெரியவில்லை எல்லாம் சரிவந்த பிறகும்,
ஒவ்வொரு நிமிடமும் தாத்தா பயந்து நடுங்கியபடியே இருந்தார்.
அவர், மகனை அனுப்பவும் பயந்தார், நிறுத்தவும் பயந்தார்.
கடைசியாய், பயணம் நிச்சயமானதும்,
தாத்தா மனைவியோடும் மகளோடும் கொழும்பு சென்று,
‘எயாபோட்டில்’ மகனை பிளேனில் ஏற்றிவிட்டு,
தாங்கமுடியாத துயரோடு அன்றிரவே யாழ் திரும்பினார்.
அப்போதும், கொழும்பு - யாழ்ப்பாண ‘ரயில்’ ஓடிக்கொண்டிருந்தது.
காலையில், வீடு வந்து சேர்ந்த தாத்தாவின் முகத்தில்,
துன்பத்திற்கிடையில் சற்று நிம்மதியும் தெரியத்தான் செய்தது.
அது மகனை இயக்கங்களிடமிருந்து காப்பாற்றி விட்ட நிம்மதிபோலும்.
அவரது நிம்மதி அதிகநேரம் நீடிக்கவில்லை.
மாலை வந்த ‘ரெலிபோன் கோல்’ அனைவரையும் அதிர வைத்தது.
***
விமான நிலையத்தில் வைத்து,
வயிற்றுக்குள் ஏதோ செய்வதாய்ச் சொன்ன மகனுக்கு,
பெற்றோர், ‘பனடோல்’ வாங்கிக் கொடுத்து,
“அதைப் போடு ஒன்றும் செய்யாது” என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள்.
விமானம் பறக்கத் தொடங்கியதும்,
அவனுக்கு வயிற்று வலி அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது.
தாங்க முடியாமல் அவன் கதறத் தொடங்க,
விமான ஊழியர்கள் முதலுதவி செய்து,
அடுத்த விமான நிலையத்தில் அவனை இறக்கி,
வைத்தியசாலைக்கு அனுப்ப ஒழுங்கு செய்து கொண்டிருந்த வேளையில்,
திடீரென அவன் தலை சாய்ந்து விட்டதாம்.
பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில்,
‘அப்பண்டிசைற்’ வெடித்து, அவன் இறந்தது தெரியவந்திருக்கிறது.
***
பிரேதம் கூட வராமல் நடந்த செத்த வீட்டில்,
தாய், தமக்கை, உறவு என அத்தனை பேரும் கதறியழுதார்கள்.
அயலவர்கள், வந்தவர்கள் கூட சூழ்நிலையின் தாக்கத்தால் கலங்கி நின்றார்கள்.
ஆனால், அனைவருக்கும் பெரிய ஆச்சரியம்.
தாத்தாவின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர்கூட வரவில்லை.
வாய் திறந்து அவர் எதையும் சொல்லி அழவுமில்லை.
கால் நீட்டி சுவரில் சாய்ந்தபடி,
கூரை முகட்டைப் பார்த்தபடியே இருந்தார்.
அவர் என்ன நினைக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை.
***
முன்பு கொலை செய்த காலத்தில்,
அவருக்கு மரணதண்டனை கொடுத்திருந்தால்கூட,
அது அவரைப் பெரிதாய்ப் பாதித்திருக்காது.
தண்டனையிலிருந்து நோய் மூலம் அவரை விடுவித்து,
வாழ்வு கொடுத்து, ஒரு மகனையும் கிடைக்கச் செய்து,
அவன்மேல் அளவற்ற அன்பை உண்டாக்கி,
எதிர்பாராத நேரத்தில் அவனது உயிரைப் பறித்து,
தாத்தாவுக்கு ஒரு உயிரின் பெறுமதியை உணர்த்தியது எது?
பதில் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் இப்போதெல்லாம் பிழை செய்ய மிகப்பயமாய் இருக்கிறது.
******

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...