•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, September 7, 2015

அரசியற்களம் 11: முடிவெடுப்பாரா முதலமைச்சர்?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
லகம் எதிர்பார்த்த எரிமலை மெல்ல வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா,
முதலமைச்சரை நோக்கி முதற்கல்லை எறிந்திருக்கிறார்.
'வடமாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக மக்கள் இருக்கவேண்டும் என்று கூறுவதற்குப் பதிலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில், கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவரது கருத்தை மீறி தமிழ்மக்கள் எமக்குப் பெருவாரியாக வெற்றியைத் தந்துள்ளனர்'
என்று பேசிய செய்தி 05.09.2015 தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
07.09.2015 வீரகேசரிப்பத்திரிகையில்,
'தமிழரசுக்கட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் நாம் ஏதோ சர்வதேச விசாரணையைக் கோராமல், உள்ளக விசாரணையைக் கோருவது போல, தமிழரசுக்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய வடக்கு முதலமைச்சரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்'
என்று அதே கூட்டத்தில் மாவை சேனாதிராஜா பேசிய செய்தி வெளியாகியிருக்கிறது.
***


இது எப்போதோ எதிர்பார்த்த ஒன்றுதான்.
முக்கியமான தேர்தல் நேரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா சென்று திரும்பிய முதலமைச்சர்,
வந்தவுடன் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வார் என,
யாவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, எவருமே எதிர்பாராத வகையில் அவர்,
'தேர்தலில் நடுநிலை வகிக்கப் போகிறேன்
எவர் வென்றாலும் அவர்களோடு சேர்ந்து என்னால் இயங்கமுடியும்"
என்று விடுத்த அறிக்கை, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முக்கியமாகக் கூட்டமைப்பினரை!
***

கூட்டமைப்பினரால் வலிந்து இழுக்கப்பட்டு,
ஆனந்தமாக அரசியலுக்குள் நுழைந்த முன்னாள் நீதியரசர்,
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வடக்கின் முதலமைச்சரானார்.
பதவியேற்ற நாள்முதல் அடுத்தடுத்து அவர்மேல் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பொருத்தமற்ற உறவினர்களைத் தனது செயலாளர்களாக்கினார் என்றும்,
எந்தநேரமும் ஓய்வெடுக்கிறார் என்றும்,
பத்திரிகையாளர்களைக் கூடச் சந்திக்க மறுக்கிறார் என்றும்,
ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் காலமான சுவாமி பிரேமானந்தாவின்,
சிறையிலிருக்கும் சீடர்களுக்காக மோடிக்குக் கடிதம் வரைந்தார் என்றும்,
முதலில் ஜனாதிபதி மஹிந்தவின் முன் சத்தியப்பிரமாணம் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்று சத்தியப்பிரமாணம் செய்தார் என்றும்,
மாகாணசபை அமைச்சுப் பொறுப்புக்களை ஒதுக்குகையில் நடுநிலையாய் நடக்கத் தவறினார் என்றும்,
தமிழ்நாட்டுக்காரர்களும், புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒதுங்கியிருக்கவேண்டும் என அறிக்கைவிட்டார் என்றும்,
போராளிக் குழுக்களோடு தன்னால் சேர்ந்து இயங்கமுடியாது என அறிவித்தாரென்றும்,
தாமதமாய் வந்து முதல்முறை மாகாணசபையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அஞ்சலியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டாரென்றும்,
அவர்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன.
***

மேற்குற்றச்சாட்டுகள் பகிரங்கமாய் வெளிவந்தாலும்,
படித்தவர், கண்ணியமானவர், பெரும்பதவி வகித்தவர் என்ற காரணங்களால்,
தமிழ்க் கூட்டமைப்பினரும், தமிழ்மக்களும்,
அவர்மேல் விமர்சனங்களை வைக்க விரும்பாது மௌனித்திருந்தனர்.
விமர்சனங்களை வைத்தவர்களையும் குற்றம் சாட்டினர்.
ஆனால் நிலைமை நாளுக்குநாள் மோசமானது.
நீதிபதி என்ற நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளமுடியாதவராய்,
அரசியலுடனும், நிர்வாகத்துடனும் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாது,
கடுமையாய்த் தடுமாறத்தொடங்கினார் முதலமைச்சர்.
முதலில் ஆளுநரின் செயலாளருடன் முரண்பாடு,
பின்னர் ஆளுநருடன் முரண்பாடு,
பிறகு சபை உறுப்பினர்களுடன் முரண்பாடு,
ஜனவரி எட்டில் ஆட்சிமாறிய பிறகு புதிய பிரதமருடன் முரண்பாடு என,
முதலமைச்சரால் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டனவேயன்றி,
நிர்வாகம் வளர்க்கப்படவில்லை.
***

இந்நிலையில்,
ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து முடிவில் மனிதரையே கடித்த கதையாய்,
நடந்து முடிந்த தேர்தலின் போது முதலமைச்சரின் முரண்பாடு,
தன்னை முதலமைச்சராக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் ஆரம்பமாகிற்று.
***

வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின் போது,
எவரால் என்ன செய்தி ஊட்டப்பட்டதோ தெரியவில்லை.
இங்கு வந்ததும் யாரும் எதிர்பாராத வண்ணம்,
கூட்டமைப்புக்கு எதிரானது என்று கருதத்தக்க,
அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார் முதலமைச்சர்.
***

ஒருபக்கம் கஜேந்திரகுமாரின் கட்சியும்,
மறுபக்கம் புதிய போராளிகளின் கட்சியும்,
ஏற்படுத்திய சங்கடத்திலிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு,
முதலமைச்சரின் அறிக்கை 'திருடனுக்குத் தேள் கொட்டிய" நிலையை உருவாக்கியது.
ஆனாலும் தேர்தலின் விளிம்பில் நின்ற கூட்டமைப்பினர்,
அந்த நேரத்தில் அவ்விடயத்தைப் பெரிூதுபடுத்த விரும்பவில்லை.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்.
உடன் விசாரிக்க வேண்டிய அந்தவிடயம் பற்றி,
'தேர்தல் முடிந்தபின்பு முதலமைச்சரிடம் விளக்கம் கோரப்படும்" என்று,
வழமைபோல அறிக்கைவிட்டு அப்போதைக்குப் பிரச்சினையை மூடிவைத்தார்.
***

கூட்டமைப்பின் உட்பயமும், நீதிபதியின் எதிர்பார்ப்பும்,
முழுமையாய்த் தோற்றுப் போகும்படியாக,
தேர்தலில் தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வெற்றிவாகை சூட்ட,
வெற்றிபெற்ற கையோடு இப்பிரச்சினை வெடிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தலில் ஊழல் நடந்தது என்று எழுந்த சர்ச்சையும்,
தேசியப்பட்டியலில் யாரைச் சேர்ப்பது என்று எழுந்த சர்ச்சையும்,
மீண்டும் இப்பிரச்சினையைச் சற்று மூடிவைத்தன.
அப்பிரச்சினைகள் முடியும் நேரத்தில்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றிய பிரச்சினை கிளம்ப,
திரும்பவும் இப்பிரச்சினை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது எல்லாப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில்,
முதலமைச்சர் பற்றிய பிரச்சினையை,
மெல்லக் கையில் எடுத்திருக்கிறார் மாவை சேனாதிராஜா.
***

இப்பிரச்சினைக்கு அவர்கள் என்ன தீர்வு காணப்போகிறார்களோ? அது எவருக்கும் தெரியாது.
நடுநிலையான மக்கள் மன்றில் எழும் எண்ணங்களை,
கூட்டமைப்பு, முதலமைச்சர் எனும் இருபகுதியினருக்கும்,
இங்கு தெளிவுபட உரைக்க வேண்டியது அவசியமாகிறது.
***

முதலில்,
கூட்டமைப்பினர்க்காண சில கருத்துக்கள்.
பெரிய எதிர்பார்ப்புக்களோடு உங்களால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட,
நீதியரசரின் அரசியல் பிரவேசம் முழுத்தோல்வியில் முடிந்திருக்கிறது.
நிர்வாகம் என்ற வகையில் முதலமைச்சரின் தோல்வி,
ஐயத்திற்கு இடமின்றிப் பரவலாகப் பேசப்படுகிறது.
அனுபவமின்மை எனும் ஒரு சமாதானத்தைச் சொல்லி,
அக்குற்றத்தை ஓரளவு தள்ளி வைக்க முடியும்.
ஆனால் அடுத்து முதலமைச்சர் மேல் சாட்டப்பட்டிருக்கிற,
கட்சி விசுவாசமின்மை எனும் குற்றச்சாட்டை,
எவ்வகையில் சமாதானம் சொல்லி நிராகரிப்பது என்று எவர்க்கும் தெரியவில்லை.
கட்சியில் சேர்ந்து பதவி பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்,
மாற்றுக்கட்சிமேல் மையல் கொண்டு,
முக்கியமான நேரத்தில் அவர் தடுமாறியிருப்பது,
அவரது அரசியல் 'கற்பை" ஐயத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
திறமை,விசுவாசம் எனும் இரண்டு முக்கிய தகுதிகளையும்,
இழந்து நிற்கும் முதலமைச்சரின் இருப்பு,
இனி கட்சிக்கு சுமையாக இருக்கப் போவதில் ஐயமில்லை.
அவரது பதவி, கௌரவம், மக்கள் ஆதரவு என்பவற்றை,
அடிப்படையாய்க் கொண்டு கட்சி சிலவேளை மௌனித்தாலும்,
இனி அவர்தம் உறவு இனிக்கப்போவதில்லை என்பதை,
கட்சி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
***

முதலமைச்சர் முன்பாகவும் சில எண்ணங்களைப் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.
முதலில் அவரது நிர்வாகத்திறமை பற்றிய சில கருத்துக்கள்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் புதிதாய் அமைந்த வடமாகாணசபையில்,
புதிதாய் நிர்வாகப்பொறுப்பேற்ற முதலமைச்சருக்கு நிர்வாகத்தில் முதிர்ச்சி பெற,
கால அவகாசம் தேவை என்பதை எவரும் மறுக்கமுடியாது.
நினைத்தால் மெல்ல மெல்ல நிர்வாகத்தை சீர்செய்யக்கூட முடியும்.
அதற்கு முதற்படியாக,
தனது நிர்வாகம் தோல்வியுற்றுவிட்டதை அவர் அறிதல் வேண்டும்.
அடுத்தபடியாக அதனைச் சீர்திருத்தும் வழிகளை,
தக்கோருடன் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும்.
பின்னர் குறைகளை நீக்கி நிறைகளைக் கொணரவேண்டும்.
இதுவே நிர்வாகத்தை சீர்செய்ய இருக்கும் ஒரே வழி.
தன்மான உணர்ச்சி அதிகமுள்ள முதலமைச்சர்,
நிர்வாகத்தில் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு,
இவைகளைச் செய்வாரா? என்பதுவே முதற்கேள்வி.
***

இரண்டாவது கேள்வி.
தேர்தலின் போது ஏற்பட்ட அவரது மனத்தடுமாற்றம் பற்றிய பிரச்சினை.
மனதளவில் அவர் கஜேந்திரகுமார் கட்சியின் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறார் என்பது,
இன்று பகிரங்க ரகசியமாகிவிட்டது.
அவருடைய எதிர்பார்ப்பை தமிழ்மக்கள் முழுமையாய்த் தோல்வியடையச் செய்துவிட்டனர்.
அதனாற்றான் 'தேர்தல் முடியும்வரை நான் ஊமையாய்த்தான் இருப்பேன்,
அதன் பிறகே வாய்திறப்பேன்" என்று கூறிய முதலமைச்சர்,
இன்று வரை தான் சொன்னபடி வாய் திறக்க முடியாமலிருக்கிறார்.
***

கட்சியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில்,
கூட்டமைப்பினரின் கொள்கைகளில் அதிருப்தியுற்று,
அவர்களால் இனத்திற்கு நன்மை நடக்காது என்று முடிவு செய்து.
ஒருவேளை, இன நன்மைக்கான மாற்றுச்சக்தியாய் வேறொரு அணியை
அவர் முடிவு செய்திருந்தால்,
ஒரு ஜனநாயக நாட்டில் அவரது அந்த சொந்தக்கருத்தை,
எவரும் தவறென்று சொல்ல முடியாது.
ஆனால் அக்கருத்தை அன்றும் இன்றும் அவர் வெளிப்பட உரைக்காது,
மூடுமந்திர வேலை செய்து நிற்பதே பலரையும் அதிருப்தியுற வைத்திருக்கிறது.
அச்செயல் அவரின் கண்ணியத்திற்கு உகந்ததாய் இல்லை.
***

மாகாணசபையில் அமைச்சுப்பதவிகள் பற்றிய போட்டி எழுந்தபோதும்,
சத்தியப்பிரமாணம் பற்றிய பிரச்சினை எழுந்தபோதும்,
மத்தியில் நிதிபெறுவது பற்றிய சர்ச்சை எழுந்தபோதும்,
பதவியைத் தூக்கி எறிந்து முதலமைச்சர் வெளிவந்திருந்தால்,
நிச்சயம் அவர் ஒரு புதிய கட்சியின் தலைவராகி,
தமிழ்மக்களின் ஆதரவோடு ஆட்சியைக் கூடப் பிடித்தருக்கலாம்.
இப்போது கூட ஒன்றும் தாமதாகவில்லை!
உண்மையில் கூட்டமைப்பு,
சர்வதேச விசாரணையை வலியுறுத்தாது என்று அவர் கருதும்பட்சத்தில்.
அவர்கள் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்றதைக் காரணமாய்க் காட்டி,
கட்சியிலிருந்து வெளியேறுவாரானால்,
நிச்சயம் அவரது மதிப்பு பிரபாகரன் அளவுக்கு உயரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஆனால் இவை எவற்றையும் செய்யாது கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு,
மாற்றணியினர்க்கு ஆதரவளிக்க முனையும் அவரது முயற்சிதான் சலிப்புறச் செய்கின்றது.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்,
தம்மோடு இருந்து கொண்டு பாண்டவர் சார்பாகப் பேசிய,
விதுரனைப் பார்த்து துரியோதனன் சொல்கின்ற,
'ஐவருக்கு நெஞ்சும், எங்கள் அரண்மனைக்கு வயிறும்'  என்ற தொடரை,
இந்நிலையில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

***

முடிவுரையாக,
நீதியரசர் அரசியலுக்குள் வரவேண்டுமெனக் கோரிக்கை வைத்தவர்களுள் நானும் ஒருவன்.
பதவிகளில்  இருந்த போது அவர் காட்டிய,
ஆளுமையை நம்பியே அக்கோரிக்கையை வைத்தேன்.
இன்று எதிர்பார்ப்பு அனைத்தும் தலைகீழாகிப் போயிருக்கிறது.
அவர்மேல் அன்புகொண்டவன் என்ற வகையில் ஒன்றே ஒன்றை உரைக்கவிரும்புகிறேன்.
அவர் பிழைகளைச் செம்மை செய்து பதவியில் இருப்பதானால்,
முன்னைய தன் வீரியத்தோடு இருக்கவேண்டும். இல்லையெனில்,
கட்சியினர் 'இப்பதம் துறந்து ஏகு" என்று சொல்லும் அளவுக்குவிடாமல்,
பதவியைத் தூக்கி எறிந்து வெளியேறவேண்டும்.
இரண்டில் எதைச்செய்தாலும் தமிழ்மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
மாவை எறிந்திருப்பது முதல் கல். இனி அடுத்தடுத்து கற்கள் வரலாம்.
'பூனை மெலிந்தால் எலியும் சுகம் கேட்குமாம்.'
அந்த நிலை முதலமைச்சருக்கு வருவதை எந்தத் தமிழனும் விரும்பமாட்டான்.
******

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...