•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, September 16, 2015

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!

லகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது.
இயற்கையில் மனமொன்றி,
தன்னை மறந்து தனித்திருக்கின்றார்,
மஹாகவி பாரதியார்.
காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கும் ஒலி
அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்கண்டு,
அகமகிழ்ந்து நிற்கிறது அவர் உள்ளம்.
ஒன்றாய், வேறாய், உடனாய் உலகோடு கலந்து நின்று,
உலகை இயக்கும் இறையின் கருணையை எண்ணி,
விம்மித் தணிகிறது அவர் நெஞ்சம்.
உலகே தெய்வமாய், தெய்வமே உலகாய்த் தரிசனப்பட,
தன்னை மறந்து தனியனாகிறார்.
மண்ணில் இறை தோன்ற,
அவர் கண்ணில் நீராறு.
தீக்குள் வைக்கும் விரலிலும்,
இறையைத் தீண்டும் இன்ப உணர்வு.
உலகைக் கடந்த உயர்நிலையில் அவர் உள்ளம்.

***

அனுபூதி நிலைக்கு அருகாமையில் அவர் செல்லும்போது,
சீடன் ஒருவனின் குரல்,
மஹாகவியை இம்மண்ணிற்;கு இழுக்கிறது.
‘ஐயனே! ஓர் ஐயம்’
வளைந்து தொழுது வாய்பொத்திப் பணிந்து நிற்கும்,
மாணவனின் பணிவு மகிழ்வைத் தர,
கண்களால் அவனைக் கனிவிக்கிறார்.
குருவினது கண்களின் அறிவுக் கூர்மை,
மாணவனை மயங்கச் செய்கிறது.
தன்னையறியாமல் அவன் தாள்கள்,
இன்னும் இரண்டடி பின்செல்கின்றன.
குருவின் கண் நோக்கமுடியாது அவர் கால் நோக்குகிறான்.
பார்வையிலேயே பாதபூஜை முடிகிறது.
மாணவனின் செயல்கள் மஹாகவியை மகிழ்விக்க,
அவருள்ளத்தில் உற்சாகம்.
ஓங்கும் குரலெடுத்து,
கேளப்பா சீடனே! என,
கேள்விக்காம் அனுமதியினை அளிக்கின்றார்.
***

ஆசிரியர் அனுமதி கிடைத்ததில் அகமகிழ்ந்த,
அவ் அறிவுச்சீடன்,
மனம், மொழி, மெய்களில் பணிவு காட்டி
பேசத் தொடங்குகிறான்.
‘இறையைத் தொழ ஏங்குகிறது நெஞ்சம்.
எங்கு தொழல் வேண்டும்? இயம்புக!’ என்கிறான்.
வினாத் தொடுத்த பின்,
மலையாய் நிற்கும் அம்மஹாகவிமுன்,
சிலையாய் அடங்கிச் செவி திறந்து,
அறிவாகுதி பெற ஆயத்தமாய் நிற்கிறான்.
சீடனின் வினாவைச் சிந்தையேற்று,
பதிலுரைக்க விழைகிறார் பாரதியார்.
***

ஆயிரம் கோயில்கள் சூழ இருக்கவும்,
அது நோக்காது,
‘ஆண்டவனை எங்கு தொழட்டும்?’ எனக் கேட்கும்,
மாணவன்மேல் அவருக்கு மதிப்புண்டாகிறது.
கடவுளைக் கற்சிலையாய் மட்டும் காணவிழையாத,
மடமையிலா மாணவனின் மதிக்கூர்மை புரிகிறது.
தக்கபடி பதிலுரைத்து அவன் தாகம் தீர்க்க,
மக்கள் கவிஞர் மனங்கொள்கிறார்.
மாணவனின் மாண்புறு கேள்வியில்,
மஹாகவியின் சிந்தனைக் குதிரை சிறகடித்துப் பறக்கிறது.
வந்தனை செய்யும் வழியென்ன?
மாணவனின் கேள்வியால்,
கிளர்கிறது அவர் அறிவு.
***

உலகைத் தோற்றுவித்தவன் இறைவன்.
எல்லா மதத்தாரும் ஏற்கும் கருத்திது.
சர, அசரம் அனைத்தும் அச்சக்தியின் படைப்பே!
தோற்றுவித்தவன் இறைவன்.
தோன்றியது உலகம்.
இக்கருத்தேற்றுச் சிந்திக்கத் தலைப்படுகிறார் பாரதியார்.
உலகை நோக்கி உன்னிப்பாய் அவதானிக்க,
ஓர் ஒப்பற்ற உண்மை அவருக்குப் புலப்படுகிறது.
மகனில் தந்தையின் சாயல்.
குட்டியில் விலங்கின் சாயல்.
குஞ்சில் பறவையின் சாயல்.
கன்றில் மரத்தின் சாயல்.
கவிதையில் புலவனின் சாயல்.
படைக்கப்பட்ட அனைத்திலும் படைத்தவனின் சாயல் தெரிய,
இயற்கையின் ஏற்றம் புரிகிறது.
மஹாகவியின் மனத்துள் ஓர் ஒளிக்கீற்று.
அங்ஙனமாயின்,
படைக்கப்பட்ட உலகின் அனைத்துப் பொருள்களிலும்,
அதனைப் படைத்தவனின் சாயல் பதிந்திருத்தல்
வேண்டுமன்றோ!
அஃது உண்மையாயின்,
உலகெலாம் கலந்திருக்கும் அவ்வுயர் இறையை,
காணும் பொருளனைத்திலும் காணுதல் கூடுமே.
காணும் கண்ணிருந்தால்,
கடவுளைக் கல்லிலும் காணலாம், முள்ளிலும் காணலாம்.
காடு, நெடுவானம், கடலெல்லாம் காணலாம்.
நீண்டு எரியும் நெருப்பிலும் காணலாம்.
பூச்சி, பறவை, புழு, விலங்கு அத்தனையும்,
ஆச்சரியம் விழைவிக்கும் ஆண்டவனின் வடிவமென,
கண்டு வணங்கிக் களிப்புறலாம்.
உண்மை வெளிப்பட உவந்த மஹாகவி,
மாணவனை நோக்கி மனந்திறந்து பேசுகிறார்.
***

எல்லா உயிரும் இறையே! எனும் உண்மை,
சொல்லால் உரைக்கச் சோதிமிகு அறிவதனால்,
வல்ல மொழி தேடி வாய்திறந்து பாடுகிறார்.

கேளப்பா சீடனே! கழுதையொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக்கண்டு
தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்.

பதில் கேட்டுப் பரவசப்படுகிறது சீடனின் மனம்.
ஆனால், குருவின் முகத்திலோ குழப்பம்.
தானுரைத்த பதிலில் பிழைகண்டு,
பதறுகிறது பாரதியார் நெஞ்சம்.
காணும் பொருளனைத்தும் கடவுளே!
எங்கும் இறைத்தரிசனம் எய்தலாம்!
சொல்ல வந்த பதிலின் சாரமிது.
பொருளுக்கு மாறான கருத்தோடு சொற்கள் விழுந்துவிட,
துவழ்கிறார் மஹாகவி.
எல்லாம் இறையெனின்,
பன்றிக்கும், தேளுக்கும் அடைமொழியாய்,
‘கீழான’ எனும் சொல் அமைந்தது குற்றமன்றோ!
மற்றவர் அழுக்கைச் சுமந்து,
தூய்மை செய்ய உதவுவது கழுதை.
மற்றவர் அழுக்கை உண்டு மகிழ்வது பன்றி.
மற்றவரை விடத்தால் வருத்தி மகிழ்வது தேள்.
கழுதையின் செயலில் தியாகம்.
பன்றி, தேள்களின் செயல்களில் கீழ்மை.
செயல் வேறுபாடுகளால்,
கழுதையில் மதிப்பும்,
பன்றி, தேள்களில் வெறுப்பும் உண்டாக,
கழுதையை வேறுபடுத்தி,
பன்றிக்கும், தேளுக்கும்,
‘கீழான’ எனும் அடையை கொடுத்துவிடுகிறது அவர் அறிவு.
இது முதற் குற்றம்.
***

இறையோ, குணம், குறி கடந்த பொருள்.
ஒரு நாமம், ஓர் உருவம் அற்ற பொருள்.
எவ்வடிவத்துள் கண்டு தொழினும்,
அவ்வடிவேயாய் நின்று அருளும் பொருள்.
பெயர் கடந்த அப்பொருளை,
வைதீக வாழ்வில் ஊறிய பாரதியின் அறிவு,
‘சங்கர, சங்கர’ எனக் குறிகாட்டிப் பேசிவிடுகிறது.
இஃது இரண்டாவது குற்றம்.
***

ஒன்றேயான பொருளைப் பிரித்த குற்றம்.
ஒன்றுமிலாப் பெயரை உரைத்த குற்றம்.
இரண்டு வரிக்குள் இரண்டு குற்றங்கள் எழுந்துவிட,
நாணுகிறது கவிஞர் நெஞ்சம்.
மாணவனின் அறிவை மயக்கும் பதிலினை,
தானறிந்தும் சொல்லுதல் தவறென்று உணர்கிறார்.
சீடனை நோக்கி,
கீழான பொருளும் அவ் இறையே எனும் உண்மையை,
மீள உரைக்க மீண்டும் மொழிகிறார்.

கேளப்பா சீடனே! கழுதையொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்.
கூளத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்.
***

மலத்தினையும் இறையென்று உரைக்கும்,
ஆசிரியன் மாண்பு கண்டு,
சிலையாகிப் போன சீடன்,
ஞானகுருவின் நன்நெஞ்சின் நயத்தினை,
மோனத்தால் வணங்கி முறுவலித்து நிற்கின்றான்.
மஹாகவி நெஞ்சமோ மயங்குகிறது மீண்டும்.
பதிலில் மனம்பொருந்தாப் பரிதவிப்பு,
மீண்டும் அவர் பார்வையில்.
குப்பையும், மலமுங்கூடக் கடவுளே!
கூளமும், மலமும் கீழ்மையின் குறியீடுகள்.
அவற்றுள்ளும் இறைவன் இருக்கிறான் என்றதில்,
பாதி உண்மையே பதிந்தது.
எல்லாம் இறையென்றது உண்மையெனின்,
தாழ்ந்தவையைத் தனித்து வரிசைப்படுத்தியது தவறன்றோ!
கூளமும், பொன்னுமென்றோ,
அன்னமும், மலமுமென்றோ,
உரைக்க முடியாமல் போனதன் உண்மையென்ன?
மஹாகவியின் மனத்துள் குழப்பம்.
தாழ்வு, உயர்வு எனும் தரப்படுத்தல்,
தம்மையறியாமல் தம் மனத்துள் பதிந்த,
உண்மை புரிகிறது.
எல்லாம் இறையெனின்,
வேறுபடுத்தி உரைத்தல் வீணன்றோ!
மாணவன் மனத்தை,
மயக்கும் இப்பதில் பாதித்தால்,
எங்கும் இறையைக் காணும் தகுதி,
அவனுட் தங்காது என உணர்ந்து,
தயங்கித் தெளிகின்றார்.
மீண்டும் ஒருதரம் மேன்மையாய்ப் பதிலுரைக்க,
வேண்டித் தெளிவாய் விளம்புகிறார்.
காணும் பொருளனைத்தும் கடவுளெனப் பதிலுரைத்து,
ஊனம் தவிர்த்து உண்மைதனைக் காட்டுகிறார்.

கேளப்பா சீடனே! கழுதையொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக்கண்டு
தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
***

அறிவே வடிவான ஆசிரியனை,
மாணவனின் கண்கள் மயங்கி நோக்குகின்றன.
ஒரு கேள்விக்கு மூன்று பதில்கள்.
ஒருமைப்படாத பதில்களால் உள்ளம் குழம்புகிறது.
வாக்கின் நோக்கமறியாது வாடுகிறான் அவன்.
மாணவனின் மயக்கம் உணர்கிறார் மஹாகவி.
தன் வார்த்தையின் மயக்கம்,
மாணவனின் அறிவின் மயக்கமாகும் ஆபத்துணர்ந்து,
தெளிவுபட மீண்டும் பதிலுரைக்க, சிந்தை கொள்கிறார்.
நீளத் தானுரைத்த நெடும்பதிலில் தன்னுடைய,
ஆழம் குறைந்த அவலம் தெரிகிறது.
மாணவனின் மனதை மயக்காது ஒரு வரியில்,
வானொத்த கடவுளை வணங்கும் இடம் காட்ட,
தேனொத்த கவியில் தெளிவாய்ப் பதிலமைத்து,
மீள அதையுரைத்து மேன்மையுறச் செய்கின்றார்.

கேளப்பா சீடனே! கழுதையொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக்கண்டு
தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்
***

முன் மூன்றுவரிகளில் சொன்ன பதில்களை,
விரித்துரைக்கப்போவதாய்,
நான்காம் வரியின் அரையடி நவில்கிறது.
பதில் பலபாடல்களாய் விரியுமோ?
நம் மனத்துள் ஐயம்.
என்ன ஆச்சரியம்!
பாதியடியில் பதில் முடிந்து விடுகிறது.
மூன்றடிக் கருத்தை முழுமையாய் விரித்துரைக்க,
பாதியடியில் பதில் வந்து விழுகிறது.
சுருக்கியன்றோ சொல்லியிருக்கின்றார்.
விரித்துச் சொல்வதாய் விளம்பியது சரியா?
ஆராய நம்முடைய அகமெல்லாம் மகிழ்ச்சி.
வினா நீளலாம்.
பதில் நீளலாமா?
சிந்தை தெளிந்தால்,
செறிந்து பதில் பிறக்கும்.
சொல் விரியப் பொருள் சுருங்கிற்று.
பொருள் விரியச் சொல் சுருங்கிற்று.
சுருங்கிய சொல்லுள் விரிந்த பொருளையே,
விரித்துச் சொல்வதாய் விளம்பினார் போலும்!
***

வீறுடைய கவிவேந்தர் விரித்துரைத்த பொருளென்ன?
அப்பொருளில் அவர் நமக்கு அளித்த தெளிவென்ன?
அண்ணாந்து பார்த்து ஆண்டவனைத் தொழுவோர்க்கு,
மண்பார்த்து இறை வணங்கும் மாண்புரைக்க முயல்கின்றார்.
விண்மட்டும் கடவுளென விளம்பும் அறியார்க்கு,
மண்ணும் கடவுளெனும் மகிமையுரைக்கின்றார்.
தாள் பணிந்து நிற்பாரைத் தாம் உதறி, தம்மைவிட,
மேலுள்ளோர் பின்சென்று மேன்மையுற முயல்வோர்க்கு,
வேதமென நற்செய்தி விளம்ப முயல்கின்றார்.
தாழ்ந்தோரை உதறித் தாமுயர, மேலோரின்,
தாள் பணிந்து நிற்பதுவே தரணியதன் இயல்பானால்,
எல்லோர்க்கும் மேலே இருக்கின்ற இறையதுவும்,
மேல் நோக்குதல் அன்றி மேதினியை நோக்கிடுமோ?
மக்கள் கவியின் மனத்துள் பெருங்கேள்வி.
கீழுள்ளோர்தமை அன்பால் கெழுமையுடன் நாம் நோக்க,
மேலுள்ள இறை விழியும் மேன்மையுற நமையெல்லாம்
தான்நோக்கி அருள் செய்யும்.
தரணியது மேன்மையுறும்.
உண்மை உணர உவக்கிறது கவிநெஞ்சம்.
***

இம்மேன்மை நிகழ்தற்கு, இறைதன்னை உலகெல்லாம்,
ஒன்றாகக் காணும் உயர்வே வழியாகும்.
சிந்தை தெளிய, தெளிவாய்ப் பதில் பிறக்க,
வந்து விழுகிறது வளமிக்க வார்த்தை பல.
ஓங்கும் கருத்தை உயர்வு சிதையாமல்,
பாங்காய் உரைத்துப் பாட்டை முடிக்கின்றார்.
விண் மட்டும் தெய்வம் என, வீணே நினையாது,
மண்ணும் கடவுள் எனும் மகிமை புரிந்திடுவாய்!
உண்மை முழுமைபட உரைத்து முடிக்கின்றார்.
பதில் தெளிந்த பரவசத்தில் பணிகின்றான் அச்சீடன்.
அவன் மூலம் அறிவுணர்ந்து ஆனந்தம் கொள்கின்றோம்.
எங்கும் இறையே! எதிலும் இறை என்னும்,
மங்காப்பெருங் கருத்து மனதுள் பதிகிறது.
ஓங்கும் பெருங்கவிதை உளத்துள் பதிவாக,
பாங்காய் உலகெங்கும் பரமன் தெரிகின்றான்.
நீங்காது எங்கும் நிறைந்திருக்கும் அப்பொருளை
மண் அதிலும் கண்டு மகிழ்கிறது நம்நெஞ்சம்.

கேளப்பா சீடனே! கழுதையொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக்கண்டு
தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்
விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!
******

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...