•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, September 23, 2015

அரசியற்களம் 13 | தூக்குக்கயிறு துணைசெய்யுமா?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

திரம் கருகுகிறது!
கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து வரும் செய்திகளைக் காண,
நாம் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? எனும் ஐயம் உருவாகிறது.
வடக்கில் புங்குடுதீவு வித்தியாவில் தொடங்கி,
தெற்கில் கொட்டதெனியாவ சேயாசௌதமி வரை,
மனிதமிருகங்களால் சீரழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட,
குழந்தைகள் பற்றிய செய்தி,
மனிதமனம் கொண்டோரை நடுநடுங்கச் செய்திருக்கிறது.
இவர்கள் இருவரும் வெறும் உதாரண எல்லைகள் தான்.
கடந்த ஒன்பது மாதங்களில் இத்தகைய முறைப்பாடுகள் 6500 வந்திருப்பதாய்,
பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திகள் எல்லாம் கூட,
ஐ.நா.சபை அறிக்கை ஆரவாரங்களில் பெரும்பாலும் அமுங்கிப்போய்விடும்.
எங்களுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பலபேர் ஒன்றாய்ச் சாகவேண்டும்.
அப்படிச் செத்தால்தான் எங்களுக்கு ஆவேசம் வரும்.
பகுதி பகுதியாய் நம் கண் முன்னே நடக்கிற இத்தகைய அட்டூழியங்கள் பற்றி,
நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

***

எல்லைகளாய் நடந்த இவ்விரு கொலைகளின் கொடூரமே,
மற்றைக் குற்றங்களின் விகாரங்களை,
நமக்குத் தெளிவுற எடுத்துக்காட்டி நிற்கின்றன.
பருவவாசலில் நின்று பள்ளி சென்ற வித்தியாவை,
உறவு மிருகங்களே கூடிக்குதறி இருக்கின்றன.
மறுநாள் நடந்த அவளின் மரணச்சடங்கில் கலந்துகொள்ளும் அளவிற்கு,
அந்த மனிதமிருகங்களின் மனதில் துணிவு.
நேற்று நடந்திருப்பது எண்ணியும் பார்க்க முடியாத பெரும் கொடூரம்.
உறங்கிக் கிடந்த ஐந்து வயதுக் குழந்தையை,
தூக்கிச்சென்று சீரழித்துக் கொன்றிருக்கிறான் ஒரு கொடூரன்.
நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது.
குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்,
அன்றாடம் அஞ்சி நடுங்கி அதிர்வுற்று நிற்கின்றனர்.
எங்ஙனம் தடுக்கப்போகிறோம் இவ் இழிவுகளை?
***

தடுப்பது பற்றி பின்பு யோசிப்போம்.
காரியத்தைத் தடுப்பதற்கு முன்பு,
இப்பிழைகள் இங்ஙனம் விரிந்து செல்வதற்கான,
காரணம் பற்றி ஆராயவேண்டாமா?
மனிதமனங்களில் என்றும் இருந்த வக்கிரம்தான் இது என்று,
சொல்லவும் முடியவில்லை.
இத்தகு பிழைகள் முன்பும் இருந்திருக்கும்,
ஆனால் இன்றுதான் அவை இந்தளவு விரிந்து விஷ்வரூபம் எடுத்திருக்கின்றன.
அரசே அதிர்ந்து மரணதண்டனை ஒன்றே இதற்காம் மருந்து என்று அவசரப்படுவதே,
இக் கொடூரங்களின் வீரியத்திற்காம் சான்று.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ,
இக்குற்றங்களில் அரசுக்கும் பங்கிருப்பதுதான் கொடுமை!
***

இது என்ன புதுக்குற்றச்சாட்டு என்கிறீர்களா?
எதற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்ல,
நான் ஒன்றும் இனவெறியனல்லன்.
ஆனால் நான் சொன்னது நிஜம்!
வீணான போருக்கு ஏராளமாக அள்ளிச் செலவழித்துவிட்டு,
பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சியாய்,
'டூறிஸ"த்தை வளர்க்கிறோம் எனச் சொல்லி,
வளமிக்க நாடுகளின் வக்கிரக்காரர்கள், தமது குரூரம் தீர்க்க,
மலிவு விலையில் இங்கே வழி செய்து,
அவர்களை வரவேற்றது யார்?
ஊர் ஊராக அந்த வக்கிரர்கள் இங்கே வந்ததுவும், நின்றதுவும்,
பிஞ்சுகளைத் தின்றதுவும் நம் அரசுகளுக்குத் தெரியாதா?
தம் ஏழ்மையைத் தீர்க்க இவ் ஈனர்களுக்கு வாசல் திறக்கும் வழியை,
இந்நாட்டின் வறுமையாளர்களுக்குக் காட்டிக் கொடுத்தது யார்?
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பிழை,
இன்று சட்டம் மீறி நடக்கத் தொடங்கியிருக்கிறது.
அதுவும் நம்மவராலேயே!
'தீயாரைக் காண்பதுவும் தீதே" என்று ஒளவை சும்மாவா சொன்னாள்?
***

தவறான அனுபவங்களுக்கு வழி சமைத்தும்,
'கஸினோ" போன்ற கேளிக்கை நிலையங்களுக்கு அனுமதி கொடுத்தும்,
வளம்மிக்க தேசங்களின் செல்வத்தை ஈர்க்க,
வக்கிரக்காரர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்துவிட்டு,
இன்று அந்த வக்கிர நோய் நம் தேசத்தவரிலும் பரவ,
கவன்று நிற்கிறது நம் அரசு.
காரணத்தை அவர்களே உருவாக்கிவிட்டு,
காரியத்தைக் கண்டு கலங்குவது வேடிக்கை.
***

இவ்வேதனை விளைவுக்காம் காரணங்கள்,
இன்னும் இருக்கின்றன.
சமயங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும்,
கட்டாய இளமைத் துறவு.
இக்காரணங்களில் மற்றொன்று.
துறவு மனதளவில் தானாய் வரவேண்டும்.
காமம் கடக்கும் சக்தி மிகப்பெரியது.
அச்சக்தி தனக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை,
இளமையின் வாசலில்தான் ஒருவர் அறியமுடியும்.
இளமையை எட்டாத பாலமை நிலையிலேயே,
பொருள், புகலிடம் முதலியவற்றைக் காட்டி,
சமயங்களால் சிறுவர்கள் துறவுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
இதுவும் ஒருவகையில் சிறுவர் துஷ்பிரயோகம் தான்.
இக் கொடுமையினைத் தடுக்க அரசு முன்வராததால்,
இக்காரணத்திலும் அவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றே,
சொல்லவேண்டியிருக்கிறது.
***

இக் குற்றத்திற்காம் மூன்றாவது காரணம்,
அறிவியலால் விளைவது.
அறிவியலின் வளர்ச்சியைக் காரணம் காட்டி,
உலக அழுக்குகள் அனைத்தையும்,
கொண்டு வந்து கொட்டக்கூடிய கருவிகளை,
இளமையின் வாசலில் தடுமாறி நிற்போர்தம் கைகளுக்கு,
வளர்ச்சி என்ற பெயரில் வழங்கி மகிழ்கின்றது அரசு.
கல்விக்கும் அக்கருவிகள் தேவைதான்!
இல்லையென்று சொல்லவில்லை.
ஆனாலும் பிழைகள் மலிந்திருக்கும் அக்கருவிகளை,
வரையறையின்றி இளைஞர்கள் கையில் கொடுப்பது சரியா?
சிந்திக்க வேண்டிய கேள்வி.
சரியை விட பிழையில் அதிகம் நாட்டம் கொள்வதுதானே மனித இயல்பு.
அது தெரிந்தும் கட்டுப்பாடின்றி அக்கருவிகளை அவர்கள் கையில் கொடுப்பதையும்,
செல்லுமிடமெல்லாம் அதனைப் பயன்படுத்த வசதிகள் செய்து கொடுப்பதையும்,
தனது சாதனையாய் உரைத்து நிற்கிறது அரசு.
எப்படி பிழைகள் நிகழாது இருக்கும்?
இக் காரணத்திலும் அரசைக் குற்றம் சாட்டவேண்டியே இருக்கிறது.
***

மிக முக்கியமான நான்காவது காரணம்.
ஊடகங்கள் தமது வியாபாரத்திற்காக
இத்தகு கீழ்மைச் செய்திகளுக்கு,
அளவுக்கதிகமாகக் கொடுக்கும் முக்கியத்துவம்.
பொறுப்பற்றுப் பரப்பப்படும் இச் செய்திகள்,
பிழைகளைத் தடுப்பதற்குப் பதிலாக,
இப் பிழைகள் இயல்பானவை என்னும் எண்ணத்தையும்,
அதன் மீதான ஒரு விருப்பினையும் கயவர்களுக்குத் தந்துவிடுகின்றன.
எனவே இவ்விடயத்தில் அரசு,
தனது தணிக்கை அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியம்.
இங்கும் அரசின் கையிலேயே இப்பிழையைத் தடுக்கும் சாவி இருப்பதால்,
இதிலும் அரசைக் குற்றஞ்சாட்டவேண்டியே இருக்கிறது.
***

பிழைக்காம் காரணங்களை ஆராய்ந்துவிட்டோம்.
இனி பிழைகளைத் தடுப்பதற்காம் வழிகளை ஆராயவேண்டாமா?
ஆராய்ந்ததன் பயனாக,
மரணதண்டனையை மீண்டும் கொணரப்போவதாய்,
அறிவித்திருக்கிறது அரசு.
இம்முடிவும் தவறென்றே படுகிறது.
காரணம் சொல்கிறேன்.
***

காமம் கண்ணை மறைக்கும் என்பார்கள்.
அந்த உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஒருவனுக்கு,
குறித்த நேரத்தில் எதுபற்றியும் கவலையிராது.
தன்நோக்கம் நிறைவேற்ற அவன் ஏதும் செய்வான்.
மலைப்பாம்பைப் பிடித்து மாடத்தில் ஏறிய கதையும்,
சடலத்தைப் பிடித்து ஆறு கடந்த கதையும்,
தன் காமம் தீர்க்க தன் தேசத்தையே பலி கொடுத்த கதையும்,
புராண இதிகாசங்களில் ஏலவே நிறையச் சொல்லப்பட்டு விட்டன.
உண்மையை அறிவதற்காகவே அவற்றை உயர்ந்தோர் சொல்லினர்,
அத்தனையையும் படித்துவிட்டு ஏட்டுச்சுரைக்காய்களாய் எறிந்துவிட்டோம்.
***

இத்தகு கொடுமை பதிந்த மனங்களை,
மரணதண்டனை மட்டும் மாற்றிவிடப் போவதில்லை.
சமூகநிராகரிப்பு,
ஏலவே இருக்கின்ற தண்டனைகள்,
ஏற்படப்போகும் இழிவு என்பவை பற்றி எவ்வித கவலையுமின்றி,
இன்று தவறிழைக்கும் ஒருவன்,
மரணதண்டனைக்கு மட்டுமா பயந்துவிடப்போகிறான்?
அப்படியானால் இப்பிழைகளைத் தடுக்க என்னதான் வழி?
கேள்வி பிறக்கும்.
வழி இருக்கிறது. அதுபற்றிச் சொல்கிறேன்.
***

நான் சொல்லப்போகிற வழி உடன் பயன் தரப்போவதில்லை.
உடன் பயன்தரும் வழி என்று ஏதுமே இல்லாததால்,
இவ்வழியைச் சிந்திப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.
பிழைகள் இல்லாத உலகு என்ற ஒன்று என்றும் இருக்கப்போவதில்லை.
எனவே இளையோரைப் பிழைகளை எதிர்கொள்ளப் பழக்குவதுதான்.
இருக்கும் ஒரேவழி.
இவ் உண்மையை உணர்ந்துதான் நம் மூதாதையர்கள்,
கல்வியைக் கற்பதன் முன்னர்,
அறங்களை இளையோர் மனதில் பதிப்பிக்க வேண்டும் என,
நிபந்தனை விதித்தனர்.
குழந்தைகளுக்காய்ப் பாடிய ஒளவை,
அவர்களுக்கு அகரத்தைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே,
'அறம் செய விரும்பு" என ஆரம்பித்தாள்.
ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு அது.
***

வெள்ளம் வருவதன் முன் வரம்பு கட்டவேண்டும்.
அப்போதுதான் வெள்ளம் எல்லைக்குள் ஓடி,
பயிர் விளைவிக்கப் பயன்செய்யும்.
வந்தபிறகு வரம்புகட்ட எவராலும் முடியாது.
வரம்புக்குள் ஓடினால் அது நதி.
வரம்பின்றி ஓடினால் அது காட்டு வெள்ளம்.
நதி பயிருக்குப் பயன் செய்யும்.
காட்டுவெள்ளம் பயிர்களை அழிக்கும்.
அறம் பதியாத மனங்களில் வரும் அறிவும்,
காட்டு வெள்ளம் தான்.
அந்தக் காட்டுவெள்ளம்தான் இன்று சமுதாயத்தை அழித்து நிற்கிறது.
***

நம் மூதாதையரின் கருத்தைப் புறந்தள்ளி,
மேற்கு நாட்டாரின் கருத்தை வேதவாக்கெனக் கொண்டு,
இங்கும் சில முற்போக்கு அறிஞர்கள்,
பாடத்திட்டங்களில் அறநூல்களை அகற்றச் சொன்னார்கள்.
அதன் விளைவைத்தான் இன்று சந்;திக்கிறோம்.
***

நான் முன் சொன்ன
ஒன்றானதும் நிச்சயமானதுமான வழி,
அறப்போதனைகளை மாணவர் மத்தியில் அதிகரிப்பதே.
கட்டாயமாக ஆரம்பப் பாடத்திட்டங்களில் அறநூல்களை இணைத்து,
ஒழுக்கம் மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு,
அவற்றை மாணவர்களுக்குப் போதிக்கவேண்டும்.
அப்பாடத்தில் சித்தியடைந்தாலே வகுப்பேற முடியும் என்று,
கட்டாய நிபந்தனை விதிக்கவேண்டும்.
ஒழுக்கவிதிகளை கல்வி நிலையங்களில் அதிகரிக்கவேண்டும்.
இது முதல் வழி.
மற்றொரு வழியும் உண்டு.
***

நம்நாட்டில் ஆழப்பதிந்த சமயங்களெல்லாம்,
அறத்தின்மேல் நம்பிக்கை கொண்டவை.
அச்சமய நிறுவனங்களிடம் மாணவர்களுக்கான,
இவ் அறப்போதனைப் பொறுப்பை அரசு வழங்கலாம்.
'ஏலவே அறநெறிப்பாடசாலைகள் நடைபெறுகின்றனதானே" என்பார்கள்.
அவற்றில் கனதியில்லை.
பெரும்பாலும் அவை வெறும் பெயருக்காகவே நடாத்தப்படுகின்றன.
அறநூல்களில் ஆட்சிபெற்ற தகுதியுடைய ஆசிரியர்கள் அங்கு வருவதில்லை.
அவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படுவதுமில்லை.
இவற்றையெல்லாம் அரசு உடனடியாகச் சீர்செய்யவேண்டும்.
அறநெறிப் பாடசாலைக்கற்றலை
மாணவர்களுக்குக் கட்டாயமாக்கவேண்டும்.
சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலாவது,
காலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிடவேண்டும்.
அப்போதுதான் மாணவர்கள் அறநெறிப்பாடசாலைகளுக்குச் செல்வார்கள்.
அதுபோலவே எல்லாச்சமய ஆலயங்களிலும்,
குறித்த நாட்களில் அறப்போதனையை அவசியமாக்கவேண்டும்.
அதற்கான ஆதரவினை அரசு வழங்கவேண்டும்.
***

நிதானமாக ஆனால் நிச்சயமாக பயன் தரும் வழிகளைச் சொல்லியிருக்கிறேன்.
ஆராய்ந்து கடைப்பிடிப்பது அரசின் கடமை.
அலட்சியம் செய்தால்,
ஆயிரம் தூக்குக் கயிறுகள் வந்தும் பயன் செய்யப்போவதில்லை.
ஆட்களைத் தூக்காமல் அறத்தினைத் தூக்குவோம்.
******

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...