Monday, October 19, 2015

அரசியற்களம் 15 | வாழ்வுக்கான வழி இறப்புகளுக்கான நீதியை விட முக்கியமானது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் என்கிறது திருக்குறள்.
உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர்;,
பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவரேயாம் என்பது,
இக்குறளுக்கான பொருள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த,
நம்முடைய பாட்டன் திருவள்ளுவன் சொன்ன அறிவுரை இது.
இக்குறளை நினைந்தே இவ்வாரக் கட்டுரையை எழுதவேண்டியிருக்கிறது.
கட்டுரையின் கருப்பொருள்,
ஐ.நா.சபைத் தீர்மானத்திற்குப் பின்னான,
அதிர்வலைகள் பற்றியது.


☙❧

நிறைவேற்றப்பட்ட ஐ.நா.சபைத் தீர்மானம்,
தமிழர்களுக்கான முழுமையான நீதியைப் பெற்றுத்தந்துவிட்டதா?
இக்கேள்விக்கு 'ஆம்!" என்று,
முழுமனதுடன் எவரும் தலையசைக்க முடியாது என்பது,
சத்தியமான உண்மையே!
எனினும் இத்தீர்மானத்தை அங்கீகரிப்பதைத் தவிர,
நமக்கான வழி ஏதேனும் இருக்கிறதா?
இன்றைய நிலையில் இதுதான் நாம் ஆராயவேண்டிய முக்கியமான கேள்வி.

☙❧

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
ஐ.நா.சபைத் தீர்மானத்தை,
ஆதரித்ததைக் காரணம் காட்டி,
அதற்கு எதிரான சில நகர்வுகளை,
ஒரு சில குழுக்கள் முன்னெடுத்து வருகின்றன.
நம் வடமாகாணசபை முதலமைச்சரும்,
தனது செயல்கள் மூலமும், அறிக்கைகள் மூலமும்,
இக்குழுக்களின் சார்புபட்டு இயங்குவதாக,
காட்டிக்கொள்வது வருத்தம் தரும் செய்தி.

☙❧

உலக யதார்த்தம் உணராத இக்குழுக்களின் செயற்பாடுகள்,
தமிழினத்தை மீண்டும் பிழையான பாதையில் செலுத்துகிற,
கடும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.
எவ்வித ஆற்றலும் பலமும் இன்றி,
இவர்கள் உலகை நோக்கி விடும் சவால்கள்,
ஈழத்தமிழர்களை மீண்டும் அரசியல் அநாதைகளாக்கும்,
தன்மை கொண்டவை.
உணர்ச்சி மிகுதியால் அறிவிழந்து இவர்கள்,
அடித்துவரும் கூத்துக்களும்,
அளித்துவரும் அறிக்கைகளும்,
சிந்தனைத்திறன் உள்ளவர்களை,
கவலையடையச் செய்திருக்கின்றன.

☙❧

தமிழர்களின், நொந்த புண்ணைக் கிளறிக்கிளறி,
உணர்ச்சியின் விளிம்பில் அவர்களை என்றும் வைத்திருக்க விரும்பும்,
இவர்தம் கீழ்மைச் செயல்கள்,
நிச்சயம் தமிழர்களின் நல்வாழ்வுக்கான அத்திவாரமன்றாம்.
இவ் உணர்ச்சியாளரின் வரிசையில்,
நம் அறிவார்ந்த முதலமைச்சரும் இணைந்து நிற்பதுதான்,
கவலைக்குரிய விடயம்.

☙❧

கடுமையான போர் நிகழ்ந்த காலங்களில்,
இலங்கை அரசின் உயர் பதவிகளை வகித்து,
கொழும்பில் சுகபோக வாழ்வு வாழ்ந்துவிட்டு,
இன்று ஓய்வு பெற்றபின்னர்,
தமிழினத்திற்காக உணர்ச்சிவயப்படுவதுபோல் காட்டும்,
வடக்கு முதலமைச்சரின் செயல்களில்,
நாடகத்தன்மையே மேலோங்கி நிற்கிறது.

☙❧

அக்காலத்தில் அப்பாவித்தமிழ் இளைஞர்கள்,
புலிச் சந்தேகநபர்களாய்,
சட்டத்தின்முன் நிறுத்தப்பட்ட போது,
அது தவறென்று சுட்டிக்காட்டி,
பதவியைத் துறந்து வெளிவரும் துணிவு,
அன்றைய நம் நீதியரசருக்கு இருக்கவில்லை.

☙❧

தன்னை முதலமைச்சராக்கிய கூட்டமைப்பினருடன்,
முரண்பாடுகள் வெடித்த நிலையில்,
அவர்களால் வந்த பதவியைத் துறந்து வெளிவரும் துணிவும்,
இன்றைய முதலமைச்சரிடம் இல்லை.
அன்று தமிழர்களுக்காக அரசபதவியைத் துறக்கத் துணிவில்லாதவர்,
இன்று தமிழ் மக்களைக் காரணம் காட்டி,
அரசியல் பதவியைத் துறக்க மறுத்து நிற்கிறார்.
இச்சம்பவங்கள் அவர்தம் உண்மைச் சொரூபத்தை,
வெளிப்படுத்துமாப்போல் தோன்றுகின்றன.

☙❧

தமது உண்மைச் சொரூபத்தை மறைப்பதற்காய்,
வெற்றுணர்ச்சியாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி,
அடுத்தடுத்து அறிக்கைகள் விட்டு,
இனப்பிரச்சினையில் இன்று நம் முதலமைச்சர் காட்டும் அதிதீவிரம்,
நடுநிலையாளர்களின் இகழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது.

☙❧

தான் சார்ந்த கட்சியின் தலைமைப்பீடத்துடன் ஆலோசிக்காமல்,
அவர்களைச் சங்கடப்படுத்தும் நோக்கத்துடன்,
அவர்களை மீறி,
'நடந்தது இனப்படுகொலையே" என,
வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி,
முதலமைச்சர் அனுப்பி வைத்த செய்தியை,
ஐ.நா.சபை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவேயில்லை.

☙❧

முதலமைச்சரின் இன அழிப்புக் கருத்தை நிராகரித்து,
ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின்,
அத்தீர்மானத்தைத் தான் வரவேற்பதாய்,
முதலமைச்சர் வெளியிட்ட செய்தி,
பத்திரிகைகளின் முதற்பக்கங்களில் இடம்பிடித்து,
அவரது உறுதிப்பாட்டின் தளர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டிற்று.

☙❧

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திட்டங்களின் ஊடாக வழங்கப்பட்ட,
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிதியினைப் பெற்றுக்கொள்ள,
ரகசியமாய் தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்திருந்த முதலமைச்சர்,
மாகாணசபையில் மரபை மீறி அவர் கட்சியைச் சார்ந்தோரே,
கேள்வி எழுப்பியதன் பின்னரே,
அதுபற்றி பேசத் தலைப்பட்டார்.

☙❧

மாகாணசபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது,
முதலில் இவை இரகசிய விடயங்கள் என்றார்.
பின்னர் கட்சிக்கூட்டத்தில் மட்டும் அது பற்றித் தெரிவிப்பேன் என்றார்.
அந்நிதியைப் பெறச் சம்மதித்து,
அவரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட கடிதம்,
இணையத்தளங்களில் வெளிவந்த பின்னர்,
தனது அமைச்சர்களுடன் பேசுவதற்குக் கூட,
அவகாசம் வழங்கப்படாமல்,
தனியே இருந்த சமயம் தன்னிடம் ஒப்புதல் பெறப்பட்டதாக,
இன்று அறிக்கை விட்டிருக்கிறார்.
உடன்பாடில்லாத ஓர் விடயத்தில் கையொப்பம் இடுவதன் ஆபத்தை,
நீதித்துறை வல்லவரான முதலமைச்சர் அறியாரா என்ன?
யாருக்கும் அஞ்சாதவர் என்று பெயர்பெற்ற முதலமைச்சர்,
யாருக்கு அஞ்சி அக்கடிதத்தில் ஒப்பம் இட்டார் எனும் கேள்வியும்,
ஒப்பமிட்ட பின்னரேனும் தான் கட்டாயப்படுத்தப்பட்ட செய்தியை,
அவர் ஏன் வெளியிடவில்லை எனும் கேள்வியும்,
மக்கள் மனதை அரித்தபடி இருக்கின்றன.

☙❧

இத்தனை நாட்களின் பின்னர்,
இன்று அந்நிதியைக் பெறுவதற்குத் தான் இணங்கப்போவதில்லை என்று,
ஐ.நா அபிவிருத்தித்திட்டத்திற்கு,
கடிதம் எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அந்த அறிவிப்பைக் கூட,
அவர் தனது அமைச்சர்களுடன் பேசி முடிவெடுத்து வெளிப்படுத்தவில்லை என,
அவர் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே,
பத்திரிகைகளில் அறிக்கை விட்டுக் கண்டிக்கும் அளவுக்கு,
முதலமைச்சரது நிர்வாகக் குளறுபடிகள் தொடருகின்றன.

☙❧

தனது,
நிர்வாகத்திறமையின்மை,
அரசியல் அறிவின்மை,
கட்சி விசுவாசம் இன்மை,
என்பவையெல்லாம் வெளிப்பட்டு விட,
அதனை மூடிமறைக்க,
முன்னைய சில தலைவர்களைப் போல்,
தமிழ்மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்பும்படியான,
அறிக்கைகளை இன்று அவர் விடத்தொடங்கியிருப்பது,
அவரது அரசியல் வங்குரோத்துத் தன்மையையே காட்டுகின்றது.

☙❧

யாழ்ப்பாணத்தில், அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்,
நாங்கள் மரத்தைச் சார்ந்திருக்கும் கொடிகளாய் வாழ விரும்பவில்லை என்று பேசியிருக்கிறார்.
இராணுவத்துடன் விருந்துண்ண மாட்டேன் என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்.
அவ் அறிக்கைகள் கண்டு இவரே உண்மைத் தலைவர் என,
அறிவைப் புறந்தள்ளிய உணர்ச்சியாளர் சிலர் ஆர்ப்பரித்து நிற்கின்றனர்.

☙❧

இதே முதலமைச்சர் தான்,
முன்பு மாகாணசபை உறுப்பினர் பலர் கடுமையாய் எதிர்க்க, எதிர்க்க,
சர்வாதிகாரியான முன்னைய ஜனாதிபதியின் முன்,
விசுவாசத்துடன் சென்று சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இன்று கடுமையான இனத்துவேசம் பேசி நிற்கும்,
தனது சம்பந்தியான வாசுதேவ நாணயக்காரருடன்,
கட்டித்தழுவி அவர் உறவு கொண்டாடிய புகைப்படங்கள்,
அனைத்துப் பத்திரிகைகளிலும் அன்று வெளிவந்தன.
இன்று முதலமைச்சர் பேசும் இனமானம்,
அப்போது எங்கு போயிற்று? எனும் கேள்வியை,
எதிராளிகள் கேட்டு நகைத்து நிற்கின்றனர்.

☙❧

இவரேதான் அண்மையில் இன்றைய ஜனாதிபதியிடம் சென்று,
சிறுபிள்ளைகள் போல,
தன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அரசிடம் நிதிபெறுவதாய் முறைப்பாடு வைத்திருந்தார்.
இன்றும் சிங்கள அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டும்,
தன் பாதுகாப்பிற்கு சிங்கள இராணுவத்தினரேயே கூட வைத்துக்கொண்டும்,
இராணுவத்துடன் விருந்துண்ண மாட்டேன் என்னும் அவரது செய்தியில்,
சத்தியம் இல்லை என்பது திண்ணம்.
முன்னுக்குப் பின் முரணான அவர் செயல் கண்டு,
அவரிடம் நிறைய எதிர்பார்த்த அறிவுலகம் ஏமாந்து நிற்கிறது.

☙❧

தனது குற்றங்களை மறைக்க,
கூட்டமைப்பினர்க்கு இனப்பற்றில்லை என்றாற் போல,
அவர் செய்யத் தொடங்கியிருக்கும் பிரச்சாரம்,
அக்கட்சியினரைக் கொதிக்கச் செய்திருக்கிறது.
கூட்டமைப்பினரிடம் பல முரண்பாடுகள் இருப்பது உண்மை.
அவர்களிடம் ஆயிரம் தவறுகள் இருக்கலாம்.
ஆனால் தற்போது நீதிபதி செய்யத் தொடங்கியிருக்கும் பிரச்சாரம்,
கூட்டமைப்பினரைத் திருத்துவதற்காகத் தொடங்கப்பட்டதாய்த் தெரியவில்லை.
தன் குற்றங்களை மறைப்பதற்காகத் தொடங்கப்பட்டிருப்பதாகவே உணரப்படுகிறது.

☙❧

சரி, நீதிபதி சொல்லுகிற கருத்துக்கள் உண்மை என்றே எடுத்துக்கொள்வோம்.
கூட்டமைப்பு ஐ.நா. சபை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது,
தவறென்றே வைத்துக் கொள்வோம்.
ஏன்? வேண்டுமானால் கூட்டமைப்பை முற்றாக நிராகரிக்கவும் செய்வோம்.
ஆனால் இவற்றையெல்லாம் நாம் செய்வதற்கு முன்னர்,
ஐ.நா. தீர்மானத்தை ஏற்பதைவிடச் சிறப்பாக,
தமிழருக்கு நீதி கிடைப்பதற்கான வழி என்ன என்றும்,
அதை அடைவதற்கான முறை இது என்றும்,
இன்னார் துணை கொண்டு அதனைச் சாதிக்கலாம் என்றும்,
முதலமைச்சர் உறுதிபடச் சொல்லவேண்டும்.
அன்றேல் அவரது செயல்கள்,
வெறுமனே மக்கள் உணர்ச்சிகளைக் கிளப்பி,
மீண்டும் அவர்களை அழிவு நோக்கி அழைத்துச் செல்லும்,
வெற்றுக் கூச்சல்களாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

☙❧

இப்படித்தான்,
முன்னர் கூட்டணியினர் எம் உணர்ச்சிகளைக் கிளப்பி,
நம்மைப் போர் வரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் ஆயுத அமைப்புக்களும்,
அதேபோல் நம்மை உணர்ச்சி வயப்படுத்த,
உலகநாடுகளின் சமாதான முயற்சிகளை,
இயக்கங்கள் நிராகரித்தமையை வீரமென மகிழ்ந்து கொண்டாடினோம்.
அவையே நடந்து முடிந்த இன அழிவின் காரணங்களாயின.
இன்று அந்த அழிவுக்கான தீர்வைக் காணும் சுயபலம் ஏதுமின்றி,
நாம் நிராகரித்த உலகத்திடமே முறைப்பாடு வைத்து,
வெட்கமின்றிக் கையேந்தி நிற்கிறோம்.

☙❧

உணர்ச்சிக்கு ஆளாகித் திரும்பத் திரும்ப,
பிழையான பாதையில் செல்வதைத்தான் இனப்பற்று என்பதா?
இறந்தகால அனுபவங்களைக் கொண்டு,
நிகழ்கால, எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கத் தெரியாவிடின்,
உலகம் நம்மை மூடர் என இகழாதா?
சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழினம் நிற்கிறது.

☙❧

போர்க்கால நிழலிலிருந்து விடுபடாமல்,
வெறும் வாய்ச்சொல்லில் வீரராய்,
தம் சுகவாழ்வை இழக்க விரும்பாமலும்,
தியாகங்களுக்குத் தயாராகாமலும்,
உணர்ச்சியின் சிகரங்களில் நிற்பதுபோல் காட்டி,
நடிக்கும் ஆற்றல்,
நம்மில் சிலரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
அத்தகையோருக்கு,
வீரவசனம் பேசுவோரை நிரம்பப் பிடிக்கிறது.
அரசியலில் இவர்தம் கையோங்கினால்,
மீண்டும் நம் இனம் சந்திக்கப்போவது,
அழிவைத்தான் என்பது நிச்சயம்.

☙❧

உலக நாடுகள் எதுவானாலும்,
அவை நமக்குச் சார்பாய் இயங்குகையில்,
அவ் அக்கறையில் அந்தந்த நாடுகளின் சுயதேவையே,
முதன்மை பெற்றிருக்கும் எனும் உண்மையை,
முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
இன்று அமெரிக்கா தன் வல்லரசு ஆற்றலால்,
ஐ.நா.சபை போன்ற உலக அமைப்புக்களைக் கூட,
தன்வயப்படுத்தியிருப்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இவற்றைத் தெரிந்து கொண்டால்தான்,
உலகச் சூழல் அறிந்து நாம் செயற்படமுடியும்.

☙❧

அமெரிக்கச் சார்புபெற்ற இலங்கை அரசு இருக்கும் வரை,
இதுவரை தமிழர்களுக்காக விட்ட முதலைக்கண்ணீரை,
அமெரிக்கா இனி நிறுத்திவிடும் என்பது உறுதி.
இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் அறிவீனர்களாவோம்.
இந்நிலையில் அமெரிக்காவுடனும்,
அதுசார்ந்த ஐ.நாவுடனும் ஒத்துழைப்பதைத் தவிர,
தமிழர்களுக்கு வேறுவழியில்லை என்பதே நிதர்சன உண்மை.

☙❧

அவ் உண்மை தெரிந்ததாற்றான்,
வேறுவழியின்றி ஐ.நா முடிவுக்கு,
கூட்டமைப்பு தலையாட்டி நிற்கிறது.
கூட்டமைப்பு என்ன கூட்டமைப்பு?
நாடு கடந்த தனி ஈழ அரசமைத்து,
தேசப்பற்றாளர்களாய் இதுவரை,
பூச்சாண்டி காட்டியவர்களிடமிருந்தும்,
இன்று எந்தவித சத்தத்தையும் காணோம்.
ஏனென்று நாம் சிந்திக்கவேண்டாமா?
அமெரிக்கச் சார்பெற்று இயங்கிய அவர்களால்,
அமெரிக்கா இடுகின்ற 'இலட்சுமணக்கோட்டை",
நிச்சயம் தாண்டமுடியாது.
அதைத்தான் அவர்கள் மௌனம் சொல்கிறது.
கூட்டமைப்பு என்றில்லை,
இன்று தமிழர்க்கு வேறு எவர் தலைமை தாங்கினாலும்,
அவர்க்கும் இதுவே கதியாம்.

☙❧

வலியும், இடமும், காலமும் அறியாமல்,
அரசியலில் இயங்க நினைப்பவர் அழிந்து போவர்.
கூட்டமைப்பின் எதிர்ப்பாளர்கள்,
இவ் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும்.
உணர்ச்சி நிறைந்த வெற்றுக் கூச்சல்களுக்கு ஆட்பட்டு,
இனத்தைத் தோற்கவிடுவதே நம் வரலாறாகிவிட்டது.
'வீரபாண்டியன் கட்டப்பொம்மன்" என்ற ஒரு தமிழ் சினிமா வந்தது.
அதில் வெள்ளைக்காரரிடம் அகப்பட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன்,
தான் தப்பி தன் இனத்தையும் காக்க முயற்சிக்காமல்,
'உனக்கு ஏன் கட்டவேண்டும் இஸ்தி?
எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மச்சானா? மாமனா?" என்றெல்லாம்,
முட்டாள் தனமாக வீரவசனம் பேசி முடிவில் மடிவார்.
எதிரியிடம் அகப்பட்டு,
அவர்களை வெல்ல எந்த வழியும் இல்லாத நிலையில்,
அவர் பேசும் அறிவீனமான வீர வசனங்களைக் கேட்டு,
தமிழ்மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அன்று தொட்டு அதுதான் நம் இயல்பாய் இருக்கிறது.
இன்றும் அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம் போல.

☙❧

நிறைவாக ஒன்றைச் சொல்லவேண்டும்.
நடந்து முடிந்த போரும்,
அதில் தமிழர்க்கு ஏற்பட்ட பேரழிவும்,
நிச்சயம் கொடூரமானவை.
அப்பாவங்களுக்கான பதிலை,
தர்மம் என்றோ ஒருநாள் கேட்டு வாங்கும்.
அதுவரை,
இறந்தவர்களுக்கான நீதியைத் தேடுவதை விட,
வாழ்பவர்களுக்கான வழியைத் தேடுவதே புத்திசாலித்தனம்.
உணர்ந்தால் உய்வோம்!

☙❧ ☙❧ ☙❧

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...