Wednesday, October 21, 2015

கருணைக்கண் திறந்திடுவீர்!

உடற் சிறையில் அகப்பட்ட உயிரும் கூட
ஓர்நாளில் வெளிவந்து உரிமைகொள்ளும்.
கடலதனின் நீர்கூட கடந்து வந்து
  களிப்புற்று நிலங் கண்டு மீண்டு செல்லும்.
படமெடுத்து ஆடுகிற பாம்பும் கூட
  பதுங்குகிற புற்றதனைத் தாண்டி மீளும்.
கடந்து வர இயலாமல் சிறைக்குள் வெந்து
  கவலுகிறார் எம் இளைஞர் கதியோ இல்லை!வேரோடு தமிழரினம் அழிக்க எண்ணி
  விதவிதமாய்க் கலவரங்கள் மூட்டிக் கொன்றார்.
போராடி உரிமை கொளல் அன்றி வேறோர்
போக்கின்றி வன்முறையைக் கையில் தூக்கி,
மாறாத தம்முடைய மனப்புண் ஆற்ற
  மறவர்களாய் இளையரெலாம் எழுந்து நிற்க,
பேராலே அவர்தம்மைப் புலிகள் என்று
  பேசி; அவர் வன்முறையர் என்றே சொன்னார்.

கலவரத்தின் பேராலே கயவர் எல்லாம்
  கணக்கின்றி கொன்ற தமிழ் மக்கள் தம்மின்;
நிலவரத்தைக் கேட்பதற்கு ஒருவரில்லை.
  நிமிர்ந்திட்ட இளையர் தமைக் குற்றம் சொல்லி;
பலபலவாய் சிங்களவர் செய்து நின்ற
  பதைபதைக்கும் கொடுமைக்கோர் அளவேயில்லை!
உலகமதில் உயிர் அனைத்தும் ஒன்றே அன்றோ!
  உலுத்தர்களோ அதை நினைக்க மறுத்து நின்றார்.

போராடி உரிமை கொள புகுந்த எங்கள்
  பொன்னான வீரர்களுக்குதவி நின்ற,
ஆராரோ சிறையதனில் அடைபட்டின்று
ஆண்டுகளாய்ப் பல துன்பம் அடைந்து நின்றார்.
வீறான போர் புரிந்த பலரும் கூட
  வேற்றவரைச் சேர்ந்ததனால் பதவி பெற்று,
பேரான புகழோடு பெருமை கொள்ள
பேதைகளாய் இவர் மட்டும் வாடி நின்றார்.

சட்டத்தின் முன்கூட இவர்கள் தம்மை;
  சரியாக நிறுத்தற்கும் துணிவேயின்றி,
இட்டத்திற்கிவர் தம்மை இதுநாள் மட்டும்
  ஏன் என்று கேட்காமல் அடைத்து வைத்தார்.
கட்டத்தை உணராது, கருகிப்போகும்
காலத்தை நினையாது, கவலையின்றி;
மட்டின்றி இவர் செய்யும் மடமை தன்னால்
  மண்ணாகி அவர் வாழ்வு மங்கிப் போச்சே!

பேச்சென்றும் தீர்வென்றும் பலவே சொல்லி,
  பெருமை கொள நினைப்பாரும் இவர்கள் துன்பம்,
ஆச்சென்று விடுவிக்க முனையாதின்றும்
  அதுஇது என்றேதேதோ சொல்லி நின்றார்.
போச்சின்று பகையெல்லாம் புலரும் துன்பம்
  புதியவர்கள் வரவாலே என்று நிற்க,
வீச்சொன்றும் விளைந்ததுவாய்க் காணவில்லை.
  விடுதலைக்கு வேறேதும் வழியும் இல்லை.

உண்ணாது நோன்பிருக்க அவர்கள் எண்ணி,
  உயிர் விடவும் துணிந்திட்டார் உலகம் கூட
எண்ணாது தமை விட்ட ஏக்கம் பொங்க்
  இது ஒன்றே வழியென்று அமைதிப் போரில்,
முன்னேற அவர்தாமும் முனைப்பே கொள்ள,
  முழு உலகும் அவர்தம்மை இன்று பார்த்து,
கண்ணீராய் வடிக்கிறது; கவன்றாறில்லை;
  கதைகள் பல பேசி இனும் காலம் கொன்றார்.

தமிழர்க்குத் தலைமை இனி தாமே என்று,
தலை நிமிர்த்திப் பேசி வரும் தலைவர் கூட,
அமிழ்தொத்த இளையர்தமின் வாழ்வு இங்கு,
  அழிவதனை நினைத்து மனம் கவன்றாறில்லை!
நிமிர்வித்த பதவிகளுக்கிவர்தாம் இங்கு;
  நெய்யெனவே உருகி நிதம் சுகங்கள் தேட,
அமிழ்தொத்த உயிர் வாட்டி அவர்கள் அங்கு
  அகிம்சையினால் போராடி அழிந்து நின்றார்.

இன்றவர்கள் போராட்டம் உலகம் காண
  ஏற்றமுற, அதன் பின்னால் அரசும் ஆட,
நன்றிவர்கள் விடுதலையை நாமும் எண்ணி
  நல்ல வழி செய்திடுவோம் என்றே சொல்லி,
மன்றினிலே பிரதமரும் உரைத்த பின்பு
  மற்றிவரின் வெற்றிக்கு; மனத்தில் வஞ்சம்
நின்றிடவே; உரிமை அதைப் பேசி நின்றார்
  நிமிர்வில்லாத் தமிழ்த்தலைவர்; என்ன சொல்ல?

சிறையினிலே தினம் வாடும் அன்பர்க்கொன்று
  சிந்தையினால் உரைத்திடுவேன் செவிகள் தாரீர்!
நிறைமாதர் நீர் என்று நிமிர்வு கொள்வீர்!
  நிமிர்ந்து இனம் நின்றிடவே நேர்மை நெஞ்சால்,
அறம் செய்தே நீரெல்லாம் அங்கு சென்றீர்!
  அசையாதீர்! குறையொன்றும் உமக்கேயில்லை;
இறையொன்று இருக்கிறது; ஏற்றம் கொள்ள
  இனித் துன்பம் அது தீர்க்கும் எழுந்து வாரீர்!

மண்ணாளும் மனிதர்க்கு ஒன்று சொல்வேன்.
மாண்பான இளைஞர்களை வருத்த வேண்டா!
எந்நாளும் அவர்  உங்கள் புதல்வரென்றே
  எண்ணிடுவீர்! அவர்தம்மின் இன்னல் தீர்ப்பீர்!
பொன்னான காலமது போனாற் பின்பு;
  புகுந்திடுதல் இயலாது; புரிந்து கொள்வீர்!
கண்ணாலே அவர் துன்பம் காணும் ஐயா!
  கருணைக்கண் திறந்திடுவீர்! கவலை தீர்ப்பீர்!
                                 ✜✜✜✜✜

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...