•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, October 5, 2015

விஸ்வரூபம் !

லகு, ஆதிபகவன் முதற்றே என்கிறார் வள்ளுவக் கடவுள்.
உலகுக்கு முதலான ஆதிபகவற்கும்,
உலகுக்குமான சம்பந்தத்தை,
சித்தாந்த தத்துவம் விரித்துரைக்கும்.
இவ்வுலகோடு ஒன்றாய், வேறாய், உடனாய்,
இறைவன் உறைவன் என்பது,
அத் தத்துவவாதிகளின் கொள்கை.
ஆன்ம முதிர்ச்சியற்றோர்,
இறைவனை உலகினின்றும் வேறாகவே உணர்வர்.
அம் முதிர்ச்சி உற்றார், உலகையே இறையாய்க் காண்பர்.
உலகெங்கும் இறைவன் நிறைந்து தோன்றும் காட்சியினையே,
‘விஸ்வரூபம்’ என்கிறோம்.
விஸ்வம் - உலகு, ரூபம் - வடிவு.
இறை உலகெங்கும் நிறைந்து தோன்றுவதான,
இவ் விஸ்வரூபக் காட்சியை,
சங்க இலக்கியங்களில் ஒன்றான,
நற்றிணையின் கடவுள் வாழ்த்து உரைக்கிறது.

மாநிலஞ் சேவடியாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கையாக,
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்,
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக,
இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய,
வேத முதல்வன் என்ப.

மாநிலம்-பெரியநிலம்,சேவடி-சிவந்தஅடி,
தூநீர்-தூவுகிற அலைநீர், வளை-சங்கு,
பௌவம்-கடல், உடுக்கை-உடை,
விசும்பு-ஆகாயம், பசுங்கதிர்-குளிர்ந்த கதிர்,
சுடர்-சூரியன், மதியம்-சந்திரன்.
♜♜♜

இவ் விஸ்வரூபக் காட்சியை,
ஆன்ம முதிர்ச்சியாலன்றி,
தம் வினைப் பயனாலும் ஒரு சிலர் காணப் பெறுவர்.
மகாபாரத இதிகாசத்துள்,
ஆன்மமுதிர்ச்சியினாலும், வினைப்பயனாலும்
விஸ்வரூபக் காட்சி பெற்றார் நால்வர்.
சகாதேவன், துரியோதனன், அர்ச்சுனன், கர்ணன் ஆகியோரே,
அக்காட்சி பெற்ற பாக்கியசாலிகளாவர்.
இந் நால்வருக்கும் அளிக்கப்பட்ட விஸ்வரூபக் காட்சிகளில்,
பயனுற்ற காட்சி எது என்பது பற்றி ஆராய்வதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.
♜♜♜

முதலாவது விஸ்வரூபம்

உத்தியோக பருவம்,
கிருஷ்ணன் தூதுச் சருக்கம்.
போரைத் தவிர்ப்பதற்காக,
கிருஷ்ணனைத் தூதுரைக்கக் கோருகிறான் தருமன்.
பாண்டவர் ஐவர்தம் கருத்தறிய,
ஆலோசனையைத் தொடங்குகிறான் கண்ணன்.
சமாதானமே வேண்டும் என்கிற தருமன்,
‘நாடு வேண்டு!, அன்றேல் ஐந்து ஊர் வேண்டு!,
அதுவுமன்றேல் ஐந்து வீடு வேண்டு!,
அவை அனைத்தும் மறுக்கப்பட்டால் மட்டுமே,
போர் வேண்டு!’ என்கிறான்.

முந்தூர் வெம் பணிக்கொடியோன் மூதூரில்
நடந்து உழவர் முன்றில் தோறும்
நந்தூரும் புனல் நாட்டின் திறம் வேண்டு
நாடொன்றும் நல்கானாகில்
ஐந்தூர் வேண்டு, அவை இலெனில் ஐந்து இலம் வேண்டு
அவை மறுத்தால் அடுபோர் வேண்டு
சிந்தூரத் திலகநுதல் சிந்துரத்தின்
மருப்பொசித்த செங்கண்மாலே.

போர், வலிமையாய்க் கோரப்படவேண்டியது.
இங்கு போரையும் தருமன் பணிந்து வேண்டுகிறான்.
அடுபோர் வேண்டு என,
போரையும் பணிந்து வேண்டி நிற்கும் அவன் வார்த்தைகளில்,
அவன் உளத்தின் அன்பு வெளிப்படுகிறது.
(வேண்டுதல் - பணிந்து கேட்டல்)
♜♜♜

அடுத்து, கண்ணன் வீமனை நோக்க,
ஊனமிலான் மானமிலாது உரைப்பதற்கு என் செய்வது என,
அண்ணனின் பொறுமையைச் சினந்து,
பொருமி எழுகிறான் வீமன்.
அரவுயர்த்தோன் கொடுமையிலும் முரசுயர்த்தோய்,
உனதருளுக்கு அஞ்சினேனே! என,
தருமனைப் பார்த்து உரைத்த வீமன்,
‘மலை போன்ற என் கதாயுதம் உண்டு.
அர்ச்சுனனின் சிலை உண்டு.
கண்ணனின் துணை உண்டு.
தேவியின் விரித்த குழல் கண்டும்,
கௌரவரைக் கொலை கண்டு மகிழாமல்,
அவர் குடைக்கீழ் உயிர் வாழல் தகுமோ?’ என வினவி,
போரே வேண்டுமென்கிறான்.

மலை கண்டதென என் கைம்மறத்தண்டின்
வலி கண்டும் மகவான் மைந்தன்
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும்
எமக்காகத் திருமால் நின்ற
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும்
இமைப்பொழுதில் நேரார் தம்மை
கொலை கண்டு மகிழாமல் அவன்குடைக் கீழ்
உயிர்வாழக் குறிக்கின்றாயே!
♜♜♜

அடுத்து, கண்ணன் அர்ச்சுனனை நோக்குகிறான்.
‘கௌரவர்கள் பாஞ்சாலியைத் துகிலுரிய,
“கரியானே நிமலா!” என அவள் கதறவும்,
மாண்டார் போல் அரசவையில் நின்ற,
மாசுதீர வேண்டாமோ?’ என்கிறான் அவன்.

தீண்டாத கற்புடைய செழுந்திருவைத்
துகிலுரியச் செயல் ஒன்றின்றி
நீண்டானே, கரியானே, நிமலா! என்று
அரற்றினளாய் நின்று சோர,
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில்
யாம் இருந்த மாசு தீர
வேண்டாவோ? வேண்டுவது மேம்படு நல்
அறமேயோ? வேந்தர் வேந்தே!
♜♜♜

பார்த்தனைத் தொடர்ந்து நகுலன் பேசுகிறான்.
‘கண்ணன் தூது போனாலும்,
பொறுமையிற் சிறந்த தருமன் சொன்னவற்றை,
அவன் உரைத்தாலும்,
துரியோதனன் கேளான்.
உவர் நிலத்தில் விதைத்த விதையால் விளைவு கிட்டாது.
பாம்பிற்குப் பாலை வார்த்தாலும் பயன் கொடாது.
ஆதலால் போரே உகந்தது’ என்கிறான் அவனும்.

பொன் ஆரும் திகிரியினான் போனாலும்
பொறைவேந்தன் புகன்ற எல்லாம்
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால்
கெடுமதி கண் தோன்றாதன்றே
எந்நாளும் உவர் நிலத்தில் என் முளை
வித்திடினும் விளைவெய்திடாது
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும்
விடமொழியப் பயன்கொடாதே.
♜♜♜

நிறைவாக,
கண்ணன், சகாதேவனின் கருத்தறிய விரும்புகிறான்.
சகாதேவன் ஆன்ம வளர்ச்சி பெற்றவன்.
முக்காலும் உணரும் ஞானி.
சோதிட வல்லுனன்.
தன் ஞான நிறைவினால்,
பதற்றமின்றி மௌனித்திருக்கும் சகாதேவனை நோக்கி,
‘நகுலன், விசயன், வீமன் முதலியோர் உரைத்த
கருத்தினை அறிந்தேன்.
சொல்லுதற்கரிய உணர்வுக் கூர்மையும்,
புகழும், திறனும் உடைய சகாதேவனே!
இனி உன் கருத்தை நீ உரைப்பாயாக!’ என்கிறான் கண்ணன்.

நகுலன் இவை உரைத்ததன் பின் நன்றெனக்கை
அமைத்தருளி நகுலன் சொல்லும்
இகல் விசயன் தன்மொழியும் திறல் வீமன்
இயம்பியதும் யாவும் கேட்டோம்
புகல் அரிய உணர்வுடையோய்! புகழுடையோய்!
திறலுடையோய்! புகல் நீ என்ன
முகிலனைய திருமேனி முகுந்தனுக்கு
  மனமுருக மொழிகின்றானே!

சகாதேவனை நோக்கிய கண்ணனின் உத்தரவில்,
சகாதேவன் உரைக்கப் போகும் செய்திக்கு,
அவன் அளிக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
புகல் அரிய உணர்வுடையோய்!
புகழுடையோய்! திறலுடையோய்! எனும்,
கண்ணனின் விளிப்பால்,
சகாதேவனின் முக்கியத்துவத்தை உணருகிறோம் நாம்.
இவ்விடத்தில் கண்ணனை ஓர் இராஜதந்திரியாயன்றி,
அருள் பொலியும் இறையாகவே,
சகாதேவன் காண்கிறான் என்பதற்காம் சான்றாய்,
முகிலனைய திருமேனி முகுந்தன் என்றும்,
பாண்டவருள் ஒருவனாயன்றிப் பக்தனாய் நின்றே,
சகாதேவன் பதிலுரைப்பதற்காம் சான்றாய்,
மனமுருக மொழிகின்றானே என்றும்,
வில்லியார் உரைப்பது கவனத்திற்குரியது.
♜♜♜

ஞானியான சகாதேவன்,
கண்ணனை நோக்கிப் பேசத் தொடங்குகிறான்.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்,
ஞானம் கொப்பளிக்கின்றது.
‘நீ தூது சென்றாலென்ன?
செல்லாது விட்டாலென்ன?,
துரியோதனன், நாடு வழங்கினாலென்ன?
வழங்காது விட்டாலென்ன?
பாஞ்சாலி, குழல் முடித்தாலென்ன?
முடிக்காது விட்டாலென்ன?
முடிவாக யாது நிகழப் போகிறதென்பதை,
எவர் அறிவார் ஆதிமூர்த்தியே?’ என்று,
வினாவால் விடை சொல்லி முடிக்கிறான் சகாதேவன்.

சிந்தித்தபடி நீயும் சென்றால் என்
ஒழிந்தால் என் செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல்
இருந்தால் என் வழங்கினால் என்
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்
விரித்தால் என் குறித்த செய்கை
அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத்
தெரியுமோ? ஆதி மூர்த்தி.
♜♜♜

குறித்தவொரு செயலின் முதலைத் தெரிந்தவரே,
முடிவினையும் தெரிவராம்.
எச்செயலின் தொடக்கமும், வினையின் பாற்பட்டதே.
விதியாகிய வினையின் தொடக்கத்தை,
விதித்தவன் அன்றி வேறெவர் அறிவார்?
வினையின் தொடக்கமறிந்த அவனே முடிவும் அறிவனாம்.
ஞானியாகிய சகாதேவன் இவ்வுண்மை உணர்கிறான்.
குறித்த செயலின் முடிவினை,
தொடக்கமுணர்ந்த உனையன்றி வேறெவர் அறிவார்?
எனும் குறிப்புத் தோன்ற,
‘ஆதிமூர்த்தி’ என,
கண்ணனை விளிக்கின்றான் சகாதேவன்.
♜♜♜

இங்கு ஓர் ஐயம் உதிக்கிறது.
முடிவறிதல் கண்ணனையன்றி வேறெவர்க்கும் ஆகாதெனின்,
போரை நிறுத்த,
சகாதேவன் பின்னர் உபாயம் உரைத்தது எங்ஙனம்?
விடை இலகுவானது.
ஞானியர், இறையோடு ஒன்றுதலால்,
அவ் இறை நிலை எய்துவர்.
அந்நிலை எய்தியதாலேயே உபாயம் உரைக்கும் உரிமை,
சகாதேவனுக்கு ஆகியது என்க.
அந்தத்தில் முடியும் வகை,
அடியேற்குத் தெரியுமோ? ஆதி மூர்த்தி
எனும் சகாதேவனின் கூற்றை,
அந்தத்தில் முடியும் வகை அடியேற்குத் தெரியும்,
ஓ! ஆதி மூர்த்தி  எனப் பிரிக்க,
மேற் கருத்தும் வெளிப்படுதலைக் காணலாம்.
♜♜♜

சகாதேவன் உரை தொடர்கிறது.
‘தத்துவம் கடந்த உத்தமனே!
உன் வித்தகம் யார் அறிவார்?
அலகை முலைப்பால் உண்டும்,
மருதிடைச் சென்று சகடம் விழ உதைத்தும்,
இடையர் குடியில் வளர்ந்த திருமாலே!
உன் மாயையை எவரும் அறியார்,
எனினும் அதனை யான் அறிவேன்.
உன் உளக் கருத்து எதுவோ,
அதுவே என் கருத்துமாம்’ என்று,
பதிலுரைத்து முடிக்கின்றான்.

முருகவிழ்க்கும் பசுந் துளப முடியோனே
அன்று அலகை முலைப்பால் உண்டு
மருதிடைச் சென்று உயர் சகடம் விழ உதைத்துப்
பொதுவர் மனை வளர்ந்த மாலே
ஒருவர்க்கும் தெரியாது இங்கு உன் மாயை
யான் அறிவேன் உண்மையாக
திருவுளத்துக் கருத்து எதுவோ அது எனக்கும்
கருத்தென்றான் தெய்வம் அன்னான்.

பசுந் துளப முடியோனே! என்றும்,
மாலே! என்றும் சகாதேவன் கண்ணனை விளிப்பதில்,
கண்ணனை, அவன் திருமாலாகக் காண்பது தெளிவாகிறது.
‘உன் மாயையை யாரும் அறியார்,
யான் அறிவேன்’ என்று அவன் உரைப்பதில்,
ஆணவக் குறிப்பு இருப்பதாய் எவரும் உரைப்பின் அது தவறு.
அவன் உரையில்,
மாயையைக் கடந்து இறையை உணர்ந்த,
ஞானநிலை உணர்வதே அறிவாம்.
எவர் மாயையைக் கடப்பரோ, அவரே அதனை உணர்வர்.
மாயையைக் கடந்தார் இறைவனை உணர்ந்தார்.
இறைவனை உணர்ந்தார் இறை நிலை அடைந்தார்.
சகாதேவன் அந்நிலையை அடைந்தான் என்பதை,
நமக்குணர்த்தவே,
வில்லியார் அவனைத் தெய்வம் அன்னான் எனச் சுட்டுகிறார்.
அந்நிலை எய்தினார்க்கு,
தமக்கெனத் தனிக்கருத்து ஏதுமில்லையாம்.
இறைக் கருத்தே அவர் கருத்து.
சீவன்முக்த நிலையில்,
பதி வாக்கே பசு வாக்காகும் என்கிறது சித்தாந்தம்.
திருவுளத்துக் கருத்து எதுவோ அது எனக்கும்
கருத்து
எனும் சகாதேவன் வார்த்தைகளில்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்,
அதுவும் உன்றன் விருப்பன்றே! எனும்,
திருவாசக ஒலி கேட்கிறதல்லவா?
♜♜♜

சகாதேவனின் பதில் கேட்டுக் கண்ணன் திடுக்கிடுகிறான்.
ஊனநிலை உற்ற மற்றைப் பாண்டவர் முன்,
ஞானநிலை உற்ற சகாதேவன் பேசின்,
தன் நாடகம் குலையும் என உணரும் கண்ணன்,
பொய்மையாய்ச் சிரித்து,
‘கேட்டதற்குப் பதிலுரைக்காமல் இவன் சமர்த்துரைக்கிறான்’ என,
மற்றவர் முன் உரைத்துச் சமாளித்து,
‘பின் உன்னோடு மேலும் பேச வேண்டும்’ எனச் சொல்லி,
அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

இவ்வண்ணம் சகாதேவன் இயம்புதலும்
நகைத்தருளி இகழோர் சொன்ன
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான்
இவன் என்ன அவனோ(டு) ஆங்கு ஓர்
பைவண்ண மணிக்கூடம் தனில் எய்திப்
பாரதப்போர் பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக! நீ உபாயமென,
தொழு(து) உரைப்பான் உரம்கொள் வேலான்.

‘எல்லாம் உணர்ந்தவன் போல் உரைக்கும் சகாதேவனே!,
பாரதப் போர் நிகழாதிருக்க முடிந்தால் வழி சொல்வாய்!’
எனத் தனியிடத்திற் கண்ணன் வினவ,
ஆணவம் சிறிதுமின்றி அவனைத் தொழுது,
உரைக்கத் தொடங்குகிறான் சகாதேவன்.
சகாதேவன் தொழுது உரைப்பதால்,
போர் வேண்டிய மற்றைப் பாண்டவர் போல்,
அவன் வீரம் உடையன் அல்லனோ? என,
நம் மனத்துள் எழும் வினாவறிந்து,
அவனும் வீரனே!.
ஞானம் நிறைந்ததாலேயே,
தன் வீரம் நினையாமல் தொழுதுரைத்தான் என, நமக்குணர்த்த,
உரம்கொள் வேலான் என அவனை விளித்து,
பாடலை முடிக்கிறார் வில்லியார்.
♜♜♜

ஞானியாம் சகாதேவன் பணிவோடு பேசுகிறான்.
‘கண்ணா! பாரதப் போரில் அனைவரையும் நீறாக்கி,
பூபாரம் தீர்க்க உளம் கொண்டாய்.
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! உனையன்றி,
மாபாரதம் அகற்ற மற்றிங்கு எவர் வல்லார்?’
என வினவித் தொடர்கிறான்.

நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப்
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீயன்றி
மா பாரதம் அகற்ற மற்றார்கொல் வல்லாரே?

இப்பாடலில்,
கண்ணனைச் சகாதேவன்,
கோபாலா! போர் ஏறே! என்றழைப்பதில்,
உட்பொருள் உண்டு.
மேய்ப்பனின் வழி காட்டுதலில் பசுக்கள் நடப்பது போல்,
இறை நடத்துவிக்க ஆன்மாக்கள் வழி நடக்கும்.        
இக் கருத்தை உளங் கொண்டு,
உன் கருத்தின்படியேதான்,
பாண்டவர் நடக்கப்போகின்றார் என்பதை,
குறிப்பால் உணர்த்த,
கண்ணனை  இவ்விடத்தில்,
கோபாலா! என்றும் (கோபாலா - பசு மேய்ப்பவன்),
கண்ணனின் முடிவு போரே! என,
தான் அறிந்து கொண்டதை அவனுக்கு உணர்த்த,
கண்ணனை, போர் ஏறே! என்றும்,
சகாதேவன் குறிப்பொடு விளிக்கிறான் என்க.
♜♜♜

‘உனையன்றி எவராலும் பாரதப் போரை நிறுத்த முடியாது’இ
என உரைத்த சகாதேவன்,
பின் பணிவோடு,
அப்போரை நிறுத்தற்காம் வழியும் உரைக்கிறான்.
‘கர்ணனை, நாட்டை ஆளச் செய்து,
பார்த்தனைக் கொன்று,
பாஞ்சாலியின் குழலை முற்றக் களைந்து,
காலில் விலங்கிட்டுக் கைபிடித்து உன்னையும் கட்டுவனேல்,
பாரதம் வராமல் தடுக்கலாம்’ என்கிறான் அவன்.

பாராளக்கன்னன் இகல்பார்த்தனை முன்கொன்று அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைபிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான்.

இப்பாடல் சகாதேவனின் நுண்மையையும்,
வில்லியாரின் வன்மையையும் உரைத்து நிற்பது.
பாண்டவர், கௌரவர் எனும் இரு திறத்தாரும்,
பகைத்து நிற்பதால்,
அவ்விருவர்க்கும் பொதுவானவனான கர்ணனுக்கு,
முடி சூட்டலாம் என்பது,
சகாதேவன் சொல்லும் முதல் உபாயம்.
இப்பதிலால்,
கண்ணன் அறிவிக்கும் முன்னரே,
கர்ணனை,
பாண்டவரின் மூத்தோனாய்ச் சகாதேவன் உணர்ந்துவிட்ட,
இரகசியத்தைப் பதிவு செய்கிறார் வில்லியார்.
♜♜♜

காண்டீபத்தில் செய்த சத்தியத்தை மீறின்,
உயிர்விடும் வைராக்கியம் பூண்டவன் அர்ச்சுனன்.
‘பாரதப் போரில் கர்ணனைக் கொல்வேன்’ என,
காண்டீபத்தின் மீது அவன் சத்தியம் செய்திருப்பதால்,
எப்படியும் பாரத யுத்தத்தை வருவிக்க முயல்வான்.
அதனால், பாரத யுத்தத்தை நிறுத்த வேண்டுமாயின்,
அவனைக் கொல்ல வேண்டும்.!
♜♜♜

பாரதப் போரில்,
துச்சாதனன், துரியோதனன் ஆகியோரது இரத்தம் எடுத்து,
குழலிற் பூசியே தலை முடிப்பேன் என,
கூந்தல் விரித்தவள் பாஞ்சாலி.
அவளின் விரிந்த கூந்தல் கண்டு,
பாண்டவர் போர்க் குணம் கொள்வர்.
கூந்தல் இருந்தால்த்தானே முடிவதற்கு.
கூந்தலின்றி பாஞ்சாலியை மொட்டையடித்தால்,
குழல் முடிக்கும் பிரச்சினை முடியும்.
இது சகாதேவன் உரைக்கும் மூன்றாம் உபாயம்.
♜♜♜

கண்ணா! நீ பூபாரம் தீர்க்கப் பிறந்தவன்,
மேற்சொன்ன அனைத்தையும் செய்யினும் கூட,
ஏதோ வகையில் பாரதப் போரை நீ நிகழ்த்துவிப்பாய்.
ஆதாலால், உன் காலில் தளை பூட்டி,
நின்னைக் கைபிடித்துக் கட்டி வைப்பின் மட்டுமே,
இப்போரை நிறுத்தலாம் என,
நான்காம் உபாயத்தினையும் உரைத்து முடிக்கிறான் சகாதேவன்.
♜♜♜

இங்கு நம் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது.
சபதமிட்ட அர்ச்சுனனைக் கொன்றும்,
பாஞ்சாலியை மொட்டையடித்தும்,
போரை நிறுத்தற்கு உபாயம் உரைத்த சகாதேவன்,
வீமனைப் பற்றி ஏதும் சொல்லாதது ஏன்?
துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைக் கொல்வேன் என,
வீமனும் சபதம் உரைத்தான் அன்றோ!,
அங்ஙனமிருக்க வீமனைப் பற்றிச் சகாதேவன்,
ஏதும் உரையாதிருத்தல் கூடுமா?
வினாப் பிறக்க,
பாடலை, ஆழ்ந்து ஆராயத் தலைப்படுகிறது நம்மனம்.
வில்லியாரா தவறிழைப்பார்?
அப்பாடலின் உள்ளேயே நம் வினாவுக்கான விடை தெரிகிறது.
தந்தை பெயரால் மகன் அழைக்கப்படுதலை,
‘உபசாரம்’ என்று தமிழ் உரைக்கும்.
முதலாளியின் மகனை முதலாளி! என்றழைப்பதும்,
கணக்கர் மகனைக் கணக்கா! என்றழைப்பதும்,
இதற்காம் மேற்கோள்கள்.
காற்றுக்குக் ‘கால்’ என்று ஒரு பெயர் உண்டு.
வீமன் வாயு புத்திரன்.
காலின் மைந்தனாகிய வீமனை,
மேல் உபசாரத்தால்,‘கால்’ என்றே அழைக்க முடியும்.
இவ்வடிப்படை கொண்டு நோக்க,
காலில் தளைப்பூட்டி என்று வில்லி உரைத்ததற்கு,
வீமனுக்கு விலங்கிட்டு என்று பொருள் கொள்ளல் கூடுமாம்.
அங்ஙனமுரைக்க மேற்சொன்ன ஐயம் நீங்குதலோடு,
வில்லியாரின் நுண்மையும் வெளிப்படுகிறது.
முன்கொண்ட பாடற் பொருளில்,
கட்டுதல், காலில் தளை பூட்டுதல் எனும் இரு செயல்களையும்,
கண்ணனைக் கட்டுப்படுத்துவதற்கான,
உபாயங்களாய் உரைத்தோம்.
கட்டுவதென்று உரைத்திருக்கவும்,
காலில் தளை பூட்டும் செயலையும் கண்ணனுக்கே ஆக்குவது,
மிகையாம்.
♜♜♜

சகாதேவன் பக்தியால் உரைத்தது கேட்டு,
கண்ணன் வியப்புறுகிறான்.
‘முன்னம் நீ கூறியவற்றை முடித்தாலும்,
என்னைக் கட்டுதல் எங்ஙனம்?’ என்கிறான்
‘உன் வடிவை நீ காட்டின்,
என்னால் கட்டுதல் கூடும்’ என,
பணிவோடு பதிலுரைக்கிறான் சகாதேவன்.

முன்னை நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன்
உன்னை நீ தானும் உணராதாய் உன் வடிவு
தன்னை நீ காட்டத் தளைத்திடுவன் யான் என்றான்.

தன்னைத்தான் உணரும் தேவை தலைவற்கு ஏது?
ஆதலால், பக்தராலேயே உணரப்படுகிறான் பரமன்.
இஃதுணர்ந்து,
உன்னை நீ தானும் உணராதாய் என்கிறான் சகாதேவன்.
ஆன்மாவுக்கான இறைவனின் உபகாரம் இரண்டாம்.
ஒன்று, கண்டு காட்டுதல்.
மற்றையது, காட்டிக் காணுதல்.
இது இறைவனின் மாயை விளையாட்டு.
அவன் கண்டு காட்டியோ,
காட்டிக் கண்டோ, செயல் புரியாவிடின்,
ஆன்மாவுக்கு இறை தரிசனம் கிட்டாதாம்.
இவ்வுண்மையை,
தன்னை நீ காட்டத் தளைத்திடுவன்
எனும் சகாதேவன் கூற்று வெளிப்படுத்துகிறது.
காட்டக் காணுவேன் எனச் சகாதேவன் உரைப்பதில்,
அவனின் முழுமையுற்ற ஞான நிலையும் வெளிப்படுகிறது.
♜♜♜

அன்பனாம் சகாதேவனின் ஆற்றலை உலகுக்குணர்த்த,
கண்ணன் விஸ்வரூபம் எடுத்து,
ஆய வடிவு பதினாறாயிரம் கொள்கிறான்.
கோடியாய்ப் பரவிக் கிடக்கும் மாயை வடிவத்துள் எல்லாம்,
கண்ணனின் ரூபம் தோன்றுகிறது.
எங்கும் இறைமயம்.
விரிந்த அவ்வடிவங்களின்  மூலம் எது?
ஒன்றினார் அன்றி உணர்வார் யார்?
ஒன்றிய சகாதேவன் உணர்கிறான்.
விரிந்த அவ் விஸ்வரூபத்தின் மூலத்தை உணர்ந்து,
மூவுலகும் அளந்த கண்ணன் திருவடிகளை,
தன் கருத்தினாற் கட்டுகிறான்.
மாயவனும் அன்பன் மனமறிவான் கட்டுக என்று
ஆயவடிவு பதினாறாயிரம் கொண்டான்
தூயவனும் மூலமாம் தோற்றம் உணர்ந்(து) எவ்வுலகும்
தாய அடிஇணைகள் தன் கருத்தினால் பிணித்தான்.
♜♜♜

மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும்,
தேடியும் காணாத் திருவடிகளை உடைய திருமால்,
பக்தனின் அன்புக் கயிற்றாற் கட்டுண்டு,
அவன் கண் களிக்க முன் நின்றான்.

நீ தேவன் என்றறிந்து நெஞ்சாற் தனைக் கட்டும்
சா தேவன் கண்களிக்கத் தானேயாய் முன்நின்றான்
பூ தேவரும் கனகப் பூங்கா நிழல் வைகும்
மா தேவரும் தேடிக் காணா மலரடியோன்.

உலகனைத்தும் காக்கும் ஏந்தல்,
ஒருவன்பாற் கட்டுண்டால் உலகின் நிலை என்னாம்?
கவன்றான் கண்ணன்.
‘எனை அன்பாற் பிணித்தமை நன்று!
இனிப் பற்றிய பாதம் விடுக’ என அவன் இறைஞ்ச,
‘பாரதப் போரில் ஐவரையும் காத்தருள்க!’
சகாதேவன் கண்ணனை வேண்டி விடுவித்தான்.

அன்பால் இன்றென்னை அறிந்தே பிணித்தமை நன்று
என்பாதம் தன்னை இனி விடுக என்றுரைப்ப
வன்பாரதப் போரில் வந்தடைந்தேம் ஐவரையும்
நின்பார்வையாற் காக்க வேண்டும் நெடுமாலே!

கட்டியவன் கட்டளைக்குக் கட்டுண்டான் கண்ணன்.
அடியில் முடி பதித்து அன்பால் உருகி நிற்கும்,
சகாதேவனை நோக்கி ‘ஓம்’ என்று உரைக்கிறான் கண்ணன்.
இங்கு கண்ணன் உரைக்கும் ‘ஓம்’ எனும் சொல்,
சம்மதத்தினை உணர்த்தும் உடன்பாட்டுச் சொல்லாம்.
இன்றும் ஈழத் தமிழரால் மேற்குறித்த பொருள் வெளிப்பட,
‘ஓம்’ எனும் சொல் உரைக்கப்படுகிறது.
‘ஓம்’ என வரங்கொடுத்து,
‘இங்கு நாம் உரைத்தவை எவர்க்கும் உரையாது ஒழி’ என ஓதி,
விடைகொள்கிறான் கண்ணன்.

என்றென்று இறைஞ்சி இரு தாமரைத்தாளில்
ஒன்றும் கதிர்முடியார்க்கு ஓம் என்று உரைத்தருளி
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்தமொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான்.
♜♜♜

இஃது பாரதத்தில் கண்ணன் காட்டும் முதல் விஸ்வரூப தரிசனம்.
இத் தரிசனம் பயனுடையதாயிற்றா?
ஆராயப் புகுகிறோம்.
சகாதேவன் முற்றுமுணர்ந்த ஞானி.
ஞானியின் அகம் எந்நேரமும் இறை தரிசனம் எய்தியபடியே இருக்கும்.
அகத்துள் எப்போதும் இறைவனைக் கண்டிருந்த சகாதேவனுக்கு,
புறத்தில் கண்ணன் காட்டிய விஸ்வரூபத்தால் பயனேது?
ஆதலால், இத் தரிசனம்,
விரிந்த பயனுடையதன்றாயிற்றாம்.
♜♜♜

இரண்டாவது விஸ்வரூபம்

அதே கிருஷ்ணன் தூதுச் சருக்கம்.
பாண்டவருக்காய்க் கண்ணன் தூது செல்கிறான்.
கண்ணன் வந்தான் எனும் செய்தி கேட்டு,
வீட்டுமர் முதலியோர்,
அவனை எதிர்கொண்டு அழைக்கச் செல்கின்றனர்.
துரியோதனனும் பகை மறந்து கண்ணனை வரவேற்க எழுகிறான்.
‘மன்னனாகிய நீ தூதனாகிய அவனை எதிர்கொள்ளச் செல்வதா?’,
என வினவித் தடுக்கிறான் கொடுமனச் சகுனி.

மின்னுமா முகிற் பல்லிய இதங்கள் முன் முழங்க
மன்னர் மன்னவன் எழுந்தனன் மால் எதிர் கொள்வான்
என்னை நீ அவர்க்கு எதிர் செல்வதென்று தன் மருகன்
தன்னை அன்பொடு தகைந்தனன் கொடுமைகூர் சகுனி.

தன்னை வரவேற்க வராத துரியோதனன் செய்கை,
கண்ணனுக்கு வாய்ப்பாக,
அரண்மனை செல்லாமல் விதுரன் வீடு புகுகிறான் கண்ணன்.
அவன் செயலால் துரியோதனனின் கோபம் மிகுகிறது.
‘தூதுரைக்க அரண்மனை வரும் இடையனாம் கண்ணனை,
உறவு கூறி எவரும் தொழுதால்,
அவர் ஊரைத் தீ மூட்டிக் கொளுத்துவேன்’ என,
தன் கீழ்ப்பட்ட மன்னரை மிரட்டுகிறான்.

காவல் மன்னவர் முகங்கள் தோறும்
இருகண் பரப்பி அமர் கருதுவோர்
ஏவலின்கண் வரு தூதனாம் இடையன்
இன்று நம் அவையில் எய்தினால்
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழு(து)
உறவு கூறில் இனி உங்கள் ஊர்
தீவலம் செய அடர்ப்பன் என்று நனி
சீறினான் முறைமை மாறினான்.

அவன் மிரட்டலை மீறி மன்னர் அனைவரும்
வந்த கண்ணனை வணங்கினர்.
அதுகண்டு கொதித்திருந்த துரியோதனனிடம்,
தூதுவர்க்குரிய இலக்கணப்படி,
அறவுரைகள் பகர்கிறான் கண்ணன்.
‘பாண்டவர்க்குச் சில நாடுகள் கொடுத்து,
அவரொடு உறவாய் வாழ்க!’ என்ற கண்ணனிடம்,
‘நீ வெறுக்கினும் மன்னவர் திகைக்கினும்,
பல நினைக்கினும், போய் நகைக்கினும்,
தேவர், “இவன் பொய்த்தான்” என உரைக்கினும்,
பாண்டவர் சமர் விளைக்கினும்,
ஈயிருக்கும் இடமும்
இப்புவியில் அவர்க்குக் கொடேன்’ என்கிறான்.

நீ வெறுக்கிலென் இருந்த மன்னவர்
திகைக்கிலென் பல நினைக்கிலென்
போய் நகைக்கிலென் உரைத்த உண்மை மொழி
பொய்த்தது என்று அமரர் புகலிலென்
வேய் மலர்த் தொடையல் ஐவர் என்னுடன்
மிகைத்து வெஞ்சமர் விளைக்கிலென்
ஈ இருக்கும் இடமெனினும் இப்புவியில்
யான் அவர்க்கு அரசு இனிக் கொடேன்.

‘பார் வழங்க நினையாவிடின்,
பாதி நாட்டை வழங்கு!’ என்கிறான் கண்ணன்.
அதையும் துரியோதனன் மறுக்க,
‘ஐந்து ஊர் வழங்குக!’ என்று இரந்து பார்க்கிறான்.
அக்கோரிக்கையையும் நிராகரிக்கிறான் துரியோதனன்.

கார் வழங்கு உரும் எனச் சினத்தினொடு
கண் இலான் மதலை கழறவும்
பார் வழங்க நினை(வு) இல்லையேல்
அவனி பாதியாயினும் வழங்குவாய்
தார் வழங்கு தடமார்ப என்ன
அதுதானும் மன்னவன் மறுக்க ஐந்(து)
ஊர் வழங்குக என உற்று இரந்தனன்
இவ்வுலகெலாம் உதவும் உந்தியான்.

புறக்கண் இல்லாதவன் தந்தை.
அகக்கண் இல்லாதவன் மைந்தன் என்பதனைச் சுட்ட,
கண் இலான் மதலை என்கிறார் வில்லியார்.
‘ஐந்து ஊர் வழங்குக’ என
துரியோதனனை இரந்து நிற்கும் கண்ணனின் நிலை கண்டு,
பக்தரான வில்லியார்தம் நெஞ்சு கொதிக்கிறது.
இவன், இல்லாது இரப்பவன் அல்லனாம் என்பதை,
சொல்லாது விட்டால்,
நெஞ்சு பொறுக்காதென்று உணர்ந்து,
தன் வயிற்றிலிருந்து பிரமனையும்,
அவன் மூலம் உலகையும் படைத்தவன் இத் திருமால்.
ஆதலால் இவ்வுலகு அவனுக்கே உரியதாம் எனும் பொருள் பட,
இவ்வுலகெலாம் உதவும் உந்தியான்
என்றுரைத்துத் திருப்தி கொள்கிறார்.
♜♜♜

துரியோதனன் மேலும் கொதித்து,
பாண்டவர் வீரத்தை இழித்துரைக்க,
‘அங்ஙனமாயின் குருஷேத்திரத்தில் போருக்கு வருக!’,
என்கிறான் கண்ணன்.
துரியோதனன்,
தன்னை மறந்து பாண்டவரை மேலும் இழித்துரைத்து,
கண்ணனை உபசரித்த விதுரனையும் பழிக்கிறான்.
தன் தாயைப் பழித்த துரியோதனன் மேற் சினந்து,
விதுரன் வில்லுடைத்து அரசவை விட்டு ஏக,
கண்ணன் போருக்கான சூழ்ச்சிகள் தொடக்குகிறான்.
இந்நிலையில்,
மீண்டும் கண்ணனை அவைக்கு அழைத்து,
அவனை வஞ்சனையாற் கொல்ல நினையும் துரியோதனன்,
அதற்குத் தந்தையின் சம்மதத்தையும் பெறுகிறான்.
‘தூதரைக் கொல்லுதல் தவறென்று’ விகர்ணன் உரைக்க,
மாமனாம் சகுனி,
அதனை ஏற்றுரைக்குமாப்போல்,
‘கண்ணனைக் கொல்ல வேண்டாம்.
குழி தோண்டி மறைத்து, அதன்மேல் ஆசனம் அமைத்து,
அக்குழியுள் அரக்கரையும் மற்போர் வீரரையும் ஒளித்து வைத்து,
கண்ணனை அவ் ஆசனத்தில் இருத்தி,
குழியுள் வீழச் செய்வோம்.
வீழும் அவனை விலங்கு பூட்டிச் சிறையில் வைக்கலாம்’ என்கிறான்.

கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்குபூட்டிச்
சொல்லரும் சிறையில் வைத்தல் தூதருக்குரிமை என்றான்.
♜♜♜

அவன் திட்டப்படி,
தூதர் கண்ணனை அழைக்க, கண்ணன் அரசவை சேர்கிறான்.
துரியோதனன் வஞ்சனை இருக்கை காட்ட,
அதில் அமர்ந்த கண்ணன் குழியினுள் விழத் தொடங்குகிறான்.
துரியன் செயலால் சினமுற்ற கண்ணபிரான்,
திருவடி பாதாளத்திலும்,
திருமுடி வானிலும் தொட,
விஸ்வரூபம் கொள்கிறான்.

இறைவன் எழிற்கதிர் மணிகள்
அழுத்திய தவிசில் இருத்தலுமே
நெறுநெறனக் கொடு நிலவறையிற் புக
நெடியவன் அப்பொழுதே
மறலி எனத்தகு நிருபன் இயற்றிய
விரகை மனத்துணரா
முறுகு சினத்துடன் அடிஅதளத்துற
முடி ககனத்(து) உறவே.

வானுள்ள தேவர்கள் ‘அஞ்சினோம்’ என்று அலறவும்,
பாதாளப் பாம்புகள் அடிச்சுமை தாங்காது வருந்தவும்,
உயர்ந்து விஸ்வரூபம் கொண்டு நிமிர்கிறான் கண்ணன்.

அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்(து)
உயர் அண்டர் பணிந்திடவும்
துஞ்சினம் இன்(று) என வன் பணியின் கிளை
துன்பம் உழந்திடவும்
வஞ்ச மனம்கொடு வஞ்சகன் இன்(று) இடு
வஞ்சனை நன்(று) இதெனா
நெஞ்சில் வெகுண்(டு) உல(கு) ஒன்று படும்படி
நின்று நிமிர்ந்தனனே.

வீடுமன், கர்ணன், திருதராட்டினன் ஆகியோரோடு,
நூற்றுவருட் பலரும்,
கூடியிருந்த மன்னரும்,
சிரத்திற் கரங்குவித்து,
அஞ்சி, பிழை பொறுக்கக் கண்ணனை இறைஞ்சுகிறார்.

கங்கை மகன் கதிரோன் மகன் அம்பிகை
காதல் மகன் தனைய
அங்(கு) அவையின் கண் இருந்த நராதிபர்
அடைய எழுந்(து) அடைவே
செங்கை குவித்த சிரத்தினராய் உணர்(வு)
ஒன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்
என்று பணிந்தனரே.

இத்துணையும் நிகழவும், துரியோதனன் அசைந்தானில்லை.
விஸ்வரூபம் கண்டும் அவன் மனத்தில் துளியளவும் மாற்றமில்லை.
அஞ்சாமல்,
நெஞ்சு அசையாமல்,
கரம் கூப்பாமல்,
புகழ் போற்றாமல்,
மாற்றம் ஏதுமின்றி இருக்கிறான் அவன்.

தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில்
சதுர்மறையின் படியே
எந்நிலமும் திருவடியில் மறைந்திட
இப்படி நின்றிடவும்
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு
பெயர்ந்திலன் ஆசனமும்
சென்னியிலும் கரம் வைத்திலன் வண்புகழ்
சிறிதும் மொழிந்திலனே.



இஃது பாரதத்தில் வரும் இரண்டாவது விஸ்வரூப தரிசனம்.
துரியோதனனுக்குக் கண்ணன் காட்டிய,
இவ் விஸ்வரூப தரிசனம் பயனுற்றதா?
ஆணவமே வடிவமன துரியோதனன்,
விஸ்வரூப தரிசனத்தின் பேற்றை உணர்ந்தான் அல்லன்.
அவ் விஸ்வரூப தரிசனத்தை,
கண்ணன் செய்யும் மாயையாய்க் கருதினான் அவன்.
மாயையைக் கடந்த வடிவமே, அவனுக்கு மாயையாயிற்று.
காரணம் அவன் மாயையின் வயப்பட்டிருந்ததே.
மொத்தத்தில்,
ஆணவ வயப்பட்ட துரியோதனனுக்குக் காட்டிய,
இவ் இரண்டாவது விஸ்வரூப தரிசனமும் பயனிலதாயிற்றாம்.



மூன்றாவது விஸ்வரூபம்

உத்தியோக பருவம்.
அணிவகுப்புச் சருக்கம்.
பாரதப் போர் மூண்ட நிலை.
பாண்டவ, கௌரவ சேனைகள்,
போர்க் களத்தில் எதிரெதிர் நிற்கின்றன.
போர் முனையில் அர்ச்சுனன் நிற்க,
தேரோட்டியாய்க் கண்ணன் அமர்ந்திருக்கிறான்.
எதிர் நின்ற படையணியைப் பார்த்த அர்ச்சுனன் மனதில்,
திடீரென ஒரு கலக்கம்.

யானையொடு தேர் புரவியாள் இவை அநேகவித
எண்ணரிய தானையுடனே
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும்
மற்றுள செழும் குரவரும்
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என
நின்ற துரியோதனனும் வான்
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டுருகி
விபுதர் பதி மைந்தன் மொழிவான்.

அசையா அர்ச்சுனனின் மனம் அசைகிறது.
‘போர் தொடக்கி நிற்பவர்,
பிதாமகனும் உறவினரும் துணைவருமாம்.
இவரைக் கொன்று அவனி கொள்ளுதல் பாதகமே.
ஆதலால் யான் போர் செய்யேன்’ என்று,
கண்ணனை நோக்கிக் கலங்குகிறான் அவன்.

நின்(று) அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும்
நீள் கிளைஞரும் துணைவரும்
கொன்(று) இவரை வாகு வலியிற் கவர்வ(து) இத்தரணி
கொள்பவனும் என் துணைவனே
என்று பல பேசி அதி பாதகம் எனக் கருதி
யான் மலை(வு) உறேன் இனி எனா
அன்று வசுதேவன் மகனோ(டு) உரை செய்தான் அமரில்
அவனும் இவனோடு உரை செய்வான்.
♜♜♜

வீட்டுமப் பருவம் முதற் போர்ச்சருக்கம்,
தளர்ந்த அர்ச்சுனனைக் கண்ணன் தேற்றம் செய்கிறான்.
உறவாலும் பாசத்தாலும் மயங்கி நிற்கும் பார்த்தனுக்கு,
உறவு, பாசம் அனைத்தும்,
மாயையின் செயலன்றி வேறில்லை என உபதேசிக்கிறான்.மாயை என்(று) ஒருத்தி தன்பால்
மனம் எனும் மைந்தன் தோன்றித்
தூய நல் அறிவன் தன்னைத்
தோற்றம் இன்றாக்கி வைத்தான்
தாயொடு தந்தை மக்கள்
தாரமென்று இவர்பால் வைத்த
நேயமும் அவன் தனாலே
நிகழ்ந்த(து) ஓர் நினைவு கண்டாய்.

கண்ணனின் தத்துவ உரை தொடர்கிறது.
வில்லியார், தத்துவத்துள்  புகுந்து விளையாடும் இடம் இது.
மாயையாம் உலகப் படைப்பினை,
பார்த்தனுக்கு உணர்த்துகிறான் கண்ணன்.
பற்றினால் விளையும் மயக்கத்திற்கு விளக்கம் சொல்கிறான்.
‘மனம் எனும் பகைவன்,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில் நின்று,
ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனும்,
ஐம்புலன்களையும் தானே துய்த்து,
மூவகைக் குணங்களோடும்,
அறுவகைப் படைகளோடும் சேர்ந்து பழகி,
நம்மை ஆட்சி செய்கிறான்.
அவன் உறங்கும் போதே,
அவனால் மறைக்கப்பட்ட நல்லறிவு,
வெளிப்பட்டுத் தோன்றும்’ என்கிறான்.

குயின்ற ஐம்பொறிவாய் நின்று
குறித்த ஐம்பொருளும் தானே
அயின்று முக் குணங்களோடும்
அறுவகைப் படைகளோடும்
பயின்று அரசாளும் அந்த மனமெனும்
பகைவன் ஆங்கு
துயின்ற போ(து) ஒளித்து நின்ற
தோன்றலும் தோன்றும் கண்டாய்.
♜♜♜

‘மனம் துயில, எழுகின்ற அறிவை,
உள்ளபடி உணர்ந்தவரே அறிஞராவர்.
எவ்வுலகிற்கும் தந்தையான இறையால் படைக்கப்பட்ட,
அசையும், அசையாப் பொருள்கள் தோறும்,
பாலுள் நெய்போல் அவ் இறைவனே கலந்திருக்கிறான்.
இவ் உண்மை உணர, எல்லாம் அவனே எனும் ஞானம் உதிக்கும்.
அந்த ஞானம் உதிக்கின்,
பகைவர் யார்? நண்பர் யார்?’ என்கிறான் கண்ணன்.

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞராவார்
தந்தை யால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்
வந்(து) அவன் தீம்பால் நெய்போல் உயிர்க்குயிராகி வாழும்
பந்தம(து) உணர்ந்துநேரே பார்க்குங்கால் பகையார்? நண்பார்?
♜♜♜

‘என்னை நானே யாரென்று உனக்குரைக்கக் கேட்பாய்!
இவ்வுலகின் நெருங்கிய பொருள்களும் நானே.
வேதத்தின் முடிவும் நானே.
உன்னை எப்போதும் விட்டு நீங்காதவன் நான் என்றறிவாய்!
முன்னொரு காலத்தில் நீயும் நானும்,
நரனாயும் நாரணனாயும் பிறந்தோம்.
வேறொரு பிறப்பில் இராமஇலக்குவரானோம்.
இப்பிறப்பில் அர்ச்சுனனும் கண்ணனுமாய் நிற்கின்றோம்.
பார்த்தனே! இவ்வுண்மை உணர்ந்து,
உன்னிடத்திலுள்ள பாசத்தை ஒழிப்பாய்’இ
என்றுரைத்த கண்ணன்,
பார்த்தனுக்கு ஞானம் உணர்த்தும் பொருட்டு,
விஸ்வரூப தரிசனம் காட்டுகிறான்.

என்னை நீ புகலக் கேண்மோ
எங்குமாய் யாவும் ஆகி
மன்னிய பொருளும் யானே
மறைக்(கு) எலாம் முடிவும் யானே
உன்னை யான் பிரிவது இல்லை
ஒரு முறை பிறந்து மேல் நாள்
நல் நிலா எறிக்கும் பூணாய்
நரனும் நாரணனும் ஆனோம்.

பின் ஒரு பிறப்பின் யாமே
இராம லக்குமப் பேர் பெற்றோம்
இந் நெடும் பிறப்பில்
நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்
நின்னிடை மயக்கும் இந்த
நேயமும் ஒழிக என்று
தன் னிலை அவற்குக் காட்டித்
தத்துவம் தெளிவித்தானே.
♜♜♜

இது பாரதத்தில் கண்ணன் காட்டும் மூன்றாம் விஸ்வரூப தரிசனம்.
பாசத்தாற் கட்டுண்டு பதறிய பார்த்தனுக்கு,
மெய்யறிவு புகட்டிப் பாசக் கட்டறுக்க,
கண்ணன் காட்டிய இவ் விஸ்வரூபம் பயன் உற்றதா?
தன் மகனாம் அபிமன்யுவை இழந்து,
பாசத்திற்கு ஆளாகிப் பதை பதைத்து,
அர்ச்சுனன் துடிக்கும் அடுத்து வரும் காட்சியால்,
அத்தரிசனமும் பயனற்றுப் போனது தெரிய வருகிறது.
♜♜♜

நான்காவது விஸ்வரூபம்

கன்ன பருவம்.
பதினேழாம் போர்ச் சருக்கம்.
தன் நெடுநாட் பகை தீர,
அர்ச்சுனன் மேல் நாகாஸ்திரத்தை விடுகிறான் கர்ணன்.
கண்ணபிரான் சூழ்ச்சியால்,
அவ் அஸ்திரம் குறி தவறிப் போகிறது.
தன் சொற் கேட்டு அர்ச்சுனனின் மார்புக்குக் குறி வையாத,
கர்ணன் மேற் கோபித்து,
சல்லியனும் போர்க்களம் விட்டுச் செல்கின்றான்.
பாகனற்ற கர்ணனின் தேர் நிலத்திற் புதைய,
பரசுராமனின் முன்னைச் சாபத்தால்,
அஸ்திரங்களும் அவனுக்கு உதவாமற் போகின்றன.
இச்சமயத்தைப் பயன்படுத்தி,
கர்ணனை மூடும்படியாய் அர்ச்சுனன் அம்புகள் தொடுக்கிறான்.

குறையற்ற தன் வில்லை மகவற்
குமாரன் குனித்து ஆசுகம்
சிறையற்ற கிரிபோல நிற்கின்ற
தினகாரி சிறுவன் தன் மெய்
மறையத் தொடுத்தான் உயிர்க்கால்
அவிப்பான் மயிர்க்கால் தொறும்
கறையற்ற மதிபோல நில(வு) ஈனும்
முத்தக் கழற்காலினான்.
♜♜♜

சூரியன் மறையப் போகும் நேரம்.
அது மறையும் முன்னர்,
கர்ணனைக் கொல்ல வேண்டும் என்று உணர்கிறான் கண்ணன்.
கொடையில் மிக்க கர்ணனை,
அக்கொடையால் விளைந்த தர்மம் நிற்கு மட்டும்,
கொல்ல முடியாது என்று உணர்ந்து,
போரை நிறுத்தும்படி அர்ச்சுனனுக்கு உரைத்து,
தளர்ந்த தவ அந்தண வடிவங் கொண்டு,
கர்ணனை அணுகுகிறான் அவன்.

அத்த வெற்(பு) இரண்டு விற்கிடை எனப்போய்
ஆதவன் சாய்தல் கண்டருளி
முத்தருக்(கு) எல்லாம் மூலமாய் வேத
முதற்கொழுந்(து) ஆகிய முகுந்தன்
சித்திரச் சிலைக்கை விசயனைச் செரு நீ
ஒழி எனத் தேர்மிசை நிறுத்தி
மெய்த்தவப் படிவ வேதியன் ஆகி
வெயிலவன் புதல்வனை அடைந்தான்.

தர்மம் காத்து நிற்க,
கர்ணனை ஏதும் செய்யவியலாது தவிக்கிறான் பார்த்தன்.
அவன் வில்வன்மை தோற்று நிற்கிறது.
இச்செய்தியை நமக்கு உணர்த்த நினைக்கும் வில்லியார்,
வில்லேந்திய விஜயனின் கையினை,
சித்திரச் சிலைக்கை என்று வர்ணிக்கிறார்.
வில்லுக்கு வீரம் சொல்வதன்றி அழகு சொல்வது மரபன்றாம்.
அம்மரபு மீறி,
அர்ச்சுனன் வில்லை அழகு வில் என்று வில்லியார் வர்ணிப்பது,
கர்ணனை ஏதும் செய்யமுடியாது,
வெறும் அழகுக்கே அர்ச்சுனன் கையில் வில் இருந்தது என்பதை,
குறித்தற்கேயாம்.
♜♜♜

‘யாவன் நீ?’ எனக் கேட்ட கர்ணனுக்கு,
அந்தணனாய் வந்த கண்ணன் பதிலுரைக்கிறான்.
“வேண்டியவர்க்கு வேண்டிய அருள்கிறாய் நீ என அறிந்து,
உன்னை நாடி வந்தனன்.
யான் மேருவில் தவம் பூண்டிருப்பவன்.
வறுமையால் பெருந்துயர் உற்றவன்.
உன்னால் முடிந்த ஒன்றை,
எனக்கு இப்பொழுதே அளிப்பாய்” என்கிறான்.

தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்
மேருவினிடைத் தவம் பூண்டேன்
ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்
இயைந்த(து) ஒன்று இக்கணத்(து) அளிப்பாய்
தூண்டிய கவனத் துரகதத் தடந் தேர்ச்
சுடர் தரத் தோன்றிய தோன்றால்!

இப்பாடல், வில்லியார் தம் வித்தகக் கைச்சரக்காம்.
மேரு என்பது இடைநிலம்.
அது இருதய ஸ்தானத்தைக் குறிப்பது.
இறைவன், அன்பர்தம் இருதய ஸ்தானத்தில்,
தன்னை நோக்கிய அவர்தம் வருகைக்காய்த் தவமிருக்கிறான்.
மேருவினிடைத் தவம் பூண்டேன்
முத்திபெற்று அவனை அடைவார்தம் தொகை மிகக் குறைவாம்.
ஆதலால் அன்பர்தம் வருகையின்றி வறுமையுற்ற அவன்,
அதனால் பெருந் துயருற்று உழல்கின்றான்.
ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்
அத்தகைய இறைவன்,
‘உன்னால் முடிந்ததையேனும் தா?’ எனக் கேட்டு  நிற்பது,
இயைந்த(து) ஒன்று இக்கணத்து அளிப்பாய்
அவ் ஆன்மாவின் ஈடேற்றத்தினையே எனும் குறிப்பு உணர,
இக்கவியின் பெருமை இமயம் தொடுகிறது.
♜♜♜

அர்ச்சுனனின் அம்புகளால் அடிபட்டு,
இரதத்தின் மேற் கிடக்கும் கர்ணன்,
‘இயன்றது தருக!’ எனும்,
அந்தணனின் வேண்டுதல் கேட்டு மகிழ்கிறான்.
உயிர்க்குப் போராடும் அவ்வேளையிலும்,
அவன் கொடை உள்ளம்,
கொடுக்கும் இயல்பு குன்றாது நிற்கிறது.
மகிழ்ந்து, ‘தரத்தக்க பொருளைக் கேள்!’ என்று அவன் உரைக்க,
வேதியனாய் வந்த கண்ணபிரான்,
‘உன் புண்ணியம் அனைத்தும் தருக’ என வேண்டுகிறான்.

என்று கொண்(டு) அந்த அந்தணன் உரைப்ப
இரு செவிக்(கு) அமுதெனக் கேட்டு
வென்றிகொள் விசயன் விசய வெங்கணையால்
மெய் தளர்ந்(து) இரதமேல் விழுவோன்
நன்றென நகைத்துத் தரத்தகு பொருள் நீ
நவில்(க) என நான் மறையவனும்
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும்
உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான்.

உயிர் கலங்கிய நிலையிலும்,
‘கொடு!’ எனும் வார்த்தை,
அவன் கொடைச் செவிக்கு அமிர்தமாய் இருப்பதாய் உரைத்து,
கர்ணனின் கொடை வன்மையை நமக்கு உணர்த்துகிறார் வில்லியார்.
வீழும் நிலையில், கொடை வேண்டி வந்திருக்கும் அந்தணன்,
இல்லாத எதையும் கேட்பனோ? என அஞ்சி,
தரத்தகு பொருள் நீ நவில் எனக் கர்ணன் உரைப்பது,
இல்லையெனச் சொல்லுதற்கும் அஞ்சும்,
அவன் மன நிலையை நமக்கு உணர்த்துகிறது.
புண்ணியம் அனைத்தும் உதவுக எனக் கண்ணன் கேட்டதும்,
தன்னிடம் உள்ளதைக் கேட்டதால்,
அவன் உளம் மகிழ்ந்தான் என  வில்லியார் உரைப்பதும்,
அவன் கொடைத் தன்மைக்கு மற்றோர் சான்றாம்.
♜♜♜

இங்கு ஓர் ஐயம் எழுகிறது.
கர்ணன் கொடையால் பெற்ற தருமத்தை,
அவனிடமிருந்து நீக்க,
மீண்டும் கொடை கேட்கிறான் கண்ணன்.
கொடையால் பெற்ற தருமத்தைக் கொடையாய்க் கொடுக்க,
அதனாலும் ஒரு தருமம் எய்தப்படுமன்றோ?
அத் தருமம், கர்ணனைக் காக்காதா?
வினா இதுவே.
வில்லியார் புலமை காட்டும் இடம் இஃது.
கர்ணன் செய்த, செய்கிற, செய்யப்போகிற,
அனைத்துத் தருமங்களையும் ஒன்றாக்கி வாங்குதற்காய்,
ஒன்றியபடி எனும் சொல்லிட்டு,
கண்ணன் வரம் கேட்டான் என வில்லியார் உரைப்பது,
கண்ணனின் மதிநுட்பத்திற்கு மட்டுமன்றி,
வில்லியார்தம் மதிநுட்பத்திற்கும் சான்றாம்.
♜♜♜

உயிர், உடம்பின் உள்ளேயோ புறத்தேயோ எனத் தெரியாது,
கலங்கிய அந்நிலையிலும்,
‘நீ, கேட்கும் பொருளெலாம் தரும் நிலையில்,
என்னிடம் வந்திலையே’ என வருந்துகிறான் கர்ணன்.
அவனுக்கு,
வந்த அந்தணனின் நோக்கம் புரிகிறது.
தன் கொடைப்பயன் முழுமையும் பெற,
இவன் வந்திருக்கிறான் என உணர்கிறான்.
ஒன்றியபடி கொடையைக் கேட்ட அந்தணனுக்கு,
தன் அறப்பயன் முழுமையையும் கொடுக்க விரும்புகிறான்.
செய்த அறப்பயன் முழுமையையும்,
கொடுப்பதால் விளையும் அறத்தினையும்,
ஈய நினைக்கிறான்.
எச்சமிலாது தன் முழு அறப்பயனும் அந்தணனைச் சேர வழி என்ன?
சிந்தித்த கர்ணன்,
கொடை வழங்கும் தன் வார்த்தைகளில்,
வினைத்தொகைச் சொல்லிட்டு,
முக்கால அறப் பயனையும் முழுமையாய் ஈந்து விடுகிறான்.

ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன் கொள்க நீ உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால்
புண்ணியம் இதனினும் பெரிதோ?

தமிழில் வினைத்தொகை என்றோர் இலக்கணம் உண்டு.
இவ் வினைத்தொகை முக்காலத்தையும் உள்ளடக்குமாம்.
ஊறுகாய், சுடுகாடு என்பவை,
இவ் வினைத்தொகைக்காம் உதாரணங்கள்.
ஊறியகாய்,  ஊறுகிறகாய், ஊறும்காய் என்றும்,
சுட்டகாடு, சுடுகிறகாடு, சுடும்காடு என்றும்,
இத்தொடர்கள்,
முக்காலத்தையும் உள்ளடக்கி விரிதலைக் காணலாம்.
கர்ணனும்,
செய் புண்ணியம் என வினைத்தொகைச் சொல்லிட்டு,
தான் செய்த புண்ணியம், செய்கிற புண்ணியம், செய்யும் புண்ணியம்,
அனைத்தையும் ஒருங்கே கண்ணனுக்கு வழங்கியதில்,
கர்ணனின் கொடை நுட்பத்தையும் மொழி நுட்பத்தையும்,
ஒருங்கே காண்கின்றோம்.
♜♜♜

ஒன்றியபடி எனச் சொல்லிட்டு,
அற முழுமையையும் கேட்ட அந்தணனுக்கு,
செய் புண்ணியம் என வினைத்தொகையால்,
முழு அறமும் ஈந்து பெருமை கொள்கிறான் கர்ணன்.
அறம் செய்தார் உலகில் உளர்.
அறத்தினையே அறம் செய்தவர்,
கர்ணனையன்றி யாருளர்?
♜♜♜

ஈகை, துறவின் முதல் நிலையாம்,
இல்லறத்தின் இறுதி நிலையாம்.
வள்ளுவக் கடவுள்,
ஈகை, ஒப்புரவு, புகழ் என இல்லறவியலை முடித்து,
துறவறவியலைத் தொடங்குகிறார்.
ஈகை, ஒப்புரவு எனும் சொற்கள் கொடையைக் குறிப்பன.
ஈகை, தனி ஒருவருக்குச் செய்யும் கொடை.
ஒப்புரவு சமூகத்திற்குச் செய்யும் கொடை.
நான், எனது என்பவற்றை நீக்குதலே துறவாம்.
தன் பொருளை மற்றார்க்குக் கொடுக்கும் கொடையில்,
‘எனது’ எனும் மமகார நீக்கம் வெளிப்படும்.
அதனாலேதான் அந்நிலை உற்றவர்,
துறவிற் கால் பதிக்கும் தகுதி பெறுகிறார்.
இந்த அடிப்படையை உணர்ந்ததாலேதான்,
துறவறவியலை அங்கிருந்தே ஆரம்பித்தனர் வள்ளுவரும்.
தன் உயிர்க்கு இறுதி வரும் எனத் தெரிந்தும்,
கொடையால் வந்த தருமத்தையும் கொடுக்கும் கர்ணன்,
‘எனது’ எனும் மமகாரத்தை மட்டுமன்றி,
‘நான்’ எனும் அகங்காரத்தையும் கடந்தவனாகிறான்.
அந்நிலையில்,
அவன் உளத்தில் உண்மை ஞானம் உதித்தல் வேண்டாமோ?
அறத்தினை அறமாய்க் கொடுத்ததுமே,
கர்ணன் உயர்நிலை உற்றான் என்பதற்கு,
சான்று தர நினைக்கிறார் வில்லியார்.
கொடை கொடுத்தவுடனேயே,
வந்த அந்தணனை நோக்கி,
உனக்குப் பூவில் வாழ் அயனும் நிகர் அலன்
என்று கர்ணன் உரைப்பதால்,
வந்த அந்தணனை, திருமால் என,
கர்ணன் உடன் உணர்ந்தான் எனும் உண்மை தெரிகிறது.
♜♜♜

கர்ணனின் கொடை கண்டு மகிழ்கிறான் கண்ணன்.
அவன் திருவிளையாடல் தொடர்கிறது.
‘நீர் வார்த்து அக்கொடை தருக’ என்கிறான் அவன்.
நீர் வார்த்து அளித்தல்,
முற்றக் கொடுத்தல் என்பதற்காம் குறியீடு.
அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும்,
‘கைகழுவுதல்’ எனும் மரபுத் தொடரும்,
இதனையே உணர்த்தும்.
கண்ணன் கேட்டதும்,
தன் இதயத்திற் பாய்ந்திருந்த அம்பின்வழி ஒழுகும் இரத்தத்தை,
நீராய் வார்த்துக் கொடை செய்கிறான் கர்ணன்.

என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச
இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான்
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கிக்
கைப் புனலுடன் தருக என்ன
அன்னவன் இதயத்து அன்பின்வாய் அம்பால்
அளித்தலும் அங்கையால் ஏற்றான்
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று
மூ உலகமும் உடன் கவர்ந்தோன்.

‘நின் கொடைத்தன்மை அறிவேன்.
முற்றும் தந்த உன்னை,
பற்று மீண்டும் பற்றாதிருக்க,
நீர் வார்த்து உன் புண்ணிய பாவங்களை,
முழுமையாய் என்னிடம் ஒப்படைப்பாய்’
எனும் குறிப்பை உள் நிறுத்தி,
கர்ணனைக் கண்ணன் பார்த்தமையை நமக்குணர்த்த,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி என,
பாடலடி அமைத்த வில்லியார் நுட்பம் வியக்கத்தக்கது.
கருத்தின்றிக் காணுதல் பார்த்தலாம்.
கருத்தோடு காணுதல் நோக்கலாம்.
அபயமும் வரதமும் கொண்ட திருமாலின் கைகள்,
கர்ணனின் கொடையைக் கௌரவிக்க,
அவன் முன் தாழ்ந்து வரம் கேட்டு நிற்கின்றன.
அளித்தலும் அங்கையால் ஏற்றான்
பக்தரான வில்லியார்,
திருமாலின் கை தாழ்ந்து நிற்பதைப் பொறுக்காமல்,
இங்ஙனம் திருமால் கரம் தாழ்ந்தது,
இரண்டு இடங்களில் மட்டுமே என்று உரைத்து,
தன்னைத்தான் சமாதானம் செய்து பாடலை முடிக்கிறார்.
அச் சமாதானத்தில் கர்ணனின் பெருமையும் வெளிப்படுகிறது.
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று
மூஉலகமும் உடன் கவர்ந்தோன்
♜♜♜

கரம் நீட்டி, வரம் கேட்டுப் பெற்ற கண்ணனின் மனம் கசிகிறது.
இறையான அவனும், தருபவனேயன்றிப் பெறுபவன் அல்லனே!
ஆதலால் கர்ணனின் கொடை கண்டு மகிழ்ந்த அவன்,
கர்ணனை நோக்கி ‘வேண்டிய வரங்கள் கேள் நீ!’ என்கிறான்.
அப்போதும் கர்ணன் தாழ்ந்தானில்லை.
இல்லையென்று இரப்போர்க்கு,
ஏழ்பிறப்பிலும்,
இல்லையென்று சொல்லாத வரம் வேண்டுகிறான்.

மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன்
மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப
சூரன் மா மதலையும் சொல்வான்
அல்லல் வௌ; வினையால் இன்னம் உற்பவம் உண்
டாயினும் ஏழ் எழு பிறப்பும்
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
இதயம் நீ அளித்தருள் என்றான்.


வினையால் பிறவி விளையினும் எனும்,
இப்பாடலில் வரும் கர்ணனின் ஐயக் கூற்றில்,
பிறவி விளையலாகாது எனும் வேண்டுதலைக் காண்கிறோம்.
மனம், மொழி, மெய் எனும் மூன்றால் செயல் விளையும்.
மனமே இம் மூன்றினதும் மூலமாம்.
அதனாலேயே அறம் செய விரும்பு! என,
ஒளவையும், மனத்தின் செயலாய் அறத்தை உரைத்தனள்.
அவ் அடிப்படையை உணர்ந்த வில்லியாரும்,
இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள்
எனக் கர்ணனைப் பேச வைக்கிறார்.
இல்லை என்பதில் செயலும்,
உரையா என்பதில் வாக்கும்,
இதயம் நீ அளித்தருள் என்பதில் மனமும் பொருந்த,
திரிகரண சுத்தியோடு கொடை வரம் கேட்ட,
கர்ணனின் பெருமை அறிகிறோம் நாம்.
♜♜♜

இல்லை என்றுரையாத இதயத்தை எழு பிறப்புக்குமாய் வேண்டும்,
கர்ணனின் பெருமையை நினைகிறார் வில்லியார்.
அவனின் இவ்வுயர்வுக்குக் காரணம் யாது?
வில்லியார் மனம் ஆராய்கிறது.
சூரியன் மைந்தனாம் தன்மையால்,
இக்கொடை உளம் விளைந்ததோ?
ஒப்ப மறுக்கிறது வில்லியார் உள்ளம்.
தந்தைக்குரிய கடனேதும் செய்யாத சூரியனை,
இவ்விடத்தில் கர்ணனின் தந்தையாய் உரைத்து,
அவனைப் பெருமை செய்ய வில்லியார் விரும்பினாரல்லர்.
யாரென்று தெரியாத குழந்தையை அன்பு செய்து போற்றி வளர்த்த,
தேரோட்டியாம் சூரனே,
இப்பிள்ளையின் பெருமையில் பங்கேற்கத் தக்கவன் என,
நினைந்த அவர்,
சூரியன் மதலையும் சொல்வான் என,
மோனைக்குக் குந்தகமின்றி வார்த்தையிட வழியிருந்தும்,
சூரன் மா மதலையும் சொல்வான் என்று,
ஓர்ந்து உரைத்தனர்.
♜♜♜

மும்மூர்த்திகளில் ஒருவரான கண்ணன்,
கர்ணனின் வரம் கேட்டு நெகிழ்கிறான்.
உறவாய் நினைந்து அவனை ஆரத்தழுவுகிறான்.
தன் கண்களில் சொரியும் நீரால் அவனைக் கழுவி,
‘எத்தனை பிறவி எடுக்கினும்,
ஈகையும், செல்வமும் உடன் எய்தப் பெறுவாய்.
முடிவில் முத்தியும் அடைவாய்’ என்கிறான்.
வில்லியார் கண்ணனின் மன நெகிழ்வை வெளிப்படுத்தவே,
முதன் முதலாய்,
கர்ணனை மைத்துனனாய் உறவு உரைத்து,
கண்ணனைப் பேசவைத்து,
பாடலைத் தொடங்குகிறார்.
♜♜♜

கண்ணனின் மனம் கருணையால் மலர்ந்தது என்பதைக் காட்ட,
மனமலர், கைத்தலமலர், கண்மலர் என்பனவாய்,
வில்லியார் இடும் தொடர்கள் விரிந்த இரசனைக்குரியவை.
ஈகை மனதைக் கர்ணன் கேட்க,
ஈகையோடு செல்வமும் ஈந்தனன் கண்ணன்.
மனதிற் கொடைவளம் கேட்டவனுக்கு,
செயலிலும் கொடைவளம் ஈகிறான் அவன்.
கொடுப்பவன் தெய்வமன்றோ!
முடிவில், முத்தியும் ஈய்ந்து முடிக்கிறான்.
♜♜♜

கர்ணனின் கொடையால்,
நான், எனது எனும் அகங்கார, மமகாரங்கள்,
நீங்கியது உண்மையாயின்,
அத்துறவால் அவன் முத்தி பெறுதலன்றோ நியாயம்.
இங்கு கண்ணனோ,
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள்
ஈகையும் செல்வமும் எய்தி
முத்தியும் பெறுதி முடிவில் என்கிறான்.
முத்தி பெறவேண்டிய கர்ணனுக்கு,
பிறவியைக் கண்ணன் வகுத்துரைத்தது எதனால்?
கேள்வி எழ,
மீண்டும் வள்ளுவத்துள் நுழையும் தேவை உண்டாகிறது.
துறவறவியலில், ‘ஞானம்’ எனும் பகுதியில்,
நான்கு அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாஅறுத்தல் என்பனவே,
அந் நான்கு அதிகாரங்களாம்.
நிலையாமை உணர்ந்து,
நான், எனது எனும் அகங்கார, மமகாரங்களைத் துறக்க,
மெய்யாகிய இறையை உணரலாம் என்பதோடு,
துறவறவியலை முடிக்காமல், அதன் பின்னர்,
அவாஅறுத்தல் அதிகாரத்தை வள்ளுவர் வகுத்தது ஏன்?
துறவு எனும் அதிகாரத்திலேயே அவாஅறுத்தல் அடங்கிற்றன்றோ.
இதற்கான விளக்கத்தைப் பரிமேலழகர் தருகின்றார்.
“துறக்கப்பட்ட புலன்கள் மேல்,
பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே.
அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம்”
பரிமேலழகர் தரும் மேல் விளக்கத்தால்,
முத்தி பெறுவார்,
அந்நினைவும் ஒழிந்தவராதல் வேண்டும் எனும்,
உண்மை உணர்கிறோம்.
அது நோக்கியே, மெய் உணர்தலின் பின்,
அவாஅறுத்தல் அதிகாரம் வைக்கப்பட்டதென்பது அறிக.
அகங்கார, மமகாரங்கள் ஒழித்த கர்ணனோ,
கொடைமேற் கொண்ட விருப்புந்த,
பழைய பயிற்சி வயத்தால் அதனை வரமாய் வேண்டியதால்,
அவனுக்குப் பிறவியும் நல்க வேண்டியதாயிற்று என்பதுணர்க.
♜♜♜

கர்ணனுக்கு வரம் கொடுத்தும்,
கண்ணன் மனம் ஆறவில்லை.
இன்னும் ஏதும் கொடுக்க அவன் மனம் விழைகிறது.
ஒப்பற்ற தன் விஸ்வரூபம் காட்டி கர்ணனை மகிழ்விக்கின்றான்.

போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப
புணரி மொண்டு எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும்
வயங்கு கைத்தலங்களும் ஆகி
கூற்று உறழ் கராவின் வாயின்நின்று அழைத்த
குஞ்சர ராசன்முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான் முடிவும்
தோற்றமும் இலாத பைந்துளவோன்.

அக்காட்சி கண்டு உருகுகிறான் கர்ணன்.
தன் பேறுகள் நினைந்து அவன் மகிழ்கிறான்.
‘உன் திருவடிகள் வணங்கப் பெற்றேன்.
உன் திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்.
ஒப்பற்ற உன் திருக்கரத்தால் தீண்டப் பெற்றேன்.
உணர்வுடன் உன் திருநாமம் உரைக்கப் பெற்றேன்.
யான் பெற்ற பெரும்பேறு எவர் பெற்றார்?’ என்கிறான்.

வான்பெற்ற நதி கமழ் தாள் வணங்கப் பெற்றேன்
மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன் பெற்ற துளாய் அலங்கல் களப மார்பும்
திருப் புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன்
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான் பெற்ற பெருந் தவப் பேறு என்னை அன்றி
இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே.

தொடர்ந்து, அர்ச்சுனனின் அம்பு பாய,
கர்ணன் மாள்கிறான்.

♜♜♜

பாரதத்தில் கண்ணபிரான் காட்டிய,
நான்கு விஸ்வரூபங்களுள்,
பயன் பெற்ற விஸ்வரூபம் இஃதே.
சகாதேவன் கண்ட விஸ்வரூபம்,
ஞானியான அவனுக்குத் தேவையற்றதாம்.
துரியோதனன் கண்ட விஸ்வரூபம்,
அஞ்ஞானியான அவனுக்குப் பயனற்றதாம்.
அர்ச்சுனன் கண்ட விஸ்வரூபம்,
பயனால் முழுமையுறாததாம்.
கர்ணன் கண்ட விஸ்வரூபமே,
தேவையும் பயனுமாய் முழுமையுற்றதாம்.
நான், எனது எனும் அகங்கார, மமகாரம் அகற்றி,
கண்ணனின் அருளுக்கு ஆளாகி,
அவனால் தூய்மையுற்று முக்திப் பேற்றையும் வரமாய்ப் பெற்ற,
கர்ணன் கண்ட விஸ்வரூபமே,
பயனுற்ற விஸ்வரூபம் என்பதில் ஐயமேது?
♜♜♜♜♜♜♜♜♜


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...