Friday, November 20, 2015

அரசியற்களம் 19 | ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
லகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
'குடுத்தார் பார் ஒரு குடுவை',
'உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்',
'மனுசன் சொன்னது அத்தனையும் சரி',
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
⋇⋇⋇

பல்குழுவும்  பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் ஒரு நாட்டுக்கு ஆகாது என்றான் வள்ளுவன்.
ஒன்றினோடு ஒன்று மாறுபட்ட பல குழுக்களும்,
ஒன்றாய் இருந்துகொண்டே பாழ் செய்கின்ற உட்பகையும்,
சந்தர்ப்பம் வந்தால் அரசனை அலைக்கழிக்கும் கொலைச் செயலுடைய குறும்பரும்,
இல்லாதிருப்பதே ஒரு நாட்டினுடைய இலட்சணம் என்பது இக்குறளினுடைய பொருள்.
நம் தலைமையோ வள்ளுவர் வேண்டாமென்று சொன்ன அத்தனையையும்,
உருவாக்கி வைத்திருக்கிறது.
⋇⋇⋇

நம் ஈழத்தமிழர் வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
ஆனால் அப்பழமையிலும் ஒரு புதுமை செய்கிறது நம் கூட்டமைப்பு.
முன்பு துரையப்பா, டக்ளஸ், பிள்ளையான், கருணா என,
மாற்றணியில் சேர்ந்தாரை எட்டப்பர்கள் என்றனர்.
இப்போது கூட்டமைப்பினர் தம் அமைப்புக்குள்ளேயே,
ஆளுக்காளை எட்டப்பராய் இனங்காட்டி மகிழ்கின்றனர்.
வெட்கப்படவேண்டிய புதுமை.
⋇⋇⋇

வேறுபட்ட அணிசார்ந்த பலபேரை உள்வாங்கி நின்ற கூட்டமைப்புக்குள்,
ஏற்கனவே உட்குத்துக்கள் பல நடந்துகொண்டிருந்தன.
வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது,
முக்கியமான முதலமைச்சர் பதவிக்கு,
ஏற்கனவே இருந்த அணிகளில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல்,
வெளியில் இருந்து கட்சிபேதமற்ற, அறிவாளியான, ஆளுமையுள்ள,
ஒரு பிரமுகரை  உட்கொணர்ந்தால்,
அவரால் கூட்டமைப்புத் தலைமை வலிமைபெறும் என்று நினைத்த,
சமூகத்தின் மீதான அக்கறையாளர்கள் பலர்,
அதற்குப் பொருத்தமானவர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனே என,
குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
⋇⋇⋇

இக்குரல் வெளிவந்ததும் அப்பதவிக்காய் ஆவலோடு காத்திருந்த,
கூட்டமைப்புக்குள்ளிருந்த சிலர்
போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் நீதியரசரும் அப்பதவியை ஏற்க மறுத்து நின்றார்.
பின்னர் பலரும் வற்புறுத்த, சற்று இறங்கி வந்து,
'எல்லோரும் ஒன்று சேர்ந்து அழைத்தால் வருகிறேன்' என்று அறிக்கை விட்டார்.
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது அழுத்தத்தின் பெயரில்,
கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து நீதிபதியை அழைக்க,
தனக்கிடப்பட்ட இடையூறில்லாத இராஜபாட்டையில் கம்பீரமாய் நடந்து வந்து,
அமோக வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானார் நீதிபதி.
இது நடந்து முடிந்த கதை.
⋇⋇⋇

தியாகம், போராட்டம், அரசியல் அனுபவம் ஏதுமின்றி,
அரசியலுக்குள் நுழைந்து, மிகச் சுலபமாகப் பதவியேற்ற நீதியரசர்,
கூட்டமைப்பைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்க,
இன்று அவரே கூட்டமைப்பின் உடைவுக்கு அத்திவாரம் போட்டிருக்கிறார்.
நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று!
⋇⋇⋇

கடந்த மூன்று தசாப்தங்களாக,
சண்டைக்கு மேல் சண்டையாகப் பார்த்து,
சண்டையே அரசியல் எனும் முடிவோடிருக்கும்,
நம்மில் பலரின் இயல்பறிந்து,
மாகாணசபைத் தேர்தலின்போதே,
'நாம் தொடங்கியிருப்பது மூன்றாங்கட்டப்போர்' என்பதாய் அறிக்கைவிட்டு,
சண்டைப்பிரியர்களின் ஆதரவை அள்ளிக் கொண்டார் நீதியரசர்.
பின்னர் பதவிக்கு வந்ததன் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில்,
முதலமைச்சரின் வாய்ச்சண்டைகள்,
பிரபாகரனின் போர்ச்சண்டைகளை விடப் புகழ்பெற்றன.
⋇⋇⋇

கவர்னருடன் சண்டை,
வடமாகாணசபைப் பிரதமசெயலாளருடன் சண்டை,
பின்னர் தமது கட்சிக்குள்ளேயே இருந்த,
முன்னாள் போராளிக்குழுக்களுடன் சண்டை,
பின் தனது அனாவசிய அறிக்கைகளால்,
புலம்பெயர் தமிழர்களுடன் சண்டை,
நமக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு அமைப்புக்களுடன் சண்டை,
ஜனவரி எட்டின் பின்னர் தமிழர் ஆதரவால் வெற்றி பெற்று,
உறவு கொண்டாடவந்த புதிய பிரதமருடன் சண்டை,
இங்ஙனமாய் முதலமைச்சரின் சண்டைப்பட்டியல் நீண்டு,
இப்போது தனைக்கொணர்ந்த கூட்டமைப்புடனேயே சண்டை எனும்,
சிகரம் தொட்டிருக்கிறது.
⋇⋇⋇

யாரும் சண்டை பிடித்தால் கைதட்டி மகிழ்ந்து,
கூடிக்கொண்டாடும் ஒரு கூட்டம்,
முதலமைச்சரின் முடிவில்லாச் சண்டைப்பட்டியலால் ஈர்க்கப்பட்டு,
'தலைவரென்றால் இவரல்லவோ தலைவர்!' என சிலிர்த்துநிற்கிறது.
அந்தக் கூட்டம்தான்,
கூட்டமைப்பின் தலைமையைப் பழி சொல்லி சுமந்திரனைத் தாக்கி,
முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையால் மகிழ்ந்து நிற்கிறது.
'நல்ல குடுவை', 'சப்பலடி', 'பேவெட்டு' என்பதாய்,
அவர்கள் காட்டும் மகிழ்ச்சியைக் காண நெஞ்சு பதறுகிறது.
⋇⋇⋇

தம்பியின் கழுத்தை அண்ணன் வெட்ட அதை ரசித்து,
'வெட்டென்றால் இதுவெல்லவோ வெட்டு',
'ஒரே வீச்சில் தலை எப்படி இரண்டாயிற்று பார்த்தாயா?'
'சேட்டை விட்டவருக்கு நல்லா வேணும் துலைஞ்சார்' என்பதாய்,
கொண்டாடும் இம்முட்டாள் கூட்டத்தைக் காண எரிச்சல் வருகிறது.
வென்றது அண்ணனோ தம்பியோ வீழ்ந்தது குடும்பம் என்னும்,
உண்மை புரியாத அறிவிலிகள் !
இவர்களைத்தாண்டி நம் இனம் எப்படி உருப்படப்போகிறது?
⋇⋇⋇

முதலமைச்சர் தனது அறிக்கையால்,
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவையும்,
மாகாணசபைக் குழுவையும் வெவ்வேறாய்ப் பிரித்து,
இரண்டும் வெவ்வேறு என்றாற்போல ஒரு உணர்வை உண்டாக்கி,
தான் தமிழரின் ஒரு தனித்தலைமை என்பதாய்,
ஒரு புதிய வியூகம் அமைத்துச் செயற்படத் தொடங்கியிருக்கிறார்போல் தெரிகிறது.
அதனாற்றான் சுமந்திரனால் குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்ட பின்னர்,
என்றுமில்லாத வகையில் தன் அமைச்சர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி,
ஜனாதிபதியைப் பார்க்க அழைத்துச்சென்றார் அவர்.
அண்மைக்காலமாக அமைச்சர்களை மாற்றவேண்டும் என்று எழுந்த,
கோரிக்கைகளைக் கண்டு, அஞ்சி இருந்த மாகாண அமைச்சர்கள்,
தம்மைக் கொணர்ந்த கட்சிக்குத் துரோகம் செய்து,
முதலமைச்சருக்குத் துணைசெய்து நிற்கின்றனர்போலும்.
முதலமைச்சரின் வியூகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி இது.
⋇⋇⋇

அது ஒருபுறம் கிடக்கட்டும்.
எனக்குத் தேவையற்ற விடயம் என்றாலும்,
முதலமைச்சரின் அறிக்கை கண்டு 'ஆஹா இதுவல்லவோ பதில்' என்று,
மெய்சிலிர்த்து நிற்கும் பொய்மையாளர்களின் கண் திறப்பதற்காக,
முதலமைச்சரால் வெளியிடப்பட்ட சுமந்திரனுக்கான பதில் அறிக்கை பற்றி,
சில சொல்லவேண்டியிருக்கிறது.
அது புத்திசாலித்தனமான,
மற்றவர்களை ஈர்க்கத்தக்க ஒரு பதிலறிக்கையேயன்றி,
உண்மையான, நேர்மையான ஒரு பதிலறிக்கையாய் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
⋇⋇⋇

'என் அன்புக்குரிய மாணவன் சுமந்திரன்' என்று தொடங்குவதிலிருந்து,
'அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக' என்று பிரார்த்தித்து முடிப்பதுவரை,
அவ் அறிக்கையில் அதிகம் உண்மைத்தன்மை இருப்பதாய்த் தெரியவில்லை.
கொழும்பில் இருக்கும்போதும், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போதும்,
ஏற்படும் மனஉணர்வுகளின் வேறுபாடுகளைச் சொல்லி,
'இவர் கொழும்பு மனிதர்' எனும் குற்றச்சாட்டிலிருந்து,
நாசூக்காய் வெளிவந்திருக்கிறார் முதலமைச்சர்.
இவை அவரது சட்டத்துறைசார்ந்த கெட்டித்தனங்கள்.
⋇⋇⋇

அதற்கப்பால் அவர் விட்டிருக்கும் நீண்ட அறிக்கையில்,
நாம் கவனிக்கவேண்டிய சிலவிடயங்கள் இருக்கின்றன.
அவ்விடயங்களும், அதுபற்றி நாம் சிந்திக்கவேண்டிய குறிப்புக்கள் சிலவும்,
கீழே தரப்படுகின்றன.

        மாகாணசபையில் தான் கொண்டுவந்த இன அழிப்புப் பற்றியதான அறிக்கையை ஆரம்பத்தில் ஆதரித்த சுமந்திரன் ஜனவரி எட்டின் பின்னர் அதைக் கொண்டுவர விரும்பவில்லை என்கிறார் முதலமைச்சர். இது முதல் விடயம்.

குறிப்பு:-
இதிலிருந்து இரண்டு விடயங்கள் தெரியவருகின்றன. ஒன்று இனஅழிப்புப் பிரேரணைக்குச் சுமந்திரன் எப்போதுமே எதிர்ப்பானவர் அல்லர் என்பது. இரண்டாவது ஜனவரி எட்டின் பின்னான மஹிந்தவுக்கு எதிரான புரட்சியில் தற்போதைய அரசும், கூட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்பட்டதால் அவர்களுடனான சமாதான முயற்சிக் காலத்தில் அதிகம் பகையை வளர்க்கவேண்டாம் என்று சுமந்திரன் நினைத்திருக்கலாம் என்பது. இவ்விரண்டும் அரசியல் உணர்ந்த எவராலும் சரி என்று ஒத்துக்கொள்ளபடக் கூடியவையே.                                                                                                                                                
         அவ் அறிக்கையை சுமந்திரன் எதிர்ப்பதற்கான காரணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான அவரது நெருங்கிய தொடர்பே என்பது முதலமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு. இது இரண்டாவது விடயம்.

குறிப்பு:-
ரணிலோடு சுமந்திரனுக்கு நட்பு இருக்கிறதோ இல்லையோ, முதலமைச்சருக்குப் பகையிருப்பது நிச்சயமாய்த் தெரிகிறது. அப்பகையின் காரணமாக ரணிலுக்கு இக்கட்டை ஏற்படுத்தவே முதலமைச்சரால் இனஅழிப்பு அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறதுபோல் தெரிகிறது. அன்றேல் அப் பிரேரணையை மாகாணசபையில் எப்போதோ கொண்டு வந்திருக்கலாம்.  ரணில் பதவியேற்றதும் சம்பந்தனோடும், சுமந்திரனோடும் முதலமைச்சரும் ரணிலைப் பார்க்கச்சென்றது அவரின் அறிக்கையூடாகவே தெரியவருகிறது. சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் ரணிலுடனான தனித்தொடர்பு இருந்திருந்தால்  அவர்களது முக்கியமான அந்தச் சந்திப்புக்கு முதலமைச்சரையும் அவர்கள் அழைத்துச்சென்றிருப்பார்களா?

         சுமந்திரனின் கட்சி இப்பதவியைத் தனக்குத் தரவில்லை என்றும், எங்கள் கட்சிக்கு நீங்கள் விசுவாசமாக நடக்கவேண்டுமென்று நிபந்தனையிட்டு எனக்கு இப்பதவியை வழங்கவில்லை என்றும் கூறியிருக்கும் செய்தி மூன்றாவது விடயம்.

குறிப்பு:-
முதலமைச்சரின் இக்கூற்று பொய்யானதும், முன்னுக்குப்பின் முரணானதுமாகும் என்பது வெளிப்படை. நீதியரசரை முதலமைச்சர் ஆக்குவதில் அந்நேரத்தில் உறுதியோடு இருந்தவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே. மற்ற அணியினரில் பலர் நீதியரசர் உள்வருவதையே விரும்பவில்லை. இறுதியில் சம்பந்தனின் அழுத்தத்தின் பெயரிலேயே அனைவரும் நீதியரசரைக் கொணர சம்மதித்தனர். முதலமைச்சரான பின்னும் அவருக்கும், கூட்டமைப்புக்குள் இருந்த முன்னாள் போராளிக்குழுக்களுக்கும் இடையிலான உறவு சிதைந்தேகிடந்தது. அமைச்சர்கள் தேர்விலும், சத்தியப்பிரமாண விடயத்திலும் முதலமைச்சர் மற்றவர்களின் கருத்துக்கு முரணாய், தன் இஷ்டப்படியே நடந்தார். அப்போது அவற்றால் எழுந்த சச்சரவுகள் அனைவரும் அறிந்தவை. அதுமட்டுமன்றி முதலமைச்சர், 'முன்னாள் போராளிக்குழுக்களோடு என்னால் இணைந்து இயங்க முடியாது' என வெளிப்படையாகவே அறிக்கைவிட்டார். இவையெல்லாம் நடந்து முடிந்த உண்மைகள். அப்படியிருக்க தன்னை இப்பதவிக்கு சுமந்திரனின் கட்சி கொண்டுவரவில்லை என்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விடயமே. தன்னை இவர்கள் பதவிக்குக் கொண்டு வரவில்லை என்று சொல்லிவிட்டு, எங்கள் கட்சிக்கு நீங்கள் விசுவாசமாக நடக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு எனக்கு இப்பதவியை வழங்கவில்லை என்கிறார். அப்படியானால் பதவி வழங்கியது அவர்களே என்பது வெளிப்படையாய்த் தெரிகிறதல்லவா? இது முரண்பாடு.

         பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்டவேண்டுமானால், அப்பணத்தைச் செலவழிக்கப்போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப்போய் கனேடிய மக்களிடம் கேட்டுப்பெறவேண்டுமே ஒழிய வடமாகாணசபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது? என்பது முதலமைச்சரின் கேள்வி. இது நான்காவது விடயம்.

குறிப்பு:-
இது நியாயமான கேள்வியே. ஆனால், ஒன்று இது நியாயமானால் மாகாணசபைத் தேர்தலுக்காக நிதிதிரட்ட முதலமைச்சரல்லவா சென்றிருக்கவேண்டும். சென்றாரா? அப்போது நிதி சேகரிக்க சம்பந்தனும், சுமந்திரனும் அல்லவா கனடா சென்றனர். முதலமைச்சர் இது எங்கள் தேர்தல். இதுக்காக நிதி சேகரிக்க நீங்கள் ஏன் செல்கிறீர்கள்? அதற்கு நாங்களே செல்கிறோம் என்று அப்போது ஏன் சொல்லவில்லை? அறிக்கையில் செலவழிக்கப்போகிறவர்கள் அதற்கு கணக்குக் காட்டப் போகிறவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகிறவர்கள்தானே பணம் சேர்க்க அங்கு செல்லவேண்டும் என்கிறார் முதலமைச்சர். அப்படியானால் மாகாணசபைத் தேர்தலுக்கு மாகாணசபை உறுப்பினர்களோ, முதலமைச்சரோ பணம் சேர்க்கச் சென்றனரா? அவர்களில் எவரேனும்தான் அப்பணத்தை இங்கு எடுத்துவந்தனரா?  அப்போது அப்ணத்திற்கான கணக்குக் காட்டப்பட்டதா? தன் வெற்றிக்கு வேறுயாரும் சென்று பணம் சேர்க்கலாம் அப்பணத்திற்குக் கணக்குக் காட்டாமல் விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு என்று   வரும்போது மட்டும் மேற்சொன்ன கேள்விகள் எழுப்பப்படுவதில்  என்ன நியாயம் இருக்கிறது?

         கனடா செல்லாததற்கு உடல்நலமே காரணம் என்கிறார் முதலமைச்சர். இது ஐந்தாவது விடயம்.

குறிப்பு:-
இவ்விடயத்திலும் உண்மை வெளிப்படுவதாய் இல்லை. ''உடல்நலம் இன்மையால்தான் மறுத்தேன். பின்னர் டாக்டர் அனுமதிக்க சென்றேன்'' என்று முதலமைச்சர் சொல்வதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனாலும் நலம் பெற்று அமெரிக்கா சென்றவர். அருகிலிருந்த கனடாவுக்குச் செல்லமுடியாதமைக்கான தடையை விளங்கமுடியவில்லை. உடல்நலக்குறைவோடு உயிரோடு இருக்கும் தனது ஒரே சகோதரிக்காய் லண்டன் செல்ல முடிந்தவருக்கு தன்னை ஆதரித்த ஒருலட்சம் தமிழருக்காய் கனடா செல்ல முடியாமல்போனது ஏன்? தமிழ்மக்கள் மீதும், தான் சார்ந்த கட்சி மீதும், அவர் கொண்ட அக்கறை இவ்வளவுதானா? உறவுக்கு அப்புறம்தான் இனமா? உயிரோடிருக்கும் ஒரே சகோதரி என்ற அழுத்தம் மற்றவர்கள் அனுதாபத்தைப் பெறவா? கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உடல்நலக்குறைவு, நம்பிக்கையின்மை, தன்னைக் கட்சி பாதுகாக்காமை என கனடா செல்லாமல் விட்டதற்கான பல காரணங்கள் முதலமைச்சரால் சொல்லப்படுகின்றன. முதலமைச்சரால் சொல்லப்பட்ட இம் முரண்பட்ட காரணங்களுக்குள் எது உண்மை என்பது கடவுளுக்கும், அவருக்கும் மட்டுமே தெரிந்திருக்க முடியும்.

      ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி அவர்களில் ஒருவருக்கு வாக்குப்போடுங்கள் என்று கேட்பது? என்கிறார் முதலமைச்சர். இது ஆறாவது விடயம்.

குறிப்பு:-
முன்பு நடந்த மகாணசபைத்தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலைப் போலவேதான் கூட்டமைப்பின் அனைத்துக்கட்சிகளும் போட்டியிட்டன. அப்போது மட்டும் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சரால் எப்படிக் கேட்க முடிந்தது?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறாமல்விட்டதற்கான காரணங்கள் என்று சிலவற்றை முதலமைச்சர் சொல்லுகிறார் அவற்றையும் ஒவ்வொன்றாய் ஆராயவேண்டியிருக்கிறது.

 ரணில் தன்னைத் தாக்கி அறிக்கைவிட்டபொழுது கூட்டமைப்புத் தலைவர்கள் ஏதும் சொல்லாததால்தான், தாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று சொல்லவில்லை என்கிறார். அதுபற்றி.......

குறிப்பு:-
அரசியலில் ரகசியம் பேணல் அவசியமான ஒன்று. அதனாற்றான் உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் பதவியேற்போர் ரகசியக்காப்புப் பிரமாணம் செய்யும் முறைமை இருக்கிறது. தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் தனிப்பட்ட நிலையில் உரையாடும் விடயங்களை பரகசியப்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமான செயலன்று. ரணில் 'இராணுவத்தை       வடக்கிலிருந்து வெளியேற்றுவேன்' என்று இவர்களுக்குச் சொல்லிவிட்டு அச்செய்தியை 'மறுநாள் மஹாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் போது மாற்றிச் சொல்வேன்' என்று சொன்னது நிச்சயம் தவறான விடயமல்ல. அங்கும் இராணுவத்தை வெளியேற்றுவேன் என்று அவர் சொன்னால் அது பேரினவாதிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கும். அவ் எதிர்ப்பு மஹிந்தவுக்கு ஆதரவைப் பெருக்கும். அதனாற்றான் அதை மாற்றிச் சொல்லப்போவதாய் ரணில் சொல்லியிருக்கிறார். இங்ஙனமாய் அவர் தனிப்பட்டுப் பேசியதைப் பகிரங்கப்படுத்தியது முதலமைச்சரின் அரசியல் அனுபவமின்மையையும், அநாகரிகத்தையுமே வெளிப்படுத்துகின்றன. 

தன் இனத்திற்கு மாறாக பிரதமர் பேசியதை நாமே வெளிப்படுத்துவது அவருக்கு எவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை முதலமைச்சர் நினையாமல் விட்டது பெருந்தவறு. கட்சியின் முதன்மைத் தலைவர்களோடு சென்ற தான் பிரதமர் பேசிய செய்தியை வெளியிடுவதானால் அவர்களோடும் கலந்து பேசவேண்டுமென்ற அடிப்படைகூடத் தெரியாமல் அசந்தர்ப்பமாய் தனிமையில் பேசிய பேச்சைப் பகிரங்கப்படுத்தியமை முதலமைச்சரின் குற்றம். அதனால் விளைந்ததே ரணிலுடனான பகை. அக்குற்றத்தைத் தான் செய்துவிட்டு தனக்குச் சார்பாய் சுமந்திரனும், சம்பந்தனும் பேசவில்லை என்பது எவ்விதத்திலும் நியாயமன்று. இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் கேட்கவேண்டியிருக்கிறது. பிரதமருடனான பகை, தமிழர்களிடம் கைதட்டு வாங்கித்தரும். தமிழர்களுக்கான காரியங்களைச் சாதிக்க விடுமா?

 தேர்தல் விஞ்ஞாபனத் தயாரிப்பில் கூட்டமைப்புத் தலைமைகள் தம்மோடு ஆலோசிக்கவில்லை என்பது முதலமைச்சர் சொல்லும் அடுத்தகாரணம். அதுபற்றி.......

குறிப்பு:-
கட்சித்தலைமைக்கு உட்பட்ட ஓர் பகுதியினரே மாகாணசபையில் அங்கம் வகிக்கின்றனர். ஆகவே அவர்கள் கட்சியின் தலைமைக்கு உட்பட்டவர்களே. இனம்பற்றியும், கட்சிபற்றியும் முக்கிய முடிவுகளை கட்சித்தலைமை சுயமாய் எடுப்பதில் எவ்விதத் தவறுமில்லை. இலங்கையின் எந்தப் பெரிய கட்சியும் தமது மாகாணசபை உறுப்பினர்களிடம் ஆலோசனை பெற்றபின்தான் தமது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவதாய்  வரலாறில்லை. தன்னை முதலமைச்சர் ஓர் தனித்தலைமையாய் கருதுவதால் வந்த கோளாறு இது. கட்சித்தலைமை தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று குற்றம் சொல்லும் முதலமைச்சர், இன அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றி ஐ.நா.சபைக்கு அனுப்புவது பற்றி கட்சித்தலைமையோடு ஆராய்ந்தாரா?

  பாராளுமன்ற வேட்பாளர் தெரிவில் கட்சித்தலைமை தம்மோடு ஆலோசியாமையை இன்னொரு காரணமாய்ச் சொல்கிறார் முதலமைச்சர் அதுபற்றி......

குறிப்பு:-
முதல் சொல்லப்பட்டிருக்கும் விளக்கமே இக்கேள்விக்கான விளக்கமுமாம்.

  அரசியல்த்தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை சுமந்திரன் ரகசியமாகப் பேணியமையை மற்றொரு காரணமாய் முதலமைச்சர் சொல்கிறார் அதுபற்றி......

குறிப்பு:-
அரசியல்த்தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் ரகசியம் பேணுவது தவிர்க்கமுடியாதது. இதுவரை காலமும் அமிர்தலிங்கமானாலும், புலிகளானாலும் அதனையே செய்தனர். அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்த கட்சித்தலைமை தனக்கு அதிகாரம் தந்ததாய் சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆகவே இவ்விடயத்தில் அவரைக் குற்றம் சாட்டுவதில் பயனில்லை.

  தகைமை, தரம், அறிவு, நேர்மை என்பவை உள்ள  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காமல் தான்தோன்றித்தனமாக பாராளுமன்ற உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுத்தமை தாம்  நடுநிலைவகித்த காரணங்களில் ஒன்று என்பது முதலமைச்சரின் அடுத்த நியாயம். அதுபற்றி..............

குறிப்பு:-
முதலமைச்சர் தனது இப்பேட்டியிலேயே மாகாண சபை அமைச்சர்களைத் தான் தேர்ந்தெடுத்தபோது, அரசியல் பின்னணிகளால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே தான் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்லியிருக்கிறார். அதே நிலை கூட்டமைப்பின் தலைமைக்கும் இருந்திருக்கும் என்பதை அவர் உணரத்தவறியது ஏன்? அதற்கு மேலே, கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்தோன்றித்தனமாய்த் தகுதிபாராமல் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையாயின், அங்ஙனம் தகுதியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்னின்னார் என அடையாளங்காட்டி அவர்கள்  பெயர்களை  முதலமைச்சர் வெளியிடவேண்டுமல்லவா? வெளியிடுவாரா?

       நாட்டின் ஜனாதிபதி, நடந்து முடிந்த தேர்தலில் நடுநிலை வகிக்கலாம் என்றால்     நான் ஏன் வகிக்கக் கூடாது? என்பது முதலமைச்சரின் அடுத்த நியாயம்.           அதுபற்றி.

குறிப்பு:-
ஜனாதிபதி ஒரு தேசத்தின் அதிகாரமிக்கத் தலைவர். அதே நேரத்தில் ஒருகட்சியின் தலைவராயும் அவர் இருந்தார். நாட்டுச் சூழ்நிலையால் அதுவரை பகையாய் இருந்த மற்றைய பெருங்கட்சி இவரது கட்சியோடு இணைந்து அரசமைக்கும் நோக்கத்தில் தேர்தலில் போட்டியிட நினைத்ததால் அந்த மாற்றுக்கட்சியினர் ஜனாதிபதி தனது அதிகாரத்தை தனது கட்சியின் வெற்றிக்குப் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டாமல் இருப்பதற்காகவே அவர் நடுநிலை வகித்தார். முதலமைச்சருக்கு மேற்சொன்ன இடைஞ்சல்கள் ஏதும் இருக்கவில்லை. எனவே ஜனாதிபதியின் நடுநிலைமையும், முதலமைச்சரின் நடுநிலமையும் ஒன்றாய்க் கருதத்தக்கதல்ல.
          
அது தவிரவும் தன்கட்சி வேட்பாளர் சிலர் மீதான அதிருப்தியும் மாற்றுக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் உள்நோக்கமும் ஜனாதிபதியின் நடுநிலைக்குள் மறைந்துகிடந்தது. தானும் ஜனாதிபதிபோல் நடுநிலைவகித்தேன் என்று முதலமைச்சர் சொன்னதிலும் மேற்சொன்ன சூட்சுமங்கள் இருப்பதாய் நாம் கொள்ளமுடியுமா?

   வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று பொதுப்படையாகவே தான்     சொன்னதாய் சொல்கிறார் முதலமைச்சர். அதுபற்றி.......

குறிப்பு:-
இதுபற்றி நீதியரசர் சொல்லியிருப்பதை வெளிப்பட எவரும் மறுக்கமுடியாது. ஆனால் உள்ளுணர்வு மிக்கவர்களுக்கு அவர் கூற்றினுள் இருக்கும் சூட்சுமம் புரியாமல் இருக்க நியாயமில்லை. வீட்டைவிட்டு வெளியே வராமல் எங்ஙனம் வாக்களிக்க முடியும்? அங்ஙனம் இருக்க, 'வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்' என்ற அவருடைய தேவையற்ற கூற்று எதற்காகச் சொல்லப்பட்டது? இத்தனைக்கும் முதலமைச்சர் தனது எந்த அறிக்கையையும் எழுதாமல் வெளியிடுபவர் அல்லர். இந்தச் சின்னவிடயம் கூடவா அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கும்?

▉ மாற்றுக்கட்சிகளுக்கு ஆதரவளிப்பீர்களா? என்று வெளிநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு - கூட்டமைப்பை விட்டு எந்தக்கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - இதுவரை அவ்வாறுதான் இருந்து வருகிறேன் என்று பதிலளித்ததாய்ச் சொல்லியிருக்கிறார் அது பற்றி....

குறிப்பு:-
பொதுப்படப் பார்த்தால் இவ்விடைகள் சரியானவையே. ஆனால் கூர்ந்து நோக்குபவர்களுக்கு முதலமைச்சர் இதில் வைத்திருக்கும் 'பொடியும்' விளங்கவே செய்யும். மாற்றுக்கட்சிக்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, 'மாட்டேன்!' என்ற சுலபமான பதில் இருக்க, நீளமாய் சுற்றி வளைத்து முதலமைச்சர் பதில் சொன்னது ஏன்? இதுவரை அவ்வாறு தான் இருந்து வருகிறேன் என்றால் இனி மாறும் வாய்ப்பு இருக்கிறது என்ற பதிலும் அத்தொடருக்குள் இருப்பது முன்னைநாள் நீதியரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் தெளிவுபோல் இருக்கும் குழப்பமான பதில்களே.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் முதலமைச்சரானாலும் சரி சுமந்திரனானாலும் சரி முக்கியமான விடயங்கள் பற்றியெல்லாம் நம்மக்கள் மத்தியில் சொல்லாமல் வெளிநாடுகளிலேயே சொல்லுகின்றனர். இவர்கள் மனதில் மண்ணில் வாழும் மக்கள்மீதான மதிப்பு இவ்வளவுதானா?


இப்படியாய் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால்,
முதலமைச்சரின் அறிக்கை சரிபோல் இருக்கும்  அறிக்கையே தவிர,
சரியான அறிக்கை அல்ல என்பது தெளிவாகிறது.
இதனை முதலமைச்சரைச் சங்கடப்படுத்துவதற்காக இவ்விடத்தில் நான் ஆராயவில்லை.
ஏதோ கிடைத்தற்கரிய விடயம் கிடைத்துவிட்டதாயும்,
இவரைத்தவிர மற்றெல்லோரும் துரோகிகள் என்பதாயும்,
கூக்குரலிட்டு வரும் ஏமாளிகளைத் தெளிவுபடுத்தவே இவற்றை எழுதினேன்.
இவர்களின் சண்டைபற்றி உண்மையில் எனக்கு எந்தக் கவலையுமில்லை.
அது கட்சி பார்த்துக் கொள்ளவேண்டிய விடயம்.
என் கவலையோ வேறு. அது பற்றிச் சொல்கிறேன்
⋇⋇⋇

தமிழ்மக்கள் கூட்டமைப்பைப் பெரும்பான்மையாக வெற்றிபெற வைத்தது,
அவர்கள் பேரினத்தாரோடு பேசி,
நமக்கான உரிமையைப் பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகவே.
ஆனால் இன்று கூட்டமைப்பினர் அந்த வேலையை விட்டுவிட்டு,
தமக்குள் மோதுவதையே தமது முதன்மை வேலையாய்,
செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தம்மை நம்பிய இனத்திற்குச் செய்யும் பெருந்துரோகம்.
⋇⋇⋇

இதே குற்றச்சாட்டு முதலமைச்சருக்கும் உரியதாகிறது.
ஒன்றுபடுத்த வரவழைக்கப்பட்டவர், வேறுபடுத்துவதில் எந்த நியாயமுமில்லை.
இதுவரை கூட்டமைப்புக் கட்சிகளுக்குள் பல மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் 'மாற்றணியுடன் இவர் சேரப்போகிறார்' என்ற வகையிலான குற்றச்சாட்டு,
இதுவரை கூட்டமைப்பின் எந்தத் தலைவர்மீதும் பாய்ந்ததில்லை.
ஆனால், முதலமைச்சர் அரசியலுக்குள் நுழைந்த இரண்டே வருடத்தில்,
அத்தகைய ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
அது உண்மையோ, பொய்யோ,
அத்தகைய ஒரு நிலைமைக்கு அவர் ஆளானதே,
வருத்தத்திற்குரிய விடயந்தான்.
⋇⋇⋇

ஆயிரந்தான் அதிக வாக்குககளால் வெற்றி பெற்றாலும்,
ஒருவர், தான் சார்ந்த கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதே கண்ணியம்.
தான் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் அல்லர் என்று சொல்லும் முதலமைச்சர்,
அக்கட்சியின் சின்னமான வீட்டுச்சின்னத்தில் நின்றே தேர்தலில் வெற்றி பெற்றார்.
அவர் பெற்ற வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகள்,
அச்சின்னத்திற்குரியவை என்பதை அவர் மறுக்கமுடியாது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில்,
முதலமைச்சர் மறைமுகமாய் கூட்டமைப்புக்கான,
தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோதும்,
வேறொரு கட்சிக்கான ஆதரவு நோக்கியே,
முதலமைச்சர் இங்ஙனம் நடந்து கொள்கிறார் என்ற செய்தி,
பரவலாகப் பேசப்பட்டபோதும்,
மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தது என்பதை,
முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
முதலமைச்சரின் நிராகரிப்பை மீறி,
தமிழ்மக்கள் தமது ஆதரவை கூட்டமைப்புக்கு முழுமையாய்  வழங்கியமையையும்,
முதலமைச்சர் ஆதரவளிப்பதாய்ப் பேசப்பட்ட கட்சி,
ஒரு இடத்தைக்கூட பெறமுடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டமையையும்,
ஏனோ முதலமைச்சர் சிந்திக்கத் தவறுகிறார்.
அவற்றைச் சிந்தித்தால்,
தனது வெற்றியின் பின்னணியில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னம் இருந்ததை,
அவர் மறுக்காமல் ஒத்துக் கொள்ளவேண்டிவரும்.
⋇⋇⋇

முன்னாள் போராளிக்குழுக்களோடு,
என்னால் சேர்ந்து இயங்க முடியாது என்று
ஆரம்பத்தில் வெளிவந்த முதலமைச்சரது அறிக்கை,
தான் தமிழரசுக்கட்சியோடு மட்டுமே இயங்கமுடியும்,
என்பதைத்தானே சொல்லியது.
இப்போது இம்முரண்பாடு ஏன்?
⋇⋇⋇

கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன.
முக்கியமான பிரச்சினை,
தமிழ்மக்கள் உங்களுக்கிடையிலான சண்டையைப் பார்க்க,
உங்களைக் கொண்டுவரவில்லை.
இனப்பற்றில்லாத வேலையற்றவர்கள் சிலர்.
உங்களது சண்டையை ஊக்குவிக்கலாம்.
ஆனால், பொறுப்புணர்ச்சியுள்ள எவராலும்,
இக் கீழ்மைச் செயல்களை ரசிக்கமுடியாது.
உடனடியாக உங்களுக்குள் பேசி,
உங்கள் உட்பகையை நீக்காவிட்டால் தமிழ்மக்கள்,
அடுத்த தேர்தலில் தங்கள் வாக்குப்பலத்தால்,
உங்களுக்கான பதிலைச் சொல்லத் தயங்கமாட்டார்கள்.
⋇⋇⋇

முடிவாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு,
ஒன்றைச் சொல்லவேண்டியிருக்கிறது.
அதுவும் சரி இதுவும் சரி என்பது,
ஒருநாளும் தலைமைக்குரிய இலட்சணமாகாது.
அனுபவத்தாலும், ஆற்றலாலும்,
பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதே,
தலைமை இலட்சணங்களுள் தலையாய இலட்சணம்.
உங்களால் தான் இந்தப்பிரச்சினை இவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது.
தேர்தலில் நடுநிலைமை வகிக்கப்போகிறேன் என்று,
முதலமைச்சர் சொன்னபோதே, நீங்கள் அதுபற்றி அவரிடம் விசாரித்திருக்கவேண்டும்.
தேர்தலில் நேரத்தில் குழப்பம் வேண்டாமென்று பிரச்சினையைத் தள்ளி வைத்தீர்கள்.
தேர்தல் முடிந்த பிறகாவது அதுபற்றிய விசாரணையை நீங்கள் செய்திருக்கவேண்டும்.
முதலமைச்சரின் மனக்குறைகளைக் கேட்டு தெளிவுபடுத்தியிருக்கவேண்டும்.
நாளை, நாளையென நீங்கள் தள்ளிப்போட்டதால் வந்த விளைவுதான்,
இன்றைய பிரச்சினையின் விரிவு.
⋇⋇⋇

உங்கள் இனத்தின் பிரச்சினையையும்,
உங்கள் கட்சியின் பிரச்சினையையுமே தீர்க்க முடியாத நீங்கள்,
இப்போது எதிர்கட்சித்தலைவராய்,
ஒட்டுமொத்தத் தேசத்தின் தலைமையையும் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
உலகமும், எதிரிகளும் கைகொட்டிச் சிரிக்கும் முன்னர்,
உடனடியாக இப்பிரச்சினைகளுக்கு முடிவு காணுங்கள்.
இல்லையேல் கூட்டமைப்பு உடையும்.
நம்மினத்தின் ஒற்றுமை உடையும்.
நம் எதிர்காலம் உடையும்.
இப்போதே ஆனந்தசங்கரி ஐயாவும், கஜேந்திரகுமாரும்,
முதலமைச்சரை வரவேற்று வலைவீசத் தொடங்கிவிட்டனர்.
இனத்தின் உடைவு எதிரிகளின் பலம்.
இன்னொரு முறை எதிரிகளுக்கு,
நாமே விருந்து வைக்கும் அநியாயத்தை,
தயவுசெய்து தடுத்து நிறுத்துங்கள்.
ஒட்டுமொத்த இனத்தினதும், உங்கள் கட்சித்தலைமையினதும்,
அத்திவாரம் ஆடத்தொடங்கியிருக்கிறது.
அதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு.
⋇⋇⋇⋇⋇⋇⋇⋇⋇

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...