•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, December 1, 2015

அதிர்வுகள் 20 | “பெரியமாமி”

ங்களுக்கு இவ்வார அதிர்வில்,
எனது உறவினர் ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.
அப்படி என்ன? அவர் அவ்வளவு முக்கியமானவரா?
பெரிய அறிவாளியா? சமூகத்தொண்டரா?
சமய அறிஞரா? பெரும் பதவி வகித்தவரா?
கேள்விகள் அடுக்கி நீங்கள் புருவம் உயர்த்தி வினவுவது தெரிகிறது.
ஆச்சரியப்படாதீர்கள் நீங்கள் சொன்ன எந்த வகையிலும் அவர் சேரமாட்டார்.


❈❈❈

நீங்கள் குறிப்பிட்டவர்களிடம்தான்,
படிப்பினைகள் இருக்கும் எனும் உங்களது எண்ணம் தவறானது.
சிலவேளைகளில் சாதாரணமானவர்கள் கூட,
தமது செயல்களால் நமது உள்ளத்தில் ஆழப்பதிந்து விடுகிறார்கள்.
பல விடயங்களை ஆழப்பதித்தும் விடுகிறார்கள்.
அந்தச் சாதாரணமானவர்களிடமும்,
மற்றவர்களிடம் இல்லாத சில தனித்தன்மைகளும்,
நம்மை வியக்க வைக்கிற போதனைகளும் பொதிந்தே கிடக்கின்றன.
சில விடயங்களைப் பார்க்கிற விதத்தில் பார்க்கிற கண்கொண்டு பார்த்தால்,
போதனை எல்லா இடத்திலும்தான் இருக்கிறது.

❈❈❈

அந்த அடிப்படையில்தான்.
எனது பெரியமாமியை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன்.
எனது அப்பாவிற்கு மூன்று தங்கைகள்.
அவர்களில் மூத்தவரைத்தான் ‘பெரியமாமி’ என்று நாங்கள் அழைப்போம்.
தங்கையருள் பெரியவர் என்பதால் வந்த காரணப்பெயர் அது.
கம்பீரம், கண்டிப்பு, கண்ணியத்தோற்றம் என்பன,
மாமியின் பெயர் சொன்னதும் நினைவில் வரும் விடயங்கள்.
அப்பாவிற்கு அவர் தங்கையானாலும்,
ஒரு தமக்கைபோல் தான் அவருக்கு மரியாதை கொடுத்து அப்பாவே நடப்பார்.
எங்கள் குடும்பம் முழுவதும் ஒருவருக்குப் பயப்பிடுகிறதென்றால்,
அது பெரியமாமிக்காகத்தான் இருக்கும்.

❈❈❈

எண்ணெய் வைக்க விரும்பாத நான் எண்ணெய் வைத்துக்கொள்வதும்,
கீரை சாப்பிட விரும்பாத அண்ணன் விழுங்கி விழுங்கிக் கீரை சாப்பிடுவதும்,
கண்ணுக்கு மை போட்டுக்கொள்ள விரும்பும் எனது சகோதரிகளும், மச்சாள்மாரும்,
பட்டும்படாமலும் மெலிதாய் மை போட்டுக்கொள்வதும்,
சேலைத் தலைப்பை மறுபக்கமாய் இழுத்து மார்பை மூடிக் கொள்வதும்,
மாமியின்மேல் இருந்த பயத்தால் நடந்த செயல்கள்.

❈❈❈

இத்தனைக்கும் மாமி ஒன்றும் பெரிதாய்ப் படித்தவரும் அல்லர்.
ஆனாலும், அவரிடம் இயல்பான ஒரு கம்பீரம் இருந்தது.
மேற் சொன்னவற்றை வைத்து,
மாமியை ஒரு பிற்போக்குவாதியாய் நீங்கள் கருதினால்,
தவறு செய்தவர்கள் ஆவீர்கள்.
மேலே படித்தால் நீங்களே அவர் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.

❈❈❈

மாமியின் கணவரான பெரியமாமாவைப் பற்றியும்,
உங்களுக்குக் கொஞ்சம் சொல்லவேண்டும்.
ஐம்பதுகளிலேயே கப்பலில் போய்.
லண்டனில் படித்து என்ஜினியர் ஆனவர் அவர்.
இங்கு ஒரு பெரும் பதவியிலிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு வெள்ளைக்காரர் போலவே,
அவரது நடையுடை பாவனைகள் இருக்கும்.
வீட்டிலிருக்கும் போது ‘பிஜாமா’ சேட்டும்,
அதே துணியில் சாரமும் உடுத்திருப்பார்.
பெரும்பாலும் அவரது கையிலோ, வாயிலோ,
புகைபிடிக்கும் ‘பைப்’ எப்போதும் இருக்கும்.
அது அந்தக்கால பெரிய மனிதர்களின் ‘ஸ்ரயில்’.
எப்போதாவது அரை அடி நீளத்திலிருக்கும்,
மேலைநாட்டு சுருட்டும் பிடிப்பார்.

❈❈❈

மாலை நேரமானால் சம்பிரதாயப்படி,
 ‘விஸ்கியோ, பிறண்டியோ’ குடிப்பது மாமாவின் வழக்கம்.
அதென்ன சம்பிரதாயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
தனிக்கண்ணாடி மேசையில் ஏதாவது ஒரு மதுப்போத்தல்,
பக்கத்தில் ‘பிளேன்’ சோடா அல்லது ‘டிஸ்ரில் வோட்டர்’,
பொரித்து மேலைநாட்டுப் பீங்கானில் அழகாக அடுக்கப்பட்ட,
‘சொசேஜ்’ அல்லது இறால் பொரியல் அல்லது முட்டைப் பொரியல்.
அதனோடு தொட்டுக்கொள்வதற்காய் அருகில் ‘சோஸ்’ போத்தல்,
அவற்றைப் பிரித்தெடுத்து உண்பதற்காய்,
முள்ளுக்கரண்டியும், சிறு கத்தியும் என,
இத்தனையும் முறைப்படி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதில் ஒன்று தவறினாலும் மாமாவுக்குக் கோபம் வந்துவிடும்.

❈❈❈

மாலை ஏழு மணியானால் மாமா வந்து உட்காருவார்.
அழகான ‘கிளாஸில்’ பொன்னிறமான மதுவைக் கலந்து,
நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு ‘சிப்’ பண்ணி, ‘சிப்’ பண்ணி,
இடையிடையே ‘சைட் டிஸ்’ துணையோடு,
அவர் குடிக்கும் விதமே தனி அழகுதான்.
இரவு எட்டு ஒன்பது மணிவரை அவரது இந்தக் குடிக்கிரியை நீளும்.
அவர் குடிக்கும் முறையில்,
தவறு செய்வதான குற்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இருக்காது.
பெரிய மனித வாழ்வுக்கான அந்தஸ்துப் பதிவுதான் இருக்கும்.
இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரும் குடிகாரரல்லர்.
அந்தக் ‘குடிச்சம்பிரதாயத்தை,’
மாமா தனது அந்தஸ்துக்கான அடையாளமாய்ப் பேணுவார் அவ்வளவுதான்!
இந்தக் குடிக்கிரியையில் மாமியும் இணைந்தாக வேண்டும் என,
மாமா கட்டாயப்படுத்துவார்.
மாமாவின் திருப்திக்காய் மெலிதாய் அக்குடிக்கிரியையில்,
எல்லை மீறாது இணைந்து கொள்வார் மாமி.

❈❈❈

பெரும் பெரும் மனிதர்கள் எல்லாம் மாமாவைத்தேடி வந்துபோவார்கள்.
அப்படிப்பட்ட கம்பீரமான மாமா கூட,
பெரியமாமியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடப்பார்.
மாமாவின் வெள்ளைக்காரத்தனத்தைச் சொன்னதும்,
மாமியையும் ஒரு நாகரிகப் பெண்மணியாய்க் கற்பனை பண்ணியிருப்பீர்கள்.
அதுதான் இல்லை! மாமி முழுக்க முழுக்க எங்களது பண்பாட்டில் ஊறியவர்.
சீலையைத் தவிர அவர் வேறு உடை உடுத்தி நான் கண்டதில்லை.
காதிலும் மூக்கிலும் வைரம் எப்போதும் மின்னும்,
நெற்றியில் எப்போதும் புளியங்கொட்டை அளவான,
குங்குமப்பொட்டு தவறாமல் இருக்கும்.

❈❈❈

அவரது ஒவ்வொரு அசைவிலும்,
பெண்மைக்கே உரிய மென்மை பதிவாகியிருக்கும்.
வீட்டில் தமிழிலும், மாமாவிடம் வரும் விருந்தாளிகளிடம் ஆங்கிலத்திலும்,
சரளமாகப் பேசுவார்.
இரண்டு பாஷைப் பிரயோகத்திலும் எப்போதும் நாகரிகம் தெறிக்கும்.
மாமாவின் பதவிக்கேற்ற பெருமிதத்தோடு வாழ்ந்தாலும்,
வீட்டுக்குள் எளிமையும், சிக்கனமும் பண்பாடும் பேணும்,
தமிழ்ப்பெண்ணாய்த்தான் அவர் வாழ்ந்தார்.
மாமாவின் நாகரீகப் போக்கு அனைத்திற்கும்,
தமிழ்த் தோற்றத்துடன் இருந்தபடி ஈடுகொடுப்பார்.
சுருங்கச் சொல்வதானால்,
காவியக் கண்ணகியும், குயின் எலிசபெத்தும் கலந்த,
ஓர் அற்புதக் கலவை அவர்.

❈❈❈

சொந்த மச்சானான தனது கணவரை,
‘பெரிய மச்சான், பெரிய மச்சான்’ என மாமி அழைக்கும் அழகே தனி.
அந்தக்காலத்தில், அவர்களிடம் நிறைந்திருந்த செல்வம் கண்டு வியந்திருக்கிறேன்.
மாமியின் அறைக்குள் நான்கு அலுமாரிகள் நிறைய,
காஞ்சிபுரச் சீலைகள் அடுக்கப்பட்டிருக்கும்.
மாமி விசேஷங்களுக்கு வெளிக்கிட்டுச் செல்லும் அழகே அழகு.
பளபளப்பான காஞ்சிபுரம் உடுத்து,
உடுத்த சேலை நிறத்திற்கேற்ப கற்கள் பதித்த நகைகள் போட்டு,
காது, மூக்குகளில் வைர ஜொலிப்போடும், பெரிய குங்குமப்பொட்டோடும்,
மாமி வெளிக்கிட்டு வந்தால், கையெடுத்துக் கும்பிடலாம் போலிருக்கும்.

❈❈❈

எங்கள் அம்மாவின் ஊர் ஒரு கிராமம்.
அங்குள்ளவர்களுக்கு பெரியமாமி என்றால் அப்படி ஒரு மரியாதை.
அங்கெல்லாம் செத்தவீடு நடந்தால்.
ஊரிலுள்ள பெண்கள், தாம் சுமங்கலிகளாக இருந்தபோதும்,
மெல்லிய நிறத்தில் புடவை உடுத்தி,
தாலியும் பொட்டும் அணியாமற்தான் அங்கு போவார்கள்.
பொட்டிழந்து நிற்கும் ஒரு பெண்ணின் முன்னால்,
தாம் சுமங்கலிக் கோலத்தில் சென்று,
அவளைச் சோகமுறச் செய்யக்கூடாது என்பதற்கான,
நாகரிக ஏற்பாடு அது.

❈❈❈

ஆனால், அங்கும் பெரிய மாமி,
காஞ்சிபுரத்தோடும், நகையோடும், பொட்டோடும்தான் வருவார்.
பெரிய காரில் மாமி வந்து இறங்கியதும்,
அதுவரை முக்கியப்பட்டிருந்த பிரேதம் அனாதையாய்ப் போய்விடும்.
அத்தனை பேர் பார்வையும் மாமியிற்தான் நிற்கும்.
பெரிய மச்சாள் உடுத்த சீலை! பெரிய மச்சாள் போட்ட நகை!
பெரிய மச்சாள் வைச்ச பொட்டு! பெரிய மச்சாள் வந்த கார் என,
அன்று முழுக்க உறவு பெரியமாமியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கும்.
இத்தனை பேர் கவனிப்பிலும் சிறிதும் ஒட்டாதவராய்,
அழுங்காமல் நழுங்காமல் ஓர் அரசியல் தலைவியைப் போல,
மாமி வந்து உறவு பேணிச்செல்வார்.

❈❈❈

பெரியமாமிக்கும் மாமாவுக்கும் இடையில் இருந்த,
உறவு நிலை பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.
அவர்களுக்கு நான்கு ஆண்பிள்ளைகள். ஒரு பெண்பிள்ளை.
நான்கு ஆண்பிள்ளைகளும் என்ஜினியர்கள்.
சில பேர் ஆகினார்கள். சில பேர் ஆக்கப்பட்டார்கள்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபொழுது,
அவர்களெல்லாம் இளந்தாரிகள்;.
பிள்ளைகள் தோளுக்கு மிஞ்சி வளர்ந்த பிறகும்,
மாமாவும், மாமியும் இளம் காதலர்கள் போல்தான் நடந்து கொள்வார்கள்.
வார்த்தைகளில் அன்பைக் கொட்டி,
செல்லம்கொஞ்சி அவர்கள் உரையாடுகையில்,
நாங்கள் எல்லாம் வெட்கத்தால் தடுமாறுவோம்.
மதிய நேரங்களில் ஓய்வெடுக்கவென,
வீட்டு ‘ஹோலின்’ நடுவில் மெத்தை போட்டு மாமா படுத்திருப்பார்.
அவரது தோளில் மாமி படுத்திருக்க.
கைகளால் மாமியை வளைத்தபடி மாமா தூங்குவார்.

❈❈❈

ஒரு முறை மாமி, ‘பிள்ளைகள் வளந்திட்டாங்கள்,
இனி நாங்கள் இப்படி படுத்திருக்கிறது சரியில்ல’ என்று சொன்னாராம்.

நோ, நோ, நோ, நாங்கள் இப்படித்தான் இருக்கவேணும்,
அப்ப தான் பெடியலும் எங்களப் பாத்து,
தங்கட பெஞ்சாதிமாரோட அன்பாய் இருப்பாங்கள்’ என்றாராம் மாமா.
அவர்களுக்கிடையிலான நெருக்கம் கண்டு,
எங்கள் உறவு முழுவதும் வியந்திருக்கிறது.

❈❈❈

தனது ஐம்பத்தேழாவது வயதில்,
ஒருநாள் மாமா திடீரென ‘ஹாட் அற்றாக்கில்’ இறந்து போனார்.
அப்படியோர் செத்தவீட்டை நான் என் வாழ்க்கையில் கண்டதில்லை.
வீட்டினுள் மாமாவின் பிரேதம் கிடத்தப்பட்டிருக்க,
பெரியமாமி நெருப்பில் இட்ட பூவைப்போல,
பெரிய மச்சான், பெரிய மச்சான்’ என்று சொல்லிச் சொல்லி,
துவண்டு நின்ற காட்சி இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.
பதறித் துடித்து நாங்கள் அங்கு போனபோது.
மாமி எங்களையெல்லாம் கட்டிப்பிடித்து,
மாமா போயிற்றார், மாமா போயிற்றார்’ என்று.
தனது ஆழமான துக்கத்தை அழுது வெளிப்படுத்தினார்.
அந்த அழுகையிலும் சோகத்திற்குச் சேதாரம் இல்லாமல் ,
அப்படி ஒரு நாகரிகம்.

❈❈❈

அன்றுதான் மாமியை முதன்முதல் தொட்டுப்பார்த்தோம்.
பஞ்சு போல அப்படி ஒரு மென்மை.
எதையும் மறக்கமுடியவில்லை.
ஊர் உறவெல்லாம் கதறி அழுத செத்தவீடு அது.
வெளிநாட்டிலிருந்த மகன்மாரின் வருகைக்காக,
மாமாவின் உடல் ஆறு நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டுத் தொடர்புகள் புள்ளியளவாய் இருந்த அந்த நாட்களில் அது அதிசயம்.
முதல் நாள் போலவே ஆறாம் நாளிலும்,
சோகம் அசையாது அப்படியே இருந்தது அதைவிட அதிசயம்.
கிரியைகளின் நிறைவில் மாமி தனது தாலியைக் கழற்றப்போக,
பிள்ளைகள், மருமக்கள் என்று மட்டும் இல்லாமல்.
கூடி இருந்த உறவு முழுவதும் துள்ளித் துள்ளி தலையில் கைவைத்து.
கதறிய கதறலைப் போன்ற கதறலை நான் வேறெங்கும் கண்டதில்லை.
அதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

❈❈❈

செத்தவீடு முடிந்த அடுத்தநாள்,
மாமியின் பிள்ளைகள் ‘காடாத்து’ முடிந்து வர,
மாமி வீட்டிற்குள்ளே இருந்து வெளியே வருகிறார்.
ஒரு சிறு ‘போடர்’ கூட இல்லாத முழு வெள்ளைச்சீலை.
நெற்றியில் விபூதிக்கீற்று.
உடம்பு முழுவதிலும் ஒரு பொட்டுத் தங்கம் இல்லை.
வைரங்கள் மின்னிய காது, மூக்கெல்லாம் வெறித்துக் கிடக்க,
வெளியில் வந்த மாமியைப் பார்த்து,
பிள்ளைகளும், தங்கைமாரும் கதறிய கதறல் ஒரு சோக இலக்கியம்.
எல்லோரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்கள்.
மாமி தன் கோலத்தை மாற்றுவதில் அசைந்து கொடுக்கவில்லை.
அவரோட வாழ்றதெல்லாம் வாழ்ந்திட்டன்,
இனி இதெல்லாம் யாருக்குத் தேவை?
ஒரே வார்த்தையில் மற்றவர்களை நிராகரித்தார் மாமி.
இன்று தனது தொண்ணூறாவது வயதிலும் அந்தக் கோலம் மாறாமல்.
லண்டனில் மாமாவையும், கடவுளையும் நினைத்தபடி மாமி வாழ்கிறார்.
வாழ்க்கையில் சில பேர் போதனை செய்கிறார்கள்.
சில பேரது வாழ்க்கையே போதனை செய்கிறது.
❈❈❈❈❈❈❈❈❈

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...