Thursday, December 31, 2015

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ன்பு நண்ப,
என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை,
இன்னும் நேர்மையாகவும், அழகாகவும் கையாண்டிருக்க முடியும்.
தன் கட்சிக்குள் தவறுகளைக் கண்டபோது,
அவர் கட்சி உறுப்பினர்களை ஒன்றுகூட்டி,
கட்சிக்குள் இருந்த குறைகளை நீக்குவதற்கான,
வழிகளைக் கண்டுபிடித்திருக்கவேண்டும்.
தன் கருத்து கட்சியால் ஏற்கப்படாத பட்சத்தில்,
உங்கள் கட்சியும் வேண்டாம்,
உங்கள் கட்சியால் வந்த பதவியும் வேண்டாம் என்று,
அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெளியில் வந்திருக்கவேண்டும்.
அங்ஙனம் வந்திருந்தால்,
தமிழினம் உண்மைத் தியாகத் தலைவனாக,
அவரை இனங்கண்டு போற்றியிருக்கும்.
அவர் புதியதோர் கட்சியை ஆரம்பித்திருந்தால் கூட,
அத்தனை தமிழ்மக்களும் அவர் பின் அணிதிரண்டிருப்பார்கள்.
ஆனால் முதலமைச்சர் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டார்.பொய்யிற்குப் பொய்யும்,
களவுக்குக் களவும் கீழ்மக்கள் மத்தியில்தான்  பதில்களாகும்.
உயர்ந்தோர்க்கு ஒருக்காலும் அவை உவப்பான செயல்களன்றாம்.
உறுதிபட முடிவெடுக்காத தலைமையின் பலயீனம்,
ஒற்றுமையில்லாத அங்கத்துவர்களின் இயல்பு என்பவற்றை,
தனக்கு வாய்ப்பாக்கிக் கொண்டு,
ஒருசிலரின் தூண்டுதலின் பெயரில்,
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் செய்த செயல்கள்,
நிச்சயம் சான்றோர்க்குரியனவன்றாம்.
நீங்கள் ஆயிரந்தான் சொன்னாலும்,
தேர்தல் காலத்திலேயே,
முதலமைச்சர் தடம்மாறத் தொடங்கிவிட்டார் என்பது நிச்சயம்.
அது உங்கள் தமிழ்மக்கள் பேரவையின் அங்குரார்ப்பணத்தோடு,
உலகறிந்த உண்மையாகிவிட்டது.
என்னைப் பொறுத்தவரை நிச்சயம் முதலமைச்சரின் பெருமைக்கு,
இது உகந்த செயலன்றாம்.ஒரு கட்சியின் சார்பில் பதவி பெற்றுவிட்டு,
அக்கட்சிக்குள் இருந்து கொண்டே,
மாற்றுக்கட்சியோடு தொடர்புகொள்ளும் செயலை,
கண்ணியமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆயிரந்தான் அச் செயலால் நன்மைகள் விளைந்தாலும்,
நேர்மையற்ற பாதையால் எய்தப்படும் அந்நன்மைகள்,
என்றோ ஒருநாள் தீமையாய் முடியும் என்பது என் நம்பிக்கை.
பெற்ற தாய் பசித்திருப்பதைக் கண்டாலும் கூட,
சான்றோர் பழிக்கும் செயல் செய்து,
அவள் பசி தீர்க்காதே என்கிறார் நம் பாட்டன் வள்ளுவர்.
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
இவ் உண்மையை நம் முதலமைச்சர் ஏனோ மறந்தார்.
நல்லவற்றைக் கூடத் தவறான வழியில் உயர்ந்தோர் எட்டினால்,
பின்னர் அது உலகுக்கு முன்னுதாரணமாகிவிடும்.
அதனாற்றான் இச் செயல்களோடு உடன்பட,
என் மனம் மறுத்து நிற்கிறது.உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
போர் முடிந்திருந்த ஆரம்பகாலத்தில்,
திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனைக் கட்டிடம் ஒன்றின்,
அடிக்கல் நாட்டுவிழாவில்,
பலகட்சித்தலைவர்களும் கூடியிருந்த வேளையில்,
‘தமிழினம் மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் நிற்கிறது.
இந்நேரத்தில் நமக்குள் பிரிவுகள் வரக்கூடாது,
ஒரு பத்தாண்டுகளுக்கேனும்,
கட்சி, கொள்கை, பழையபகை என்பவற்றை மறந்து,
பிரிந்திருக்கும் எல்லோரையும் ஒன்றாக்கி,
அரசுடன் பேசி இனத்திற்கு விடிவு காணுங்கள்.
அதன் பின்னர் பழையபடி,
கட்சி, கொள்கை, பழையபகை என்பவற்றை,
விரும்பினால் மீண்டும் கடைப்பிடிக்கலாம்.
அப்படி செய்யத் தவறுவீர்களேயானால்,
தமிழினத்தின் அழிவுக்குக் காரணமாகி,
வரலாற்றுப்பழி எய்துவீர்கள்’ என்று அழுத்தமாய்ச் சொன்னேன்.அங்கு வந்திருந்த பல தலைவர்களும் தனிப்பட்ட ரீதியில்,
என் கருத்தை வரவேற்றுப் பாராட்டினார்கள்.
நீங்கள் கூட அறிமுகம் இல்லாத அவ்வேளையிலும்,
கம்பவாரிதி மீண்டும் யாழ் வரவேண்டும்’ என்று,
ஆசிரியத் தலையங்கமே தீட்டினீர்கள்.
என் மன உண்மைக்குக் கிடைத்த பாராட்டாகவே,
அப்போது அதை நான் கருதினேன்.அன்றைக்கு நான் பேசியதே இன்றைக்கும் என் கருத்தாகும்.
ஆனால் இனவிடுதலை என்ற எல்லையைத் தாண்டி,
கட்சி, பதவி என்ற வலைகளுக்குள்,
நம் தலைவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சிக்கிவிட்டனர்.
அனைவரையும் தான் சொல்கிறேன்.
அனைவரும் மேடைகளிலும், அறிக்கைகளிலும்,
இனம்பற்றி பேசுகிறார்களே தவிர,
அவர்தம் மனதிலும், செயல்களிலும்,
பதவிப்போட்டியில் வெற்றி பெறும் நோக்கமே,
முதன்மைபெற்று நிற்கிறது.
அவ் வெற்றிக்காக இழப்புக்களையும்,
அழிவுகளையும் திரும்பத்திரும்பச் சொல்லி,
மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி,
எப்போதும் அவர்களை ‘கொதிநிலையில்’ வைத்து விளையாடவே
அனைவரும் விரும்புகிறார்கள்.
நான் சொல்வது சத்தியமான உண்மை.
நடந்து முடிந்த தேர்தலின்போது,
பதவிக்காக நடந்த போட்டிகளும், போராட்டங்களும், ஊழல்களும்,
வெட்கமின்றி அரங்கேறிய ஒன்றே,
அதற்காம் சாட்சி.மக்களும் சுயநலமிகளாய்த்தான் இருக்கிறார்கள்.
தனிப்பட்ட ரீதியில் எந்தத் தியாகத்திற்கும் தாம் தயாராகாமல்,
இனத்திற்காக எதுவும் செய்யத் தயாரானவர்கள் போலக் காட்டிக்கொண்டு,
சில தலைவர்களை வரவேற்றும், சில தலைவர்களை எதிர்த்தும்,
அவர்கள் காட்டும் முனைப்பு வேடிக்கையானது.
அரசை எதிர்ப்பதாய்க் காட்டிக் கொள்ளும் அவர்கள்,
தமக்கு லாபமாக அரசிடமிருந்து,
ஒரு சிறு நன்மை கிடைக்குமானாலும்,
கைகட்டித் தலைவணங்கி அதனை ஏற்கத் தயாராகவே இருக்கின்றனர்.
இதுதான் உண்மை நிலை.தலைவர்கள் மக்களை ஏமாற்ற,
மக்கள் தலைவர்களை ஏமாற்ற,
மொத்தத்தில் எல்லோரும் ஒருவரையொருவர் ஏமாற்றி,
நடத்தும் நாடகத்திற்கு கருப்பொருளாய்,
இனவிடுதலையையும், இன உரிமையையும் வைத்திருப்பது,
வேடிக்கையாயிருக்கிறது.
அதிசயங்கள் நடந்தாலன்றி,
நம் இனம் உய்ய இன்னும் நெடுந்தூரம் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.அன்பு நண்ப,
இனி உங்கள் விடயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் எழுதிய விடயங்களில்,
சிலவற்றை என்மனம் ஏற்க மறுக்கிறது.
அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

முதலமைச்சர் அதிக வாக்குப்பெற்று வந்ததால் கூட்டமைப்பு, பயந்து அவரை விலக்க நினைத்ததாய் தாங்கள் கூறுகிறீர்கள். அதன் உண்மை, பொய் எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தேர்தலில் நின்றபோது முதலமைச்சரை யாழ்மண் அதிகம் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் பெற்ற பெரிய வெற்றிக்கு கூட்டமைப்பின் ஆதரவே காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நம் தலைவர்கள் கவனிப்பதில்லை என்று குறைபட்டிருந்தீர்கள்.  அது உண்மை. ஆனால் அந்த விடயத்தில் மத்திய, மாகாணத்தலைவர்கள் எல்லோரும் ஒருநிலைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவர் உயர்ந்தவர், இவர் குறைந்தவர் என வேற்றுமைகாண முடியாத அளவிற்குத் தான் இங்கு எல்லாத் தலைவர்களின் நிலையும் இருக்கிறது. 

நம் மண்ணுக்குள் மற்றவர்களின் நகர்வு பற்றியும், நம் வளங்கள் சூறையாடப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். ஆனால், வரையறுக்கப்பட்ட நிரந்தரமான தீர்வு வந்தாலன்றி அவற்றை எவராலும் முழுமையாய்த் தடுக்க முடியாது என்பது என் கருத்து.

‘அரசியல் கட்சி மாற்றுத்தலைமை பற்றியதாக இருந்தால் என்னிடம் யாரும் பேசாதீர்கள்’ என்று முதலமைச்சர் கூறியதாய் உங்கள் முருகனிலும் எந்தன் கம்பனிலும் சத்தியம் பண்ணிச் சொல்லியிருக்கிறீர்கள். சத்தியம் பண்ணாமலே உங்கள் வார்த்தையை நான் நம்புவேன். என்னுடைய கேள்வி வேறு. முதலமைச்சர் சொன்ன வார்த்தைகள் அவரது மனதிலிருந்து வந்திருந்தால், அவர் தமிழ்மக்கள் பேரவை பற்றியும், அதில் தான் கலந்துகொள்ள கோரப்பட்டிருப்பது பற்றியும், தன் கட்சிக்கு அறிவித்திருக்க வேண்டுமல்லவா? பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் தான் சார்ந்த கட்சித்தலைமை பற்றிய மறைமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தை அவர் ஏற்றிக் கொண்டது ஏன்? உங்கள் நிர்வாகத்தில் உங்களுக்குக் கீழ் இருக்கும் ஒருவர் உங்களுக்கு அறிவிக்காமல் உங்களின் எதிரணியின் அழைப்பை ஏற்றுச் சென்றால் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? தயைகூர்ந்து  இவைபற்றிச் சிந்தியுங்கள். இவைதான் என்னைக் குழப்புகின்றன.

நீதியரசரை முதலமைச்சராக வரும்படி அழைத்தபோது கூட்டமைப்புக் கட்சிகளில் ஒருசில அவரை எதிர்த்தன. அது எந்தவகையில் நியாயமாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அப்போது முதல்வரைக் கடுமையாய் எதிர்த்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை உங்கள் பேரவையில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இது எப்படி நியாயமாகும் என்று நான் கேட்டால், உங்கள் பாடு சங்கடமாகாதா? 

நேர்மையானவர்க்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் சொன்னதில் என்ன தவறு? என்று கேட்டிருக்கிறீர்கள். நிச்சயம் அதில் தவறில்லை. ஆனால் அதனை நேர்மையான முறையில் நடந்து காட்டிக் கொண்டல்லவா நீதியரசர் சொல்லியிருக்கவேண்டும். அதுதான் எனது குறை.

முதலமைச்சரை சந்திக்காத பிரதமரை கூட்டமைப்பினர் சந்திக்கலாமா? என்பது உங்களது அடுத்த கேள்வி. ஆயிரம் பிரச்சினைகளை உட்கொண்டு அணுகுண்டு யுத்தம் எந்த நேரத்திலும் வெடித்துவிடலாம் என்ற நிலையிலும் பாகிஸ்தான் பிரதமரை திடீரெனச் சென்று சந்தித்து அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துத் திரும்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. அதுதான் இராஜதந்திரம். சிறுபிள்ளைகள் போல ‘அவரோடு நான் பேசமாட்டேன்’ என்று முகம் திருப்பி நின்று விட்டால் எங்ஙனம் பிரச்சினைகளைத் தீர்ப்பது? அதுதவிரவும், தம்முடனான தனி உரையாடலின் போது பிரதமர் வெளியிட்ட தம் இனத்தார்க்கு எதிரான கருத்தை முதலமைச்சர் பகிரங்கப்படுத்தியதை எங்ஙனம் நீங்கள் சரி என்பீர்கள்? தயைகூர்ந்து இவைபற்றித் தாங்கள் சிந்திக்கவேண்டும். 

மாகாணசபைக்குள் ஆளுங்கட்சிக்குள்ளேயே நடைபெறும் கோளாறுகளை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அதனைத் தீர்ப்பதுதானே முதலமைச்சரின் வேலையாக இருக்கமுடியும். தன் கடமைகளை நிறைவேற்ற முடியாமைக்கு இவற்றைக் காரணங்காட்டுதல் பொருத்தமா? ஒரு நிர்வாகத்தில் அனைவரும் ஒருமித்து இயங்கமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஒருமித்து இயங்காதவர்களை ஒருமித்து இயங்க வைப்பதற்காகவே ஒருதலைவர் நியமிக்கப்படுகிறார். அதை விடுத்து மற்றவர்களைக் காரணங்காட்டி தமது குறைகளை நியாயப்படுத்துவது சரியாகுமா? சிந்தியுங்கள்.

ஐ.நா.சபைத் தீர்வு விடயத்தில் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. வல்லரசுகளின் வலியுறுத்தலின் போது சில விட்டுக்கொடுப்புக்களை ஏற்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்றே கருதுகிறேன். அதுபோல இப்பிரச்சினையில் மதவாதத்தை நாம் இழுத்தால் என்னாகும் என்ற தங்களின் கேள்வியால் நான் அதிர்ந்தது உண்மை. அக்கேள்வி எவ்வித்திலும் நியாயமானதன்று என்பதை உறுதியாய்ச் சொல்ல விரும்புகிறேன். நம் வசதிக்காக மதவாதம் பேசத் தலைப்படுவோமானால் ஏற்கனவே சிறுபான்மையாய் இருக்கும் நாங்கள் உள்ளுடைந்து இன்னும் சிறுபான்மையாய் ஆகிவிடுவோம் என்பதை தயைகூர்ந்து உணருங்கள். அத்தகைய எண்ணத்தை வேரோடு களைந்துவிடுங்கள்.என் புத்திக்கு ஒவ்வாத விடயங்களை,
என்றும் என்மனம் ஏற்பதில்லை.
கல்வி விடயத்திலும்,
மற்றவர்கள் சொல்வதற்காக நான் எதையும் ஒப்புவதில்லை.
என் அறிவு அவ்விடயத்தை ஏற்கும் வரையும்,
அதனை உள்வாங்காமல் ஆராய்ந்து நிற்பேன்.
அங்ஙனமே இப்போதும் என் அறிவு ஏற்கமறுக்கும் சில விடயங்களேயே,
மேலே குறித்துள்ளேன்.
தயைகூர்ந்து மேல் பிரச்சினைகளுக்கு,
என்அறிவேற்கும் வண்ணம்,
தக்க விளக்கத்தை நீங்கள் தருவீர்களேயானால்,
அவற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த மறுப்புமில்லை.நிறைவாக சிலவற்றைச் சொல்லி விடைபெற நினைக்கிறேன்.
இனவளர்ச்சியை நோக்கித் தாங்கள் நிறுவிய,
தமிழ்மக்கள் பேரவையின் அமைப்பில்,
என்ன காரணத்தினாலோ தாங்கள் சில தவறுகளைச் செய்து விட்டீர்கள்.
அத்தவறுகளை நீக்கியிருந்தால்,
தமிழ்மக்கள் பேரவையை நான் மட்டுமல்ல,
தமிழ்மக்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றிருப்பார்கள்.
அத்தவறுகளை கீழ்க்கண்டவாறு இனங்காண்கிறேன்.
இங்ஙனம் ஒரு பேரவையை அமைக்கப் போகும் செய்தியை ஒரு பத்திரிகையாளரான தாங்கள் நிச்சயம் பொதுமக்களுக்கு முன்னரே பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும். 

இப்பேரவை அமைப்பில் தேவையில்லாத ரகசியத்தன்மையை நீங்கள் பேணியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரகசியத்தன்மைதான் பலர் மனதிலும் பல ஐயங்களைக் கிளப்பின.

அரசியலாளர்கள் நம் இனப்பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருப்பதால் அவர்கள் அனைவரையும் விடுத்து தனித்து சிவில் சமூகத்தினரைக் கொண்டே இப்பேரவையை நீங்கள் அமைத்திருக்கலாம்.

அங்ஙனம் அரசியல் தலைவர்களும் இவ் அமைப்புக்கு அவசியம் என்று கருதிய பட்சத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் அவ்அழைப்பை நீங்கள் பகிரங்கமாய் விடுத்திருக்க வேண்டும். 

நேர்மையும், வலிமையும் உள்ள ஒரு தலைவர் போதும் என்றும், அவர் முதலமைச்சரே என்றும் நீங்கள் கருதிய பட்சத்தில் அவரை மட்டும் இவ் அமைப்புக்கு அழைத்திருக்கலாம். அவ் அழைப்பை தான் சார்ந்த அணியின் தலைமைக்குத் தெரிவித்துவிட்டே வரும்படி முதலமைச்சரிடம் தாங்கள்ளே வலியுறுத்தியிருக்கவேண்டும்.

ஏற்கனவே முதலமைச்சர் தொடர்புபட்டார் என்று பரபரப்பாய் பேசப்பட்ட கஜேந்திரகுமாரையும், பதவிப்பிரச்சினையால் முரண்பட்டிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனையும் மட்டும், மற்றைய தலைவர்களை விடுத்து இவ் அமைப்புக்கு அழைத்தது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த இடத்தில் ஒன்றை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். கஜேந்திரகுமாரோடு எனக்கு எந்தவிதத் தனிப்பகையுமில்லை. கடந்த தேர்தலில் அவரின் அணி ஒருசில இடங்களையாவது பிடிக்க வேண்டும் என்று நானும் விரும்பினேன். அதற்காக எழுதவும் செய்தேன்.  ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றணி கூட்டமைப்பை நெறிப்படுத்த அவசியம் என்று நான் கருதியதே அதற்கான காரணம். அந்த மாற்றணியை மக்கள் கருத்தை மீறி உருவாக்குவதில்தான் எனக்கு உடன்பாடில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் நீதியரசரை முதலமைச்சராக்கக் கூடாது என்று முன்பு போராடியவர். பின் மாகாண அமைச்சுப் பதவியில் அவரோடு கடுமையாக மோதியவர், இன்னும் பல விடயங்களில் அவரை எதிர்த்தவர், அவை அவரது உரிமை. ஆனால் இன்று பதவி கிடைக்காமல் போனதும் முதலமைச்சரை அவர் புகழ்வதும், அவரோடு இணைந்து நிற்க முயல்வதும், நேர்மையாயில்லை. இத்தகையோரை மட்டும் அரசியலாளர்களாய் உங்கள் பேரவையில் நீங்கள் இணைத்துக் கொண்டதுதான் பிரச்சினைகளுக்குக் காரணமாகி விட்டது. 

தமிழ்மக்கள் பேரவையை அமைத்த பிறகு கூட அதன் கூட்டத்தில் கூட்டமைப்பை மறைமுகமாய் விமர்சித்தும் அதன் எதிராளிகளை மறைமுகமாய் ஆதரித்தும் பேச முதலமைச்சரை நீங்கள் அனுமதித்திருக்கக் கூடாது. தமிழ்மக்கள் பேரவை இவர்கள் பிரச்சினையைத் தீர்க்க உருவானதல்ல. அதன் நோக்கம் வேறு என்று அடித்துக் கூறும் உங்களின் கருத்துக்களுக்கு மேல் விடயம் முரணாய்த் தெரிகிறது.

நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் கூட முதலமைச்சரை மிக உயர்த்தியும் மற்றைய தலைவர்களை கடுமையாய் விமர்சித்தும் பலவற்றைக் கூறியிருக்கிறீர்கள். பேரவையின் நோக்கத்தை இக்கருத்துக்கள்கூட ஐயுற வைத்துத் திசைதிருப்பும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அன்புச் சகோதர,
உங்கள் எண்ணத்தில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
ஆனால் அவ் எண்ணத்தை நிறைவேற்றும் செயல்களில்,
தவறுகளுக்கு இடங்கொடுத்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
சரியான விடயத்தை, சரியான பாதையில் சென்று அடையவேண்டும் என்பதுதானே.
அறிஞர்களின் கருத்தாய் இருக்கவேண்டும்.
அதில் நான் மதிக்கும் அறிஞரான நீங்கள் தவறிழைக்கலாமா?
பிழை செய்யாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.
தாம் செய்தது பிழை என்று தெரிந்துவிட்டால்,
பிடிவாதம் பிடிக்காமல் அதை ஒத்துக்கொள்வதில்தான் பெருந்தன்மை இருக்கிறது.
அந்தப் பெருந்தன்மையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
இனிக்கூட நடந்த தவறுகளைத் திருத்தி விடலாம்.
அரசியலாளர்களை நெறி செய்ய,
ஒரு பொதுமக்கள் அணி பின்னால் நிற்பது,
நிச்சயம் நல்லதே.
அதனைப் பாரபட்சமின்றி நீங்கள் செயற்படுத்த முயன்றால்,
நிச்சயம் நானும் உங்களோடு தோளோடு தோள் சேர்ந்து நிற்பேன்.
நன்மை நடக்கட்டும்!
➤➤➤➤➤➤
(முற்றும்)

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...