Monday, December 28, 2015

ஐயம் தரும் அறிக்கையும் என் அயர்வும்...!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
டைவு உறுதியாகிவிட்டது.
நேற்று முன்தினம் நடந்த,
சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு,
உண்டாக்கியிருந்த சிறு நம்பிக்கையை,
நேற்றைய, ‘தமிழ்மக்கள் பேரவையின்’ இரண்டாவது கூட்டமும்,
அதில் முதலமைச்சர் ஆற்றிய உரையும் முற்றாய்க் கலைத்துவிட்டன.
இனி என்ன? உடைவு நிச்சயம் என்பது,
உறுதியாகிவிட்டதென்றே கொள்ளலாம்.


தமிழ்மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில்,
முதலமைச்சர் ஆற்றிய உரையில்,
சில ஐயங்கள் உதிக்கின்றன.
அவற்றை மட்டும் உங்கள் முன் வைத்துவிட்டு ஓய்கிறேன்.


1 முதலமைச்சர்:- “தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்து மறையவேண்டும். சிறுவன் தானே, சிற்றூழியன் தானே, தேர்தலில் தோற்றவன் தானே என்றெல்லாம் மக்களின் மாண்பை மறந்து அநாகரிகமாகப் பேச விளைவது இனியேனும் நிற்பாட்டப்படவேண்டும். ஒருவர் தேர்தலில் தோற்றுவிட்டால் மக்கள் அவரை என்றென்றும் புறக்கணித்துவிடுவார்கள் என்று அர்த்தம் இல்லை.”

முதலமைச்சர், தேர்தலில் தோற்ற அணியினரை,
வெளிப்படையாய்க் காப்பாற்ற முனைந்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் இதனையே தான் மறைமுகமாய்ச் செய்தார்.
அதைச்சுட்டிக்காட்டிய சுமந்திரனைக் குற்றம் சொன்னார்.
தான் அப்படி யாரையும் ஆதரிக்கவில்லை என்று அடித்துப்பேசினார்.
இன்று அத்தனையும் பொய் என்பது அவரது மேற்கருத்தால் நிச்சயமாகிவிட்டது.
தேர்தலில் தோற்றவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும்,
முன்பு அப்படி நடந்திருக்கிறது என்றும்,
சிங்களத்தலைவர்களை ஆதாரம் காட்டி,
நீண்டநேரம் எடுத்து விளங்கப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர்.
இதற்காகத்தான் தமிழ்மக்கள் பேரவை கூட்டப்பட்டதா?
தேர்தலில் தோற்றவர்களைக் காப்பாற்றுவதுதான்,
தமிழ்மக்கள் பேரவையில் முதலமைச்சரின் வேலையா?
தோற்றவர்களை ஒதுக்க வேண்டாம் என்று,
வக்காலத்து வாங்கும் முதலமைச்சர்,
மக்கள் ஆதரவு பெற்று, வென்றவர்களை ஒதுக்குவதன் காரணம் என்ன?
அங்ஙனமாயின் தேர்தலில் தோற்றவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லையா?
அடிமட்ட மக்களின் ஆதரவே போராட்டத்தின் பலம் என்று சொல்லும் முதலமைச்சர்,
அடிமட்ட மக்களின் வாக்குகளால் அளிக்கப்பட்ட தீர்ப்பை நிராகரிப்பது ஏன்?
தேர்தலில் தோற்றவர்கள் பற்றி முதலமைச்சர் சொல்லும் கருத்துக்கள்,
ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற மஹிந்தவுக்கும் பொருந்துமா?
கற்றவர்கள் ஆராய்வார்களாக.2 முதலமைச்சர்:- “இப்பொழுது தமிழர்கள் யாவரும் சேரப்பார்க்கிறார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகிறது.”

அவர்கள் கருத்தை வழி மொழிந்துதான்,
ஒன்றாயிருந்த கூட்டமைப்பு உடைக்கப்படுகிறதா?
என்னவோ ஏதோ, சரி பிழைகளுக்கு அப்பால்,
கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று,
தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி வலிமைபெற்ற ஒரு தலைமையாய் நின்றது.
உலகும், இலங்கைஅரசும்,
கூட்டமைப்பையே தமிழ் மக்களின் தலைமை எனக்கொண்டு,
சமாதானம் நோக்கிய முயற்சிகளில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில்  அக்கட்சியின் உடைவு நிச்சயம் தமிழர்களைப் பலவீனப்படுத்தும்.
அதற்கு, தானே வழிசெய்துவிட்டு,
தமிழர்கள் ஒன்றுபடக்கூடாதென சிங்களவர்கள் நினைப்பதாய்க் கூறுவது,
முன்னுக்குப்பின் முரணான செயலன்றோ ?3 முதலமைச்சர்:- “விடுதலைக்காய்ப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வினத்தின் அடிமட்ட  மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.”

தொடங்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் பேரவையில்,
அடிமட்ட மக்கள் எத்தனை பேர்?
பேராசிரியர்களும், டாக்டர்களும், மதபோதகர்களும், தோற்றுப்போன தலைவர்களும்தான்,
இவர்கள் சொல்லும் அடிமட்ட மக்களா?
இவர்கள் சொல்வது உண்மையாயின்,
அடிமட்டமக்களுக்கு எவ்வித அறிவித்தலும் செய்யாமல்,
பூட்டிய அறைக்குள் கூட்டம் நடத்தியதன் காரணம் என்ன?
அடிமட்ட மக்கள், வாக்களிப்பின் மூலம் அளித்த தீர்ப்பினை நிராகரித்துவிட்டு,
அடிமட்ட மக்களே தம் அத்திவாரம் என்றுரைப்பது பொய்மையில்லையா?4 முதலமைச்சர்:- “எமது தமிழ்த்தலைவர்கள் எவ்வளவுதான் அறிவில், ஆற்றலில் சிறந்தவர்களாக இருந்தாலும், புகழ்ச்சிக்கும் மாய்மாலங்களுக்கும் இலேசில் அடிமைப்படுபவர்களாகக் காணப்பட்டு வந்துள்ளார்கள். நீங்கள் தான் மிக மிகக் கெட்டிக்காரர்  என்று அப்போதைய நரிகள் கோரியதும் எமது தமிழ்க்காக்கை வடையைத் தவறவிட்டு விட்டது. இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.”

இரண்டேவருட அரசியல் அநுபவமும்,
அதில்கூட எதனையும் சாதிக்கத்தெரியாத ஆற்றலும்(?) கொண்ட முதலமைச்சர்,
இராமநாதன் தொடங்கி செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம்,
அமிர்தலிங்கம் வரையிலான,
அனுபவம்மிக்க மூத்த அத்தலைவர்களை,
புகழ்ச்சிக்காய் வடையைத் தவறவிட்ட காக்கைகள் என்று,
எள்ளி நகையாடுகிறார்.
ஆயிரம் எதிர்ப்புக்களைத் தாண்டி அவர்கள் நகர்த்திய காய்கள்தான்,
இன்று வெற்றியை நம் கைக்கு அண்மையாகக் கொண்டு வந்திருக்கின்றன.
மற்றவர்கள் தியாகத்தோடு ஏற்றிவிட,
எந்தச்சிரமமுமின்றி வெற்றிக்கனியைப் பறிக்கும் நிலையில் இருந்துகொண்டு,
ஏற்றிவிட்டவர்களை இழிவுசெய்யும்,
முதலைச்சரின் இவ்வறிக்கை நாகரிகமற்றது.
பாடுபட்டு ஒருவன் வீடுகட்டி முடிக்க,
முகட்டோடு வைத்தவன் முழு உரிமை கோரினாற்போல் இருக்கிறது,
முதலமைச்சரின் செயல்.
பிரபாகரன் எந்தப் புகழ்ச்சிக்கும் மாய்மாலத்திற்கும் மயங்காதவர் என்று பெயரெடுத்தவர்.
அதனால் உலகத்தலைவர்களின் பல சமரசமுயற்சிகளைப் புறந்தள்ளி,
ஈழம் என்ற கொள்கையைவிட்டு இறங்க மறுத்து பிடிவாதம் செய்தார்.
புகழ்ச்சிக்காய் ஏமாந்த காக்கைகள் வரிசையில்,
அத்தகு பிரபாகரனையும் முதலமைச்சர் சேர்க்கிறாரா?
சமரசங்களை ஏற்காது பிடிவாதமாய் நின்ற,
பிரபாகரனின் முடிவால் விளைந்தது என்ன?
உலக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு சூழ்ச்சிகள் செய்ய,
தமிழினம் கண்டது அழிவையும், மரணங்களையும் தானே?
தன் பலத்தாலும் தியாகத்தாலும் உலகையே அதிரச்செய்து ஆட்டிவைத்த,
அத்தலைவனுக்கே இக்கதியென்றால்,
இவையேதும் இல்லாத இவர்களால் அப்பாதையில் ஏது செய்யமுடியும்?
எல்லாத் தலைவர்களையும் இழிவு செய்யும் இவர்தம் போக்கு,
உண்மைத்தமிழர்களை உளம் கலங்க வைக்கிறது.5 முதலமைச்சர்:- கட்சிகளின் நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், நோக்குகள் யாவையும் வெளிப்படைத்தன்மையுடனும் நிபுணத்துவச் செறிவுடனும் செயற்படுத்தப்படவேண்டும்.

இதனைச் சொல்லும் முதலமைச்சர்,
தனை அரசியலுக்குக் கொணர்ந்த கூட்டமைப்புக் கட்சியில்,
மேற்குறிப்பிட்ட விடயங்களை ஒழுங்கு செய்ய,
ஏதேனும் முயற்சி எடுத்தாரா?
புகழ்ச்சிக்கும் மாய்மாலத்திற்கும் மயங்காதவராய்,
தன்னைக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சர்,
அப்போதைய ஆளுநரிடமும், செயலாளரிடமும் பகை என்று சொல்லி,
மக்களுக்கான வசதிகளைப் பெற மறுத்து நின்றார்.
ஆனால் தனக்கு அரசு அளித்த வாகன வசதிகளை,
அக்காலத்திலேயே பெற்றுக்கொண்டார்.
தனது மாகாணசபை உறுப்பினர் அனைவரும் எதிர்க்க,
முன்னாள்ஜனாதிபதி மஹிந்தவின் முன் சென்று பதவிப்பிரமாணம் எடுத்தார்.
ஜனாதிபதியிடம் சென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வந்து,
தமது தொகுதிகளுக்காகப் பணம் பெற்றுக்கொள்வதாய் முறையிட்டார்.
யாருக்கும் தெரியாமல் ஐ.நாவிடம் உதவி பெற சம்மதித்து,
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுப் பின் மறுத்தார்.
கட்சியில் பிரச்சினை என்றவுடன் என்றுமில்லாத வகையில்,
தனது மாகாணசபை அமைச்சர்களுடன் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
நரியின் மாய்மாலத்திற்கு மயங்கிய காக்கையின் செயல்களில்,
இச்செயல்களும் அடங்குமா?
தலைவர்களிடம்  வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று,
இப்போது வேண்டிநிற்கும் முதலமைச்சர்,
இவற்றையெல்லாம் செய்யும் போது,
வெளிப்படைத்தன்மையுடன் தான் செய்தாரா?
இவ்வளவும் ஏன்?
தமிழ்மக்கள் பேரவை அமைக்கப்பட்டபோதேனும்,
இவர்களால் வெளிப்படைத்தன்மை பேணப்பட்டதா?

6 முதலமைச்சர்:- "கட்சிகளுக்கு அப்பால் செல்லவேண்டிய காலம் தற்போது உதித்துள்ளது."

அப்படியாயின் குறித்த ஒரு கட்சியில் நின்று அதன் ஆதரவுடன்,
முதலமைச்சர் வெற்றி பெற்றது ஏன்?
இன்றுதான் இந்த முடிவு வந்ததென்றால்,
கட்சியினூடு பெற்ற வெற்றியையும், பதவியையும் உதறிவிட்டு,
தனிமனிதராய் தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கச் செல்லாதது ஏன்?
கடந்த தேர்தலிலும், தற்போதைய தமிழ்மக்கள் பேரவை உருவாக்கத்திலும்,
மறைமுகமாய் குறித்த ஒரு கட்சியை முதலமைச்சர் ஆதரித்தது ஏன்?
இந்த உரையிலும் கூட,
தோற்றுப் போன கட்சிக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

7 முதலமைச்சர்:- தமிழ்மக்கள் பேரவையின் தலைமைத்துவம் தனிமனிதர்களின் செல்வாக்கில் கட்டியெழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வெறும் சமய, இலக்கிய, நீதித்துறை சார்ந்த,
ஓர் அறிஞராய்க் கருதப்பட்டிருந்தவர்,
பின்னர் கூட்டமைப்பால் அரசியலுக்கு இழுத்துவரப்பட்டு,
அவர்கள் செல்வாக்கால் பெரிய வாக்கு வித்தியாசத்தால் முதலமைச்சராகி,
இன்று தனிமனித செல்வாக்கோடு பெருமை பெற்று நிற்கும்,
முதலமைச்சரின் சார்பினைப் பெற்றதால் மட்டுமே புகழ்பெற்று நிற்கிறது இப்பேரவை.
முதலமைச்சரின் மேற்கருத்து உண்மையாயின் தான் விலகி நின்று,
இப்போது போடுதடிகளாய்ச் சேர்க்கப்பட்டிருக்கும் இணைத்தலைவர்களை மட்டும் வைத்து,
இப்பேரவையை உருவாக்கியிருக்கலாமே!
மக்கள் மனமறிந்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரே,
இவ் அமைப்பின் தலைவர்கள் எனின்,
தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள்,
இவ் அமைப்புக்குள் நுழைந்தது எங்ஙனம்?
கேள்விகள் கடலாய்ப் பெருகுகின்றன.


உண்மையை ஓயாது எழுதி நானும் சோர்ந்துவிட்டேன்.
தமிழ்மக்களும் இன்னும் பார்வையாளர்கள் மனநிலையிலிருந்து,
பங்காளர் மனநிலைக்கு வந்ததாய்த் தெரியவில்லை.
வரப்போவதாயும் தெரியவில்லை.
‘தமிழினத்தைக் கடவுள்தான் காக்கவேண்டும்’ என்று,
தந்தை செல்வா என்ன மனநிலையில் எதற்காகச் சொன்னாரோ?
துரதிஷ்டவசமாய் அக்கருத்து இன்றும் தொடர்கிறது.
திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி என்ன பயன்?
நிறைவாக ஒன்றைச் சொல்ல நினைக்கிறேன்.
என்றுமில்லாத வகையில், பேரினத்தலைமைகள் ஒன்றிணைந்து, தமிழர் பிரச்சினையை ஒத்துக்கொண்டு, அதனைத் தீர்க்க முனைவதாய் உலகிற்கு வாக்களித்து நிற்கும் அரிய சந்தர்ப்பம்,
உலக, பிராந்திய வல்லரசுகள், இலங்கை அரசின் உண்மைத்தன்மையை மேற்பார்வை செய்யும் பொறுப்பேற்று இயங்கும் அற்புதவாய்ப்பு,
இலங்கை அரசு பாராளுமன்றத்தை சட்ட ஆக்க அவையாக மாற்ற முடிவு செய்து தன் சமாதானம் நோக்கிய நகர்வை நிரூபிக்க முனையும் ஆரோக்கியமான முன்னேற்றம்,
தனது அதிகாரங்களை நீக்கிப் பாராளுமன்றத்திற்கு அவ் அதிகாரங்களைப் பாரப்படுத்தும் ஜனாதிபதியின் வரவேற்கத்தக்க நகர்வு என்பனவாய்,

என்றும் இல்லாத வகையில் அமைந்து வரும் அற்புதச் சூழலில்,
பகை நீக்கி, விலகி நின்றோரையும் ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக,
ஒன்றுபட்டு நின்று,
தேர்தலில் மக்கள் ஆதரவை முழுமையாய்ப் பெற்ற ஒரே அமைப்பையும்,
அழகாய்த் திட்டமிட்டு உடைக்கிறார்கள்.


இங்கு பிழையைக் கண்டிப்பார் எவரும் இலர்.
அறிவுபூர்வமாக நான் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் உரைக்காமல்,
அன்றேல், அதனை ஒப்புக்கொள்ளவும் செய்யாமல்,
தனிப்பட்ட ரீதியில் என்னைச் சாடுவதிலேயே சிலர் திருப்தியுறுகின்றனர்.
ஒருசிலரைத் தவிர மற்றவர்கள்,
கட்டுரையைப் படிப்பதோடு தம் கடமையை முடித்துக் கொள்கின்றனர்.
நல்லது!
இப்படியே போனால் இழிவு நிச்சயம்!
கைக்கருகில் வரும் பெருவாய்ப்பை இழந்துவிட்டு,
மீண்டும் ஒரு பேரழிவைச் சந்திக்கப்போகிறோம்.
என்னால் முடிந்தவரை மக்கள் மன்றில்,
என் கருத்துக்களைச் சொல்லி விட்டேன்.
விதியை வெல்ல யாரால் முடியும்?


துரியோதனன் சூழ்ச்சிக்கு உடன்பட்டு,
விதுரனைத் தூது செல்லும்படி திருதராட்டிரன் அழைக்க,
தீமை விளையப் போகிறதே எனத் துடிக்கிறான் அவன்.

"போச்சுது போச்சுது பாரத நாடு
போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்
ஐய! இதனைத் தடுத்தல் அரிதோ?"நாட்டை வைத்து பாண்டவர் சூதாட முனைந்தபோது,
விதுரன் கதறிய கதறல் ஞாபகத்திற்கு வருகிறது.

"நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம்
நேரும் என்று நினைத்திடல் வேண்டா
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணியர் தமை மாற்றலர் ஆக்கி
சிறியர் பாதகர் என்று உலகெல்லாம்
சீ! என்று ஏச உகந்து அரசாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ?
வாழி சூதை நிறுத்துதி! என்றான்."

அவன் முயன்றாற் போலவே நானும் முயன்றேன்.
என் முயற்சியின் வெற்றி தமிழ்மக்கள் கையில்தான்.


அவர்களோ,
தம் வாழ்வை வைத்து,
தலைவர்கள் சூதாடுகிறார்கள் என்பது கூடத்தெரியாமல்,
அணி பிரிந்து அவர்களை ஊக்கப்படுத்தி ஆரவாரித்து,
தமக்குத் தாமே புதைகுழி சமைக்கின்றார்கள்.
ஆணவத்தின் உச்சத்தில்,
தமது தனி வெற்றி பற்றிய கனவோடு மட்டும் நம் தலைவர்கள்.
என்சொல் நிச்சயம் அவர்கள் காதிலும் ஏறப் போவதில்லை.

"நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீசர் ஆனவர் கொள்ளுவதுண்டோ ?"அறம் சொன்ன விதுரனை எள்ளி நகையாடி,
இழிவு செய்து மகிழ்ந்தான் துரியோதனன்.
அவையோ இது தவறென்று உரைக்காது பார்த்திருந்தது.
சோர்ந்த விதுரன் விரக்தியுற்றுப் பேசினான்.

"சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா?
செய்கை நெறி அறியாத சிறியாய்! நின்னை
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன்.
பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்."அப்போது, விதுரன் உரைத்தது நினைவுக்கு வருகின்றது.
விதியின் ஆற்றல் உணர்ந்தும்,
நல்லதை உரைத்துப் பார்த்தேன்.
பயனின்றிப் போனது என் முயற்சி.
கலிபுருஷன் தான் வென்று மகிழ்ந்தான்.
பாரதப்போர் வரும் என்பது உறுதி என்று,
விதுரன் குரலினூடு பேசினான் பாரதி.

"விதி வழி நன்குணர்ந்திடினும் பேதையேன் யான்
வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின் தன்
சதி வழியைத் தடுத்து உரைகள் சொல்லப் போந்தேன்.
சரி!சரி! இங்கு ஏதுரைத்தும் பயனொன்றில்லை.
மதி வழியே செல்லு என விதுரன் கூறி
வாய் மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்.
பதிவுறுவோம் புவியில் எனக் கலி மகிழ்ந்தான்."துரியோதனன் விதுரன் சொல்லைக் காதில் வாங்காது,
தன் முயற்சியைத் தொடர்ந்தான்.
சூதும் வாதும் செய்து கொக்கரித்தான்.
பேசேன் என்று அமர்ந்த விதுரனால் பேசாதிருக்க முடியவில்லை.
மீண்டும் மனக் கொதிப்போடு உரைக்கின்றான்.

"சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கௌரவர்காள்!
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது
பேராசை கொண்டு பிழைச் செயல்கள் செய்கின்றீர்
வாராத வன்கொடுமை மா விபத்து வந்துவிடும்"துரியோதனன் சபையில் விதுரன் கருத்து ஏற்கப்படவில்லை.
வென்றான் துரியோதனன். வீழ்ந்தது தர்மம்.
பாரதப் போருக்குப் பதியம் போட்டார்கள்.
அன்று நடந்தது இன்றும் நடக்கிறது.
விதுரன் நிலையே என் நிலையும்.
முடிந்தவரை உண்மை உரைத்துப் பார்த்துவிட்டேன்.
உணர்ந்தால் தமிழர்கள் உய்வார்கள்.
உணர்ச்சி வயம்தான் நமக்கு உறுதி என நினைத்தால்,
மீண்டும் ஒரு ஊழி நடக்கும்.
உதிரம் பெருக்கெடுக்கும்.
கேட்பார்களின்றிக் கிடந்து மடிவோம் நாம்.
காக்கக் கடவுள் !


பி.கு: வலம்புரியில் புருசோத்தமன்  எழுதிய மடலிற்கான கம்பவாரிதியின் பதில் மடல் நாளை வெளியாகிறது..

Post Comment

3 comments:

 1. instead of resolving his (CM) issue with sumathiran, CM manipulating and trying to get power in undue mean which is betrayal to tamil.
  CM is not a able political leader or not a good administrator or not a visionary person to solve the issue of tamil. He is just a stun master. he uses his name, position and power to get fame under the expenses of tamil suffering. this is a clear betrayal to tamil and TNA. if he is a gentle man, he should resign from TNA and then do politices as he like and grow. he needs TNA to get power but he need to use that position to get fame and misdirect the people. very bad

  ReplyDelete
 2. சரியான தருணத்தில் மிகவும் யாதாா்த்தமான நடுநிலை விளக்கங்களை தவறாமல் நேர்மையோடு எழுதுகிறீா்கள். உங்கள் உண்மை விளக்கங்கள் இணையம் தாண்டி அடிமட்ட மக்கள் வரைக்கும் செல்ல வேண்டும் என்பது எனது பேரவா. உள்ளூர் பத்திகைகளில் உங்கள் கருத்தை வெளிவர செய்தால் மிகவும் நன்மை பயக்கும்.

  ReplyDelete
 3. சரியான தருணத்தில் மிகவும் யாதாா்த்தமான நடுநிலை விளக்கங்களை தவறாமல் நேர்மையோடு எழுதுகிறீா்கள். உங்கள் உண்மை விளக்கங்கள் இணையம் தாண்டி அடிமட்ட மக்கள் வரைக்கும் செல்ல வேண்டும் என்பது எனது பேரவா. உள்ளூர் பத்திகைகளில் உங்கள் கருத்தை வெளிவர செய்தால் மிகவும் நன்மை பயக்கும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...