•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, January 5, 2016

மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 2

கடந்த இருவாரங்களுக்கு முன்பு, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும், அதுதொடர்பாக வடக்குமாகாண முதலமைச்சர் மீதான ஐயங்களையும் கருவாகக்கொண்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதி உகரத்தில் வெளியான "கொழும்பின் சதியா? யாழின் விதியா?" எனும் கட்டுரை பெரும் அதிர்வினை உருவாக்கியது வாசகர் அறிந்ததே.

அக்கட்டுரையில் தமிழ் மக்கள்  பேரவை தொடர்பாகவும், முதலமைச்சர் தொடர்பாகவும் சொல்லப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக வலம்புரியில் அடுத்தடுத்த நாட்களே, புருசோத்தமன் எனும் புனைபெயரில் "கம்பவாரிதிக்கு ஓர் அன்புமடல்" எனும் தலைப்பில் மூன்று பாகங்களாக கட்டுரை வெளியாகியது. உகரமும் 'பத்திரிகா தர்மத்தை' மதித்து அதனைப்பிரசுரித்தது.

தொடர்ந்து அம்மடலுக்கு பதில்மடலாக "வலம்புரி புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல்" எனும் தலைப்பிலே உகரத்தில் மூன்று பாகங்களாக கம்பவாரிதியின் மடல் வெளியாகியது. 'வலம்புரியும்' அதனை அப்படியே வெளியிட்டு தன் ஊடக தர்மத்தை கூட்டிக்கொண்டது. அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் கம்பவாரிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அதன் பாகம் 2 இன்றைய வலம்புரியில் வெளியாகியது. அதனை இங்கு உகரம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
பகுதி 1 இனைப்படிக்க ➧➧➧
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 02
2016-01-05 10:34:10


பெருமதிப்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே!
ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­ முன்னிலையில் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டமை ஒரு முரண்பாட்டைத் தோற்றுவித்தது எனக்கூறியிருந்தீர்கள்.
முதலமைச்சரின் அச்செயற்பாடு தொடர்பில் எவரும் ஐயம் கொண் டிருக்கத் தேவையில்லை. ஒரு சுமுகமான அறிகு றியை வெளிப்படுத்துவதென்பது அரசியல் இராஜதந்திரத்தின் தேவை என்பதை தாங்கள் மறுதலிக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்த அடிப்படையில் தான் ஜனாதிபதி மகிந்த முன்னிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்த வகையிலும் மனக்கிலேசம் அடை யத்தேவையில்லை. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேதின நிகழ்வைக் கொண்டாடிய போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு சேர்ந்து தேசியக் கொடியைத் தூக்கிப் பிடித்தார். சம்பந்தர் தேசியக் கொடியைத் தூக்கிப் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லையே என்று நீங்கள் சொன்னால் அதற்கு நானும் ஆம் என்றுதான் சொல்லுவேன்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்கள் உறவுகளைச் சங்காரம் செய்த கொடுமைத்தனம் எங்கள் இதயங்களை நெருப்பாக்கியிருக்கும் போது தேசியக் கொடியை தூக்கிப்பிடிப் பதில் நியாயம் இருப்பதாக நான் கருதவில்லை.

ஒவ்வொரு மனிதரும் செய்கின்ற செயல்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டும் மதிப்பீடு செய்யப்படும் என்பதை நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடு சேர்ந்து தேசியக் கொடியை சம்பந்தர் தூக்கிப் பிடித்தார். இது கண்டு தமிழ்மக்கள் கொதித்தெழுந்த போது காளியின் வாகனம் சிங்கம். அதனால் எனக்கு சிங்கக் கொடிமீது அளவு கடந்த அன்பு என்று நியாயம் கூறினார் சம்பந்தர்.  இந்த நியாயத்திற்குள்  தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தர் எத்தகைய நிலைப்பாட் டைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறதல்லவா? இதுமட்டுமல்ல 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச ­ 2015ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் தேநீர் விருந்துபசாரம் ஒன்றை பாராளுமன்றத்தில் வழங்கினார்.
இதன்போது எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் மகிந்த ராஜபக்­சவை ஆரத்தழுவிய காட்சியைக் கண்டபோது இராமனும் குகனும் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடு இப்படித்தான் இருந்திருக்குமோ என்று  எண்ணத்தோன்றிற்று.

ஆக இத்துணை சம்பவங்கள் நடந்திருக்கும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மகிந்த ராஜபக்­ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதென்பது ஒரு சம்பிரதாயச் சடங்கிற்குள் அமை யுமேயன்றி அதனை விமர்சித்தல் எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! தாங்கள் எமக்கு எழுதிய அன்பு மடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் விட்ட தவறுகள் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இது தங்களின் நடுநிலையான விமர்சிப்புக்கு தக்கசான்று என்றுணர்கிறேன். 

அதேநேரம் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகாமல் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் விட்ட தவறுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா? என்பது கேள்வியே.
ஆக நீங்கள் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பை கவனிப்பீர்களாக இருந்தால் பேரவையின் தோற்றத்திற்குப்  பின்னர் அவர்கள் நிச்சயம் உசார் அடைவார்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.
கூட்டமைப்பு உசார் அடைகின்ற போது அவர்கள் மக்களைத் தேடிச் செல்கின்ற சந்தர்ப்பங்கள் நிச்சயம் ஏற்படும். 

இதன் மூலம் மக்கள் படுகின்ற கஷ்டங்களை, துன்பங்களை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அறிவதற்கு வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறோம். அத்தகையதொரு மாற்றம் கூட்டமைப்பில் ஏற்பட் டால், அதற்குக் காரணம் மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவையாகவே இருக்க முடியும்.
அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! தமிழ் மக்கள் பேரவை  ஒரு அரசியல் கட்சியோ மாற்றுத் தலைமையோ அல்ல. அது ஒரு மக்கள் இயக்கம்  என்பதை தங்களுக்கு மீளவும் உறுதிப்படுத்த விரும்புகின்றேன். எனினும் தமிழ்மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக- மாற்றுத் தலைமையாக பார்ப்பதில் இருந்து விடுபட முடியாதவராக நீங்கள் இருப்பதையும் என்னால் உணரமுடிகிறது. 
அறத்தை, நீதியை உரைக்கக் கூடிய தாங்கள் உண்மையை உணரமுடியாத சூழ்நிலையில் இருப் பீர்களாயின் அது நாம் செய்த தவக்குறைவு என்றுரைப்பேனே யன்றி, நீங்கள் செய்த தவறு என்று நான் ஒரு போதும் நினைக்க விளையேன். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்  அதனைக் கட்சிக்குள் தீர்ப்பதுதான் நியாயம். இதனை விடுத்து  மாற்றணியோடு கைகோர்க்க முதலமைச்சர் நினைத்ததில் தங்களுக்கு துளியளவேனும் உடன்பாடில்லை என்று கூறியிருந்தீர்கள். இதற்காக விபீடணன் இராம னோடு சேர்ந்து  போனதையும்  உதாரணப்படுத்தியிருந்தீர்கள். 
எனது சந்தேகம் எல்லாம் மாற்று அணி என்று நீங்கள்  யாரைப்  பார்க்கிறீர்கள்.  யாரைக் கூறுகிறீர்கள் என்பது தான்.தமிழ்மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும்  தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள். 

ஆக, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே வில கியிருந்தது. அப்படியா னால் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பின் உரிமைக் கட்சிகள் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையில்  வடக்கின் முதலமைச்சர் இருப்பது எந்த வகையிலும் மாற்று அணியுடன் கைகோர்ப்பது என்பதாக  இருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட் டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமை யிலான ஈ.பி.ஆர்.எல். எப், தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்த போது அதுபற்றி யாருமே விமர்சிக்கவில்லை. கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அதே கட்சிகள், தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றால் அது மாற்று அணி என்று பெயர் சூட்டப்படுவது எந்த வகையிலும் நியாயமாகாது என்பதை தாங்கள் அறியாதவர் அல்ல. 

 (நாளை தொடரும்)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...