•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, January 22, 2016

ஆகமம் அறிவோம் | பகுதி 4 | சைவசமயநெறி கூறும் ஆச்சாரிய இலட்சணம்

ங்களை இம்முறையும் சற்று ஏமாற்றவேண்டியிருக்கிறது.
இம்முறை கிரகணங்களின் போது ஆலயங்களைப் பூட்டவேண்டுமா?
என்பது பற்றி எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன்.
ஆனால் அதற்கு முன் ஆச்சாரிய இலட்சணம் பற்றி,
வேறு சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
மறைஞானசம்பந்தநாயனாரால் அருளிச் செய்யப்பட்ட,
கிரியைகள் பற்றிக் கூறும் ‘சைவசமயநெறி’ என்னும் நூல் பற்றி முன்பு கூறியிருந்தேன்.
ஆறுமுகநாவலர் உரை செய்த அந்நூலின் பிரதி ஒன்று,
தற்செயலாக நேற்று என் கைக்குக் கிடைத்தது.
சென்ற முறை எழுதிய விடயத்தோடு தொடர்பாய் இருப்பதால்,
அதுபற்றி எழுதிவிட்டு பிறகு,
நான் சொன்ன விடயம் பற்றி எழுத உங்களிடம் அனுமதி கோருகிறேன்.


சைவசமயத்தின் நாற்பாதங்களுள்,
கிரியாபாதத்தை இந்நூல் விளக்கிக் கூறுகிறது.
இந்நூற்பாக்கள் குறள்வடிவாய் ஆனவை.
சைவ ஆகமங்களின் கருத்துக்களை உள்வாங்கி,
‘சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளை’ப் பெற்று உய்யும் வண்ணம்,
‘ஸ்நானவிதி’(குளிக்கும் முறை) முதல்,
‘இஷ்டலிங்க ஸ்தாபனம்’(மனவிருப்புக்குரிய லிங்கத்தை உருவாக்குதல்) வரை உள்ள,
சிவகிரியைகளைப் பற்றிக் கூறுவதாலேயே,
இந்நூலுக்கு ‘சைவசமயநெறி’ என்னும் பெயர் சூட்டப்பட்டது.
இந்நூலில் ஆசாரிய இலக்கணம், மாணவர் இலக்கணம்,
பொதுவிலக்கணம் எனும் மூன்று பிரிவுகள் அமைந்துள்ளன.


தீட்சை பிரதிஷ்டை முதலிய,
கிரியைகளைச் செய்யவேண்டியவரே ஆசாரியர் ஆவர்.
எனவே இந்நூலின் முதற்பகுதியில்,
ஆசாரியர் இலக்கணமும்,
ஆசாரியர் எவர் என்று அறியும் முறைமையும் கூறப்பட்டுள்ளன.


மேற்குறிப்பிட்ட ஆசாரியரின் தரத்தை அறிந்து,
தங்களது பக்குவத்திற்கேற்ப,
தீட்சை பெற விரும்புவோரே மாணாக்கர் எனப்படுவர்.
அவரது இலக்கணம் கூறும் பகுதி இரண்டாவது பகுதியாய்,
இந்நூலில் கூறப்பட்டுள்ளது.


ஆசாரியர், மாணாக்கர் எனும் இவ்விருவரும்,
கிரியைநெறிகளை அறிந்து அதன்படி ஒழுகி,
இக, பர நலங்களை பெறுதற்கான விடயங்களை,
பொதுவிலக்கணம் எனும் இந்நூலின் மூன்றாவது பகுதில் கூறியுள்ளார்.


இனி இந்நூலில் கூறப்படும் ஆசாரிய இலக்கணம் பற்றிய,
கருத்துக்களை முதலில் காணுவோம்.
ஆசாரியர், சாதகர், புத்திரர், சமயிகள் என ,
ஆசாரியர் பற்றி நால்வகைப்படுவர்.


சாதகர் என்பவர் யார்?
சாதகர்: சமயம், விசேடம், நிர்வாணம் ஆகிய மூன்று தீட்ஷைகளையும் பெற்று நித்திய, நைமித்திய கருமங்களை சிவாகம விதிப்படி செய்து,
ஆசாரியனை வணங்கி,
நிர்மலரான சிவபெருமானுடைய திருவடிகளில் அன்பு பொருந்தி
தன்னோடு சகசமாய் உள்ள ஆணவம் முதலிய  மும்மலங்களையும் நீக்குபவர்.

ஆசாரியர் என்பவர் யார்?
மேற்கூறிய மூன்று தீட்ஷைகளுடன்,
ஆசாரிய அபிஷேகமும் பெற்று,
நித்திய, நைமித்திய, காமிய கருமங்களைச் செய்து
சாதகர், புத்திரகர், சமயிகள் என்னும் மூவகை மாணாக்கர்களையும் கொண்டு அவரவர் அதிகாரத்திற்குரிய கருமங்களைச் செய்விப்பவர்.

சமயி என்பவர் யார்?
சமய தீட்ஷை பெற்று
சிவாகம விதிப்படி நித்திய கருமங்களை மாத்திரம் செய்பவரும்,
சிவாலயத் தொண்டைச் செய்பவருமாம்.

புத்திரகர் என்பவர் யார்?
சமய, விசேட தீட்சைகளைப் பெற்று
ஸ்நானம், தர்ப்பணம், சிவபூசை, அக்கினிகாரியம், சிவத்தியானம் ஆகியவற்றைச் செய்து
அதிதிகளுக்கு அன்னம் ஊட்டி
ஆசாரியரும், சாதகரும் ஏவியதை அன்புடன் செய்பவர்.

எவர் ஆசாரியர் ஆகலாம்?
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து,
காவேரி, கோதாவரி, சோணாநதி, துங்கபத்திரை என்பவை,
ஒன்பது புண்ணிய தீர்த்தங்களாம்.
இத்தீர்த்தக்கரையிலுள்ள புண்ணிய தேசங்களில் பிறந்து வசிக்கிறவர்களும்,
பிற புண்ணிய நதிக்கரையிலுள்ள தேசங்களில் வாழ்பவர்களும்,
தெய்வீக சிவலிங்கங்கள் உள்ள தலங்களில் வாழ்வபர்களும்,
மான் சஞ்சரிக்கின்ற தேசங்களில் வாழ்பவர்களுமே,
ஆசாரியர்களாய் ஆக முடியும்.


ஆசாரியத் தகுதி

பசு சாஸ்திரத்தைப் பற்றாது விட்டுவிட்டு,
சிவ சாஸ்திரத்தைப் பற்றிப் பயிலும்,
பிராமணர், ஷத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய வர்ணங்களில் உள்ள,
சுத்த குலத்தில் பிறந்த அனைவருமே ஆசாரியர்கள் ஆவார்கள்.


ஆசாரிய ர்க்கு இருக்கக்கூடாத  தகுதியீனங்கள்

➥ காமம் முதலிய மனக்குற்றங்களும், அங்கயீனம் முதலிய உடற்குற்றங்களும் இருத்தல்.
➥ குள்ளனாகவோ, நெடியனாகவோ இருத்தல்.
➥ அதிவெள்ளை, அதிகறுப்பு நிறங்களோடு இருத்தல்.
➥ முடவனாயும், சொத்திக்கையனாயும், கூனனாயும், ஒற்றைக்கண்ணனாயும்,  இருகண் குருடனாயும், பிற அங்கக் குறையுடையவனாயும் இருத்தல்.
➥ பிற ஆன்மாக்களுக்குத் துன்பம் செய்பவனாயும், குழிவிழுந்த கண்ணை உடையவனாயும், எப்போதும் பீளை நீர் வழியும் கண்ணை உடையவனாயும் இருத்தல்.
➥ பெரிய உதட்டையும், பெரிய பல்லையும், சப்பை மூக்கையும் உடையவனாய் இருத்தல்.
➥ குன்றிய, நீண்ட முழங்கால்களை உடையவனாயும், கடினமான, நீண்ட முறம் போன்ற பாதங்களை உடையவனாயும் இருத்தல்.
➥ பெரிய வயிறு, கரகரத்த குரல், திக்குவாய் முதலியவை உடையவனாய் இருத்தல்.
➥ வாத, பித்த, காசநோய்கள் உடையவனாய் இருத்தல்.
➥ பதினாறு வயதிற்கு உட்பட்டவனாயும் (தருணனன்), எழுபது வயதிற்கு மேற்பட்டவனாயும் (விருத்தன்) இருத்தல்.
➥ அதிக-கோபம், ஆசை, துர்க்குணம், இரக்கமின்மை முதலியவை உடையவனாய் இருத்தல்.
➥ தீய வார்த்தைகளைச் சொல்பவனாய் இருத்தல்.
➥ சோம்பல், கபடம், மறதி, உலகஆசை முதலியவை உடையவனாய் இருத்தல்.
➥ ஆசாரியனிடம் பெற்ற கல்வியை அவன் போதித்தபடி மாணாக்கருக்குப் போதிக்கும் சக்தி இல்லாதவனாய் இருத்தல்.

மேற்குறிப்பிட்ட தகுதியீனங்களை உடையோர்,
தீட்சை, பிரதிஷ்டை முதலியவற்றைச் செய்ய தகுதியற்றவராவர்.
இத்தகுதிகள் இல்லாதவர்கள் மேற்குறித்த கிரியைகளைச் செய்தால்,
அது குற்றம் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
மேற்குறிப்பிட்ட தகுதியீனங்களை உடையோர்.
ஆசாரியர்கள் ஆவாதற்கு மட்டுமன்றி,
பிரதிஷ்டை முதலிய கிரியைகளிலே ஆசாரியர்களோடு கூடியிருந்து,
ஹோமம், சாந்தி முதலிய கருமங்களைச் செய்வதற்கும் அனுமதிக்கப்படார்.


ஆசாரியர்க்கு இருக்க வேண்டிய  தகுதிகள்

➧➧ சமய, விஷேட, நிர்வாண தீட்ஷைகளையும், ஆசாரிய அபிஷேகத்தையும் பெற்று அவற்றிற்குரிய ஆசார அனுட்டாணங்களைக் கடைப்பிடிப்பவனாய் இருத்தல் வேண்டும்.
➧➧ தன்னுடைய ஆசாரியனிடத்திலே பக்தி உடையவனாயும், சிவ அர்ச்சனை முதலிய கிரியைகள் செய்யும்போது சிவனை ஆண்டவனாகவும், தன்னை அடிமையாகவும் கொள்வதோடு இறைவன்பால் பேரன்பும் வைத்திருத்தல் வேண்டும்.
➧➧ அகங்கார, மமகாரங்கள் குன்றி வாழ்தல் வேண்டும்.
➧➧ சிவோகம் பாவனை பண்ணி தீட்சை செய்யும் தகுதியுடையோராய் இருத்தல்.
➧➧ ஆன்மாக்களின் தகுதியறிந்து அவரவர்க்குரிய தீட்சை செய்யும் தகுதிபெற்றிருத்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடையோரே,
ஆசாரியர் ஆகலாம் என்கிறது இந்நூல்.மூவகை ஆசாரியர்கள்


  • பிரேரக ஆசாரியர்
  • போதக ஆசாரியர்
  • முக்தி ஆசாரியர் என,

ஆசாரியர் மூவகைப்படுவர்.


பிரேரக ஆசாரியர்

நல்ல மாணாக்கர்களை,
உமக்கு அருள் செய்யத்தக்கவர் இவரே என்று,
யோக்கியமான ஆசாரியரை இனம்காட்டி,
அவரை அடையும்படி செய்து உய்விப்பவனே,
பிரேரக ஆசாரியர் எனப்படுவர்.
தமது தேவைக்காக யோக்கியம் அல்லாதவனை,
யோக்கியமானவன் என்று காட்டி,
மாணவனை வழிப்படுத்துவோன்,
நரகத்தை அடைவான் என்று ஆகமம் கூறுகிறது.


போதக ஆசாரியர்

தன்னை வந்தடைந்த தகுதியுடைய மாணாக்கனுக்கு,
சமய, விஷேட தீட்சைகளைச் செய்வித்து,
அவற்றிற்குரிய ஆசாரங்களையும் கற்பிப்பவனே,
போதக ஆசாரியர் ஆவர்.


முக்தி ஆசாரியர்

தன்னை அடைந்த தகுதியுடைய மாணவனை,
பன்னிரண்டு ஆண்டுகள் பக்குவம் பார்த்துத் தேர்ந்து,
அவனுக்கு நிர்வாண தீட்சை செய்வித்து,
அவனுடைய பாசத்தைப் போக்குவித்து,
முக்தி பெறச் செய்பவனே,
முக்தி ஆசாரியர் ஆவர்.


யாருக்கு யார் ஆசாரியராகலாம்?

பிரமாணருக்கு பிராமணரே ஆசாரியர் ஆவர்.
ஷத்திரிய, வைஷிக, சூத்திர வர்ணத்தார் மூவர்க்கும்,
பிராமணர் ஆசாரியர் ஆகலாம்.
ஷத்திரிய, வைஷிக, சூத்திர வர்ணத்தாருக்கு,
ஷத்திரியர் ஆசாரியர் ஆகலாம்.
வைஷிக, சூத்திர வர்ணத்தாருக்கு,
வைஷிகர் ஆசாரியர் ஆகலாம்.
சூத்திரர் சூத்திரருக்கே ஆசாரியர் ஆகலாம்.


விதிவிலக்குகள்

தன் சாதி பிராமணருள்,
ஞானகாண்டம் போதிக்கவல்ல ஆசாரியன் இல்லையாயின்,
பிராமணர் அரசனிடத்திலே ஞானோபதேசம் பெறலாம்.
அத்தகையோர் ஞானஉபதேசத்தினை மட்டுமே,
அங்ஙனம் பெறலாம்.
கர்ம உபதேசத்தினை ஒருகாலும் பெறுதல் கூடாது.
இதுபோலவே தன் வர்ணத்தில்,
ஞானாசிரியன் இல்லையாயின்,
தனக்கடுத் வர்ணத்தில் அவ்வவ் வர்ணத்தார்,
ஞான உபதேசங்களைப் பெறலாம் என்பது விதியாகும்.
பிராமணர், ஷத்திரியர், வைஷிகர் முதலிய,
முதல் மூன்று வர்ணத்தாருள்ளும்
ஞானாசிரியர்கள் இல்லையாயின்,
அம்மூன்று வர்ணத்தாரும்,
நான்காம் வர்ணத்தாராகிய சூத்திரருள்,
ஞான ஆசிரியன் இருப்பின்,
அவ் ஆசிரியரிடத்திலே ஞான உபதேசம் பெறலாம் என்பதும் விதியாகும்.


விதிவிலக்கிற்கான மேற்கோள்கள்

பிரம்ம ரிஷிகளாகிய துர்வாசன் முதலாகியோர்,
ஷத்திரியனாகிய விதுரனிடம் ஞானோபதேசம் பெற்றனர்.
அந்தணராகிய அருணந்தி சிவாச்சாரியார்
சூத்திரராகிய மெய்கண்டதேவரிடம் ஞான உபதேசம் பெற்றார்.
இவை மேற்சொன்ன கருத்துக்கான மேற்கோள்கள்.


சூத்திர ஆச்சாரியனுக்கு சிறப்பு விதி

சூத்திரனும் நைஷ்டிக பிரம்மச்சாரியாகி,
பதி, பசு, பாசம் எனும் உண்மைகளை அறிந்தானாகில்,
அவனும் ஆசாரியனாகலாம்.
சூத்திரருள் நைஷ்டிக பிரம்மச்சாரிக்கே குருத்துவம் உண்டு.
இல்லறத்தார் சமயி, புத்திரர், சாதகர் ஆகிய,
தகுதிகளையே பெறலாம்.
நைஷ்டிக பிரம்மாச்சாரியத்தில் சிறிதேனும் வழுவியரைக் கொண்டு,
தீட்சை, பூசை முதலியவற்றை செய்து கொண்டவர்,
நரகத்தில் மூழ்குவர் என்கிறது ஆகமம்.
பிரம்மச்சாரிகள் பௌதீக பிரம்மச்சாரி, நைஷ்டிக பிரம்மச்சாரி என,
இருவகைப்படுவர்.
பௌதீக பிரம்மச்சாரி எனப்படுபவர்,
கற்கும் காலம் முடியும் வரை பிரம்மச்சரியத்தைக் காப்பவர்.
நைஷ்டிக பிரம்மச்சாரி என்பவர்,
ஆயுட்காலம் முழுதும் பிரம்மச்சரியம் காப்பவர்.


யார் எதனைக் கற்கவேண்டும்?

பிராமணர், ஷத்திரியர், வைஷிகர் ஆகியோர்,
வேதம், சிவாகமம் ஆகிய நூல்களையும்,
சந்தை, இரட்டை ஆகிய இலக்கணங்களையும் ஓதலாம்.
சூத்திரர் சைவ ஆகமத்தையும்,
பதினெண் புராணம் முதலிய நூல்களையும் ஓதலாம்.
நான்கு வர்ணத்தாரும் சிவதீட்சை பெற்று,
வேத வாக்கியங்களின் அர்த்தங்களை ஓதல் வேண்டும்.
அன்றேல் அரசர்க்கும், உலகத்திற்கும் தீங்கு வரும் என்று,
சிவாகமங்கள் செப்புகின்றன.


ஆசாரியர்க்கான வேறுசில தகுதிகள்

பதி, பசு. பாசம் எனும் முப்பொருள்கள் பற்றியும்,
குருவிடம் தெளிவு பெற்று,
அதன் பொருளை இதுவோ, அதுவோ என்று ஐயுறாமலும்,
இதை, அதாய் நினையும் திரிபு அறிவு கொள்ளாமலும்,
தெளிவு, அறிவு பெற்றிருப்பதே,
ஆசாரியராதற்கான முதற் தகுதியாம்.
முன் சொன்ன அவயவ லட்சணங்கள் இல்லையாயினும்,
மேற்சொன்ன தெளிவைப் பெற்றவர்கள் ஆசாரியர்கள் ஆகலாம்.
முன்சொன்ன லட்சணங்கள் அத்தனையும் இருந்தாலும்,
மேற்சொன்ன தெளிவைப் பெறாதவர்கள் ஆசாரியர்கள் ஆக முடியாதாம்.
நற்குறிகளும், நற்குணங்களும் அமைந்திருப்பினும்,
சிவஞானம் இல்லாதவன் ஆசாரியன் ஆகமுடியாது.

ஆசாரிய இலட்சணம் தொடரும்..


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...