•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, January 8, 2016

மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 5 (முற்றும்)

கடந்த இருவாரங்களுக்கு முன்பு, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும், அதுதொடர்பாக வடக்குமாகாண முதலமைச்சர் மீதான ஐயங்களையும் கருவாகக்கொண்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதி உகரத்தில் வெளியான "கொழும்பின் சதியா? யாழின் விதியா?" எனும் கட்டுரை பெரும் அதிர்வினை உருவாக்கியது வாசகர் அறிந்ததே.

அக்கட்டுரையில் தமிழ் மக்கள்  பேரவை தொடர்பாகவும், முதலமைச்சர் தொடர்பாகவும் சொல்லப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக வலம்புரியில் அடுத்தடுத்த நாட்களே, புருசோத்தமன் எனும் புனைபெயரில் "கம்பவாரிதிக்கு ஓர் அன்புமடல்" எனும் தலைப்பில் மூன்று பாகங்களாக கட்டுரை வெளியாகியது. உகரமும் 'பத்திரிகா தர்மத்தை' மதித்து அதனைப்பிரசுரித்தது.
 CLICK HERE TO DOWNLOAD

தொடர்ந்து அம்மடலுக்கு பதில்மடலாக "வலம்புரி புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல்" எனும் தலைப்பிலே உகரத்தில் மூன்று பாகங்களாக கம்பவாரிதியின் மடல் வெளியாகியது. 'வலம்புரியும்' அதனை அப்படியே வெளியிட்டு தன் ஊடக தர்மத்தை கூட்டிக்கொண்டது. அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் கம்பவாரிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அதன் நிறைவுப் பகுதியாக பாகம் 5 இன்றைய வலம்புரியில் வெளியாகியது. அதனை இங்கு உகரம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 05 (முற்றும்)
2016-01-08 10:07:26
அன்புமிகு கம்பவாரிதி அவர்களுக்கு,
பாகம் நான்கில் தங்களுக்கு எழுதிய விளக்கங்கள்  தமிழ்மக்கள் பேரவையைப் பற்றிய புரிதலுக்குப் போதுமானது என்று கருதுகிறேன். தங்களின் சில கருத்துக்களுடன் எனக்கு நிறையவே உடன்பாடு உண்டு.
எங்கள் அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு எங்கள் இனத்திற்கு பெருங்கேடாய்  அமைந்தது என்பது முற்றிலும் உண்மை.

இதைவிடப் பெருந்துயர் முந்தநாள் அரசியலுக்கு  வந்து சேர்ந்த இளையவர்களும் ஊழல் புரிதலிலேயே  கண்ணும் கருத்து மாய் உளர் என்பது உண்மைச் செய்தியாகும்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சரைச் சந்திக்காத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்தமை ஏற்புடையது என்று கூறியிருந்தீர்கள்.
அதற்காக இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த செய்தியை சான்றாதாரப் படுத்தியிருந்தீர்கள். எனினும் என்னைப் பொறுத்தவரை மேற்குறித்த இரண்டு சம்பவங்களும் வேறுபட்ட தளங்களையும் சூழமைவையும் கொண்டவை.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர்  ரணில் விக் கிரமசிங்க கலந்து கொண்ட நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். இருந்தும் பிரதமர்  ரணில் அவரைத் திரும்பியும் பார்க்க வில்லை.

ஒரு நாட்டின் பிரதமர்  அவ்வாறு நடப்பதற்குக் காரணம் என்ன? பிரதமர்  ரணிலுக்கும் முதல்வர்  விக்னேஸ்வரனுக்கும்   இடையே முன்பின் முரண்பாடுகள் இருந்ததா எனில் எதுவுமே இல்லை.
 இருந்தும் தந்தி என்ற இந்தியத் தொலைக்காட் சிக்கு பிரதமர் ரணில் அளித்த செவ்வி ஒன்றில் பிரதமர் ரணில் எங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொய்யர் என்றுரைத்தார்.
அந்தோ! கொடுமை. பொய்யர் தம் பொய்யை மெய்யாக்க கூட்டமைப்பு  நினைத்தமை மன்னிக்க முடியாத மகா கயமைத்தனமாகும்.
இத்தகைய கயமைத்தனங்களுடன் சேர்ந்து போவது, அவர்களைத் திருத்துவதென்பது நடக்கமுடியாத காரியம். 
 காரணம் ஒன்று இரண்டு கயமைத்தனங்கள் அன்று. அவர்களின் சிந்தனையே கயமையாகிவிட்டன. இதற் குப் பல உதாரணங்களை  முன்வைக்க முடியும். அதில் தாங்களும் அறிந்த சம்பவம் ஒன்று உண்டு.
பேராசிரியர் சி.க.சிற்றம் பலம் அவர்களை தேசியப் பட்டியலின் முதன்மை வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்தது.

பொதுத் தேர்தல் காலத்தின்போது கூட்டமைப்பின் தேசியப் பட்டியலின்  முதன்மை வேட்பாளர் பேரா சிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் பிரசாரக்கூட்டம் நடைபெ றும் என்று நோட்டீஸ் அச்சிட்டு பகிரங்கப்படுத்தப் பட்ட  அந்தக்கூட்டம் பொன்னாலையில் நடந்தது.

கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா அவர்கள் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது,

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வருவமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த மேடையில் உங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு ஒரு எம்.பி. ஏற்கனவே  தெரிவாகியிருக்கிறார். அவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் என்று  கணீர் என்ற குரலில் கூறிய போது,  அவையில் இருந்து எழுந்த கரகோசத்திற்குப் பின்னர் நடந்தது என்ன?

தேசியப் பட்டியலின் முதன்மை வேட்பாளராக அறிவித்து அவர்  தலைமையில் கூட்டம் நடத்திவிட்டு வெற்றி கிடைத்து இரண்டு நியமன எம்.பிக்களை கூட்ட மைப்பு  பெற்றுக்கொண்ட போது, 
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களுக்கு எம்.பி பதவியைக் கொடுக்காமல் செய்த கொடுமை இராமருக்குக் கைகேயி செய்த கொடுமையிலும் மோசமானது என்பதை அறம் உரைக்கும் பிதாமகராகிய தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஊரெல்லாம் அறிவித்து விட்டு கிடைத்த எம்.பி. பதவியைக் கொடுக்காமல் விட்ட கயமை படைத்தவர்கள் தமிழ்மக்களுக்காக ஏதும் செய்வார்கள் என்று தாங்கள் நம்பினால், நாம் செய்த பாவம் அவ்வளவு தான் என்று மட்டுமே சொல்ல முடியும்.

ஒரு கட்சிக்குள் பிணக்கு என்றால் அது தீர்க்கப்பட வேண்டும் என்று தாங்கள் கூறுவது முழுவதும் உண்மை. அப்படியானால் பேராசிரியர் சிற்றம்பலம்  அவர்களுக்கு எம்.பி.பதவியை கொடுக்காமல் விட்டபோது  தமிழரசு க்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா கொதித்தெழுந்திருக்க வேண்டாமோ?
பேராசிரியர் சிற்றம்பலம் இலங்கைத் தமிழரசுக்  கட் சியின் மூத்த தலைவர். எங்களுக்கு முன்னதாகவே கட்சிக்காகப் பாடுபட்ட ஒரு தலைவர். அவரை ஏமாற்றினால் அது பெரும் பாவம். அவருக்குப் பதவி கொடுக் கத் தவறின் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில்  இருந்து விலகுவேன் என்று மாவை.சேனாதிராசா இடித்துரைத்திருந்தால் அது நீதி என்பேன்.

ஆனால் அநியாயங்கள் நடக்கும்போதெல்லாம் மெளனமாக இருந்த மாவை. சேனாதிராசா, தமிழ்மக்கள் பேரவையில் பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்த போது பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்கூசாமல் சொல்லுகிறாரே! இவர்களை ஒன்றுபடுத்தி- ஒற்றுமைப்ப டுத்தி உரிமை பெறமுடியுமா என்ன?

எவரையும் ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால்,  இராவணனை இராமன் வதம் செய்தது ஏன்? ஒன்று விட்ட சகோதரர்களை பாண்டவர்கள் பரலோகம் அனுப்பியது எதற்காக?
ஆக,ஒன்றை மட்டும் சொல்லுவேன். தமிழரசுக் கட்சியில் இருந்து பேராசிரியரை நீக்கினாலும்  தமிழரசுக் கட்சி பேராசிரியர் சிற்றம்பலத்திற்குரியதாக இருக்குமேயன்றி அது ஒருபோதும் மாவை தரப்பிற்காக இருக் காது. இருக்கவும் முடியாது.

அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய உறுப்பினர்களில் நான்கு ஐந்து பேர் மாகாண சபையில் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழ்மக்கள் பாவம் என்பது உங்களுக்குத் தெரியவரும்.

அந்தளவிற்கு அந்த உறுப்பினர்கள் நக்கலும் நையாண்டித்தனமும் செய்கின்றனர். மக்களால் தெரிவு செய் யப்பட்ட இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது எந்தவகையிலாவது நியாய மாகுமா?

யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்தியப் பிரதமர் மோடி எங்கள் முதலமைச்சருக்குக் கொடுத்த மதிப்பு;  யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த முன்னாள்  அமைச்சர் ப.சிதம்பரம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு  சிறந்த தலைவர் என்று சூட்டிய புகழாரம் என்பவற் றால் தமிழ்மக்கள் தலை நிமிர்ந்து, நல்ல தலைவன் நமக்குக் கிடைத்தார் என்று  புளகாங்கிதம்  அடையும் போது,மூன்று,நான்கு இளம் மாகாண சபை உறுப்பினர் கள் முதலமைச்சரை அவமதிக்குமாறு செயற்படுவது தம் தந்தைக்கு ஒப்பானவரை இழிவுபடுத்துவதற்குச் சமனன்றோ!

இத்தகையவர்கள் எங்கள் மாணவர்களுக்கு  எங்ஙனம் முன்மாதிரியாக இருக்க முடியும். கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்  ஒரு எம்.பிக்காக இவ்வளவு தூரம் அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால்;  எங்கள் உறவுகளுக்கு புதுமாத்தளனில்,  முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை பற்றிய நினைவு இவர்களிடம் சிறி தளவேனும் உண்டா?

எதுவாயினும் அன்புக் குரிய கம்பவாரிதி அவர்களே! என்றோ ஒரு நாள் தங்களின் ஆசி தமிழ் மக்கள் பேரவைக்கு  கிடைக்கும் என்பது என் ஆத்மபலத்தின் மீதான நம்பிக்கை.
அன்புமிகு கம்பவாரிதி அவர்களே! 1988 ஆம் ஆண்டு  தங்களை நேரில் சந்தித்துக் கதைக்கும் பேறு பெற்றேன்.

புலவர் ஈழத்துச் சிவானந்தரின் ஆலயமணி என்ற சஞ்சிகையின் வெளியீட்டிற்காக தாங்களும் மற்றும்  திருநந்தகுமார், சித்தாந்த சரபம் கணபதிப்பிள்ளை, புலவர்  ஈழத்துச் சிவானந்தன் ஆகியோரும் என்னூ ருக்கு வந்திருந்தீர்கள்.அந்த நிகழ்வில் மாணவனாக இருந்த எனக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் தரப்பட்டது. என்னுரை தொடர்பில் உங்கள் வாழ்த்தையும் பெறும் பேற்றை அன்றைய நாளில் பெற்றேன்.
எனினும் என்  எழுதாக் குறை காரணமாக தங்களைச் சந்திக்க வேண்டும் என்ற என் அவா இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்பு நிறைவேறியது.

ஆம், 2013 இல் தங்களைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். தாங்கள் நடுவராக இருக்க, தமிழகத்தின் தகைசார் சான்றோர்களுடன் இச் சிறியேனும் பட்டி மண்டபத்தில் வாதம் புரிய சந்தர்ப்பம் தந்தீர்கள்.
2015 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கம்பன் விழாவின் வழக்காடு மன்றத்தின் போது தமிழகத்தில் இருந்து வருகை தரவேண்டிய தமிழறிஞரின் வருகை தாமதமாக, மூவர் அடங்கிய நீதி  ஆயத்தில் நம்மையும் பொருட்டாய்க் கருதி அதில் இருத்தி மகிழ்ந்தீர்கள். இந்த உயர் பெரும் உத்தமக் குணம் யார்க்குள.
சிறியவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்து  அவர்களையும் ஆளாக்க வேண்டும் என்ற தங்களின் உயர்ந்த நினைப்பே உங்கள் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்கிறது.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று நீங்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

ஆகையால் தமிழ்மக்கள் பேரவையின் கருமம் கண்டு தாங்கள் மெய்ப்பொருள் அறிவீர்கள். அப்போது உங்களின் ஆசியும் ஆத்ம பலமும்  தமிழ்மக்கள் பேரவைக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது என் அசையாத நம்பிக்கை.

அதுவரையில்;  அரசியல் என்ற எல்லை கடந்து  தமிழ் மக்களின் நலன் கருதிய ஒரு பலமான மக்கள் அமை ப்பு அவசியம் என்று  தாங்கள் கருதினால், தமிழ் மக்கள் பேரவையின் பணி குறித்த உங்கள் அவதானத்தை கரிசனையோடு அருளுக. 

அது தமிழ்மக்கள் பேரவை நம் அனைவரினதும் அமைப்பு என்ற பொதுமையை நிச்சயம் ஏற்படுத்தும்.இதுவே நீங்கள் குறிப்பிட்ட ஆச்சரியமாகவும் இருக்கும். 

(நன்றியுடன் முற்றும்)
 CLICK HERE TO DOWNLOAD

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...