•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, January 27, 2016

பேரரசின் காவியம்..

வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது
யாழ்க் காற்று.
நின்
தமிழ் முழக்கில்
தைரியம் தந்தாய்.

வசீகர வார்தைகளால்
கவியழகிக்கு
மருதாணியிட்ட கவியரச!


கவித் தூதன் கடல்கடந்து வந்ததில்
மனம் மகிழ்கிறாள்
இன்னும்
சிறை இருக்கும் தமிழ்ச் சீதை.

ஆனாலும் கவியரச!
ஊர் முழுதும் குருதி
பெருக்கெடுத்தபொழுதில்,
கண்ணயர்ந்தவன் நீ.

இன்று,
பிணங்களைப் புழுக்கள்
தின்றுமுடித்தபின்,
வந்த
சுற்றுலாப் பயணத்தில்
அறிவித்தாய்…
ஒருவீரகாவியம் பாடுவதாய்.

குளிர்பதனஅறையுள் அமர்ந்து,
தயாரிப்பாளன் தரும்
பணத்தின் அளவுக்குப் பாட்டெழுத
ஒன்றும்
திரைப்படம் இல்லை..
இது
மாவீரத்தின் வரைபடம்.

எங்கள் அரசியல் தீர்வை
வாழும் உரிமை வரைபை
எங்கள் தலைவிதியை
பிச்சை இடும் பிறநாடுஎன,
ஏந்திஏந்தி
வெட்கங் கெட்டதலைவர்கள்,
இரந்துநிற்பர் இதையும்,
இன்னொருவன்
தரட்டும் எனவே.


ஆனாலும் கவியரச!
அனுபவத்தின் கூர்முனையிலன்றி
அகப்படுதலில்லை
காவியமும் ஓவியமும்.

வீரம்
விலைபோகாத புழுதி
மண்ணின்
சொந்தக்காரன்,நான்.

என் குருதி கசிந்தது
என் நட்பின் தசை எரிந்தது
மாகாவியமானது வாழ்வு.

                                                  - ஸ்ரீ. பிரசாந்தன் 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...