•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, April 5, 2016

அதிர்வுகள் 26 |கல்யாண(ம்) வை! போவமே?

லகை மகிழ்விக்கும் சொற்களுள்,
கல்யாணம் என்பதும் ஒன்று.
உறவு, நிறைவு, குதூகலம், கொண்டாட்டம் இப்படியாய்,
சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும்
கல்யாணம் என்னும் சொல் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது.
ஓர் ஆணையும், பெண்ணையும் முழுமையுறச் செய்யும்,
இனிய வைபவம் அது.
ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை,
ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது.
ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை.
ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது.

ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் இயற்கை அமைத்த,
சந்ததி விருத்திக்கான ஏக்க எழுச்சியை,
சாந்தி செய்யும் சடங்கு அது.
அறவாழ்வின் ஆரம்ப அடிப்படை அது.
ஆணுக்கும், பெண்ணுக்குமாய் அமைக்கப்படும்,
அசையாத உறவுப்பாலம் அது.
அன்பு விருத்தியின் அத்திவாரம் அது.
உலக இயக்கத்தின் ஊற்று அது.
இவ்வைபவத்திற்காய் கனவோடு காத்திருக்கும்,
இளையோர் தொகை எண்ணிலடங்காதது.
அதனால் தான் “கல்யாண வைபோகமே” என,
அதனைக் கொண்டாடிற்று நம் தமிழுலகு.


நான் இக்கட்டுரையில்,
கல்யாணத்தின் பெருமை பற்றி எழுதப் போவதாய் நீங்கள் நினைத்தால்,
அது தவறு.
பின் ஏன் இந்த நீண்ட முன்னுரை என்று கேட்கிறீர்களா?
இன்றைய நிலையில் அவ் அரிய நிகழ்வுக்கு ஏற்பட்டிருக்கும்,
அவலத்தைப் பற்றி எழுதத்தான் அந்த முன்னுரை.
கல்யாண வைபோகமே” என்றிருந்த நிலைமாறி,
இன்று, கல்யாணம் வை! போவமே? என்று உருவாகியிருக்கும்,
நிலை பற்றியே இக் கட்டுரையில் எழுதப்போகிறேன்.
அது என்ன? கல்யாணம் வை! போவமே? என்கிறீர்களா?
கட்டுரையை முழுமையாய் வாசியுங்கள் அது தானாய் விளங்கும்.


வேதாளம் பழையபடி முருக்கமரத்தில  ஏறிட்டுது.
கொழுவல் போடாம அவரால இருக்கமுடியாது.
என்னென்னத்திலயோ கை வைச்சு,
இப்ப மங்கள காரியத்திலயும் கை வைக்க வந்திட்டார்.
இதுக்குத்தான் காலாகாலத்தில கல்யாணஞ் செய்யவேணும் என்கிறது.
நாங்களே அவரை முடிக்கவேண்டாம் என்றனாங்கள்?
இப்ப வயிறு எரிஞ்சு என்ன செய்ய?
நீங்கள் திட்டுவது என் காதுக்குக் கேட்கிறது.


நான் சொல்லப் போவது பற்றித் தெரியாமலேயே.
இப்படித் திட்டுவது என்ன நியாயமாம்?
இது கல்யாணம் கட்டாத வயிற்றெரிச்சலில் எழுதும் கட்டுரை அன்று.
உண்மையைச் சொல்லப் போனால்,
கட்டாத என்னைப் பார்த்து,
கட்டிய பலரும் வயிறெரிகிறார்கள் என்பது தான் நிஜம்.
சரி, சரி அலட்டாம கெதியில சொல்ல வந்ததைச் சொல்லும்!
என்கிறீர்களாக்கும்,
அனுமதிக்கு நன்றி!
ஆயிரந்தான் என்னைத் திட்டினாலும்.
என் எழுத்தை வாசிக்க விரும்பும் உங்கள் ரகசிய ஆர்வம் புரிகிறது.
தொடர்கிறேன்.


சுருங்கச் சொன்னால்,
புனிதமான இக் கல்யாண வைபவம்,
நம் தமிழ்ச் சமுதாயத்தில் அருவருக்கத்தக்க வகையில்,
அசிங்கப்படுவதைப் பற்றித் தான் எழுதப்போகிறேன்.
சுருக்கமே போதும் என்கிறீர்களாக்கும்,
போதும் என்றவர் இவ்விடத்திலேயே நிற்க.
மற்றவர்கள் தொடர்ந்து வாருங்கள்!


ஒரு காலத்தில் கல்யாணம் என்பது,
புனிதம், போற்றுதல், பொழிவு என,
தமிழர்களை மகிழ்வித்த தலையாய வைபவம்.
இன்றோ, மூடத்தனம், பணத்திமிர், விரசம்,
ஆடம்பரம், அகந்தை, அலட்சியம்,
அநாகரிகம், அடிமைத்தனம் என்பவற்றின்,
வெளிப்பாடாய் அது ஆகி விட்டது.
கல்யாணத்திற்கு இருக்க வேண்டிய புனிதம் எல்லாம் போய்,
வீண்விரய, விரச வைபவமாக அது ஆக்கப்பட்டிருக்கிறது.
இவ் அசிங்கத்தைத் தடுக்க முடியாதா?
தெரியாத்தனமாய் எனக்குள் புகுந்து விட்ட இனப்பற்று தூண்ட,
மாரித் தவக்கையாய் நான் கத்தியும் ஏதும் நடக்காது என்று தெரிந்தும்,
என் ரோசக்காரப் பேனா இழுக்க எழுதத் தொடங்குகிறேன்!


விடயத்துக்குள் நுழைவதன் முன்,
இம் மாற்றத்துக்காம் காரணம் என்ன?
இம் மாற்றத்துக்காம் பின்புலம் என்ன?
இப் பிழையில் எவரின் வகிர்பங்கு முக்கியமானது.
என்பவற்றையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டியது,
அவசியமாகிறது.
ஆகா! ஆய்வு, வகிர்பங்கு, பின்புலம் ஆகிய சொற்கள் எல்லாம்,
என்னை அறியாது வந்து விழுந்து விட்டன.
இனி என்ன?
இது அறிஞர்கள் மதிக்கும் ஆய்வுக் கட்டுரை தான் போங்கள்!


“திரும்பவும் சொறியத் தொடங்கிற்றார்.”
நீங்கள் முறைப்பது தெரிகிறது.
என்னை முறைத்து என்ன பயன்?
இச் சொற்களை வைத்துத்தானே.
ஆய்வின் தரத்தை முடிவு செய்கிறீர்கள்.
நான் சொன்னால் மட்டும் குற்றமாக்கும்.
சரி, சரி நீங்கள் எப்படியும் இருந்து விட்டுப் போங்கள்!
நான் விசயத்திற்கு வருகிறேன்.


ஈழத்தமிழர்கள் மொழிப்பற்று மிக்கவர்கள்!
அடிமைத்தனத்தை விரும்பாதவர்கள்!
பண்பாட்டைப் பேணுபவர்கள்!
பக்தி மிகுந்தவர்கள்! சிக்கனமானவர்கள்!
விருந்தோம்பலில் சிறந்தவர்கள்!
போரால் வறுமையுற்று இருப்பவர்கள்!
இப்படியெல்லாம் உலகம் நினைக்கிறது.
இப்படி நினைப்பவர்கள்,
கொழும்பில் நடக்கும் ஒரு கல்யாண வீட்டைப் பார்த்தார்களானால்,
அடுத்த நிமிடமே தம் எண்ணங்கள் அத்தனையையும் மாற்றிக் கொள்வார்கள்.


“முன்னுரையை இப்படியே நீட்டிக் கொண்டு போகாமல்,
சீக்கிரம் விடயத்துக்குள் வாரும்!”
உங்கள் அவசரமும், ஒழிந்திருக்கும் ஆர்வமும் புரிகிறது.
சரி, இனியும் உங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.
வாருங்கள்! கொழும்புக் கல்யாண வீடொன்றின் மீது கவனம் செலுத்துவோம்.


ஆணுக்குப் பதினாறு வயது.
பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது.
கோவலன், கண்ணகி கல்யாணவயது இப்படித்தான் இருந்ததாம்.
பின்நாளில், பெண்ணுக்குப் பதினெட்டு வயது,
ஆணுக்கு இருபத்தொரு வயது என கல்யாணவயது மாறிற்று.
அதற்குப் பிறகு பெண்ணுக்கு இருபத்தொரு வயது,
ஆணுக்கு இருபத்தைந்து வயது என,
மீண்டும் கல்யாணவயதில் மாற்றம்.


என் அக்காவிற்கு இருபத்தொரு வயது வந்ததும்,
அம்மா பட்டபாட்டை நினைத்துப் பார்க்கிறேன்.
பிள்ளைக்கு வயசாயிற்றுது,
இன்னும் கல்யாணம் ஒன்றும் பொருந்தி வரேல்ல”, என்று சொல்லி,
அழுதழுது அம்மா ஐயனாருக்கு ஆயிரம் நேர்த்தி வைத்தது,
நேற்றுப் போல் இருக்கிறது.
என்ன குலமணி? குமரை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிற?
ஊர்ப் பெருசுகள்,
விசாரணை என்ற பெயரில் அம்மாவை வெருட்டியதையும்,
அக்காவிக்கு இருபத்துமூன்று வயதாகி விட,
உறவில் நடந்த நல்லது, கெட்டதுகளுக்கு கூட,
அம்மா போவதை நிறுத்தியதையும்,
இருபத்தினாலில் அக்கா கல்யாணம் ஒப்பேற,
இப்பவாவது வந்து பொருந்திச்சுதே” என்று,
ஆறுதல் படுவதுபோல அக்காவுக்குப் பிந்திக்கல்யாணம் நடப்பதை,
ஊரார் குத்திக் காட்டியதையும்  மறக்க முடியவில்லை.


இன்றைக்குப் பெரும்பாலும்,
முப்பதுகளில் தான் எல்லாருக்கும் கல்யாணம்.
கல்யாணப் பேச்சே இருபத்தெட்டின் பின்தான் ஆரம்பிக்கிறது.
பெண்களுக்குக்கூட அப்படித்தான்.
கேட்டால், “‘ஸ்டடியை’ முடிச்சுட்டுத்தான் கட்டப் போறாவாம்.”
பெண்ணின் தாயார் பெருமையாய்ச் சொல்கிறா.
‘ஸ்டடியை’ முடிச்சு அவவை முப்பதில கட்டுறதும் ஒன்றுதான்,
தடியை முறிச்சு அதுக்குத்தாலி  கட்டுறதும் ஒன்றுதான்.
இது ஏன்தான் விளங்கவில்லையோ  தெரியவில்லை?
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


ஆண்களைக் கேட்டால்,
முப்பத்தொரு வயதான பின்னும்,
இன்னும் கொஞ்சம் ‘ஸ்டெடியாக’ வேண்டும் என்கிறார்கள்.
அப்படி யாரும் சொல்கையில்,
எனக்கு ஒரு சம்பவம் தான் ஞாபகத்திற்கு வரும்.
அதை அடுத்த பந்தியில் சொல்கிறேன்.
‘ஏ ஜோக்’ பிடியாதவர்கள் அப்பந்தியை விட்டுவிட்டு,
மேலே வாசிக்கலாம்!


எங்கள் நண்பர் குழுவில்,
எல்லாரும் கல்யாணம் முடித்துவிட,
ரவி என்ற ஒரு நண்பன் மட்டும்,
முப்பத்தொரு வயதாகியும் முடியாமல் இருந்தான்.
ஒரு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது,
நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தோம்.
ரவியைப் பார்த்து,
மச்சான் எப்ப கல்யாணம் செய்வதாய் உத்தேசம்?
என்று முகுந்தன் கேட்டான்.
கொஞ்சம் ‘ஸ்டெடியானவுடன்’ பாப்பம்”-என்றான் ரவி,
முஸ்பாத்திக்காரனான வசந்தன்,
மச்சான் பாருங்கடா, முப்பது வயதாகியும்,
இவருக்கு ‘ஸ்டெடியாகேலயாம்’?”,
ரெட்டை அர்த்தத்தில் சொல்ல,
நண்பர் குலாம் “கொல்” என்று சிரித்தது.


என்ன? உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்த்தால்,
அந்தப்பந்தியைத்தான் முக்கியமாய் வாசித்ததாய்த் தெரிகிறதே?
என்னது? சத்தியமாய் நீங்கள் வாசிக்கவில்லையா?
சரி சரி நீங்கள் உத்தமர் தான் வாசித்திருக்கமாட்டீர்கள்.
நாங்கள் விடயத்தைத் தொடருவோம்.


படிப்பு, ‘ஸ்டெடியாதல்’ என்பவை தவிர,
கல்யாணம் முப்பது வயதைத் தாண்ட,
முக்கியமான மற்றொரு காரணமும் இருக்கிறது.
அக்காரணத்தின் கர்த்தராய் இருப்பவர் சாத்திரியார்.


கல்யாணம் பொருத்துவதாய்ச் சொல்லி,
கல்யாணங்களைக் குழப்ப என்றே பிறந்த ஜீவன் இவர்.
பஞ்சாங்கத்தில் பத்துப் பொருத்தம் மட்டுமே இருக்க,
இவர் பத்தாயிரம் பொருத்தம் பார்ப்பார்.
பெண்ணுக்கு வயது இருபத்தேழு ஆகவேணும்,
அதுக்குப் பிறகு பார்த்தால்த்தான் நல்லது.
அதுவரை ராகு பார்வை நல்லா இல்ல,
அதுக்கு முன்னால மறந்தும் மாப்பிள்ளை பார்த்திடாதைங்கோ!
அடித்துச் சொல்லுவார் அவர்.
வீட்டில் இருபத்தொன்பதைத் தாண்டி.
குமராயிருக்கும் தன் மகளை நினைத்துக் கொண்டு,
அவர் வயிற்றெரிச்சலில் சொல்வது தெரியாமல்,
அப்ப இருபத்தேழுக்குப் பிறகு பாப்பம்!” எனச் சொல்லி,
சும்மா இருக்கும் அசட்டுப் பெற்றோரே நம் மத்தியில் இன்று அதிகம்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


இருபத்தேழில் தேடத்தொடங்கி,
தேடலில் வயது முப்பதாக,
மகளின் உடலில் முதுமையின் அடையாளங்கள்,
வேகமாய்த் தோன்றத் தொடங்கும்.
உடனே பதறியடித்து,
கிடைத்த மாப்பிள்ளை எவரானாலும்,
கட்டி வைத்தால் போதும் என நினைக்கும்,
“கேனத்தனமான” பெற்றோர் தொகை,
இன்று நம் இனத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


அப்ப சாத்திரம் பொய்யே?”
நீங்கள் கேட்பது புரிகிறது.
சாத்திரம் பொய்யாக வாய்ப்பில்லை.
சாத்திரியார் பொய்யாக நிறைய வாய்ப்பிருக்கிறது.
சாத்திரியார் உண்மையானவர் என்றால்,
இருபத்தேழில் கல்யாணம் நடக்கும் என்பதை உறுதி செய்து,
பத்து லட்சம் ‘டிப்போசிற்றோடு (G)கரண்டி’ தரவேணும்.
அதுநாள் வரை சாத்திரியார் பொருத்திய கல்யாணம் ஒன்றும்.
பிழைத்திருக்கவே கூடாது.
இந்த நிபந்தனைகளுக்குச் சாத்திரியார் ஒத்துக்கொண்டால்,
இருபத்தேழு என்ன? முப்பத்தேழு வயது வரையும் கூட,
நீங்கள் காத்திருக்கலாம்!


மற்றொன்று.
என் அக்கா கல்யாணத்தில் இல்லாத முறைகளை எல்லாம்,
இப்போது புதிது புதிதாக சாத்திரிமார் அறிமுகம் செய்கிறார்கள்.
மாப்பிளையின் சாதகத்தில் பெண்ணை விட,
‘பாவம்’ கூட இருக்க வேணும்.
இது இப்போது புதிதாய் வந்திருக்கும் சாத்திர ‘மெதேட்’,
நல்ல காலம் எங்கள் அக்காமார் கல்யாணக் காலத்தில் இது வரவில்லை.
வந்திருந்தால் கன்னியாஸ்திரி மடத்திற்குத் தான்,
அவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.
மாப்பிளைக்கோ, பொம்பிளைக்கோ ‘பாவம்’ கூட என்று ஆராய்வதை விட,
மாப்பிளையோ, பொம்பிளையோ கூடப் ‘பாவம்’ என்று ஆராய்ந்தால் உருப்படலாம்.
கல்யாணத்திற்கு புண்ணியம் தேடுவதற்குப் பதிலாக,
பாவம் தேடித்திரியும் பரிதாபப் பெற்றோரை என் சொல்ல?
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


முப்பது வயதின் மேல் குழந்தை பெறும் தகுதி,
பெண்களுக்கு அரைவாசி ஆவதாய் விஞ்ஞானம் சொல்கிறது.
முப்பது வயது தாண்டிய பெண்ணை.
பேரிளம் பெண் என்று தமிழ் சொல்கிறது.
பேரிளம் பெண் என்பதே ஒரு கிண்டல் தானே!
வெறும் பெயரளவில் மட்டும் தான் இளம் பெண் என்பதாய்,
அவர்கள் சொல்ல நினைத்திருப்பார்களோ?
இதுவெல்லாம் தெரிந்திருந்தும்,
‘பருவத்தில் பயிர் செய்’ எனப் படித்திருந்தும்,
மூடத் தனத்தில் மூழ்கிய பெற்றோரால்,
இளமை ஊஞ்சலாட இளையோர் படும்பாட்டை என் சொல்ல?
‘நாங்கள் கற்போடு இருக்கும் கருவாடுகள்’
மேத்தாவின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


வீதியில் நடக்கையில்,
தமை மறந்து கூடிக்களித்து நிற்கும்,
பகுத்தறிவற்ற விலங்குகளைக் காணும் போதும்,
மரங்களில் கொஞ்சிக் குலாவும் குருவிகளைக் காணும் போதும்
நல்ல காலம், அவற்றிற்கிடையில் சாத்திரிமார் இல்லை போலும் என,
நினைத்துக் கொள்வேன்.
நாம் பகுத்தறிவுள்ள மனிதர்களாம்! - சொல்கிறார்கள்.
பகுத்தறிவு பாவமா? சாபமா? சொல்லுங்கள்!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


முப்பதின் மேல்,
சாதி, சாதகம், சீதனம் என்ற கடல்களை எல்லாம் தாண்டி.
ஆசைகள் அறுந்து போக ஆயத்தமாகும் போது,
கலியாணம் நிச்சயமாகிவிட்டால்,
அதன் பிறகு நடக்கும் கூத்துகளுக்கு ஓர் அளவேயில்லை.
கலியாணத்தில் அக்கறை இல்லாதது போல் இருந்த,
மாப்பிள்ளையும் பொம்பிளையும்,
கல்யாணம் நிச்சயமானதும் படும்பாடு இருக்கிறதே,
கண்டறியாதவன் பெண்டிலைக் கண்டால்,
காடு மேடெல்லாம் கொண்டு திரிவானாம்” என்ற கதை தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


மணப்பெண்ணின் வீடு,
கல்யாணத் திகதி நிச்சயமாகி விட்டதா?
ஐயரை ஒழுங்கு பண்ணுவதோ?
மண்டபத்தை ஒழுங்கு பண்ணுவதோ?
மேளத்தை ஒழுங்கு பண்ணுவதோ? எல்லாம் பிறகு தான்.
முதலில் நீங்கள் செய்யவேண்டியது,
‘பியூட்டிசியனையும்’, ‘வீடியோ’க்காரரையும், ‘(F)போட்டோகிராபரையும் புக்’ செய்வது தான்.
பிந்தினீர்களோ அவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
ஐயர் என்ன ஐயர்? அவையல்ல ஆயிரம் பேரைப் பிடிக்கலாம்.
கிரியைகள் எல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்குத் தான்!
நேரம் மிச்சமாய் இருந்தால்,
கிரியைகளைக் கூட்டுங்கோ! என்றால் ஐயர் கூட்டுவார்.
குறையுங்கோ! என்றால் குறைப்பார்.
மந்திரங்களையும் ‘(F)பிளாக்சிபில்’ ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


உந்தச் சேட்டையெல்லாம்,
‘பியூட்டிசியனிட்டையோ?’ (F)போட்டோகிராபரிட்டையோ, வீடியோக்காரனிட்டையோ நடவாது!
அவையல் சொன்னாச் சொன்னது தான்.
அவையல் நீட்டு என்றால் நாங்கள் நீட்டவேண்டியது தான்,
அவையல் குறை என்றால் நாங்கள் குறைக்க வேண்டியது தான்,
நேரத்தைச் சொல்கிறேன்.
கூறை மாத்திறத்திற்காகவும்,
‘வீடியோ செற்’ பண்ணிறதுக்காகவுமாக,
எத்தனையோ இடத்தில்,
முகூர்த்தம் தாண்டி தாலி கட்டப்படுகிறது.
ஐயருக்கு பத்தாயிரம் கொடுக்க பேரம் பேசுகிறவர்கள்.
அலங்காரக் காரருக்கு இரண்டு லட்சத்தை,
‘வெறி சீப்’ என்று கொடுக்கும் அழகைப் பார்க்கவேண்டுமே!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


“என்னது? ‘பியூட்டிசியனுக்கு’ இரண்டு லட்சமோ?
இரண்டு லட்சத்துக்கு என்ன மயிரைப் பிடுங்கப் போகிறார்கள்?”
நீங்கள் கோபமாய்க் குளறுவது கேட்கிறது.
கோபத்திலும் சரியாய்ச் சொன்னீர்கள்.
மயிர்பிடுங்குவது தான் அவர்களின் முதல் வேலை.
நம்புங்கள் சத்தியமாய் நான் சொல்லுவது உண்மை!


மூகூர்த்தத்தன்று தான்.
மாப்பிள்ளையிடம் பெண்ணை ஒப்படைப்பீர்கள்.
ஆனால் ‘பியூட்டிசியனிடமோ’,
ஒரு வாரத்திற்கு முன்னரே பெண்ணை நீங்கள் ஒப்படைக்கவேண்டும்.
மகளைக் கூட்டிக்கொண்டு நல்ல நாள் பார்த்து அங்கு செல்வீர்கள்.
வாசலில் தொங்கும் ‘சலூன்’ என்ற பெயரே,
உங்களுக்கு நெருடலைத் தரும்.
“பொம்பிளையளுக்கு இங்கு என்ன வேலை?”
கேட்க நினைத்து அடக்கிக் கொள்வீர்கள்.
அலங்கார நிலையத்திற்குள்ளே சென்றதுமே,
உங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும்.
அச்சிலிர்ப்பு ‘ஏசி’ குளிரால் மட்டும் வருவது அன்று.
பிதுங்கும் ‘ஜீன்சோடும்’, ‘டீசேட்டோடும்’ வலம் வரும்,
இளம் பெண்களைப்பார்ப்பதாலும் வருவதாம்.


கறுத்த, வெள்ளை முடிகளைத்தானே இதுவரை கண்டிருக்கிறோம்.
அங்கோ, சிவப்பு, நீலம், மஞ்சள் என,
வானவில் வண்ணங்கள் தலையில் ஜொலிக்க,
ஒரு பத்து இளம் பெண்களாவது வலம் வருவார்கள்.
உங்களுக்கு சற்று அச்சம் கலந்த வியப்பு வரும்.
ஓகோ இது தான் இப்பத்த ‘(F)பஷன்’ ஆக்கும்,
அடிமைப் பட்டு பழகிய நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வீர்கள்.
சாயப்பானையில் தலையைக் கொடுத்த,
நரிக் கதையை படித்து என்ன பிரயோசனம்?
உதட்டில் சாயமா? சாயத்தில் உதடா?
உங்களுக்கு அவர்களின் முகத்தைக் காண அடுத்த சந்தேகம் வரும்.
விடை காணும்முன் உங்கள் மகளின் கையில்,
அவர்கள் ஓர் ‘(F)போட்டோ அல்பத்தை’ திணிப்பார்கள்.


விதம் விதமான அலங்காரங்களுடன்,
அழகிய பெண்களின் படங்கள் அதனுல் இருக்கும்.
ஐஸ்வர்யாராயும் அதனுல் சில வேளை அமர்ந்திருப்பா.
பிறகென்ன? உங்கள் மகள் தனது முப்பதைத் தாண்டிய முத்திய முகத்தை,
‘ஜீன்சில்’ நடித்த இருபது வயது ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிட்டு,
அடுத்த உலக அழகுராணி நான் தான் என,
கற்பனை பண்ணிக் கொள்வாள்.
அந்தப் பலவீனத்தில் ‘பியூட்டிசியன்’ தரப்போகும்,
இரண்டு இலட்சம் பில் இருபது ரூபாயாய் அவளுக்குத் தெரியும்!
காசாவது (F)பீசாவது,
அமெரிக்க அண்ணன் இருக்கும் வரை.
அவளுக்கு என்ன கவலை?
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


உங்கள் மகளின் சரணாகதியை அறிந்து,
அவர்கள் கிரியைகளை ஆரம்பிப்பார்கள்.
குளிர் நிறைந்த அறைக்குள் அழைத்துச்சென்று,
பல்லு டாக்டரிடம் இருக்கும் படுக்கை கதிரை போல் ஒன்றில்,
உட்கார வைத்து பளீர் பளீரென ‘லைட்டுகளைப்’ போடுவார்கள்.
படுத்திருக்கும் உங்கள் மகளுக்கு.
நித்திரை கொள்ளாமலே கனவு வரும்.
சிம்ரன், ஸ்ரேயா, நயன்தாரா, ரென்தாரா எனப் பல நடிகைகளும்,
முன்னிருக்கும் கண்ணாடியில் வந்து போக.
அவள் கிரங்கிப் போவாள்!


அவர்களின் முதற் கிரியை ஆரம்பமாகும்.
உங்கள் மகளின் முகத்தில் இருந்த,
இமை மயிர், புருவமயிர் எல்லாம் வலிக்க வலிக்க பறிக்கப்படும்.
“அழகு ராணி ஆவதென்றால் சும்மாவா?” என்று நினைத்தபடி,
வலியைப் பொறுத்துக்கொள்வாள் மகள்,
மொட்டையும் அடித்தால் சமணத் துறவிதான்!
இயற்கையாய் இருந்த முடியைப் பறித்துவிட்டு,
புருவத்திற்கு செயற்கையாய் ‘ஐ(Bபிறோ’ கீறப்படும்.
இமைக்கு வளைந்த பொய் மயிர்கள் ஒட்டப்படும்.
கல்யாணம் முடிந்து ஒரு கிழமை கழித்து,
பிடுங்கப்பட்ட எல்லா மயிரும் தடிதடியாய் திருப்பி முளைக்கும்.
ஆபத்தைத் தவிர்க்க அத்தானிடம் சொல்லி,
அவளும் ‘சேவிங் செற்’ வேண்ட வேண்டியது தான்.
ஏன் பொம்பிளையள் ‘சேவ்’ எடுக்கக் கூடாதே?
உங்கள் மகளின் கேள்வி காதில் விழுகிறது.
வாழ்க பெண்ணியம்!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


பிறகு அடுத்த கிரியை தொடங்கும்.
முகம் முழுவதும் வெள்ளையாய் ஏதோ பூசுவார்கள்,
கண் மூடிக் கிடக்கும் மகள்.
அழகு வந்து விட்டதாக்கும் என கண்ணைத் திறப்பாள்,
உங்களுக்கோ பழைய படங்களில் பார்த்த,
வேதாளங்கள் ஞாபகத்தில் வரும்.
உங்கள் மகளைப் பார்த்து நீங்களே கூக்குரலிடவும் கூடும்.
“சோடனை மேல் சோடனை போதுமடா சாமி”,
உங்கள் காதுகளில் தங்கப்பதக்க சிவாஜியின் பாடல் மாறிக்கேட்கும்.
இருளிலிருந்துதானே ஒளி வருகிறது.
அது போல இந்த அசிங்கத்திலிருந்து தான் அழகு வருமாக்கும் என,
தத்துவமாய் உங்களைத் தேற்றிக் கொள்ளுவீர்கள்.
அந்த அளவில் முதல் நாள் கிரியைகள் முடிவுறும்.


இதைத் தான் மயிரைப் பிடுங்கும் சங்கதி என்றேன்.
இந்த ‘(B)பியூட்டிசியனுகள்’ தங்கள் அழகு நிலையத்திற்கு,
‘சலூன்’ என்றே பெயர் வைக்கிறார்கள்.
இதுதான் மேலைத்தேய மரபாம்.
இத்தனைக்கும் இதனை நடத்துபவர்கள்,
பெரும்பாலும் மேற்சாதிப் பெண்கள்,
ஒரு காலத்தில்,
‘சலூன்’, அம்பட்டன் என்றெல்லாம் சாதி பேசியவர்கள் இவர்கள்.
அன்றைக்கு மயிர் வெட்டியவனுக்குப் பெயர் அம்பட்டன்.
இன்றைக்கு மயிர் வெட்டுபவருக்குப் பெயர் ‘(B)பியூட்டிசியன்’.
தொழில் ஒன்று தான் தோரணை தான் வேறு,
இரண்டு ரூபாய் வாங்கிய படியால் அம்பட்டன் குறைஞ்ச சாதி,
இரண்டு லட்சம் வாங்கிற படியால் ‘(B)பீயூட்டிசியன்’ நல்ல சாதி,
காசே தான் கடவுளடா?
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


எனக்குத் தெரிஞ்ச ஒரு ‘(B)பியூட்டிசிய’னுடைய மகளுக்கு,
கல்யாணம் பேசி முற்றாக்கினார்கள்.
மாப்பிள்ளை வீடு யாழ்ப்பாணத்தில்.
அவர்கள் கடுமையாய்ச் சாதி பார்க்கும் வர்க்கம்.
எல்லாம் முற்றாகி சம்பந்தம் கலக்க,
மாப்பிள்ளை வீட்டார் கொழும்புக்கு உறவுகளோடு வந்தார்கள்.
பெண்வீட்டு வாசலில் வந்து இறங்கி,
‘சலூன்’ என்ற ‘போட்டைப்’ பார்த்ததும்,
என்ன கொழுப்பிருந்தால் எங்களோட சம்பந்தம் பேசியிருப்பாங்கள்?” என்று.
காரைத் திருப்பியவர்கள் தான்,
முருகண்டியிலும் நிற்காமல் நேராய் வீடு போய்ச் சேர்ந்தார்களாம்.
சாதியாவது மண்ணாவது.
காசு வந்தால் இப்ப எல்லாச் சாதியும் எல்லாத் தொழிலும் செய்யத் தயாராயிருப்பது.
பாவம் அவர்களுக்கு தெரியவில்லை.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


நாங்கள் விட்ட இடத்திற்கு வருவோம்.
‘(B)பியூட்டிசியனுடைய (F)பேசியல்’ சடங்கு,
ஒன்றவிட்ட ஒரு நாளைக்கு நடைபெறும்.
இந்தச் சடங்கில் திருமணப் பெண்மட்டுமல்லாது,
அக்கா, தங்கை, மச்சாளோடு அறுபதைத்தாண்டிய மாமிமாரும்,
சிலவேளை இணைந்து கொள்வர்.
எல்லாரும் அழகு ராணிகளாம்!
கனடாக் குளிரில் நடுங்கி உழைக்கும் பெடியனின் காசு,
கவலையின்றி கரைக்கப்படும்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


அடுத்த நாள் காலை திருமணமா?
விடிய இரண்டு மணிக்கே,
பெண் ‘(B)பியூட்டிசியனிடம்’ போய் விடவேண்டும்.
“அப்ப பாலறுகு வைக்கிறதில்லையோ?”
நீங்கள் தெரியாமல் கேட்டால் தொலைந்தீர்கள்.
“பாலாவது, அறுகாவது? அதெல்லாம் சேர்த்துத் தான்.
இப்ப ‘ஷம்பு’ செய்கிறார்கள்.”
உங்கள் வீட்டுக்காரி விஞ்ஞான விளக்கம் தருவார்.
அப்ப மூத்த ஆக்கள் வைக்கிறதில்லையோ?
வெகுளியாய் நீங்கள் திரும்பவும் கேட்பீர்கள்.
(B)பியூட்டிசியனும் மூத்தவதான்.”
மனைவி இடக்காப் பதில் சொல்லுவார்,
உதுக்கேன் இவ்வளவு காசை வீணா செலவழிக்கிறியள்.
உங்கள் வயிற்றெரிச்சலை மெல்லக் கொட்டுவீர்கள்.
என்ட மேண் காசனுப்பிறான்,
நாங்கள் செலவழிக்கிறம் உங்களுக்கென்ன?
பேசாமப் போய் ‘ஈசிச்சியருக்குள்ள’ கிடவுங்கோ.
தண்ட “பேசியல்” செய்த முகத்தைத் தடவிக்கொண்டு.
உங்கள் மனைவி பாய்வார்.
தண்ட மேண் என்னுறா, அப்ப அவன் எனக்குப் பிறக்கேல்லயே?
யோசித்தபடி ‘ஈசிச்சியருக்குள்’ நீங்கள் முடங்கவேண்டியது தான்.
சர்வம் சக்திமயம்!
நல்ல இனம! நல்ல குணம்! நல்ல மணம்!


கல்யாணநாள்.
அலங்காரம் முடிய விடிஞ்சிடும்.
முப்பது முகத்தை பதினாறாக் காட்டிறதென்றா சும்மாவே?
‘(B)பியூட்டிசியன்’ விட்டதும் எழும்பி,
மகள் கண்ணாடியைப் பார்க்க,
நிறம் மாறியிருக்கும்!
முகம் மாறியிருக்கும்!
விழி மாறியிருக்கும்!
நெளி தோன்றியிருக்கும்!
உச்சி நோக்கி இழுக்கப்பட்ட மயிரால்,
வட்ட முகம் நீளமுகமாய் ஆகியிருக்கும்.
‘பேசியல் கிறீம், லிப்ஸ்டிக், ஐடெக்ஸ், ஐபிறோ, பிங்பவுடர்’
இவற்றால் மறைக்கப்பட்டு கொஞ்சூண்டு தெரியும் முகம்,
அழகாகி விட்டதாய் பக்கத்திலிருக்கும் சினேகிதி சொல்ல(மனதுள் சிரித்தபடி),
அதைச் சத்தியம் என்று நம்பி,
உங்கள் மகள் சிலிர்த்துப்போவாள்.


உங்களுக்கே கூட,
இது நான் பெத்த மகளா? எனச் சந்தேகம் வந்துவிடும்.
உங்களுக்கென்ன உங்களுக்கு?
இப்படித்தான் ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளை,
கல்யாணத்தன்று வந்திறங்கி,
மணவறையில் பொம்பிளையைப் பார்த்து,
கிறங்கிப்போனானாம்.
அடுத்தநாள் காலையில்,
பெண், முகம் கழுவி விட்டு வர,
தங்கச்சியைக் காட்டி
அக்காவை அனுப்பிப்போட்டாங்கள்” என்று.
துள்ளியடிச்சு ‘டிவோஸ் கேஸ்’ போட்டானாம்.
நண்பன் சொன்னான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


முதலிரவு முடிந்து முகம் கழுவ,
போய்விடப் போகும் இந்த செயற்கை அழகிற்கு,
இவ்வளவு செலவா? அறியாது கேட்பவர்.
தேசத்துரோகியாய் நோக்கப்படுவார்.
முதல் நாளே மாப்பிள்ளையை ஏமாற்றும் வேலை இது.
அறிந்தும் ஏமாறுவர் அசட்டு மாப்பிள்ளைகள்.
என்னே நம் பெருமை!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


இனி என்ன?
நேரே மணவறை தான் என்கிறீர்களாக்கும்.
அது தான் இல்லை!
அடுத்து பெண்ணை ‘(F)போட்டோகிராப'ரிடம் ஒப்படைக்கவேண்டும்.
இரண்டு கை மாறியபிறகு தான்.
பெண் மாப்பிள்ளையிடம் செல்லுவாள்.


‘வீடியோ’க்காரருக்கும், ‘(F)போட்டோகிராபருக்கும்’
இன்றைய கல்யாணங்களில் தனி மவுசு.
ஐயர் சும்மா பேருக்குத்தான்,
மணவறையில் மந்திரம் தவிர்ந்த மற்றைய வேலையெல்லாம்,
இவர்களால்த்தான்’ நடத்தப்படும்.
நான் போன கல்யாணம் ஒன்றில்,
கட்டின தாலியை அவிழ்த்து,
திருப்பிக் கட்டச்சொன்னார் ஒரு ‘(F)போட்டோகிராபர்’.
முதல் எடுத்த ‘ஷொட்’ வடிவாய் வரவில்லையாம்.
மணவறையில் யாரார்  என்னென்ன ‘பொஷிசனில்’ நிற்க வேண்டும்.
யாரார் என்னென்ன செய்யவேண்டும் என்றெல்லாம்,
இவர்கள் தான் தீர்மானிப்பர்.
‘அவங்கள் நல்ல கெட்டிக்காரன்கள் அவங்களுக்கு எல்லாம் தெரியும்,
உந்த ஐயருக்கு ஒண்டும் தெரியாது அவரைப் பேசாம இருக்கச் சொல்லிப்போட்டு,
அவங்கள் சொல்லிறபடிச் செய்யுங்கோ’என்று,
உங்கள் பத்தினியார் ‘(F)போட்டோகிராபருக்குசைட் போஸ்’ காட்டி உத்தரவிடுவார்.
நீங்கள் கத்தரித்தோட்டத்து வெருளியாய் சம்மதித்து நிற்கவேண்டியதுதான்.
நல்ல இனம! நல்ல குணம்! நல்ல மணம்!


‘(F)பியூட்டிசியனிடமிருந்து’ பெண் வந்ததும்.
‘(F)போட்டோகிராப’ரின் கிரியைகள் ஆரம்பமாகும்.
“எனக்கு ‘(F)போர் ஹவர்ஸ்’ வேணும்.”
முன்னமே அவர் போடும் நிபந்தனை இது.
எதற்கென்கிறீர்களா? சொல்கிறேன்!


இந்தியச் சினிமாத் துறையில் ஒரு வழக்கம் இருக்கிறது.
நடிகைகளாக விரும்புவோர்,
திறமையான ஒரு ‘கமராமென்னைப்’ பிடித்து,
ஆடைகளைக் குறைத்தும், அழகை மிகைப்படுத்தியும்,
ஒர் ‘அல்பம்’ தயாரித்து வைத்திருப்பர்.
அந்த ‘அல்பம்’ தயாரிப்பாளர், டைரக்டர், கதாநாயகன் என,
பலரதும் கைகளுக்குச் செல்லுமாம்.
சில வேளைகளில் நடிகையும் தான்!
இது அங்கு அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயம்.


விரசமான அச் சம்பிரதாயத்தின் சாயலை பின்பற்றி,
நம் பலயீனம் அறிந்து,
புனிதமான நம் கல்யாணங்களிலும் அதனைப் புகுத்தி,
புண்ணியம் தேடிக் கொள்கின்றனர் நம் ‘(F)போட்டோகிராபர்கள்’.
பொருளுக்குத் தன்னை விற்கத் தயாராகும்.
ஒரு நடிகையின் நோக்கத்தை,
ஒரு குடும்பப் பெண்ணின் நோக்கமாக்கி,
அதனைக் கொண்டாடுகின்றோம்.
மணமகள்களுக்கு,
தம்மை நடிகையாய் நிரூபிக்கும் ஆசை இருக்கிறது.
மணமகன்மார்க்கு,
தம் மனைவியை நடிகைப் போல் காட்டும் விருப்பம் இருக்கிறது.
இவர்கள் உழுத நிலத்தில்,
‘(F)போட்டோகிராபர்’ தன் தொழிலை விதைக்கிறான்.
விபச்சாரத்தின் அபச்சாரம் புரியாமல்,
இதற்கான பிரச்சாரம் வேறு.
உருப்பட்ட மாதிரித்தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


‘(F)போட்டோகிராபரிடம்’ மணமகள் சென்றதும்,
அவரது விளையாட்டுக்கள் தொடங்கும்.
கொஞ்சநேரம் நிற்க வைத்து எடுப்பார்.
கொஞ்சநேரம் இருக்க வைத்து எடுப்பார்.
கொஞ்சநேரம் படுக்க வைத்தும் எடுப்பார்.
ஸா, பா, ஸா தெரியாத மணமகள்.
தன்னை எம்.எஸ். சுப்புலட்சுமியாய் நினைத்துக் கொண்டு,
வீணையைத் தம்புராவைப் போல் நிமிர்த்திப் பிடித்து,
கண்கிறங்கப் ‘போஸ்’ கொடுப்பாள்,
நடேசர் சிலையை ஓரக் கண்ணால் பார்ப்பாள்,
ஆற்றையே காணாத அவள்,
கணுக்கால் தெரிய சேலையைத் தூக்கிப்பிடித்து,
குடத்தில் தண்ணி அள்ளுவாள்,
ஆறு பின்னர் அவளின் ‘போஸோட’ பொருத்தப்படும்.
பரத அபிநயங்கள் செய்வாள்,
ஒய்யாரமாய் முந்தானையை விரித்துக்காட்டுவாள்.
கணவனுக்கு அல்ல ‘(F)போட்டோகிராபருக்கு’.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


மொத்தத்தில் மணமகளுக்கு நடிக்கும் பயிற்சி,
திருமணத்தின் முன்  ‘(F)போட்டோ கிராபரால்’ வழங்கப்படும்.
நடிப்பு சரியாக அவளுக்கு வராத பட்சத்தில்,
‘(F)போட்டோகிராபர்’, புதுப்பெண்ணின் கை, கால், தோள்,
மூக்கு, தாடை, கழுத்து என அத்தனையிலும் தொட்டு திருத்தம் செய்வான்.
இவையெல்லாம் இன்றைய கல்யாணங்களில்,
அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயங்கள்.
இதையெல்லாம் மாப்பிள்ளை அனுமதிப்பாரா?
இப்படிக் கேட்டால் நீங்கள் ஒரு பிற்போக்குவாதி.
முப்பத்தைந்தைத்தாண்டிய அசட்டு மாப்பிள்ளை,
கறிக்குதவாத ஏட்டுச்சுரக்காய் எனத் தெரிந்தும்,
தன் முத்தல் மனைவியின் கலைப்படங்களை ரசிப்பார்.
போதுமடா சாமி!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


‘வீடியோக்காரர், (F)போட்டோகிராபர்’ பற்றி,
இன்னும் இரண்டு விடயங்கள் சொல்லவேண்டும்.
இப்போதெல்லாம் கல்யாணங்களுக்கு,
சம்பிரதாயத்திற்குத்தான் நாம் போகிறோம்.
மாப்பிள்ளை தாலிகட்டும் நிகழ்ச்சி எதுவும்,
நம் கண்ணில் படுவதேயில்லை.
கண்ணில் படுவதெல்லாம்,
இப்புண்ணியவான்களின் முதுகும் பின்புறமும் தான்,
நாம் போடும் அறுகரிசியெல்லாம் அதுக்குத்தான்,
ஜனாதிபதியைச் சுற்றி நிற்கும் ‘(B)பொடிகாட்ஸ்’ போல,
மணவறையை முழுமையாய் இவர்கள் சூழ்ந்து விடுவார்கள்.
இவர்கள் அசையும் போது வரும் இடைவெளியினூடு,
ஒரு வேளை மணமக்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிந்து விட்டால்,
அந்த வாரம், உங்கள் ராசிக்கு,
கிரகங்கள் நல்ல இடத்தில் இருக்கின்றன என்று அர்த்தம்.


திருமணம் முடிந்த பின்பும் இவர்கள் பணி நிற்காது.
உறவினர்களை மணவறையில் வைத்து படமெடுக்கும் வேலை,
மணித்தியாலக் கணக்கில் தொடரும்.
இவர்களால் உறவு முழுதும் மணவறையில் நிறுத்தி வைக்கப்பட,
பசி வேளை தாண்டிய பதைபதைப்பில்,
விருந்தினர்கள் உள்ளே திட்டி வெளியே சிரிப்பர்.
அவர்கள் உங்களை விட பெரிய நடிகர்கள்.


‘(F)போட்டோகிராபரும்’,‘வீடியோக்காரரும்’,
வந்த ஒவ்வொருவரையும் மணமக்களுக்கு முத்தம் கொடுக்கச் சொல்லுவர்.
யார் என்ன உறவு என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை.
சந்ததி சாட்டில் நமக்கும் ஒரு ‘சான்ஸ்’ கிடைக்காதா? என,
இளையோர் கூட்டம் அவரை போற்றிச் சுற்றும்.


அநியாயத்தில் அநியாயம் கடைசியில் நடக்கும்,
மணவறையால் இறங்கிய பிறகு,
மேற்கு உடைகளோடு மணமக்கள் அழைக்கப்பட்டு,
சினிமாக்காட்சிகள் தோக்கும் படியான நெருக்கத்தில் படமெடுக்கப்படுவார்கள்.
கொடுமை என்னவென்றால்,
இப்போதைய பெரும்பாலான திருமண ‘அல்பங்களில்’,
முத்தக் காட்சிகளும் பதிவாக்கப்படுகின்றன.
முத்தக் காட்சி என்றால்? இது என்ன கேள்வி,
உதட்டு முத்தக் காட்சி தான்.
இது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் உபயம்.
வெள்ளைக்காரர்களோடு எங்களைச் சமப்படுத்தி விட்டார்களாம்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


ஒரு நாள் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
நெற்றியில் விபூதிசந்தனத்தோடும்,
பட்டு, வேட்டி, மடிப்புச் சால்வையோடும்.
ஒரு பெரியவர் முன்னால் போய்க் கொண்டிருந்தார்.
தன்னை மறந்து அவரது வாய்,
யாரையோ கெட்டவார்த்தைகளால் திட்டியபடி இருந்தது.
களண்டவராய் இருப்பாரோ? பார்க்கலாம் என்று அருகில் போனேன்.
குப்பென்று சாராய வாடை,
அவர் தோற்றத்திற்கு பொருந்தாத வாடை,
பெரியவர் நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்றேன்.
அழுதே விட்டார்.
பின், நடந்ததை அவர் சொல்லத் தொடங்கினார்.


தம்பி! வெளிநாட்டிலிருந்து வந்த மருமகன் ஒருவன்,
தனக்கு ‘ரிசப்ஷன்’ என்று வீட்டிற்கு வந்து சொன்னான்.
கல்யாண வீட்டிற்கு வந்தனான் தானே எண்டன் அவன் கேட்கேல்ல,
அது வேற இது வேற ‘(F)பைவ் ஸ்ரார் ஹொட்டல்ல’  வைக்கிறன்.
நீங்கள் கட்டாயம் வரவேண்டும்” என்றான்.
வீட்டிற்கு வந்தவனை மரியாதை பண்ணவேண்டும் என்று அங்க போனன்.
அங்க உலகமே வேறமாதிரி இருந்துது.
கல்யாண வீட்டில சீலை கட்டிக்கொண்டு நின்றதுகள் எல்லாம்,
‘ஜீன்சோடும் ரீ சேட்டோடும்’ அங்க நிண்டுதுகள்.
பெடி பெட்டை என்ற எந்த வித்தியாசமும் இல்ல.
எல்லாம் ஆளையாள் கட்டிப்பிடிச்சுக் கொண்டு ஆடிச்சுதுகள்.
இடையில மாப்பிள்ளை பொம்பிளை கேக் வெட்ட,
உடனே மாப்பிள்ளை ஒரு சாராயப் போத்தலைக் குழுக்கி,
எல்லாருக்கும் அடிச்சான்.
ஏதோ ‘ஷாம்பேன்’ போத்தலாம்.
அப்படி அடிக்கிறது அங்கத்த வழக்கமாம்.
விசரங்களால ‘பஸ்ஸில’ வரேக்க,
சனமெல்லாம் என்னை குடிகாரனைப் போலப் பாக்குது.
இவ்வளவு நாளும் நான் எடுத்த நல்ல பெயரெல்லாம் போட்டுது.
கிழவர் பொருமினார்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்!
கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குசேர்ப்பீர்!
பாரதி பாடலை நல்லபடி விளங்கியிருக்கிறார்கள்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


மேற்குலகைப் பார்த்து,
முத்தக் காட்சி வரையும் முன்னேறி இருக்கும் வீடியோக்காரர்கள்.
பாவம் தாங்கள் பயன்படுத்தும் ‘கமராவின்’ பயன்பாட்டைமட்டும்,
இன்று வரை சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை.
அசையாத நிலைத்தலை படமெடுத்த,
‘ஸ்ரில் கமராவின்’ வளர்ச்சிதான் ‘வீடியோ கமரா.’
இயங்குதலைப் படமெடுக்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி அது.
இன்று வரை நான் போன கல்யாண வீடு அத்தனையிலும்,
எல்லோரையும் அசையாது நிற்க விட்டு,
அந்தக் கரையிலிருந்து இந்தக் கரை வரையும் படமெடுப்பதே,
இன்றுவரை வழக்கமாயிருக்கிறது.
வீடியோ ‘லைற்’ பட்டு முடியும் வரை,
எங்களைத்தான் எடுக்கிறான் என நினைத்து,
தொடர்ந்து புன்னகை புரிய நாம் படும் பாடு இருக்கிறதே,
அது பெரும்பாடு!
‘மூவிகமராவை’
‘ஸ்ரில்கமராவாப்’ பாவிக்கும் மூடத்தனத்தை என் சொல்ல?
முத்தத்தில் முன்னேறியவர்கள் மூளையில் முன்னேறவில்லை.
கெட்டதில் ஆட்சி, நல்லதில் வீழ்ச்சி.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம!.


இனி என்ன? சம்பிரதாயங்கள் முடிந்தால் கல்யாணவீடுதான்.
அங்கும் சினிமாத்தனம் தொடரும்.
மண்டப, மணவறை அலங்காரங்களுக்கு மட்டும்,
இன்றைக்காகும் செலவு, மூன்று, நான்கு லட்சங்களைத் தாண்டுகிறது.
‘சினிமாசெற்’ போடுகிறார்களாம்!
மேற்கு நாட்டுப் பனியில் உருகும் பாசத்தின் இரத்தம்,
பணமாய் அங்கு ஓடும்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!.


இன்றைய கல்யாணங்களில்,
சினிமாத் தனம் நோக்கிய புதுப்புது சம்பிரதாயங்கள் வேறு,
சினிமாவில் வரும் கனவுக் காட்சிகளை நினைவூட்டும் வண்ணம்,
மணமகளை அழைத்து வர குழந்தைத் தோழிகள்,
வெள்ளை உடையில் கையில் மெழுகொளியோடு வருவார்கள்.
அப்படி வரும் அக் குழந்தைகளுக்கு,
அலங்காரம் செய்யவே ஆயிரக்கணக்கில் செலவாகிறது.
ஒரு காலத்தில் திருமணமானவர்கள் தான் மணவறையில் நிற்பார்கள்.
இன்று குழந்தைகளும் நிறுத்தப்படுகிறார்கள்.
நான் சென்ற ஒரு கல்யாண வீட்டில்,
ஒரு குழப்படிக்கார குழந்தையை,
மணமகளுக்கருகில் நிறுத்தப்போக,
அது திடீரென்று மணமகளின் உச்சிப்பட்டத்தைப் பிடிங்கி எடுத்தது.
அடிக்கவும் முடியாமல், பிடிக்கவும் முடியாமல்,
அன்று அவர்கள் பட்டபாடு.
அல்லோலகல்லோலம் தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!.


அண்மைக்காலமாக ஒரு புதிய சம்பிரதாயம் தொடங்கியிருக்கிறது.
நடுத்தர வீட்டுக் கல்யாணங்களிலேயே இத்தனை விஷேசமிருக்க,
பணக்காரர்களான எங்கள் வீட்டிலும் இவ்வளவு தானா?
சில செல்வந்தர்கள் தம்மை உயர்த்திக்காட்ட,
புதிது புதிதாய் திருமணக் கிரியைகளை உருவாக்குகிறார்கள்.
அண்மையில் ஒரு கல்யாண வீட்டில்,
மணப்பெண்ணை மணவறைக்கு அழைத்து வரும் போது,
முன்னே இளம் பெண்களைக் கொண்டு,
‘கண்டிய’ நடனமாடி வரச் செய்தார்கள்.
பரத நாட்டியம் தப்பிப்பிழைத்தது.
நெஞ்சுக் குழியைத் தொடும் மேலுடையும்,
இன்னும் ஒரு இஞ் கீழ் இறங்கினாலும்,
ஆபத்து என்ற நிலையில் இருந்த கீழ் உடையுமாக,
அந்த பெண்கள் ஆடிய ஆட்டத்தை என்ன சொல்ல?
சோர்ந்திருந்த கிழவர்கள் கூட நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
‘(V)வெறினைஸ் (V)வெறினைஸ்,’ என்ற அவர்களின் பாராட்டு,
எதற்கென்று எனக்கு விளங்கவில்லை.
மணவறையிலிருந்த மாப்பிள்ளை கூட,
பெண்ணை விட்டுவிட்டு அவர்களையே பார்த்தான்.
முதற் கோணல்.
உருப்பட்ட மாதிரி தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம!.


மற்றொரு பணக்காரக் கல்யாண வீட்டில்,
மணவறையின் அருகிலேயே,
அரச கோலத்தில் மணமகன் மணமகளை பின்புறமாய்  அணைத்து,
கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்ற,
பெரிய இரு புகைப்படங்களை வைத்திருந்தார்கள்.
‘டும் டும் டும்’ படக் கனவுக்காட்சிப் பாட்டில் வரும்,
மாதவனையும் ஜோதிகாவையும் நினைத்து எடுத்த படங்கள்.
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதைதான்.
அப் படத்தையே வெற்றிலைப் பையிலும் அடித்துக் கொடுத்தார்கள்.
அப்படம் தரும் தப்பர்த்தம் கூட அவர்களுக்குப் புரியவில்லை.
மணமகளை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.
ஏனென்று கேட்டால்,
பூ, உதென்ன பிரமாதம் சுவிஸ்ஸில,
எங்கட மகனிட கலியாணத்திற்கு,
பொம்பிளைய ஹெலிக்கொப்டரில கொண்டு வந்து இறக்கினவங்கள்.
என்கிறார்கள்.
எல்லாம் காலம் செய்யும் கோலம்.
இதெல்லாம் புதுமையாம்!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!.


இதையெல்லாம் பார்த்த ஐயருக்கும் உற்சாகம் வந்துவிடும்.
நான் மட்டும் என்ன நடிப்பில் குறைந்தவனா?
 என் பங்கிற்கு இதோ பாரும்” என அவரும் தொடங்குவார்.
நான் போயிருந்த ஒரு கல்யாண வீட்டில்,
மணமகன் கையில் சீப்பைக் கொடுத்து,
மணவறையில் வைத்து மணமகளுக்கு,
தலையைச் சீவிவிடவே பண்ணினார் ஒரு ஐயர்.
மற்றொருவர் மணமக்கள் கையில் மாலைகள் கொடுத்து,
எதிரும் புதிருமாக நிற்கச் சொல்லி,
முன்னும் பின்னுமாய் அவர்களை நடக்கப்பண்ணி.
ஏதேதோ கூத்தெல்லாம் ஆடினார்.
‘மாமுது பார்ப்பான் மறைநெறி காட்டிட’,
கண்ணகியின் கல்யாணம் நடந்ததாய் இளங்கோ அடிகள் சொன்னார்.
இன்றைக்கு இவையெல்லாம் மறைநெறியாம்.
இவற்றைப் பார்த்து யாருக்காவது கோபம் வருகிறதா என்றால்,
அது தான் இல்லை!
‘வீடியோ’வில் விழும் நேரம் கூடுகிறதே என்று,
அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.
நாடகமே இந்த உலகம்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!.


எல்லோரையும் பார்த்து நாதஸ்வர வித்துவானும் உசாராவார்.
இந்த சினிமாவிற்கு நான் தானே இசையமைப்பாளர்,
என்று அவர் நினைத்துக்கொள்வார்.
உடனே அவரின் விளையாட்டுத் தொடங்கும்.
“மணமகளே மணமகளே வா வா”,
“வாராய் என் தோழி வாராயோ”,
“பக்கத்திலே கன்னிப்பெண்ணிருக்கு”,
இப்படியாய் பழைய சினிமாப்பாடல்களை இசைத்து,
அவரும் ‘அப்லாஸ்’ வாங்கிக்கொள்ளுவார்.
ராஜ வாத்தியம் சேறள்ளும்.
ஒரு கல்யாண வீட்டில் உற்சாகமிகுதியில்,
இளம் வித்துவான் ஒருவர்.
“வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று,
வாசிக்கத் தொடங்கினார்.
மாப்பிளை பொம்பிளையில ஆர் வாளை மீன்,
ஆர் விலங்கு மீன்?என,
என் இலக்கிய உள்ளம் ஆராயத்தொடங்கியது.
அடிவாங்கப் போகிறார் என்று பார்த்தால்.
அத்தனைபேரும் அவரைப் பாராட்டினார்கள்.
மணமக்கள் பாட்டோடு பொருந்தினார்களோ என்னவோ,
யாருக்குத்தெரியும்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


முன்பெல்லாம் உறவின் பலம் காட்டவே,
மாப்பிள்ளைத் தோழன் ஒருவனை நியமிப்பார்கள்.
அந்தக்காலத்தில் பெண்ணின் தம்பியாருக்கு தலைப்பாகையைச் சுற்றி,
பொம்பிளை வரும் மட்டும் மாப்பிள்ளைக்குப் பக்கத்தில இருத்தி விடுவார்கள்.
பொம்பிளை வந்ததும் அப்பாவியாய் அவன் எழும்பிப் போவான்.
மாப்பிள்ளையின் காலைத் தேய்த்துக் கழுவி,
ஒரு மோதிரம் வாங்கிக் கொள்வான்.


இப்ப அப்படியில்லை.
மாப்பிள்ளைத் தோழனும் கிட்டத்தட்ட மாப்பிள்ளைக்குச் சமன்.
“பொம்பிளைக்குச் சமமாய் மாமியாரே நிற்கும் போது,
மாப்பிள்ளைக்குச் சமமாய் தோழன் நிற்கக் கூடாதா?”
உங்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
மாப்பிளைக்கும் தோழனுக்கும், உடுப்பெல்லாம் கூட ஒன்றே தான்.
கழுத்திலிருக்கும் மாலை மட்டுந்தான்,
மாப்பிள்ளையைப் பிரித்துக் காட்டும்.


தோழனின் உடுப்புக்கும் ஆயிரக்கணக்கில செலவாகும்.
அன்றைக்கு மட்டுமே உடுக்கக் கூடிய உடுப்பு.
பிறகு கூரைச் சீலை மாதிரி,
கழட்டி அலுமாரிக்குள் வைக்க வேண்டியது தான்.
சும்மா நாட்களில் உடுத்தால்,
முன்பு யாழ்ப்பாண பஸ்டாண்டில் நின்ற வைரமாளிகை மாதிரியும்,
இப்போ ‘ஸ்ரார் ஹொட்டல்’ வாசலில தலைப்பாகையோடு நிற்கிற,
வரவேற்பாளன் மாதிரியும் சனம் நினைக்கும்.
அதுக்குத்தான் அவ்வளவு செலவு.


மாப்பிள்ளையின் ‘சொக்ஸ்’ காலிற்கு,
அரைக்குணியலில் சுண்டு விரலால் தண்ணி தெளிச்சு,
(‘சொக்ஸ்’ காலை என்னண்டு கழுவுறதாம்?)
லேசாய் மோதிரம் வாங்குவான் இவன்.
சில தோழன்கள் மணவறையில் இருந்தபடியே,
பெண்கள் பகுதியை மயக்கமாய்ப் பார்த்து,
தான், மாப்பிள்ளையாகும் ஆயத்தங்களும் செய்வார்கள்.
‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி,
புல்லுக்குமாங்கே பொசியுமாம்.’
சில வேளை மாப்பிள்ளையை விட தோழன் திறமாயும் இருப்பான்.
“தோழனால் மாப்பிள்ளைக்கு முக்கியமில்லாமல் போகுது.
அவருக்கேன் மாப்பிள்ளையைப் போல உடுப்பு?”
அப்படிச் சொன்னால் நீங்கள் தொலைந்தீர்கள்!
குடும்பமே உங்களை விழுங்கி விடும்.
நல்ல இனம் ! நல்ல குணம்! நல்ல மணம்!


முன்பெல்லாம் மணவறைக்கு வரும் மணமகள்,
அஞ்சி, நடுங்கி, வெடவெடுத்து விழுமாப்போல் வருவாள்.
அவள் விழுந்துவிடாமல் பிடிப்பதற்காகவே தோழியரை நிறுத்துவார்கள்.
தடம் பார்த்த அவளது நடையழகே மனதை அள்ளும்.
கொண்டு வந்த மாலையை மணமகன் கழுத்தில் போடுவதற்குள்,
அவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விடும்.
தாலி கழுத்தில் ஏற,
கையெடுத்துக் கும்பிட்டு அவள் விம்மி அழுவாள்.
பார்க்கவே நெஞ்சுருகும்.
மொட்டாக்கை எடுத்ததும் தான்.
மாப்பிளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்ப்பர்.
அது அந்தக் காலம்.


இன்றைக்கு பெண் எந்தவித அச்சமும் இல்லாமல்,
‘மாச்பாஸ்ரில்’ வருவது போல் மணவறைக்கு வருகிறாள்.
தலையைக்கூட சரியாய்க் குணிவதில்லை.
அது பாரதி சொன்ன ‘நிமிர்ந்த நன் நடை’யாம்.
அவள் ஓடிப்போய் உட்கார்ந்து விடாமல் பிடிப்பதற்கே தோழியரோ?
மனதில் வினா எளும்.
நாணம்? அது என்ன விலை?
ஒரு வருஷமாய் ‘ஷெல்’லிலும், சொல்லிலும் கொஞ்சி,
இன்னொரு வருஷமாய் ‘பைக்’ கிளும், படத்திலும் உராய்ஞ்சி,
சினிமாவையும், ‘சீரியல்’களையும் பார்த்து,
வருங்காலக் கணவனை ‘வாடா, போடா’ என பேசி திரிந்த பின்,
மணவறைக்கு வரும் பெண்ணிடம்,
நாணத்தை எதிர்பார்க்கலாமா?
நல்ல இனம் ! நல்ல குணம்! நல்ல மணம்!


ஐயர் கொஞ்சம் இடை வெளிவிட்டால்,
மணவறையிலேயே திரும்பியிருந்து,
கை பிடித்துப்பேசத் தொடங்கிவிடுகிறார்கள்.
அச்சம், நாணம் என்று, நீ சொல்வதெல்லாம்,
பழைய கால மூடத்தனம் என்கிறீர்களாக்கும்.
அப்படித்தான் என்றால்,
இன்றைக்கும் தோழி, மொட்டாக்கு இவை எல்லாம் எதற்காம்?
‘ஹலோ’ சொல்லி விட்டு,
மாப்பிள்ளைக்கும் ஐயருக்கும் ‘ஹாண்ட்ஷேக்’ பண்ணி விட்டு,
பக்கத்தில் இருக்க வேண்டியது தானே?
கேள்வி கேட்டால் நீங்கள் என்னைப் பழம்பச்சோந்தி என்பீர்கள்.
‘யதார்த்தவாதி வெகுசன விரோதி.’
இந்தக் காலத்தில் ஆணாவது, பெண்ணாவது?
எல்லாம் ஒன்றுதான் போங்கள்!
நல்ல இனம் ! நல்ல குணம்! நல்ல மணம்!


முந்தி கல்யாண வீடுகளில்,
வந்த ஆக்கள் தான் தம்பதியருக்கு பரிசு கொடுப்பார்கள்.
இப்ப வர்ற ஆக்களுக்கு தம்பதியர் பரிசு கொடுக்கிறார்கள்.
எல்லாம் ஐந்நூறு. ஆயிரம் செலவில்,
“வீடெல்லாம் வெளிநாட்டுக் காசு விளைஞ்சு கிடக்குது,
யாருக்கு வேணும் உங்கட அற்பப் பரிசுகள்.”
என்கிறார்கள் போல.
“அந்தக்காலத்திலயும் வெத்திலைப்பை கொடுக்கிறது தானே?”
என்று கேட்கிறீர்களாக்கும்.
அது மங்களத்திற்காக! இது டாம்பீகத்திற்காக!
நல்ல இனம் ! நல்ல குணம்! நல்ல மணம்!


அது மட்டுமில்லாமல் சிலர் கல்யாண அழைப்பிதலிலேயே,
“பரிசுகள் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது!” என,
பெருமையாய் அடித்து விடுகிறார்கள்.
கொண்டும் கொடுத்தும் வாழ்வது தானே உறவு.
என்னட்ட பரிசு வாங்காட்டி,
உன்னட்ட நான் ஏன் வரவேணும்?
உன்னட்ட சும்மா வந்து சாப்பிட,
நான் என்ன பிச்சைக்காரனே?”,
இப்படி ரோசமாய் ஒருத்தரும் கேட்கிறபாடாயில்லை.
வந்ததுக்கு லாபம் என,
எல்லோரும் ஓடியோடிச் சாப்பிட்டு விட்டு,
பாஞ்சு பாஞ்சு பரிசு வாங்குகிறார்கள்.
பரிசுகெட்ட தமிழர்கள்!
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


காசு கூடினதால வந்த பிழைகளில எல்லாம் பெரிய பிழை,
கல்யாணம் முடிந்ததும் தான் நடக்கிறது.
கொண்டாட வந்த உறவெல்லாம் வீட்டில் நிற்க,
மாப்பிளையும், பொம்பிளையும் முதலிரவிற்காக,
‘ஹொட்டலுக்குப்’ போகிறார்கள்.
பின் மூன்று நாள் கழித்துத்தான் அவர்கள் வீடு வருவார்கள்.
கொண்டாட வந்த உறவெல்லாம்,
ஆளையால் பார்த்திட்டு வெளிக்கிட வேண்டியது தான்.
இந்த ‘ஹொட்டல்’ முதலிரவு.
இப்ப கட்டாயச் சடங்காக ஆகி விட்டது.
பரம்பரையாய் வாழ்ந்த வீட்டில்,
முதல் நாள் வாழ்வை தெய்வீகமாய்த் தொடங்கவேண்டும் என்ற எண்ணமேயில்லை.
என் அப்பன், பாட்டன் வாழ்ந்த இடத்தில் நானும் வாழத்தொடங்குகிறேன்.
இது பாட்டாவும், பாட்டியும், அம்மாவும், அப்பாவும் படுத்த கட்டில்,
அவர்கள் வாழ்க்கையின் வெற்றி எனக்கும் ஆகவேண்டும்.
இந்த அறையையும், கட்டிலையும் காணும் போதெல்லாம்,
முதலிரவு ஞாபகத்தில் வந்து முதுமையிலும் சிலிர்ப்பு வரவேண்டும்.
இதே அறையில் இதே கட்டிலில் என் பிள்ளையின் முதலிரவும் நடக்கவேண்டும்.
இப்படியாய் எண்ணும் மெல்லுணர்வெல்லாம் செத்துப் பலகாலம் ஆகிவிட்டது.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


இப்போ இந்தப் புனித  எண்ணமெல்லாம் எவருக்கும் வருவதில்லை.
முதலிரவு முடிந்த அடுத்த நாள் அறையை விட்டு வெளியில் வந்தவுடன்,
எங்கட அக்காவ மாமியார், மச்சாள்மார் எல்லாரும்,
கட்டிப்பிடிச்சுக் கொஞ்சியதையும்,
பால் காய்ச்சிக் கொண்டு போன அம்மா,
அக்காவின் முகமலர்ச்சி கண்டு,
தலைதடவி கண்ணீர் வடித்ததையும்,
அப்பா வேறு புறம் திரும்பி சால்வையால் கண் துடைத்ததையும்,
அத்தான் ஒரு புறம் பெருமிதமாய் நின்றதையும்,
நினைத்துப்பார்க்கிறேன்.
திருமணத்தன்று நடக்கும் உறவுக்கலப்பு,
மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதல்ல,
இரு வீட்டு மனிதருக்குந் தான்.
ஏனோ இது இன்று ஒருவருக்கும் விளங்குதில்லை.
விஞ்ஞான காலத்து அஞ்ஞான மனிதர்கள்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


‘ஹொட்டலுக்குப்’ போகிறார்களாம் ‘ஹொட்டலுக்கு’!
வெள்ளைக்காரன் காட்டிய வழியம்மா!
அஞ்சு அப்பன், மூன்று அம்மா என வாழ்கிற அவர்களுக்கு அது சரி,
அவர்களுக்கு வீடாவது, குடும்பமாவது, பரம்பரையாவது.
அது நாடோடிச்சாதி.
வீட்டில படுத்தா என்ன? ‘ஹொட்டல்ல’ படுத்தா என்ன?
அவனைப் பார்த்து பண்பாட்டில் ஊறிய பரம்பரைத் தமிழனும்,
முதலிரவுக்கு ‘ஹொட்டலு’க்குப் போகிறான்.
எத்தனை குற்றவாளிகள் படுத்த கட்டிலோ!
எத்தனை குஷ்டரோகிகள் படுத்த கட்டிலோ!
எத்தனை படுபாவிகள் படுத்த கட்டிலோ!
எத்தனை பரத்தையர்கள் படுத்த கட்டிலோ!
எந்தக்கூச்சமும் இல்லாமல்,
அந்த இடத்தில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்களாம்.
நல்ல இனம் ! நல்ல குணம் !நல்ல மணம்!


இல்லறத்தில் புனிதம் எப்படி வரும்?
கேட்டால், ‘செக்ஸை (F)பிறீயாய்’ அனுபவிக்கிறார்களாம்.
காமக் கல்யாணம்.
“வீட்டில சொந்தக்காரரெல்லாம் இருக்கேக்க எப்படி...........”
வெட்கப்பட்டுக் காட்டுகிறார்கள்.
கண்டவனும் சூழ்ந்திருக்கிற ‘ஹொட்டல்ல’
வெட்கம் வருவதில்லையாம்.
உறவினர் சூழ்ந்திருக்கிற வீட்டில வெட்கம் வருகுதாம்.
நல்ல வெட்கம் தான் போங்கள்!
இல்லறம் இன்றைக்கு ‘ஹோட்டல்’ அறமாய்ப் போய்விட்டது.
கேட்டால் புதியன புகுதலும்,
பழையன கழிதலும் வழு இல என்கிறார்கள்.
சுகத்திற்கேற்ற சூத்திரம்!
படித்தும் கெட்ட பாவிகள்.
நல்ல இனம் ! நல்ல குணம் !நல்ல மணம்!


முக்கியமான மற்றொரு விடயம்.
அதுவும் முதலிரவு பற்றியது தான்.
ஆணும், பெண்ணும் உடலால் இணைவது,
திருமணத்தின் முக்கியமான விடயங்களில் ஒன்றல்லவா?
சந்ததிவிருத்தியின் சரித்திரம் அங்குதானே தொடங்குகிறது.
கல்யாணம் பொருத்துவதிலிருந்து, தாலி கட்டுவது வரை,
ஒவ்வொன்றிற்கும் நல்ல நேரம் பார்க்கிறார்கள்.
நாள், கிழமை பார்க்கிறார்கள்.
ஆண், பெண் இணைப்பிற்கு மட்டும்,
இங்கு யாரும் நல்ல நேரம் பார்ப்பதில்லை.
நட்சத்திர ‘ஹோட்டலில்’ தங்கிவிட்டால்,
நாள், நட்சத்திரம் தேவையில்லையோ?
அட்டமியோ? நவமியோ? அது பற்றி எவருக்கும் கவலையில்லை.
பின் தொட்டது எப்படித் துலங்கும்.
கெட்டதுதானே விளங்கும்.
நல்ல இனம் ! நல்ல குணம் !நல்ல மணம்!


“இதுவெல்லாம் அவர்களின் பிரச்சனை,
அவர்களின் வாழ்க்கை, அவர்களின் பணம், அவர்களின் விருப்பம்,
அவர்கள் எதையும் செய்து விட்டுப் போகட்டும்.
நீர் ஏன் கிடந்து இவ்வளவு வேதனைப்படுகிறீர்.
அவர்கள் கல்யாணம் வைக்கட்டும்!
நாங்கள் மறந்தும் அதற்கு போவமே? என்று,
நீர் கொதிக்கக் காரணம் என்ன?”
கேட்கிறீர்களாக்கும் சொல்கிறேன்!


மேற் கருத்துக்கள் எமது சமுதாயம் பற்றிய அக்கறையோடு,
ஒரு தமிழனாய் என்னால் சொல்லப்பட்டவை.
“சமுதாயம் எப்படியும் தொலைந்து விட்டு போகட்டும்” என்கிறீர்களா?
நல்ல எண்ணம்!
கேட்பாரில்லாத இச் சமுதாயத்திற்குள்,
இன்னும் நூறு எதிரிகள் புகுவார்கள்.
“புகுந்தால் என்ன?”- நீர் கேட்டாலும் கேட்பீர்.
உம்மைப் போல சூடு, சுறணை இல்லாமல் பிறக்க.
கொடுத்து வைக்கவில்லையே!
சரி! சமுதாயம் எப்படியும் தொலையட்டும்.
தனி மனிதனாய் என் மானத்தை நான் தானே காக்க வேண்டும்.
“கல்யாணத்தில், அப்படி என்ன பெரிய மானம் போகிறது” என்கிறீர்களா?
ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.


கல்யாண வீட்டிற்குப் போகிறீர்களா?
கல்யாண வீட்டுக்காரர் யாராவது,
வாசலில் நின்று உங்களை வரவேற்க வேண்டும் என்று மட்டும்,
எதிர் பார்த்து விடாதீர்கள்.
அதெல்லாம் அந்தக் காலம்.
பொது மண்டபம் தானே,
அன்னதான மடத்திற்குள் நுழைவது போல,
நீங்கள் உங்கள் பாட்டுக்கு உள்ளே நுழையவேண்டியது தான்.
சில வேளை ஒரு சில சின்னக் குழந்தைகள்,
தங்கள் அலங்காரம் காட்டி,
உங்களை வரவேற்க வாசலில் நிற்பார்கள்.
கொஞ்சம் பிந்திப் போனால் அதுவும் இல்லை.
வருவிருந்து ஓம்புதலை எல்லாம்,
நீங்கள் எதிர்பார்த்தால்,
உங்களுக்கு ‘லூஸ்’ பட்டம் தான் கிடைக்கும்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


சகித்துக் கொண்டு மண்டபத்தினுள்ளே நுழைகிறீர்களா?
அங்கோ உங்களை வரவேற்க மருந்துக்கும் ஆளிராது.
உரிமைக்காரர் எல்லோரும்,
மேடையில் ‘வீடியோ’வுக்கு ‘போஸ்’ கொடுத்துக்கொண்டு நிற்பார்கள்.
சினிமாத்தியேட்டரில ‘சீற்’ பிடிக்கிறது போல,
முன்னுக்கோ பின்னுக்கோ ஒரு ‘சீற்றைப்’ பிடித்து,
நீங்களாக இருக்கவேண்டியது தான்.
நீங்கள் யாருக்கு முன்னுக்கும் இருக்கலாம்.
எவருக்குப் பின்னுக்கும் இருக்கலாம்.
முறை, தலை, வரிசை, மண்ணாங்கட்டி ஒன்றும் கிடையாது.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


வழக்காளி முதல் வரிசையில் இருப்பார்.
‘ஜஜ்’ ஒன்பதாம் வரிசையில் இருப்பார்.
பெடியன் முதலாம் வரிசையில் இருப்பான்.
‘பிறின்சிபல்’ பத்தாம் வரிசையில் இருப்பார்.
‘பியோன்’ முன்னால இருப்பார்.
‘மனேஜர்’ பின்னால இருப்பார்.
மரியாதை ஒழுங்குப் படி ‘சீற்’ எதிர்பார்த்தால்,
நீங்கள் எழும்பிப் போகவேண்டியது தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


தம்பதியரை வாழ்த்துவதிலும் இதே கூத்துத்தான்.
பெரியவர் சின்னவர் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது.
ஓமகுண்டத்திற்கும் கும்பத்திற்கும் முன்னால்,
சப்பாத்துக்காளோட சிலர் நிற்பார்கள்.
அவர்கள் தான் பெரிய மனுசர்களாம்.
உடனே மேடையில் ‘(ளு)சூட்டிங்’ ஆரம்பிக்கும்.
மாமா வாங்கோ! மச்சாள் வங்கோ! சின்னண்ண வாங்கோ!
‘வீடியோவிற்காக’ உறவெல்லாம் மேடைக்கு அழைக்கப்படும்.
புதிதாய் வந்த விருந்தினர்கள்,
ஆவென்றுகொண்டு நிற்கவேண்டியது தான்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


மாப்பிள்ளை வந்து,
பொம்பிளை வந்து,
தாலித்தட்டு நீட்டி
கூறை மாற்றி,
இப்படியாய் கிரியைகள் நீண்டு,
அழைப்பிதலின் சுபமுகூர்த்தம் முடிந்து,
அடுத்த முகூர்த்தமும் வந்து விடும்.
மணி மதியம் இரண்டைத் தாண்ட,
விருந்தினருக்கு சிறுகுடலை பெருங்குடல் திண்ணத் தொடங்கும்,
கல்யாண வீட்டுக்காரர்கள் அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல்,
வீடியோவுக்கு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டு நிற்பார்கள்.
இந்நிலையில், துணிந்த, வெட்கம் கெட்ட ஒருவர்,
“நாங்கள் சாப்பிட்டிட்டு வருவம்!” என்று,
ஒருவரும் கூப்பிடாமலே சாப்பிட வெளிக்கிடுவார்.
பிறகென்ன, உங்களுக்கும் ‘லைசன்ஸ்’ கிடச்சிடும்.
பின்னால ஓட வேண்டியது தான்.
‘உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம் மனையில்,
உண்ணாமை கோடி பெறும்.’
பாவம் அது ரோசக்காரத் தமிழனுக்கு ஒளவை பாடியது.
அவள் கிடக்கிறாள் கிழவி.
நீங்கள் உங்கள் பாட்டுக்கு ஓடுங்கள்.
நல்ல இனம் ! நல்ல குணம் ! நல்ல மணம்!


மரியாதை தெரிந்து முதல் செம்பு தரவில்லை என்று,
எத்தனை பெரியமனுதர்கள் கோபித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
அது அந்தக் கால மானமுள்ள மனுசற்ற கதை.
உங்களுக்கு எதற்கு அதெல்லாம்.
எவ்வளவு கெதியில் ஓடமுடியுமோ,
அவ்வளவு கெதியில் ஓடிப்போய் ‘கியூவில்’ நில்லுங்கோ!
முன்னால் யார் பின்னால் யார் என்ற கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு?
நல்ல இனம் ! நல்ல குணம் ! நல்ல மணம்!


‘கியூவில’ நிண்டதும், கையில ஆளுக்கோர் தட்டுத் தருவார்கள்.
பெரிய பெரிய மனுசரெல்லாம் தட்டேந்தி நிற்கவேண்டியது தான்?
பட்டு வேட்டியும் காஞ்சிபுரமும் இல்லாவிட்டால்,
அசல் பிச்சைக்காரப் ‘போஸ்’ தான்.
என்னது வாழை இலையோ? இல்லாட்டி சாப்பிட மாட்டியலாக்கும்,
நடக்கிற கேவலத்தில முறை கேட்குதாக்கும் முறை.
அது தான் தட்டில் ஒரு ‘லஞ்சீற்’ போட்டிருக்கினம் எல்லே,
உங்கட ‘லெவலுக்கு’ அது தாராளமாய்ப் போதும்,
மெல்ல மெல்ல நகருங்கோ.
நல்ல இனம் ! நல்ல குணம் ! நல்ல மணம்!


வயிரவருக்கு மடை வைச்ச மாதிரி,
பலவகையான சாப்பாடெல்லாம்,
ஒரே மேசையில் படைத்துக் கிடக்கும்,
சோற்றில் இருந்து ரசம் தயிர் வரை,
மாட்டுக்கு புண்ணாக்கு குழைச்ச மாதிரி,
‘கெடுதீர’ எல்லாவற்றையும்,
ஒரேதட்டில் ஒரே நேரத்தில அள்ள வேண்டியது தான்,
பிறகு அங்கு போட்டிருக்கிற மேசை ஒன்றில்,
உங்கள் பாட்டில் போய்
‘ஹோட்டல்ல’ உட்காருகிற மாதிரி உட்கார வேண்டியது தான்.
‘ஹோட்டலிலயாவது’ ‘சர்வர்’ வந்து என்ன வேண்டும் என்று கேட்பான்.
இங்க ஒரு நாயும் ஒன்றும் கேட்காது.
பிறகென்ன கேட்க நாதியில்லாத தமிழனாய்,
வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டியது தான்.
நல்ல இனம் ! நல்ல குணம் ! நல்ல மணம்!


உங்கபாட்டில திண்டிட்டு,
ஐஸ்கிறீம், பாயாசம் என்று அள்ளிக்குடிக்க வேண்டியது தான்.
இந்த அன்புக் குறைகளை யெல்லாம் மறைக்க.
வாசலில் வைத்து பரிசு என்ற பெயரில,
பைபையாய் பிச்சையும் தருவார்கள்.
பிறகென்ன அன்பாவது உபசாரமாவது,
பொருள் கிடைக்கிறதே போதாதா?
எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு,
அதையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போக வேண்டியது தான்.
நல்ல இனம் ! நல்ல குணம் ! நல்ல மணம்!


உங்களுக்கென்ன, கெலி தீரத் திண்டாச்சு,
மரியாதை கிடைக்காட்டியும் பரிசு கிடைச்சாச்சு.
பிறகென்ன வந்ததுக்கு லாபம் தானே.
அப்ப மானம்?
அது இருந்தாத் தானே போறதுக்கு,
மயிர் நீப்பின் உயிர் வாழாத் தன்மையெல்லாம்,
கவரி மானுக்குத்தான்,
நாங்கள் என்ன ஐஞ்சறிவும் ரோசமும் உள்ள மிருகங்களே?
ஆறறிவும், மானமும் இல்லா மனிசர்கள் தானே.
இந்த சீர்கேட்டில் மானம் தான் தமிழனுக்கு முக்கியமாம்!
அதைச் சிங்களவன் வாங்கப் பார்க்கிறானாம்.
நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!


ஐயா!
நீங்கள் எதுவும் செய்து விட்டுப் போங்கள்!
தெரியாத்தனமாய்த் தமிழைக் கொஞ்சம் படித்து விட்டதால்,
மானம், மரியாதை என்றெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு.
என்னைப் பொறுத்தவரை,
“கல்யாண வைபோகமே”
அது அந்தக் காலம்.
கல்யாணம் வை! போவமே?
இது தான் இந்தக் காலம்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...