•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, May 10, 2016

அதிர்வுகள் 27 | " கிளாக்கர் புத்தி "

ந்த வீட்டின் வரவேற்பறையில்,
கை நிறையச் சாதகக் கட்டுகளுடன் அமர்ந்திருக்கிறார்,
கலியாணப் புறோக்கர் கந்தப்பு.
பரீட்சைத்தாள் காணும் மாணவனின் பரபரப்புடன்,
அவர் முன்னால் சுந்தரமூர்த்தியார் அமர்ந்திருக்கிறார்.
பிள்ளைக்குச் சாதகங்கள் ஏதாவது பொருந்தியிருக்காமே?
‘கேர்ட்டின்’ சீலைக்குப் பின்னால் மறைந்து நிற்கும்,
சுந்தரத்தாரின் மனைவியிடமிருந்து கேள்வி.
ஓம் ஓம். இரண்டு, மூன்று சாதகம் பொருந்தியிருக்குது.
துணைவியின் கேள்விக்கு,
சுந்தரத்தாரின் முகம் பார்த்து, பதில் சொல்லுகிறார் புறோக்கர்.
இது புன்னாலைக்கட்டுவன் மாப்பிள, 
ஆள் வலுசிவப்பு, டாக்குத்தர் உத்தியோகம். 
இது இன்னொரு உரும்பிராய் மாப்பிள, 
கொஞ்சம் கறுவல் எண்டாலும்,
நெடு நெடு என்று பார்க்கச் சினிமாக் கதாநாயகன் போல இருப்பார், 
ஆள் லெக்சரர்.
இந்த மூன்றாவது சாதகம் ஒரு அளவெட்டி மாப்பிள, 
ஆள் பெரிய வடிவெண்டு சொல்ல முடியாது, 
கிளாக்கர் உத்தியோகம்தான். 
ஆனால், நல்ல சாதிமான்.
குமரைக் கரையேற்ற வேண்டும் எனும் பெற்றோரின் பயத்தை,
தன் பலமாக்கி,
ஒரு ஜமீன்தார் போல் கால் மேல் கால் போட்டுக் கதிரையிற் சாய்ந்தபடி,
சாதகக் குறிப்புகளை மேசையில் விட்டெறிந்து,
மிடுக்குக் காட்டுகிறார் புறோக்கர்.
இனி உங்கட முடிவு, 
ஆரப்பாக்கவேணும் என்கிறியளோ அதை முடிச்சுத் தர்றது, 
என்ர பொறுப்பு
புறோக்கர் பேசி ஓய,
சுந்தரத்தாரின் முகத்திற் குழப்பம்.
யாரைத் தேர்ந்தெடுப்பது?
என்றுமே தனித்துச் சிந்தித்துப் பழக்கப்படாத அவர்,
தன் மனைவி மறைந்து நிற்கும் ‘கேர்ட்டின்’சீலையைப் பார்க்கிறார்.
‘க்க்க்உஉம்’
உள்ளே நிற்கும் அவர் சக்தியிடம் இருந்து,
வெளிப்பட்ட செருமற் சத்தம்,
‘உள்ளே வா!’ என்று அவரை அழைக்கிறது.
கோப்பியைக் குடியுங்கோ, இப்ப வந்திர்றன்.
புறோக்கரிடம் அனுமதி பெற்று,
அவசரமாய் அறைக்குள் நுழைகிறார் சுந்தரத்தார்.ஐயா, வாசகரே!
இந்த இடத்தில் நான் மூக்கை நுழைப்பதற்கு,
முதலில் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
“இவரும் கதை எழுதத் தொடங்கிற்றாராக்கும்!”
உங்களின் முணுமுணுப்புக்  கேட்கிறது.
“யார் யாரோ எதை எதையோவெல்லாம் எழுதி,
கதை என்றும் கவிதை என்றும் தாங்களே பேர் வைத்து,
புத்தகங்கள் போடும் இக்காலத்தில்,
நான் மட்டும் கதை எழுதினால் என்னவாம்?”
சரி சரி. வீணாக ‘டென்சன்’ ஆகாதீர்கள்.
சத்தியமாக நான் கதை எழுதத் தொடங்கவில்லை. போதுமா?
அப்படியானால் மேலே எழுதியது என்ன என்று கேட்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை ஐயா,
நான் எழுதப் போகும் கட்டுரைக்கு,
யதார்த்த பூர்வமாக,
ஒரு முன்னுரை வரைந்தாலென்ன என்று தோன்றியது.
அந்த முன்னுரையைச் சற்றுப் புதுமையாய்ச் செய்ய முயன்றிருக்கிறேன்.
அவ்வளவுதான் விசயம்.
இஷ்டப்படி எல்லோரும் இலக்கியத்திற் புது முயற்சி செய்யும் போது,
எனக்கு மட்டும் இப்படிச் செய்ய உரிமை இல்லையா என்ன?
உங்கள் புருவம் உயர்வது தெரிகிறது.
“கதை எழுத தொடங்கிப்போட்டு, அதை முன்னுரை என்கிறான்.
இவன் சரியான லூசன்தான்.”
திரும்பவும் உங்கள் முணுமுணுப்புக் கேட்கிறது.ஏன் அவசரப்படுகிறீர்கள்?
நான் இன்னும் என் முன்னுரையை முடிக்கவில்லையே!
அவசரப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.
சரி, மீண்டும் விட்ட இடத்திற்குப் போவோமா?
விசயத்தைத் தொடரு முன்,
முதலில், நான் விட்ட இடத்தில் உங்களிடம் ஒரு கேள்வி.
நவீன கல்வி முறையில்,
கேள்வி கேட்டு,
மாணவரிடமிருந்துதான் விடையை எடுக்க வேண்டுமாம்.
விடைகள் தெரியாத ஆசிரியர்களுக்கு வாய்ப்பான கல்வி முறை.
“பிறகும் சொறியத் தொடங்கிற்றான்.”
உங்கள் கோபப் பார்வை தெரிகிறது.
நான் எதைச் சொன்னாலும் உங்களுக்குக் குற்றம்தான்.
சரி, அதை விடலாம்.
கேள்விக்கு வருவோம்.
மேற்சொன்ன கதையில்,
புறோக்கரால் சொல்லப்பட்ட மாப்பிள்ளைகளில்,
எந்த மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்?
இந்த அலட்சியச் சிரிப்புத்தானே வேண்டாமென்பது.
இது ஒரு கேள்வியா?
டொக்டர் அல்லது லெக்சரர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.
அலட்சியமாய் நீங்கள் பதில் சொல்வது கேட்கிறது.
எல்லாம் தெரியும் என்று காட்டுவதுதானே உங்கள் வழக்கம்.
நீங்கள் சொன்ன பதில் பிழை என்றால்,
உங்களுக்கு மீண்டும் கோபம் வரப் போகிறது.
நான் என்ன செய்ய?
பிழை என்பதுதான் உண்மை.
எந்த மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்?
ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
உண்மை தெரிய வேண்டுமா?
என்னோடு சத்தம் போடாமல் வாருங்கள்,
நாங்களும் ‘கேர்ட்டின்’ சீலையை விலத்தி,
அறைக்குள்  நுழைவோம்.புறோக்கரின் முன் கம்பீரமாய் நடந்த சுந்தரத்தார்,
அறைக்குள் நுழைந்ததும்,
மனைவியின் முன் குழைகிறார்.
என்னப்பா! கேட்டனீரெல்லே, 
ஆரைப் பார்ப்பம், டாக்குத்தர் பரவாயில்லையே?
மனைவியின் பார்வையில் அலட்சியம்.
உங்களுக்கென்ன விசரே! டாக்குத்தர் மாப்பிள்ளை உதவான். 
அவங்கள் இராப்பகலா வேலை வேலை எண்டு திரிவாங்கள். 
வேலை செய்யிறாங்களோ, 
‘நேர்ஸ்’மாரோட பல்லிளிக்கிறாங்களோ ஆருக்குத் தெரியும்? 
உவனை முடிச்சால் எங்கட பெட்டையிட நிம்மதி கெட்டுப்போம்.
பெருமையோடு பிரேரித்த சுந்தரத்தார் கொஞ்சம் அசடு வழிய,
அப்ப லெக்சரர் மாப்பிளையைப் பார்ப்பமே?
மீண்டும் மனைவியைப் பார்க்கிறார்.
என்ன விசர்க் கதை கதைக்கிறியள். 
அவங்கள் அங்க ‘யுனிவர்சிற்றியில’,
பெட்டை, பெடியளெண்டு எல்லாருக்குமெல்லே படிப்பிப்பாங்கள், 
என்ன நாசத்தைப் படிப்பிக்கிறாங்கள் எண்டு ஆருக்குத் தெரியும்?
அங்க கூட்டம், இங்க ‘எக்ஸ்ரா கிளாஸ்’ எண்டு, 
கேட்டுக் கேள்வியில்லாமத் திரிவாங்கள். 
இவங்களக் காவல் காத்துக் கொண்டிருக்கவே,
நான் என்ர பிள்ளைய வளர்த்தனான்.
சுந்தரத்தாரின் முகத்தில் பெருங் குழப்பம்.
அப்ப கிளாக்கரையே செய்யப்போற?
சுந்தரத்தாரின் கேள்வியிலேயே சலிப்புத் தொனிக்கிறது.அது பற்றிக் கவலையில்லாமல் திருமதியார் தொடர்கிறார்.
ஏனாம், கிளாக்கர் எண்டாற் குறைவே? 
ஒப்பீசில கனக்க வேலை செய்யத் தேவையில்லை, 
சேர்ந்த நாள் தொடக்கம் ‘பென்சன்’ எடுக்கும் வரைக்கும்,
ஒரே வேலைதான்.
புதிசு புதிசா யோசிச்சு மூளை களைக்காது.
மணியடிச்சாப் போய் மணியடிச்சா வீட்டுக்கு வருவார். 
‘பிறமோசன்’தானாய் வரும்.
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வராது. 
புரட்சியோ, புதுமையோ செய்யத்தேவையில்லாத,
கரச்சலில்லாத உத்தியோகம்.
வீட்டு வேலைகளும் பார்க்க நேரம் இருக்கும் எண்ட படியால்,
எங்கட பெட்டைக்குக் கிளாக்கர் மாப்பிள்ளை தானப்பா நல்ல பொருத்தம்.
சுந்தரத்தாரின் முகத்தில் சிரிப்பு.
கிளாக்கர் உத்தியோகத்துக்குள்ள இவ்வளவு விசயம் கிடக்குதே?
தன் கிளாக்கர்ப் பதவியை நினைந்தும்,
மனைவியின் அறிவை நினைந்தும், சந்தோசப்படுகிறார்.
நீ சொல்லுறது சரிதானப்பா, 
நீயேன் அந்தக் காலத்தில என்னத்தான் முடிக்கப்போறன் எண்டு
ஒற்றக் காலில நிண்டனி எண்டு இப்பதான் விளங்குது.
பிள்ளைக்கும் கிளாக்கர் மாப்பிளையையே பாப்பம்.
‘கேர்ட்டின்’ சீலையை விலத்தி,
மீண்டும் கம்பீரமாய்ப் புறோக்கர் முன் வந்து உட்காருகிறார்.
“அது பாரும் புறோக்கர்,
கிளாக்கர் மாப்பிளைதான் எங்களுக்குப் பிடிக்குது.
ஏனெண்டாப் பாரும்......”
மாணவரின் ஆராய்ச்சி முடிவை,
தம் முடிவாய், அரங்குகளில் அறிவிக்கும்,
சில பேராசிரியர்களைப் போல,
மனைவியின் முடிவை,
தன் முடிவாய் புரோக்கரிடம் ஒப்பிக்கத் தொடங்குகிறார்,
சுந்தரத்தார்.ஐயா, வாசகரே!
ரொம்பச் சுவாரசியமாய்க் கதையை வாசிக்கிறீர்கள் போல,
வசதிப்பட்டால் இன்னொரு முறை இந்தக் கதையைத் தொடர்ந்து
எழுதுகிறேன்.
இப்போதைக்கு,
இந்த அளவில் அந்தக் கதையை விடுவோம்.
முன்னுரைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது
என்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை.
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல்,
எதுவித புரட்சியும் புதுமையும் செய்யாமல்,
உள்ளதை அனுபவித்தால் போதும் என்னும்,
சுந்தரத்தார் குடும்பத்தின் இந்தக் குணம்தான்,
எங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களின் பொதுவான குணம்.
இதைத்தான் மேற்சொன்ன சம்பவத்தினூடு வெளிப்படுத்தினேன்.“தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு,
எங்களையும் பேயனாக்கிறான்.”
திரும்பவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கிறது.
ஒரு காலத்தில்,
“இலக்கியங்களுக்குக் கலைத் தன்மை அவசியமில்லை”  என்று
சொன்ன முற்போக்கு விமர்சகர்களே,
“சொல்லப்படும் செய்திகளில் செய்தி மட்டும் இருந்தால் போதாது,
அதை, கலைத்தன்மையோடும் சொல்ல வேண்டும்” என்று,
இப்போது சொல்லத் தொடங்கியிருக்கும்போது,
நான் மட்டும் கலைத்தன்மைக்காக,
முன்னுரையை இப்படி எழுதக் கூடாதாக்கும்.
நீங்கள், எதையும் சொல்லிவிட்டுப் போங்கள்!
வாசகர்களாகிய உங்களைப் பற்றி எனக்கென்ன கவலை?
நீங்கள் வாசித்தாலென்ன? வாசிக்காவிட்டால் என்ன?
ஒரு விமர்சகர், என் கட்டுரையைப்பற்றி,
நாலுவரி எழுதினாலோ, பேசினாலோ போதாதா?,
எனக்குப் பெருமை தானாக வந்துவிடப் போகிறது.
சரி, சரி, அதற்காகப் பாதியில் கட்டுரையை மூடாமல்,
தொடர்ந்து வாசியும் ஐயா வாசியும்.புதுமையும் புரட்சியும் செய்யாமல்,
ஒன்றையே திருப்பத் திருப்பச் செய்யும் குணத்தை,
யாழ்ப்பாணத் தமிழரின் பொதுக் குணம் என்றேன் அல்லவா?
கொஞ்சம் திருத்திச் சொன்னால்,
அதை, நடுத்தரக் குடும்பங்களின்
தலைமைக் குணம் என்றும் சொல்லலாம்.
பிரச்சினைகளைச் சந்திக்க விரும்பாமல் நழுவி,
ஏதேனும் புதுமை செய்து பெயரெடுக்க வேண்டும் என்ற
விருப்பம் சிறிதும் இன்றி,
வளைந்து, நெளிந்து முன்னேற நினைக்கும் இந்தப் புத்திக்கு,
“கிளாக்கர்ப்புத்தி” என்று நான் பெயர் வைத்திருக்கிறேன்.
இந்தக் “கிளாக்கர்ப்புத்தியை” சற்று விரிவாய் ஆராய்வதும்,
யாழ்ப்பாணத்தாரின் இந்தக் “கிளாக்கர்ப்புத்தி”,
எங்கள் அறிவுலகத்தைப் பாதித்த விதத்தைச் சொல்வதும்,
இந்தக் “கிளாக்கர்ப்புத்தியினால்”,
இன்று வரை உலக அரங்கில்,
நம்மை நாம் அடையாளப்படுத்தாமல்
இருக்கும் வருத்தத்தை,
உங்களோடு பகிர்ந்து கொள்வதும்தான்,
இந்தக் கட்டுரையின் நோக்கம்.
என்ன?
முகத்தை உம்மென்று நீட்டிப் பிடிக்கிறீர்கள்.
நீங்கள் என்னதான் முகத்தை நீட்டினாலும்,
என் புதுமையான முன்னுரையைப் படித்த பின்பு,
திடீரென நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்ததிலிருந்தே,
கட்டுரை முழுவதையும் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்பது
தெரிந்து விட்டது.
இதுதான் ஐயா கலைத்தன்மையின் வெற்றி.
இனியென்ன பயமில்லாமல் தொடர்கிறேன்.யாழ்ப்பாணத்தை,
கல்வியின் இருப்பிடம் என்றும்,
இலங்கையின் அறிவுக் கண் என்றும்,
இலங்கையின் மூளை என்றும்,
என்னென்னவோ சொல்கிறார்கள்.
அங்குள்ளவர்கள் பெரிய மூளைசாலிகளும் கெட்டிக்காரர்களுமாம்.
எனக்கென்னவோ இக்கருத்திற் பெரிய உடன்பாடில்லை.
ஒரு காலத்தில் அப்படியிருந்தார்களோ என்னவோ?
எனக்குத் தெரியாது.
என் அறிவுக்கெட்டிய காலந் தொட்டு இன்று வரை,
‘இதோபார்!’ என வியந்து,
உலகம் மூக்கில் விரல் வைக்குமாப்போல்,
பெரிதாய்ப் புரட்சியும் புதுமையும் செய்த பேரறிஞர்கள்,
எந்தத் துறையிலும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாய்த் தெரியவில்லை.
என் காலத்தில் அத்தகு பேரறிஞர்களை நான் சந்திக்கவுமில்லை.
என்ன, சட்டையை மடித்து முஷ்டியைக் குவிக்கிறீர்கள்,
இதுதானே வேண்டாமென்பது.
இதைப் படித்துவிட்டு என்னோடு நீங்கள் சண்டைக்கு வருவீர்கள்,
அல்லது, புனைபெயர்களில் கண்டனங்கள் எழுதுவீர்கள்.
அப்படியும் இல்லாவிட்டால்,
இதோ பார் எங்களிடம் இருக்கும் அறிஞர் வரிசையை என்று,
பட்டங்களையும், பரிசுகளையும் மட்டும் அறிவின் தராசுகளாய்
இனம் காட்டிப் பட்டியலிடுவீர்கள்.
நீங்கள் என்னதான் சொன்னாலும்,
ஜீரணிக்கச் சற்றுக் கடினமாக இருந்தாலும்,
நான் சொல்வதுதான் உண்மை.சான்று தராமல் பேசுகிறேன் என்கிறீர்களா?
மற்றைத் துறைகளைப் பற்றி நான் எப்படிச் சொல்ல?
அப்படி நான் சொன்னாலும் நீங்கள் ஏற்கவா போகிறீர்கள்?
அதனால்,
ஓரளவு எனக்குத் தெரிந்த,
தமிழ் இலக்கியத் துறையைக் கொண்டு,
மேற்சொன்ன உண்மையை,
சான்றுகளோடு நிரூபித்துக் காட்டுகிறேன்.
சரி என்றால், ஒத்துக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால், விட்டுவிடுங்களேன்.
இவன் சொல்வது எல்லாவற்றையும் மறுக்க வேண்டும்,
இதுநாள்வரை எமக்கிருந்த கருத்தை மறுத்துச் சொல்ல
இவன் யார்? என்ற,
தேவையில்லாத பிடிவாதங்களை விட்டுவிட்டு,
திறந்த மனதோடு என் கருத்தைச் சிந்திக்கத் தயாராகுங்கள்.எங்கிருந்து தொடங்கலாம்?
சங்க காலத்திலிருந்தே தொடங்குவோம்.
ஐயா! யாழ்ப்பாணப் பேரறிஞரே!
ஈழத்தவராய்ச் சொல்லப்படும்,
சங்கப் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் முதல்,
இன்றைய அறிஞர்வரை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.
நன்றாகச் சிந்தித்து விட்டு,
மனச்சாட்சியில் கை வைத்துப் பதில் சொல்லுங்கள்.
மேற்சொன்னவர்களுள் யாராவது ஒருவரேனும்,
தமிழ் உலகிற்கு,
இதுவரை ஒரு புதுப்பாதையை வகுத்துத் தந்திருக்கிறார்களா?
அல்லது தமிழ் உலகே வியக்கும் வண்ணம்
புரட்சிகள் ஏதேனும் செய்திருக்கிறார்களா?
அது என்ன புதுப்பாதை, புரட்சி என்கிறீர்களா?
பெரிதாய் ஒன்றும் இல்லை.
வள்ளுவனைப்போல், இளங்கோவைப்போல், கம்பனைப்போல்,
காலத்தால் அழியாத புதுமை மிகுந்த,
தமிழுலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட,
ஒரு மூல நூல் தரும் முயற்சியில் வெற்றி பெறுதல்,
அல்லது,
இலக்கிய மரபில்,
பாரதியைப்போல்,
ஒரு புதுநெறி அமைக்கும் புரட்சியில் வெற்றி பெறுதல்.
இவற்றைத்தான் புதுப்பாதை என்கிறேன்.
இப்போது நான் சொல்லும் புதுப்பாதை என்னவென்று புரிகிறதா?இங்ஙனமாய், எங்களவருள் புதுமை செய்தார் எத்தனை பேர்?
ம்.... சொல்லத் தொடங்குங்கள்! நான் விரல் மடிக்கிறேன்.
இதுவரை காலமும் நீங்கள் வியந்த,
யாழ்ப்பாண அறிஞர் வரிசையை அடக்க,
கை விரல்கள் போதாவிட்டால்,
கால் விரல்களையும் மடித்துக் கொண்டாற் போயிற்று.
ம்... ஒன்று....,
விரல் மடித்தாயிற்று, முதற் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்.
என்ன சத்தத்தைக் காணோம்?
சிந்திக்கிறீர்கள் போலும்.
சிந்திப்பது நல்லதுதான்.
எனினும் ....,
சிந்தனைக்கு முடிவு வேண்டாமா?
இவ்வளவு நேரம் சிந்தித்துத் தேடத்தக்கதாகத்தான்,
இதுநாள்வரை வாய் கிழிய நீங்கள் புகழ்ந்த,
நம் சிந்தனையாளர்களின் வரிசை இருக்கிறதா?
ஏதோ பெரிதாய்க் கை மடித்து அடிக்க வந்தீர்களே!
இப்போது மட்டும் என்ன தாமதம்?
என்ன, ஆகாயம் பார்க்கிறீர்கள்.
ஐயா! அறிஞரே,
நீங்கள் எவ்வளவு நேரம் சிந்தித்தாலும்,
உங்களால் என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.
ஏனென்றால் தமிழுலகில்,
நான் சொன்னாற்போல் புதுப்பாதை அமைத்த,
அப்படியொரு புரட்சியாளர்,
எங்களவருள் இல்லை என்பதுதான் உண்மை!“ஈழத் தமிழுலகில் ... ...” என்று தொடங்கப் போகிறீர்களாக்கும்.
ஈழத் தமிழ் என்கின்ற கதையை விடுங்கள்.
தமிழுலகு என்ற விரிவுக்குள் வாருங்கள்.
தொல்காப்பியன், வள்ளுவன், இளங்கோ, கம்பன்,
ஒளவை, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயக்காந்தன்......
இந்த வரிசையில்,
உலகம் ஒப்பும் வகையில்,
நம்மவர் பெயர் ஒன்றுதானும் இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்களா?
அதைத்தான் விடுங்கள்.
கவிதையை இரண்டடியாக்கி,
எல்லையற்ற அறத்தை அதற்குள் வரைவு செய்து,
புதுமை செய்த வள்ளுவன்,
பெண்ணாய் இருந்தும் பெண்மையைத் தாண்டி,
அறிவுலகைத் தொட்ட ஒளவை,
ஆண்டவனையும் அரசரையும் பாடிய காலத்தில்,
ஒரு சாதாரண குடிப்பெண்ணை கதாநாயகியாக்கிப் பாடிய இளங்கோ,
ஆண்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த சமுதாயத்தில்,
ஆண் கற்பை வலியுறுத்திப் புதுமை செய்த கம்பன்,
பக்திக்கு முன்னால்,
சமுதாய ஏற்றத் தாழ்வுகளை எடுத்தெறிந்த சேக்கிழார்,
மண்ணின் பிரச்சினையைக் கவிதைக் கருவாக்கிய பாரதி,
ஐரோப்பிய இலக்கிய வடிவான சிறுகதை வடிவை,
தன் ‘குளத்தங்கரை அரசமரம்’ மூலம்,
தமிழில் சாத்தியப்படுத்திய வ.வே.சு. ஐயர்,
நாவலுக்கு ஓரளவு முழு வடிவம் கொடுத்த ராஜம் ஐயர்,
ஐரோப்பிய இலக்கிய வடிவங்களைக் கருப்பொருளாலும் நிமிர்த்திய,
புதுமைப்பித்தன், ஜெயக்காந்தன் ஆகியோர்,
புதுக்கவிதை வடிவைத் தமிழில் நிறுத்திய பிச்சமூர்த்தி.
இப்படி,
நம்மவருள் யாரும் தமிழ் உலகைப் பொறுத்தவரை,
ஏன் புரட்சியோ புதுமையோ செய்யவில்லை?
இதுதான் என் கேள்வி.‘அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார்’ என்று,
உடனே தொடங்குவீர்கள்,
தயவு செய்து அதை நிறுத்துங்கள்.
இவை எல்லாம்,
நீங்களே உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் பெருமைகள்.
நீங்கள் சொல்லும் பெயர்களை,
முழுத் தமிழுலகும் ஒத்துக் கொண்டிருக்கிறதா?
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதால்,
பயன் ஒன்றும் இல்லை.’
அதுமட்டுமல்லாமல்,
நீங்கள் சொல்லும் பெயர்க்குரியவர்கள் எல்லாம்,
மற்றவர் செய்த புதுமையைப் பின்பற்றி,
வியப்பு ஏற்படுத்தியிருப்பார்களே அன்றி,
தமிழுலகே அதிரும் வண்ணம்,
முதலில், புரட்சியும் புதுமையும் செய்தவர்களாக,
இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
கசப்பாய் இருந்தாலும் இவ்வுண்மையை நீங்கள் மறுக்க முடியாது.ஏதோ சொல்ல வருகிறீர்கள் போல,
நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.
‘தமிழகம் நம் பெயர்களை இருட்டடிப்புச் செய்து விட்டது’
என்கிறீர்களாக்கும்.
குழந்தைத்தனமான பதில்.
இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
உண்மை ஆற்றலை யாராலும் மறைக்க முடியாது.
வீரியமுள்ள ஆற்றல் எப்படியோ இனங்காணப்படும்.
அறிவிப்பாளர் அப்துல ஹமீத்தை,
தமிழகத்தில் சாதாரண மனிதனுக்கும் தெரிந்திருக்கிறது.
தவில் வித்துவான் கணேசபிள்ளைக்கு,
தமிழக அரசின் “கலைமாமணி” விருது கிடைத்திருக்கிறது.
மறைந்த நமது பேராசிரியர் சிவத்தம்பிக்கு,
தமிழக அரசின் “திரு.வி.க.” விருது கிடைத்திருக்கிறது.
இப்படித் தமிழகம் நம்மை அங்கீகரித்தமைக்கு,
சான்றுகள் பல இருக்கின்றன.
இவர்கள் எல்லோரும் இந்த இருட்டடிப்பைத் தாண்டியது எப்படி?
வீணாகச் சாட்டுகள் தேடாதீர்கள்.
ஊரிற் சொல்லுமாற் போல்,
“ஓம் என்றவனுக்கு ஒரு காரணம்.
ஏலாது என்றவனுக்கு இருநூறு காரணம்.”
நீங்கள் சொல்வதும்,
உங்கள் ஏலாமைக்கான காரணங்கள் தான்.என்ன திடீரென உங்கள் முகத்தில் மலர்ச்சி?
“நன்றாக மாட்டிக் கொண்டாய்” என்று,
நமுட்டுச் சிரிப்புச் சிரிக்காதீர்கள்.
நீங்கள் நினைப்பது புரிகிறது.
மேற்சொன்னவர்களைத் தமிழகமே கௌரவித்திருக்கும் போது,
நம்மிடம் ஆள் இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம்?
இதுதானே உங்கள் கேள்வி.
என்னை மடக்கிவிட்டதாய் அளவுக்கு அதிகமாய்ச்
சந்தோஷப்படாதீர்கள்.
உங்களிடம் அவ்வளவு இலேசில் அகப்பட மாட்டேன்.
மேற்சொன்ன தமிழகப் பட்டங்களும் பாராட்டுக்களும்,
குறித்த ஒரு துறையில்,
திறமைசாலிகள் வரிசையில்,
நம்மவரும் இனங்காணப்பட்டதை உறுதி செய்து
வழங்கப்பட்டனவேயன்றி,
நான் சொன்ன,
புதுப்பாதை அமைத்ததற்காகவோ, புரட்சி செய்ததற்காகவோ
வழங்கப்படவில்லை.
அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.என் கேள்வி வேறு.
தப்ப நினைப்பதை விட்டு விட்டு,
தெளிவாகச் சிந்தித்தால்,
எங்களிடம்தான் ஏதோ பிழையிருக்க வேண்டும் என்பது தெரிய வரும்.
நம்மை நாம் ஆராய்வதில் என்ன தவறு?
என் அறிவுக்கு எட்டிய வரை நான் ஆராய்ந்து பார்த்ததில்,
தமிழுலகில் நமக்கு ஒரு பதிவில்லாமற் போனதற்கு,
புதுமையோ, புரட்சியோ செய்யாமல்,
வேறு யாரும் செய்த புதுமையில் நடை போட்டு,
சும்மா இருந்து சுகம் பெற நினைக்கும்,
நமக்கே உரித்தான “கிளாக்கர்ப்புத்தி” தான்,
காரணம் என்று தெரிகிறது.
இதைச் சொல்லத்தான் ஐயா இந்தக் கட்டுரை.உங்கள் கண்கள் சிவப்பதும்,
‘கோடரிக்காம்பு’ எனக் கூவி நீங்கள் எழுவதும் தெரிகிறது.
என்னை ‘இனத்துரோகி’ என,
பஞ்சாயத்துக் கூடி பறையறிவிக்க நினைக்கிறீர்கள்.
ஆனால், உங்கள் கோபத்தில் வலுவில்லை.
காரணம்?
நான் பொய் சொல்வதாய் நினைத்து,
உங்களுக்குக் கோபம் வரவில்லை.
உண்மை உங்களைக் காயப்படுத்துவதால்தான்,
கோபம் வருகிறது.
“உண்மை சுடும்” என்றான் ஜெயக்காந்தன்.
சுடும் என்பதற்காக,
உண்மையைத் தரிசிக்காமலே இருக்க முடியுமா?
அங்ஙனம், தரிசிக்காது விடின்,
என்றுதான் நம் இனம் ஒளியும் உயர்வும் காண்பது?
பொய்மையாக நமக்குள்ளே பெருமை பேசி,
ஒருவர் முதுகை ஒருவர் தட்டிக் கொடுக்க ஒப்பந்தம் செய்து,
அறிவுலகை முடமாக்கும் அசட்டுச் செயல்களை,
புரட்சியால் விளையப் போகும் புது மண்ணிலும் விதைக்க வேண்டாம்!
விழலுக்கு நீர் இறைக்க வீணே முயல வேண்டாம்!என்ன திடீரென மீண்டும் உங்கள் முகத்தில் ஒளி?
ஒரு சில பெயர்கள் உங்கள் நினைவுக்கு வந்துவிட்டது போலும்.
சரி, சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, கணேசையர்,
கைலாசபதி, சிவத்தம்பி ......,
உங்கள் பட்டியலைச் சற்று நிறுத்துங்கள்.
நீங்கள் சொன்ன இந்தப் பெரியவர்களை எல்லாம்,
நான் மிகவும் மதிக்கிறேன்.
அவர்கள் அறிவாளிகள் என்பதிலும்,
எனக்கு எந்த ஐயமும் இல்லை.
இவர்கள் செய்த தமிழ்த் தொண்டு பெரிது.
ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால், நான் கேட்பது வேறு விசயம்.
நீங்கள் சொன்ன இத்தனை பேரும் தமிழுலகில் சாதித்தது எதனை?
உள்ளதைப் பதிப்பித்தது,
உள்ளதிற்கு உரை செய்தது,
உள்ளதை விளங்கப்படுத்தியது,
உள்ளதைக் கொண்டு வேறு உரைத்தது,
உள்ளதை ஆய்வு செய்தது.
இவ்வளவுந்தானே இவர்களது அறிவு முயற்சி.
தமிழுலகில், இவர்கள் புரட்சியால் விளைந்த புதிய ஆக்கமோ,
தமிழுலகுக்கு இவர்கள் காட்டிய புதிய பாதையோ, ஏதுமில்லையே!
ஏன் என்பதுதான் என் கேள்வி?டானியல், ஜீவா என்று சொல்லத் தொடங்குவீர்களாக்கும்.
தயவு செய்து நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எம் எழுத்தாளர்களான இவர்களது புரட்சிகளும்,
மற்றவர்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டதேயன்றி,
இவர்களாகவே அமைத்துக் கொண்ட புதுப்பாதைகள் அல்ல.
கோபத்தில் உங்கள் மீசை துடிப்பது தெரிந்தாலும்,
பயமின்றிச் சொல்லுகிறேன்.
நீங்கள் சொன்னவர்கள்,
எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும்,
தாமே சிந்தித்து, புரட்சி செய்து  ஒரு புதிய பாதை அமைத்து,
காலத்தால் அழியா வண்ணம்,
தமிழுலகில் நம் யாழ்ப்பாணத்தை,
இவர்களும் பதிக்கத் தவறி விட்டார்கள் என்பதுதான் உண்மை.இவ்வளவு ஆற்றல் இருந்தும்,
புதிதாக இவர்கள் ஏதும் ஆக்கவில்லை.
செய்ததெல்லாம் உள்ளதை வைத்து ஒப்பேற்றும்,
அல்லது,
ஓடிய பாதையில் ஓடும் கிளாக்கர் வேலைதான்.
இந்தக் “கிளாக்கர்ப்புத்தியால்த்தான்”,
தமிழுலகுக்கு,
நம்மைத் தனித்து இனங்காட்டத் தவறிவிட்டோம் என்கிறேன்.என்ன?
உங்கள் கண்களில் கோபம் குறைந்து,
குழப்பம் வெளிப்படுகிறதே?
சிந்திக்கிறீர்கள் போலும்.
இப்படிச் சிந்தித்திருந்தால் எப்போதோ முன்னேறியிருப்போம்.
இப்போதாவது சிந்திக்கத் தலைப்பட்டீர்களே,
அதற்கு நன்றி.
உலகளாவி நம் பெயர் நிலைக்க முடியாமல்,
நம் சமூகத்தை,
இந்தக் “கிளாக்கர்ப்புத்தி” பீடிக்கக் காரணம் என்ன?
பலவீனத்தின் மூலத்தை அறிந்தால்தான் அதன் வேரறுக்கலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியவில்லை.
நான் நினைப்பதைச் சொல்லுகிறேன்.
கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.எப்போதும் ஒரு சமூகம்,
மேல்வர்க்கம், நடுத்தரவர்க்கம், கீழ்வர்க்கம் என,
மூன்றாய்ப் பிரிந்து கிடக்கும்.
அனைவரையும் சுரண்டி, அனைத்து வசதிகளையும் பெற்று,
அவ்வசதிகளை,
தம் அடுத்த தலைமுறைக்கும் உறுதி செய்ய முயன்று நிற்பது,
மேல்வர்க்கத்தின் இயல்பு.
அடிப்படை வசதியும் இன்றி,
அதைத் தேடும் திறனும்,
தம் தாழ் நிலை மாற்றும் முயற்சியும் இல்லாமல்,
மற்றவர்களால் ஏய்க்கப்பட்டு,
எப்போதும், யாரிடமும் கையேந்தி,
இலட்சியமற்று வெறுமனே உயிர் வாழ்வது,
கீழ்வர்க்கத்தினது இயல்பு.
இவ்விரண்டு வர்க்கதிற்கும் இடையில் அகப்பட்டு,
மேல்வர்க்கத்திடம் பணிந்து விடாமலும்,
கீழ்வர்க்கம் தன்னைவிட நிமிர்ந்து விடாமலும் இருப்பதற்காக,
எப்போதும் முயன்று கொண்டிருப்பதும்,
தமக்கெனத் தனித்தகுதிகளை வரையறை செய்யாமல்,
மற்றவர்களின் தொடர்பு பற்றியே,
தமது தகுதியை இனங்காட்ட முயல்வதும்,
நடுத்தரவர்க்க இயல்பு.பெரும்பாலும் இம் மூன்று வர்க்கங்களிலும்,
மேல்வர்க்கமோ அல்லது கீழ்வர்க்கமோ
சமூகப் புரட்சிகளை முன்னின்று நடாத்தும்.
அது ஏன் என்று சொல்கிறேன்.
இயல்பாகவே அடிமட்டத்தில் கிடப்பதால்,
இதைவிட விழப் போவதில்லை என்னும் துணிவு,
கீழ்வர்க்கத்தைப் புரட்சி செய்யத் தூண்டும்.
சமூகத்தின் தலைமை கொண்டு வாழ்ந்த பழக்கம் தந்த ஆளுமையால்,
மேல்வர்க்கமும்,
புதுமை காணவும் புரட்சி செய்யவும் விழையும்.
இந்த மூன்று வர்க்கங்களினுள்ளும்,
நடுத்தரவர்க்கமே பரிதாபகரமானது.
இந்த நடுத்தரவர்க்கம், மற்றைய இரு வர்க்கங்களிலிருந்தும்,
தன்னைப் பிரித்துக் காட்டும் முயற்சியிலேயே,
தன் காலம் முழுவதையும் கழித்து விடுகிறது.
பொய்மையான தம் இருப்பைப் பேணுதற்காய்,
காலம் முழுவதையும் கழிப்பதால்,
புதுமை செய்யவோ, புரட்சி செய்யவோ,
இவர்களுக்கு என்றும் நேரம் கிடைத்ததில்லை.
அதுதான் நடுத்தரவர்க்கத்தார்
புரட்சி செய்ய முடியாமற் போனதற்கான காரணம்.
புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் இருக்கக் கூடிய,
வெற்றியின் நிச்சயமின்மையைச் சந்திக்கும்,
ஆளுமையும் துணிவும்,
இந்த வர்க்கத்திற்கு என்றுமே வந்ததில்லை.
மாற்றங்கள்,
சமுதாயத்தில் தங்கள் இருப்பைத் தாழ்த்தி விடலாம் எனும் பயத்தால்,
இவர்கள், தாங்கள் புரட்சி செய்ய விரும்பாததோடு,
மற்றவர்கள் புரட்சி செய்வதையும் விரும்பமாட்டார்கள்.
புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்வதில்,
இவர்கள் மன்னர்கள்.புரட்சி செய்பவர்களை வீழ்த்த, இவர்கள் கையாளும் வழிகள் இரண்டு.
புரட்சி செய்யும் போராளியை முதலில் நசுக்கப் பார்ப்பார்கள்.
முடியாது போனால்,
அப்போராளியை வீழ்த்த,
மற்றொரு குறுக்கு வழியைக் கையாள்வார்கள்.
மிகக் கெட்டித்தனமாக,
போராட்டத்தை அங்கீகரிக்காமல்,
போராளியை மட்டும் அங்கீகரித்து,
தமக்குக் கிடைத்த அங்கீகாரம்,
போராட்டத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என,
போராளியை நினைக்கச் செய்து,
அவனின் போராட்டத்தை,
அவனாகவே கைவிடும்படி செய்து விடுவார்கள்.இவர்களின் இரண்டாவது தந்திரத்தால்,
வீழ்ந்த புரட்சியாளர் தொகை அதிகம்.
நம் மண்ணில் சாதிப் போராட்டத்தில் வீரியத்தோடு ஈடுபட்ட,
இலக்கியப் புரட்சியாளர்கள் பலரும்,
நடுத்தர வர்க்கத்தின் இவ் ஆயுதத்தால் வீழ்ந்து போயினர்.
நடுத்தர வர்க்கத்தின் புரட்சிக்கெதிரான இவ்விரு ஆயுதங்களாலும்,
வீழாதவர்கள் எவரும் இல்லை என்று கூடச் சொல்லலாம்.
இவ்விரண்டு ஆயுதங்களையும் மீறி,
ஒருவன் செயற்பட நினைத்தால்,
எல்லோருமாகச் சேர்ந்து அவனைப் பைத்தியக்காரனாக்கி,
நாடு கடத்தி விடுவார்கள்.“ஏன்? இவர்களிடம் இருந்து தப்பி,
தேச விடுதலையில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள்,
புரட்சி செய்து வெற்றிபெறவில்லையா?” கேட்பீர்கள்,
அந்தக் கதை வேறு.
இவ் இளைஞர்களின் புரட்சியைக் “கிளாக்கர்ப்புத்தி”க்காரர்கள்,
ஊன்றிக் கவனித்து உசாராகி எதிர்ப்பதற்கு முன்னரே,
அவர்களின் விஸ்வரூபம் திடீரென நிகழ்ந்து விட்டது.
இவர்கள் கவனிக்கும் முன்பே,
தென்கிழக்காசிய அரசியற் சூழலால்,
வல்லரசுகளின் கரங்கள் உட்புக,
அவ் இளைஞர்களுக்குப் பெரும் பலம் சேர்ந்து விட்டது.
உலக அங்கீகாரத்தால்,
அவர்களைத் தாமும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு.
அங்கீகரிக்கத் தவறின்,
தாம் தனித்து விடுவோம் என்ற பயத்தாலும்,
அவர்களின் புரட்சியால்,
அவர்களின் கையில் இருக்கும் ஆயுதப் பயத்தாலும்,
தமக்கும் இலாபம் உண்டு என்ற காரணத்தினாலுமே,
அவர்களின் புரட்சியை இவர்கள் ஏற்றுக் கொண்டனர்.அவ் ஏற்பின் உண்மைத் தன்மையையும்,
காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்.
இன்றும்,
கொழும்பிலும்  வெளி நாடுகளிலும்,
தம் பாதுகாப்பான இருப்பை உறுதி செய்து கொண்டு,
இவர்கள் காட்டும் கடுமையான தேசப்பற்று,
கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
அத்தனையும் நடுத்தரவர்க்கக் குணம்.
நல்ல காலம் அவ் இளைஞர்கள் மட்டுமாவது,
இந்த நடுத்தரவர்க்கத்தின் கைக்குள் அகப்படாமல்,
தனித்திருந்து தப்பிக் கொண்டனர்.
ஆனால் இன்று சட்டிக்குள் இருந்து வெளியில் குதித்து,
நெருப்புக்குள் விழுந்த கதையாய் தான் அவர்கள் கதையும்
அரசியல் நமக்கு எதற்கு? அதை விடுவோம்!மேலே நான் சொன்ன,
இந்த நடுத்தரவர்க்க இயல்பான “கிளாக்கர்ப்புத்தி” தான்,
நம் தமிழ் அறிவுலகையும் பாதித்தது என்பது என் அபிப்பிராயம்.
ஏன்?
யாழ்ப்பாணத்திலும், மேல்வர்க்கமும், கீழ்வர்க்கமும் இருந்ததே,
அவர்கள் புரட்சி செய்திருக்கக் கூடாதா? என்று கேட்பீர்கள்.
கேள்வி நியாயமானதுதான்.
ஆனால் அதற்கும் பதில் உண்டு.
யாழ்ப்பாணச் சமூகத்தின் “கொன்றோல்”
இந்த நடுத்தரவர்க்கத்தின் கையிலிருந்ததுதான் நம் துரதிஷ்டம்.சாதியால் மேல்வர்க்கம் என்று,
தம்மைச் சொல்லிக் கொண்ட பிராமணச்சாதி கூட,
இந்த நடுத்தரவர்க்கத்தின் கையை நம்பியே
நம் மண்ணில் வாழ வேண்டியிருந்தது.
அது மட்டுமல்லாமல்
அறிவுத் துறையிலும் தமிழ் நாட்டு பிராமணர்கள் போல,
எங்கள் பிராமணர்கள் வலிமை பெற்றிருக்கவில்லை.
பிராமண நிந்தை செய்வதாய்,
தயவு செய்து என்னைக் கோபிக்காதீர்கள்.
நிஜத்தை நிதர்சனமாகச் சொல்வதானால்,
யாழ்ப்பாணச் சமூக வாழ்க்கையில்,
பிராமணர்களும்,
வேளாளரின் குடிமக்கள் போல்தான் பெரும்பாலும் வாழ்ந்தனர்.
விதிவிலக்காய் சிலர் இருந்தது உண்மையே.
நான் சொல்லும் செய்தி, பெரும்பான்மை பற்றியது.இவர்கள்பாடு இப்படியென்றால்,
செல்வத்தால் மேல்வர்க்கமாக இருந்தோர் பிரச்சினை,
வேறாய் இருந்தது.
எண்ணிக்கையில்,
மிகக் குறைந்த அளவிலேயே அவர்கள் இருந்தனர்.
அப்படியிருந்தவர்களும்,
தனித்தனிச் செல்வர்களாக இருந்தனரே தவிர,
“செல்வர்கள் சமூகம்” என்ற ஓர் அமைப்பு,
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் இருக்கவில்லை.
இங்கிருந்த செல்வர்களும்,
நடுத்தரவர்க்கத்தினரை விட உயர்ந்திருந்தனரே தவிர,
வேறு சில நாடுகளைப் போல,
ஒரு சமூகத்தையே கட்டுப்படுத்தும்,
மிகப் பெரும் கோடீஸ்வரர்களாய் இருந்தார்களில்லை.
இவர்களைப் பொறுத்தளவில்,
நடுத்தரவர்க்கத்தின் மதிப்புக்குரியவர்கள் தாங்கள் என்ற தகுதியே,
பெருமையாய்க் கருதப்பட்டது.
அதனால் செல்வத்தால் மேல்த்தட்டிலிருந்தோரும்,
ஓரளவு நடுத்தரவர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் எனலாம்.இனி, கீழ் வர்க்கத்தினரின் நிலையைப் பார்க்கலாம்.
அவர்களின் பொருளாதாரம்,
பெரும்பான்மையாய் இருந்த நடுத்தரவர்க்கத்தின் கையையே,
நம்பியிருந்தது.
அதனால்,
பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே,
சீவிக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு.
ஒப்பீட்டில்,
மேல்வர்க்கத்தை விட,
நடுத்தரவர்க்கம் செய்த அலட்சியம் பெரிதாய்ப்படாமையாலும்,
சமூக அமைப்பில்,
நடுத்தரவர்க்கம் ஓரளவேனும் தம்மோடு உறவு பேணியதாலும்,
இக் கீழ்வர்க்கம்,
நடுத்தரவர்க்கத்தினரிடம்,
ஓரளவு மனமொப்பிய நிலையிலேயே தம் அடிமை வாழ்வை,
ஒப்புக் கொடுத்திருந்தது.இப்படியாக நம் தீவினைப் பயனால்,
யாழ்ப்பாணச் சமூகம்,
நடுத்தரவர்க்கத்தின் ஆளுமைக்கு முழுமையாக உட்பட்டதால்,
அந்த வர்க்கத்தின் இயல்பே,
பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் இயல்பாயிற்று.
அந்த இயல்பு, தமிழர் அறிவுலகையும் பற்றிக் கொள்ள,
வரலாறு படைக்கும் வலிமையற்றுப் போயினர் நம் அறிஞர்கள்.எங்கள் அறிவுலகை,
நடுத்தரவர்க்கத்திற்கே உரிய,
வரட்டுக் கௌரவம் பற்றிக்கொண்டது தான் பெரிய சோகம்.
அந் நடுத்தர வர்க்கத்தினரைப் போலவே,
நம் அறிவுலகத்தாரும்,
தாம் சாதனை படைக்கவில்லை எனும் தோல்வியை,
இதுவரை வெளிப்படுத்தாமல்,
போலியாய்ப் பொய்மை பேசி,
தாமும் பெரிதாய்ச் சாதித்தவர் போலும்,
தமக்கு நிகரானார் யாரும் இலர் என்பது போலும்,
நாணமின்றித் தம்மைத் தாம் புகழ்ந்து,
நம்மையெல்லாம் ஏமாற்றி நாடகமாடி வருகின்றனர்.இவ்வியல்பு,அன்றைய மரபறிஞர்களிடமும் இருந்தது.
இன்றைய நவீன அறிஞர்களிடமும் இருக்கிறது.
அக்காலத்தில் நாவலரைப் புகழ்வோர்,
தமிழகத்தில் அறிவே இருக்கவில்லை என்பது போலும்,
யாழ்ப்பாணத்தாரிடம் இருந்துதான்,
அவர்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டனர் என்பது போலும்,
நாவலர்தான் தமிழகத்தையே திருத்தினார் என்பது போலும்
பேசிக் கொள்வர்.
பின்னர், மேற்சொன்னவற்றுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல்,
தமிழகம் கொடுத்த ‘நாவலர்’ பட்டத்தைத்தான்,
அவரின் தலையாய பட்டமாய்ப் போற்றி, மகிழ்ந்து நிற்பர்.
அதுமட்டுமல்லாமல்,
இவர்கள்,
தமிழகம் தரும் சிறு கௌரவத்தையும்,
தமக்குக் கிடைத்த பெரும் பேறாய் உச்சிமேற்கொண்டு உவப்பர்.
இந்த அநியாயம் ஒரு பக்கம் நடக்க,
அவர்களைப் பழைமை வாதிகள் என்று தூற்றிய,
நவீன இலக்கியவாதிகளோ, இந்த விடயத்தில்,
பழைமை வாதிகளை விட ஒருபடி மேலேயே போய் விட்டனர்.இங்குள்ள எழுத்தாளர் பலர்,
எழுதும் போதும் மேடைகளில் பேசும் போதும்,
தமிழக எழுத்தாளர்களை ‘எழுத்து வியாபாரிகள்’ என்றும்,
தமிழகச் சஞ்சிகைகளை‘வியாபாரச் சஞ்சிகைகள்’ என்றும்,
அங்குள்ளவர்கள் வெறும் விளம்பரப் பிரியர்கள் என்றும்,
பெரிதாய் அடித்து முழங்குவர்.
இவர்கள் பேசுவதைக் கேட்டால்,
இவர்கள் எல்லோரும் பொருட்பற்றோ, புகழ்ப்பற்றோ சிறிதும்
இல்லாதவர்கள் என்றும்,
சிறிதும் விளம்பரப்பற்று இல்லாதவர்கள் என்றும்
இலட்சியத்திற்காக உயிரைக் கூடக் கொடுத்து விடுவார்கள் என்றும்,
எண்ணத் தோன்றும்.
ஆனால் உண்மை நிலையோ,
“சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற கதைதான்.இப்படி, ஆவேசமாய்த் தூய்மை வாதம் பேசும்,
இந் நவீன எழுத்தாளர்கள்,
தமிழகத்திலிருந்து ஒரு சஞ்சிகை ஆசிரியரோ, எழுத்தாளரோ,
பேராசிரியரோ இங்கு வந்து விட்டால் படும் பாடிருக்கிறதே,
அது நாய்படாப்பாடு போங்கள்!
வந்தவரைச் சுற்றிச் சுற்றித் திரிவதும்,
அவரோடு புகைப்படம் எடுப்பதை ஒரு பேறாய்க் கருதுவதும்,
அவர்கள் கேட்காமலேயே போட்டி போட்டுத் தங்கள் ஆக்கங்களை
அவர்கள் கையில் திணிப்பதுமாக,
இவர்கள் அடிக்கும் கூத்திருக்கிறதே அது பெருங் கூத்து.இவர்களின் பரபரப்பைப் பார்த்து,
அங்கிருந்து வருகிற ஒரு சாதாரண இலக்கியகர்த்தா கூட,
இவர்கள் மனநிலையறிந்து,
“அங்கு உங்களுக்கு அது செய்து தருகிறேன்,
இது செய்து தருகிறேன்” என்று,
வாக்குறுதிகளை அள்ளி வீசி வரம் தரத் தொடங்கி விடுவார்.
அவற்றை நம்பி, விருந்துகளும் பரிசுகளும் கொடுத்து,
‘ஏஜன்சி’க்காரரிடம் ஏமாறும் நம் இளைஞர்களைப் போல,
இவர்கள் ஏமாறுவதைப் பார்த்தால்,
வயிறு எரியும்! ஐயா, வயிறு எரியும்!ஒரு முறை தமிழகத்திலிருந்து வந்திருந்த,
‘சுபமங்களா’ சஞ்சிகை ஆசிரியர்,
இவர்களின் அவாவைத் தெரிந்து கொண்டு,
அங்கு போனதும்,
தன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில்,
சிறிது சிறிதாக அத்தனைபேர் முகங்களையும் பதிப்பித்தார்.
அட்டைப் படத்தில் தம் முகம் கண்டு,
இவர்கள் பட்டபாட்டைப் பார்க்க வேண்டுமே!
அந்தச் சஞ்சிகையைத் தூக்கிக் கொண்டு,
இவர்களிற் பலர் ஓடித் திரிந்தார்கள்.
‘அவரது படம் பெரிதாக வந்திருக்கிறது,
இவர் படத்தை ஓரத்தில் போட்டு விட்டார்’
என்ற காரணங்களைக் காட்டி,
தமிழகத்தில் தம் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற முயன்ற,
பரிதாபம் வேறு நடந்தது.இவர்களைத்தான் விடுங்கள்.
இங்கு, பெரிய அளவில் இலட்சியம் பேசி,
குமுதமா? விகடனா? சீ சீ,
அவை வெறும் மஞ்சள் பத்திரிகைகள்,
என எள்ளி நகையாடிய இலட்சிய மனிதர்கள் சிலர் கூட,
நாளடைவில் தமிழகம் சென்று,
அப்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்ததும்,
அப்பத்திரிகைகளில் பேட்டி வந்தது பற்றி,
பெருமைப்பட்டுக் கொண்டதுமான அநியாயம் வேறு நடந்தது.
நடக்கிறது.மேற்சொன்ன விடயங்களைச் சுட்டிக் காட்டி,
இவர்களில் குறை காண்பதல்ல என் நோக்கம்.
இந்தப் பொய்மைகளுக்கான காரணத்தை விளங்க மட்டுமே,
நான் முற்படுகிறேன்.
என்னைக் கேட்டால்,
இவர்களின் இந்தப் பொய்மைகளுக்குக் காரணம்,
யாழ்ப்பாண அறிவுலகைப் பீடித்திருந்த,
நடுத்தரவர்க்கத்திற்கே உரித்தான,
போலி கௌரவத்தையே பெருவுடைமையாகக் கொண்ட,
“கிளாக்கர்ப்புத்தி” தான் என்று அடித்துச் சொல்வேன்.“சரி, பெரிய உண்மையைக் கண்டுபிடித்து விட்டீராக்கும்” என்று,
நீங்கள் முறைப்பது தெரிகிறது.
நம்மை நாம் இழிவு செய்வதில் பெருமை இல்லை என்பதை,
நானும் உணர்வேன்.
பின் ஏன் இக்கட்டுரை என்கிறீர்களா?
காரணத்தோடுதான் எழுதியிருக்கிறேன்.
அக்காரணத்தைச் சொல்கிறேன், தயவு செய்து கேளுங்கள்.
தாய்மண் உரிமை வேண்டித் தொடங்கிய போரால்,
நம் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
போருக்குப் பயந்து எல்லா வர்க்கத்தினரும்,
உலகம் முழுவதும் ஓடிக் குடி புகுந்தனர்.
அதனால்,
நமது யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பே மாறிவிட்டது.
நம் சமூகத்தைப் பற்றியிருந்த,
நடுத்தரவர்க்கத்தின் வலிய இரும்புப் பிடி,
மெல்ல மெல்லத் தளர்ந்து போயிற்று.
கீழ்வர்க்கத்தார்,
பொருளாதாரத்தில் இன்று யார் கையையும் நம்ப வேண்டாத நிலை.
சொற்பமாய் இருந்த மேல்வர்க்கமும்,
உடைந்து உலர்ந்த நிலையில் இன்று.
“எந்தப் புற்றில் எந்த இயக்கப் பாம்பு இருக்குமோ” என்ற பயத்தில்,
யாரும் யாரையும் ஆள நினைக்காத,
“செயற்கைப்” பக்குவமடைந்துள்ளனர்.
இதனால், நெருக்குதல் அற்ற ஒரு சமநிலைச் சமுதாயம்,
தற்காலிகமாய்த் தோன்றியிருக்கிறது.ஒருவரில் ஒருவர் தங்கியிராத நிலைமை தோன்றியிருப்பதால்,
பொய்முகம் காட்டும் போலித்தனம்,
நம் சமூகத்திடம் குறைந்திருக்கிறது.
இந்த நேரத்தில்,
புரட்சியும் புதுமையும் விளைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அந்த புரட்சியும் புதுமையும்,
சமூகத்தில் விளைகிறதோ இல்லையோ,
அறிவுலகில் விளைய வேண்டும் என்பது என் பேரவா.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தியேனும்,
நம் அறிவுலகம் புத்துணர்ச்சி பெற்று,
தமிழுலகில் நமக்கென ஒரு தனி அடையாளம் காட்ட முயலாதா?
இதுதான் ஐயா என் ஏக்கம்!
நாம் செய்யாததை,
நம் இளைய தலைமுறையேனும் செய்யட்டும் எனும் விருப்பாலேதான்,
என்னையும் உட்படுத்தி, நம் குறைகளை ஆராய்ந்திருக்கிறேன்.
நீங்கள் ஏற்றால்த்தான் இளைய தலைமுறை ஏற்கும்.
அவர்கள் முயற்சியாலாவது,
தமிழுலகில் நம் பெயரும் தனித்துப் பொறிக்கப்படட்டும்.என்ன, உங்கள் முகத்தில் ஈயாடக் காணோம்?
என்னை மறுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதும்,
மறுக்க முடியாமல் உங்கள் மனம் தடுமாறுவதும்,
எனக்கு நன்கு தெரிகிறது.
சிறு வயதில் படித்த ஒரு கதை.
ஒரு பொய்யன் அரச சபைக்கு வந்தானாம்.
அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய,
உடையைக் கொணர்ந்ததாய்ச் சொல்லிய அவன்,
வெறுங் கையில் உடை இருப்பது போல,
பொய்மையாய்ப் பாவனை பண்ண,
தம் கண்ணுக்குத் தெரியா விட்டாலும்,
தெரியவில்லை என்று சொன்னால்,
தம்மை முட்டாள் என்று மற்றவர்கள் நினைந்து விடுவார்களோ? எனும்
பயத்தால்,
அரசனுட்பட அத்தனைபேரும்,
இல்லாத அவ்வுடையைப் பாராட்டினராம்.
ஏமாந்த அரசன்,
அவ்வுடையை அணிவதாய்க் கூறி,
நிர்வாணமாய் ஊர்வலம் சென்றானாம்.
அரசனின் நிர்வாணம் தெரிந்தும், மற்றவர்கள் பேசாமல் இருக்க,
நாம் மட்டும் ஏன் உண்மையைப் பேசி முட்டாள் ஆகவேண்டும்?
என நினைந்து,
அத்தனை பேரும் வாய் மூடி பொய்மை பேண,
அறிவில்லாத ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் மட்டும்,
பெரிய மனிதர்களின்,
இந்தப் பொய்மை நாடகத்தைப் புரிந்து கொள்ளாமல்,
“இஞ்சற்றா, ராசா உரிஞ்சிட்டுப் போறார்” என்று கத்த,
உண்மை உணர்ந்து, அனைவரும் நாணினராம்.
அந்த ஆடு மேய்க்கும் சிறுவனாய் நான் வாய் திறந்திருக்கிறேன்.ததை பிறந்ததுமே சாத்திரியார் சொன்னார்,
“உமக்கு இப்ப அட்டமத்துச் சனியும் அட்டமத்து வியாழனும்,
ஒண்டா வந்திருக்கு,
கொஞ்சம் கவனமாய் இருக்கிறது நல்லது” என்று.
சனியும், வியாழனும்தான்,
இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டினரோ? யாரறிவார்.
முடிவாக ஒரு வார்த்தை.
நான் இவ்வளவு சொன்ன பின்னும்,
“இவர் ஆர் இதைச் சொல்ல” என்று,
தடியெடுக்கத் தயாராகிறீர்களா?
உங்கள் மேல் கொஞ்சமும் பிழையில்லை.
ஏனென்றால், அதுதான் ஐயா நான் இவ்வளவு நேரமும் சொன்ன,
புரட்சியும் புதுமையும் செய்ய விரும்பாத,செய்பவனையும் விரும்பாத,
“ஒறிஜினல் கிளாக்கர்ப்புத்தி.”ஜுலை 2002ல் எழுதியது

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...