•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, April 28, 2016

நாம் சைவர்களா? இந்துக்களா?

லகம் விந்தையானதாய் மாறியிருக்கிறது.
உயிர்ப்பிறவிகளில் உயர்பிறவிகள் என்று சொல்லப்படுபவர்களான மனிதர்கள்,
தம் ஆணவ முனைப்பால் ஆயிரமான சர்ச்சைகளைக் கிளப்பி,
உலகத்தைச் சர்ச்சைகளின் களஞ்சியமாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
உயர்தல் நோக்கமான உண்மைத் தேடலை விடுத்து,
வெற்றுவாதங்களில் வீண் பொழுதுபோக்குதல்,
மானுடர்தம் வழக்கமாகிவிட்டது.
அந்த வழக்கத்திற்கு நம்மவர்களும் விதிவிலக்கல்லராம்.இங்கு தமிழர்களின் வாழ்வே,
விடைதெரியா வினாவாக ஆகியிருக்கும் இவ்வேளையில்,
ஒற்றுமையோடு இருக்கவேண்டிய இவர்கள்,
குழுக்கள் அமைத்து கோளாறியற்றி வருகிறார்கள்.
இனம், மதம், ஜாதி என இவர்கள் வகுத்த பல் குழுக்களால்,
ஏலவே பாழ்பட்டுக் கிடக்கிறது இத் தேசம்.
இந்த இலட்சணத்தில்,
தமிழர்களில் பெரும்பான்மையோர் பின்பற்றும் சமயத்தார் சிலர்,
தமது சமயத்தின் பெயர் பற்றியே,
பிரச்சினையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தாம் இந்துக்களா, சைவர்களா என்பதுவே அப்பிரச்சினையாம்.வழுக்கைத் தலையன் சிரைத்தலைப் பற்றிக் கவலைப்படுமாப்போல்,
சமய வாழ்வு இளையோரிடம் நலிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,
சமயத்தின் பெயர் பற்றி சில பெரியமனிதர்கள் தர்க்கங்கள் நடத்துகிறார்கள்.
தத்தம் குறைஅறிவு கொண்டு அவர்கள் நடத்தும் சர்ச்சைகளால்,
உள்ள சமயவாழ்வும் கெட்டுப் போகும் முன்பாக,
அவ்விடயத்தைத் தெளிவுறுத்தி முற்றுப்புள்ளி வைக்கவே,
இக்கட்டுரையை வரையத் தொடங்குகிறேன்.இலங்கையில் நாம் பின்பற்றும் சமயம்,
இந்துசமயமா? சைவசமயமா? எனும் சர்ச்சையில்,
ஒரு சாரார் அது இந்துசமயமே என்றும்,
மற்றொரு சாரார் அது சைவசமயமே என்றும் தர்க்கித்து வருகின்றனர்.
நாம் பின்பற்றும் சமயத்தின் சரியான பெயரைக் கூடத் தெரியாத,
வெட்கக்கேடான நிலையில் நாம் இருக்கிறோம்.இந்த சர்ச்சையின் அடிப்படையே கூட,
சிலபேருக்கு விளங்காமல் இருக்கலாம்.
அவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம்.
சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம்,
கௌமாரம், சௌரம் எனும் ஆறு பிரிவுகள்,
நம் சமயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதை வைத்தே நாம் பின்பற்றும் சமயம் எது என்பது பற்றியதான,
சர்ச்சை பிறந்திருக்கிறது.
அச் சர்ச்சை பற்றி ஆராய்வதன் முன்,
இவ் ஆறு பிரிவுகளுக்குமான வித்தியாசம் யாது?
என்பது பற்றி அறிதல் அவசியம்.சிவனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைச் சைவம் என்றும்,
திருமாலை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தை வைஷ்ணவம் என்றும்,
சக்தியை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைச் சாக்தம் என்றும்,
விநாயகரை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைக் காணபத்தியம் என்றும்,
முருகனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைக் கௌமாரம் என்றும்,
சூரியனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தை சௌரம்; என்றும் சொல்வார்கள்.
விடயம் இவ்வளவே.அது என்ன முழுமுதற்கடவுள் என்று கேட்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை.
பலதெய்வ வழிபாடுகள் பற்றிச் சொல்லும் ஒரு சமயத்தில்,
எத்தெய்வம் மற்றைத் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும்,
முதலாகவும் முழுதாகவும் இருக்கிறதோ,
அதுவே அச்சமயத்தின் முழுமுதற் தெய்வமாம்.இனி நாம் சர்ச்சைக்குள் நுழையலாம்.
உண்மையில்,
நம் நாட்டில் பெரும்பாலும்,
நாம் சிவனையே இஷ்ட தெய்வமாயும்,
முழுமுதற் கடவுளாயும் வழிபட்டு வருகிறோம்.
சிவனைப் பரம்பொருளாய் ஏற்றுக்கொண்ட சமயமே சைவசமயமாம்.
அதனால் நாம் அனைவரும் சைவசமயிகள் தான் என்பதில்,
ஐயத்திற்கு இடமில்லை.
எனினும் நாமும் திருமால், சக்தி, முருகன், கணபதி, சூரியன் எனும்,
தெய்வங்களையும் வழிபடவே செய்கிறோம்.
அப்படியிருக்க நாம் பின்பற்றும் சமயத்தை,
சைவசமயம் என்று தனித்து எப்படிச் சொல்லலாம்?
கேள்வி பிறக்கும்.நான் முன் சொன்ன ஆறுசமயங்களும்,
வேதத்தையே தம் முதல் நூலாய்க் கொண்டவை.
அதனால் அவை ஒன்றுக்கொன்று உறவானவை.
எனவேதான் குறித்த ஒரு கடவுளை,
முழுமுதலாய்க் கொண்ட இவ் ஆறு சமயங்களிலும்,
மற்றைய தெய்வ வழிபாடுகளும் இருக்கின்றன.
அப்படியாயின் இது இன்ன சமயம் என்று பிரித்தல் எங்ஙனமோ எனின்,
முன் சொன்னாப்போல்,
நாம் எந்த தெய்வத்தைப் பரம்பொருளாய் ஏற்கிறோமோ,
அதைக் கொண்டே அம் முடிவு எடுக்கப்படுகிறது.
அவ் அடிப்படையில் நாம் பிற தெய்வங்களையும் வழிபடினும்,
சிவனையே முழுமுதல் தெய்வமாய்க் கொண்டு வழிபடுவதால்,
இலங்கை பூராகவும் இருப்பது,
சைவசமயம் தான் என்று ஐயமின்றி நிச்சயிக்கலாம்.இலங்கையில் உள்ள திருமால் கோயில்களிலும்,
ஆரம்ப காலத்தில் விபூதியே பிரசாதமாய் வழங்கப்பட்டு வந்தது.
நம் சைவசித்தாந்தம்,
திருமாலை சிவனின் நவபேதங்களில் ஒன்றாகவும்,
சிவ அம்சம் கொண்ட காத்தல் தெய்வமாகவும் குறிப்பிடுகிறது.
அவ் அடிப்படையிலேயே இங்குள்ள விஷ்ணு கோயில்களும்,
சைவக்கோயில்களாய்க் கருதப்பட்டன.
அதுபோலவே பிறதெய்வ வழிபாடுகளுமாம்.சைவசித்தாந்திகள் என்று தம்மைப் பறைசாற்றி நிற்கும்,
சில போலித் தத்துவவாதிகள்,
மேல் உண்மை தெரியாமல்,
திருமாலைக் கும்பிட்டாலே அவர்கள் வைஷ்ணவர்கள் என்று,
முத்திரை குத்த முனைந்து வருகிறார்கள்.
அங்ஙனம் அவர்களால் முத்திரை குத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
அவர்தம் அறியாமையைப் புறந்தள்ளுவோம்.இலங்கையர்கள் தமது தோத்திர நூலாக,
திருமுறைகளையும், சாத்திரநூலாக சைவசித்தாந்தத்தையுமே,
காலாகாலமாக ஏற்றுப் பின்பற்றி வருகின்றனர்.
திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங்களும்,
சிவனையே முழுமுதற் தெய்வமாய் வலியுறுத்துகின்றன.
ஆதலால் ஈழத்தவர்களாகிய நாம் சைவசமயிகளேயாம்.
இதில் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை.இன்று திருமுறைகளைத் தோத்திரமாகவும்,
சைவசித்தாந்தத்தை சாத்திரமாகவும் கொள்ளாது,
பகவத்கீதை போன்ற நூல்களைத் தோத்திரமாகவும்,
வேதாந்த தத்துவத்தை தமது சாத்திரமாகவும் கொண்ட,
பல சமய அமைப்புக்கள் மெல்ல மெல்ல,
நம் மண்ணில் புகுந்து வேரோடத் தொடங்கியுள்ளன.
அத்தோத்திரமும் சாத்திரமும் தவறானவை அன்றாம்.
ஆனாலும் சைவ சாத்திர, தோத்திர நூல்களைப் பின்பற்றி,
ஒருமித்து வாழ்ந்த மக்களிடையே,
வேறுபட்ட சமய அமைப்புக்கள் புகுந்தால்,
நிச்சயம் அது பூசல்களுக்கு வழிவகுக்கும்.முன்னைய வலிய யாழ்ப்பாணம் வேற்றுத்தத்துவக்காரர்களை,
உள் நுழையவிடாமலே வைத்திருந்தது.
இன்றைய பலயீனப்பட்ட யாழ்ப்பாணத்துள்,
மெல்ல மெல்ல எல்லாக் கொள்கையினரும்,
வேறு வேறு அமைப்புக்களின் பெயர்களோடு,
உள் நுழையத் தொடங்கிவிட்டனர்.
அங்ஙனம் உட்புகுந்தால்,
இத்தத்துவங்களுள் எது உயர்ந்தது என்பதான,
சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகி,
அவை வீணாக நம் முத்தி வழியை தடைசெய்யுமாம்.
அதனால் ஈழத்தவர் முன்பு போலவே,
‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு’ என்றாற் போல,
சைவ சாத்திரத்தையும், தோத்திரத்தையும்,
மரபுவழி பின்பற்றி சைவர்களாய் வாழ்வதே உயர்ந்ததாம்.சைவம் தான் நமது சமயமாயின்,
இந்துக்கலாசார அமைச்சு என்றும்,
இந்துக்கல்லூரி என்றும், இந்துமாமன்றம் என்றும்,
நம் சமய நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதேன்?
என்று கேள்வி பிறக்கும்.
இக்கேள்விக்கு தெளிவுறப் பதில்காண்பது அவசியம்.நான் முன் சொன்ன ஆறுசமயப் பிரிவுகளுக்குள்,
இந்துசமயம் என்ற ஒரு பிரிவின் பெயர் இருக்கவில்லை.
அப்படியிருக்க இந்துசமயம் என்ற ஒரு பிரிவு,
நம் சமயத்திற்குள் எங்கிருந்து வந்தது?
கேள்வி பிறக்கும்.இவ்விடத்தில் தான்,
இந்துசமயம் என்ற பெயர்பற்றி நாம் ஆராயவேண்டியிருக்கிறது.
இப்பெயர் எவரால் உரைக்கப்பட்டது?
இது யார் யாரைக் குறிக்கிறது? என்பது பற்றியெல்லாம்,
சற்று உள்நுழைந்து தேடுவோம்.இவ் விடயம் பற்றி ஆராய்வதற்கு முன்பாக,
வேறு சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
வேதமே நம் சமயத்தின் முதல்நூலாம்.
வேதம் பலதெய்வங்களையும் பாராட்டி உரைக்கின்றது.
ஆனால், வேதத்தில் இன்ன தெய்வம் தான் பெரிய தெய்வம் என்பதான,
கருத்து ஏதும் இல்லை.
அது சகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவின்,
வேறுபட்ட வடிவங்களாகத்தான் ஏற்றத்தாழ்வில்லாமல் சொல்கிறது.
ஓரிடத்தில் எல்லாம் சிவரூபமே என்றும்,
மற்றோரிடத்தில் எல்லாம் விஷ்ணுரூபமே என்றும்,
இன்னோரிடத்தில் வர்ணனே பரமாத்மா என்றும் அது பேசும்.
‘அப்படியாயின் வேதக்கருத்தில் குழப்பம் இருக்கிறதா?’ என்று,
கேள்வி பிறக்கும்-நிச்சயம் அங்ஙனம் இல்லையாம்.
வேதத்தைப் பொறுத்தவரை,
ஒரே உண்மைக்குப் பலபெயர்கள் கொடுக்கப்பட்டது என்பதே,
அதன் முடிந்த முடிவு.
ஏகம் ஸத் விப்ரா: பஹ_தா வதந்தி என்று,
அது தன்கருத்தைத் தெளிவாய்ச் சொல்கிறது.வேதம் இப்படிச் சொல்லியிருப்பினும்,
வழிபட்டோர், தம் பற்றுதல் காரணமாக,
தத்தம் இஷ்டதெய்வங்களையே பரம்பொருளாய் உரைத்து,
தம்முள் பிரிவு கண்டனர்.
இங்ஙனம் எழுந்த குளறுபடிகளால்,
ஏற்பட்ட பூசல்களைத் தீர்க்க,
ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபிதம் செய்தார்.சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம்,  சௌரம்; ஆகிய,
இந்த ஆறு சமயவழிகளையும் சுத்தப்படுத்தி வைதீகமாக ஆக்கிக் கொடுத்து,
இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமல்,
தத்தம் இஷ்ட தெய்வத்தை அவரவர் சுதந்திரமாய் வழிபடவே,
சங்கரர் ஷண்மத ஸ்தாபனத்தைச் செய்தார் என்பர்.ஆதிசங்கரர் வகுத்த,
வேதங்களை முதலாய்க் கொண்ட ஷண்மதங்களும்,
சிந்துநதிக் கரையில் வளர்ந்த சமயங்கள் என்றபடியால்,
இங்கு வந்த மேற்கு நாட்டார் இவ் ஆறு சமயங்களையும் பொதுப்படக் குறிக்க,
இந்துசமயம் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
பிறகென்ன? வெள்ளைக்காரர்கள் சொன்னால் விடுவோமா நாம்?
வெள்ளைக்காரன் சொன்னதுவே வேதம் என்பது தானே இன்றைய நம் கொள்கை.
அதனால் அப்பெயரையே நாமும் பயன்படுத்தத் தொடங்கினோம்.
இதுவே இந்துசமயம் எனும் பெயர் பிறந்து நிலைத்த கதையாம்.
ஆனாலும் வெள்ளைக்காரர் சொன்ன இந்துசமயம் என்ற பெயர்,
சங்கரர் வகுத்த ஷண்மதங்களையே குறித்து நின்றது.
சுருங்கச் சொன்னால் சங்கரர் பெற்ற பிள்ளைக்கு,
வெள்ளைக்காரர்கள் இட்ட பெயரே இந்துமதம் என்பதுவாம்.விரிவு கூடிக்கொண்டே போகிறது.
முடிவாய் என்னதான் சொல்லவருகிறீர்?
நமது சமயம் சைவசமயமா? இந்துசமயமா?
உங்கள் கேள்வி புரிகிறது.
இங்கு நாம்  பின்பற்றும் சமயம் சைவசமயமே.
அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
எனினும் எமது சமயத்தை,
இந்து சமயம் எனும் பெயரால் அழைப்பதிலும் தவறில்லையாம்.
நான் சமாளிப்பதாய் நினையாதீர்கள்.
அடுத்த பந்தியில் என் கருத்தை விளக்கம் செய்கிறேன்.உங்கள் தெளிவுக்காக ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
‘ஏசியன்ஸ்;’ என்ற ஆங்கிலப் பெயருக்குள்,
இலங்கையரான நாம் அடங்குவோமா? இல்லையா?
நிச்சயம் அடங்குவோம் என்பதை அறிவீர்கள்.
அது குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் இருக்கும்,
அனைத்து நாட்டவரையும் குறிக்கும் பெயர்.
ஆனால் அக்குழுமத்தில் இருந்து,
நம்மைத் தனித்து இனங்காட்டும் பெயர்,
‘ஸ்ரீலங்கன்’ என்பதுவாம்.‘ஸ்ரீலங்கன்’ என்று குறிப்பிடப்படும் எங்களை,
 ‘ஏசியன்ஸ்’ என்று சொல்லும் போது,
அந்த ‘ஏசியன்’ என்ற பெயருக்குள் மறைமுகமாய்,
எங்களின் ‘ஸ்ரீலங்கன்’ எனும் பெயரும்,
அடங்கிநிற்கும் என்பது, வெளிப்படையன்றோ?
அதுபோலவே,
இந்துமதம் என்று சொல்லும் அந்த பொதுப்பெயருக்குள்,
எங்கள் தனித்துவப் பெயர் சைவம் என்பதாகிறது.
சைவர்களாகிய எங்களை இந்துக்கள் என்று சொல்லும் போது,
அந்த இந்துக்கள் என்னும் பெயருக்குள்,
எங்களது சைவம் எனும் பெயரும் அடங்கி நிற்பதை,
நாம் உணர்தல் வேண்டும்.
ஆதலால் சைவர்களை இந்துக்கள் என்று குறிப்பிடுதலில்,
பெருந்தவறேதும் இல்லையாம்.ஆனால் இங்கிருப்பது இந்து மதம் தான் என,
நாம் உரைக்கத் தலைப்படுகையில்,
இந்து எனும்  பெயருக்குள் அடங்கியிருக்கும் ஆறு சமயங்களும்,
நம்மண்ணில் கால் கொள்ளும் உரிமை பெற்று விடுகின்றன.
வேதத்தை முதலாய்க் கொண்ட மதங்கள் என்றவகையில்,
அம்மதங்கள் அனைத்தும் நமக்கு உறவானவை என்பது உண்மையே.
எனினும் பரம்பொருள் விடயத்தில்,
கொள்கையளவில் அவை மாறுபட்டிருப்பதால்,
வேறுபட்ட அம்மதங்களின் வருகையால்,
தேவையற்ற குழப்பங்கள் விளையும் என்பது சர்வ நிச்சயம்.
ஆதலால் நம் மதத்தை சைவம் என்ற பெயரால்,
உறுதிப்படுத்துவதே உயர்ந்ததாம்.
அவசியம் நோக்கி இந்து எனும் பெயர் எங்கேனும் பாவிக்கப்படினும்,
அப்பெயர் நம்மண்ணில் சைவத்தையே குறித்து நிற்பதை,
நாம் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.சமயமும் மொழிபோல இன்றைய நிலையில்,
ஒரு இன அடையாளமாய் ஆகிவிட்டபடியால்,
அதுபற்றிய வரையறையை,
நாம் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்ஙனமன்றி நம் ஆன்ம ஈடேற்றத்திற்கே சமயம் என்ற,
நிலையில் சிந்திப்போமாயின்,
அந் நிலைக்கு இப்பெயர்கள் எல்லாம் எவ்விதத்திலும்,
இடையூறு இயற்றாதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முடிந்தவரை சமயத்தை ஆன்ம ஈடேற்றத்திற்காய் பயன்படுத்துவதே,
உயர்ந்தது என்பது என் உறுதிபட்ட முடிவு.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...