•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, May 19, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 01 | யாழில் கம்பன்

இவ் எளியவன் வாழ்விலும்,
இறைவனின் கருணைச்சிதறல்கள் சில பதிந்தன.
அப்பதிவுகள் என்னைப் பலருக்கும் இனம் காட்டின.
கம்பன் என்றொரு மகா கவிஞனின் பதம் பற்றும் பாக்கியம் பெற்றேன்.
அவனை நான் போற்ற, உலகம் என்னைப் போற்றியது.
கம்பன் எனது அடையாளக் குறியீடானான்.
நான் கம்பனது அடையாளக் குறியீடானேன்.
இப்போதெல்லாம்,
சபைகளில் எவரேனும் கம்பனைப் புகழ்ந்தோ, தூற்றியோ பேசினால்,
சபை என்னைத் திரும்பிப் பார்க்கிறது.
என்னில் குறை காண்பவர்கள்,
கம்பனைக் குறைக்க முயல்கின்றனர்.
என்னைப் பாராட்ட நினைப்பவர்களும்,
கம்பனைப் பாராட்டி மகிழ்கின்றனர்.
அந்தளவிற்குக் கம்பன் எனக்கு உறவாயினான்.
அந்த மகாகவிஞனின் உறவாக மாற,
நான் எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும்?
ஒரு கூழாங்கல்லைக் கோமேதகம் ஆக்கினான் அவன்.
ஒரு புல்லைப் புல்லாங்குழல் ஆக்கினான் அவன்.
ஒரு சருகைச் சரித்திரம் ஆக்கினான் அவன்.
கம்பன் எனக்குப் பொருள் தந்தான்!
கம்பன் எனக்குப் புகழ் தந்தான்!
கம்பன் எனக்குப் புண்ணியம் தந்தான்!
மொத்தத்தில் கம்பன் என்னைப் புதுப்பித்தான்.
இன்று நான்
உண்ணும் உணவு,
பருகும் நீர்,
உடுக்கும் உடை,
இவை எல்லாம் கம்பன் தந்தவை.
என் விடலைப்பருவத் தடுமாற்றங்கள் என்னை வீழ்த்து முன்,
நான் கம்பனைத் தொட்டுக் கரை சேர்ந்தேன்.
என்னைப் புகழும் உலகிற்கு எனது புன்மைகள் தெரியாது.
உருக்கிவார்த்தெடுத்த உத்தமனாய் என்னைக் கருதுவோர் பலர்.
அவர் தமக்குப் பணிவுடன் ஒன்றுரைப்பேன்.
என் வாழ்விலும் எத்தனையோ இருட் பகுதிகள் உள.
இதைச் சொல்வது என்னைக் காந்தியாய்க் காட்டிக்கொள்ள அன்று.
எல்லார் வாழ்விலும் இருட் கூறுகள் இருக்கவே செய்கின்றன.
அவ் இருட் பகுதியைக் கடந்து விட்டால்,
“இதுதான் என் வாழ்க்கை” எனக் கூறும் தெம்பு வரும்.
அத்தெம்பு இப்போது எனக்கு வந்ததால்தான்,
இந்நூலை எழுதத்தொடங்குகிறேன்.
“அங்ஙனமாயின் உனது வாழ்வின் இருட் பகுதியும்
இந்நூலில் பதிவாகுமா?”
அழுக்கைச் சுவைக்க ஒரு சிலரின் மன நாக்கு நீள்வது புரிகிறது.
இருளால் எவருக்கு என்ன பயன்?
ஒளியால் மட்டும் என்ன பயனாம்? - கேட்பீர்கள்.
என் வாழ்வொளி, வேறு சிலருக்கு வழிகாட்டலாம் அல்லவா!
அதனாற்றான், விதித்தன செய்ததை மட்டும் இந்நூலில் பதிவாக்குகிறேன்.
காலம் இடம் தந்து, தேவை முகிழ்த்தால்,
விலக்கியன பற்றியும் எழுதத் தயங்கேன்.இந்நூல் கம்பனை நான் தொடத் தொடங்கியதிலிருந்து தொடங்குகிறது.
அது ஏனெனக் கேட்பீர்கள்.
உண்மையில் அதுதான் என் வாழ்வு தொடங்கியபகுதி.
என் வாழ்வையும் வரலாறாய்ப் படிக்க,
கம்பனே துணை செய்தான்.
அதனாற்றான் அவனைத் தொட்ட நாளை,
என் வாழ்வின் தொடக்க நாளாய்க் கொண்டு,
இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்.எனது இந்த இலட்சியப் பயணத்தில்,
எவ்வித பயனையும் எதிர்பாராமல்,
தம் தோளேற்றி என்னை உயர்த்திவிட்டு,
நான் சிகரந்தொட்ட இன்றைய நிலையில்,
தாம் அப்படியே அடியில் நின்று ஆனந்திக்கும்,
அதிசயப் பிறவிகள் பலர் பதிவாயினர்.
அவர்கள் இன்றேல் நானில்லை.
இன்றைய புகழ் ஒளியில் என் முகம் மட்டும்தான் பதிவாகிறது.
அவ் ஒளிவட்டத்துள் என் முகம் வர,
பலன் கருதாது பாடுபட்டாரை,
என் உயிரால் வணங்குகிறேன்.
ஒளியில் தெரியும் என் முகத்தை மட்டும் நோக்குவோர்க்கு,
என்னை அவ் ஒளி வட்டத்திற்குள் கொணர்ந்தோரைத் தெரிய வாய்ப்பில்லை.
இந்நேரத்தில் அவர்தம் பங்களிப்பை,
உலகிற்கு உணர்த்த வேண்டியது என் கடனன்றோ?
அன்றேல் நன்றி கொன்றவனாவேன்.ஒளி நோக்கிய என் உயர்வை,
தடைசெய்ய முயன்றாரும் இருக்கவே செய்தனர்.
அவர்கள் செய்த தடைகளால் புத்தியில் வைரம் பாய்ந்து,
ஒரு நாளும் தளர்வறியா மனம் கைவரப் பெற்றேன்.
இங்ஙனமாய் அவர்களும்,
ஏதோ வகையில் என் உயர்வுக்காய்ப் பங்காற்றினர்.
அவர்க்கும் இந்நேரத்தில் எனது நன்றிகள்.கட்டுரை எழுதி வரலாற்றில் பதிவாகலாம் எனும் நம்பிக்கை,
எனக்குக் கிஞ்சித்தும் இல்லை.
அவ்வளவு ஏன்?
வரலாற்றில் பதிவாக வேண்டும் எனும் எண்ணங்கூட,
என் மனத்துள் துளியும் இல்லை.
பின் ஏன் இம்முயற்சி எனக் கேட்பீர்கள்.
கழகம் இன்று விரிந்து,
சொத்துக்களோடும், சுயத்தோடும் நிற்கிறது.
உண்மையாய்ப்; பாடுபட்டவர் ஒதுங்கி நிற்க,
ஒளிந்தார், கழகத்தைத் தாமே வளர்த்ததாய்,
நான் உயிரோடு இருக்கும்போதே
சொல்லத் தொடங்குகின்றனர்.
கழகத்தின் ‘அ’ முதல் ‘ஃ’ வரையிலான உயர்வு தாழ்வுகளின்,
ஒரே சாட்சியாய் இன்று வாழ்பவன் நான் ஒருவனே.
ஆதலால், எவரும் திரிபுபடுத்தா வகையில்,
கழகத்தின் வரலாற்றை உரைத்து வைக்கவேண்டும் என விரும்பினேன்.
அதனால், கழக முயற்சியில் உடன்பட்டார், முரண்பட்டார் என,
அனைவர் பற்றியும் இந்நூலில் எழுதுகிறேன்.என் விருப்புப் பற்றி யாரையும் உயர்த்தியோ,
என் வெறுப்புப் பற்றி யாரையும் தாழ்த்தியோ எழுதாமல்,
முடிந்தவரை நடுவுநிலைமையோடு நடந்தவற்றைப் பதிவு செய்கிறேன்.
கழகத்தோடு முரண்பட்டுத் தீமை செய்ய முயன்றார் ஒரு சிலரும்,
இந்நூலில் பதிவாகின்றனர்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, பக்கச்சார்பு, பொறாமை, போட்டி என்பவற்றால்,
அவர்கள் எமக்குத் தீமை இயற்றியிருக்கலாம்.
அது நோக்கி அவர்தமை, தீயர் என முடிவு செய்தல் தவறாம்!வளர வேண்டும் எனும் விருப்பில்,
அவசரமாய் நாங்கள் விரித்து நீட்டிய கைகளும், கால்களும்,
எங்களை அறியாமல் அவர்கள் இதயத்தைக் காயப்படுத்தி
இருந்திருக்கக் கூடும்.
இராமனின் வில்லுண்டையால் நொந்த கூனியைப் போல,
அவர்தம் காயங்கள் எங்கெங்கு உண்டாயிற்றோ?- யாரறிவார்?
ஒன்று மட்டும் உண்மை.
இந்நூலில் எங்கள் வரலாற்றில் பதிவாகும் அவர்தம் தீய முகம் போல,
வாழ்வின் மற்றொரு பகுதியில்,
அவர்களின் உத்தமமுகமும் நிச்சயம் ஒளிந்திருக்கும்.
ஆதலால் இந்நூலில் வரும் சம்பவங்களை வைத்து,
எவரையும் தீயர் எனக் கொள்ளற்க!
பகைவர் என்றில்லை, உறவானவர்கள் பற்றியும்,
என் உள்மன உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறேன்.
அப்பதிவுகளும் சிலரைக் காயப்படுத்தலாம்.
ஆனால் பகை, நட்பு என்ற இருதிறத்தாரும்,
ஏதோவகையில் எனக்கு உறவானவர்களே.
அதைத் தெளிவுடன் உணர்ந்து கொண்டே,
நடந்தவற்றைப் பதிவு செய்தல் எனும் நோக்கில்
இந்நூலை எழுதுகிறேன்.
நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ,
பகையோ, நட்போ,
தொடர்புபட்டார் எவர்மீதும் இன்று எனக்குப் பகையில்லை.
என்னை உணர்ந்தார் இவ் உண்மை உணர்வார்.உலகம் வேகமாய்ச் சுழல்வதாய்த் தோன்றுகிறது.
கழகத்தை ஆரம்பித்தது நேற்றுப்போல் இருக்கிறது.
முப்பத்தாறு ஆண்டுகளைக் கடந்துவிட்டோம் எனும் செய்தி,
உவப்பும் வியப்பும் தருகிறது.
இன்று கம்பன்கழகம் ஒரு விரிந்த இலக்கிய அமைப்பு.
ஆடம்பரமான அழைப்பிதழ்கள்,
பிரமாண்டமான விழாக்கள்,
சொந்தமாக இரண்டு கட்டிடங்கள்,
உலகெங்கும் அன்பர்கள்,
கொழும்பில் கழகம் முன்னின்று அமைத்த ஓர் ஆலயம்,
என விரிந்திருக்கும் கம்பன்கழகத்தை,
இன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
பணக்காரக்கழகம், பகட்டுக்கழகம் என்றும்,
மண் பற்றில்லாதவர்கள், மற்றவர்களை மதிக்காதவர்கள் என்றும்,
கழகத்தின் மேலும், எங்கள் மேலும் பழி சொல்கின்றனர் சிலர்.
ஆனாலும், அத்தகையோரும்,
எங்கள் கழக அங்கீகரிப்பிற்காய்க் காத்திருப்பது உண்மை.எங்கள் விழாக்களைப் பகட்டுவிழாக்கள் என்று சொன்ன பலர்,
பின் தாங்கள் செய்த விழாக்களில்,
எங்கள் தடத்தினைப் பின்பற்ற முயன்றிருக்கிறார்கள்.
எப்படியோ, இறையருளால் கழகம் விரிந்து வளர்ந்திருக்கிறது.
பொறாமையால் எதிர்க்கும் ஓரிருவரைத் தவிர,
ஆயிரமானவர்கள் இன்று எங்களில் அன்பு செய்கிறார்கள்.
நெகிழ்ந்து நிற்கிறோம்.உயர்ந்து விரிந்து செழித்து நிற்கும்
இன்றைய கழகத்தைத் தெரிந்த பலருக்கு,
அது வித்தாகி வேர்விட்டு வெளிவரப் பட்டபாடுகள்
தெரிந்திருக்க நியாயமில்லை.
இக் கழகத்தை ஊன்றி உயர்வித்த
நாங்கள் அத்தனைபேரும் இளைஞர்கள்.
நாங்கள் ஒன்றும் ஆகாயத்திலிருந்து குதித்த தேவகுமாரர்கள் அல்லர்.
செல்வச் சீமான்கள் வீட்டுப் பிள்ளைகளுமல்லர்.
எங்கள் மூதாதையர்கள் தந்த சொத்திலிருந்தோ,
எங்கள் பெற்றோர்களின் செல்வாக்கிலிருந்தோ,
இக்கழகத்தை நாங்கள் கட்டியெழுப்பவில்லை.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களான நாங்கள்,
சில செல்வக் குடும்பங்களில்
செயற்கையாய்ச் செதுக்கப்படும் பிள்ளைகள் போல,
உருவாக்கப்பட்டவர்களல்லர்.
உருவானவர்கள்.மண்ணில் விழுந்து மலர்ந்து,
இயற்கையின் எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்து,
மெல்ல மெல்ல நிமிர்ந்தோம்.
விளைவது விருட்சம் என்று தெரியாமல்,
புல் என்றும், பூண்டு என்றும் கிள்ள நினைத்தார் பலர்.
இழிவு செய்தார் சிலர்.
எங்கள் இறை நம்பிக்கையும்,
ஏற்றமிகு பெரியோர் சிலர் தந்த காவலும்,
காலத்தின் சுழல்களிலிருந்து எங்களைக் காப்பாற்றி,
இன்று விருட்சமாக விரிய வைத்திருக்கின்றன.விருட்சத்தைத் தெரிந்தவர்க்கு,
அது விளைந்த வரலாறு தெரியவேண்டாமா?
புல்லாய், பூடாய், புழுவாய்க் கிடந்து உழன்று,
மனிதராய், தேவராய் நாம் மலர்ந்த கதை சுவாரஸ்யமானது.
இன்று உங்கள் அங்கீகரிப்போடு எழுந்து நிற்கையில்,
அன்று நாம் பட்ட அவலங்களைப் பகிரத் தோன்றுகிறது.
நாங்களாக முயன்று, விழுந்து, நொந்து, எழுந்து,
இன்று உங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறோம்.
தூரத்தில் நின்று,
உயர்ந்து தோன்றும் ஒரு மலையைக் காண்கையில்,
அதன் அடிவாரம் காணும் ஆசை வருமல்லவா?
அது போல எங்கள் வரலாறு காணும் ஆசை உங்களுக்கு வரலாம்.
அவ் ஆசையைத் திருப்தி செய்வது ஒரு நோக்கம்.ஏற்றமுடன் எழுந்திருக்கும் இன்றைய எழுச்சி எங்கள் தனிச்சொத்து என,
இதயத்தில் எழ நினைக்கும் ஆணவத்திற்கு அடிபோட்டு,
“இது எத்தனையோ பேர் செய்த தியாகத்தின் திரட்சி.
வெறும் காவலர்களே நீங்கள்!” என,
எமக்கு நாமே உண்மையை உணர்த்திக் கொள்வது,
இதன் இரண்டாவது நோக்கம்.
இந்நோக்கங்களே,
‘உன்னைச் சரணடைந்தேன்’ எனும் இந்நூல் வரக் காரணங்களாயின.இந்த முப்பத்தாறு ஆண்டுகளில்,
இலக்கிய, சமூக, அரசியற் போக்குகளில்,
ஆயிரமாயிரம் மாற்றங்கள்.
கடினமான ஒரு வரலாற்றுச் சந்தியில் வாழும் துர்ப்பாக்கியம் வேறு.
தொடங்கிய பாதை, இடம், காலம் அத்தனையும் தலைகீழாகி,
இன்று எங்கோ நிற்கிறோம்.
ஈழத்தமிழர் வாழ்வுப்பாதை இன்று முற்றாய் மாறிவிட்டது.
நாங்கள் கழகம் தொடங்கிய,
மண், மக்கள், மாண்பு அத்தனையும் மாறிவிட்ட நிலை.
ஈழப்போர் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.
அதனாற்றான் எங்கள் வாழ்வைச் சந்தி வாழ்வு என்கிறேன்.இம்மாற்றங்களின் ஒவ்வொரு அதிர்வுக்கும்,
நாங்கள் எம்மைப் புத்தாக்கம் செய்யவேண்டியிருந்தது.
சாண் ஏறி முழம் சறுக்கினோம்.
திரும்பத் திரும்ப முதலாம் படியிலிருந்து ஏறும்
அநியாயத்தைச் சந்தித்தோம்.
ஆனாலும், தெய்வம் கருணை செய்தது.
இறக்கங்களில் எங்கள் ஏற்றங்களை விதைத்தது.
அதனால், ஏற்றங்களில் விலைபோகாமலும் தருக்குறாமலும்
நடக்க முடிந்தது.
இன்று காலப் பாதையின் முப்பத்தாறாவது மைற்கல்லை,
தாண்டிநின்று திரும்பிப்பார்க்க பிரமிப்பாயிருக்கிறது.நிகழ்காலத்தில் வரம்பாய் நினைந்து,
சுலபமாய் நாம் கடந்த விடயங்கள்,
இறந்த காலத்தில் நின்று திரும்பிப் பார்க்க,
மலைகளாய்த் தெரிந்து மலைப்புத் தருகின்றன.
இந்த மலைகளை நாமா கடந்தோம்? எனத் திகைத்து நிற்கிறோம்.
கடவுள் கைபிடித்துக் கடப்பித்த கருணையின் கனதியை,
காலங்கடந்த நிலையிற்றான் கணிக்க முடிகிறது.
கண்கள் கரைந்தோட கைகூப்பி மெய்சிலிர்த்து நிற்கிறோம்.விரிந்து நிற்கும் எங்களைக் கண்டு வியப்போர்க்கு ஒரு வார்த்தை.
இந்த முப்பத்தாறு ஆண்டுகளில் எங்களை வளர்த்துவிட,
எந்தவிதச் சுயநலமுமின்றி, எத்தனைபேர் துணை செய்தார் தெரியுமா?
கல்விமான்கள், செல்வர்கள், உழைப்பாளிகள் என அவர்தம் பட்டியல் நீளும்.
மண்ணுள் மறைந்து உரமாய் இருந்து எங்களை உயர்த்திய,
அப்பண்பாளர்களுக்கு என்ன கைம்மாறு இயற்றுவோம்?
மரமும், கொப்பும், இலையும், பூவும் கனியுமாக,
எங்களைப் பதிவு செய்து, கழக விருட்சத்தைக் காண்போர்களே!
நாங்கள் வெளிப்பதிவுகள் மட்டுமே.
உரமாய் உள்நின்று எம்மை உயர்த்தியோர் ஆயிரம் ஆயிரம் பேர்.
அவ் உண்மை உணருங்கள்!
அவர்தமை உங்கள் உயர்ந்த உள்ளத்தால்,
ஒரு நிமிடமேனும் போற்றுங்கள்!
இது அன்புரிமை பற்றிய எங்களின் வேண்டுகோள்.
அவ்வற்புதத் தியாகிகளின் பெருமையை,
உயர்ந்து நிற்கும் இவ்வேளையில் உலகிற்கு உணர்த்தத் தவறின்,
வரலாற்றுத் தவறிழைத்த வஞ்சகர்களாவோம்.
அதுநோக்கியே,
‘உன்னைச் சரணடைந்தோம்’  எனும் இப்பதிவை வெளியிடுகிறோம்.
கையேற்று வாழ்த்தியருள்க!முதலில், இவ்வரலாறுகளைக் கட்டுரைகளாய் ஆக்கி,
நூல் வடிவில் வெளியிடும் எண்ணமே இருந்தது.
கால வளர்ச்சியில் கருவி வளர்ச்சிகள் உயர்ந்துவரும் இக்காலத்தில்,
மிகப்பழமையாய் ஒரு வரலாற்றுச் சுயசரிதை அமைப்பதை விட,
சில காட்சிப்பதிவுகளோடு கருத்துப்பதிவுகளையும் இணைத்து,
நூலாக்கிப் புதுமை செய்தால் என்ன? எனும்  எண்ணம் உதித்தது.
புதுமைகளின் குத்தகைக்காரன் அல்லவா கம்பன்?
அவன் பெயரால் அமைந்த கழகத்தின் வரலாறும்,
புதுமையாய் அமையட்டும் என எண்ணினோம்.
அவ் எண்ணத்தின் வண்ணமே இந்நூல்.‘கழகத்தில் நாங்களும் இணைந்து உறுப்பினராக என்ன செய்யவேண்டும்?’
அண்மைக்காலமாகப் பலரும் எங்களைக் கேட்கும் கேள்வி இது.
பதிலாய்ப் புன்னகைப்பேன்.
அவர்கள் கேள்வி தொடரும்.
கழக அங்கத்தினராக என்ன தகுதி வேண்டும்?
‘உங்கள் அன்பும் ஆர்வமும்தான் கழக உறுப்பினராகும் தகுதி.’
ஒரு பட்டியலை எதிர்பார்க்கும் அவர்களுக்கு,
எப்போதும் என் பதில் இதுவே.
எங்கள் கழகம் ஒரு குடும்பம்.
அறிஞர்கள், பிரமுகர்கள், இரசிகர்கள் எல்லாம்
எங்கள் குடும்ப அங்கத்தினர்கள்.
இது அடிக்கடி நாம் மேடையில் சொல்லும் விடயம்.
வெறும் உபசாரத்திற்காயன்றி,
உண்மையில் உளத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகள் இவை.கழக நிர்வாகத்தையும்
ஒரு குடும்பம் போலவே இதுவரை நடத்தியிருக்கிறோம்.
என் நண்பர்களும், பின்னாள் இணைந்த இளைஞர்களும்,
கழகத்தை ஒரு குடும்பமாகவே கருதினார்கள்.
அறிவுலகக் குடும்பப் பாங்கை,
எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
எங்களுக்குள்ளும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தது உண்மையே!
நிறையவே சண்டை போட்டுக்கொள்வோம்.
எல்லாம் முடிவுகள் எடுக்கும் முன்புதான்.
முடிவு என்ற ஒன்றை எடுத்துவிட்டால்,
மாறுபட்டவரும் அம்முடிவைத் தன் முடிவாகவே கருதுவார்.
அம்முடிவை எட்ட உண்மையாய்ப் பாடுபடுவார்.
இதுதான் எங்கள் வெற்றியின் இரகசியம்.
கருத்தளவில்தான் எங்கள் மாறுபாடுகள் இருக்கும்.
உள்ளத்தால் என்றைக்கும் உறவே.
இன்றும் கழக உறுப்பினர்கள் தம் இரத்த உறவை விட,
கழக உறவையே முதலாய்க் கொண்டு வாழ்கின்றனர்.
அதனாற்தான், முப்பத்தாறு ஆண்டு எல்லையை,
வெற்றியோடு தொடமுடிந்திருக்கிறது.நான், திருநந்தகுமார், குமாரதாசன், ரத்தினகுமார் ஆகியோர்,
பதினைந்தாண்டுகள் கம்பன்கழகத்தின் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தோம்.
கழகத்தைத் தொடங்கியபோது
எங்களுக்கு இருபதுகளைத் தொட்ட வயது.
பதினைந்தாண்டு நிறைவின்போது,
எங்களில் பலர் முப்பது வயதையே தாண்டியிருந்தனர்.
அப்போதும் சமுதாயம் எங்களை இளைஞர்களாய்த்தான் பார்த்தது.
நினைத்திருந்தால்,
இன்னும் பதினைந்தாண்டுகள்கூட
நாங்கள் நிர்வாகத்தில் இருந்திருக்கலாம்.
ஆனாலும், ஒரு புதிய தலைமுறையினரிடம்,
நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டுமென்று,
தெளிவாய் முடிவு செய்தோம்.
முடிவை எடுத்தவன் நான்.
மற்ற மூவரும் மனமுவந்து அம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.தமிழ்த்துறையில் ஆற்றலாளர்களாய் நாம் இனங்கண்ட,
சிவசங்கர், பிரசாந்தன், மணிமாறன், ஜெயசீலன் ஆகியோரை,
புதிய நிர்வாகிகளாய்ப் பதினைந்தாம் ஆண்டு விழாவில் அறிவித்தோம்.
ஐந்து ஆண்டு எங்களோடு இணைந்து நிர்வாகப் பயிற்சி பெற்று,
கழகத்தின் இருபதாம் ஆண்டிலிருந்து,
அவர்களே கழகத்தை நிர்வகிக்க வேண்டுமென்பது எங்கள் முடிவு.
அதன்படி புதிய நூற்றாண்டில்
புதிய தலைமுறை கழகத்தைப் பொறுப்பேற்றது.
எங்கள் தேர்வு பெரும்பாலும் பிழைக்கவில்லை.
ஒரு சிலர் சற்றுச் சோர்ந்தாலும் அவர்களையும் ஈர்த்து,
கழகத்தை வழிநடத்தும் சிவசங்கரும், பிரசாந்தனும்,
எங்களுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
கழகத்தைக் குடும்பமாக நினைக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா?
நான் மேற்சொன்னது அதன் உண்மைக்காம் சான்றே.
கழகத்தைக் குடும்பமாய் நினைத்தபடியால்தான்,
அதனை மகிழ்ச்சியோடு அடுத்த தலைமுறையினரிடம்
ஒப்படைக்க முடிந்தது.
எந்தப் பெற்றோராவது குடும்பப் பொறுப்பை,
பிள்ளைகளிடம் கொடுக்கப் பின்நிற்பார்களா?
குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்பது,
‘இந்தா தந்துவிட்டேன், இனி எக்கேடும் கெட்டுப்போ’
என்பதாய் இருக்குமா?
உறவான குடும்பத்தில் ஒருக்காலும் இது நடக்காதல்லவா?
பிள்ளைகளை முன்நிறுத்தி,
பெற்றோர்கள் பின்நின்று வழி நடத்துவது தானே மரபு?
அதுதானே குடும்ப நடைமுறை.
எங்கள் கழகக் குடும்பத்திலும் இன்று அது நடக்கின்றபொழுது,
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதன் காரணம்,
வெறும் தற்பெருமை உரைப்பதற்காய் அன்று.
நம் பண்பாட்டு அடிப்படையில் உறவைக் கலந்து,
நாம் அமைத்துக்கொண்ட புதிய நிர்வாக முறைமையை,
உங்களுக்கு அறிவிப்பதும்,
அதுவே எங்கள் வெற்றிக்குக் காரணமாய் இருந்ததை உணர்த்துவதும்,
மற்றவர்களும் இதனை முன்னுதாரணமாய்க் கொள்ள வேண்டி நிற்பதுமே ஆகும்.கடந்த மூன்று தசாப்தங்களில்,
பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்தோம் என்று கூறியிருந்தேன்.
அரசியலில் எந்தவித ஈடுபாடுமின்றி நாங்கள் இருந்தாலும்,
விரும்பியோ விரும்பாமலோ அரசியலாளர்களின் தொடர்பு,
கழகத்திற்கு அமைந்தபடி இருந்தது.
அமிர்தலிங்கம் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகள் வரை,
எல்லோரும் ஏதோ வகையில் கழகத்தோடு தொடர்புகொண்டனர்.
இலக்கியமே எமது பாதை எனும் நோக்கில் தெளிவாய் இருந்த நாங்கள்,
எந்த அரசியல் அமைப்போடும் எம்மை இணைத்துக் கொள்ளவில்லை.
எந்தத் தலைமையையும் ‘இது எங்கள் தலைமை’ என்று ஏற்கவில்லை.
அனைவரிலும் அன்பு செய்தோம்.
நன்மை கண்ட இடத்திலெல்லாம் பாராட்டினோம்.
தீமைகளை அச்சமின்றிக் கண்டித்தோம்.
எங்களின் இந்த நடுவுநிலைமை சிலருக்கு வெறுப்பை உண்டாக்கியது.
ஆனாலும், அதுவே அவர்கள் மனதில் மதிப்பையும் உண்டாக்கியது.
இன்றுவரை எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் அமைப்பாகவே,
எங்கள் கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக அரசியல் மரபில் வந்தோர் மட்டுமல்லாமல்,
போராட்டக் குழுவினர்கூட,
எங்கள் இலட்சியத்தை அங்கீகரித்துக் கௌரவித்தனர்.
முரண்பாடுகள் பல வந்தபோதும்,
தங்கள் கருத்தை எந்தக் காலகட்டத்திலும் எங்களில் திணிக்காத,
அவர்தமை மதிப்போடு இவ்வேளை நினைக்கிறேன்.
புலவர்களையும், புலமையையும் மதிப்பது தமிழர் பண்பாடு.
அப்பண்பாட்டு வழியில் வந்தவர்களிடம்,
அவ்வுயர் பண்பு நிலைத்ததில் ஆச்சரியம் என்ன?
வரைவிலா அதிகாரம் பெற்றிருந்தும்,
சுயமாய் எங்களை இயங்க அனுமதித்த அவர்களையும்,
இவ்வேளையில், நன்றியோடு நினைக்கிறேன்.‘கம்பன்விழாக்களில் மங்கலவிளக்கேற்ற,
கழகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா கொடுக்க வேணுமாம்.’
சில குறும்பர்களால் இப்படியொரு கதை பரவ விடப்பட்டுள்ளது.
பணக்காரர்களின் கழகம் என்ற பெயர்,
கம்பன்கழகத்திற்கு இருப்பதாய் முன்பே சொல்லியிருந்தேன்.
இந்த இடத்தில் அதுபற்றிச் சற்று விரித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.
செல்வர்களின் ஆதரவு எப்போதும் எமக்கு இருந்தது உண்மை.
அது எங்கள் ராசி அல்ல, கம்பனின் ராசி.
‘திரு வேறு தௌ;ளியராதல் வேறு’ என்ற விதியை உடைத்து,
தமிழ்ப் புலவர்களுள் செழித்து வாழ்ந்தவன் கம்பன் ஒருவனே!
ஆரம்பத்தில் சோழச் சக்கரவர்த்தியாலும்,
பின்னர் சடையப்பவள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவன் அவன்.
‘செல்வர்களின் முகம் தம்பக்கம் திரும்பாதா?’ என்று புலவர்கள் ஏங்க,
‘கம்பனின் முகம் தம்பக்கம் திரும்பாதா?’ என்று
சக்கரவர்த்திகளே ஏங்கினார்களாம்.
அதுதான் கம்பனின் ராசி.
அந்த ராசி இன்றும் தொடர்கிறது.
அதனாற்றான், தமிழுலகில் கம்பன்புகழ் ஓங்கி வளர்ந்தபடியே இருக்கிறது.
மற்றப் புலவர்களுக்கு அமைத்த கழகங்கள் எல்லாம்
மூடுவிழாக் கொண்டாட,
கம்பன் கழகங்கள் புதிது புதிதாய்த் தோன்றியபடி இருக்கின்றன.
எந்தக் கம்பன்கழகத்தை எடுத்தாலும் அதைக் காக்க,
யாரோ நான்கு நிறை செல்வர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
கம்பனின் அந்த ராசி எங்கள் கழகத்திலும் தொடர்ந்தது.அதுபோலவே, கம்பனை எதிர்க்கவெனவும்,
ஒரு கூட்டம் அவன் காலத்திலேயே இருந்தது.
கற்றோர் எதிர்ப்பு என்பதும் அவன் ராசிதான் போலும்.
கம்பனின் அந்த ராசியும் சேர்ந்தே எங்களைத் தொடர்கிறது.
நாங்கள் கழகம் தொடங்கிய நாட்தொடக்கம்,
பல தாழ்விலாச் செல்வர்கள்
எங்களைத் தயையுடன் ஆதரித்து வருகின்றனர்.
ஏதோவொரு சூழ்நிலையில், ஆதரித்த ஒருவர் கைவிட்டால்,
எங்கோ இருந்து வேறொரு செல்வர் எங்களைத் தேடிவந்து ஆதரிக்கிறார்.
கடந்து போன காலங்களில் நான் கண்டுகொண்ட உண்மை இது.
தொடக்கத்தில் இது தற்செயலோ என நினைத்திருக்கிறேன்.
ஆனால், போகப்போக கம்பனின் ராசியின் வலிமை தெரியவந்தது.
தக்க செல்வர்களையே கம்பன் தன் துணைக்கு அழைத்து வருகிறான்.
செல்வம் இருந்தும் தகுதியற்றவர்களை அவன் நெருங்க விடுவதில்லை.
எத்தனையோ செல்வர்கள் கழகத் தொடர்புக்காய்க் காத்திருந்தனர்.
இது ஆணவத்தால் நான் சொல்லும் வார்த்தை அன்று.
கம்பனைத் தொட்ட செல்வர்கள்,
அவர்களின் செல்வத்தாற் பெறமுடியாத புகழைப் பெறுகிறார்கள்.
அது மட்டுமல்ல,
கம்பனைத் தொட்டவர்கள் காலங் கடந்தும் நிலைக்கிறார்கள்.
அவர்கள் சந்ததியும் செழிக்கிறது.
இது அன்றும் உண்மை, இன்றும் என்றும் உண்மையாம்.அன்றைய உண்மைக்குச் சடையப்ப வள்ளல் உதாரணர்.
இன்றைய உண்மைக்காய்ப்
பல வள்ளல்களின் பெயர்களைப் பட்டியலிடலாம்.
இந்த ராசிதான் எங்களுக்கும் வாய்த்தது.
நாங்களே வியக்கும் வண்ணம்
எங்களுக்குத் துணை செய்தார்கள் பல வள்ளல்கள்.
ஆனால், என்றும், எதையும் அவர்கள் எங்களிடம் எதிர்பார்த்ததில்லை.
ஒருசில பேர் எதிர்பார்ப்புடன் வந்து எங்களை விலைபேசினார்கள்.
அத்தகையோரைக் கழகத்திலிருந்து அப்புறப்படுத்தினான் கம்பன்.
அவர்கள் சுவடழிந்து எங்கோ தூரத்தில் இன்று.பொருளின்மையால் இயலாமற் போயிற்று என்று,
இன்றுவரையும் எங்கள் முயற்சி ஏதும் நின்றதில்லை.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது பழமொழி.
கம்பனை நம்பியோர் கைவிடப்படார் என்பது என் அனுபவமொழி.
கம்பன் எம்மைக் கடவுளாய்க் காத்தான்.
‘எல்லை ஒன்றின்மையை’ உணர்ந்தவனும்,
கடவுள் ஆனதில் ஆச்சரியமென்ன?
ஆரம்பகாலத்தில் செல்வமில்லையே என்ற அச்சம் எனக்கு இருந்தது.
அந்த அச்சத்தின் காரணமாக,
என் குருநாதர் இலங்கை வந்தபோது,
நிதி சேகரிக்க என அவரை அழைத்தேன்.
அவர் சொன்ன அறிவுரை என் அச்சம் தீர்த்தது.
அது பற்றி உள்ளே எழுதியிருக்கிறேன்.‘கம்பன்கழகத்திடம் லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது’இ
இங்ஙனமாய் உரைத்து வருகின்றனர் ஒரு சாரார்.
கழகத்திற்கு இருக்கும் செல்வாக்கிற்கு நாம் நினைத்திருந்தால்,
அப்படிப் பணத்தைச் சேர்த்து வைத்திருக்க முடியுந்தான்.
ஆனால், இன்றுவரை அதை நாம் செய்ததில்லை.
தேவைக்குப் பணம் வருகிறது.
உலக நன்மைக்காய்ச் செலவு செய்கிறோம்.
குருநாதரின் கட்டளைக்கேற்பச் சேமிப்பைத் தவிர்க்கிறோம்.
“கழக நிகழ்ச்சிகளுக்கு ரிக்கட் போடலாமே!”
இது பலபேர் சொல்லுகிற புத்திமதி.
ஆனால், இன்றுவரை அதுபற்றி,
துளியளவேனும் நாங்கள் நினைத்ததில்லை.
கம்பன் தமிழ் மக்களிடம் போகவேண்டும்.
அது ஒன்றே எங்கள் குறிக்கோள்.
அது போனால்,
கலை, கலாசாரம், பண்பாடு அத்தனையும் மக்களிடம் போய்ச்சேரும்.
அது கண்முன்னால் நிறைவேறுகிறது.
அதைவிட பணத்தைச் சேகரித்து வைப்பதில்,
என்ன மகிழ்ச்சி வந்துவிடப்போகிறது?எங்கள் கழகத்தின்
பதினைந்து ஆண்டுகால ஆரம்ப முயற்சிகள் அத்தனையும்,
யாழ். மண்ணில் பதிவானவை.
1995 இடப்பெயர்வோடு கொழும்பு வந்து,
கொழும்பிலும் கழக முயற்சிகளைத் தொடங்கி,
இன்று இருபது ஆண்டுகள் கடந்தாகிவிட்டது.
மொத்தப் பதிவுகளையும் ஒரு சேரச் செய்ய முடியவில்லை.
அதனால், ஆரம்ப பதினைந்தாண்டுகாலப் பதிவுகளை,
முடிந்தவரை இந்நூலில் பதிவு செய்கிறேன்.இடையில் ஏற்பட்ட போரும், இடப்பெயர்வுகளும்,
பல பதிவுகளை அழித்துவிட்டன.
இதன்முன்பு,
பதினைந்தாவது ஆண்டிலும், இருபதாவது ஆண்டிலும்,
நாம் வெளியிட்ட கம்பமலர்கள்,
அக்குறைபாட்டினை ஓரளவு நீக்கும் எனக் கருதுகிறேன்.
கழகச் செயற்பாடுகளில் ஆரம்பம் தொட்டு இன்றுவரை,
தொடர்ந்து இயங்கி வருபவன் நான் ஒருவனே.
அதனாற்றான், கட்டுரைகளை என் தனிக்கூற்றாய் எழுதுகிறேன்.
அதனை ஆணவமாய்க் கொள்ளற்க!
ஆவணமாய்க் கொள்க!இன்று நானும் எனது அறுபதாவது அகவையை நெருங்கிவிட்டேன்.
முதுமையின் சாயல்,
புத்திச் செயற்பாட்டிலும், உடற் செயற்பாட்டிலும்
தெரியத் தொடங்கிவிட்டது.
கழகம் சார்ந்த பல விடயங்களை,
மிகச் சிரமப்பட்டு புத்தியிலிருந்து கிளறி எடுக்கவேண்டியுள்ளது.
பலரும் பலவகையாய் கழகத்தின் வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம்.
உதவியிருக்கலாம் என்பதென்ன? உதவினார்கள்!
அத்தனைபேர் பதிவும் இன்று புத்தியில் இல்லை.
முடிந்தவரை நினைந்து நினைந்து பதிவாக்கியிருக்கிறேன்.
கழக வளர்ச்சிக்குத் துணைபுரிந்து இப்பதிவில் தவறவிடப்பட்டோர்,
என் தவற்றைப் பொறுப்பார்களாக!
அவர்கள் எங்கிருப்பினும் அவர் வாழும் திசைநோக்கிப் பணிகிறேன்.
இம்முயற்சியும் ஆரம்பத்திலிருந்து நான் திட்டமிட்டுச் செய்ததல்ல.
இறைவன் இக்காரியத்தையும் கைகூட்டுகிறான்.
அதிலும் ஏதோவோர் காரணம் இருக்கும்.
அதிகம் எழுதிவிட்டேன்.
இனி, இந்நூலினுள் மனமுவந்து செல்லுங்கள்.
கழகம் இன்னும் பல்லாண்டு பணிசெய்ய,
நல்மனதோடு ஒரு நிமிடம் பிரார்த்தியுங்கள்
‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’

தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...