•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, May 26, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 02 | இலக்கியம் நோக்கிய எனது பயணம்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
எனது இலக்கியப் பயணம் சுவாரஸ்யமானது.
பிறந்தது செட்டிக்குளத்தில்,
பின் புசல்லாவையில்  வாழ்க்கை.
அங்கு மூன்றாம் வகுப்புவரை
சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் படிப்பு.
சிலாபத்தில்
சென். அன்ரனீஸ்  பாடசாலையில்
ஏழாம் வகுப்புவரை படிப்பு.
யாழ். இந்துக்கல்லூரியில்
எட்டாம் வகுப்பில்
வந்து சேர்ந்தேன்.
என் தாயாரின் ஊரான
சண்டிலிப்பாயில்
இருப்புத் தொடர்ந்தது.
செட்டிக்குளம்
முல்லை நிலம்,
புசல்லாவை
குறிஞ்சி நிலம்,
சிலாபம் நெய்தல் நிலம், சண்டிலிப்பாய் மருத நிலம்,
நானிலத்திலும் தோய்த்து
இறைவன் என்னை வளர்த்தெடுத்தான்.அண்ணன் எனது முதல் குரு

எங்கள் வீட்டில் நான்தான் கடைசிப் பிள்ளை.
பதினொரு ஆண்டுகளாக அப்பதவியைத் தக்கவைத்தேன்.
1968 இல் என் தங்கை பிறந்ததோடு,
கடைசிப்பிள்ளை எனும் பட்டம் என் கைவிட்டுப் போயிற்று.
கடைசிப்பிள்ளையாய் இருந்ததால்,
புசல்லாவையில் என் அக்காமாரும், அண்ணனும் பள்ளிக்கூடம் போய்விட,
நான் மட்டும் வீட்டில் இருப்பேன்.
எங்கள் தந்தை அக்காலத்தில் வந்த இந்திய சஞ்சிகைகளான,
கல்கி, விகடன், குமுதம் ஆகியவற்றை வாங்கி வருவார்.
வீட்டில் நிற்கும் நான் அவற்றை என் வயப்படுத்திவிடுவேன்.
அப்போது எனக்கு வாசிக்கத் தெரியாது.
பாடசாலையால் வந்ததும் அக்காமாரும், அண்ணனும்,
அச்சஞ்சிகைகளை என்னிடம் பெறப் போட்டிபோடுவர்.
‘யார் எனக்கு சத்தமாய் வாசித்துக் காட்டுவீர்களோ,
அவர்களுக்குத் தான் அவற்றைத் தருவேன்’ என்று நிபந்தனை விதிப்பேன்.
என் அண்ணன் என் நிபந்தனைகளுக்கு உட்படுவார்.
அவர் கட்டிலில் படுத்திருந்து சஞ்சிகைகளை வாசிக்க,
அவருக்கு அருகில் படுத்திருந்து அனைத்தையும் கேட்பேன்.
அதனால் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய விதத்தில்,
ஒருவகையில் என் அண்ணனும் எனக்கு குருவாகிறார்.
இன்றும் என்னை யாரும் குறை சொன்னால் அவர் தாங்க மாட்டார்.
கேட்காத எனது பேச்சைக்கூட கற்பனையில் ரசிப்பார்.
இன்றைக்கும் அவர்தான் எனது முதல் ரசிகர்.
அவர்மூலம்தான் எனது வாசிப்புப் பழக்கம் தொடங்கியது.
இன்று இளையோர்க்கு வாசிப்புப் பழக்கம்,
இல்லை எனும் படியாய் ஆகிவிட்டது.
பெற்றோர்கள் படிப்பு முயற்சிகளை அதிகரிப்பதாய்க் கூறி,
பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தைச் சாகடித்து விட்டனர்.
அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை எப்படி உண்டாக்குவது என,
ஓர் குறிப்புத் தருவதற்காகவும்தான் இச் செய்தியைப் பதிவு செய்கிறேன்.ராஜாஜி தந்த விருப்பு

புசல்லாவை, சிலாபம் என,
பின்தங்கிய பகுதிகளில் அதற்கு முன் படித்ததால்,
ஆற்றல் மிக்க யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களோடு சமப்பட முடியாமல்,
மிகவும் சிரமப்பட்டேன்.
படிப்பில் மிக மிகச் சுமாரான மாணவன் நான்.
வேறு எந்தத் துறையிலும் ஈடுபாடு இல்லாத காரணத்தால்,
எனக்கு நண்பர்கள் என்று அப்போது யாரும் இருந்தாரிலர்.
அந்தச் சூழ்நிலையில்,
யாழ். இந்துக் கல்லூரி நூலகமே எனது “வேடந்தாங்கலாயிற்று”.
பால பருவத்தில் கல்கி சஞ்சிகையில் படித்த,
ராஜாஜியின் “சக்கரவர்த்தித் திருமகன்”
ராமகாதையில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதை அடிப்படையாய்க் கொண்டு,
நூலகத்தில் இருந்த,
அத்தனை இராமாயண ஆய்வு நூல்களையும் வாசித்தேன்.
பேச்சாளன் ஆக வேண்டும் எனும் எண்ணம்,
அப்பொழுது எனக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
அதற்கான காரணமும் இருந்தது.
அதைச் சொல்கிறேன்.எனது முதல் மேடைப் பேச்சு

சிலாபத்தில் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவின் ‘ஓவசியர்’ செல்வாக்கு பாடசாலையிலும் பதிவாகியிருந்தது.
அங்கிருந்த சுமாரான மாணவர்கள் மத்தியில்,
நானும் ஓரளவு தெரியப்பட்டிருந்தேன்.
அதனால், பாடசாலையில் நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டிக்கு,
எனது பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்திருந்தார்கள்.
அப்போது எனக்கு அந்தப்போட்டி பற்றி அக்கறையிருக்கவில்லை.
பாடமாக்கிப் பேசும் பேச்சு அது.
பாடமாக்குவது என் மனதில் அப்போது நிற்கவே நிற்காது.
பேச்சுப் போட்டி அன்று,
நடுவர்கள், போட்டியாளர்களை ஒவ்வொருவராக மேடையேற்றினர்.
என் முறை வந்தது.
நானும் மேடையேறினேன்.
“பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்.”
இந்த ஒரு வரியை ஒருவாறு முக்கித்தக்கிச் சொல்லி முடித்தேன்.
அந்த அளவில் நான் பாடமாக்கிய அத்தனையும் மறந்து போயிற்று.
நடுவர்கள் எவ்வளவோ என்னை ஊக்குவிக்க முயற்சித்தனர்.
ஒரு சொல்லுத்தானும் வர மறுத்தது.
இறுதியில் மேடையிலிருந்து இறக்கி அனுப்பப்பட்டேன்.
இதுதான் எனது முதல் பேச்சு அனுபவம்.
இவ்அனுபவம் இருக்க,
பேச்சாளன் ஆகவேண்டும் எனும் எண்ணம் எப்படி எனக்கு வரும்?கம்பனில் ஆர்வம் வந்தது

மீண்டும் யாழ். இந்து வாழ்க்கை பற்றித் தொடர்கிறேன்.
வெறுமனே பொழுதுபோகவென வாசிக்கத் தொடங்கி,
ஓரிரு ஆண்டுகளில் நூலகத்தில் இருந்த,
தமிழ், சமய நூல்கள் முழுவதையும் வாசித்து முடித்திருந்தேன்.
வயதுக்கு மிஞ்சிய வாசிப்பு அது.
அப்போது அதன் பெறுமதி எனக்குத் தெரியவில்லை.
எனது குடும்பத்தார், ஆசிரியர்கள் என,
வேறு யாருக்கும் கூடத் தெரியவில்லை.
பின்னாளில் என் தாயாரின் ஊரிலிருந்த,
எங்கள் குல தெய்வமான ஐயனாரின் அருள் வாய்க்க,
பேசும் ஆற்றல் வாய்த்தது.
அத்தெய்வம் எனக்குச் செய்த கருணையும், தந்த வாழ்வும்,
உண்டாக்கிய அறிவுத் தெளிவும் பற்றிச் சொல்வதானால்,
அதற்குத் தனியே ஒரு நூல் எழுத வேண்டும்.
மற்றொன்று விரித்தல் எனும் குற்றம் வருமென அஞ்சி விடுகிறேன்.
அங்ஙனமாய் நான் படித்த,
இராமாயண ஆய்வுநூல்கள் ஏற்படுத்திய ஆர்வம்,
வானொலி ஊடாகக் கேட்ட,
என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனின்,
இராமாயணச் சொற்பொழிவுகள் ஏற்படுத்திய பெருவிருப்பு,
இவையெல்லாம் தமிழிலும், கம்பனிலும்,
மென்மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தின.பரீட்சையில் பட்டபாடு

அதுவரை சிற்றூர்களில் கற்று வந்த எனக்கு,
இந்துக்கல்லூரிச் சூழல் பெரும் வியப்பைத் தந்தது.
கல்லூரியின் எல்லா அசைவுகளையும் என் ஆழ்மனதில் பதிவு செய்தேன்.
அப்பதிவுகளே இன்றைய எனது ஆளுமையின் அத்திவாரம்.
ஏனோ அங்கு கல்வியில் மட்டும் என்னால் சோபிக்க முடியவில்லை.
தட்டுத்தடுமாறி ‘ஓ.எல்’ வகுப்புவரை (பத்தாம் வகுப்பு) நகர்ந்தேன்.
‘ஓ.எல்லில்’ அந்நகர்வு தற்காலிகமாகத் தடைப்பட்டது.
முதல் தரம் நான்கு பாடங்கள் சித்தி,
இரண்டாந்தரம் ஆறு பாடங்கள் சித்தி,
‘ஏ.எல்’ படிக்க(ப்ளஸ் 2) அப்பெறுபேறுகள் போதவில்லை.
இரண்டாந்தரத்துடன் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.கூலி வேலை செய்தேன்

வீட்டில் அப்போது சற்றுப் பொருளாதார நெருக்கடி.
நான், சின்னக்கா, அண்ணன் என மூவரும் படித்துக்கொண்டிருந்தோம்.
வீட்டின் நிலைமையை உணர்ந்ததாலும் படிப்பில் மனம் பதியாததாலும்,
நான் வேலைக்குப் போகவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தேன்.
வீட்டிலும் கஷ்டம் இருந்ததால்,
என்னை வேலைக்கு அனுப்புவதாய் முடிவு செய்தார்கள்.
அப்பா நெடுஞ்சாலைத் திணைக்களத்தில் ‘ஓவசியராய்ப்’ பணியாற்றினார்.
அவர் செல்வாக்கால் அதே திணைக்களத்தின்
வட்டுக்கோட்டை ‘டிப்போவில்’,
வேலைக்குச் சேர்க்கப்பட்டேன்.
சாதாரண, றோட்டுப் போடும், கூலியாள் வேலை.
‘ஓவசியரின்’ மகன் என்றதால் வேலை செய்யத்தேவையில்லை.
ஆனால், வீதியில் போய் வேலையாட்களுடன் நிற்கவேண்டும்.
மேலதிகாரிகள் வந்தால் மண்வெட்டியைப் பிடித்து வேலை செய்யுமாப்போல்,
பாவனை செய்ய வேண்டும்.
என் இயல்பான உள நிமிர்வால்,
கூலியாளாய் நடிக்கும் போதெல்லாம் என் உயிர் போயிற்று.
மாசம் நூற்றி எண்பது ரூபா சம்பளம்.
வேலைத்தளத்தில் பலரும் என்னை அவமரியாதை செய்தனர்.
வீதியில் போய்வரும் மாணவர்களை ஏக்கமாய்ப் பார்க்கத் தொடங்கினேன்.
கல்வியின் அருமையை அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.ஐயனார் தந்த ஆற்றல்

இக்காலகட்டத்தில் எங்கள் ஊர் ஐயனார் கோயிலில்,
இளைஞர்களை ஒன்று கூட்டி வாரந்தோறும் பஜனை நடத்தினேன்.
அதன் ஓராண்டு நிறைவில் போட்டிகள் நடத்தி,
பரிசில்கள் வழங்க ஒரு விழா அமைத்தேன்.
பரிசு பெற்றவர்களை அறிமுகப்படுத்திப் பேச வேண்டியிருந்தது.
அதுதான் இயல்பான எனது முதல் மேடைப்பேச்சு.
என் ஐயனார் இயல்பான பேச்சாற்றலை எனக்குப் பிச்சையாய் இட்டார்.
அவ்விழாவில்; இயல்பாகப் பேச முடிந்ததால்,
வெள்ளிக்கிழமை தோறும் பஜனை முடிந்ததும்,
சிறிது நேரம் பேசத்தொடங்கினேன்.
அதுவரை வாசித்துப்பெற்றிருந்த அறிவு பெரிதும் கை கொடுத்தது.
இயல்பாய் அமைந்துபோன பேச்சுவன்மையும்,
இளமையில் வாசித்துப்பெற்றிருந்த அறிவும்,
எனது சொற்பொழிவுகளை மகிமைப்படுத்தின.
ஊர், உறவைக்கடந்து அயலவரும் என் ஆற்றலைப் பேசத்தொடங்கினர்.
எந்த ஆற்றலும் இல்லாமல் யாழ். இந்துக்கல்லூரியில் இருந்த போது,
கல்லூரியில் பிடிப்பு ஏற்படவில்லை.
பேச்சாற்றல் வந்ததும் பழையபடி கல்லூரியில் சேர்ந்து,
என் திறமையை நிரூபிக்க வேண்டும் எனும் அவாத் தொடங்கிற்று.
அவ் ஆசை மெல்லமெல்ல வெறியாக மாறிற்று.பரீட்சையில் சித்தி 

அதற்காகவே ‘ஓ.எல்.லைக்’ கடக்கவேண்டும் என்ற வெறியுடன் படித்தேன்.
மானிப்பாய் மரியதாஸ் மாஸ்ரரிடம் ரியூசனுக்குச் சென்றபோது,
ஜமீல் என்கின்ற இஸ்லாமிய மாணவன் என் உயிர் நண்பனானான்.
எனது முதல் நட்பு அது.
அதனால் அந்நட்பை உயிராய்ப் போற்றினேன்.
அவனும் இந்துக்கல்லூரியிலேயே படித்துக்கொண்டிருந்தான்.
‘ஏ.எல்.லில்’ எப்படியும் அவனோடு,
சேர்ந்துகொள்ள வேண்டுமெனும் விருப்பும் இணைய,
தவமாய்ப் படிக்கத்தொடங்கினேன்.
முயற்சி வீண் போகவில்லை.
அம்முறை எட்டுப் பாடங்களிலும் சித்தி பெற்றேன்.
விஞ்ஞானப் பாடங்கள் அத்தனையிலும் ‘கிரடிற்’ எடுத்தேன்.
‘ரிசல்ஸ்’ வந்ததும் முதற்காரியமாக வேலையை விட்டேன்.மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்வி

ஆனாலும் இந்துக்கல்லூரியில் சேரும் ஆசை நிறைவேறவில்லை.
கல்லூரியினுள்ளே படித்த மாணவர்களுக்கே இடம் இல்லாததால்,
வெளிச்சென்றுவிட்ட என்னை ஏற்க இந்துக்கல்லூரி மறுத்தது.
அப்போதுதான் யாழ். இந்துக்கல்லூரிக்கு சபாலிங்கம் அதிபராய் வந்திருந்தார்.
இரும்பு மனிதர். ஆளுமைச் சிகரம்.
அவரது ஆளுமை கண்டு அறிவுலகமே நடுங்கிய காலமது.
எனது ஆளுமையின் அத்திவாரத்தில் அவரும் இருக்கிறார்.
அவர் என் தந்தையின் நண்பர்.
“ஒரு தவணை வேறு எங்காவது படித்துவிட்டு வரட்டும்,
பின்னர் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் சொல்ல,
ஒரு தவணை நான் மானிப்பாய் இந்துவில் கற்க வேண்டி வந்தது.
பேராயிரவர் அங்கு அதிபராய் இருந்த நேரமது.
பின்னாளில் என்னை வளர்த்தெடுத்த,
எனது ஆசிரியர் வித்துவான் வேலன் அவர்களை,
அங்குதான் முதன்முதலில் சந்தித்தேன்.
ஒரு தவணை நிறைவுற்றது.மீண்டும் யாழ். இந்துவில்...

மீண்டும் யாழ். இந்துக்கல்லூரிப்பிரவேசம்.
என் நண்பன் ஜமீல் படித்து வந்த அதே 11 E வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.
அங்கு என் நட்பு வட்டாரம் விரிந்தது.
குமாரதாசன், வசந்தன், ஸ்கந்தராஜா, நகுலேஸ்வரன்,
சிவலோகராஜா, சௌந்தரராஜன் என நண்பர்கள் பலராயினர்.
வகுப்பை ‘கட்’ பண்ணுதல், களவாய்ப் படம் பார்த்தல்,
ஊர் சுற்றுதல், கடை கடையாய்க் கண்டவற்றையும் சாப்பிடுதல் என,
வாழ்க்கையையும் இளமையையும்,
முதன்முதலாய் இனிக்க இனிக்க அனுபவித்தேன்.
குமாரதாசனும் ஸ்கந்தராஜாவும்,
எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாய் ஆனார்கள்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


பாகம் 003ல்...

· யாழ். இந்துவில் எனது முதல் பேச்சு

· இந்துவில் முதல் இலக்கிய முயற்சி

· கூட்டணியின் அழைப்பை மறுத்தேன்

· மெல்ல மெல்லப் பிரபல்யம் வந்தது

· துணுக்காயில் பட்ட துன்பம்
· தூண்களுக்குப் பேசினேன்
· புகழ் தேடித்தந்த சேக்கிழார் விழா
· மைத்துனனுடன் மோதினேன்
· திருக்கேதீஸ்வரத் திருவிழாவில்..
· பாட்டும், பேச்சும்
· பகைத்தவர் நெகிழ்ந்தார்
· ஊரில் எனது இலக்கிய முயற்சிகள்
· ஊரில் பகை


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...