•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, June 7, 2016

அதிர்வுகள் 30 | “தெய்வி”என்கின்ற தெய்வானை !

ங்களில் பலருக்கு என்மேல் கடுங்கோபம்போல் தெரிகிறது.
ஜாதி பற்றி சென்ற முறை நான் எழுதிய கட்டுரைக்கு,
பலபேர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து தொலைபேசினர்.
பேசியவருள் ஒருவர் ‘மாக்சிஸ’ சிந்தனையாளர்.
அவர், என் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசினார்.
நீங்கள் சொன்னதுபோல, ஜாதிக் கொடுமை இருந்தது உண்மைதான்.
ஆனால், எங்களது ‘மாக்சிஸத்’ தத்துவம் யாழில் எழுச்சியடைந்ததும்,
அதனால் ஏற்பட்ட புரட்சிகளால்,
ஜாதிக் கொடுமையும் பிரிவினைகளும் நீங்கி விட்டதல்லவா?” என்று,
தம் தத்துவ வித்தகம் பேசினார் அவர்.
அவர் பேச்சு என் சிந்தனையைத் தூண்டிற்று!ரஷ்யா பலம்பெற்றிருந்த இடைக்காலத்தில்,
“கொமியூனிஸ்டுகளின்” எழுச்சியால்,
ஜாதி வேற்றுமைக் கெதிராக யாழில் சில புரட்சிகள் நடந்தது உண்மையே.
கீழ் ஜாதியினர் என்று கூறி குறித்த சில சமுதாயத்தினரை,
ஆலயத்திற்குள் விடுவதில்லை என்ற கொள்கையில் வலிமைகாட்டி நின்ற,
மாவிட்டபுரம் போன்ற கோயில்களுக்குள்,
அனைத்து ஜாதியினரையும் அழைத்துச் செல்வதற்காய்,
போராட்டங்களைச் சிலர் நடத்தினர்.
ஆனால், அந்தப் போராட்டங்களால்,
யாழில் ஜாதி வேற்றுமை ஒழிந்தது என்று நான் கூறமாட்டேன்.
இன்னும் சொல்லப்போனால்,
அப்போராட்டங்களில் நடந்த ‘பீமுட்டியடித்தல்’ போன்ற கீழ்மைச் செயல்களால்,
சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகள் வளர்ந்தனவே தவிர,
ஒழிந்ததாய்த் தெரியவில்லை.அந்தப் பழைய கதை கிடக்கட்டும்.
இன்றைய நிலைக்கு வருவோம்.
அந்த ‘மாக்ஸியவாதி’ சொன்னது போல
இன்று ஜாதி அரக்கன் செத்தொழிந்தானா?
இல்லவே இல்லை!
பலமொழிந்து பதுங்கி வாழ்கிறான் என்பதே உண்மை.
அங்ஙனம் அவன் பலமொழிந்ததற்கான காரணம்,
போராட்டக் காலத்தில்  பரவலாய் நடந்த,
இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளுமே.
‘மாக்ஸீய’வாதிகளின், போராட்டங்களால்,
மக்கள் மத்தியில் இருந்த வேறுபாட்டுணர்வு,
நிச்சயம் நீங்கவில்லை.
தெளிவுபடச் சொல்வதானால்,
ஜாதி வேறுபாடுகள் இருந்த காலத்தில்,
உயர் ஜாதியினராய்த் தம்மை அறிவித்து நின்றோர்க்கும்,
அவர்களைச் சார்ந்து நின்ற,
தாழ்ந்த ஜாதிக்காரர் என்று சொல்லப்பட்டோர்க்குமான உறவும் உரிமையும்,
இப்போராட்டங்களின் பின் சிதைந்துபோனதே உண்மை.எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குச் சென்றதன் பின்தான்,
ஜாதி வேறுபாடுகள் பற்றி அறிந்துகொண்டதாய்,
சென்ற முறை எழுதியிருந்தேன் அல்லவா?
அதேநேரத்தில், அவ்வூரில் தான்,
வேறுபட்டு நின்ற ஜாதியினர்களுக்கிடையில் விளைந்திருந்த,
அன்பையும் உறவையும்கூட என்னால் அறிய முடிந்தது.
அதிசயமான அவ்வுறவு நிலை பற்றி,
இவ்வார அதிர்வில் எழுதினால் என்ன? என்று தோன்றுகிறது.சென்ற வாரம் இவருக்கு யாரோ நல்ல ‘டோஸ்’ குடுத்து விட்டாங்கள் போல.
அதுதான், இந்த முறை அதைச் சமாளிக்கப் பார்க்கிறார்” என்று,
உங்களில் சிலர் நினைப்பது தெரிகிறது.
நானாவது மிரட்டல்களுக்கு அஞ்சுவதாவது?
ஐயமிருப்போர்,
எங்கள் கோயில் கும்பாபிஷேகத்தை குழப்ப முயன்ற,
அந்தணர்களைக் கேட்டறிவார்களாக!மாவிடிப்பதற்காக எங்கள் வீட்டுக்கு,
‘தெய்வி’ என்ற நளப்பெண் மூதாட்டி வருவாள்.
அவளை நான் சந்தித்த பொழுது,
அறுபது, எழுபது வயதுகளை அவள் தாண்டியிருந்தாள்.
எங்கள் ஊரில் “தெய்வீ! தெய்வீ!” என்றுதான் அவளை எல்லோரும் கூப்பிடுவார்கள்.
வயதில் மூத்தவர்கள் என்று மட்டுமல்லாமல்,
எங்கள் உறவைச் சார்ந்த சின்னப்பிள்ளைகளும் கூட,
அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு ஒருமையில்தான் பேசுவார்கள்.
அதை அவளும் எவ்விதத்திலும் பெரிசுபடுத்தமாட்டாள்.
‘தெய்வி’ யின் பெயர் தெய்வானை என்பது,
எனக்குப் பலகாலத்திற்குப் பின்தான் தெரியவந்தது.
‘தெய்வி’, எங்கள் வீட்டில் ஆச்சிக்கு மாவிடித்து,
பின் அம்மாவுக்கு மாவிடித்து,
அதன்பின் அக்காவுக்கும் மாவிடித்தாள்.
தலையில் கடகத்துடன், தொங்கும் காதோடு, குறுக்குக் கட்டியபடி,
முதுமையிலும் அவள் கைவீசி நடந்துவரும் கம்பீர நடை கண்டு வியப்பேன்.
பல்லில்லாத பொக்கை வாய் நிறைய எப்போதும் சிரிப்பிருக்கும்.
எண்ணெய் பூசி உச்சிப் பிடரியில் இழுத்து முடிந்த குடுமியில்,
அவளது அத்தனை நரைமயிரும் அடங்கிக் கிடக்கும்.‘தெய்வி’ வந்து மாவிடித்தால்தான்,
எங்களுக்குப் புட்டு, இடியப்பம் கிடைக்கும்.
அரிசி மா, பைக்கற்றுகளில் வராத காலமது.
இப்போது போல வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என்றில்லாமல்,
ஐந்து, ஆறு எனப் பிள்ளைகள் குடும்பங்களில் நிறைந்திருந்த காலமது.
எங்களின் உறவனைத்திற்கும் ‘தெய்வி’ தான் மாவிடிப்பாள்.
அவளை ‘புக்’ பண்ணுவதற்கு எங்கள் உறவினரிடையே போட்டி நடக்கும்.
தனக்கிருக்கும் ‘டிமான்ட்’ தெரிந்து,
‘தெய்வி’யும் ‘அருக்கு’ விட்டுத்தான் மாவிடிக்கச் சம்மதிப்பாள்.
மாரிகாலம் வரப்போகிறதென்றால், ‘தெய்வி’க்கான ‘டிமான்ட்’ கூடிவிடும்.
வயல் வேலைகள் ஆரம்பித்துவிட்டால்,
களைபிடுங்க, அரிவி வெட்டவென ‘தெய்வி’ வெகு ‘பிசியாகி’ விடுவதால்,
பெரும்பாலும் மாவிடிக்க அக்காலங்களில் அவள் வரமாட்டாள்.அந்தத் தொழில்களில் அவளுக்கான வருமானம் அதிகம்.
புல்லுப் பிடுங்க தனிச்சம்பளம்.
பின், பிடுங்கிய புற்கட்டுக்களை விற்றும் வருமானம் வரும்.
அதேபோல, அரிவி வெட்டிலும் சம்பளமும்,
பின்னர் வயற்காரரால் அன்பளிப்பாய்த் தரப்படும் நெல்லும் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், அரிவி வெட்டிய பிறகு,
வயலில் சிந்திக்கிடக்கும் நெல் மணிகளை,
உள்ளங்கையளவான ஒரு சிறு விளக்குமாறு வைத்து,
குந்தியிருந்து கூட்டிக்கூட்டி கடகம் நிறைய அள்ளிப்போய்,
அதையும் பிடைத்து அரிசியாக்கிப் பயன்படுத்துவாள் அவள்.இத்தகைய வருமானங்கள் இருப்பதால்,
மாரிகாலத்தில், மாவிடிக்க வருவதை,
‘தெய்வி’ பெரும்பாலும் தவிர்த்துவிடுவாள்.
ஏனோ தெரியவில்லை, எங்கள் வீட்டுக்குமட்டும்,
மாரி காலத்திலும் ‘தெய்வி’ வந்து மாவிடித்துத் தருவாள்.
பலகாலம் வெளியூர்களில் வாழ்ந்துவிட்டு நாங்கள் ஊருக்கு வந்த அருமையோ,
எளியவர்களுக்கு அள்ளித் தருகிற எங்களது அப்பாவின் பட்டினப் பவிசோ,
மற்ற வீடுகளில் ‘தெய்வி’க்கென்று சிரட்டை சீவி ‘பிளேன்ரீ’ தர,
எங்களின் அம்மா மட்டும் ‘கிளாசில்’,
அதே ‘பிளேன்ரீ’யைத் தருவதால் வந்த பிடிப்போ தெரியவில்லை.
எங்கள் வீட்டுக்கு மட்டும் ‘தெய்வி’ இந்தச் சலுகையைச் செய்வாள்.ஒரு நாளில், பதினைந்து கொத்து அரிசியைக்கூட,
தனியே இடித்து விடுவாள் ‘தெய்வி’.
அந்தக் காலத்தில் ஒரு கொத்து அரிசி இடிக்க ஒரு ரூபாய்தான் சம்பளம்.
காலையில் வந்தால், அவள் வீட்டுக்குப் போக மாலை ஆறு மணியாகும்.
ஐந்தாறு கொத்தானால், தானே இடித்து, அரித்து, வறுப்பாள்.
பத்துப் பதினைந்து கொத்தானால், அம்மாவோ, அக்காமாரோ அரித்து விடுவார்கள்.
லயம் பிசகாமல், கைமாறி ‘தெய்வி’ மாவிடிக்கும் அழகையும்,
களைப்புத் தெரியாமல் இருக்க,
‘ஹ_ங்காரத்துடன்’ அவள் சுவாசப் பயிற்சி செய்யும் அழகையும்,
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்.இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
பெருஞ்சாதிக்காரர் என்று சொல்லிக் கொள்கின்ற எங்கள் உறவினர்கள்,
‘தெய்வி’க்குச் செய்யும் சிறுமைக்கு ஓரளவில்லை.
பத்துக் கொத்து அரிசி ஊறவிடுவதாய்ச் சொல்லிவிட்டு,
பதினொரு கொத்தை ஊற விட்டுவிடுவார்கள்.
‘தெய்வி’யும் லேசுப்பட்டவளில்லை.
தன் அனுபவத்தால், கண்ணால் பார்த்தே அரிசியின் அளவை முடிவு செய்வாள்.
பின், உரலுக்கு அருகில் ஒரு குஞ்சுப் பெட்டியை வைத்துவிட்டு,
உலக்கை தூக்குகிறபொழுது வேண்டுமென்றே இழுத்து,
கொஞ்ச அரிசியைத் தன் பெட்டிக்குள் விழுத்திக்கொள்வாள்.
தன் பெட்டிக்குள் விழுந்த அரிசியை,
ஜாதி பார்க்கும் அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்ற துணிவு அவளுக்கு.உழைத்துக் களைத்த அவளுக்கு கொடுக்கும்,
‘பிளேன்ரீ’க்குக் கூட சீனி போட்டுக் கொடுக்க,
அப்பெருஞ்சாதிக்காரர்களுக்கு மனம் வராது.
கையில் கொஞ்சச் சீனியைக் கொடுத்து,
தொட்டுக்குடிக்க விடுவார்கள்.
அரிசி இடித்து முடியும் போது வரும் கடைசிக் கப்பி,
தெய்வானைக்கு உரித்தாகும்.
அதில், அதிக அரிசி போய்விடக்கூடாது என்பதற்காக,
கடைசிவரை அதைத் ‘தெய்வி’ யைக் கொண்டு இடிக்கச் செய்வார்கள்.
தாமே உலக்கையைப் பிடித்து அரைத்து இடிக்கப் பண்ணுவார்கள்.
இரவாகித் ‘தெய்வி’  வீட்டுக்குப்போகும் போது,
பழுதாகத் தயாராக இருக்கும் பழைய சாப்பாடுகள் இருந்தால்,
அதனைத் தானம் செய்வது போல அவளுக்குக் கொடுத்து,
தம் பெருந்தன்மையை நிரூபிக்க முயல்வார்கள்.
பெருஞ்சாதிக்காரர்களின் இந்த சிறுமைகளையெல்லாம்,
‘தெய்வி’  கண்டும் காணாமல் பெருந்தன்மையாய் அலட்சியம் செய்வாள்.நான் சொன்ன இவ்வளவற்றையும் வைத்துக்கொண்டு,
தெய்வி’க்கும் எங்கள் ஊருக்குமான உறவை,
தயவுசெய்து நிச்சயம் பண்ணி விடாதீர்கள்.
இவை அவ் உறவின் ஒரு பக்கம்தான்.
தெய்வி’க்கும் எங்கள் ஊராருக்குமான,
இன்னொரு பக்க உறவும் இருந்தது.
எங்கள் குடும்பங்களில் நடக்கும் நன்மை, தீமைகளை,
எங்கள் உறவுப் பெண்கள் ‘தெய்வி’யிடம்தான் முறைப்பாடாய்ச் சொல்வார்கள்.
உறவுகளுக்குள் நடக்கும் சண்டைகளையெல்லாம்,
தெய்வி’ ஒரு நீதிபதிபோல, நிதானித்துக் கேட்டுக்கொள்வாள்.
பின்னர், முறைப்பாடு செய்யும் பெண்களுக்கு,
தன் அனுபவத்தால் தக்கபடி ஆறுதலும், ஆலோசனைகளும் சொல்வாள்.
பின்னர், மற்றைப் பகை வீட்டிற்கு மாவிடிக்கச் செல்லும்போது,
எந்தவித அச்சமும் இல்லாமல்,
அவர்கள் செய்த பிழையைத் துணிவோடு சுட்டிக்காட்டுவாள்.
தெய்வி’யின் இந்த நிமிர்வுகண்டு,
நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.அதுமட்டுமல்லாமல்,
ஒவ்வொருவர் வீட்டிற்குச் செல்லும்போதும்,
தெய்வி’ அவ்வீட்டு உறுப்பினராய்த் தன்னைக் கருதி,
வீட்டு விடயங்களில் தானாய் மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்வாள்.
அதுபற்றி யாரும் குறை நினைக்க மாட்டார்கள்.
எங்கள் அம்மாவிடம்,
என்ன பிள்ளை, ரெண்டு குமர்களையும் வைச்சுக்கொண்டு பேசாமத் திரியிறீர்.
கிடக்கிறத பாத்துப் பாக்காமக் குடுத்து,
ஒண்டையெண்டாலும் கரையேத்தினாத்தானே,
மற்றதுக்கும் ஒரு வழி பிறக்கும்” என்று,
ஒரு குடும்ப உறுப்பினராய் ஆலோசனை சொல்வாள்.என்னைக் கண்டால் அவளுக்கு ஆகாது.
என்னவும்! மாவிடிக்கிற இடத்தில ஆம்பிளப் பிள்ளைக்கு என்ன வேலை?
போன முறையும் சோதினயில ‘பெயில்’ விட்டிட்டீர்.
இந்த முறையெண்டாலும் படிச்சுப் ‘பாஸ்’ பண்ணுற வழியப் பாரும்” என்று,
மாவிடிக்கும் கிரியையை இரசிக்க விடாமல் என்னைத் துரத்துவாள்.
எனக்குக் கோபம் கோபமாக வரும்.
இப்போதென்றால்,
எங்கட பிள்ளையைப் பற்றி கதைக்க,
இந்த வேலைக்காரிக்கு என்ன துணிவு?” என்று,
சண்டை தொடங்கி விடுவார்கள்.
ஆனால், அப்போது,
தெய்வி’யை யாரும் அப்படிக் குறைசொல்வதில்லை.
அவளையும் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதினார்கள்.
ஒற்றுமையில் வேற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை!எங்கள் குடும்பங்களில் ஒரு செத்த வீடு நடந்து விட்டால்,
அந்த செத்த வீட்டுக்கு,
தெய்வி’யும் அவளது உறவினர்களும் ஒன்றாய் வருவார்கள்.
தூரத்தில் வரும்போதே வீடு அதிரும்.
ஒப்பாரியும் மாரடிப்பும் ஓலமும் என வீட்டை இரண்டுபடுத்தி விடுவார்கள்.
அந்த நாட்களில், செத்த வீட்டுக்கு வரும் சொந்தக்காரப் பெண்கள்,
ஒருவருக்கொருவர் கழுத்தில் கைபோட்டு,
வட்டமாய் நின்று அசைந்து அழும் முறைமை இருந்தது.
தெய்வி’யும் அவள் இனத்துப் பெண்களும் வந்தால்,
அவர்கள் குழுவாய்த் தமக்குள் தோள் கோர்த்து அழுவார்கள்.
எங்களினப் பெண்கள் அவர்களுக்கு அருகே,
தனியே தமக்குள் தோள்கோர்த்து அழுவார்கள்.
இது எங்கள் வீட்டுச் செத்த வீடுகளில் மட்டும் நடப்பதில்லை.
தெய்வி’யின் உறவுகளுக்குள் செத்தவீடு நடந்தாலும்,
எங்களினப் பெண்கள் எல்லோரும் அங்கு செல்வார்கள்.
அங்கும் இதே முறைமைதான் கடைப்பிடிக்கப்படும்.
இடைவெளியோடு உறவு பேணிய விசித்திரம் கண்டு வியப்பேன்.தெய்வி’ பற்றிய எண்ணங்கள் விரிகின்றன.
விரிவஞ்சி விடவேண்டி இருக்கிறது.
எங்கள் அக்காமார் திருமணம் செய்து சென்றபோது,
தெய்வி’ உறவாய்க் கண்கலங்கி நின்ற காட்சியும்,
எங்கள் ஆசையம்மா தற்செயலாய்க் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது,
தெய்வி’ கதறிய கதறலும் இன்றும் என் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்கின்றன.
எங்கள் ஊரார்க்கும் ‘தெய்வி’க்கும் இடையில் நிகழ்ந்த சிறுமைகளை நினைவதா?
அல்லது அவர்களுக்கிடையில் இருந்த உறவை நினைவதா? தெரியவில்லை.
ஒன்றை மட்டும் நிச்சயமாய்ச் சொல்வேன்.
அப்போது ஊருக்குள்,
ஜாதி இருந்தது! பிரிவு இருந்தது! உறவும் இருந்தது!
புரட்சிகளும் புதுமைகளும் நடந்தபிறகு அங்கு,
ஜாதி இல்லை! பிரிவு இல்லை! உறவும் இல்லை!
எனக்கென்னவோ இந்தப் புதுமையை விட.
அந்தப் பழமையே பரவாயில்லை போல் தோன்றுகிறது.Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...