•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, July 21, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 09 | யார் அந்த குரு ?

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

கண்டேன்! கம்பன் அடிப்பொடியை

கம்பன் மேல் நான் கொண்ட காதல்,
கம்பன் அடிப்பொடி மீதும்
காதலை உருவாக்கியிருந்தது.
எனது முதல் இந்திய பயணத்தில்,
எப்படியும் அவரைச் சந்தித்துவிட வேண்டும் என நினைத்தேன்.
தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அவர் எப்படியும் வந்திருப்பார்
என்ற எதிர்பார்ப்பில் எல்லா இடங்களிலும் அவரைத் தேடித்திரிந்தேன்.
விழாவில் ஒரு நாள் மாலை நிகழ்ச்சி.
மேடையில் பல்துறை அறிஞர்களும் கூடியிருந்தனர்.
வெளியே விசாரித்ததில்,
கம்பன் அடிப்பொடி அவர்களும் மேடையில் இருப்பது தெரியவந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்.
மேடையின் பின்புறத்தில்,
அறிஞர்கள் மட்டும் இருக்கப் பெரிய பந்தலிட்டு இருந்தனர்.
வாசலில் பொலிஸ் காவல்,
ஏற்கனவே பொலிஸை ஏமாற்றிய அனுபவம் இருந்ததால்,
இம்முறையும் பொலிஸை ஏமாற்றி,
அப்பந்தலினுள் நுழைய முடிவு செய்தோம்.
எங்களோடு வந்த ஒருவர் பந்தலினுள் நுழைவது போல் நுழைந்தார்.
காவல் இருந்த பொலிஸ்காரர் அவரைத் துரத்திச்செல்ல,
அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நானும் குமாரதாசனும்,
திடீரெனப் பந்தலினுள் நுழைந்து,
அறிஞர்களோடு அறிஞர்களாய் உட்கார்ந்து விட்டோம்.
இளமை தந்த துணிவு அது.


மேடையிலிருக்கும் கம்பன் அடிப்பொடியை,
எப்படிச் சந்திப்பது என யோசித்துக்கொண்டிருக்கையில்,
ஒரு இளைஞன்,
மேடைக்குக் குளிர்பானங்கள் கொண்டு சென்று வருவதைக் கவனித்தோம்.
மீண்டும் குமாரதாசனின் டயரியைக் கிழித்து,
“தங்களைக் காணவென இலங்கையிலிருந்து வந்திருக்கிறோம். தரிசனம் தாருங்கள்” என எழுதி,
அந்த இளைஞனை அருகில் அழைத்து,
“மேடையில் சட்டையில்லாமல் ஒரு பெரியவர் இருப்பார்,
அவரிடம் இத்துண்டினைக் கொடு!” என கொடுத்தனுப்பினோம்.
அவனும் எங்களைப் பெரிய அறிஞர்களாய் நினைத்து,
அக்கடிதத்தை வாங்கிச் சென்றான்.
எங்கள் அதிஷ்டம்
கம்பன் அடிப்பொடியின் கைக்குத் துண்டு போய்ச் சேர்ந்தது.
அது பெரிய மேடை,
பத்துப் பன்னிரண்டு படிகள் இறங்கி வரவேண்டும்.
அக்கடிதம் கிடைத்த உடனேயே,
கம்பன் அடிப்பொடி மேடையிலிருந்து இறங்கி வர ஆரம்பித்தார்.
கடவுளைக் கண்டது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு.
சுற்றியிருந்தவர்களைக் கவனிக்காமல்,
ஓடிப் போய் மேடைப்படியிலேயே அவர் கால்களில் விழுந்தோம்.
நெகிழ்ந்து போன அவர்,
அப் படியிலேயே உட்கார்ந்து எங்களையும் உட்கார வைத்தார்.
எங்களைப் பற்றி விசாரித்தார்.
சூழ இருந்தவர்கள் பற்றி அவரோ நாங்களோ கவலைப்படவில்லை.
கம்பன் கழகம் ஒன்றை நாம் நடத்துவதாய்ச் சொன்னதும் மகிழ்ந்து போனார்.
எம்மிடம் முகவரி பெற்றுக்கொண்டு,
“அடுத்தடுத்த மாதத்தில் காரைக்குடி கம்பன் விழா வருகிறது.
கட்டாயம் நீங்கள் வரவேண்டும்!” எனத் தலை தடவி ஆசீர்வதித்தார்.
கம்பன் அடிப்பொடியுடனான எனது முதல் சந்திப்பு இது.சென்னைக்குப் பயணம்

இப்படியாய் மாநாட்டு அனுபவங்கள் சுவைபட நீண்டன.
எல்லாவற்றையும் உரைத்தால், இந்நூல் வரைவின்றி விரிந்துவிடும்.
விரிவஞ்சி இந்த அளவில் விட நினைக்கிறேன்.
மாநாட்டு நிறைவு நாளில் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி வர,
கூட்டம் கடலாய்ப் பொங்கி வழிந்தது.
கூட்ட நெரிசலுக்கஞ்சி அறையிலேயே தங்கி விட்டோம்.
மாநாட்டில் என் குருநாதரைத் தேடி அலைந்தேன்.
பின்னர், மாநாட்டு நிகழ்ச்சிகளில்
அவர் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
மாநாடு நிறைவுற்றதும் என்னுடன் வந்த மற்றவர்களைத்
திருப்தி செய்யவென,
சென்னைக்குப் புறப்பட்டோம்.மெட்றாஸ் நல்ல மெட்றாஸ்

சென்னை அனுபவம் எம்மைச் சற்று மிரள வைத்தது.
மதுரையிலிருந்து பஸ் ஏறி, சென்னை வந்து சேர்ந்தோம்.
அதுவொரு விடியற்காலை நேரம்.
எங்களுக்குச் சென்னையில் ஒருவரையும் தெரியாது.
நாங்கள் ஊருக்குப் புதியவர்கள் என்பது,
அங்கு நின்ற அனைத்து ஆட்டோக்காரர்களுக்கும் தெரிந்துவிட்டது.
மௌனமாக சூழ்நிலையை அளந்தபின் பேசலாம் என
நாங்கள் முடிவு செய்தோம்,
மாணிக்கத்தின் அத்தான் சிவசாமியை,
அப்படியிருக்கச் செய்ய எங்களால் முடியவில்லை.
அவர் எல்லாம் தெரிந்தவர்போல், தானாக முன்வந்து,
யாழ்ப்பாணத் தமிழில் பேசத் தொடங்கியதால்தான்,
ஆட்டோக்காரர்கள் அங்ஙனம் எங்களை இனங்கண்டு கொண்டனர்.
சிவசாமியைப் போலவே அவரது தமக்கையாரும்,
தன் சுத்தமான யாழ்ப்பாணப் பேச்சு நடையால்,
பல இடங்களில் வேற்றூர்க்காரர் என எங்களைக் காட்டிக்கொடுத்தார்.
அவருக்கு, பெருங்காய வாசனை மிகுந்த
இந்திய உணவு பிடிக்கவேயில்லை.
உணவுக் கடைகளுக்குப் போனால்,
சர்வரிடம் தானாக,
“பலகாரம் ஏதும் கிடைக்குமே?” என்று தொடங்கிவிடுவார்.
அவர் பலகாரம் என்று சொல்வது இடியப்பம், புட்டைத்தான்.
அது விளங்காமல் சர்வர் லட்டு, ஜிலேபி என,
சுவீற் வகைகளை வரிசைப்படுத்தத் தொடங்கிவிடுவான்.
அதைக் கேட்டு கிரி விழுந்து விழுந்து சிரிப்பான்.
மாணிக்கத்தின் அத்தை மிக நல்ல மனுஷி.
எங்களுடன் மிக அன்பாக நடந்துகொள்வார்.
தமிழின்மேல் அவருக்குப் பெரிய ஈடுபாடு இல்லை.
தமிழாராய்ச்சி மாநாட்டு மலர் வெளியிடுகின்ற அன்று,
கஷ்டப்பட்டு 10, 15வது வரிசையில் இடம்பிடித்து உட்கார்ந்து விட்டோம்.
அன்று, எம்.ஜி.ஆர். சபையில் வந்திருக்க,
நீதிபதி எம்.எம். இஸ்மாயில் தலைமையில்,
விழா மலர் வெளியிடப்பட்டது.
எம்மைச் சுற்றிப் பெருங்கூட்டம்.
முன்னரே சென்று நாம் அமர்ந்துவிட்டபடியால்,
மாணிக்கத்தின் அத்தை மிகவும் களைத்துப் போய்விட்டார்.
அதனால், விழாத் தொடங்கி நீதிபதி பேச வந்த நேரம்,
சபை மௌனித்திருந்தபோது அவர் தன்னை மறந்து,
ஊரில் விடுவதுபோல் பெரிய சத்தத்தில்,
மிக நீளமான ஒரு கொட்டாவியை விட்டார்.
சபை முழுவதும் எங்களைத் திரும்பிப் பார்த்தது.
எனக்கு வந்த சிரிப்புக்கு ஓரளவில்லை.
என்னில் ஒரு பலவீனம்.
கடுமையாகச் சிரிப்பு வந்துவிட்டால்
பிறகு என்னால் அதை அடக்க முடியாது.
அன்றைக்கு நான் சிரிப்பை அடக்கப் பட்டபாடு பெரும்பாடு.
இங்ஙனமாய், இவ்விருவரினதும் உரையாடல் திறத்தால்,
சென்னை ஆட்டோக்காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு,
ஹோட்டலுக்கு அழைத்துச்செல்ல,
தங்களது ஆட்டோவில் ஏறும்படி
எங்களைக் கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.
அந்தக் கட்டாயப்படுத்துதலில் ஒரு மிரட்டலும் இருந்தது.
வேறு வழியில்லாமல் இரண்டு ஆட்டோக்களில் ஏறினோம்.
அந்தப் பாவிகள் மிகப் பழையதாய்த் தெரிந்த ஒரு ஹோட்டலில்,
எங்களைக் கொண்டு சென்று இறக்கிவிட்டு,
அளவுக்கதிகமான பணம் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.
அது ஒரு ஹிந்திக்காரருடைய ஹோட்டல்.
அங்கு சுவர்களில், ஓணான் சைசில் பல்லிகள் ஓடிக்கொண்டிருந்தன.
‘ரொயிலெட்டுகள்’ எப்போதும் சுத்தமாகவே இராது.
மதுரையில் பெரிய தஞ்சாவூர்ப் பொம்மைகள் இரண்டு வாங்கியிருந்தோம்.
அவற்றைச் செட்டியார் பொம்மை என்பார்கள்.
அவை எப்போதும் தலையாட்டிக் கொண்டேயிருக்கும்.
அந்த ‘ஹோட்டல் ரொயிலெட்டுகளிலும்’,
தண்ணீருக்குள் எப்போதும் அழுக்கு மிதந்து கொண்டேயிருக்கும்.
ஒரு நாள், கிரி ‘ரொயிலெட்டுக்குப்’ போய்விட்டு வெளியே வந்தான்.
“எப்படி ரொயிலெட் சுத்தமாக இருக்கிறதா?” என்று கேட்டேன்.
அவன், “உள்ளே செட்டியார் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்” என்றான்.
அன்றைக்கும் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அது ‘ஒரு மாதிரியான ஹோட்டல்’ என்பது பின்னர் தெரியவந்தது.
பயந்துபோன நாங்கள்,
மாநாட்டில் சந்தித்த நக்கீரனுக்கு உடனே போன் பண்ணினோம்.
நக்கீரன் சிறிது நேரத்திற்குள் எங்களை வந்து சந்தித்தான்.
பின்னர், எங்களைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப்போய்,
விருந்தெல்லாம் வைத்தான்.
அவனும் அவனுடைய நண்பனான பட்டேல் என்கின்ற,
வடநாட்டு இளைஞனும் எங்கள்மேல் அன்பு பாராட்டி,
சென்னையைச் சுற்றிக் காட்டி,
பிறகு திருச்சிக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்.யார் அந்த குரு ?

பலதரம் என் குருவைப் பற்றி,
விபரம் ஏதும் இன்றி பொதுவாய்ச் சொல்லி வந்துவிட்டேன்.
யார் அந்த குரு என்றும்,
அவருக்கும் எனக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது என்றும்,
சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதைச் சொல்லிவிட்டு,
விட்ட இடத்திலிருந்து கட்டுரையைத் தொடரப்போகிறேன்.ஒலி வடிவாய்க் குருதரிசனம்

அப்போது தொலைக்காட்சி வராதநேரம்,
வானொலிதான் அனைவரதும் பொழுதுபோக்குக் கருவியாய் இருந்தது.
அன்று ஒரு செவ்வாய்க்கிழமை,
திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பை அடிக்கடி கேட்பேன்.
‘அங்கும் இங்கும்’ என அதில் ஒரு நிகழ்ச்சி எப்போதும் வரும்.
தமிழகத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றினை,
தொகுத்து அரை மணித்தியாலம் தருவார்கள்.
தற்செயலாய் அன்று வானொலியைப் போட
அந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.
அற்புதமான ஒரு கரகரத்த குரல்.
அக்குரலின் ஈர்ப்பில் மயங்கினேன் நான்.
அது கண்ணனின் கீதோபதேசம் கேட்ட
அர்ச்சுனனின் மயக்கம்.
வடிவமின்றி வந்த அந்த ஓசையே,
குருவாய் என்னை ஈர்க்க கிறுகிறுத்துப்போனேன்.
வடிவமே தெரியாமல், இவரே என் குருவென,
அவ்வோசைக்குரியவரை என் மனம் பற்றிக்கொண்டது.
என்ன அதிசயம்?
என் மனத்துள் எந்த இராமாயணவித்து விழுந்துகிடந்ததோ,
அதனையே அக்குரல் அன்று சொல்லத் தொடங்கியது.
இராமாயணப்பாடல் ஒன்றின் நுணுக்கத்தை,
நினைத்தும் பார்க்கமுடியாத
புதிய கற்பனையோடு,
அக்குரல் சொல்ல மயங்கிப்போனேன்.
உரையின் முடிவில், அவ்வுரை ஆற்றியவர்,
பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் என்று வானொலி அறிவிக்க,
நான் அப்பெயரையே மனதால் பற்றிக் குருதரிசனம் பெற்றேன்.வானொலி வகுப்பறை

அது 1970 களின் ஆரம்பகாலம்.
அந்நிகழ்ச்சியின் பின் செவ்வாய் இரவு எட்டுமணி என்றால்,
அது எனது தவநேரமாயிற்று.
வானொலியை அருகில் வைத்து உட்காருவேன்.
“அங்கும் இங்கும்” எனும் அந்நிகழ்ச்சி தொடங்கியதும்,
வானொலி மறைந்து என் கண்களில் ஓர் இலக்கியமேடை மலரும்.
அம்மேடையின் நடுவில் நான் குருவாய் வரித்துக்கொண்ட,
வடிவந்தெரியாத பேராசிரியர் இராதாகிருஷ்ணன்,
வெள்ளமாய்த் தமிழ் பொழிவார்.
அவர் பேச்சின் ஒவ்வொரு விடயத்தையும்,
ஒவ்வொரு சொல்லையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் கூட,
நான் என்உயிர்வரை பதித்துக்கொள்வேன்.
அன்று அவர் பேசும் பாடல்,
அன்றே எனக்கு மனனமாகிவிடும்.
பாடல் மட்டுமா? அவர் சொல்லும் விதம்,
சொல்லும் சொல் அத்தனையும் கூட.
நிகழ்ச்சி தொடங்கியதும்,
பேராசிரியரின் பெயரை வானொலி அறிவிக்காதா?
அவரின் உரை வராதா? என நான் படும்பதற்றம்,
கருசுமந்த தாயின் பதற்றம்.
அவர் பெயர் அறிவிக்கப்பட்டு உரை ஒலிபரப்பப்படும்போது,
நான் படும்ஆனந்தம்,
இறைதரிசனம் பெற்ற அடியவரின் ஆனந்தம்.
இவை அத்தனையும் சத்தியங்கள்.
இன்றைய தலைமுறைக்கு,
இவையெல்லாம் கற்பனைக் கதையாய்த் தெரியும்.
துரோணரை நினைந்து வில்வித்தை கற்ற,
ஏகலைவனது கதையை நான் படித்திருக்கிறேன்.
குருவின் நினைவே வித்தை தருமா?
படிக்கும்போது வியந்திருக்கிறேன்.
என் வாழ்விலேயே அது வித்தை தந்தது.
வாராவாரம் ஓசைவடிவாய் குரு உட்புகுந்தார்.
அவரின் வார்த்தை கேட்காத வாரங்களில்,
தலைவனின் முகம்காணாத் தலைவியாய் வாடினேன்.
குருவின் வார்த்தையோடு இராமாயணமும் என்னுள் புகுந்தது.
நானும் ஓர் பேச்சாளனாய் ஆவது தெரியாமலே,
வளர்ந்துகொண்டிருந்தேன்.யாரோ அவர் யாரோ ?

குருவின் குரல்கேட்டே மயங்கிய எனக்கு,
அவர் பற்றிய விபரங்கள் அறியவும்,
அவரது வடிவைக்காணவும் ஆசை வந்தது.
யாரிடம் கேட்பது? தெரியவில்லை.
யாழில் எனக்குத் தெரிந்த ஓரிரு தமிழறிஞரிடம் கேட்டுப்பார்த்தேன்.
அவர்களுக்கு அப்பெயர் அறிமுகமாயிருக்கவில்லை.
அக்காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்த,
பேச்சாளர்களிடம் விசாரித்தேன்.
அவரைத் தெரிந்தவர்கள் கூட விபரம் சொல்லவில்லை.
காரணம்,
அவர் வந்தால் தங்கள் வித்தை செல்லாதென்னும் பயம்.
அவரை அறியவேண்டும் என என்னுள் தாகம்.
அத்தாகம் என்னுள் தவமாய் வளர்ந்தது.
ஒருநாள்,
நூலகத்தில் நான் எடுத்த கம்பகாவியநூல் ஒன்றின் முகவுரையில்,
ஓர் பேரறிஞர் அவர் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
அப்பேரறிஞர்,
இராமாயணத்துள் இன்று ஊறித்திளைத்த அறிஞர் இருவரெனவும்,
அவருள் மேடையிலும் ஆனந்தமழை பொழிபவர்,
திருச்சி நஷனல் கல்லூரி பேராசிரியர் இராதாகிருஷ்ணன் எனவும்,
குறிப்பிட்டிருந்த செய்தி என் கண்ணிற்பட்டது.
மகிழ்ந்துபோனேன்.
மகிழ்ச்சிக்குக் காரணம் ஓசையாய் மட்டும் நானறிந்திருந்த,
குருவின் ஊரும், தொழில்செய்த இடமும் தெரிய வந்ததே.
அன்று நான் பட்ட மகிழ்ச்சியை,
இன்றைய இளைஞர்களுக்கு விளக்கம் செய்யமுடியுமா?
வீண் முயற்சி,  வேண்டாம். விட்டுவிடுவோம்.ஆனந்தம் தந்த விகடன்

அப்போதும் அவர் வடிவந்தெரியாநிலை.
எனது தேடல்த்தவம் தொடர்ந்தது.
அத்தவத்தின் பயன் விரைவில் விளைந்தது.
ஆனந்தவிகடன் சஞ்சிகையில்,
சென்னைக் கம்பன்விழாப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியாகி இருந்தது.
அக்கட்டுரையில் என் குருநாதர் பெயர் குறிப்பிடப்பட்டு,
‘குடுமியோடு மேடையேறிய அப்பேராசிரியரின் வடிவங்கண்டு சலித்தவர்கள்,
அவர் பேச்சைக்கேட்டு மயங்கிப்போனார்கள்” - என்று எழுதப்பட்டிருந்தது.
எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.
குடுமி வைத்தவர் என்குரு என்னும் செய்தி தெரிய,
முதன்முதலாய் வடிவரூபத்தில் அக்குடுமியே,
குருவடிவாய் என் மனதில் பதிந்தது.
“அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின் கண்ணே,
அவர் நினைந்த வடிவொடு விரைவிற் சேருவன்” என,
பரிமேலழகர் எழுதியது எனது அனுபவமாகியது.
குருவின் எந்தவடிவை நான் முதலில் தெரிந்துகொண்டேனோ?
அந்த வடிவே என் வாழ்வில் அனைத்து அருளையும் செய்தது.
மற்றவர்கள் நையாண்டி செய்யச்செய்ய அது பற்றிக் கவலைப்படாது,
பின்னாளில் அக்குருவை நினைந்து,
நானும் குடுமி வைத்துக்கொண்டதுவும்,
அக்குடுமியே என்னைப் பிழைகளிலிருந்து மீட்டெடுத்ததுவும்,
அதுவே பின்னாளில் என் தனித்த அடையாளமாய் ஆகிப்போனதுவும்,
நான் பேச்சாளனாய்ப் பிரபலமான பிறகு,
தமிழகத்தில் அக்குடுமியே பேராசிரியரின் மாணவனாய்,
என்னை விளக்கம் செய்ததுவும்,
என் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியங்கள்.குருநாதரின் சந்திப்பு

இம்மாநாட்டுப் பயணத்தில்தான்,
நான் தெய்வமாய்ப் போற்றிய,
எனது குருநாதர் திருச்சிப் பேராசிரியர்,
இரா. இராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன்.
அச்சந்திப்பும் சுவாரஸ்யமானது.
சென்னையிலிருந்து நாங்கள் திருச்சி வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு,
நாங்கள் ரயிலில் இராமேஸ்வரம் பயணமாக வேண்டும்.
அதற்குள் குருநாதரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென,
பைத்தியமாகத் திரிந்தேன்.
என்னுடன் வந்த நண்பர்கள்,
சினிமா பார்க்க வேண்டுமென்று பிடிவாதமாய் இருந்தார்கள்.
பலரிடம் கேட்டும் குருநாதர் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மிகுந்த மனச்சோர்வோடு, பயணம் புறப்பட வேண்டிய அன்று மதியம்,
திருவானைக்கா கோயிலுக்கு எல்லோருமாய்ச் சென்றோம்.
எல்லோரும் கோயிலின் அழகை இரசித்தார்கள்.
நான் சிவனிடம் என் குருநாதரைக் காட்டும்படி இரந்து வேண்டினேன்.
கோயிலால் வெளியே வந்து வீதியில் நடந்தபோது,
அந்த வீதியின் ஓரத்திலிருந்த ஒரு சிறிய பாடசாலை வாசலில்,
“இன்று இங்கு பேராசிரியர் இராதாகிருஷ்ணன் பேசுகிறார்” என,
ஒரு கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
நான் பட்ட ஆனந்தத்திற்கு ஓரளவேயில்லை.
கூட வந்த நண்பர்கள் அன்று மாலை சினிமா பார்த்துவிட்டு,
இரயில் ஏறும் திட்டத்துடன் இருந்தார்கள்.
கெஞ்சிக் கூத்தாடி அவர்களைக் கூட்டத்திற்கு
வரச் சம்மதிக்க வைத்தேன்.
மாலை எல்லோருமாக அந்தக் கூட்டத்திற்குச் சென்றோம்.குரு தரிசனம்

நாங்கள் போகும்போது கூட்டம் தொடங்கிவிட்டது.
எனது குருவின் குடுமி அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு,
அவரை எனது கண்கள் தேடின.
அங்கும் சோதனை தொடர்ந்தது.
மேடையில் இருவர் குடுமியுடன் இருந்தனர்.
குடுமி வைத்திருந்த ஒருவர் அலங்காரபூஷிதராய் அமர்ந்திருந்தார்.
அவர்தான் எனது குருவென்று நினைந்து,
வைத்தகண் வாங்காமல் அவரையே பார்த்திருந்த எனக்கு,
பெயர் அழைக்கப்பட்டு அவர் பேச எழுந்தபோதுதான்,
அவர் எனது குருவில்லை எனும் உண்மை தெரிந்தது.
உண்மை தெரியவந்ததும்,
அருகிலிருந்த மற்றைக் குடுமித் தேவரை,
பத்தாண்டுப் பசியோடு நான் பார்க்கிறேன்.
கண்ணப்பனின் காதல் எனது கண்களில்.
நாலுமுழ வேட்டி.
கால்வாசிக் கை மடிக்கப்பட்ட நிலையில் மண்ணிறத்தில் ‘நஷனல்.’
தோளில் சாதாரண துண்டு.
கண்களில் அறிவொளி.
முதன்முதலாய், குருதரிசனம் நிகழ,
நான் என்னை மறந்தேன், என் நாமங்கெட்டேன்,
தலைப்பட்டேன் அக்குருவின் தாளே!


குருநாதர் எழுதிய கடிதம்  


பேச்சா அது !

கூட்டத்தில், கடைசியாய் எனது குரு பேசினார்.
அவர் காலத்தில் தமிழகத்தில் அதுதான் வழக்கம்.
இலக்கியக் கூட்டங்களின் இறுதிப் பேச்சாளர் அவரே!
அவர் பேசிய பின்பு வேறு பேச்சும் செல்லுமா?
உண்மை உணர்ந்திருந்தனர் கூட்ட அமைப்பாளர்கள்.
அன்று திருவாசகத் தலைப்பு.
வெள்ளமாய்க் கொட்டிய அத்தமிழ் மழையில்,
நான் நனைந்ததல்ல ஆச்சரியம்.
சினிமாவும் நடிகைகளும் மனம் நிரம்ப வந்த,
எனது நண்பர்கள் கூட,
தம்மை மறந்தார்கள்.
அவர் பேசி முடிய, அவரைச் சூழ்ந்த கூட்டத்தை விலத்தி,
நானும் நண்பர்களும் அவரை அணுகிப் பாதம் பணிந்தோம்.
நாம் ‘ஓட்டோகிராஃபில்’ கையெழுத்துக்கேட்க,
கூடிநின்ற கூட்டத்தின் மத்தியில்,
என்னை அவர் கண்கள் சந்திக்கின்றன.
பத்தாண்டுத் தவத்தின் பயன்பெற்ற பரவசத்தில் நான்.
எத்தனையோ பேச நினைத்தவன் பேச்சற்று நின்றேன்.
அம்மௌனமே எனக்கு மகிழ்ச்சி தந்தது.
எனது ஏக்கமிகு எண்ண அலைகள்,
அவரையும் தொட்டனபோலும்.
‘ஓட்டோகிராஃபில்’ வாழ்த்து எழுதாமல்,
முகவரி எழுதி, “நாளை வீடு வாருங்கள்” என்று விடை பெற்றார்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


பாகம் 010ல்...

· இலங்கை திரும்பினோம் · எம்.ஜி.ஆரும் கூட்டணியினரும் · எம்.ஜி.ஆரால் பிரபலமானோம் · ஆசிரியர்களின் அவசரக்கூட்டம் · பத்திரிகைகள் தந்த பிரபலம் · எஸ்.ரி. சிவநாயகத்தின் தொடர்பு · குருநாதரின் பதிற்கடிதம்

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...