•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, July 30, 2016

அதிர்வுகள் 32 | "வாராதே! வரவல்லாய்!" | மீண்டும் !

(விடுதலைப் புலிகள் அமைப்பும், ஐக்கியதேசியக் கட்சி அரசும் இடைக்காலச் சமாதான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு, சமாதானப் பேச்சுவார்த்தையை அப்போது தொடங்கின. அவ்விடைக்காலத்தில் ஈழத்தில் இருந்து வந்த கடும்போர் ஓய்ந்தது. அவ் ஓய்வினைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர் பலர் தாய்நாடு நோக்கிப் பெருமளவில் வரத் தொடங்கினர்.  அவர்கள் வருகையால் ஈழத்தின் சூழ்நிலையில் ஏற்பட்ட அப்போதைய சமநிலைக் குழப்பத்தை மனதிற் கொண்டு, 2003 செப்டெம்பர், மல்லிகை சஞ்சிகையில், கம்பவாரிதி எழுதிய கட்டுரை இது.  இக்கட்டுரை அப்போதே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. போரின் பின்னான இன்றைய சமாதானச் சூழ்நிலையிலும் இக்கட்டுரை முழுமையாய்ப் பொருந்துமாற்போல் தெரிவதால், ‘அதிர்வுகள்’ தொடரில் “உகரம்” இக்கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறது.)
✈✈✈✈✈✈✈✈✈

ங்களைத்தான்!
ஒரு நிமிடம் பொறுங்கள்!
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டாம்!
உங்களுக்காக இதை நான் எழுதவில்லை.
என்ன முறைத்துப் பார்க்கிறீர்கள்?
புத்தகம் உங்களுடையதானாலும், கட்டுரை என்னதல்லவா?
யார் படிக்க வேண்டும் என்று நான்தானே சொல்ல வேண்டும்?
“இந்த ‘லூசன்’ எப்பவும் இப்படித்தான்.”
உங்கள் முணுமுணுப்புக் காதில் விழுகிறது.
நீங்கள் என்னதான் திட்டினாலும்,
இந்தக் கட்டுரை உங்களுக்கானதல்ல என்பதுதான் உண்மை.
பின் யாருக்கு இக்கட்டுரையெனக் கேட்கிறீர்களா?
ஈழ மண்ணில் பிறந்து,
இன்று, உலகெல்லாம் பரவியிருக்கும்,
என் அன்பான இரத்தத்தின் இரத்தங்களுக்காகவே இக்கட்டுரை.சிலநாள், பலபிணி, சிற்றறிவு உடைய மனிதர்கள்,
தேர்ந்தெடுத்துத் தேவையானதைத்தான்  படிக்க வேண்டும் என்று,
அறிவுக்காகவே கல்வி என நினைத்த,
சில பழைய பைத்தியக்காரப் புலவர்கள், சொல்லியிருக்கிறார்களாம்.
அதனால்தான்,
உங்களுக்காக எழுதப்படாத இக்கட்டுரையை,
உங்களைப் படிக்க வேண்டாம் என்று சொன்னேன்.
சரி, சரி, நீங்கள் இனி அடுத்த கட்டுரைக்குப் போகலாம்!
என்ன, இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
இதற்கு மேல் உங்கள் இஷ்டம்.
காலத்தை வீணாக்குவது என்று
நீங்கள் முடிவு செய்து விட்டால்,
அதைத் தடுக்க நான் யார்?
“கெடுகுடி சொற் கேளாது” என்று சும்மாவா சொன்னார்கள்.
படித்துத் தொலையுங்கள்!
உங்களோடு மினக்கெட எனக்கு நேரமில்லை.
நான் சொல்ல வந்ததை,
சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
சொல்கிறேன்.


நம் செம்பாட்டு மண்ணில் பிறந்து,
இன்று செகமெல்லாம் வேரூன்றி நிற்கும்,
என் உடன்பிறப்புக்காள்!
உங்களுக்காகத்தான் இக்கட்டுரை வரைகிறேன்.
உங்களில் ஓரிருவராவது இக்கட்டுரையைப் படிப்பீர்கள் தானே?
ஏன் கேட்கிறேன் என்றால்,
‘டொச்’ என்றும், ‘(F)பிரெஞ்’ என்றும், ‘இங்கிலிஷ்’ என்றும்,
இன்று பல மொழிகளை வெளுத்து வாங்கும் உங்களுக்கு,
தமிழ் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா? என,
எனக்கு ஒரு சிறு ஐயம்!


ஏன் இந்த ஐயம் என்கிறீர்களா?
எல்லாம் உங்களால்தான் ஐயா!
அண்மையில், ‘சுவிஸி’லிருந்து வந்திருந்த,
என் அக்காவின் பேரன்,
தன் மாமனைப் பார்த்துக் கேட்டானே ஒரு கேள்வி!
ஊரே சிரித்து விட்டது போங்கள்.
தன் அன்புப் பேரனுக்கு என் அக்கா,
ஆசையாசையாய் ஆனை வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க,
அவன் அதைத் தின்னும் அவதியில்,
குளிக்கத் தயாராய்த் துண்டோடு கிணற்றடியில் நின்றிருந்த,
தன் மாமனிடம் கொண்டோடிப்போய்,
“ பிளீஸ் அங்கிள்,
வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித் தாங்கோ” என்று கேட்க,
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமன்,
அக்கேள்வியால் பதறியடித்து,
இடுப்பிலிருந்த துண்டை இறுகப் பொத்திய காட்சி கண்டு,
எங்கள் ஊரே சிரித்தது.


வாழைப்பழத்தை உரித்துத் தாருங்கள் என்பதற்குப் பதிலாக,
கழட்டித் தாருங்கள் என்கிறது,
ஈழத் தமிழினத்தின் ‘(F)பொறின்’ வாரிசு.
பாவம்! ‘ரமில்ராய்’,
உங்கள் பிள்ளைகளிடம்,
அவள் படும் பாட்டைப் பார்த்ததால்த் தான்,
மேற்சொன்ன ஐயம் வந்தது.
தயவு செய்து கோபிக்காதீர்கள்.
‘எங்களுக்கா தமிழ் தெரியாது?
இதோ! உன் கட்டுரையை,
முழுக்கப் படித்துக் காட்டுகிறோம்’ என்கிறீர்களா?
நன்றி, நன்றி, நன்றி!
தொடருங்கள்.


எல்லாத் தீமைகளுள்ளும் ஒரு நன்மையுண்டு என்று,
அறிஞர்கள் சும்மாவா சொன்னார்கள்?
உரிமைக்காகத் தொடங்கப்பட்ட போரால்,
உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடைமையிழப்பு என,
பலபேர் அனுபவித்த தீமைகளுக்குள்,
உங்களுக்கான நன்மையும் ஒளிந்திருந்தது.
இது மறுக்க முடியாத உண்மை.
ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்காளாகிறார்கள் என,
உலகம் முழுவதும் பரவிய செய்திகளால்,
வளம் மிக்க நாடுகள் பல, வாசல் திறக்க,
இன்னலுற்றவர்களாய் இனங்காட்டி,
மின்னல் போல் உள் நுழைந்தீர்கள்.
பக்கத்து வீட்டு முருங்கைக்காய் திருட முனைந்து,
விழுந்து முறிந்த முழங்கையை,
இராணுவத் தாக்குதலில் ஏற்பட்ட
விழுப்புண்ணாய் நீங்கள் விபரிக்க,
தூதராலயங்கள் பல துடிதுடித்துப் போயின.
தேசத்தைக் காக்க முன்வந்த பல உண்மைப் போராளிகளின்,
ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட உறவெல்லாம் காட்டி,
உங்களிற் பலர் ஓடித் தப்பினீர்கள்.
வெள்ளைக்காரனின் பெருந்தன்மையில்,
உங்கள் கள்ளங்கள் விலை போயின.
எது, எப்படியோ?
செல்வந்த நாடுகளின் உள் வந்த காரணத்தால்,
இன்று நீங்கள்தான் ஐயா பெரிய மனுசர்கள்.


“பணம் பத்தும் செய்யும்” எனும்,
பேருண்மையைத் தெரிந்து கொண்டு,
பலம் பெற்றுவிட்ட உங்களை,
பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
“எங்களைக் கிண்டலடிப்பதற்குத்தான் இக்கட்டுரையா?”
நீங்கள் கோபப்படத் தொடங்குவது தெரிகிறது.
கொஞ்சம் பொறுங்கள்!
சமூகத்தின் பெரிய மனிதர்களான உங்களை,
நான் பகைத்துக்கொள்வேனா?
ஈழத் தமிழினத்திற்கு எழுச்சி ஏற்படுத்திய இயக்கங்களே,
உங்களுக்கு மரியாதை செய்யும் இக்காலத்தில்,
உங்களைப் பகைத்துக் கொள்ள,
நான் பைத்தியக்காரனா, என்ன?
உங்களுக்கு நன்மை தருகிற ஒரு புத்திமதியைச் சொல்லத்தான்,
இக்கட்டுரை வரைகிறேன்.
தயை கூர்ந்து கோபப்படாமல் பொறுமையாய் மேலே படியுங்கள்.


‘டொக்டராக’ வேணும், 
‘எஞ்ஜினியராக’ வேணும், 
‘எக்கவுண்டனாக’ வேணும் என்று,
யாழ் இளைஞர்கள் கனவு கண்டதெல்லாம் பழைய கதை.
‘வெளிநாடு போக வேணும்’,
இஃதொன்றே இன்றைய எல்லா இளைஞர்களினதும் ஒரே கனவு.


கனவை உருவாக்கியவர்கள் நீங்கள்.
யாழ். மண்ணின் அடிப்படையையே ஆட்டங் காண வைத்த,
உங்கள் ஆற்றல் கண்டு அதிசயிக்கிறேன்.
வெளிநாடு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே,
கலர் கலரான கார்களுக்கு முன்னின்று,
‘கோர்ட்’டோடும், ‘சூட்’டோடும், ‘ரை’யோடும்,
நீங்கள் அனுப்பி வைத்த புகைப்படங்களைக் கண்டு,
யாழ்ப்பாணமே கதிகலங்கிப் போய் விட்டது.
“அந்தக் கார் உங்கள் சொந்தக் கார் இல்லையாம்.”
பொறாமைக்காரர் சிலர் உங்கள் புகழைக் கெடுக்க முனைந்தார்கள்.
நாங்களா நம்புவோம்?
உங்கள் புகைப்படங்களைப் பார்த்த பிரமிப்பிலிருந்து,
நாங்கள் இன்னும் விடுபடவே இல்லை.
‘பிளேன்ரீ’க்கும் வழியில்லாமல்,
காய்ந்து திரிந்த உங்கள் தோற்றத்தில்,
‘கோர்ட்’டாலும், ‘சூட்’டாலும், ‘ரை’யாலும்
ராஜ களையே வந்து விட்டது போங்கள்!


உங்கள் வெளிநாட்டு ‘விலாசத்’தால்,
இங்கு எல்லோரதும் மனநிலை மாறிவிட்டமை மற்றொரு கூத்து.
இங்கிருந்தபோது,
தெரியாமல் சினேகிதர்களோடு நீங்கள் ‘பீடி’ குடித்ததை,
பக்கத்து வீட்டு ‘அங்கிள்’ வந்து சொல்ல,
ஆவேசம் வந்து, உங்களை அடிஅடியென்று அடித்து,
இல்லாத குல மானம் போய்விட்டதாய் ஏங்கிய,
உங்கள் தகப்பனாரும், தாயாரும்,
லண்டனில், நீங்கள் ‘(B)பாரில்’ இருந்து எடுத்தனுப்பிய புகைப்படத்தில்,
கையில் வைத்திருப்பது ‘விஸ்கியா’? ‘பிரண்டியா’? என,
பக்கத்து வீட்டாரைக் கூட்டி,
பட்டிமண்டபம் நடத்துகிற அளவில் முன்னேறி இருக்கிறார்கள் என்றால்,
பார்த்துக் கொள்ளுங்களேன்.


‘இவனுக்குப் பொம்பிள கொடுக்கிறத விட,
என்ட மேள பாழுங்கிணத்தில தள்ளுவன்’ என்ற உங்களின் மாமா,
‘மச்சானுக்கு “பேர்த்டே கார்ட்” போட்டனியே?’ என்று,
இன்று மகளை அக்கறையாய் விசாரிக்கிறார்.
இங்கிருக்கும்போது,
சொறிநாயை விடக் கேவலமாய் உங்களைப் பார்த்த,
உங்களின் மச்சாள்,
உங்களிட்ட இருந்து ஒரு கிழமை “கோல்” வரவில்லை என்றதற்காக,
ஏழு கிழமையா அந்தோனியார் கோயிலுக்குப் போறாவாம்.
தெரியாமல், முழங்காலுக்கு மேல ஒருநாள் சட்டை ஏறியதற்காக,
தன்ர மகளுக்குக் காலில சூடு போட்ட செல்லம்மா மாமி,
இப்ப தன்ர மகள், வெள்ளக்காரனோட நீச்சல் உடையில குளிக்கிற படத்தை,
ஊரெல்லாம் கொண்டு திரிஞ்சு பெருமையாய்க் காட்டுது.
ஊரில குறுக்குக் கட்டோட,
இலுப்பங்கொட்டை பொறுக்கின எங்கட குஞ்சாச்சி,
மகன் கனடாவில இருந்து காசனுப்ப,
இப்ப கொழும்பில,
“மக்ஸியும்”, “ஹை ஹீல்ஸ்” சும் போட்டுக் கொண்டு,
வெள்ளவத்தை “மாக்கற்”றுக்குள்ள,
“றுப்பியல் பஹாய்” என்று,
சிங்கள வியாபாரி சொன்ன ஈரப்பிலாக்காயை,
‘நோ நோ, ஐ கிவ் ஒன்லி (F)பிப்ரீன் றுப்பீஸ்’ எனக் கூறி,
இல்லாத தன்ர ஆங்கில ஞானத்தை அவனுக்குக் காட்ட,
அநியாயமாய்ப் பத்து ரூபாவை அதிகம் குடுத்துட்டு வருகுது.
சும்மா சொல்லக் கூடாதையா,
அங்க இருந்து நீங்கள் ஆட்டின ஆட்டத்தில,
இங்க எங்கட ஆணி வேரே ஆடிப்போனது,
உண்மையிலும்  உண்மை!


இதுகளப் பாத்திட்டும்,
“எஞ்சினியருக்கும்”, “டொக்ரருக்கும்” படிக்க,
எங்கட பெடியள் என்ன விசரங்களே?
யாழ்ப்பாணப் பெடியள் அறிவாளிகளாக்கும்!
நீங்கள்தான் அவர்களின் இன்றைய இலட்சியங்கள்.
உங்களைக் குறை சொன்னதாய்க் கோபித்தீர்களே!
பார்த்தீர்களா?
உங்கள் பெருமையை எவ்வளவு அழகாய் என் கட்டுரை
எடுத்துரைக்கிறது என்று.
இனியேனும் ஆறுதலாய்த் தொடர்ந்து படியுங்கள்.


சும்மா சொல்லக் கூடாது.
ஊர், பேர் தெரியாத தேசங்களுக்குப் போய்,
பத்துப் பதினைந்து ஆண்டுகளில்,
நீங்கள் செய்திருக்கும் சாதனைகளை,
பாராட்டாமல் இருக்க முடியாதுதான்.
என் முன்னைத் தவப் பயனால்,
உங்களை எல்லாம் அங்கு வந்து நேரில் வந்து
பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
என் அனுபவங்களை எப்படிச் சொல்ல?
லண்டனில் மட்டும் இன்றைக்குப் பதினான்கு கோயில்களாம்.
கோயில்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதாம்.
அங்கு வந்து, இந்தச் செய்தி கேள்விப்பட்டதும்,
ஆன்மீகவாதியான நான் ஆனந்தப்பட்டுப் போனேன்.


பிறகுதான் தெரிந்தது உண்மை.
கோயில்களுக்கென்று,
அந்நாட்டு அரசாங்கம் காசு ஒதுக்குகின்றதாம்.
அரசாங்கமே காசு ஒதுக்கும்போது,
நாங்கள் ஒதுக்கக் கூடாதா? என்று,
அறங்காவலர்களுக்குள்ளே அடிதடி சண்டையாம்.
செல்வாக்கால் ஒருவர் வெல்ல,
பிரிந்தவர் மற்றொரு கோயில் தொடங்குகிறாராம்.
பதினான்கு கோயில்கள் என்றால், பதின்மூன்று சண்டை என்று அர்த்தமாம்.
நண்பன் ஒருவன் சொன்னான்.
உண்மை, பொய் எனக்குத் தெரியாது.
ஆனால், கவலையாய் இருந்தது.
கனடா போன போது,
இங்கு பதினாறு கோயில்கள் என்று ஒருவர் சொல்லத் தொடங்க,
காதுகளை மூடிக் கொண்டேன்.


சரி, அதை விடுங்கள்.
கோயில்களுக்குள் கடவுள்கள் படும்பாடு இருக்கிறதே!,
அது பெரிய பாடு.
எற்புத் துளைதொறும் ஏறும் லண்டன் குளிரில்,
பச்சைத் தண்ணிரீல் பரமசிவனுக்கு அன்றாடம் அபிஷேகம் நடக்கிறது.
தங்கள் குளிர் தீர “கோர்ட்” டோடும் “சூட்” டோடும் நின்று கொண்டு,
பக்தர்கள் அபிஷேகம் செய்விக்கிறார்கள்.
வெறும் உடலை,
பனிக்குளிரும், பச்சைத்தண்ணீர்க் குளிரும் சேர்ந்து தாக்க,
நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் பரமசிவன்.
வேதம் வழங்காத நாடுகளுக்கு வரமாட்டேன் என்றிருந்த அவரையும்,
கட்டாயமாய் அங்கு கொண்டு போய் நீங்கள் படுத்தும் பாடு...
பாவம் சிவனார்!
அவரைப் பார்க்க, அழுகையழுகையாய் வந்தது எனக்கு.


கோயில் நிலையே இதுவென்றால்,
வீட்டு நிலையைக் கேட்கவா வேண்டும்?
வெள்ளைக்காரன் விரித்த கடன் வலையுள் விழுந்து,
வீடு, கார் என எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கி,
மாதா மாதம் அக்கடன் கட்டுவதற்காக,
மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் மனிதர்கள்.
கணவன் “மோனிங் டியூட்டி” போய் வர,
மனைவி “நைட் டியூட்டி” போகிறாள்.
இந்த “டியூட்டி”களுக்கிடையில்,
“அக்ஸிடன்” டாய் பிறந்த குழந்தை,
அநாதையாய் ஆகாயம் பார்த்தபடி இருக்கிறது.
அக்கிரமம் ஐயா! அக்கிரமம்!
ஒரு மாதக் கடன் கட்டத் தவறினாலும்,
உரிமைக்காரர்களால் அபகரிக்கப்படக் கூடிய,
இருபதாண்டு கடனிலுள்ள வீட்டையும், காரையும்,
சொந்த வீடு, சொந்தக் கார் எனக் கூறி,
பெருமைப்படுகிறது ஒரு கூட்டம்.


கூலி வேலை செய்யும் இடத்தில்,
வெள்ளைக்கார எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்க,
தலை மயிரை மட்டுமன்றி,
கால் மயிரையும் மழித்துக் கொள்கின்றனர் நம் காரிகையர்.
அடுத்த வீட்டு வெள்ளைக்காரர்களுக்கு மணந்து விடும் என்பதற்காக,
நவீன இயந்திரங்கள் நிறைந்த அவர்களின் குசினி,
சமையல் இன்றிக் கிடக்கிறது.
லட்சக்கணக்கான ரூபாயில் வாங்கிய “குஷன் செற்றி”,
குந்தியிருந்து குதூகலிக்க உறவேதுமின்றி ஓய்ந்திருக்கிறது.
பொருள் நிறைந்தும் போகம் இல்லாத வாழ்க்கை.
‘எங்கட றோட்டில “ரமில்ஸ்” இல்லை.
அவையளோட இருந்தால் பெரிய பிரச்சினை.’
இது தன்னை மறந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் பெருமிதம்.
இப்படியான கூத்துகளுக்கு அங்கு குறைவே இல்லை.


நீங்கள் என்ன செய்வீர்கள்?
கை நிறையக் காசு கிடக்கிறது.
வெள்ளைக்காரன் ஏனென்றும் உங்களைத் திரும்பிப் பார்க்கிறானில்லை.
இங்கு “பறையன்” என்றும்  “பள்ளன்” என்றும் சொல்லி,
சிலரை நீங்கள் ஒதுக்கியது போல, அங்கு “பாக்கி” என்று,
எல்லோரையும் சேர்த்து ஒதுக்குகிறான் அவன்.
இந்த நிலையில்,
உங்களது பணப் “பவுசை” எப்படிக் காட்டுவது?
அகப்பட்டவர்கள் உங்கள் குழந்தைகள்தான்.
பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்காரர்களாகவும்,
வீட்டில் தமிழர்களாகவும் வேஷம் போட்டு,
எது வேஷம்? எது நிஜம்? என்று தெரியாமல்,
அர்த்தநாரீஸ்வரராய் இரண்டும் கெட்டுக் குழம்பும்,
அவர்கள் நிலை பரிதாபம்!


‘வெள்ளைக்காரர்களாகுங்கள்’ என்று அவர்களை இலட்சியப்படுத்தி,
‘தமிழராகவும் இருங்கள்’ என்று அவர்கள் முதுகில் நீங்கள் ஏற்றும்,
பண்பாட்டு மூட்டையின் சுமை தாங்கமுடியாமல்,
அக்குழந்தைகள் படும்பாடு, பரிதாபத்திலும் பரிதாபம்.
உறவினர் வீடொன்றுக்கு போன போது,
‘அங்கிளுக்கு ஒரு “டேவாரம்” பாடிக் காட்டுங்கோ’,
“டாடி” சொல்ல,
‘தொடு உடாய செவியேன் விடாய்’ என,
ஆங்கிலத்தில் எழுதிப் படித்த தமிழ்த் தேவாரத்தை,
பிள்ளை பாடுகிறான்.
‘வெரி கிளவ போய்’ என்று,
மகனின் தேவாரத்திற்கு கை தட்டுகிறார் “மம்மி”.
செத்தார் சிவபெருமான் என்று ஓடியே வந்து விட்டேன்.


‘என்ட “டோற்றர்” நல்லா “டான்ஸ்” பண்ணுவா’ என்று சொல்லி,
மகளை எங்களுக்கு ஆடிக் காட்டச் சொல்ல,
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் கழற்றி எறிந்து,
காற்சட்டையோடு வந்து நின்ற அந்தக் கலவன் குஞ்சு,
‘இன்ன ரவம் செத்தனை யஷோடா’ என்று பாடி ஆடத் தொடங்க,
நான் செய்த தவத்தால்,
அழைத்துச் செல்ல அண்ணன் வந்து விட்டார்.
ஏதோ ஒரு மாதிரித் தப்பிப் பிழைத்தேன்.


வேறொரு நாள்,
‘இந்த “டேட்டி ராஸ்கல்” பஸ்சுக்குள்ள என்னப் பார்த்து,
‘என்ன மச்சான்’ என்று “ரமில்ல” கேக்கிறான். 
வெள்ளக்காரங்களெல்லாம் திரும்பிப் பார்க்கிறாங்கள்.
“மனஸ்” தெரியாத “(B)பாஸ்ரட்” ,
சொல்லும் சொல்லின் விரசம் தெரியாமல்,
மனைவியுடன் என் நண்பன் உரையாடியது காதில் விழுந்தது.
அவர்களே, பிறகொருநாள்,
'ஆனையிறவு “அட்ராக் நைஸ்” என்ன? ,
எப்பிடியும் எங்களுக்கு “ரமில் ஈலம்” கிடைக்கும் பாருங்கோ.
பிரபாகரன் “இஸ் வெரி கிரேட்” ' என்று
என்னிடம் பாராட்டினார்கள்.


இப்படித் தெளிவான குழப்பத்தில்,
அல்லது, குழப்பமான தெளிவில், வாழும் உங்கள் நிலை,
இங்குள்ளவர்களுக்குத் தெரியவா போகிறது?
அதனால்தான்,
உங்களுக்கு முக்கியமான ஒரு புத்தி சொல்ல வேண்டி இருக்கிறது.
அதற்காகத்தான் இந்தக் கட்டுரை.


ஊரெல்லாம் சுற்றி ஒருமாதிரி தேர் இருப்பிடத்திற்கு வந்து விட்டது.
இனி, விஷயத்திற்கு வருகிறேன்.
அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான,
போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி,
உங்களில் பலபேர் தாய்மண்ணிற்கு வருகிறீர்கள்.
பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு,
தாய்மண்ணைப் பார்ப்பதென்றால் சும்மாவா?
போர் நிறுத்தத்தால் விலையேறியுள்ள வீட்டை விற்கவும்,
ஆயுள் முழுக்க உங்களுக்காய் வாழ்ந்துவிட்டு,
தற்போது அநாதை விடுதிகளில் இருக்கும்,
“டாடி”யையும் “மம்மி” யையும்,
உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டவும்,
பதினைந்தாண்டுகளில் நீங்கள் பெற்றிருக்கும்,
வெள்ளைக்காரத் தகுதிகளை விளம்பரப்படுத்தவுமே,
உங்களில் பலர் இங்கு வருவதாய்,
என் நண்பன் ஒருவன் குற்றம் சாட்டுகிறான்.
அவன் கிடக்கிறான் அறிவில்லாதவன்.
நீங்கள் எதற்காக வந்தாலும்,
வருவதற்கு முன் இந்தக்கட்டுரையை வாசிப்பது நல்லது.
அதற்காகத்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.


ஊருக்கு வெளிக்கிடும் நாள்.
கொஞ்சம் “பெ(F)ப்யூம்” போத்தல்கள்,
“ஒ(F)பிஸ்”சில் “டியூட்டி” க்காக வெள்ளைக்காரன் தந்த,
“யூனி(F)போம்” உடுப்பில்,
ஏமாற்றி எடுத்தவை கொஞ்சம்,
உங்கள் மனைவியும் பிள்ளைகளும் பாவித்த சீலை, சட்டைகள் சில,
“கிறிஸ்மஸ் சேல்ஸ்சில்” வாங்கிய,
மலிவு விலைப் பொருள்கள் கொஞ்சம்,
முடியும் திகதியை அடையாளப்படுத்திய
“பிஸ்கட்”, “சொக்லேட்” முதலிய,
இன்ன பிற மலிவுப் பொருள்கள்.
இதை விட, நீங்களும், உங்கள் மனைவி பிள்ளைகளும்,
இங்குள்ள ஏழைச் சொந்தக்காரர்களுக்குப் “பவுசு” காட்ட,
புதிதாய் வாங்கிச் சேர்த்த,
“ரவுசர்”, “சேட்”, சட்டை, சப்பாத்து என,
சாமான்களால் இரண்டு மூன்று பெரிய பெரிய “சூட்கேஸ்”சுகளை,
நிரப்பி விட்டீர்களா?
இனி வெளிக்கிட வேண்டியதுதான்.


கொஞ்சம் பொறுங்கள்!
முக்கியமான இரண்டு பொருள்களை மறந்து விட்டீர்கள்.
எவை என்று தெரிகிறதா?
நேற்று “சுப்ப மாக்கற்”றில்,
உங்கள் பாசத்தின் அடையாளமாய்,
அநாதை விடுதியிலுள்ள அப்பாவிற்குக் கொடுக்கவென,
உங்கள் அன்பைப் போன்ற,
செயற்கை ரோஜா மலர்களாலான,
பூச்செண்டு ஒன்றை வாங்கினீர்களே?
அதையும் எடுத்து வையுங்கள்.
அடுத்தது,
வெளிநாட்டிலிருந்து வந்தவர் நீங்கள் என்று,
மற்றவர்கள் தெரிந்து கொள்ள,
முழுசுமில்லாமல், அரையுமில்லாமல்,
புதிதாய் வந்திருக்கிறதே ஒரு முக்கால்க் காற்சட்டை.
அதிலும் ஐந்தாறைத் தூக்கிப் போடுங்கள்.
எல்லாம் “ரெடி”தானே
இனிப் புறப்படலாம்.


திரும்பவும் மறந்து விட்டது.
இங்கு நாங்கள் காய்கறி வாங்கும் கூடையைப் போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று வைத்திருப்பீர்களே,
அதையும் எடுங்கள்.
ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்து வீட்டுச் சின்னம்மா,
‘உதென்ன தங்கச்சி?’ என்று கேட்க,
‘அது எங்கட “பேபி”யைக் கிடத்துறத்துக்கு’ என்று,
உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லலாம்.
‘குழந்தயக் கிடத்துறத்துக்கு என்னத்துக்கு மேனே கூடை?
தோளில கிடத்தலாம் தானே!
கூடையோட வச்சிட்டு அங்கால இங்கால பார்க்கேக்க, 
நாய் கீய் தூக்கிக் கொண்டு போனா என்ன செய்யுறது?’
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
‘என்ன அன்ரி?
நீங்கள் சரியான ‘கன்றி புறூட்டா’ இருக்கிறீங்கள்,
பேபியைத் தோளில் போட்டா, அது “சூ” செய்து,
“டிரெஸ்ச” எல்லாம் பழுதாக்கியெல்லே போடும்.’
உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லுவா.
அவா குழந்தையா இருக்கேக்க,
தன்ட தோளில் கிடந்து பெஞ்ச “சூ”வை,
‘என்ட சின்னக் குஞ்சு தேன்மாரி பெய்யுது’ எனச் சொல்லி,
தன்ட சீலைத் தலைப்பால துடைச்சு விட்டத,
சின்னம்மா பெருமையாச் சொல்லும்.
“யூறினை” சீலையால துடைக்கிறனீங்களோ? “டேட்டி ஹபிற்”
‘லண்டனில “டெற்றோல்” போட்டுத் துடைக்காமல்,
நாங்கள் பிள்ளையத் தொட மாட்டம்’
உங்கட மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம், வாயை மூடிக் கொள்ளும்.
இவையெல்லாவற்றுக்குமாகத்தான்,
அந்தக் கூடையையும் எடுத்து வைக்கச் சொல்கிறேன்.
சரி, இனி “சூட்கேசை” மூடலாம்.


கொஞ்சம் பொறுங்கோ!
பிறகும் உந்த வீடியோக் கமராவை விட்டிட்டீங்களே!
என்னது, அதைத் தோளில மாட்டப் போறிங்களோ?
அதுவுஞ் சரிதான்.
அப்பதான் நீங்கள் வெளிநாட்டில இருந்து வர்றது,
மற்றவையளுக்குத் தெளிவாய்த் தெரியும்.
சரி, பின்ன “சூட்கேஸை” மூட வேண்டியதுதான்.
நீங்கள் முக்கால் காற்சட்டை போட்டு விட்டீங்களா?
உங்கள் மனைவி,
“ரீசேட்டும்” “ஜீன்சும்” போட்டு விட்டாவா?
பதின்மூன்று வயதான பருவ எல்லையில் நிற்கும் உங்கள் பாலகியின்,
தொடையின் முக்கால் பாகம் தெரியும் காற்சட்டை போட்டாகி விட்டதா?
கூடைக்குள் வைத்துக் குழந்தையை எடுத்து விட்டீர்களா?
தூக்குங்கள் “சூட்கேஸை”,
இனி “ரமில் ஈலம்” போக வேண்டியதுதான்.


கட்டுநாயக்கா விமான நிலையம்.
கொண்டு வந்த பெரிய “சூட்கேசு”களை நீங்கள் ஏற்ற,
அங்குள்ள பழைய தள்ளு வண்டிகள்,
தள்ளாத வண்டிகளாய்த் தடுமாறும்.
உங்கள் மனைவி,
‘வேறு பலவற்றோடு’ அதையும் தள்ளிக் கொண்டு வெளியே வர,
‘பெரியண்ண!’
‘குஞ்சக்கா!’
‘எடி பேபி!’
‘பெரியவன்!’
இப்படிப் பல குரல்கள் ஒருமித்து வரவேற்கும்.
உங்களை வரவேற்கவென யாழ்ப்பாணத்திலிருந்து,
“வான்” பிடித்து வந்த,
அன்பு மாறா உங்கள் உறவுக் கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்துக்கு முன் பழகிய,
பழைய உறவாய் நினைந்து,
உங்களைக் கண்டு அதுகள் பரவசப்படும்.


உங்கள் பாடு கொஞ்சம் சங்கடம்தான்.
‘இதுகள் என்ன “டீசன்ற்” இல்லாமல் கத்துதுகள்?’
இங்க இருக்கேக்க ‘சுத்து’ க்குப் போன உங்கள் மனைவி,
சுறுசுறுவென்று கோபிப்பா.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?” 
ஏதோ வெளிநாட்டுத் தலைவர் போல,
நீங்கள் தூர இருந்து கை காட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தியதில்,
பிடிபடாத மகிழ்ச்சி உங்களுக்கு.


வெளியே வரும் உங்களை,
உறவுகள் சூழ்ந்து கொள்ளும்.
‘எடேய்! எங்கட சித்தன்ட பெட்டையே இது!
பார் மொழுமொழுவென்டு என்ன வடிவா நிக்குது’ என்று சொல்லி,
குஞ்சம்மா தன்ட வெத்தில வாயால,
உங்கட மேளப் பிடிச்சு ஒரு தரம் ‘ப்ச்சக்’ என்று கொஞ்சும்.
அருவருப்பில் உங்கள் மகள் முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
‘என்ட ராசாத்தி! என்னைப் பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?’
சொல்லியபடி குஞ்சம்மா உங்கட பெரிய “சூட்கேசை” ப் பார்க்கும்.
அதெல்லாம் தனக்குத்தான் என்ற அதன் ஆசை,
கண்களில் வெளிப்படும்.
“சூட்கேசின்” எண்ணிக்கை கூடக் கூட,
உறவின் உரிமை பெருகும்.
நீங்கள் சும்மாவா இருக்கப் போகிறீர்கள்?
இடைக்கிடை “கொலரைத்” தூக்கிவிட்டு வாயால் கீழ் ஊதி,
‘இந்த “ஹொட் கிளைமற்” துப்பரவா ஒத்துக்கொள்ளுதில்ல.
அதுக்கிள்ள இது வேற கசகசக்குது’ என்று,
பதினாறு பவுன் சங்கிலிய வெளியில தூக்கிப் போடுவீங்கள்.
அதப் பார்த்த உங்கட சின்னத் தங்கச்சி,
‘எப்பிடியும் அண்ண எனக்கும் ஒண்டு கொண்டு  வந்திருக்கும்’ என்று
ஏங்கத் தொடங்கும்.
போதாக் குறைக்கு,
‘மாமா! இஞ்ச “பவுன்ஸ்” மாத்தலாமே?’ என்று சொன்னபடி,
கடன் காட்டுகளால் கர்ப்பமுற்றிருக்கும்,
உங்கள் “பேர்சை” நீங்கள் தட்டிக் காட்ட,
அவ்வளவும் “பவுன்ஸ்” தான் என நினைந்து,
உங்கள் உதவியால் குமரக் கரையேத்தலாம் எனும் மகிழ்ச்சியில்,
‘அதெல்லாம் நானல்லோ மாத்தித் தர்றது, 
நீங்கள் ஒண்டும் யோசிக்காதைங்கோ தம்பி’ என்பார் மாமா.
இப்படியே ஊர் போய்ச் சேர்வீர்கள்.


ஊர் போய்ச் சேர்வதற்குள்,
நீங்கள் புழுகிய லண்டன் புழுகுகளில் முழுதாய் மயங்கி,
“பிரிட்டிஷ்” மகாராணிக்கு அடுத்தது எங்கட “பெடி” தான் என்று,
அந்த அப்பாவிச் சொந்தங்கள் அநியாயமாய் நம்பியிருக்கும்.
“சூட்கேஸ்” முழுக்கத் தங்கக் கட்டிகள்தான் என்ற கனவில்,
சொந்தம் முழுவதும் சிலிர்க்கும்.
‘பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு பெடி வந்திருக்கு.
அவனக்கொண்டு காணி வாங்க வேணும்!
அடகு எடுக்க வேணும்!
குமர் காரியம் முடிக்க வேணும்!
கோயில் கோபுரம் கட்டுவிக்க வேணும்!
கோழிக் கூடு திருத்துவிக்க வேணும்!’ எனும்,
ஆயிரம் கனவுகளோடு,
அடுக்கடுக்காய் உறவுகள் உங்களைச் சூழும்.


நீங்கள் “பவுசு” காட்ட வந்த பரிதாபம்
அதுகளுக்குத் தெரியவா போகிறது?
கோடியாய்க் கொண்டு வந்து கொட்டி,
தங்கள் குடி முழுவதையும் நீங்கள் ஆளப் போவதாய் எண்ணி,
அந்த எளிய சனங்கள் ஏமாறும்.
தங்கள் எதிர்பார்ப்பில்,
பாற்புட்டும், பனங்கிழங்கும்,
பனாட்டும், பனங்காய்ப் பணியாரமும்,
எள்ளுருண்டையும், இலந்தைப் பழமும்,
கறுத்தக்கொழும்பானும், களியும்,
கூழாம் பழமும், கூழுமென,
தம் வறுமையிலும் வளமை காட்டி,
உறவுகள் உங்களுக்குத் தூண்டில் போடும்.


எல்லாம் நீங்கள் “சூட்கேஸ்” திறக்கும் மட்டுந்தான்.
நான்கு நாள், ஐந்து நாள் எதிர்பார்க்க வைத்து,
நீங்கள் உங்கள் அலுவல்கள் பார்க்க,
‘எப்பையடா இவன் “சூட்கேஸ”த் திறப்பான்?’ 
என்ற எதிர்பார்ப்போடு,
எல்லா உறவும் ஏங்கிக் கிடக்கும்.
பழைய கட்டாடியும்,
‘தம்பிய ஒருக்காக் காணலாம் என்டு வந்தனான்’ என்று,
தலை சொறிவார்.
‘தம்பிட பேரில அர்ச்சனை பண்ணி விபூதி கொண்டு வந்தனான்’,
கும்பாபிஷேக “நோட்டீசோட” குருக்களும் வருவார்.
ஒன்டவிட்ட அண்ணன், இரண்டவிட்ட அக்கா,
மூண்டாம் வீட்டு அன்ரி என்று,
அடுக்கிய சுற்றத்தால் சூழப்படுவீர்கள்.


அத்தனைபேர் கண்களும்,
நீங்கள் கொண்டு வந்த “சூட்கேசை”,
இடையிடையே நோட்டம் விடும்.
வெளிக்கிடுற அன்று,
நீங்களும் “சூட்கேசை”த் திறப்பீர்கள்.
அன்ரிக்கு “சென்ற்”,
அக்காவிற்கு பாவித்த சீலை,
பெரியப்பாவிற்கு “பிஸ்கட்”,
மச்சாளுக்கு “இமிற்றேசன்” காப்பு,
சின்னம்மாட பெடியளுக்கு சொக்லேட்,
மருமோனுக்கு மகன் பாவிச்ச சப்பாத்து,
கட்டாடிக்கு காசு ஐம்பது ரூபா என்று,
வள்ளல் தன்மையாய் நினைந்து,
கொண்டு வந்த மலினங்கள் அத்தனையையும்,
வீசி எறிந்து நீங்கள் விமானம் ஏறுவீர்கள்.


அதோடு உங்கள் பயணம் முடிந்தது.
லண்டனில் காட்ட முடியாத பெருமையை,
ஊரில் காட்டி விட்ட உவப்பு உங்களுக்கு.
உறவெல்லாவற்றையும் ஆட்கொண்டு வென்றதாய்,
உங்களுக்கு நினைப்பு.
ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ்.
ஓயாமல் உங்களுக்கு இங்கு விழும் திட்டு அங்கு கேட்கவா போகிறது?


‘குமரக் கரையேத்த உதவுவான் என்டு பாத்தா,
கோதாரி விழுவான் “சென்ற்” எல்லே கொண்டு வந்து தர்றான்.
அவங்களப் போல குளியாதவங்கள் எண்டு,
எங்களயும் நினைச்சிட்டான் போல.’
‘அவன்ட பெண்டில்ன்ட பழஞ்சீலை உடுக்கவே,
நாங்கள் பாத்துக் கொண்டிருந்தனாங்கள்?
அவாட “ஜீன்சும்” மூஞ்சையும்,
குரங்குக்கு கோவணம் கட்டின மாதிரி.’
‘இவன் வெளிநாடு போக,
என்ட தங்கக் காப்ப அடகு வைச்சுக் குடுத்தனான்.
துலைஞ்சு போவான் இப்ப என்ட குமருக்கு,
“இமிற்றேசன்” காப்பெல்லே கொண்டு வந்து தர்றான்.’
‘அந்தப் பாடயில போவானுக்கு, உளுத்தம்மா போட்டு
பால்ப்புட்டுமெல்லே அவிச்சுக் குடுத்தனான்.
நாய்மேண் அம்பது ரூபாய்க்கு “சொக்லேட்” கொண்டு வந்து
தந்திட்டு,
ஐநூறு ரூபாயான் மாம்பழங்களயும் திண்டிட்டெல்லே போயிட்டான்.’
‘அவரும் அவற்ற காற்சட்டையும்.
அந்தக் காற்சட்டையைப் பாக்கேக்கையே நினைச்சனான்,
தம்பி அங்க பிச்சைதான் எடுக்குது எண்டு.
அம்பது ரூபாயெல்லே தர்றார்,
ஆருக்கு வேணும் இந்த நாயுந் தின்னாக் காசு?’
‘அவற்ற திறத்தில கழுத்தில கமரா வேற.
வைரவற்ற கழுத்தில வடை மாலை மாட்டின மாதிரி.
அம்மி, குழவி, ஆட்டுக்கல்லு என்று
எல்லாத்தையும் எல்லே படமெடுக்கிறார்.
அஞ்சு தலைமுறையாய் லண்டனில வாழ்ந்தவர் மாதிரி.’
‘என்ட மேணுக்குக் கொடுத்து விட்ட உழுத்தம்மா பார்சலையும்,
விட்டுட்டல்லே போயிட்டான் அந்தப் பேயன்.
அவற்ற பெண்டிலின்ட பிள்ளப் பேறுக்கு,
சரக்குச் சாமான் முழுவதும்,
என்ட மேண்ட தலையிலதான் கட்டி விட்டவங்கள்.
இப்ப “வெயிற்” றாமெல்லே, “வெயிற்”.
அடுத்த முறை என்ட மேண் வரேக்க,
அந்தக் குமரி ஏதும் கொண்டு வரட்டன். அப்ப கதைக்கிறன்.’
இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா?
அத்தனையும் உங்களுக்கான அர்ச்சனைகள்தான் ஐயா.
இப்படியாக உங்களுக்கு விழும் திட்டுக்கள்,
உங்கள் காதில் கேட்க நியாயமில்லை.


‘சொந்தம் எல்லாம் சுயநலத்தோடுதான்.’
நான் சொன்ன உண்மைகளைக் கேட்டு,
நீங்கள் முகம் சுளித்துச் சொல்வது கேட்கிறது.
நீங்கள் மட்டும் என்னவாம்?
அன்பினாலா அவர்களைப் பார்க்க வந்தீர்கள்?
நீங்கள் காட்டிய “பவரில்”,
பாவம்!
அந்த ஏழை உறவுகள், எதிர்பார்த்ததில் என்ன தவறு?
நினைத்தது கிடைக்காமல் போக,
உங்களைப் போல் ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்’,
நாகரிகம் தெரியாத அந்தக் கிராமத்துச் சனங்கள்,
திட்டத்தான் செய்வார்கள்.
நீங்கள் போய் ஒரு மாதமாயிற்றா?
இன்னும் ஊரில் அர்ச்சனை முடிந்த பாடில்லை என்றால்,
பார்த்துக் கொள்ளுங்களேன்.
பதினைந்தாண்டுகளின் பின்னான உங்கள் பயணத்தின் முடிவு,
அந்தோ பரிதாபம்! போங்கள்.


வெளிநாட்டிலிருக்கும் அத்தனை பேர்களும்,
இப்படிப்பட்டவர்கள் தானா? என்ற,
வேறு சிலரின் கோபக் குரல் என் காதில் விழுகிறது.
சத்தியமாய் அப்படி நான் சொல்ல வரவில்லை.
தேசங் கடந்தும், நேசம் கடவா நெஞ்சங்களை நன்கறிவேன்.
தொப்பி பொருந்துகிறவர்களுக்கு மட்டுமே இக்கட்டுரை.
அவர்களுக்காகக் கட்டுரையைத் தொடர்கிறேன்.


எங்களை மற்றவர்கள் திட்டுவதைச் சொல்லத்தான்,
இவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டுரை எழுதினீரா?
ஆத்திரத்தில் உங்கள் மீசை இருந்த இடம் துடிப்பது தெரிகிறது.
வெள்ளைக்காரர்கள் மதியார்கள் என்பதற்காய்,
மீசையைத்தான் எப்போதோ எடுத்து விட்டீர்களே!
கொஞ்சம் அமைதி அடையுங்கள்.
‘எங்களை இழிவுபடுத்தவே இக்கட்டுரை வரைந்திருக்கிறீர்!’
உங்கள் சுட்டு விரல் என் நெஞ்சு நோக்கி நீள்கிறது.
உண்மையாய்ச் சொல்கிறேன்.
உங்களை இழிவுபடுத்த நான் இக்கட்டுரையை எழுதவில்லை.
உங்களுக்குப் புத்தி சொல்வதே என் நோக்கம்.


அதென்ன புத்திமதி என்கிறீர்களா ?
சொல்கிறேன்.
“விஸா” வும் “ரிக்கட்” டும் இருந்தால் மட்டும்,
ஊருக்கு வரலாம் என நீங்கள் நினைத்தால், அது தவறு.
உங்கள் வருகைக்காக,
இத்தனை உறவுகளும்,
எத்தனையோ கனவுகளோடும், ஏக்கங்களோடும் காத்திருக்கும்.
அத்தனை ஏக்கங்களையும் தீர்க்க முடிந்தால் இங்கு வாருங்கள்.
உறவுகள் புதுப்பிக்கப்படும்.
இல்லாமல் இங்கு வந்தீர்களோ,
உள்ள உறவும் சிதைந்து போகும்.
வந்தால் உதவுவான் என,
உங்கள் கடிதங்கள் கண்ட கனவிலேனும்,
உறவுகள் இருந்துவிட்டுப் போகட்டும்.
அவர்கள் கனவை, உங்கள் வருகையால் சிதைக்காதீர்கள்.
கனவுகள் தரும் இன்பத்தை நிஜங்கள் நிர்மூலமாக்குகின்றன.


‘இத்தனை பேரினதும் தேவைகளை நிறைவேற்ற,
நாங்கள் என்ன கோடீஸ்வரர்களா?’
நீங்கள் கேட்பது புரிகிறது.
இல்லைதான். ஆனால்,
கோடீஸ்வரர்களாய் உங்களை இனங்காட்டியது நீங்கள் தானே!
உங்கள் எதிர்பார்ப்பு வேறு, அவர்கள் எதிர்பார்ப்பு வேறு.
எவ்வளவுதான் முயன்றாலும்,
அத்தனை பேரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது.
அத்தனை பேராலும்,
உங்களிடம் எதிர்பார்க்காமல் இருக்கவும் முடியாது.
பிறகென்ன?
“பவர்” காட்டிய உங்கள் பயணம் முடிய,
இலட்சார்ச்சனைதான் மிஞ்சும்.


ஏன் இந்த வீண் வேலை?
தாய் மண்ணாவது? தகப்பன் மண்ணாவது?
வீணாய் விலை கொடுத்து வம்பை வாங்காதீர்கள்.
இடைவெளி நீண்டு விட்டது.
உங்களால் உறவுகளைத் திருப்திப்படுத்த முடியாது.
உறவுகளால் உங்களை ஜீரணிக்க முடியாது என்கிற போது
வீணாய் ஏன் வேதனைப்படுகிறீர்கள்?
கனவுகளாவது இனிமையாய் இருக்கட்டும்.
உண்மை சுடத்தான் செய்யும்.
அதற்காக உண்மையைத் தரிசிக்காமலே இருந்து விட முடியுமா என்ன?
நீங்கள் துன்பப்படக் கூடாது என்ற அக்கறையால் சொல்கிறேன்.
வர முடிந்தாலும் இனி இங்கு வராதீர்கள்.
இது உங்களின் நன்மை நோக்கிய உபதேசமே!
கம்பனின் கவி கருத்தில் வருகிறது.
“வாராதே! வரவல்லாய்”

✈✈✈✈✈✈

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...