•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, August 1, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 10 | எம்.ஜி.ஆரால் பிரபலமானோம்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

இலங்கை திரும்பினோம்

அப்போது இந்தியாவுக்குக் கப்பலிலும் போகலாம்.
டிக்கட் செலவு 180 ரூபாய்தான்.
தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் பயணமாகி,
அங்கிருந்து ரயிலில் திருச்சி செல்லவேண்டும்.
ரயிலில் மட்டுந்தான் திருச்சி செல்லலாம்.
‘பாம்பன்பாலத்’தில் அப்போது ரயில் மட்டுமே சென்று வந்தது.
அதுபோலவே திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் வந்து,
தலைமன்னாருக்குக் கப்பலேற வேண்டும்.
குருவை இரவு சந்தித்த அன்றே,
நடுச்சாமத்தில் நாங்கள் ரயில் ஏற வேண்டியிருந்ததால்,
குருவின் முகவரியும் அழைப்பும் கிடைத்தும்,
அவரை நேரில்சென்று காணமுடியாத அபாக்கியம் எனக்கு.
வருந்தியபடி இலங்கை வந்தேன்.எம்.ஜி.ஆரும் கூட்டணியினரும்

எம்.ஜி.ஆரின் சந்திப்பின் பின் நடந்தவற்றைப் பற்றி,
சொல்வதாய்ச் சொல்லியிருந்தேனல்லவா?
அவை பற்றி இப்போது சொல்கிறேன்.
அப்போதுதான் எம்.ஜி.ஆர். முதன்முதலாய் ஆட்சிக்கு வந்திருந்தார்.
நம் நாட்டிலும் யாரும் எதிர்பாராத வகையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணி,
தேர்தலில் பெரு வெற்றிபெற்று,
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி முதல்வராய் ஆகியிருந்தார்.
கூட்டணி எம்.பி.க்களுக்கு,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் அதிக நெருக்கம் இருந்தது.
வெற்றிக் குதூகலத்துடன் தமிழ்நாடு சென்ற கூட்டணி எம்.பி.க்களை,
வரவேற்க விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருவரும்,
வாகனங்களை அனுப்பி வைக்க,
நமது எம்.பி.க்கள் பழைய நட்பின் காரணமாய்,
கருணாநிதி அனுப்பிய வாகனங்களில் சென்றுவிட்டனர்.
அத்தோடு கருணாநிதியைச் சந்தித்த பொழுது,
மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள் என்றாற்போல்,
நம்மவர்கள் ஆறுதல் சொல்ல,
அச்செய்தி பத்திரிகைகளில் பெரிதாய் வெளிவந்து,
அது எம்.ஜி.ஆரை ஆத்திரமூட்டியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் மேற்சொன்னவை எதுவும் தெரியாமல்,
தலைவர்களின் ஒற்றுமை பற்றியும்,
ஈழத்தமிழர்களின் நிலைமை பற்றியும்,
எம்.ஜி.ஆர். முன்னாலேயே நான் பேசியிருந்தேன்.
பேச்சின் நிறைவில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்ததும்,
சபை அறிய அவரிடம் ஆசி பெற்றதுமான செயலும்தான்,
அன்று எம்.ஜி.ஆரின் கோபத்திலிருந்து என்னைக் காத்தன.எம்.ஜி.ஆரால் பிரபலமானோம்

மகாநாட்டு மேடையில் நான் பேசிச்சென்ற பிறகு,
முன் அறிவித்தலின்றி திடீரென அங்கு பேச வந்த எம்.ஜி.ஆர்,
கூட்டணியினருடன் தனக்கு இருந்த முரண்பாட்டை,
வெளிப்படுத்த நினைந்து,
“ஈழத்தமிழர்கள் முதலில் உங்களுக்குள் இருக்கும்,
ஜாதிப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு,
அதன்பின் தமிழர்க்கான உரிமையைக் கோருங்கள்” என்று,
என் பேச்சுக்குப் பதிலுரைப்பது போல் ஈழத்தமிழர்களைத் தாக்கிப்பேச,
அது ஈழத்தமிழர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
என்னையும் குமாரதாசனையும்,
இந்தியாவில் கைது செய்துவிட்டதாக வதந்தி பரவியது,
வீரகேசரி, ஈழநாடு, தினகரன் முதலிய அத்தனை பத்திரிகைகளிலும்,
நாம் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தோம்.
வேடிக்கை என்னவென்றால் அப்போது தமிழகத்திலிருந்த எங்களுக்கு,
ஈழத்தில் இச்சர்ச்சை நடந்து கொண்டிருந்தது தெரியாது.
மாநாடு முடிந்து திரும்பிக் கப்பலில் வந்து கொண்டிருந்த போதுதான்,
“சுதந்திரன்” பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன் அவர்கள்,
யாழ்ப்பாணத்தில் என்பேச்சு ஏற்படுத்திய பரபரப்புப் பற்றிச் சொன்னார்.
அப்போது ‘இராமானுஜம்’ கப்பல் தலைமன்னாருக்கு வந்ததும்,
சி.ஐ.டி.க்கள் உள்ளே ஏறி அனைவரையும் விசாரித்த பின்புதான்,
இறங்க விடுவார்கள்.
நிச்சயம் சி.ஐ.டி.க்கள் எங்களைப் பிடிக்கப் போகிறார்கள் என நினைந்து,
நானும், குமாரதாசனும் நடுங்கிப்போனோம்.
நல்லவேளை எதுவும் நடக்காமல் எங்களை அவர்கள் செல்ல விட்டனர்.ஆசிரியர்களின் அவசரக்கூட்டம்

எங்களைப்பற்றிய செய்தி எதுவும் தெரிய வராததால்,
பத்திரிகைச் செய்திகளைப் பார்த்துப் பதறிப்போய்,
என்ன நடந்தது என்று அறிய,
அப்போதைய இந்துக்கல்லூரி அதிபர் பி.எஸ்.குமாரசுவாமி அவர்கள்,
சிவராமலிங்கம் மாஸ்ரர், வித்துவான் வேலன்,
வித்துவான் ஆறுமுகம், தேவன், சொக்கன்,
ஆகியோரைக் கூட்டி ஆலோசித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆரைச் சந்தித்த அன்று இரவே,
சந்தோசத்தை யாரோடாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தில்,
நடந்த அனைத்தையும் விளக்கி,
சிவராமலிங்கம் மாஸ்டருக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.
நாங்கள் எழுதிய கடிதம் கிடைத்திருந்ததால்,
சிவராமலிங்கம் மாஸ்ரர் நடந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல,
அனைவரும் அமைதியுற்றிருக்கின்றனர்.
சொக்கன் மாஸ்ரர் எங்கள்மேல் இருந்த கோபத்தில்,
நடந்தது அறியாமல்,
“அவங்கள் குழப்படிக்காரன்கள்,
ஏதாவது கூத்தாடியிருப்பான்கள்” என்று சொன்னாராம்.
கம்பன் கழகத்தையும், எங்களையும்,
இப்பிரச்சினையால்த்தான்,
முதன்முதலில் மக்கள் தெரிந்து கொண்டார்கள்,பத்திரிகைகள் தந்த பிரபலம்

மாநாட்டில் நடந்தவை பற்றி,
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாம்,
வேறுவேறு விதமாய் எழுதியிருந்தன.
மாநாட்டில் என்னைப் பேச அழைத்தபோது,
குமாரதாசனின் பெயரைச் சொல்லியே தலைவர் அழைத்தார்.
பேசச் சென்ற நான் பதற்றத்தில் பெயர் மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
அதனால், மாநாட்டில் குமாரதாசன் பேசியதாகவே,
பத்திரிகைகள் எல்லாம் எழுதின.
குமாரதாசன் பேச மேடைக்குப் பாய்ந்து சென்ற எம்.ஜி.ஆர்.,
ஒலிபெருக்கியைப் பறித்துப் பேசியதாகவும்,
கம்பன் கழகத்தவரை அங்கு கைது செய்துவிட்டதாகவும்,
பலவிதமான செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
குமாரதாசன் வீட்டிலும் நன்றாகப் பயந்துபோயிருந்தனர்.
நாங்கள் நாடு வந்து சேர்ந்ததும்,
நடந்த உண்மை விடயங்களை விபரித்து எழுதி,
எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொடுத்தோம்.
பத்திரிகைகள் எங்கள் புகைப்படத்தோடு,
அக்கட்டுரைகளை வெளியிட்டன.எஸ்.ரி. சிவநாயகத்தின் தொடர்பு

அப்போது, கூட்டணியை எதிர்த்து நின்ற,
புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியரான எஸ்.ரி. சிவநாயகம் அவர்கள் மட்டும்,
எங்கள் மறுப்பைத் தனது சிந்தாமணிப் பத்திரிகையில் வெளியிடாமல்,
எங்களுக்குத் தனியே ஒரு கடிதம் எழுதினார்.
 தான், மதுரை மாநாடு பற்றி,
‘மாமதுரைச் சீமையிலே தேமதுரைத் தமிழோசை’ எனும் தலைப்பில்,
தொடர் கட்டுரை எழுதப்போவதாகவும்,
நடந்தவற்றை அக்கட்டுரையில் விபரிக்கப் போவதாகவும்,
அதுவரை பொறுத்துக்கொள்ளும்படியும்,
தனது கடிதத்தில் அவர்  எழுதியிருந்தார்.
அந்நாளில் பெரும் புகழ்பெற்றிருந்த கூட்டணியினரைப் பந்தாடி,
அவர் எழுதிய அக்கட்டுரைத் தொடர் பெரும் புகழ்பெற்றது.
அத்தொடரின் தொடக்கத்திலேயே,
‘மதுரை மாநாட்டில் பேசியது குமாரதாசனா?
அங்கு என்ன பேசப்பட்டது?
யார் பேசினார்?
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்ன பதில் என்ன?
இவை எல்லாம் இக்கட்டுரைத் தொடரில் தெளிவாகும்’ என்ற வகையில்,
ஓர் பெட்டிச் செய்தியை வெளியிட்டு, பரபரப்பேற்படுத்தினார்.
மொத்தமாக இச்சம்பவங்களால்,
நாங்கள் ஒரே நாளில் பிரபலமானோம்.
இலங்கை திரும்பியதும் என்னை யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலும்,
மதுரை மாநாட்டுச் சம்பவம் பற்றிப் பேச அழைத்தார்கள்.குருநாதரின் பதிற்கடிதம்

இந்தப் பரபரப்புக்கள் எல்லாம் அடங்கிய பிறகு,
எனது குருநாதர் தந்த முகவரிக்கு,
எங்கள் கம்பன் விழாவில் கலந்துகொள்ள வரவேண்டுமென,
கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதினேன்.
ஒரு விழாவில் ஏற்பட்ட ஓரிரு நிமிட சந்திப்பில்,
அவர் என்னை நினைவு வைத்திருப்பாரா? என்றுகூட,
எனக்கு நினைக்கத் தோன்றவில்லை.
ஆனால், ஆச்சரியமாக ஒரு சில நாட்களிலேயே,
என் குருநாதரிடமிருந்து பதில் கடிதம் வந்தது.
வருகை இன்ன திகதியில்,
இன்னின்ன நாட்களில் இன்னின்ன தலைப்புக்களில் பேச்சு,
மீள் புறப்பாடு இந்தத் திகதியில் என்ற விதமாய்,
வரிவரியாய்க் கடிதம் எழுதியிருந்தார்.
இன்று நான் வரிவரியாய் எழுதும் இம்முறையினையும்,
எனது குருநாதரிடமே கற்றுக்கொண்டேன்.
வாசிப்பைச் சுலபப்படுத்த பந்தியாய் எழுதும் முறையையும் தாண்டி,
வரிவரியாய் எழுதும் முறை மேற்கு நாடுகளில் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனது பேச்சு நடைக்கு மட்டுமன்றி, எழுத்து நடைக்கும்,
பேராசிரியரே குருநாதராய்த் திகழ்கிறார்.
வரிவரியாய் நான் எழுதுவதைப் பார்த்துவிட்டு,
இதைக் கவிதை என்றும் சிலபேர் சொல்கிறார்கள்.
கவிதைக்கு ஏற்பட்ட கஷ்ட காலம்.
பேராசிரியரின் வருகைபற்றி அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கினேன்.
ஆரென்றே தெரியாத இரு இளைஞர்களின் அழைப்பையேற்று,
பிற நாடொன்றுக்கு வருகைதரச் சம்மதித்த,
குருநாதரின் பெருந்தன்மையை நினைக்க மனம் சிலிர்க்கிறது.
இன்று, அறிமுகம் இல்லாத எவரும் அழைத்தால்,
இங்ஙனம் போக நானே சம்மதிப்பேனோ? தெரியவில்லை.
அவரைநோக்கி, நீண்ட நாள் நான் செய்த அன்புத்தவம்,
அவர் மனதையும் தைத்திருக்கும்போலும்.
அதனாற்தான் என் அழைப்பை அவர் உடன் ஏற்றார் என நினைக்கிறேன்.
இதற்கிடையில், மற்றோர் அழைப்பு இந்தியாவிலிருந்து எமக்கு வந்தது.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


பாகம் 011ல்...

· காரைக்குடிக் கம்பன் விழா - 1 · காரைக்குடிக் கம்பன் விழாச் சிறப்பு · நாட்டரசன் கோட்டைப் பயணம் · நாட்டரசன் கோட்டை விழா · “பாவிகள் நரகத்திற்குப் போவார்கள்” · கற்றோர் சங்கமம் · தற்செயலாய்க் கிடைத்த சந்தர்ப்பம் · காரைக்குடியில் என் முதல் பேச்சு · “நல்லா கதைச்சேப்பா”

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...