•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, August 9, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 11 | “நல்லா கதைச்சேப்பா”

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

காரைக்குடிக் கம்பன் விழாவில் முதன்முதலாக.. 18.03.1981
மதுரையில் எங்களது முகவரியைப் பெற்றிருந்த கம்பன் அடிப்பொடி அவர்கள், அவ்வாண்டு காரைக்குடிக் கம்பன் விழாவுக்கு, எமக்கு அழைப்பொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதனை எமக்குக் கிடைத்த பெரிய பேறாய் நினைத்தோம். என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனும், அவ்விழாவில் கலந்துகொள்வதாய் அழைப்பிதழ் சொல்ல, ஆர்வம் தாங்காமல் இரண்டு மாத இடைவெளியில், மீண்டும் நானும் குமாரதாசனும் இந்தியா புறப்பட்டோம். பயணங்களால் ஒருபுறம் கடனும், மறுபுறம் வீடுகளில் எதிர்ப்பும் உயர்ந்தன. இம்முறை நண்பன் வசந்தனும் எங்களுடன் பயணத்தில் இணைந்தான். இராமேஸ்வரம் சென்று மதுரையூடாகக் காரைக்குடி சென்றோம். அது மறக்க முடியாத அனுபவம். விழாவிற்கு அழைப்பு அனுப்பிய கம்பன் அடிப்பொடி, நாங்கள் விழாவிற்கு வருவோம் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் போய் இறங்கியதும் அவர்பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை. நாம் அங்கு போனபோது இரவாகி விட்டது. மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது எனும் எண்ணத்தில், பஸ் பயணத்தின் இடையில், நாங்கள் இரவுச் சாப்பாட்டை முடித்திருந்தோம். எங்களைக் கண்டதும் மகிழ்ந்துபோன கம்பன் அடிப்பொடி, “சரிசரி குளிச்சிட்டு சாப்பிடுங்கப்பா!” என்றார். நாங்கள் தயங்கித் தயங்கி வழியில் சாப்பிட்டதைச் சொன்னதும், அவருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. “பாவிகளா, இப்படிப் பண்ணலாமா? இது கம்பனுக்குப் பண்ணுகிற அவமரியாதை இல்லையா?” என்று, சத்தம் போட்டார். சில வினாடிகளில் அந்தக் கோபம் மறைந்து விட்டது. ‘குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி’ அது. கம்ப குடும்பத்தின் பண்பாட்டை அன்று அறிந்துகொண்டோம். ✎✿✎ காரைக்குடிக் கம்பன் விழாச் சிறப்பு அப்போது காரைக்குடிக் கம்பன் விழா மிகப் பிரபலமான விழாவாக இருந்தது. பங்குனி அத்த நாளை, நிறைவு நாளாகக் கொண்டு விழா நடைபெறும். பேரறிஞர்கள் எல்லோரும் வந்து, விழா நாட்கள் முழுவதும் அங்கு தங்கியிருப்பார்கள். செட்டி நாட்டுக்கே உரிய பெரிய வீடுகளிலும், கம்பன் அடிப்பொடி அமைத்திருந்த கம்பன் மணிமண்டபத்திலுமே, அனைவரும் தங்க வைக்கப்படுவார்கள். விடிகாலையில், வேலையாட்கள் பெரிய அண்டாக்களில் வெந்நீர் வைத்து, குளிக்கத் தருவார்கள். இப்போதுபோல் ஹோட்டல்களில் யாரும் தங்குவதுமில்லை, தங்கக் கேட்பதுமில்லை. ஆளுக்காள் கிடைக்குமிடத்தில் பாய் விரித்துப் படுத்துவிடுவார்கள். சபையில் இருக்கும் பெரியோர்கள், மேடையில் பேசுபவர்களைவிட அறிஞர்களாய் இருப்பார்கள். விழா முடிந்த இடை நேரங்களில் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது, பெரிய அறிவு விருந்தாய் அமைந்திருக்கும். மேடையில் பேசுபவர் பாட்டை மறந்தால், சபையில் இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அந்த அளவு அனுபவம் மிக்க அறிவுச் சபை அது. விழாவிற்கு வருகிற அனைவருக்கும், மூன்று நேர உணவும், மாலை சிற்றுண்டியும் வழங்கப்படும். செட்டி நாட்டிற்கேயுரிய விருந்துத் தரத்தில், அவ்விருந்துகள் தயார் செய்யப்பட்டிருக்கும். கம்பன் அடிப்பொடி தானே நின்று அனைவரையும் உபசரிப்பார். காலை நிகழ்ச்சி, ஒன்பது மணிக்குத் தொடங்கி பன்னிரண்டரை மணிக்கு முடியும். மாலை நிகழ்ச்சி ஐந்தரைக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடியும். அதன்பின், இரவுணவு முடிந்ததும் வாரியாரின் சொற்பொழிவு, நடனங்கள் போன்ற, ஜனரஞ்சகக் கலை நிகழ்ச்சிகள் ஏதேனும் நடைபெறும். அடுத்த ஆண்டில், அங்குதான் முதன்முதலில் பத்மா சுப்ரமணியம் அவர்களின், இராமாயண நாட்டிய நாடகத்தைக் கண்டு பிரமித்தேன். விழாவின் கடைசி நாள் நிகழ்வு, நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள கம்பன் சமாதியில் நடைபெறும். அதுபற்றியும் சொல்ல வேண்டும்.


நாட்டரசன் கோட்டைப் பயணம்
காரைக்குடியில் முதல் மூன்று நாட்கள் விழா முடிந்தபின், நிறைவு நாள் விழாவை நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியில், கம்பன் அடிப்பொடி நடத்துவார் எனச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதனை, கம்பன் அடிப்பொடி நடத்தும் பாங்கு அலாதியானது. மூன்று நாள் விழாவில் கலந்துகொண்ட பேரறிஞர்கள் எல்லோரும், அந்நிகழ்விலும் கலந்துகொள்வார்கள். இப்போதெல்லாம் பட்டிமண்டபங்களில் பேச வருகிறவர்கள்கூட, தங்கள் வாதத்தை முடித்துக்கொண்டு, தீர்ப்புப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், நடுவரை, ‘அம்போ’ என விட்டுவிட்டுப் போய்விடுகின்றனர். அக்காலத்தில் யாரும் அப்படிச் செய்வதில்லை. கண்ணியம் காத்த காலமது. மூன்று அல்லது நான்கு பஸ்களில் அனைவரையும், நாட்டரசன் கோட்டைக்குக் கம்பன் அடிப்பொடி ஏற்றிச் செல்வார். அதிகாலையிலேயே, இங்கிருந்து செல்லும் அனைவருக்குமான உணவுகள், காரைக்குடியிலேயே தயாரிக்கப்பட்டுவிடும். விதம்விதமான ‘சித்திரான்னங்கள்’ செய்யப்பட்டு, பெரிய அண்டாக்களில் அவை பஸ்ஸில் ஏற்றப்படும். அனைவருமாக பஸ்ஸில் புறப்பட்டுச் செல்லும்போது, இடையிடையே கம்பன் அடிப்பொடி, ‘கம்பன் வாழ்க!’ எனக் கோஷம் எழுப்புவார். ‘வாழ்க! வாழ்க!’ என உரைத்து, அக்கோஷத்தில் அனைவரும் அவருடன் ஒன்றிணைவார்கள். நாட்டரசன் கோட்டைக்குப் போகும் வழியின் இடைநடுவில், கம்பன் அடிப்பொடி அவர்களின் ஓர் அன்பர், கம்பன் அன்பர்களுக்காக, மலைபோல இளநீர்களைக்; குவித்து வைத்திருப்பார். அங்கு இளைப்பாறி இளநீர் குடித்தபின்பு பயணம் தொடரும். பின் மதியம்போல் நாட்டரசன் கோட்டை சென்று சேர்வோம்.நாட்டரசன் கோட்டை விழா
அது வளர்ச்சி பெறாத ஒரு குக்கிராமம். பற்றைகளின் நடுவிலேதான் கம்ப சமாதி இருந்தது. அருகில் ஒரு சிறு மடம். குடிப்பதற்குக்கூட அங்கு ஊருணி நீர்தான் கிடைக்கும். மண்ணிறத்தில் இருக்கும் அந்நீரைப் பார்க்கவே, ஏதோ செய்யும். பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், தமிழ்க்கடல் இராமராசன், கோதண்டராமக் கவுண்டர், புலவர் அருணகிரி, நீதியரசர் இஸ்மாயில், என் குருநாதர் போன்ற பெரியவர்களெல்லாம், எந்தக் கௌரவமும் பார்க்காமல், ஓலைக்கீற்றுப் பந்தலின் கீழ் துண்டை விரித்துப் படுத்துக் கிடப்பார்கள். மதிய உணவின்பின் இடுப்பில் துண்டு கட்டி, அங்குள்ள ஆழக்கிணற்றில் கப்பியில் தண்ணீர் அள்ளிக் குளிப்பார்கள். பின் கம்பன் சமாதியில் பூசை நடைபெறும். ‘மார்க்சிச’ வாதியான பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணனும், அந்தப் பூஜையில் கலந்துகொள்வார். அந்தப் பூஜைக்கு ரோஜா மலர் கொண்டுவருவது அவரது வழக்கமாயிருந்தது. காரைக்குடி விருந்துக்கு இராமேஸ்வரத்திலிருந்து, கோடூர் இராஜகோபால் சாஸ்திரிகள் முருங்கைக்காய் கொண்டுவருவார். பெரியவர்கள் ஒவ்வொருவரும் இங்ஙனமாய், தங்களைக் கம்பன் பணியில் இணைத்துக் கொண்டிருந்தனர். பூஜை முடிந்த பிறகு மாலை ஆறு மணியளவில், கம்பன் சமாதியிலேயே கூட்டம் ஆரம்பமாகும். பேரறிஞர்கள் மட்டுந்தான் அந்தக் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள். என் குருநாதரின் பேச்சுத்தான் கடைசிப் பேச்சாக இருக்கும். மறக்க முடியாத சம்பவங்கள் பலவற்றை, அந்தக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.

“பாவிகள் நரகத்திற்குப் போவார்கள்”
ஒருமுறை நாட்டரசன் கோட்டையில் நடந்த விழாவில், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் தலைமையில், பேச்சாளர் சிலர் பேசினர். சிறு மேசையிட்டு, பேச்சாளர்கள் பேச, பேரறிஞர்கள் எல்லாம் நிலத்தில் உட்கார்ந்திருந்து கேட்பார்கள். அன்று எல்லாப் பேச்சுக்களும் மிக அற்புதமாய் அமைந்தன. நிறைவாக என் குருநாதர் பேச எழுந்தார். இராமனைத் திருமாலாக விபரிக்கும், கம்பனின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு அடியாக நயங்கள் உரைத்து விளக்கம் செய்யத் தொடங்கினார். நான் முன்னரே சொன்ன தமிழ்க்கடல் இராமராசன் கீழே உட்கார்ந்திருந்தார். ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த அவர் ஒரு வைஷ்ணவப் பிராமணர். நெற்றியில் நாமம் வைத்திருப்பார். தமிழ் நூல்கள் முழுவதும் அவருக்குப் பாடமாய் இருந்தன. அதனாற்தான், அவரைத் ‘தமிழ்க்கடல்’ என்று அழைத்தனர். திருமால் பற்றி யார் எதைச் சொன்னாலும் உருகுவார். அன்று இராமனைத் திருமாலாய் உரைக்கும் கம்பன் பாடலை, என் குருநாதர் விளக்கம் செய்யச்செய்ய, தன்னை மறந்து அவர் உருகத் தொடங்கினார். ‘ஆஹா!’ ‘சபாஷ்!’ ‘அற்புதம்!’ ‘பிரமாதம்!’ என, தன்னை மறந்து வாய்விட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்கினார். அவர் ஆர்ப்பரிப்பில் மயங்கி, என் குருநாதரின் பேச்சும் உச்சநிலையைத் தொட்டது. குருநாதரின் பேச்சைக் கேட்டும், தமிழ்க்கடலின் ஆர்ப்பரிப்பைக் கேட்டும், சபை உறைந்துபோய் இருந்த நிலையில், பாடலின் நிறைவடியை அற்புதமாய்ச் சொல்லி முடித்தார் குருநாதர். ஆனந்தம் தாங்கமுடியாமல், தமிழ்க்கடல், “ஆஹா! ஆஹா!” என்று, தலையில் கைவைத்துக் கும்பிட்டார். அக்காலகட்டத்தில், சென்னைக் கம்பன் கழகம்
இராமாயணப் பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கம்பன் அடிப்பொடி, நீதியரசர் எம்.எம். இஸ்மாயில், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் போன்றோரே, அந்நூற்பதிப்புக் குழுவில் அங்கம் வகித்தனர். அவர்கள் பதிப்பித்த நூலில், என் குருநாதர் அன்று பேசிய பாடல் பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. பேச்சின் நிறைவில் சில நிமிடங்கள் மௌனித்த குருநாதர், தமிழ்க்கடலைப் பார்த்து, “சார், இந்தப் பாடலைப்போய் பிற்சேர்க்கையில் போட்டுட்டாங்க சார்!” என்றார். அவ்வளவுதான், தமிழ்க்கடலுக்கு அதுகேட்டு ஆவேசம் வந்துவிட்டது. உணர்ச்சிவயப்பட்ட அவர், தன் இரண்டு கரங்களையும் ஆகாயத்தைநோக்கி நீட்டி, “பாவிகள் நரகத்திற்குப் போவார்கள், பாவிகள் நரகத்திற்குப் போவார்கள்” என, ஒன்றுக்கு இரண்டு முறையாக பெரிய குரலெடுத்துச் சொன்னார். புத்தகப் பதிப்புக் குழுவினரில் சிலரும் சபையில் இருந்தார்கள். அவர்கள் யாரும் அவர் சாபத்தைத் தவறாய் எடுக்கவில்லையென்பது, புன்னகை பூத்த அவர்கள் முகங்களில் தெரிந்தது. இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.

கற்றோர் சங்கமம்
இளைஞர்களான நாங்கள் நாடு கடந்து வந்ததை, எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, கம்பன் அடிப்பொடி மகிழ்ந்தார். அப்போது தமிழக நிதி அமைச்சராய் இருந்த, இரா. நெடுஞ்செழியன் அவர்கள் விழாவிற்கு வருகை தர, எம்மேல் கொண்ட அன்பின் மிகுதியால், அவரை நேரே நாங்கள் தங்கியிருந்த அறைக்கே அழைத்து வந்து, எமக்கு அறிமுகம் செய்து வைத்தார் கம்பன் அடிப்பொடி. அங்குள்ளவர்கள் பிரமித்துப் போனார்கள். கம்பன் அடிப்பொடி எம்மீது காட்டிய அளவற்ற ஈடுபாட்டால், நாம், விழாவிற்கு வந்த அறிஞர்கள் அனைவரினதும், செல்லக் குழந்தைகள் ஆனோம். கம்பன் அடிப்பொடி, என் குருநாதர் ஆகியோரின் மனங்களில், அவ்விழாவின்போது நாம் இடம்பிடித்தோம். வாரியார் சுவாமிகள், கி.வா.ஜகநாதன், குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ. விஸ்வநாதன், எஸ். இராமகிருஷ்ணன், தமிழ்க்கடல் இராமஇராசன், எம்.எம்.இஸ்மாயில், திருக்குறள் முனுசாமி, கோதண்டராமக்கவுண்டர் புலவர் அருணகிரி போன்ற, மிகவுயர்ந்த சான்றோர்களின் சங்கமம் அங்கு நிகழ்ந்தது. இங்குதான் நண்பர் வக்கீல் த. இராமலிங்கம், சுதா சேஷையன், அசோக்குமார், இன்று உயர் நீதிமன்ற நீதியரசராய் இருக்கும் இராம சுப்ரமணியன் ஆகியோரை, இளைஞர்களாய்ச் சந்தித்தேன். கம்பன் அடிப்பொடியின் பேத்தி கண்ணகியை, குழந்தையாய் சந்தித்ததும் இங்குதான். இன்று தாயாய் அவள் எங்கள்மேல் செய்யும் அன்புக்கு ஓர் அளவில்லை.

தற்செயலாய்க் கிடைத்த சந்தர்ப்பம்
அக்காலத்தில் காரைக்குடி விழாவில் பேசுவது என்பது, பேச்சாளர்களுக்குக் கிடைக்கும் ‘ஒலிம்பிக்’ வாய்ப்பு. பெரிய பெரிய பேச்சாளர்கள் எல்லாம், அச்சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள். நிகழ்ச்சியில் பேசப்போட்டு வராதவர்களுக்கு, ஐந்தாண்டுத்தடை உத்தரவுச்சட்டம், கம்பன் அடிப்பொடியால் அப்போது அமுலாக்கப்பட்டிருந்தது. நாங்கள் சென்றபோது, நிகழ்ச்சியில் பேசவிருந்த பேச்சாளர் ஒருவர், தன் மகன் விபத்திற்குள்ளானதால், தன்னை நிகழ்ச்சியிலிருந்து விடுவிக்கும்படி வந்து கெஞ்ச, கம்பன் அடிப்பொடி என்மேல் கொண்ட அன்பினால், “சரி அதனை நீ பேசு” என எனக்கு வாய்ப்புத் தந்தார். நான் ஆனந்தத்தால் ஆகாயத்தில் மிதந்தேன். பாத்திரங்கள் பேசுவதாய் அமைக்கப்பட்ட நிகழ்ச்சி அது. நான் சபரியாய் மாறிப் பேசவேண்டும். இராமாயணத்தில் அப்படி ஒரு பாத்திரம் இருக்கும் விடயமே, அன்றுதான் எனக்குத் தெரியவந்தது. கம்பன் அடிப்பொடியிடம் புத்தகம் வாங்கிப்படித்து, சபரிப் பாத்திரமாய் மாறிப் பேசி அனைவரிடமும் பாராட்டுப் பெற்றேன்.

காரைக்குடியில் என் முதல் பேச்சு
மேடையில் நான் பேசியபோது, “சபரியாய் மாறுவதன் முன்பு, ஜெயராஜாய் ஒருசில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்” என்று கூறி என் பேச்சைத் தொடங்கினேன். “இலங்கையிலிருந்து வருகிறவர்கள், இங்கிருந்து காஞ்சிபுரம் பட்டு முதலியவற்றை, எடுத்துச் செல்ல விரும்பித்தான் வருவார்கள். நான் அதை விரும்பி வரவில்லை. வேறு இரண்டு பொருள்களை விரும்பி வந்திருக்கிறேன். அப்பொருள்களுக்கு உரியவர்கள் இச்சபையில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அப்பொருள்களை வாங்கித்தருவது, இச்சபையினரின் பொறுப்பு” என்றேன். அந்த அறிவுச் சபை, அவை என்ன பொருட்கள்? என்பதுபோல், என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தது. கம்பன் அடிப்பொடியினதும், என் குருநாதரதும் திருவடிகள்தான் அவை என்று, நான் சொன்னதும் கற்றோர் பலர் சிலிர்த்துக் கண் கலங்கினர்.

“நல்லா கதைச்சேப்பா”
இலங்கையரான நாம் தமிழ் நாட்டில் பேசும் போது, ஒரு பிரச்சினையைச் சந்திக்க வேண்டிவரும். இலங்கையரான எங்களுடைய சில தமிழ்ச் சொற்கள், அவர்களுக்குப் புரிவதில்லை. வேறு சில தமிழ்ச்சொற்களுக்கு, நாம் கொள்ளும் அர்த்தம் இன்றி, வேறு அர்த்தத்தை அவர்கள் கொள்வார்கள். அக்காலத்திலேயே மேடையில் அங்கு பேசுகையில், முடிந்த அளவு அவர்கள் தமிழில் பேச நான் முயற்சிப்பேன். ஆனாலும் சில சொற்கள் என்னை, ஈழத்தமிழன் என்று அவர்களுக்குக் காட்டிக்கொடுத்து விடும். இலங்கையில் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதை, நாம் ‘கதைத்தல்’ என்றே சொல்கிறோம். தமிழகத்தில ‘பேசுதல்’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். அங்கு கதைத்தல் என்றால், வீண்பேச்சுப் பேசுதல் என்று அர்த்தமாம். நான் சபரியாய்ப் பேசும்போது, எங்கள் வழக்கத்தில் “அனுமன் கதைத்தான்” என்று பேசிவிட்டேன். பேசி இறங்கியதும், அறிஞர்கள் பலரும், “நல்லா கதைச்சேப்பா” என்று என்னைக் கிண்டல் பண்ணினார்கள். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழக மேடைகளில் பேசி வருகிறேன். இன்றுங்கூட அவர்களது உரைநடை வழக்கை, என்னால் முழுமையாய்ப் பின்பற்ற முடியவில்லை. அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, அவர்கள் பாணியிலேயே நான் பேசினாலும், என் வாயிலிருந்து தவறிவரும் எங்களின் ஓரிரு வழக்குச் சொற்களை வைத்தே, என்னை ஈழத்துப் பேச்சாளன் எனக் கண்டுபிடித்து விடுகிறார்கள். “ஏன் நாங்கள் அவர்கள் பாணியில் பேசவேண்டும்? எங்கள் பாணியிலேயே பேசலாமே” என்று என்னைச் சிலர் கேட்பார்கள். கருத்தை மற்றவர்களுக்கு விளங்கச் செய்வதற்காகத்தான் மேடைப்பேச்சு. சொற்களுக்கான பொருள் விளங்காவிட்டால் கருத்து சபையைச் சேராது. ஆகவே அங்கு அவர்களுக்கு விளங்கும் தமிழிலேயே பேச முயற்சிப்பதில், தவறென்ன என்று அவர்களைக் கேட்பேன். லண்டன் இங்கிலிஷ், அமெரிக்கன் இங்கிலிஷ் என, ஆங்கிலத்தைப் பல்வேறு விதமாய்ப் பேசுவதில், நம்மவர்கள் பெருமை கொள்கிறார்கள். அதுபோல தமிழையும் பல்வேறு பாணியில் பேசத்தெரிந்திருப்பதும், தவறில்லை என்பதே என் கருத்து. அங்ஙனம் பேசியதால்த்தான் தமிழ்நாட்டு மேடைகளில், நிரந்தரமாய் எனக்கும் ஓரிடம் கிடைத்தது என்று நினைக்கிறேன்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


பாகம் 012ல்...


· திருவடிகள் பெற்ற படலம் · கம்பன் அடிப்பொடியிடம் கற்றவை · குருநாதரின் இல்லத் தொடர்பு · குருவிடம் திருவடி பெற்றேன் · குருநாதரின் வீடு · குருநாதரின் பெருந்தன்மைகள் · கலங்கிய ஆசிரியர்கள் · அன்றும் இன்றும்

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...