Thursday, September 29, 2016

அசிங்கத்தை என் சொல்ல? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

லகமெலாம் அதிர்ந்திடவே உரத்து ஓங்கி
         ஒலி எழுப்பி வானமது இருளாய்ப் போக
நலங்களெலாம் தரும் என்று மக்கள் எண்ண
         நாற்றிசையும் மின்னலதால் ஒளி கிளம்ப
வளம் குறைந்து வாடியதாம் பயிர்களெல்லாம்
         வரும் மழையால் நாமெல்லாம் உயர்வம் என்றே
பலம் பெருகக் காத்திருக்க பாவி அந்தப்
         பாழ் மழையும் இடியோடு நின்று போச்சாம்!

மேகங்கள் தனித்தனியாய் சிதறி நின்றால்
         மின்னலொடு இடியன்றி விளைவதென்னே?
பாகங்கள் பிரிப்பமெனும் பழைய காதை
         பலர் முன்னே புதுமையென விரித்தே நின்றார்.
தாகங்கள் தீர்த்திடவே தனியாய் நின்று
         தத்தமது நலம் நோக்கி இளையோர் தம்மில்
வேகங்கள் விளைப்பதனால் பயனும் உண்டோ!
         வேறும் ஒரு போர் தொடுத்து அழிதல் அன்றி.

எங்களது வீட்டிற்கு எழுக என்றே
         இறங்கி அவர் அன்போடு அழைத்தபோது
பங்கமறத் துறவியென பலவும்பேசி
         பார் வியக்க வெற்றிதனை அவரால் பெற்றார்
திங்கள் சில முடிதற்கு முன்னே மாறி
         திகழ் வீட்டிற்கினி நானே தலைவன் என்று
மங்களத்துப் பெரியர்தமை வெளியே தள்ளும்
         மதியினையே எங்ஙனமாய் ரசிக்கலாகும்?

வடக்கிருந்து தமிழரெலாம் வாடிச் சாக
         வளமான வாழ்வதனைப் பெற்று நின்று
மடக்கி விரல் சொல்வதற்கு மருந்திற்கேனும்
         மாண்பான தியாகம் எதும் செய்திடாது
சடக்கெனவே பதவிதனைப் பெற்று வந்து
         சரித்திரங்கள் பேசுகிறார் சரியும் அந்த
அடக்கமிலாப் பெரியாரை என்ன சொல்ல?
         அவரோடு நம் இனமும் அழியலாமோ!

வஞ்சனைகள் செய்தாரை வணங்கி நின்று
         வரமான தலைவர் இவர் என்றே சொல்லும்
நஞ்சனையார் கருத்தினையும் ஏற்கலாமோ?
         நலம் கெட்டு நம்மினமும் தோற்கலாமோ?
மிஞ்சுகிற பேரினத்தை அடக்க நல்ல
         மேன்மையுறு உலகு நமை அணையும் போது
விஞ்சு புகழ் கொள்தற்காய் ஒருமையுற்று
         விளங்குதலே அறிவுடமை ஒன்றாய்ச் சேர்வோம்.

வார்த்தைகளால் இளையோர்க்கு உணர்ச்சி ஊட்டி
         வந்த பயன் அதற்குள்ளே மறக்கலாமோ!
போர் அதனில் புழுவதுவாய்த் தமிழரெல்லாம்
         பொசுங்கியது நேற்றேதான் மீண்டும் மீண்டும்
வேர் கருக்க முனைவதுவும் அறிவோ சொல்வீர்?
         வேண்டாம் இவ்விளையாட்டு, வீணர் தம்மை
பார் ஒதுக்கச் செய்கின்ற காலம் தன்னில்
         பற்பலவாம் பகை பெருக்கி அழிதல் வேண்டா!

போர் அதனால் தமிழினமும் பட்ட துன்பம்
         போக்கவென உலகமெலாம் காத்து நிற்க!
ஆர் பெரியர் என்று இவர்கள் அடித்துக் கொள்ளும்
         அசிங்கத்தை என் சொல்ல? அறிவில் பங்கம்!
வாருகிற கண்ணீரும் வற்றித்தானே
         வருங்காலம் தெரியாது வாழ்வோர் தம்மை
நார் கிடக்க மலர் சிதைக்கும் குரங்காய் நின்று
         நம்மவர்கள் சிதைப்பதுவும் நன்றோ! சொல்லீர்

புலி செத்துப் போச்சு இனி எம்மை விட்டால்
         புகலிடமும் தமிழர்க்கு எவர்தான் என்று
தெளிவற்ற மதியோடு அறங்கள் மீறி
         திமிரோடு சுமந்திரனார், சேர்ந்துநின்றோர்;
வழியற்று காலடிக்கு வருவர் என்றே
         வஞ்சனைகள் செய்ததனால், கூடி நின்றோர்
நலிவுற்று மனம் வெம்பி பிறரை ஏற்று
         நகர்ந்ததனை உலகறிய நாமும் கண்டோம்.

கூட்டினையே பெயரதனில் மட்டும் வைத்து
         குழப்படிகள் செய்ததனால் விளைந்த நாசம்
ஏட்டினிலே உறவிருக்க இதயந்தன்னில்
         எழுந்த பெரும் பகையதனால் விளைந்த நாசம்
கூட்டமைப்பு எமதுரிமை என்றே சொல்லி
         குறை மதியார் திரிந்ததனால் விளைந்த நாசம்
வீட்டினையே உடைக்கின்ற நிலையைத் தந்து
         வேற்றார்கள் புகுதற்கு வழிகாட்டிற்றாம்.

சத்தியமாம் நல் வாழ்வு சேரவேண்டின்
         சாற்றுகிற தமிழணங்கு வாழவேண்டின்
புத்தியதால் சம்பந்தம் பொருந்த வேண்டின்
         போய் ஒழிந்து விக்கினங்கள் தீர வேண்டின்
நித்தியமாய் பகை ஒழிந்து நிமிர வேண்டின்
         நெஞ்சமதில் அன்பதுவும் நிகழவேண்டின்
வித்தையெலாம் விடுத்தேதான் இரண்டு பக்க
         வீரியர்கள் பேசட்டும் விளைவு தோன்றும்.
                                ✦✦✦

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...