Thursday, November 24, 2016

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 16 | மீண்டும் படிப்பைக் குழப்பினோம்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

இந்தியாவுக்குப் படிக்கச் சென்றோம்

ஏ.எல். பரீட்சையில் நான் இரண்டாந்தரமும் படுதோல்வியடைந்தேன்.
குமாரதாசன் சுமாராய்ச் சித்தியடைந்தான்.
குமாரதாசன் வீட்டில் பெருங் கொந்தளிப்பு.
கம்பன் கழகத்தோடு திரிந்து திரிந்து,
படிப்பை விட்டுவிட்டதாய் அவன் வீட்டில் ஆத்திரப்பட்டார்கள்.
நியாயமான கோபம்.
குமாரதாசன், அவன் வீட்டில் முதல் ஆண்பிள்ளை.
அவன் வீழ்ச்சி மற்றைய பிள்ளைகளையும் பாதிக்கும் என குடும்பத்தார் கருதினர்.
அதனால், படித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குமாரதாசன்.
இதனால் இந்தியா சென்று படித்தாலென்ன?
என்ற எண்ணம் எமக்குத் தோன்றியது.
குமாரதாசன் வீடும் அதனை ஆதரித்தது.
கம்பன் அடிப்பொடியுடன் தொலைபேசியில் பேசினோம்.
அவர் அப்போது அழகப்பா பல்கலைக்கழக ‘செனற் மெம்பராய்’ இருந்தார்.
நாம் பேசியதும் அவர் கருணையோடு,
தான் ‘அட்மிஷன்’ எடுத்துத் தருவதாய்ச் சொல்லி,
உடன் எம்மைப் புறப்பட்டு வரும்படி அழைத்தார்.
குமாரதாசன் வீட்டில் பணம் ஒழுங்கு செய்து அவரை அனுப்பினார்கள்.
என்பாடு சங்கடமாய்ப் போயிற்று.

காப்பைக் கழற்றித் தந்தார்

எங்கள் வீட்டிலும் அப்போது கஷ்டமான சூழ்நிலை.
நான் படித்து உருப்படுவேன் என்ற நம்பிக்கையும்,
என் வீட்டாருக்கு அதிகம் இருக்கவில்லை.
அதனால் இந்தியா செல்லப் பணத்திற்கு என்ன செய்வது?
என்று மிரண்டேன்.
எனது நண்பன் மாணிக்கத்தின் அக்கா,
என்மேல் நிறைந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்.
தன் தம்பியர்களுள் ஒருவனாகவே என்னையும் அவர் கருதுவார்.
என் சூழ்நிலையை அவரிடம் தயங்கித்தயங்கிச் சொன்னதும்,
நான் இந்தியா சென்று படிப்பதற்காக,
தன் காப்புகளை அடகு வைத்து எனக்குப் பணம் தந்தார்.
முதன் முதலாக நானும் குமாரதாசனும்,
‘பிளேனில்’ இந்தியா சென்றோம்.

அட்மிஷன் கிடைத்தது

நாம் காரைக்குடி சென்று சேர்ந்ததும்,
“ஏன் இவ்வளவு தாமதம்?” என,
கம்பன் அடிப்பொடி சத்தம் போட்டார்.
நாங்கள் எந்தக் ‘கோர்ஸ்’ படிக்கப் போகிறோம் என்று தெரியாததால்,
தன் செல்வாக்கைக் கொண்டு எல்லாக் ‘கோர்ஸ்களிலும்’,
இரண்டிரண்டு இருக்கைகளை அவர் தடுத்து வைத்திருந்தார்.
மறுநாள் காலை அவரே தனது காரில் எங்களை,
பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்கிருந்த மரியாதை கண்டு ஆச்சரியப்பட்டோம்.
துணைவேந்தர் வாசலுக்கு வந்து நின்று அவரை வரவேற்றார்.
அவருக்கென ‘ஸ்பெஷலாய்’ இளநீர் வாங்கி வெட்டி வைத்திருந்தார்.
கம்பன் அடிப்பொடி துணைவேந்தரிடம்,
“இவங்கள என் பிள்ளைங்களப்போல நினைச்சு,
நீங்க பாத்துக்கணும்” என்றார்.
துணைவேந்தர் எங்கள் கல்வித் தகுதிகளை ஆராய்ந்து,
குமாரதாசனுக்குப் பல்கலைக்கழக ‘அட்மிஷன்’ கொடுப்பதாகவும்,
எனக்கு ‘பிளஸ் டூ’ படிக்க இடம் வாங்கித் தருவதாகவும் சொன்னார்.
அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை.
அதற்கான காரணத்தைச் சொல்லுகிறேன்.

மனதைக் குழப்பிய சிந்தாமணிப் பத்திரிகை

‘அட்மிஷனுக்காக’ இந்தியா வந்தபோது,
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்றே நாம் விமானத்தில் பயணித்தோம்.
‘பிளேனில்’ படிப்பதற்காக எங்களுக்கு,
“சிந்தாமணிப்” பத்திரிகை தரப்பட்டது.
அப்போது, “தினபதி” என்ற பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது.
அது அரச சார்பான பத்திரிகை.
அதனது ஞாயிற்றுக்கிழமைப் பதிப்பே “சிந்தாமணிப்” பத்திரிகை.
“சிந்தாமணிப்” பத்திரிகையின் ஆசிரியராக,
எஸ்.ரி. சிவநாயகம் இருந்தார்.
அவரைப்பற்றி முன்னரேயே சொல்லியிருக்கிறேன்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் நான் பேசியது பற்றி,
எங்கள் இருவரதும் படத்தையும் வெளியிட்டு,
தனது “மாமதுரைச் சீமையிலே தேமதுரத் தமிழோசை” எனும்,
மதுரை மாநாடு பற்றிய கட்டுரைத் தொடரில்,
அந்த வாரம் எஸ்.ரி. சிவநாயகம் எழுதியிருந்தார்.
மதுரை மாநாட்டில் நான் பேசிய பேச்சினைத் தக்கபடி விமர்சித்து,
“இவர்களால் எதிர்காலத்தில்,
ஈழத்து இலக்கிய உலகம் பயன்பெறும்” என்பதாய்,
அக்கட்டுரையில் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அவரின் பாராட்டைப் படித்ததும்,
எனது மனம் சங்கடப்பட்டுப் போனது.
இத்தனை பேரின் நம்பிக்கையையும் பெற்ற பின்னர்,
எங்கள் சுயநலத்திற்காக,
கம்பன் கழகத்தை விட்டுவிட்டுச் செல்வதா?
கேள்வி எழ, நான் குழம்பிப்போனேன்.
அக்குழப்பம்தான் தூக்கமின்மையின் காரணம்.

மீண்டும் படிப்பைக் குழப்பினோம்

இரவு முழுவதும் குழம்பிய பின்னர்,
கற்பதற்கு கம்பன் அடிப்பொடி பெற்றுத்தந்த வாய்ப்பினை உதறி,
மீண்டும் கம்பன் கழகம் நடத்த யாழ் வருவதாய் நான் முடிவு செய்தேன்.
என்மேல் கொண்ட அன்பினால்,
தனக்குக் கிடைத்த பல்கலைக்கழக வாய்ப்பையும் உதறிவிட்டு,
குமாரதாசனும் என்னுடன் திரும்பிவர முடிவு செய்தான்.
காலையில், எங்கள் முடிவைச் சொன்னதும்,
கம்பன் அடிப்பொடிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.
“என்ன விளையாடுறீங்களாடா?” என்று சத்தம் போட்டார்.
கம்பன் கழகத்தைத் தொடர்ந்து நடாத்தவேண்டும் என்ற,
ஆசையினாற்தான் அந்த முடிவினை நாம் எடுத்ததாய்ச் சொன்னதும்,
அவர் கோபம் சற்றுத் தணிந்தது.
“அப்படியானால் கடிதம் மூலமாவது (Correspondence) படியுங்கடா!” என்று,
புத்திசொல்லி அதற்கு வேண்டியனவற்றையும் செய்து தந்து,
எம்மை அனுப்பி வைத்தார்.
வீடு வந்ததும் குமாரதாசன் வீட்டில் பூகம்பம் வெடித்தது.
பல்கலைக்கழக வாய்ப்பினை விட்டுவிட்டு நாம் திரும்பிவந்தபோது,
குமாரதாசனின் பெற்றோர் எவ்வளவு வருந்தியிருப்பார்கள் என்பதை,
இன்றுதான் என்னால் உணர முடிகிறது.
பெறாத பிள்ளைகள்மேல் பாசம் வைத்து,
அவர்களின் செயல்களில் அளவுக்கதிகமாக அக்கறை காட்டி நிற்கும்,
இன்றைய எனது நிலையில்,
அப்பெற்றோரின் அன்றைய மனவருத்தத்தை
என்னால் நன்கு உணர முடிகின்றது.
அவர்கள் எப்படி எம்மைச் சகித்தார்களோ என
நினைந்து இன்று வருந்துகிறேன்.
இன்று அவர்கள் உயிரோடு இல்லை.
துன்பங்கள் என்னைத் தாக்கும்போதெல்லாம்,
அவர்களை வருத்தியதாற்தான் வருந்துகிறேனோ? என,
நினைத்துக்கொள்வேன்.
தெய்வங்களாகிவிட்ட அந்த ஆன்மாக்கள் என்னை மன்னிக்குமா?

கம்பர் எந்த வட்டாரம்?

குமாரதாசன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை பெரிதாகி,
கழகம் அவன் வீட்டை விட்டு வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது.
வித்துவான் ஆறுமுகத்திடம் கழக அலுவலகத்திற்கென,
வாடகைக்கு ஒரு அறையாவது தேடித்தரும்படி கேட்டுக்கொண்டோம்.
எங்களுக்காக அவரும் பல இடங்களிலும் இடம் தேடினார்.
யாழ் பெருமாள் கோயிலடியில் அவரது உறவினர் வீட்டில்,
ஓர் அறை இருப்பதாய் அறிந்து, எங்களை அங்கு கூட்டிச்சென்றார்.
அந்த வீட்டுப் பெண்மணி வித்துவானின் உறவினர்.
அவர் வித்துவான்மேல் பெரும் மதிப்புக்கொண்டவர்.
வித்துவானைக் கண்டதும்
“மாமா வாருங்கோ” என வரவேற்றார்.
அப்பெண்மணிக்கு,
எங்களைப் பெருமையாய் அறிமுகம் செய்ய நினைந்த வித்துவான்,
“தங்கச்சி இவங்களைத் தெரியுதா?
இவங்கள்தான் கம்பற்ற ஆக்கள்” என்று அறிமுகம் செய்தார்.
அந்தப்பெண்மணி திருதிருவெனக் கொஞ்ச நேரம் விழித்தார்.
மிகச் சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண்மணி அவர்.
அவருக்கு கம்பனைத் தெரிந்திருக்கவில்லை.
அவர்களின் ஊரான புங்குடுதீவு,
வட்டாரங்களாய்ப் பிரிக்கப்பட்டிருந்தது.
வித்துவான், எங்களைக் “கம்பற்ற ஆக்கள்” என்றதும்,
புங்குடுதீவைச் சேர்ந்த யாரோ ஒருவரைத்தான்,
வித்துவான் சொல்வதாய் நினைந்து,
அந்தப்பெண்மணி வஞ்சகமில்லாமல்,
“கம்பரா? அவர் எந்த வட்டாரம் மாமா?” என்றார்.
இந்த இடமே வேண்டாம் என்று தப்பித்து வந்தோம்.

கழகத்தின் இரண்டாவது அலுவலகம்

பின்னர் கந்தர்மடத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து,
எமது இரண்டாவது அலுவலகத்தை அதில் ஆரம்பித்தோம்.
யாழ் அரசடி வீதியில் அந்த அலுவலகம் இயங்கியது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள,
‘ரயில்’ கடவைக்கு அருகில் அந்த வீடு இருந்தது.
வீட்டுக்காரர் வீட்டின் ஓரமாக இருந்த பகுதியை,
எமக்கு வாடகைக்குத் தந்தார்.
குமாரதாசனும் வீட்டோடு கோபித்துக்கொண்டு வந்து
என்னுடன் தங்கினான்.
நல்ல பெற்றோரின் மனதை நோகச்செய்து,
நான் பாவம் தேடிய காலம் அது.
சில வருடங்களாக இங்குதான் கம்பன்கழகம் இயங்கியது.
ஒரு சிறிய அறை.
அதனுடன் சேர்ந்து ஒரு சிறு சமையலறையும் இருந்தது.
நண்பர்களெல்லாம் இந்த அறைக்கு வருவார்கள்.
சமையல், சாப்பாடு என்று அறை எப்போதும் கலகலக்கும்.
என் குருநாதர் இந்த அறையிலும் தங்கியிருக்கிறார்.
எந்தவசதியும் இல்லாத அந்த இடம்,
கழகத்தின் அலுவலகம் ஆனதும்,
பல இலக்கியவாதிகள் வந்துபோகும் இடமாயிற்று.

எஸ்.ரி. சிவநாயகம்

எங்கள் கழகத்தின் வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்டவர்களில்,
எஸ்.ரி. சிவநாயகம் அவர்களும்  ஒருவர்.
மதுரை மாநாட்டில் நான் பேசிய பேச்சைக் கேட்டு
என்மேல் அன்பு கொண்டவர்.
மாநாட்டில் என் உரை பற்றி நிகழ்ந்த குளறுபடிகள் பற்றியும்,
நாம் நாடு திரும்பியதும்,
நடந்த உண்மையைப் பத்திரிகைகளுக்கு எழுதியது பற்றியும்
முன்னமே சொல்லியிருக்கிறேன்.
எல்லாப் பத்திரிகைகளும் எங்கள் விளக்கத்தை வெளியிட்டிருந்தன.
அப்போது, சிந்தாமணிப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த,
எஸ்.ரி. சிவநாயகம் மட்டும்,
செய்தியை வெளியிடாமல் எனக்குப் பதில்க் கடிதம் எழுதியிருந்தார்.
அப்போதுதான் முதன்முதலாக
எஸ்.ரி. சிவநாயகத்தோடு தொடர்பு ஏற்பட்டது.
பல வாரம் தொடர்ந்த அக்கட்டுரைத் தொடரில்,
எங்களை மிகவும் பாராட்டி அவர்  எழுதியிருந்தார்.
பிறகு, அடிக்கடி எங்களோடு தொடர்புகொண்டார்.
கொழும்பில் ஒரு கம்பன் விழா நடாத்த வேண்டுமென எங்களைத் தூண்டினார்.
அவர் விருப்பப்படி,
பிறகு கொழும்பில் ஒரு கம்பன் விழாவினை நாம் நடாத்தினோம்.
அந்த விழாப்பற்றியும் அவரது உதவிகள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


பாகம் 017ல்...


· குருநாதரின் இரண்டாவது வருகை

· ஆறாவது கம்பன் விழா 
· குருநாதரின் பெருந்தன்மை
· அப்பம் முப்பழம்!
· எஸ்.ரி. சிவநாயகத்தின் பங்களிப்பு
· அமைச்சர் இட்ட விருந்து
· மறக்க முடியாத சில சம்பவங்கள்

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...