•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, December 16, 2016

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

➧ ருப்படுமா தமிழ்நாடு' எனும் உள்ளக் கொதிப்போடு இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து தராதரத்தில் போக்கியே பொன்னை அந்தப்புரத்தினில் சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ எனும் பாரதியின் கொதிப்பை தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் உருவாக்க நெஞ்சம் கொதித்துச் சுருண்டு போகிறது.

 அறம் உரைத்த ஆயிரம் பெரியவர்கள் வாழ்ந்த மண்ணில் அநியாயம் கேட்பாரின்றித் தலைவிரித்து ஆடுகிறது. விபரம் உரைக்காமல் என் கொதிப்பை வெளிப்படுத்துவது தவறென்று தெரிவதால் இனி விபரத்தை விரிவாய்ச் சொல்கிறேன்.

➧ தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிலநாட்களின் முன் திடீரென மறைந்துபோனார். அவர் மறைவு ஏற்படுத்திய அதிர்வைவிட அம்மறைவில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளும், அவர் மறைவின்பின் அவர் கட்சியில் நடக்கும் கூத்துக்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் மிகமிக அதிகமாய் இருக்கின்றன.

➧ வாழும் காலத்தில் ஓர் மர்மமனுசியாய் இருந்த ஜெயலலிதா இப்போது தனது மறைவிலும் மர்மங்களை நிலைநாட்டிப் போயிருக்கிறார் அவர் மரணம் சார்ந்த சம்பவங்களே என் கொதிப்பின் காரணங்கள்.

➧ நடிகையாய் அறிமுகமாகி, புகழின் உச்சம் தொட்டு பின் திடீரெனச் சிலகாலம் தலைமறைவாகிப் போன ஜெயலலிதா 1981 இல் மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

➧ அவ் அறிமுகத்தின் பின்னர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை அடுத்தடுத்துப் பெற்று அரசியலில் தன்னை அசைக்க முடியாத ஒரு சக்தியாக உறுதிப்படுத்திக் கொண்டார் அவர்.

➧ எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவு நெருக்கம் பரகசியமானது. எம்.ஜி.ஆரை வளைத்துப் போட்டுக்கொண்ட துணிவில் கட்சியின் மூத்த உறுப்பினர்களையெல்லாம் உதாசீனம் செய்து, பலரினதும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார் ஜெயலலிதா.

➧ 1987 இல் எம்.ஜி.ஆர். மறைந்தபோது ராஜாஜி மண்டபத்தில் இன்று ஜெயலலிதாவின் உடல் கிடந்த அதே இடத்தில் எம்.ஜி.ஆரின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. இன்று ஜெயலலிதாவின் உடலின் தலைமாட்டில் சசிகலா நின்றது போலவே அன்று எம்.ஜி.ஆர். உடலின் தலைமாட்டில் ஜெயலலிதா நின்றிருந்தார்.

➧ ஒரேயொரு வித்தியாசம்! ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டுக் கிடந்த 72 நாட்களில் யாரும் அறியாமல் நிலத்தின் கீழ் பரவும் கறையான் போல அதிகாரத்தைத் தனக்காக்கி அனைவரையும் தன்கீழ் கொணர்ந்து, எதிர்பாரின்றி எதேச்சதிகாரமாய் ஜெயலலிதாவின் தலைமாட்டில் நின்றிருந்தார் சசிகலா. இது இன்று நடந்தது.

➧ ‘எம்.ஜி.ஆர் போய்விட்டார் இனி இவளை ஒதுக்கியே தீருவோம்’ எனும் வன்மத்தோடு எதிரிகள் சூழ்ந்து நிற்க அத்தனை பேரையும் எதிர்த்து நின்று தனி ஒரு மனுசியாய் எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் துணிவோடு வலிந்து இடம்பிடித்து நின்றார் ஜெயலலிதா. இது அன்று நடந்தது.

➧ குண்டூசிகளால் குத்தப்பட்டும், சவஊர்வல வண்டியிலிருந்து தள்ளப்பட்டும், எதிரிகள் செய்த ஆயிரம் பழிவாங்கல்களையும் தாங்கி நின்ற அன்றைய ஜெயலலிதாவின் இருப்பில் ஓர் தலைவிக்கு இருக்கவேண்டிய முனைப்பையும், நிமிர்வையும் காணமுடிந்தது.

➧ இன்று அடிமைகளை ஆண்டு நின்ற சசிகலாவின் இருப்பில் சூழ்ச்சியும், வஞ்சகமும் மட்டுமே வெளிப்பட்டு நின்றன.

➧ அன்று அடிமையாய் எதிர்த்து நின்றார் ஜெயலலிதா. இன்று அடிமைகளை வளைத்து நின்றார் சசிகலா.
அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசங்கள் இவையே.

➧ ஆட்சிக்கு வந்தபிறகு, ஜெயலலிதாவின் செயற்பாடுகள் இருளும் ஒளியுமாய் வெளிப்பட்டு உலகின் பார்வையை அவர்மேல் திருப்ப வைத்தன.

➧ ஒருகாலத்தில் தனது இயலாமையைப் பயன்படுத்தி தன்னைப் பந்தாடிய அனைவரையும் தான் பந்தாடி மகிழ்ந்தது அவரின் இருள் பக்கம். அந்த இருள் பக்கத்தில் வஞ்சகமும், வக்கிரமும், பழி உணர்ச்சியும் பரவிக்கிடந்தன.

➧ ஒரு பெண்ணாய், நடிகையாய், தன்னைக் கீழ்மை செய்த ஆண்கள் அனைவரையும் அடக்கி அடிமைகளாக்கி, முடிந்த அளவு இழிவு செய்தார் ஜெயலலிதா. அச்செயல்கள் அவருக்குப் பெரும் எதிர்ப்பைத் தேடித்தந்திருக்கவேண்டும்.

➧ ஆனால் தம்தேவைகளுக்காக மானம் சிறிதுமின்றி கைகட்டி, வாய்பொத்தி வணங்கி நின்ற தலைவர்களின் இழிநிலை ஜெயலலிதாவின்மேல் வந்திருக்கவேண்டிய வெறுப்பை அத் தலைவர்கள் மேல் ஆக்கி மக்கள் மனதில் அவரை ஓர் அல்லிராணியாய்ப் பதிவு செய்தன.

➧ மற்றொரு புறம் ‘நான் இருக்கப் பயமேன்?’ என்று மக்களுக்குத் தெம்பு கொடுத்து, மக்களின் உணர்வும், தேவையும் அறிந்து இலவசங்களால் ஏழைகளை மகிழ்வித்து, எவருக்கும் அஞ்சாமல் மத்திய ஆட்சியாளர்களையும் தன்னைத் தேடிவரச்செய்த, அவரது ஆட்சியிலிருந்த ஆண்மையும், விலைபோகாத்தன்மையும், நிர்வாகத்திறமையும் ஜெயலலிதாவின் ஒளிப்பக்கங்கள்.

➧ மத்தியிலோ, மாநிலங்களிலோ ஆட்சியாளர்களுக்கு அஞ்சாது தன் கொள்கையில் உறுதிபட நின்ற அவரது அசையாத் தன்மையில் ஆணவம் மிகைபடத்தொனித்தாலும் தன்தேவைகளுக்காகத் தமிழர்களதும், தமிழ்நாட்டினதும் தன்மானத்தை இவர் விட்டுக்கொடுக்கமாட்டார் எனத் தமிழ்மக்களை நினைக்கவைத்து,
மாபெரும் ராஜதந்திரியான கலைஞரின் நுட்பமான சுழிப்புக்களை எல்லாம் உடைத்தெறிந்து ஓரங்கட்டி, தமிழ்நாட்டு ஆட்சியைத் தனித்துப் பலதரம் கைப்பற்றினார் அவர்.

➧ அமைச்சர்களைக் காலில் விழவைப்பது, அருகிருக்க அனுமதியாதது காரணம் உரைக்காமலே அடிக்கடி அவர்களை மாற்றியது, சட்டமன்றத்தைத் தனது பாராட்டு வைபவ மேடையாக்கியது, அளவுக்கதிகமாகச் சொத்துக் குவித்து அதிகாரம் செய்தது போன்ற ஜெயலலிதாவின் செயல்களில் இருந்த, ஜனநாயகத்தை மதியாத அசுரத்தனம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது உண்மையிலும் உண்மை.

➧ ஆனாலும் மக்களின் மனம் அறிந்து அந்தக் கசப்பையெல்லாம் சில விடயங்களின் மூலம் அதிநுட்பமாய்த் துடைத்தெறிந்து மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார் அவர்.

➧ ஆரம்பத்தில் வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணமும், அத்திருமணத்தில் அலங்கார பூஷிதையாய் தன் தோழியோடு வந்து அடித்த கூத்துக்களும் என தன் தனிப்பலயீனங்களால் சமநிலையற்றுத் தடுமாறிய ஜெயலலிதா தன் ஆணவப்போக்கை மாற்றாமலே நிர்வாகத்தில் நிலைகொண்டது ஓர் அதிசயம்.

➧ கடைசித் தேர்தலில் கூட கூட்டுச்சேர நினைந்த பெருங்கட்சிகளைப் புறந்தள்ளி, தனித்து நிற்கும் தற்துணிவோடு வெற்றியைத் தனதாக்கி வீறுகொண்டு எழுந்தார்..

➧ பலதரமாய் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆட்சியாளர்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டினார். தன்னைச் சரிவர மதிக்கவில்லை என்று காரணம் காட்டி மத்திய ஆட்சியாளர் நடத்திய கூட்டங்களிலிருந்து வெளிநடப்புச் செய்தார். உலகத்தலைவர்களின் சந்திப்பில் கூனிக்குறுகி நின்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போல் அல்லாமல், தன் கம்பீரம் சிறிதும் குன்றாது உலகத்தலைவர்களை சமநிலைப்பட்டுச் சந்தித்தார். இவை அவர் ஆட்சியில் அனுபவப்பட்டதற்காம் சான்றுகள்.

➧ இத்தனை அனுபவங்களின் பின்னரும் கூட கடைசிவரை மாறாதிருந்த ஜெயலலிதாவின் ஆணவச் செயல்களால், நடுநிலையுள்ள பலரும் அவர்மேல்  வெறுப்புக் கொண்டிருந்தது நிஜம்.

➧ ஆட்சியில் முதிர்ச்சி அடைந்தாற்போல தனது பலயீனமாய் இருந்த தற்புகழ்ச்சியையும், தன்முனைப்பையும் தாண்டியும் வெளிவருவார் அவர் என எதிர்பார்த்த அனைவரும் மாற்றமில்லா அவரது ஆணவ நடவடிக்கைகள் கண்டு பெரும் அதிருப்தியுற்றனர்.

➧ அத்தகையோர் நோயுற்று ஜெயலலிதா அப்பலோவில் அனுமதிக்கப்பட்டார் எனும் செய்தி கேட்டபோது,
பெருமளவில் கலங்காதது உண்மையே.

➧ ஆனால் வைத்தியசாலையில் அவர் இருந்த 72 நாட்களிலும் அடுத்தடுத்து விழுந்த மர்மமுடிச்சுக்கள் அவர்மீதான அனுதாப அலையை வானுயரக் கிளப்பி அவர் மறைவின்போது வெறுத்தோரையும் விம்மி அழ வைத்துவிட்டன. அவர் வாழ்வில் இருந்த இருளை மரணம் துடைத்து மாண்பு தந்தது.

➧ இங்குதான் என் மனக்கொதிப்பின் காரணங்கள் ஆரம்பமாகின்றன. வெறும் காய்ச்சல் என்று அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு, ‘இன்று வருகிறார், நாளை வருகிறார்’ என்று மாறி மாறிப் பொய்களை அடுக்கி அவர் உடல்நிலை பற்றிய உண்மை அறியமுடியாமல் ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் அலைக்கழித்தபோதுதான் மக்கள் மத்தியில் அவர்மீதான அனுதாப அலைகள் ஓங்கி எழும்பத் தொடங்கின.

➧ அரைவாசி நாட்கள் கடந்த பின்புதான் முதல்வர் உயிராபத்தில் இருக்கிறார் எனும் உண்மையே தொண்டர்களுக்குத் தெரியவந்தது. தலைவர்களுக்கும்தான்!

➧ யார் இப்பொய்யை உருவாக்கி வளர்த்தார்கள் எனும் ரகசியம் இன்றுவரை தெளிவாய் வெளிப்படவில்லை என்பது அதிசயமே. இப்பொய் வளர்ப்பில் புகழ்பெற்ற அப்பலோ நிர்வாகமும் இணைந்து கொண்டது கொடுமையிலும் கொடுமை.

➧ கடைசி நான்கு நாட்களிலும் கூட துடிதுடித்துக் கதறிக் கொண்டிருந்த தொண்டர்களுக்கு பொய்யின் மேல் பொய்யாய் உரைத்த பின்னர்தான் இறுதியில் முதல்வரின் இறப்புச் செய்தி வெளியிடப்பட்டது.

➧ ஜெயலலிதா வைத்தியசாலையில் இருந்த அந்த 72 நாட்களிலும் எவராலும் அவரை அணுகக்கூட முடியவில்லை.

➧ கவர்னர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என ஜெயலலிதாவைக் காண ஓடோடி வந்த பலரும் வெறும் வைத்தியசாலைக் கட்டிடத்தை மட்டும் கண்டு கவன்று திரும்பினர்.
ஆனாலும் அவர்கள் அனைவரும் தவறாமல் ‘முதல்வர் நலமாய் இருக்கிறார்’ என்ற ஒரே செய்தியை கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொன்னபோது யாரினதோ தூண்டுதலின் பேரில்த்தான் இவர்கள் அறிக்கை விடுகிறார்கள் என்பதை உணரமுடிந்தது.
 
➧ கேள்விகள் இங்குதான் ஆரம்பமாகின்றன.
கவர்னர், மத்திய அமைச்சர்கள் என எவராலும் அணுகமுடியாத வகையில் முதல்வரைச் சுற்றி இரும்புக்கோட்டை அமைத்திருந்தது யார்?
சசிகலா குழுவினர் என்பதே இக்கேள்விக்கான பதில் என அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் இக்காரியத்தை இயற்ற அவர்களால் எப்படி முடிந்தது என்பது இன்றுவரை பரம ரகசியமாகவே இருக்கிறது.
கட்சியில் எந்த அதிகாரமும் இல்லாமலிருந்தும் அதிகாரம் உள்ள அமைச்சர்களைக் கூட ஆட்டிப்படைக்க இவர்களால் முடிவது எப்படி?
அக்காலத்தில் எம்.ஜி.ஆர் மரணித்ததும் அதுவரை ஜெயலலிதாவிற்குப் பயந்திருந்த அனைவரும் அவரை ஓரம் கட்டுவதில் வெளிப்பட முனைப்புக் காட்டினர். ஆனால் ஜெயலலிதா மறைந்ததும் சசிகலாவை ஓரம்கட்ட அங்ஙனம் எவரும் முனைந்ததாய்த் தெரியவில்லை. அதற்கான காரணம் என்ன?
வைத்தியசாலையில் முதலமைச்சர் இருந்தகாலத்தில் அரச இயந்திரத்தை இயக்கியது யார்?
ஒரு மாநில முதலமைச்சர் யார் பொறுப்பில் இருக்கிறார் என்பது கூட தெரியாத நிலையில் மத்தியஅரசு தலையிட்டு முதலமைச்சர் பற்றிய செய்தியை அறிந்து வெளிப்படுத்தாதது ஏன்?
நோயுற்ற முதலமைச்சரை கவர்னர் கூட கட்டாயம் பண்ணி காண நினையாதது எதனால்?
மாநில அரசுக்குப் பொறுப்பாயிருந்த கவர்னர் யாரை நம்பி அக்காலத்தில் அரசின் இயக்கங்களை அனுமதித்தார்?
யாரின் தூண்டுதலில் மருத்துவமனை வட்டாரம் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது?
நோயுற்றிருந்த முதலமைச்சர் நலமுற்றார் என்று அறிவித்தபோதும் அவரது ஒரு புகைப்படம்தானும் வெளியிடப்படாதது எதனால்?
தனக்கு அடுத்து தலைமை எவரிடம் செல்லவேண்டுமென ஒருவேளை ஜெயலலிதா அறிவித்து விடலாம் எனும் காரணத்தினால்த்தான் எவரையும் சந்திக்கவிடாமல் அவர் தடுக்கப்பட்டாரா?
எங்கெல்லாமோ நுழைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்கும் தமிழ்நாட்டின் புலனாய்வுப் பத்திரிகைகள், ஆதாரத்தோடு முதல்வர் பற்றிய ஒரு உண்மைச் செய்தியைத்தானும் வெளியிடமுடியாமற் போனது ஏன்?
முதல்வரின் இறுதிச்சடங்கில் அதிகாரபூர்வமாய்க் கலந்து கொண்ட பிரதமர் எங்ஙனம் தற்காலிக முதலமைச்சரைத் தாண்டி கட்சியிலோ நிர்வாகத்திலோ பங்கேற்காத ஒரு பெண்ணுக்கு முதன்மை கொடுத்து அவரைச் சந்தித்தார்?
இறுதிக்கிரியைகளையும் நிர்வாகத்தையும் திட்டமிடும் உரிமையை சசிகலாவுக்கு வழங்கியது யார்?
ஜெயலலிதாவினாலேயே வெறுத்துத் துரத்தப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதா வீழ்ந்த மறுகணமே அவரைச் சூழ்ந்துகொண்டது எப்படி?

➧ இவைதவிர ஜெயலலிதாவின் சடலத்தின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் பற்றியும் சடலத்தில் கால்கள் இருந்தனவா என்பது பற்றியும் 72 நாட்கள் கடும்நோயுற்றிருந்த பின்பும் முதல்வரின் உடல் முன்பு போலவே இருந்த ரகசியம் பற்றியும், இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் ஆயிரமாய்க் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

➧ எந்தக் கேள்விக்கும் இன்றுவரை சரியான விடைகளில்லை. இருட்டறையில் கறுப்புப்பூனையைத் தேடிய குருட்டு மனிதன் போல மறைந்து கிடக்கும் உண்மைகளைத் தேடித்தேடி விடைகாணாது விம்மி நிற்கிறது தொண்டர் கூட்டம்.

➧ உண்மை வெளிவராத நிலையில் தொண்டர்களின் உயிரை நடுங்கவைக்கும் கற்பனைகள் புற்றீசல் போலக் கதைகதையாய்க் கிளம்புகின்றன.
நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார்,
மூன்று மாதங்களின் முன்னரே இறந்து போனார்,
தன் உண்மை நிலையை உரைக்க இடம்கொடாது சிறைவைக்கப்பட்டார்,
சொத்துக்களைத் தமதாக்க தனித்து வைக்கப்பட்டு சிலரால் மிரட்டப்பட்டார்,
அதுவரை அடக்கி ஆளப்பட்டவர்களால் அவர் அடக்கி ஆளப்பட்டார்,

➧ இப்படியாய் ஆயிரம் வதந்திகள் உலா வந்தபடி இருக்கின்றன.

➧ உண்மைகள் ஏதுமே வெளிப்படாததால் ஐயங்களை உண்மையாய் நம்பவேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் புழுவாய்த் துடித்து நிற்கிறான் உண்மைத் தொண்டன்.

➧ இறந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், அண்ணாவையும் பின்தள்ளி சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போஸ்ரர்கள் தமிழ்நாடெங்கும் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

➧ அதிகாரம் மிக்க கட்சியின் பொதுச்செயலாளர் பதவி அடுத்து சசிகலாவிற்குத்தான் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. ஓரிரு நாட்கள் முரண்பட்டு நின்ற முக்கிய மூத்த அமைச்சர்கள் கூட கட்சியைக் காக்க சசிகலாவின் வரவு அவசியம் என உரைத்து கைகட்டி கண்ணீரோடு நிற்கும் காட்சி அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வந்துகொண்டிருக்கிறது.

➧ ஜெயலலிதா ஜெயிலில் வைக்கப்பட்டபோது, பன்னீர்ச்செல்வம், வளர்மதி உள்ளிட்ட பல அமைச்சர்கள், சத்தியப்பிரமாணத்தைக் கூட சரியாய் உரைக்கமுடியாது விம்மி வெதும்பி அரற்றியபடி அழுதழுது பதவியேற்ற காட்சியை சிலகாலத்தின் முன் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்நது.

➧ அப்போது சில குறும்புக்கார இளைஞர்கள் இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சியெனத் தலைப்பிட்டு இணையத்தில் இக்காட்சியைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

➧ இப்பொய்அமைச்சர்களுக்கு நடிப்பைக் கூடச் சரியாய்ச்செய்யத் தெரியவில்லை. சிலகாலப் பிரிவையே தாங்கமுடியாமல் அப்போது கதறியவர்கள் ஜெயலலிதாவின் நிரந்தரப் பிரிவுபற்றி எதுவித கவலையுமில்லாமல் பதவியேற்ற காட்சி பலரையும் முகஞ்சுழிக்க வைத்தது. அவை பற்றி சிறிதும் நாணமில்லாமல் இன்னும் இடையில் உடையோடு நிற்கிறார்கள் இவர்கள்.
‘சீச்சீ இவையும் சிலவோ.’

➧ சிங்கம் மறைய சிறு நரிகளுக்குப் பெருங்கொண்டாட்டம். தம் தலைவிக்கு என்ன நடந்தது? என்று தெரியாத கொதிப்பில் தொண்டர்கள்; இருக்க, அடுத்த தலைமை, அடுத்த பதவி என தலைவர்கள் அலையத் தொடங்கிவிட்டார்கள். மக்கள்பற்றி கவலைப்பட அவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது? இதுதான் மக்களாட்சியாம்!

➧ எவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பதே இந்தியஅரசியலின் இன்றைய சூத்திரம் என்றாகிவிட்டது.
வெட்கக்கேட்டின் உச்சம் இது.

➧ ‘எற்றுக்குரிய கயவர் ஒன்றுற்றக்கால விற்றற்குரியர் விரைந்து’ என்று கீழோரை அடையாளப்படுத்தினான் வள்ளுவப்பாட்டன்.

➧ அஃதறிந்தும் கீழோராய்த் தம்மைப் பிரகடனப்படுத்தக் காத்திருக்கிறது ஒருபெருங்கூட்டம். இந்தியாவின் தன்மானத்தை எழுச்சியடையச்செய்யும் என எதிர்பார்த்த, இன்றைய மத்தியஅரசின் பாதையும் இதுவேயாதல் கண்டு நல்லோர் நாணி நிற்கின்றனர்.

➧ மத்தியஅரசு என்றில்லாமல் மாநிலஅரசுகளும் தமிழ்நாட்டை ஏற்கனவே ஒதுக்கத்தலைப்படும் இன்றைய சூழ்நிலையில் தம் பதவிகளுக்காய் மக்களையும், மாநிலத்தையும் விலைபேசக் கூடிய ஒரு கூட்டம் தமிழ்மக்களின் தலைமையை கையிலெடுக்கத் தயாராயிருக்கிறது.

➧ காவிரி நீரைத் தரமுடியாது என்று கர்ச்சிக்கிறது கர்நாடகம். கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று தமிழ்மண்ணை இழிவு செய்கிறது மத்தியஅரசு.

➧ ஒரு ஆளுமையுள்ள ஆட்சியாளர் பதவியில் இருக்கையிலேயே நடந்த கொடுமைகள் இவை. எதையும் விற்கத் துணிந்த இழிவுத் தலைமைகளின் நிர்வாகத்தில் இனி என்னென்ன நடக்குமோ?

➧ பலபேசி என்ன பயன்? அனுபவங்களிலிருந்து பாடம் கற்காதோர் அழிவது உறுதி. நடந்து முடிந்திருக்கும் சம்பவங்களில் பலரின் உண்மை சொரூபம் வெளிப்பட்டிருக்கிறது. அவர்தமக்கு சில சொல்லவேண்டியிருக்கிறது.

➧ அரசியலில் அடக்கியாளுதல் எனும் பிழையான புதுவழிதிறந்து மகிழ்ந்திருந்தார் ஜெயலலிதா. இன்று அவர் வளர்த்த பிழைகள் எலாம் ஒன்று சேர்ந்து அவர் வழியிலேயே அவரை ஓரங்கட்டியிருக்கின்றன.

➧ பிழையால் சரியை அடையமுடியாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்பதற்குப்பதிலாக அதே பாதையில் செல்லத்துணிவோர் ஒன்றை உணர்தல் அவசியம். தன்முனைப்புள்ள ஜெயலலிதாவிற்கே இந்தக்கதி என்றால் இவர்கள் கதி என்னாகுமோ? சிந்திப்பார்களாக!

➧ ஜெயலலிதாவின் மரணத்தில் பயன்பெறத் துடித்து நிற்கும் கட்சித் தலைவர்களுக்கு ஒரு செய்தி. ஆணவத்தால் மற்றவரை அடக்கியாண்டு வென்றுவிடலாம் என்று  நினைத்த ஜெயலலிதாவின்; கேட்பாரற்றுப் போன கதியினைக் கண்டபிறகும் அதே பாதையில் அதிகாரத்தை அனுபவிக்கத் துடிக்கின்றனர் சிலர். அவர் வழிபற்றி எழுதற்காய் நடிக்கின்றனர் சிலர். பிழைக்குப் பிழைதான் பரிசாகும் எனும் முன்னுதாரணத்தைக் கண் முன்னால் கண்ட பின்பும் பிழையான வழியில் சென்று சரியை அனுபவிக்கத் துடிக்கும் இம்மூடர்தம் மதியை என்சொல்ல?

➧ ஏதோ ஒரு சக்தியின் மித்தரபேத உத்தியால் ஜெயலலிதா கேட்பாரற்று அனாதையானார். இனி இவ்உத்தி அச்சக்தியால் தம் ஒவ்வொருவர்மேலும் பாய்ச்சப்படுமெனும் உண்மையை உணரத்தவறின், தம்மை மட்டுமல்ல தம்மை நம்பிய மக்களையும், மாநிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் இவர்கள் இழக்கப்போவது நிச்சயம். வருமுன் காப்பார்களா?

➧ அடுத்து மதிமயங்கி நிற்கும் மக்களுக்கான செய்தி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த மக்களையே விலைக்கு வாங்கிவிடலாம் எனும் துணிவில் இருக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

➧ தி.மு.க.வால் அறிமுகப்படுத்தப்பட்டு, அ.தி.மு.க.வால் பலப்படுத்தப்பட்ட கொள்கை அது. மக்கள், தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்தது அக்காலச் செய்தி. தலைவர்கள், மக்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது இக்காலச் செய்தி.

➧ பெரியார், காமராஜர், அண்ணா போன்ற பெரியவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டுக்கா இந்தக்கதி? நினைக்க உடுக்கை இழந்தால்ப்போல் உள்ளம் துடிக்கிறது.

➧ தம் தலைவிக்காகக் கதறிக் கண்ணீர் விடும் கட்சித்தொண்டர்கள் இனியேனும் ஒன்றை உணரவேண்டும். என்று வாக்குகளுக்காக நீங்கள் கைநீட்டி பணம் வாங்கிவிட்டீர்களோ அன்றே, தலைவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையை இழந்துவிட்டீர்கள். மனைவியை விற்பதற்கு ஒப்பான துரோகம் வாக்கை விற்பது. அதனால்த்தான் மக்கள் கருத்துக்கு மருந்தளவேனும் இடமில்லாமல் போய்விட்டது.

➧ அந்தத் துணிவில்த்தான் கேட்க ஆளில்லை என்று துள்ளி நிற்கிறது ஒரு கூட்டம். மானமுள்ள தமிழ்நாட்டு மக்கள் நடந்து முடிந்த அவலத்தின் பின்னேனும் உணர்ச்சிகொள்வார்களா? நீங்கள் வாங்கிய ஐயாயிரமோ, பத்தாயிரமோ பணத்தால், இன்று உங்கள் அபிமானத்திற்குரிய தலைவியின் அவல மரணத்திற்கான காரணம் அறியும் அதிகாரம் தானும் இல்லாத நிலையில் நீங்கள். மீண்டும் சொல்கிறேன். ஒருக்காலும் பிழையான பாதையில் சென்று சரியை அடையமுடியாது என்பதை இனியேனும் உணர முனையுங்கள்.

➧ அடுத்த செய்தி ஊடகவியலாளர்களுக்கானது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறையை உரைப்பது வழக்கம். ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் போல ஜனநாயகத்தைக் காக்கும் பொறுப்பு, ஊடகங்களுக்கு இருப்பதால்த்தான் இங்ஙனம் பேசப்பட்டது.

➧ இன்று ஊடகங்களும் விலைபோன நிலையில் அல்லது வலிமையிழந்த நிலையில். நடுநிலையாய் வலிமை காட்டுவது, அவ்வலிமையால் மக்கள் மனதை ஈர்ப்பது, மக்கள் ஆதரவால் ஊடகத்தின் பெருமையை உயர்த்துவது, பின்னர் அதிக பணம் தருவோரைச் சார்ந்து ஊடகதர்மத்தை விற்பது இதுவே இன்றைய ஊடகங்களின் பொதுப்பாதை ஆயிற்று. விபச்சார வெற்றி. வெட்கக்கேடு!

➧ உயிருக்குப் போராடி மருத்துவமனையில் முதல்வர் கிடந்த 72 நாட்களில் உள்நுழைந்து என்ன நடக்கிறது என்று காணும் சக்தியை இழந்து நின்ற தமிழக சஞ்சிகைகள் அனைத்தும் தலைகுனிய வேண்டும்.

➧ உண்மையை அறியும் உரிமை எமக்குண்டு என்று காவல்துறையினருடன் கூட மோதி நிற்கும் இவர்தமக்கு தம் மாநிலத்தலைவியின் நிலையை அவரது மரணம் வரையிலும் போராடி அறியமுடியாதது வெட்கக்கேட்டின் உச்சம்.

➧ உண்மை அறிய எந்த ஊடகமும் முனைந்து போராடியதாய்க்கூடத் தெரியவில்லை. பிரச்சினைகளை பேசி தம் ஊடகவிற்பனையை உயர்த்தவே அவை முனைந்து கொண்டிருந்தன.

➧ இதிலிருந்து இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. ஊடகங்கள் தம் வலிமையை இழந்துவிட்டன என்பது ஒன்று. வலிமையுள்ள ஊடகங்கள் விலைபோய்விட்டன என்பது மற்றொன்று. இரண்டுமே வெட்கக்கேடான செயல்கள்தான்.

➧ எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிராகத் தான் வெளியிட்ட கார்டூனுக்காக மன்னிப்புக்கோர முடியாது என்று உறுதிகாட்டி மறியல் சென்றார் அன்றைய ஆனந்தவிகடன் ஆசிரியர். இனி அத்தகையோரைக் காணமுடியுமா?

➧ தாம் சார்ந்த அணிக்காகப் போராடத் தயாராகவிருக்கும் ஊடகங்கள், தர்மத்திற்காக போராடத் தயாரில்லாத நிலையில் மக்களை எவர் காப்பார்? தூண்கள் இடியத் தொடங்க தொங்கிக்கிடக்கிறது ஜனநாயகம்.

➧ ஒரு மாபெரும் தலைவி மடிந்துகிடக்கிறாள். மக்கள் கதறி நிற்கின்றனர். மாநிலமே சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. இந்நிலையில் கூட சோககீதம் ஒலித்து அத்துன்பத்தில் பங்கு கொள்ளாமல் இறுதிக்கிரியைகள் நடந்த நாளில் கூட குத்தாட்டத்தால் கும்மாளம் போட்டுக்கிடந்த இவ் ஊடகங்களிடம் இனி தேசப்பற்றை எதிர்பார்ப்பதாவது, மண்ணாவது.

➧ ஆட்சியாளர்கள், என்றோ ஒருநாள் இவர்களின் கையை எடுத்து இவர்கள்  கண்ணையே குத்துவார்கள்.  அப்போது தெரியும் அறத்தின் வலிமை. ‘பரந்து கெடுக!’

➧ அடுத்த செய்தி இன்றைய பாரதத்தின் மத்திய ஆட்சியாளர்களுக்கானது. ஜெயலலிதாவின் மரண மர்மத்தில் மத்தியை ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின் பங்கு பற்றி பரவலாய்ப் பேசப்படுகிறது. திராவிடர் கழகங்களை மீறி தமிழ்நாட்டில் தம்மைப் பலப்படுத்துவது இயலாத காரியம் என்பதை அறிந்து வஞ்சகர்களை வயப்படுத்தி தம் நெஞ்சக் கருத்தை நிலைநிறுத்த முனைகிறது அக்கட்சி.

➧ ஜெயலலிதா மருத்துவமனையில் சிறையிருக்க அடிக்கடி வந்துபோன மத்திய அமைச்சர்கள் யாரோடு பேசினார்கள்? என்ன பேசினார்கள்? என்பதெல்லாம் இன்று மெல்ல மெல்ல ஊகச் செய்திகளாய்க் கசியத் தொடங்கியிருக்கின்றன.

➧ மோடியின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கூட அந்நம்பிக்கை முற்றாய் மடியவில்லை. காங்கிரஸ்ஆட்சியால் இந்தியா வலியதேசங்களின் கைக்கு மாற்றப்பட்டு விடுமோ? என்று பலரும் அஞ்சியிருந்த வேளையில் மாற்றுச்சக்தியாய்க் கிளம்பி மக்களின் மனங்கவர்ந்தார் மோடி.

➧ இந்தியாவின் கலாசாரம், பண்பாடு, சமய நம்பிக்கை, அற உணர்வு எனும் அத்தனையையும், மண்ணின் வேரறிந்து மாண்புறச் செய்ய ஒருவர் வந்துவிட்டாரென பலரும் மகிழும்படி மோடியின் ஆட்சிப்பிரவேசம் நடந்தது.

➧ அந்த நம்பிக்கையின் வேர்கள் இன்று சற்று அசையத் தொடங்கியிருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே சென்ற ஜெயலலிதா குழுவினரை மத்திய அமைச்சர் சந்தித்த பிறகு மேல்முறையீட்டில் பலரும் வியக்கும்படி நீதிக்குப் புறம்பான தீர்ப்பு வெளிவந்தது.

➧ உண்மை விலைப்பேசப்பட்டதாய் அப்போதே உலகம் அதிர்ந்தது.

➧ காவிரிப் பிரச்சினையில் கர்நாடாகாவைக் கண்டித்து உச்சநீதிமன்றம்; தமிழகத்தைக் காக்க முனைய ஆட்சி அதிகாரம் பெற வாய்ப்பில்லாத தமிழக மண்ணை  நீதிக்குப் புறம்பாய் நிராகரித்து தன்கைவயப்படக்கூடிய கர்நாடகாவை ஆதரித்து நீதிமன்ற தீர்ப்பையே பாரதீய ஜனதாவின் மத்திய ஆட்சி நிராகரிக்க உண்மை உயருமென எதிர்பார்த்த ஆட்சியில் பொய்ம்மை மதிப்புப்பெற்றதுகண்டு பலரும் புழுவாய்த் துடித்தனர்.

➧ இன்று தமிழகத்தின் ஆட்சியை வஞ்சகர்களுடன் கைகோர்த்து வயப்படுத்த முனைந்து நிற்கும் மோடியின் முனைப்பைக்காண இவ்வளவுதானா இவர்தம் அறநம்பிக்கை எனச் சலிப்புண்டாகிறது. இந்துமதக் கொள்கையில் உறுதிபூண்டவர்கள் என நம்பப்பட்ட இவர்தம் அறமீறல்களைக் கண்டு அதிர்ச்சியுற்று நிற்கிறது உலகம்.

➧ நாத்திகத்தை வெல்ல வேறு வழியில்லை என்கின்றனர் சிலர். ஏற்கமுடியாத நியாயம். பிழைக்கு நியாயம் சொல்லப் புறப்பட்டால் எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும். எங்ஙனம் அறம் மிஞ்சும்?

➧ தம்நோக்கம் நிறைவேற்ற இவர்களும் எதையும் செய்யத் துணிவார்கள் என எண்ணும்படி நிகழத்தொடங்கியிருக்கும் மோடி ஆட்சியின் சம்பவங்கள் இலட்சியவாதிகளாய் நாம்நினைத்த இவர்களும்,
வெற்றுஅரசியல்வாதிகள்தான் என எண்ணத்தூண்டுகின்றன.

➧ அறத்தைக் காக்க செங்கோலைப் பயன்படுத்தலாம். செங்கோலைக் காக்க அறத்தைப் பயன்படுத்தலாமா?

➧ பிழையான பாதையில் சரியை அடைவது என்பது பாரதப்பண்பாடல்ல. ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்றார் வள்ளுவக்கடவுள்.

➧ நல்லோரின் செயல்களில் தீய முன்னுதாரணங்கள் பதிவானால் தீயோர் மேலும் துணிவு பெறுவார்கள். தீமை தலைவிரித்து ஆடத்தொடங்கும். வெற்றிக்காய் அவசரப்பட்டு பிழைகளுக்கு இடங்கொடுப்பதைவிட சற்றுத்தாமதமானாலும் நேர்மையாய் வெற்றியைச் சந்திப்பதுதான் சிறந்தவழி. பா.ஜ.க.வினர் இதனை உணர்தல் வேண்டும்.

➧ நம் தமிழ்மண்ணில் சத்திரியத்துறவியாய் இருந்து காவியம் செய்த இளங்கோவடிகள், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என அடித்துச் சொன்னார். இப் பேருண்மையை மோடிக்கு எடுத்துச் சொல்லப்போவது யார்?

➧ பிழை சரியானால் உலகம் உய்யும். சரி பிழையானால் உலகம் நைய்யும். பாரதம் உய்யுமா? நைய்யுமா? காலந்தான் பதில் சொல்லவேண்டும்.
✸✸✸

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...