•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, December 21, 2016

இருவிழியும் ஆறாகப் பெருகுதைய்யா! | கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி அஞ்சலிக் கவி

றவான உன் பிரிவால் உயிரும் நோக
        உளமெல்லாம் வாடி விழி உருகலாச்சு
திறமான உன் புலமை தன்னை எண்ணத்
        தீராது அறிவெல்லாம் இருளதாச்சு
வரமான உன் தொடர்பால் நாங்கள் கொண்ட
        வற்றாத பயனெல்லாம் நினைவதாச்சு
தரமான கவிசெய்து எங்கள் மண்ணில்
        தந்த தமிழ்ப் பணியதுவும் தவமதாச்சு.

யாழுக்காம் மண்ணதனின் வாசம் சொல்லி
        யதார்த்தமது மாறாமல் கவிதை செய்தாய்
வாழ்வுக்காய் கவி படைக்க நினையாதென்றும்
        வளம் பெறவே தமிழுக்காய்க் கவிதை செய்தாய்
தாழ்வுக்கு எதிராக உணர்ச்சி பொங்கத்
        தமிழதனால் போராடிக் கவிதை செய்தாய்
ஊழ் சிக்கிப் படுக்கையிலே கிடந்து நொந்து
        உயிர் பிரிந்து போனதனை என்ன சொல்ல?

கல்வயலார் என ஊரின் பெயரைக் கொண்டு
        கவி படைத்து மண்ணதனைப் பெருமை செய்தாய்
நல்லியலார் தமைச்சேர்ந்து நலங்கள் போற்றி
        நாளும் அவர் மனம் இனிக்கப் பலவும் செய்தாய்
தொல்லியலாம் தமிழ்மொழியின் பெருமையெல்லாம்
        தோற்றிடவே கவி படைத்துத் துலங்கச் செய்தாய்
வல்லவனாய்த் திறமை பல இருந்தும் நீயோ
        வலிந்து புகழ் தேடாமல் வணங்கி நின்றாய்.

ஒப்பற்ற கவிஞன் எனப் பெருமைபெற்றும்
        உழவன் எனச்சொல்வதிலே பெருமைகொண்டாய்
தப்பற்ற முயற்சியினால் தரணி தன்னை
        தங்கமென விளைவித்துப் பெருமைகொண்டாய்
முப்போதும் மண்தொட்டுச் சலிப்பேயின்றி
        முனைந்ததனால் பலர்க்கீந்து பெருமைகொண்டாய்
இப்பாரில் ஏற்றமுறச் சோர்வேயின்றி
        இருபுலமும் ஆண்டதனால் பெருமைகொண்டாய்!

கம்பனது கழகமதைக் குடும்பமென்று
        கணித்தேதான் இதயத்தில் இடமும் தந்து
நம்மையெலாம் உறவாக்கி நீங்கள் செய்த
        நன்மைகளை நினைக்கையிலே நெஞ்சம் பொங்கும்
உம் இனிய விளைநிலத்தின் பயன்களெலாம்
        உவப்புடனே வெயில் தாண்டி வருந்தி வந்து
எம்தமக்கு ஈந்துவக்கும் இயல்பை எண்ண
        இருவிழியும் ஆறாகப் பெருகுதைய்யா!

ஒருபொழுதில் கதியிழந்து அகதியாகி
        ஒன்றாக நாங்களெலாம் குடும்பம் சூழ
தருகதிக்கு ஏங்கி எவர் துணையே செய்வார்
        தரணியிலே என நினைந்து தவித்து நிற்க.
பெருமனதோடெமையெல்லாம் ஒன்றாய் ஏற்றுப்
        பேணி நிதம் உறவாகப் பெருமை செய்து
வருகவென அழைத்தன்று வழங்கல் செய்த
        வற்றாத உனதன்பை என்ன சொல்ல?

கம்பனது விழவரங்கில் கவிதை சொல்லி
        கற்றோர்கள் உளமதனைக் களிக்கச் செய்தாய்
தம்பியராய் எமை அணைத்து அன்பு காட்டி
        தன்னலமே இல்லாது உறவு செய்தாய்
வெம்பிடவே படுக்கையிலே கிடந்து வாடி
        வேதனைகள் உறுகையிலும் தமிழை எண்ணி
தெம்புதர உரையாடும் உன்னை எண்ணத்
        தேகமெலாம் பதறுதைய்யா! தேறலாமோ?

நல்லவனே உனை நினைந்து உள்ளம் நோக
        நலிகின்றோம் அருகிருந்து நலங்கள் செய்யும்
வல்லமைகள் இழந்தோம் அவ் வருத்தந்தானும்
        வாழ்வெல்லாம் எமை உறுத்தும் வாடி இன்று
சொல்லளவில் பேசுவதால் பயனுண்டாமோ?
        சோதியிலே கலந்திருப்பாய் சுவர்க்கம் தன்னில்
தள்ளரிய பெரும்புலவர் பலரும் சூழ
        தமிழ் அமுதம் பருகிடுவாய் தனிமை தீர.
                            ✸

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...