Monday, January 16, 2017

உயிர் வளர்த்த உழவரெலாம் இறக்கின்றாரே! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

ஊரார் தம் பசி தீர்க்க உழைத்த நல்ல
          உயர் உழவர் தினம் தினமும் சாகும் செய்தி
வாராத ஊடகமோ இங்கொன்றில்லை
          வான் பொய்க்க மண்மலடாய் ஆதல் கண்டு
ஆராத மனத்தோடு அலைந்து வாடி
          அவரெல்லாம் அதிர்ந்திதயம் நின்று போக
நாராகச் சுருண்டு விழுந்திறக்கின்றாரே
          நமை இந்தப் பழி சூழ்ந்து நலித்திடாதோ!

பெண்ணான மண் மகளைப் பெரிதும் ஈர்த்து
          பெருந்தோளால் தினம் தினமும் முயங்கக் கூடி
எந்நாளும் அவள் அணைப்புக்கேங்கி வாடி
          என்றென்றும் இதயமதை அவளுக்கீந்து
பொன்னான குழந்தைகளாய் பயிர்கள் பெற்று
          பொலிகையிலே மழையதுவும் பொய்த்துப் போக
மண்ணோடு மண்ணாக அவைகள் சாய
          மருண்டுயிரை விடுகின்றார் மனம் தாங்காதே!

அரசியலார் தம் செல்வம் வளர்க்கவேண்டி
          ஆங்காங்கே இருந்த குளம், ஏரியெல்லாம்
நிரப்பி அவை நிலமாக்கி விலைக்கு விற்று
          நெஞ்சறியப் பழி சேர்த்து நிற்கின்றார்கள்
தரைக்கு நிழல் தருகின்ற மரங்களெல்லாம்
          தாம் வெட்டி பணமாக்கி தரணிதன்னை
உருக்குலைத்துக் கொண்டாடி அவர்கள் நிற்க
          உயிர் வளர்த்த உழவரெல்லாம் இறக்கின்றாரே!

வாழத்தான் விடவில்லை வறண்டு சாக,
          வற்றாது தம் கட்சி வளர்க்கவேண்டி
ஆளத்தான் அவர் திட்;டம் போட்டு இங்கே
          அநியாயச் சாவதையும் விற்கின்றார்கள்
நீளத்தான் நினைப்பவர் போல் நெஞ்சம் பொய்யாய்
          நீலிக்கண் நீர் வடித்து நிற்கும் தீயோர்
வீழத்தான் மாட்டாரோ? விரைவில் நல்ல
          வெற்றியதும் உழவர்க்கு வந்திடாதோ!

மாநிலத்தில் பயிர்களெல்லாம் கருகிச் சாய்ந்து
          மண்ணதனுள் உழவனுமே போனபின்பு
நீணிலத்தை மத்தியிலே ஆண்டு நிற்போர்
          நீள் அழிவை ஆய்வதற்கு அறிஞர் கூட்டி
வீணிலுமே பெயருக்கு கடமை செய்து
          விழலுக்கு நீர் இறைத்து நிற்கின்றார்கள்
ஆனபயன் ஒன்றில்லை அனைத்தும் போக
          அநியாயமாய் உழவர் அழிந்து போனார்.

புதுத்துறைகள் பல கற்றுப் பொருள்கள் தேடி
          பொலிந்தேதான் படித்தவர்கள் வாழ்ந்து நின்றார்.
மதுத்துறையால் பொருள் தேடி மகிழ்ந்து தீய
          மண்ணாள்வார் மாண்புடனே வாழ்ந்து நின்றார்.
நிதித்துறையில் அவர்களெலாம் நிமிர்ந்து நிற்க
          நினைந்துலக உயிர்க்கெல்லாம் உணவு தேடி
மதித்து நிலம் உழுதவர்கள் மாண்டு போனால்
          மண்ணதுவும் பொறுத்திடுமோ மருளுமன்றோ!

வான் பொய்த்து வறட்சியினால் வாட்டி நிற்க
          வட்டிக்குப் பணம்; தந்து முதலைத் தின்றோர்
தான் நிலத்தைத் தாவென்று தடிகள் தூக்க
          தடுமாறி உழவனவன் தனித்து நின்றான்
ஏன் எதற்கு எனக்கேட்க ஒருவர் இல்லை
          இழவதனைப் பறைசாற்றி இனிமை கண்டார்
மாண் பொய்க்கும் என்றஞ்சி மானம் நோக்கி
          மடிந்துழவன் சாகின்றான் மதியா நின்றோம்.

ஏரோட்டும் உழவன் தன் இதயந்தன்னில்
          இனிமையதாம் நீரூற்றை என்று காண்போம்
காரோட்டும் மனிதரெலாம் இரங்கி இந்தக்
          கண்ணியர்க்குத் துணைபுரிய முன்வராரோ?
சீராட்டி வெண்திரையில் புரட்சிகாட்டி
          செல்வத்தைக் கோடிகளாய்த் திரட்டி என்றும்
பாராட்டைப் பெறுகின்ற நடிகரெல்லாம்
          பண்பான உழவர்க்குப் பயன் செய்யாரோ?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று
          உயர் புலவன் வள்ளுவனும் அன்று சொன்னான்
தொழுதுண்டு பின்சொல்வோர் சுகித்து வாழ
          தொன்மையதாம் உழவியற்றி வாழ்ந்த மக்கள்
அழுதின்று தினம் தினமும் சாகின்றார்கள்
          அவர்க்கேதான் துணை செய்ய எவரும் இல்லை
பழுதிந்த நிலையறிவீர்! பாழும் தெய்வப்
          பழி சூழ்ந்தால் குலம் அழியும் பதைத்துப் போவீர்.
                                               ▇

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...