•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Thursday, February 9, 2017

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 4 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
யர்ந்தோர்களால் வகுக்கப்பட்ட வர்ணாச்சிரமதர்மத்தின்,
அடிப்படையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
அதற்கு முன் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்.
வர்ணாச்சிரம தர்மம் சரி என்றோ, பிழை என்றோ,
உங்கள் புத்தியில் ஏற்கனவே ஏதாவது பதிவுகள் இருந்தால்,
தயைகூர்ந்து அவற்றை முழுமையாய்த் துடைத்து எறிந்துவிடுங்கள்.
நிறக்கண்ணாடிகளைப் அணிந்துகொண்டு காட்சிகளைப் பார்த்தால்,
எதிலும் உங்கள் கண்ணாடியின் நிறம் தான் தெரியும்.
அதுபோல, புத்தியிலும் ஏதாவது கருத்தை மாட்டிக்கொண்டு,
ஒருவிடயத்தைப் பார்த்தீர்களேயானால்,
பார்க்கும் விடயங்களிலெல்லாம் உங்கள் கருத்துத்தான் பதிவாகும்.
எனவே வெற்று அறிவோடு நாம் வர்ணாச்சிரம தர்மத்தை ஆராய்வதே நல்லது.
♦  ♦

இதை ஏன் சொல்கிறேன் என்றால்,
முடிந்த மூன்று அத்தியாயங்களைப் படித்து,
அபிப்பிராயங்கள் எழுதியவர்களின் கருத்துக்களில்,
வர்ணாச்சிரம தர்மம் பற்றிய,
கண்மூடித்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பே பதிவாகியிருந்தது.
நமக்கு அந்த இரண்டும் வேண்டாம்.
வெற்றுமனத்தோடு நான் சொல்லப்போவதை தயவு செய்து கேளுங்கள்.
சொல்வதில் சரியானவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பிழையென்று கருதுபவற்றை உணர்ச்சிகளைக் கடந்து,
தர்க்கமுறையோடு வெளிப்படுத்துங்கள்.
நானும் உங்கள் கருத்துக்களை அங்ஙனமே பார்ப்பேன்.
சரி! இனி வர்ணாச்சிரம தர்மத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம்.

♦  ♦

என்று, தனி ஒருவர் என்ற எல்லையைக் கடந்து,
கூட்டு வாழ்க்கையை நாம் ஆரம்பித்து விட்டோமோ,
அன்றே தனிமனித நலம் நோக்கியும் ஒட்டுமொத்த சமூக உயர்வு நோக்கியும்,
சில கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்ஙனம் சமூகநலம் நோக்கி விதிக்கப்படும் அவ் அறக்கட்டுப்பாடுகளில்,
தனிமனிதர்களாய், நாம் நம் விரிந்த சுதந்திரத்திற்கு,
சிலவேளைகளில் எல்லையிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பெரும்பான்மை நலம் பற்றி இடப்படும் அவ் எல்லைகளால்,
ஒரு சில தனிமனிதர்கள் பாதிப்புறுவது தவிர்க்கமுடியாததாகிறது.
இது உலகம் பூராவும் இருக்கின்ற ஒட்டுமொத்த சமூக அமைப்புகளின் பொதுவிதி.

♦  ♦

‘குடையைச் சுழற்றி நடக்கும் ஒருவனது சுதந்திரம்,
மற்றவனது மூக்குநுனி வரையிலானது’ என்ற வாசகம் பிரபல்யமானது.
குடையைச் சுழற்றுவது நமது சுதந்திரம் தான்.
ஆனால் மற்றவனின் மூக்கில் அது முட்டுமாயின்,
அது மற்றவன் சுதந்திரத்திற்குள் நாம் தலையிடுவதாய் முடியும்.
என் குடையை நான் சுழற்றுவேன் அதில் தலையிட நீ யார்? என்று கேட்க,
இருவர் வாழும் சமுதாயத்தில் இடமில்லை.
ஒருவனது சுதந்திரம், மற்றவனைப் பாதிக்காதவரையில்தான்,
சமூக அமைப்பில் தனிமனித சுதந்திரம் அங்கீகாரம் பெறும்.
மற்றவரைப் பாதிக்கும்வகையில் அச்சுதந்திரம் நீளும்போது,
அச்சுதந்திரத்திற்கு வேலியிடப்படுதல் விலக்கமுடியாத ஒன்றாகிவிடும்.

♦  ♦

இவ்வேலியை விலங்கு என்று சொல்வாரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நம்தமிழ் மூதாதையர்கள் பெண்களின் நலம்நோக்கி வகுத்த கற்பு என்னும் திண்மையை,
காவலாய் நினையாது கைவிலங்காய் நினைத்துப் பெண்விடுதலை பேசும் ஒரு சிலபேர்,
மேற்கருத்துக்காம் இன்றைய உதாரணர்களாய்த் திகழ்;கின்றனர்.
பொய்மையான மேற்கு நாட்டு நாகரீகப்பாணியில்,
ஒட்டுமொத்த சமூகநலனைக் கருதாமல்,
தனித்தனி முழுமைச் சுதந்திரம் வேண்டும் போக்கு,
இங்கும் தலையெடுத்ததன் வெளிப்பாடு இது.

♦  ♦

வனிதையர் சிலபேரின் வம்பை, தெரிந்தே விலைக்கு வாங்குகிறேன்.
என்ன செய்ய? உங்களைப்போல செல்வாக்கான இடங்களிலிருந்து அநியாயங்கள் புறப்பட்டால்,
மௌனித்து அதை அங்கீகரிக்க என் புத்தி விடுவதில்லை.
வலியர் என்று வழிமொழியும் இழிவினை ஏற்கமுடியாத எனது குணம்,
நான் அடக்க நினைத்தாலும் என்னை மீறி வெளிவந்து விடுகிறது.
விடுங்கள்! நாங்கள் விஷயத்திற்குள் போவோம்.

♦  ♦

கூட்டுவாழ்க்கையின் வெற்றிக்காய் விதிக்கப்பட்ட,
தனிமனித, சமூகக் கட்டுப்பாடுகளே,
சமூக அறங்களாயின என்று சொன்னேன் அல்லவா?
அங்குதான் நீங்கள் எல்லோரும் கொதிக்கின்ற சமூகப்பிரிவினை என்ற பிரச்சினை தொடங்குகின்றது.
இவ்வுலகின் எந்த மூலையிலும் அறத்தினையோ நீதியினையோ சொல்லத் தலைப்படும்போது,
பிரிவுகளை வகுக்காமல் எப்பேர்ப்பட்ட நிபுணனாலும் அறம் சொல்லமுடியாது.
என்ன? ஆச்சரியப்படுகிறீர்கள்.
உங்களுக்கு இது சற்று ஆச்சரியமாய் இருக்கலாம்.
ஆனாலும் உண்மை இதுதான்.
நான் சொன்ன இவ் உண்மையைப் பொய்யென்று நீங்கள் நிரூபித்து விட்டீர்களேயானால்,
இக்கட்டுரைத் தொடரையே நான் நிறுத்திவிடுகிறேன்.

♦  ♦

வெறுமனே முடிவினைச் சொன்னால் போதுமா? அதனை நிரூபிக்கவேண்டாமா?
நீங்கள் கேட்பது புரிகிறது. நிரூபிக்கிறேன்.

♦  ♦

என் கூற்றை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,
நீங்கள் சொல்கின்ற வளர்ச்சி பெற்ற இன்றைய சமூகத்தில் நடைமுறையில் இருக்கும்
நீதிக்காய் ஏற்படுத்தப்படும் சமூகப்பிரிவினைகள் பற்றி,
ஒரு சில உதாரணங்களை முதலில் சொல்லுகிறேன்.

♦  ♦

ஒருவர் பதினெட்டு வயதின் முன் திருமணம் செய்தால் அது சட்டத்தின்படி குற்றம்.
அவரே பதினெட்டு வயதின் பின் திருமணம் செய்தால் அது குற்றமாகாது.
இன்று நடைமுறையிலிருக்கும் சட்டம் இது.
பதினெட்டு வயதில் திருமணத்தகுதி பெறும் ஒருவருக்கு,
பதினேழு வயதில் திருமணத்தகுதி இருக்காதா?
இருக்கும் என்பது நிச்சயமான பதில்.
ஆனால் பதினெட்டு வயதுத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம்,
பதினேழு வயதுத் திருமணத்தை அங்கீகரிக்காமல் தடுக்கிறது.
காரணம்  என்ன? சிந்திக்கவேண்டியிருக்கிறது.

♦  ♦

ஒருவர் அரச உத்தியோகத்தில் சேர ஏதோ ஒரு குறித்த வயது நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வயதில் ஒன்றைத் தாண்டினால் கூட அவர் அரச உத்தியோகத்தில் சேரமுடியாது.
உதாரணத்திற்கு அவ் வயதெல்லையை முப்பத்தைந்து என்று வைத்துக்கொள்ளுங்கள்.
முப்பத்தைந்து வயதில் வேலையில் சேர்க்கப்படுபவரை,
முப்பத்தாறு வயதில் சேர்க்க மறுப்பதன் காரணம்  என்ன? சிந்திக்கவேண்டியிருக்கிறது.
தேர்தல் வாக்களிப்பு, ஓய்வூதிய வயது, பாஸ்போட் பெறுதல், பாடசாலையில் சேர்த்தல்,
இரத்ததானம் செய்தல் போன்றவற்றிற்கான சட்டங்களிலும் இப்பிரிவினைகளை நாம் காணலாம்.
இவையெல்லாம் ஒரு தனிமனிதனின் வயது எல்லையை வைத்துத் தீர்மானிக்கப்படும்,
உலகால் அங்கீகரிக்கப்பட்ட இன்றைய பிரிவினைகள்.

♦  ♦

இனி மற்றொரு பிரிவினைபற்றியும் சொல்கிறேன்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவோரில்,
இயக்குனர், முகாமையாளர், எழுதுவினைஞர், துப்பரவுத் தொழிலாளி,
கூலியாள் என்பனவான பிரிவுகளும்,
அப்பதவிகளுக்கான சம்பளம், சீருடை, இருக்கை, விடுமுறை,
அதிகார எல்லை, தனி வசதிகள் என்பவற்றுள் வேறுபாடுகளும்,
உலகம்பூராகவும் இன்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் அவ்வவ் நிறுவனத்தின் சட்ட எல்லைகளுக்குள் உட்பட்ட விடயங்களாகும்.
பதவி சார்ந்த இத்தகுதி வேறுபாடுகள் அரசியலிலும் உள.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் என,
ஒவ்வொருவருக்கும் தனித்தனி பதவி வரிசைகளும்,
அதற்கான உரிமைகளும் அதற்கான அதிகார வரையறைகளும்,
‘புறோட்டோ கோல்’ என்ற பெயரில் சட்டப்படி வகுத்து வைக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்திலோ அரசிலோ இவ்வரையறைகளை எவரும் மீறமுடியாதென்பதும்,
ஒருவர் அதிகாரத்தில் மற்றவர் நுழையமுடியாதென்பதும்.
மீறினால் அது சட்டப்படி குற்றமாகும் என்பதும்,
இன்று உலகம் முழுவதினாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட நியதிகளாகும்.

♦  ♦

அதுபோலவே வேறுசிலவற்றையும் சொல்லலாம்.
ஒரு கீழ்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மேல்நீதி மன்ற நீதிபதி மாற்றலாம்.
மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி மாற்றலாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பே சட்ட எல்லையின் இறுதி முடிவாயிருக்கும்.
ஆனாலும் அம்முடிவினை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

♦  ♦

ஒரு நாட்டில் பணியாற்றும் வேறொரு நாட்டுத் தூதர்,
தான் பணியாற்றிய நாட்டில் குற்றம் செய்தால்,
அந்நாடு அவரை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பலாமே தவிர,
தன் நாட்டுச் சட்டப்படி தண்டிக்கமுடியாது.

♦  ♦

மது குடிப்பது, துப்பாக்கி பாவிப்பது, போதைவஸ்தைப் பயன்படுத்துவது போன்ற பல விடயங்கள்,
சட்டத்தின்படி இன்று குற்றங்களாய் வகுக்கப்பட்டுள்ளன.
அச் சட்டத்தை வகுத்த அரசே  இவற்றைப் பயன்படுத்த,
ஒருசிலருக்கு மட்டும் அனுமதி வழங்குகிறது.
இப்படி இன்னும் ஆயிரம் சொல்லலாம்.

♦  ♦

ஆழ்ந்து பார்த்தால், மேற்சொன்ன விடயங்களிலிருந்து ஓர் உண்மை உங்களுக்குப் புலனாகும்.
தனிமனித வயதெல்லைப்பிரிவுகளை வைத்தும்,
அவரவர் சமுதாய அந்தஸ்;த்துப் பிரிவுகளை வைத்தும்,
வளர்ச்சி பெற்று விட்டதாய்ச் சொல்லிக்கொள்ளும் இன்றைய உலகநாடுகளிலும்
சட்டத்தின் பெயரால்; பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதே அவ்வுண்மையாகும்.

♦  ♦

சமுதாய உயர்வு, நலன் என்பவை நோக்கி சட்டங்களை வகுத்தபோது,
இதேபோலத்தான் அன்றைய நம் மூதாதையரும்,
தனிமனித வயது, சமுதாய அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில்,
சில பிரிவினைகளை உருவாக்கினர்.
குறித்த சிலபேரைத் தாழ்த்துவதும் குறித்த சிலபேரை உயர்த்துவதும்
அவர்களது நோக்கமல்ல.
இப்பிரிவுகளின்றி சமுதாயத்தை நெறி செய்யமுடியாது என்பதை,
அன்றே உணர்ந்ததால்தான் அங்ஙனம் அவர்கள் செய்தனர்.
இன்றைய பிரிவுகளைக் கேள்வியின்றி ஒத்துக்கொள்ளுவோர்,
அன்றைய பிரிவுகளில் குற்றம் கண்டு கொதித்து நிற்கின்றனர்.
நீங்களே சொல்லுங்கள்! அது எப்படி நியாயமாகும்?
“மாமியார் உடைத்தால் மண்குடம்,
மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற கதைதான் இது என்பதை,
நீங்கள் விளங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

♦  ♦

அந்தணர்களுக்கொரு சட்டம் மற்றவர்களுக்கொரு சட்டமா? என்று கேட்போர்,
மனேஜருக்கு ஒரு சட்டம் பியோனுக்கு ஒரு சட்டமா? என்றும்,
நீதிபதிக்கு ஒரு சட்டம், ஜனாதிபதிக்கு ஒரு சட்டமா? என்றும்,
சாதாரணர்களுக்கு ஒரு சட்டம், தூதர்களுக்கு ஒரு சட்டமா? என்றும்
ஏனோ கேட்கத் தயங்குகிறார்கள்.
தயங்குகிறார்கள் என்ன தயங்குகிறார்கள்?
கேட்பதேயில்லை என்பதுதான் உண்மை.
நீங்களே சொல்லுங்கள் இந்தப் பாரபட்சம் நியாயமாகுமா?
ஒரு உண்மை புரிகிறது.
ஒன்று, மேற் சொன்னவர்கள் வேண்டுமென்றே,
வர்ணாச்சிரமதர்மத்தைக் குற்றம் சாட்டுவதற்காக,
உண்மை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
அல்லது இவ் உண்மைகளை ஆழ்ந்து அறியும் அறிவு அவர்களுக்கில்லை.

♦  ♦

தெளிவாய் உறுதிபடச் சொல்லுகிறேன்.
எப்படித் தனிமனித வயதுப் பிரிவுகளுக்கும்,
தொழில்த்தகுதிப் பிரிவுகளுக்கும் ஏற்ப,
இன்று சட்டங்கள் வகுக்கப்படுகின்றனவோ அதேபோலத்தான்,
அன்றும் தனிமனித வயதுநிலை, தொழில்த்தகுதிநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே,
தர்மங்களை வகுத்தார்கள்.
பொறுங்கள்! ஒரு சின்னத்திருத்தம்.
இன்று போல் அன்று செய்யவில்லை.
அன்று போலத்தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வேடிக்கை!
நாம், அவர்களைப் பின்பற்றி அறங்களை இன்றும் வகுத்துக்கொண்டு,
அன்று அவர்கள் செய்தது பிழை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதனைத்தான்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையால்’ என்று,
அன்றே வள்ளுவரும் சொல்லிப்போனார்.
அவர் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அக்குறளுக்கு,
தத்தம் கொள்கைக்கேற்ப இன்று விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்!

♦  ♦

மீண்டும் மூலச்செய்தியை விட்டுவிட்டு சற்றுத்தூரம் வந்துவிட்டேன்.
ஆனால் இம்முறை அதனைச் செய்ததற்குக் காரணம் இருக்கிறது.
வர்ணாச்சிரம தர்மம் பற்றி உங்கள் கருத்தில் பதிவாகியிருக்கும்,
பிழையான அபிப்பிராயத்தை நீக்கினால்த்தான்,
உங்களுக்கு வர்ணாச்சிரம தர்மத்தின் மகிமை புரியும் என்பதற்காகவே அதனைச் செய்தேன்.
இனி விஷயத்திற்குள் நுழைவோம்.

♦  ♦

விஷயத்தை எங்கே விட்டேன் என்று மீண்டும் மறந்து போய்விட்டது.
புத்தி வயதானதை நினைவூட்டுகிறது.
கொஞ்சம் பொறுங்கள் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
ம்ம்ம்........... ம்....... ம்...... நல்லது.
விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது.
வர்ணாச்சிரமதர்மம் என்ன என்றும்,
அதில் சாட்டப்படும் குற்றங்கள் எவை என்றும் சொல்வதாய் சொல்லியிருந்தேன்.
முதலில் வர்ணாச்சிரமதர்மம் என்றால் என்ன? என்று சொல்கிறேன்.

♦  ♦

பலர் கூடிவாழும் ஒரு சமூகத்தையும்,
அச்சமூகத்தில் வாழும் ஒரு தனிமனிதனின் வாழ்வையும்,
பிரிவுபடுத்தி சமூகத்தின் நலம் நோக்கி,
நம் மேலோர் வகுத்த வகுப்பே வர்ணாச்சிரமதர்மம் ஆகும்.
அவர்களால் வகுக்கப்பட்ட சமூகப்பிரிவுகள் வர்ணங்கள் எனப்பட்டன.
தனிமனிதவாழ்வுப் பிரிவுகள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன.
அப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு,
சொல்லப்பட்ட தர்மமே வர்ணாச்சிரமதர்மமாம்.

♦  ♦

தனிமனித வாழ்வையும் சமூக வாழ்வையும்,
பிரிக்கவேண்டிய தேவை என்ன?
அப்பிரிவுகளுக்கு, தர்மம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் என்ன?
நீங்கள் புத்திசாலியாய் இருந்தால் உங்கள் மனதில் இக்கேள்விகள் பிறந்திருக்கும்.
என்ன? அவசரமாய்த் தலையாட்டுகிறீர்கள்.
அக்கேள்விகள் உங்கள் மனதிற் பிறந்ததாய் எனக்குத் தெரிவிக்கிறீர்களாக்கும்.
மெத்தச் சந்தோஷம்.
நீங்கள் ‘மகா கெட்டிக்காரர்கள்’ என்று எனக்கு எப்போதோ தெரியும்தானே!
அக்கேள்விகளுக்கான பதிலை இப்போது நான் சொல்கிறேன்.

♦  ♦

என்று மனிதன் கூடிவாழத் தலைப்பட்டானோ,
அன்றே அக்கூட்டுவாழ்க்கையின் ஒழுங்கினை,
வரையறை செய்யவேண்டிய தேவை வந்துவிட்டது.
நன்மை நோக்கிக் கூடிவாழத் தலைப்பட்ட மனிதர்,
அக்கூட்டு வாழ்க்கையின் வெற்றிக்காய்,
தமக்குத்தாமே சில கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அங்ஙனம் தனிமனித வாழ்விலும் சமூகவாழ்விலுமாய்,
வாழ்க்கை அனுபவம் கொண்டு வகுத்த கட்டுப்பாடுகளே தனிமனித, சமூக அறங்களாயின.

♦  ♦

தனிமனித, சமூகக் கட்டுப்பாடுகளை மேலோர் உருவாக்கிய விதத்தினைச் சொல்கிறேன்.
ஒட்டுமொத்த அறங்களை வகைசெய்யத் தலைப்பட்ட மேலோர்,
தனிமனித வாழ்வும், சமூகமும் பிரிவுகளை உள்ளடக்கியிருந்ததால்,
பொதுப்பட அறம் சொல்லமுடியாத இடர்ப்பாட்டை இனங்கண்டனர்.
அவ் இடர்ப்பாடு நீக்க மிக நுண்மையாய்க் கவனித்து,
ஆயிரமான பிரிவுகள் இருப்பினும்,
பெரும்பான்மை பற்றி தனிமனிதவாழ்வையும், சமூகவாழ்வையும்,
நன்நான்கு பிரிவாய் அமைக்க அவர்கள் வழிகண்டனர்.
இப்பிரிவுகள் ஏலவே இருந்த வாழ்வியலை விளங்கி வகுக்கப்பட்டனவேயன்றி,
அப்பிரிவுகளை வகுத்துப் பின் வாழ்வியலை அதனுள் அவர்கள் அடக்கவில்லையென்பது,
இவ்விடத்தில் நாம் முக்கியமாக விளங்கவேண்டிய ஒன்று.

♦  ♦

என்ன? உங்கள் முகத்தில் சோர்வு தெரிகிறது.
தொடர்ந்து ‘சீரியர்ஸா’ய் சொல்லிக்கொண்டிருக்கிறேனோ?
அப்படிப் பேசினால்த்தானே அறிவாளிகளான (?) உங்களுக்குப் பிடிக்கும்.
சிரிக்காமல் பேசுவதெல்லாம் சீரியஸான பேச்சு என்று ஏமாறுகிறவர்கள் தானே நீங்கள்.
அதனால்த்தான் கொஞ்சம் சீரியஸாகவே பேசிப்பார்த்தேன்.
என்ன முறைக்கிறீர்கள்?  வேறுவழியில்லை.
இதை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இதைவிட எளிமையாய் இந்த விடயத்தைச் சொல்லலாம்போல் தோன்றவில்லை.
ஆனாலும் களைத்துவிட்ட உங்களை வருத்தவும் மனம் வருகுதில்லை.
நீங்களும் எங்கும் ஓடப்போவதில்லை. நானும் எங்கும் ஓடப்போவதில்லை.
எனவே சற்று ஓய்வெடுங்கள்.
அடுத்த வாரம் சந்திப்போம்
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்

-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-


Comments

Mohan Bharathi Mohan அடுத்த வாரம் சீக்கிரம்
எதிர் பார்க்கிறேன் ஐயா
LikeReplyMessage111 February at 15:17


Ravipalan Rasaratnam நீங்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறீர்கள்?
துருபிடித்துப்போன வர்ணாசிரம அதர்மத்தை தூசிதட்டி புதுப்பிக்க முயல்வதன் நோக்கம் என்ன?
தமிழர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்த அவர்களுக்கு நீதி நூல்கள் இல்லையா? உலகத்துக்கே பொதுமறை தந்தது தமிழினம். ஆரிய...See more


தர்ஷன் இராஜேந்திர சோழன் "மேலோர்" மற்றும் "உயர்ந்தோர்" என
யாரை சொல்ல வருகிறீர்....??...See more

Piratheepan Naguleswaran நவீன உலகின் நியமங்களுடன் ஒப்பிடுகையில் முற்காலங்களில் இந்திய சமூகங்களில் மட்டுமல்ல உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் வர்ணாசிரம தர்மத்திற்கு நிகரான அல்லது அதை விட மோசமான சட்டங்களும் விதிமுறைகளும் காணப்பட்டன என்பது உண்மையே. அக்கால சமூகங்கள...See more
LikeReplyMessage712 February at 05:20Edited

Loganathan Navamail ஆரிய, திராவிட என்னம் உங்களின் நன்மை மட்டுமே கொண்டது வர்ணாத்துவா! தமிழன், தமிழ்நாட்டுக்கு வேண்டாம். மீறினால் எரிமலை யாய் வெடிபோம்!

Raja Kumar எந்த வகையிலும் ஏற்றதாழ்வு இருப்பதை விரும்பவில்லை, அது நியாயமும் இல்லை.
LikeReplyMessage212 February at 11:52

Pushparani Ramanathan பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவமைதியினாலே.
LikeReplyMessage112 February at 13:13

Ramasamy Venkatnarayan உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன் அருமை
LikeReplyMessage112 February at 17:26

Kumar Selva Read this book...

Sundarraj Inbanathan என்ன சொல்ல வர்ரீங்க,வரணாசிரம தர்ம்ம் சரி என்றா? அப்படியான் நீங்கள் மனிதர் அல்ல.
LikeReplyMessage112 February at 18:57

Piratheepa Paskaran If u are against varnachiramam .that is ur comments.well appreciate but don't put comment wrong tamil histories. And every one has freedom to tell them suggestion. If y r accept Mr.E.V.Ramaswamy u can follow him.But don't tell comments before him post.let him free.because every social things start with good motivation.but time changed that bad.varnachiramam also like that.
LikeReplyMessage112 February at 19:01

Atputhan Tamil Evan yaruda ivana kollunkada

Tamileekowsalya வேசித்தனம்.....!?


குமரன் தமிழ் வர்ணாசிரம தர்மதை அறிமுகப்படுத்தியவராக வியாரை நான் அறிறேன் அதன்முன் இருந்ததாே நானயேன். ஆனால்.ஆரம்பத்தில்வேதம் வழங்கிய நால்வகை பிரிவு என்பது மனிதனின் குணவியல்பு என்பது என் சிந்தனை
பிராமணர்-கற் றாே ர்
சத்திரியர்-வீரமுள் ளாே ர்
வைஷ்சியர் - வணிகர்
சூத்திரர்-வேலை ஆட்கள்
இது இன்றும் உலகமக்களின் பிரிவே
உலக மக்க ளை இந்த நான்கு பிரிவுகளில் வகுக்கலாம்
ஒவ் வாெ ரு சாதியிலும் கூட இவ்வகை மனிதர்.உள்ளனர்
வேதம் கூறியது மாற்றம் இல்லாதது. வியாசர் வகுத்த வர்ணாசிரணமே இன்று சாதிகள் பல்கிபெ ருக காரணம்
LikeReplyMessage112 February at 23:17

Senthil Hasiny purithe nanba

Aswin Akash mooditu po

Navaratinam Vishnukanth Nee manitha piravi illai manitha miruka kalavai

Murugesu Kanagalingam Janathipathi, MP,Minister,Dr,Engineer'Teacher,Manager,Accountant and other plenty of new work or workers not coming generation by generation.but in varnachchiramam,brahmin son brahmin,babar son babar,other low cast people always low cast,they have never coming up.Indian and Jaffna society never give any chance to them.this v.tharmam like to put down under their feet.this is we looking 'Nitharsanam'
LikeReplyMessage114 February at 08:18Edited

Desingh K Please wait and see. Don't jump to the conclusion because we have to various types of views much needed to day for all. Than decide.

Loganathan Veeraswamy Thirukkuralai Vida siranath nool ethum Illa.

Raamachandran Jayaraman ஜெயராஜ் இல்லை இவர் அதர்மராஜ்
LikeReplyMessage113 February at 09:58

Saba Rathinam மேனேசர் ப்யூன் உதாரணம் தவறு. தகுதி யிருப்பவன் மேனேசரங் ஆகலாம். ஒருவன் வர்ணத்தைக் கடக்க முடியுமா.கம்ப வாரிதி என்ற பட்டம்!. அந்த கம்பனுக்கே இராமாயண அரங்கேற்றம் செய்ய எவ்வளவு இடைஞ்சல் செ ய்தனர் திருவரங்கத்தில்

Shenthooran Kanagaratnam கம்பவாரிதி என்ன மசிருக்கு இப்ப இந்த கட்டுரைய புடுங்குறார்... நாலு மேடைல கூவினால் பெரிய பருப்பு போல வகுப்பெடுக்கிறார்.
LikeReplyMessage313 February at 14:43

Moorthi Maruthu நெத்தில பொறந்தான், கால்ல பொறந்தான் இதெல்லாம் தேவையா? எல்லாருமே கவட்டைல பொறந்தவங்கதான்!!! ஆரிய காவி கோஷ்டிகள்தான் மனிதரை பிறப்பால் பிரித்தது!!!!
LikeReplyMessage513 February at 15:57

Soundhara Rajan வர்ணாசிரமத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும்.தீண்டாமை என்ற தீய கருத்து என்றோ எப்படியோ உள்ளே புகுந்து அனைத்தையும் நிர்மூலமாக்கி விட்டது. இந்த தீண்டாமை என்ற நச்சுப்பொருளால் இந்துக்களில் பலர் மதம் மாற்றம் கொண்டனர்.தனி நாடாக வே பிரிந்து போய்விட்டனர்(இன்றைய வங்க தேசம்) .
LikeReplyMessage313 February at 18:19Edited

Veluchamy Yadav தாங்களும் அந்நிலையில் இருந்தால் சரி.
LikeReplyMessage113 February at 19:22

Kumarasamy Subramaniam வர்ணாசிரம தர்மம் என்று சேர்த்து அலசக் கூடாது . வர்ண தர்மம் வேறு , ஆச்சிரம தர்மம் வேறு . வர்ண தர்மம் செயற்கை ஆச்சிரம தர்மம் இயற்கையோடு இயைந்தது . வர்ண தர்மத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் ஆச்சிரம தர்மத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் .
LikeReplyMessage113 February at 23:14

Umashankar Thiagarajan வர்ணாசரம்ம் என்பது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... அது பிறப்பால் வருவதல்ல...ஒழுக்கத்தால் உண்டாவது...சற்று ஆழ்ந்த யோசனை கொண்டு பார்த்தால் உண்மைகள் விளங்கும்... அது ஒரு சமூக நெறி..தயவு செய்து அத்தர்மத்தைப் பற்றி இன்னும் நன்கு அறிந்து கொண்டு மேலோட்டமாகப் பார்க்காமல் ....பார்ப்பனியம் என்று கருதாமல்... நானும் பார்ப்பனீயத்திற்கு எதிரானவனே..அனுக வேண்டுமோ எனத் தோன்றுகிறது... என்ன செய்ய சினிமா டிக்கட் எடுக்க குறுக்கே சென்று போலீசிடம் அடி வாங்கும் நாம் கோயிலில் அய்யர் நகர்ந்து கொள்ளுங்கள் என்றால் கோபம் வருகிறது...இது இரு பக்கத்திலும் உள்ள தவறோ...வர்ணாசிரமத்தை தவறாக பயன்படுத்தியவர்களும் ..தவறாக புரிந்து கோண்டவர்களும் இருவருமே தவறு செய்தவர்களோ....என் எண்ணமிது...தவறானால் மன்னிக்கவும்..
LikeReplyMessage413 February at 23:28

John Manoharan Kennedy Sethup pokum tharunathil Saathiyam aadum Aariyak koothu. Kampa vaarithi avarkale! Sukam varum aal thappaathu.


ராஜ் நாதன் ஈழத்தமிழர் சைவசமயத்தவரே

இந்த றோவின் கைக்கூலி
வருணாச்சிரமம் பேசுறான்
LikeReplyMessage114 February at 06:28Edited
Kalai Kumar மன வளர்ச்சி இல்லாத ஒருவனின் சிந்தனையாக எடுத்து கொள்ள வேண்டியது தான்.. அறிவிலி என ஒவ்வொரு வரியிலும் நிரூபிக்கிறார்..
LikeReplyMessage114 February at 07:47

Balatharmendran Tharmapalan அன்பே சிவம் அன்பை ஆதாரமாக கொண்டதே சைவம் இதில் சாதியத்தையும் தீண்டாமையும் உட்புகுத்தும் எந்தத்தர்மமும் ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தின் சுயநலத்திற்காகவும் சுரண்டிப்பிழைப்பதற்காகவும் உருவாக்கப்படதொன்றே கொள்ளவேண்டியுள்ளது ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம் உள்ளன்போடு ஆண்டவனை தொழுபவர் எவராயினும் ஆண்டவனோடு ஆத்மார்த்தமாக ஐக்கியமாகிவிடுவார்கள் ஆக பக்தனுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் தேவையில்லை ஆனால் எமது சமூக கட்டமைப்பில் ஒரு சமுதாயத்தினர் அச்செயலை செய்து வருவது முற்றுமுழுதாக அவர்தம் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி வேறேதுமில்லை ஆகையால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஒரு வகைப்பாட்டை மத்த்தினூடாகவோ அல்ல தரமசிந்தனை என்று சொல்லப்படும் இப்படியான சிந்தனைகளுனூடாகவோ ஏற்படுத்துவது சமகாலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இன்றைய நவீன உலகில் நாம் ஒவ்வொருவரும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளோம் உறவுகள் என்ற வட்டத்தை விட்டு விலகி வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்நது வருகின்றோம் அப்பிரதேசத்தவரின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டு இன மத வேறுபாட்டை தாண்டிய பதிய உறவுகளையும் ஏன் கலப்புகளையம் உருவாக்கி ஒருவித கலப்புச்சமுதாயத்தை ஏற்படுத்தி வாழ்ந்து வரும் இக்காலத்துக்கு ஒவ்வாத ஒரு பதிவாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது... மதம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி பாகு படுத்த அல்ல என்பதே என் கூற்று தவறிருப்பின் பொறுத்தருள்க
LikeReplyMessage214 February at 11:08

Saravanan Subramanian idhula paadhi koomuttaingha tamizhinathin adaiyalathi azhithu vazhbhavarghal. indha edhir karuthukku onnum kotachal illa.

Jeevan Kana சிவன் (பாகம் 1) https://www.youtube.com/watch?v=UF7AVTrBqk4

ஆசீவகம் என்ற அமைப்பை சிவன் ஏற்படுத்தாவிட்டாலும்,…
YOUTUBE.COM

Saptha Rishi & Saptha Kanya were great philosophical concepts of Tamils which…
YOUTUBE.COM
Ajei Venthan Ajei Unaku evalavu thiddinalum soodu sorana ellatha jenmamta nee unaku vera vera vela ellaya

Thirunavukkarasu Nadhamuny சிங்களர்கள் உங்களை உதைப்பது சரிதான்.
LikeReplyMessage114 February at 15:46

Subramaniam Komagan Ramesh JP ஐய்யா.நல்வாழ்த்துக்கள் கம்பன் விழா சிறப்பாகநடைபெற்றது .உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு தேவை.

Thavam Myalvaganam Thavam வணக்கங்கள்

Loganathan Yogesh God is great kadaul thunai

Rishantha Kumar There is no point in discussing about this theory

Esakki Muthu அருமை . மேலும் தொடருங்கள்.
LikeReplyMessage114 February at 21:58

Mohamed Safiulla First of all how did human came to the world sir wat is u r mind set with proof


Mohamed Ahmed ஐயா. நன்றாக கதாகாலேட்சபம் பண்னினீர்கள்.. நன்றி.

ரொம்ப நல்லா கம்பு சுத்தினீங்க. எனக்கு ஒரு சந்தேகம்.

ஒருவர் என்னிடம் கேட்ட கேள்விதான்.

எனது காரியாலயத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செயத ஒருவரின் மகன் இன்று அதே காரியாலயத்தில் கலக்டராக உள்ளார். அவருக்கு தெரிந்த ஒரு பிராமணன் வேலை இல்லாம் கஸ்டப்படுவதைக் பார்த்து அவனுக்கு அவனது அப்பா பார்த்த துப்புரவு தொழிலாளி வேலையை வழங்க முடிவு செய்து, அவனுக்கு அவ்வேலையை வழங்கினார். ஆனால் அவன் மறுத்து விட்டான்.

அவனது அதுவே பெரிய வேலை. அரசாங்க வேலையும் கூட அப்படி இருந்தும் அவன் மறுத்ததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்.

அது மட்டுமல்ல நான் ஒரு கலக்டராக இருந்தும் கூட தன்னை உயர்சாதி என்று வாதிடும் அவன் என்னோடு பேசுவதற்கும் தயங்குகிறான்.

இன்றைய சமூக அமைப்பில் சாதாரண நிலையில் இருந்த நான் மாவட்ட கலக்டராகிவிடடேன்.

ஆனால் நான் இன்னும் உயர்சாதி ஆகவில்லை.

ஆகவே நான் எப்படி உயர்சாதி ஆவது?

சமூகத்தில் காணப்படும் மேலாளர், பியூன் வேற்றுமையை என்னால் தாண்ட முடிந்தது.

ஆனால் கேவலம் ஒரு பியூன் வேலை கூட இல்லாத பார்பானின் அந்தஸ்தை கூட சமூகத்தில் அடைவதற்கு என்னால் முடியவில்லை.

செருப்புத் தொழிலாளியின் மகன் ஆபரஹாம்லிங்கன் அமெரிக்காவின் ஜனாபதி ஆக முடியும். ஆனால் ஒரு சக்கிலியன் ....... இங்கே கேவலம் உயர்சாதி என்ற நிலையை அடைவது எப்படி?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் புத்திசாலியான நீங்கள் உயர்சாதியாக மாற தாங்கள் வழி காட்டினால் ரொம்ப நன்றாக இருக்கும்.

தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...