•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Wednesday, February 8, 2017

இன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம்

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கொழும்புக் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று (09.02.2017) மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து தொடங்கும் கம்பன்பட ஊர்வலத்துடன் ஆரம்பமாகவுள்ளன. மங்கல விளக்கேற்றலை இந்து மாமன்ற அறங்காவலர் சபைத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தம்பதியர் நிகழ்த்தி வைக்க, கடவுள் வாழ்த்தினை தமிழ் நாட்டைச் சேர்ந்த இராமேஸ்வரம் கம்பன் கழக அமைப்பாளர் ஆர். ரமணி சாஸ்திரிகள் இசைக்கவுள்ளார். தொடர்ந்து யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையையும், கொழும்புக் கம்பன் கழகத் தலைவர் திரு.தெ.ஈஸ்வரன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர். 

விழாவில் அடுத்து நூல் மற்றும் இறுவட்டுகளின் வெளியீடு இடம்பெறும். “கம்பனில் அரசியல்” என்ற நூலும், கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ். கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும், கொழும்பு மற்றும் யாழ் இசை விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும்  வெளியிடப்படுகின்றன. இவற்றின் முதற் பிரதிகளை முறையே இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், திரு.எஸ்.பி.சாமி, திரு. ஆர். மகேஸ்வரன், திரு.ஏ.மதுரைவீரன் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். வழமைபோல் இவ்வருடமும் கம்பன் கழகத்தினால் சமுதாயப் பணிக்காக வழங்கப்பெறும் அமரர் ஏ. எல். அலமேலு ஆச்சி நினைவு நிதியுதவியினை  மட்டக்களப்பு யோகர்சுவாமி மகளிர் இல்லத்தினரும், உதவி தேவைப்படும் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் வருடாந்தம் வழங்குவதற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அமரர் சி.கே. இலங்கைராஜா நினைவு நிதியுதவியினை மருத்துவ உதவிக்காக செல்வி சுப்பையா மகேஸ்வரியும் பெற்றுக்கொள்கின்றனர்.

தொடரும் பரிசளிப்பு அரங்கில், அமரர் இ.நமச்சிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள், இராமாயண மனனப் போட்டி, அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி மற்றும் அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 


  அடுத்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படவுள்ளன. நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள ‘நாவலர் விருதினை’ சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர்களும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருதினை’ சங்கீதபூஷணம் கலாநிதி நா.வி.மு. நவரத்தினமும்,  அமரர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் நினைவாக அன்னாரது குடும்பத்தினர் நிறுவியுள்ள “நுழைபுலம்” ஆய்வு விருதை, ‘வன்;னிப் பிரதேச வயற் பண்பாடு’ எனும் ஆய்வு நூலுக்காக ஆய்வாளர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும், “கவிக்கோ” அப்துல் ரகுமான் நிறுவிய “மகரந்தச் சிறகு” விருதினை இலக்கிய சாகரம் அல். அஸ_மத்தும், பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவிய “ஏற்றமிகு இளைஞர் விருதினை” இம்முறை நாதஸ்வர வித்வான் கே.பி குமரனும் பெறுகின்றனர். 
இன்றைய நிறைவு நிகழ்வாக “பட்டிமண்டபம்” தமிழகப் பேராசிரியர் புலவர் தா.கு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், ந.விஜயசுந்தரம், த.சிவசங்கர், ஸ்ரீ. பிரசாந்தன், அ. வாசுதேவா,  தி. வேல்நம்பி, ஐ. கதிர்காமசேகரம் ஆகியோர் வாதிடுகின்றனர். நோக்கர்களாக ஜி.இராஜகுலேந்திரா, ஜின்னா சரிபுத்தீன், கே.எஸ்.சிவகுமாரன், கோதை நகுலராஜா, ஆர். வைத்தமாநிதி, ச.இரகுபதிபாலஸ்ரீதரன், பத்மா சோமகாந்தன் ஆகியோர் பற்கேற்கின்றனர்.

கம்பன் விழாவினையொட்டி, விழா மண்டபத்தில் பூபாலசிங்கம் புத்தசாலையினரால் புத்தக்கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  இவ்விழாவில் கலந்துகொள்ளவென தமிழகத்திலிருந்து ஐந்து பேச்சாளர்களும், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் தமிழகத்திலிருந்தும் நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக தொடர் நாட்களில் பட்டிமண்டபம், இலக்கிய ஆணைக்குழு, உரையரங்கு, கவியரங்கம், வழக்காடுமன்றம், மேன்முறையீட்டுப் பட்டிடன்றம், கருத்தரங்கம், சிந்தனை அரங்கம், மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், தனியுரை மற்றும் இன்று சந்திக்கும் இவர்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. கம்பன் விழாவில் கலந்து தமிழ்ச் சுவை பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...