Thursday, July 27, 2017

செய்தியும்.. சிந்தனையும் .. 01 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்செய்தி

 (தினக்குரல் 22.07.2017)
வடமாகாணத்திற்கு வந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மத்திய அரசாங்கத்தையும் சுற்றுச் சூழலையும் காரணம் காட்டி நிராகரித்தமை, போஷாக்கின்மையை போக்க வழங்கப்பட்ட பணத்தில் வாகனம் வாங்கியமை, கல்வி மேம்பாட்டிற்கு செலவிடவேண்டிய நிதி 40,000 மில்லியனில் அதிபர், ஆசிரியர்களுக்குச் செயலமர்வு நடத்தியமை, விதவைகள், அனாதைச் சிறுவர்களுக்கு வழங்கவேண்டிய 14 கோடியே 40 இலட்சம் ரூபா பணத்தை கிடப்பில் போட்டமை, இவைகளே மூன்று வருடம் ஒன்பது மாதங்களில் வடமாகாண சபையில் நிகழ்ந்துள்ள சாதனைகள் என வடமாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதற்கான விஷேட அமர்வில் சபையில் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டத்தை நிராகரித்தீர்கள். அதற்கான மாற்றுத்திட்டத்தை மூன்று வருடங்களாகியும் முன் வைக்கவில்லை. சமாதானத்தைப் கட்டி எழுப்புதல் திட்டத்தில் பிரச்சினைப்பட்டீர்கள். அத்திட்டம் இன்று வேறுவழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நோர்வே அரசாங்கம் ஊடாக புலம்பெயர் முதலீட்டாளர்கள் பங்குகொள்ளும் மாநாடு பற்றி எதுவுமே தெரியாது என்றீர்கள். ஆனால் அதனை ஒழுங்கமைத்தவர்கள் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியதுடன் தொலைபேசியூடாகவும் கூறியதாகச் சொல்கிறார்கள். லண்டன், ‘கிங்ஸ்ரன்’ மற்றும் ‘மார்;க்கம்’ நகரங்களுடன் இரட்டை நகர உடன்படிக்கை செய்தீர்கள்.  புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வாக்குகளுக்காக உங்களைப் பயன்படுத்தியதைத் தவிர அதனால் நடந்தது ஒன்றுமில்லை. சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான வெளிநாட்டு ஆய்வுக;டாக அங்கு எண்ணெய்க் கசிவே இல்லையெனப் பொய் உரைத்தீர்கள். விதவைப் பெண்கள், அனாதைச் சிறுவர்கள் போன்றவர்களுக்கு உதவி வழங்க ஆளுநர் நிதியிலிருந்து எடுக்கப்பட்ட 14 கோடியே 40 இலட்சம் ரூபாவைக் கிடப்பில் போட்டீர்கள். 2014 ஆம் ஆண்டு 690 மில்லியன் ரூபாவையும் 2015 ஆம் ஆண்டு 92 மில்லியன் ரூபாவையும் செலவிடாமல் வைப்பிலிட்டீர்கள். ‘நெல்சிப்’ திட்டத்தினூடாக 128.78 மில்லியன் ரூபா பணத்தில் கட்டப்பட்ட 14 கட்டிடங்களை திறக்காமல் விட்டிருக்கின்றீர்கள்.
நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் ஒரு கொள்கை இல்லாமல் கஷ்டப் பிரதேசங்களில் இருந்து கண்மூடித்தனமாக ஆசிரியர்களை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்தீர்கள். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிட வேண்டிய 40 மில்லியன் ரூபா நிதியில் அதிபர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி செயலமர்வுகளை நடத்தி வீணே முடித்தீர்கள். பாடசாலை மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டம் ஊடாக வழங்கப்படும் மதிய உணவுக்கான சமையல் பொருட்களைத் திருட முயன்ற அதிபரைக் காப்பாற்றினீர்கள். போஷாக்கின்மையை போக்கும் செயற்றிட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதியில் வாகனம் வாங்கினீர்கள். தேவையான நியதிச்சட்டங்களை உருவாக்கத் தவறினீர்கள். அதிகாரங்கள் இல்லை என்றீர்கள்.
இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்த தவறினீர்கள். இப்படிப் பல்வேறு குறைபாடுகளை, நிர்வாகத் திறனற்ற செயற்பாடுகளை இந்த வடமாகாண அமைச்சரவை செய்திருக்கின்றது. அன்று வடகிழக்கு மாகாணசபை உருவாகி 16 மாதங்களில் சகல துறைகளுக்கும் மூலோபாயத்திட்டங்கள் உருவாக்கினார்கள். ஆனால் வடமாகாண சபையிடம் இன்று அப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை. அதிகாரிகள், முதலமைச்சரை பிழையாக வழிநடத்துகிறார்கள்.  


சிந்தனை
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பார் இலானும் கெடும்.  - குறள் 448


கௌரவ சி.தவராசா அவர்கட்கு,
எதிர்கட்சித்தலைவர்-வடமாகாணசபை.

அன்பின் சகோதரர்க்கு,
வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
நீண்டநாளாய் உங்கள் செயற்பாடுகளைக் கவனித்து வருகிறேன்.
யாருக்கும் அஞ்சாது சத்தியத்தை வெளிப்படப் பேசும் உங்கள் தனித்துவம் பிடிக்கிறது.
உண்மையை உரக்க, உறைக்கத் துணிவோடு சொல்லி வருகிறீர்கள்.
வடமாகாணசபையைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி,
‘கெடுப்பாரிலானும் கெடும்’ என்றாற்போல் தானே கெட்டுக்கொண்டிருக்கிறது.
அகிலம் அறிய அண்மையில் நடந்த அசிங்கங்களை என் சொல்ல?
ஆயிரக்கணக்கானோரின் இரத்தச் சகதியில் விளைந்த பயிர் என்பது தெரியாமல்,
பதவிக் குளிர்காய அவர்கள் படும்பாட்டினை காணக், கண் கூசுகின்றது.
எதிரிகள் பாதாளம் வெட்டி நம் இனத்தைப் பள்ளத்துள் சாய்க்க முனைந்து கொண்டிருக்கையில்,
கைகோர்த்து வீறோடு நிலைத்து நிற்க முயலாமல்,
யார், யாரை வீழ்த்துவது என்பதிலேயே அவர்களது முனைப்பான முழுப்பணியும் தொடர்கிறது.
சபை அமைந்து மூன்றாண்டுகளுக்குள் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு.
சரி, பிழை எப்பக்கமும்  இருந்துவிட்டுப் போகட்டும்.
இருந்த நான்கு அமைச்சர்கள் மீதும் ஒருவர் மிஞ்சாமல் ஊழல் குற்றச் சாட்டு வந்ததே குற்றமல்லவா?
சவுக்கெடுக்கவேண்டியவர்கள் சார்புபட்டு நிற்கிறார்கள்.
கட்சி இருவரைக் காக்க முனைகிறது. முதலமைச்சர் இருவரை முன்னிறுத்த முனைகிறார்.
மொத்தத்தில் பிழைக்கான ஆதரவில்த்தான் பிளவு. 
தமிழ்மக்களின் சாபக்கேடு முடியவில்லை போலும்.
இவ்வாறு ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி அமைந்துவிட்ட நிலையில்,
மேலதிக எதிர்க்கட்சித் தலைவராய் மிளிர்கிறீர்கள்.
உண்மையை உரத்துச் சொல்லும் உங்கள் ஆண்மை வசீகரிக்கிறது.
கடந்த 22 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வந்த அறிக்கை கண்டு மனம் மகிழ்ந்தது.
தமிழினத் தேரினை இழுப்போர் இழிவுற்றாலும்,
சறுக்குக்கட்டை போட சரியான ஒருவர் வாய்த்திருப்பதே மகிழ்ச்சிக்காம் காரணம்.
போரழிவால் பாதிப்புற்ற நம் இனத்தாருள் பலரும் பொய்யான உணர்ச்சிக் கூக்குரலுக்கும்,
தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளுக்குமே முதன்மை வழங்குகின்றனர்.
இந்நிலையில் அவர்தம் ஆதரவு நோக்கி பதவியை உறுதிப்படுத்த பொய்யுரைக்காமல்,
துணிந்து மெய்யுரைக்கும் உங்களை இனத்திற்கு வழிகாட்ட வந்த,
துருவ நட்சத்திரமாய் எண்ணத் தோன்றுகிறது.
பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் பேரிருளை ஒரே சூரியன் நீக்கிவிடுமாப் போல,
உங்கள் துணிவான ஆளுமை நம் அரசியலைத் தூய்மைப்படுத்தட்டும்.
பதவி, பணம், பக்கச்சார்பு என்பவற்றை நீக்கி தொடர்ந்து சத்தியம் சார்ந்து உங்கள் பணி தொடரட்டும்.
உங்கள் வீரியமான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.
 “இன்பமே எந்நாளும் துன்பமில்லை”
அன்பன்
இ. ஜெயராஜ்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...