•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Sunday, August 20, 2017

தாள் சேர்ப்பான் நல்லூரான் தடைகள் நீக்கி ! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்


லகமெலாம் உய்வதற்காய் உயர்ந்த தேரில்
         ஓங்கு புகழ் முருகனுமே உலவ வந்தான்.
நலங்களெலாம் நாம் அடையக் கைவேல் ஏந்தி
         நானிலமும் அறுமுகத்தால் பார்த்து வந்தான்.
வளங்கள் மிகு நல்லூரில் முருகன் தேரை
         வாங்கிக் கண் வழியாக மனத்திற் கொள்ள
நிலங்களெலாம் தலை நிரப்பி பக்தர் நின்றார்
         நீநிலமும் வானிலமாய் மாறிப்போச்சாம்.

செந்நிறத்து ஆடைதனை அணிகள் போர்;க்க
         சேராத பகை ஒடுக்க முருகன் தேரில்
முன்னிறுத்தி அறம் அதனைக் காக்க வந்தான்
         முடிந்ததுவாம் அசுரர் தமின் வாழ்வு என்று
எண்ணிறந்த பக்தரெலாம் எழுச்சி பொங்க
         இனி எமக்கு இன்பம் தான் என்று சொல்லி
கண் வழிய வாய் நிரம்ப முருக நாமம்
         ககனமெலாம் கேட்டிடவே கூவி நின்றார்.

வேல் கையில் விளங்கிடவும் விரும்பி நல்ல
         வெண்முத்து நகையோடு தெய்வயானை
சேல் ஒக்கும் கண்கொண்ட வள்ளி தானும்
         சேர்ந்து வலம் வந்திடவும் பக்தரெல்லாம்
மால் கெட்டு மனமெல்லாம் தெய்வச் சாயல்
         மாண்புடனே திகழ்ந்திடவே மகிழ்ந்து தங்கள்
வாழ்வொத்து தேவர்களும் வாழார் என்றே
         வரமொத்த மானுடத்தை வணங்கி நிற்பார்.

தேன் ஒத்த முருகன் அவன் செம்மை நாமம்
         தினம் ஒத்து பஜனை செயும் அன்பரெல்லாம்
பூண் ஒத்த முலை நிகர்த்த வள்ளி தெய்வ
         பூவையரை நினைந்து மனம் உருகப்பாடி
வான் ஒத்து நிலம் சிறக்க வணங்கி நிற்பார்
         வழி ஒத்து அருணகிரி பாடலெல்லாம்
மாண் ஒத்த சுருதியொடு தாளம் சேர
         மனம் உருகிப் பாடிடுவார் தேவர் நாண

வீதியெலாம் தம் உடலப் போர்வை போர்த்து
         வீரமிகு இளைஞரெலாம் விறலே பொங்க
ஆதி சிவன் மைந்தனவன் பெயரைச் சொல்லி
         ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தே நிற்பார்
நாதி இவன் தாளென்றே நாளும் நல்ல
         நங்கையர்கள் அடி அளந்து நாமம் சொல்லி
சோதிமிகு தம் தாலி சுடரக் கேட்டு
         சுற்றிவரும் அழகதனை என்னவென்பேன்?


மேளமொடு நாயனமும் இசையைக் கொட்ட
         மேதினியும் அதிர்ந்திடவே நாதம் மிக்க
ஆழமிகு மணியோசை அகிலம் கேட்க
         அற்புதமாய்த் தோளேறி ஆடி ஆடி
வேலனவன் கோபுரத்தைத் தாண்டி இந்த
         வியன் உலகின் துயரமெலாம் அறுப்பன் என்றே
தாளதனைச் சேர்ந்த தனதடியர்க்கெல்லாம்
         தஞ்சமதைத் தந்தருளித் தேரைச் சேர்வான்.

பகைத்தலையைச் சிதறடிக்கும் வேலன் போல
         பக்தரெலாம் தேர் முன்னே குவிந்து நின்று
மிகைத்து நிலம் மறைத்திடவே மேரு ஒத்து
         மேதினியில் குவிந்திருக்கும் தேங்காயெல்லாம்
தகைத்து நிலம் அதிர்ந்திடவே சிதற வீசி
         தம்மகத்தின் பக்திவெறி காட்டி நிற்பார்
திகைத்திதனைக் காணுகிற பாலரெல்லாம்
         தெருண்டு விழி சுழன்றிடவே தேம்பி நிற்பார்.

தேர் வடத்தைப் பிடித்திழுக்கும் இளையர் கூட்டம்
         தேவரெனத் தமை நினைந்து முருகன் போரில்
ஆர் முதன்மை இடம்பிடிப்போம் என்று முந்தி
         ஆர்த்ததனை விழி பிதுங்க அசைத்து நிற்கும்
பேர்த்து ரதம் இழுக்கின்ற அவர்கள் தம்மால்
         பிறழ்ந்து ரதம் நகராது நெறிகள் செய்து
போர்த்தலைமை கொள்வார் போல் சறுக்குக் கட்டை
         போடுபவர் அசையாது வழிகள் செய்வார்.

தேர் அசையத் தம் வாழ்வு திகழ்ந்ததென்றே
         தேம்பி அழும் அடியரெலாம் ‘முருக’ என்று
ஊர் அசையக் கூவிடுவார் உணர்வு விஞ்ச
         உலகமதை மறந்திடுவார் உயிருட் சேர்த்து
கார் நிறத்த மாலவனின் மருகன் தன்னை
         கண்ணதனால் விழுங்கிடுவார் கைகள் கூப்பி
பார் இதுவே சொர்க்கம் எனப் பகர்ந்து நிற்பார்
         பண்போடு முருகன் தாள் பணிந்து நிற்பார்!

பச்சை நிறப்பட்டாடை சாத்திப் பின்னே
         பளபளக்கும் நகைகளுடன் வேலும் கொண்டு
இச்சகத்தில் தேர் இருந்து இறங்கிக் கந்தன்
         எழுச்சியுடன் வரும் அழகை என்ன சொல்வேன்
நிச்சயமாய் இது தெய்வ உலகமென்றே
         நினைப்பதனில் உறுதிகொள நெகிழ்ந்து அன்பர்
இச்சையது தீராது ஏங்கி ஏங்கி
         எத்தனையோ கோடி முறை வணங்கி நிற்பார்.

வெள்ளமென அருள் சுரக்கும் வேலன் தன்னின்
         விழிக்கருணை காண்பதற்காய் விரிந்து நிற்கும்
கள்ளமிலா அன்பர்தமைக் கந்தன் தானும்
         கட்டழகால் மயக்கிடுவான் கைவேல் கொண்டு
உள்ளமதில் பதிந்திருக்கும் வினைகள் எல்லாம்
         ஒரு நொடியில் அகற்றி அவர் தம்மை ஈர்த்து
தள்ளரிய பெருவாழ்வைத் தந்து தன்னின்
         தாள் சேர்ப்பான் நல்லூரான் தடைகள் நீக்கி.
                                        ✽✽✽

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...