•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, October 3, 2017

ஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன்! | சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் அஞ்சலிக்கவிதை

ஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் இன்று
        ஒப்புரவு பல புரிந்து உலகை நீத்தான்
வாராத துயரெல்லாம் வந்து எங்கள்
        வாழ்வழித்த வேளையிலே உடனாய் நின்றான்.
ஆர் ஆரோ எமைவிட்டு ஓடி வேறு
        அடைக்கலங்கள் தேடுகையில் அசையா நின்று
நீர் சோரும் விழியெல்லாம் துடைத்த வேந்தன்
        நிழலாகிப் போனானோ? நெஞ்சம் வாடும்!

கணேசரத் தினம் என்னும் கருணைவேந்தன்
        கண் எதிரே கடவுளென வாழ்ந்து நின்றான்.
அனேகர் இவன் நிழல் தேடி அமைதி கண்டார்
        அனைவரையும் தாயெனவே அணைத்துக் கொண்டான்.
அனாதையென இங்கொருவர் இல்லை நானே
        அனைவர்க்கும் சொந்தமென உரத்துச் சொல்லி
கனாவினிலும் தொண்டினையே செய்து நின்ற
        கடவுட்கு நிகரானோன் கனவாய்ப் போனான்.

வானிருந்து குண்டு மழை பொழிந்து எங்கள்
        மண் முழுதும் உடல் சிதைந்து மக்கள் வாட
நீநிலத்தில் ஒரு பிரம்மன் நின்றாற் போல
        நிமிர்த்தி அவர் உடல் புதிதாய்ச் செய்து தந்தான்
தான் மனிதன் எனும் நினைப்பைச் சிறிதும் எண்ணா
        தனை மறந்து இயந்திரமாய் இயங்கி மக்கள்
வீணர்களால் அடைந்த துயர்; துடைத்த வேந்தன்
        விண்ணுலகைக் காத்திடவோ விரைந்து சென்றான்?

மாற்றினத்தார் கூட அவன் மகிமை கண்டு
        மண் பணிந்து வணங்கியதை நேரிற் கண்டேன்.
போற்றி அவன் புலமையினைப் புகழ்ந்து நின்றார்
        பொன்னான தொண்டினையே பணிந்து நின்றார்
நேற்று வரை கொழும்பினிலே தன்னைக் காண
        நிதியின்றி வந்தோரின் வருத்தம் தீர்த்து
ஆற்றியவன், தன் பொருளை அவருக்கீந்து
        அன்புடனே மருத்துவத்தைப் பெருமை செய்தோன்.

ஈழத்தின் போர் நிகழ்வை என்றோ ஓர் நாள்
        எழுதுபவர் மண்ணுக்காய் உயிரை ஈந்த
வேழத்தை ஒத்த பெரும் வீரரோடு
        வியனுலகில் மக்கள் உயிர் காத்தே நல்ல
ஆழத்துத் தொண்டியற்றி நின்ற எங்கள்
        ஐயனையும் போராளி என்றே சொல்வார்.
காலத்தைக் கடந்தவனே உந்தன் பாதம்
        கண்ணீரால் கழுவுகிறோம் கவன்று நின்றோம்.

கம்பனது பெருவிழவில் உன்னை ஏற்றி
        கற்றவர்கள் சூழ்ந்திருக்கப் பெருமை செய்யும்
நம்முடைய விருப்பதனை ஏற்று எங்கள்
        நயமிகுந்த பொற்சபைக்கு வந்து நின்றாய்.
தெம்புடனே விருதேற்றுத் திகழ்ந்த அந்த
        தேசதனை என்னென்பேன்? தேவேயாகி
எம்மவரை விட்டின்று விண்ணைச் சேர்ந்தாய்!
        ஏந்தல் உன்னை என்றென்றும் நினைந்து நிற்போம்.
                      ✿❀✿

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...