•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, May 18, 2018

நம் இனத்தின் குறியீடாய் வாழ்ந்து போனான்! -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-


உலகமெலாம் தன் ஆற்றல் எழுத்தினாலே
         உயர்வித்த பெருமகனும் விண்ணைச் சார்ந்தான்
நிலமகளின் திலகமென நிமிர்ந்து நின்று
         நேசமதை ஓதியவன் விண்ணைச் சார்ந்தான்
பலபலவாய்ப் பாத்திரங்கள் படைத்து நல்ல
         பண்பட்ட மானுடத்தைச் செதுக்கி நின்றோன்
அளவிறந்த அவன் அன்பர் அழுதுநிற்க
         அவனியதைத் துறந்தேதான் விண்ணைச் சார்ந்தான்

வீறான தன் எழுத்தால் உழுது நெஞ்சம்
         விண்வரையும் மானுடத்தின் உயர்வை ஏற்றி
ஆறாகப் பாய்ந்த பெருந்தமிழதாலே
         அற்புதமாம் காவியங்கள் செதுக்கி நின்றோன்
வேராக நின்றேதான் இதயந்தன்னில்
         வேற்றுமைகள் தனை மாற்றி அன்பை ஊற்றி
நேராக இளையர்குலம் நிமிர்ந்து நிற்க
         நெறிசெய்த பெரியவனும் விண்ணைச்சார்ந்தான்.

மேர்க்கூறி பூக்களினால் நம்மை ஈர்த்து
         மென்மேலும் பல அமுதக்கடல்கள் தந்தோன்
பார்க்காத வாழ்க்கையதன் பகுதியெல்லாம்
         பார்த்தேதான் மனநோய்க்கு மருந்து செய்தோன்
ஆர்க்காக இவ் வாழ்க்கை என்றே கேட்டு
         அரியபெரும் குரு அடியைச் சார்ந்து நின்றோன்
கார்க்கால மின்னலென வெளிச்சம் காட்டி
         கண்மூடித் திறந்திடுமுன் விண்ணைச் சார்ந்தான்.

பச்சை வயல் மனது தனை பசுமையாக
         படித்தோர்தம் நெஞ்சமெலாம் பரவச் செய்தான்
விச்சையுடன் கடற்பாலம் செய்து எங்கள்
         வீறுடைய கம்பனுக்கும் விளக்கம் செய்தான்
இச்சகத்தில் இரும்பதனால் குதிரை செய்து
         ஏற்றமுற மண்முழுதும் ஓடவிட்டான்
பச்சமுடன் தாயும் ஆனவனாய் நின்று
         பாரெல்லாம் அன்பு விதை தூவி நின்றான்.

அமிழ்தமெனக் கவி செய்தான் முன்பு, பின்பு
         அற்புதமாம் நற்கதைகள் ஆக்கித்தந்தான்
நிமிர்ந்து இனம் மகிழ்ந்திடவே நினைக்கவொட்டா
         நெடுங்கதைகள் பற்பலவும் புனைந்து நின்றான்.
தமிழரினம் வெண்திரையைச் சார்தல் கண்டு
         தானும் அதன் உள் நுழைந்து தனித்து நின்றான்.
தமிழதனின் பல்துறையும் தன்னதாக்கிச்
         சாதனைகள் செய்திறையைச் சார்ந்தே போனான்.

சிற்றின்பப் பிரியன் எனப் பலரும் பேச
         சிரித்தவனும் நின்றதனை நானும் கண்டேன்
அற்புதமாம் பேரின்பக் கடலில் மூழ்கி
         அரிய பெரும் குருஅடியைப் பற்றிப் பின்னர்
விற்பனனாய்ப் பலர் வியக்க யோகம் மேவி
         வியந்திடவே அனுபூதி விளக்கி நின்றான்
நற்தவனாம் அவன் பெருமை நவிலலாமோ?
         நம் இனத்தின் குறியீடாய் வாழ்ந்து போனான்.

நம் கழக அழைப்பேற்று ஈழம் வந்து
         நட்புடனே நம் இல்லத்தொருவனானான்
எம்முடனே ஒருமித்து ஈழம் எங்கும்
         இனித்திடவே பயணித்த நாட்கள் என்னே!
தம் அரிய தமிழதனால் எந்தன் நூற்குத்
         தரமான முன்னுரையும் தந்து நின்றான்
வெம்மையுற நெஞ்சமதும் வெடித்து நோக
         விண்ணதனில் பயணித்தான் விம்மி நின்றோம்.

எழுத்ததனின் சித்தனென ஏற்றம் பெற்ற
         ஏந்தல் அவன் இனியில்லை என்னே துன்பம்!
வழுத்துகிற மனத்திலெலாம் என்றும் தானே
         வடித்தபெரும் கதைகளினால் வாழ்ந்து நிற்பான்
பழுத்த பழம் விழுவதுவும் இயற்கை அன்றோ!
         பாலகுமாரன் நிறைந்து இயற்கையானான்
அழுத்தமுடன் வரலாற்றில் பெயரை ஏற்றி
         அடுத்தமுறை வருவதற்காய் விண்ணைச் சார்ந்தான்.
                                              ***

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...