Friday, May 11, 2018

வினாக்களம் - 41 | கம்பவாரிதி பதில்கள்

வாசகர் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் "வினாக்களம்" கேள்வி-பதில் தொடரின் 41 ஆவது பகுதியில் சுவாரசியமான கேள்வி பதில்களுடன் இன்று சந்திக்கிறோம்.

நீங்களும் உங்கள் கேள்விகளை "Kambavarithy Ilankai Jeyaraj" எனும் முகப்புத்தக பக்கத்தினூடாகவோ அல்லது kambanlanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். உங்கள் கேள்விகளும் அதற்குரிய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பதில்களும் தொடர்ந்து உகரம் இணையத்தளத்தில் பிரசுரமாகும்.

கேள்வி 01: 
காந்தரூபன் மேகவர்மன்:   அண்மையில் உங்களை ஆச்சரியப்படவைத்த விஷயம் எது? 

கம்பவாரிதி பதில்:
    நடந்து முடிந்த எமது கம்பன் விழாவில் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்களுக்கு நாங்கள் விருதளித்து கௌரவித்தோம்.  அந்த நிகழ்வுக்கு கூட்டமைப்பைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ (சுமந்திரன் உட்பட) மாகாணசபை உறுப்பினரோ உள்ளூராட்சி சபை உறுப்பினரோ வருகை தந்திருக்கவில்லை. தமது தலைவனுக்கு நிகழும் பாராட்டில் கழகத்திற்காக இல்லையென்றாலும் தம் தலைவருக்காகவேனும் கலந்து கொள்ளவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி அவர்களில் ஒருவரிடமும் இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டேன். பாராட்டுப்பெற்ற மற்ற அனைவருக்காகவும் பலர் வருகை தந்திருந்தனர். சம்பந்தன் ஐயா மட்டும் மகளுடன் தனியே வந்திருந்தார். தங்களுக்குள்ளேயே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேணாத இவர்களா நம் இனத்தைக் காக்கப்போகிறார்கள். இந்த அநியாயத்தில் கூட்டமைப்பு என்று பெயர் வேறு! கேட்டால் இனவிடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். 

கூத்தாடியின் கொமென்ட்ஸ்: ஆகா! இதுவெல்லவோ தலைமைக்கான மரியாதை!கேள்வி 02: 
ஞானகாந்தன்: உங்கள் ஆசிரியர்களிடம் தமிழ் கற்று எதனைத் தெரிந்து கொண்டீர்கள்?  

கம்பவாரிதி பதில்:
          அன்பைத்  தெரிந்து  கொண்டேன். 

கூத்தாடியின் கொமென்ட்ஸ்: அன்பும் தமிழும் இரண்டென்பர் அறிவிலார்.


கேள்வி 03: 
தனுஷன் மகேந்திரம்:      அண்மையில் ஏதும் சினிமா பார்த்தீர்களா? 

கம்பவாரிதி பதில்:
      தங்கையின் மகன் திருமணத்திற்காக அண்மையில் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்தேன். விமானத்தில் இரண்டு சினிமாக்கள் பார்க்கமுடிந்தது. அதில் 'அறம்" என்ற சினிமா என்னை மிகவும் கவர்ந்தது. இயக்குனர் வல்லரசாய் வர விரும்பும் இந்தியாவின் அறிவு வளர்ச்சியை அற்புதமாய் கிண்டல் செய்திருந்தார். அது நேர்மையான ஒரு சுயவிமர்சனம். குழாய்க்கிணறில் விழுந்து தத்தளிக்கும் ஓரு குழந்தையை மீட்கும் கதையை உயிர்துடிக்கும் படியாய் படமாக்கியிருந்தார்கள். அரசியல் பொய்ம்மை, நிர்வாக ஊழல், கிராம மக்களின் உண்மை உணர்ச்சி, ஒற்றுமை, ஏழ்மையில் பதிந்திருக்கும் அன்பு என பல விடயங்களை இயக்குனர் பக்குவமாய் நுட்பமாய்ப் பதிவாக்கியிருக்கிறார். இதுவரை கவர்ச்சிக் கதாநாயகியாய் வந்து போன நயன்தாரா தனது அற்புதமான நடிப்பால் நம்மை வியக்கவைக்கிறார். அவர் பாத்திரத்தை கை எடுத்து கும்பிடத் தோன்றுகிறது. இன்னும் மானுடம் சாகவில்லை என்பதற்கு சான்று பகரும் ஒரு நல்ல சினிமா. 

கூத்தாடியின் கொமென்ட்ஸ்: கொஞ்சம் தாமதமான விமர்சனம்.


கேள்வி 04: 
கமலதாசன் விஷ்ணு: உருப்படுவார்கள், உருப்படுத்துவார்கள் எனும் நம்பிக்கைகளைத் தரும் தமிழ்த்தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கம்பவாரிதி பதில்:
    சொல்கிறேன். அதற்கு முன் சில தலைவர்களது குறைகள் பற்றி சிறியதொரு கணக்கெடுப்பு
• இரா. சம்பந்தன் 
  - பிரச்சினைகளைக்கு முகம்கொடுக்காமல் தள்ளிப்போடுதல், காலம் கடந்த பிறகு பிரச்சினைகளை ஆராய்தல், நேர் படப் பேசும் நிமிர்வின்மை, வெளிப்படைத்தன்மையின்மை..
• எம். சுமந்திரன்
  - அளவுக்கதிகமான தன்முனைப்பு, இரகசியச்செயற்பாடுகள், மக்கள் உணர்வறியாத பேச்சுக்கள், கூட்டு ஒழுங்கை மீறும் பண்பு, சொற்சுத்தமின்மை..

• சி.வி.விக்னேஸ்வரன் 
 - அளவுக்கதிகமான தன்முனைப்பு, நன்றியின்மை, நிர்வாகத் திறமையின்மை, மக்களைப் பிழையான வழிகளில் செலுத்துதல், ஊக்கமின்மை, சொற்சுத்தமின்மை, தியாகமின்மை, இயக்க இயங்குதல்..

• மாவை சேனாதிராஜா 
  - ஆளுமையின்மை, தலைமையை நெறிசெய்யத் தெரியாமை,பயனில் சொல் பாராட்டுதல், பிள்ளைப்பாசம், பதவி ஆசை, சுயஇயக்கமின்மை..

• டக்ளஸ் தேவானந்தா
  - மக்கள் மத்தியில் பதிவாகியிருக்கும் அவநம்பிக்கை, அணியினரின் தவறுகள், தன்னைச்சார்ந்த ஆளுமையாளர்களை அங்கீகரியாமை, முன்னைய அரச சார்புப்போக்கு, விரிவடையா வாக்குவங்கி..

• பொ.கஜேந்திரகுமார் 
 - சுயசெயற்பாடின்மை, எதிராளிகளின் பலயீனத்தை நம்பிப்பலம் வளர்த்தல், பதவி ஆசை, தியாகமின்மை, மூதாதையரின் தியாகத்தில் தன்னை வளர்க்க நினைத்தல், மற்றவர் ஆதரவை நம்பி வெற்றிக்கு வழிதேடும் இயல்பு..

• சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் 
 - சிரமமின்றி கூட்டமைப்புக்கூட்டில் தம்கட்சி முட்டையிட்டு தலைமைவளர்க்க நிலைக்கும் குயில் பண்பு, மக்கள் மத்தியில் பதிவாகியுள்ள முன்னைய வெறுப்புக்கள், சுயநம்பிக்கையின்மை, தடுமாறும் தலைமைப்பண்பு..

• சுரேஷ் பிரேமச்சந்திரன் 
  - பதவிக்காய் அணிசாரும் பண்பு, நிலைத்த கொள்கையின்மை, சுயநம்பிக்கையின்மை, பதவி ஆசைவார்த்தைச் சுத்தமின்மை..

 ஆனந்த சங்கரி 
   - முதுமைச்சோர்வு, சுயசெயற்பாடின்றி எதிரிகளின் குறையில் தன்னை வளர்க்க நினைத்தல். அறிக்கை அரசியல் பண்பு, அணியினர் இல்லாக்குறை, அளவுக்கதிகமான தன்முனைப்பு..

நினைத்து நினைத்துப் பார்த்தால் குறைபாடுகள்தான் விஸ்வரூபம் எடுக்கின்றன. குறைபாடுகள் போகாதவரை இவர்கள் உருப்படுவதே கஷ்டம் என்ற நிலையில் இவர்கள் எப்படி மற்றவர்களை உருப்படுத்தப்போகிறார்கள்?

கூத்தாடியின் கொமென்ட்ஸ்:         இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!


கேள்வி 05: 
சண்முகதாசன்:    உணர்வு, அறிவு இரண்டில் மனிதனுக்கு எது முக்கியம்?

கம்பவாரிதி பதில்:
     இரண்டுமே தான். அறிவே இல்லாத மனிதன்  விலங்கிற்கு ஒப்பாவான். உணர்வே இல்லாத மனிதன் கல்லுக்கு ஒப்பாவான். எனவே இவ்விரண்டுமே தேவைதான். இவ் இரண்டில் எதற்கு அதிக  முக்கியத்துவம் என்று கேட்பீர்களானால் உணர்வுக்குத்தான் என்பேன்.

கூத்தாடியின் கொமென்ட்ஸ்:    ஏனாம்?

கேள்வி 06: 
ஜதுகுலன்: வடக்கு முதலமைச்சர் பல்கலைக்கழக மாணவர்களோடு பகைத்துவிட்டாரே பார்த்தீர்களா?

கம்பவாரிதி பதில்:
    பகைப்பது அவரது பண்பு. நம்பியவர்களையே பகைத்தவர் அவர். இவர்கள் அவருக்கு எம்மாத்திரம்.
கவர்னர்கள் பகை..
பிரதம செயலாளர்கள் பகை..
போராளிக்குழுக்கள் பகை..
பிரதமர் பகை..
மாகாண அமைச்சர்கள் பகை..
தமிழரசுக்கட்சி தலைவர்கள் பகை..
என்ற பட்டியலில் இது பத்தோடு பதினொன்று. இவருக்காகத்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சில நாட்களுக்கு முன் போராடினார்கள்! சம்பந்தன் போன்றோரது நிலையை இப்போது மாணவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

கூத்தாடியின் கொமென்ட்ஸ்: சண்டைத்தலைவர் போனாராம் டும்.. டும்.. டும்.. டும்.. சண்டித்தலைவர் வந்தாராம் டும்.. டும்.. டும்.. டும்..


கேள்வி 07: 
திருக்குமரன்: சென்ற முறை அவுஸ்திரேலியக் கோயில் ஒன்றில் மகாவிஷ்ணு விக்கிரகம் வைக்காமல் தடுக்கப்பட்டது பற்றி எழுதியிருந்தீர்கள்.  சைவம், வைஷ்ணவம் என இரு சமயங்கள் இருப்பதையும் சைவர்கள் சிவனையும், வைஷ்ணவர்கள் விஷ்ணுவையும் வழிபட்டு வருவதையும் உலகம் அறியும். ஆகவே ஒரு சைவக்கோயிலில் விஷ்ணுவின் விக்கிரகத்தை வைக்காமல் இருப்பது சரிதானே. கம்பனைப் போற்றும் உங்களுக்கு விஷ்ணுவைப் பிடித்தால். எல்லோருக்கும் அது பிடிக்கவேண்டுமா? இனிமேலேனும் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக சைவத்திற்கு முரணான செய்திகளைச் சொல்லாதீர்கள்.

கம்பவாரிதி பதில்:
     நீங்கள் மீளவும் கேட்பதால் இக்கேள்விக்கான விடையைச் சற்று விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்றுரைக்கப்படும் ஆறு சமயங்களின் கூட்டையே இன்று இந்து சமயம் என்று சொல்லி வருகிறோம். உறவுள்ள சமயங்களின் தேவையற்ற பிரிவுகளை நீக்குவதற்காக ஆதிசங்கரரால் இச்சமயங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இதில் சைவம் சிவனையும், வைஷ்ணவம் விஷ்ணுவையும், சாக்தம் சக்தியையும், காணாபத்தியம் விநாயகரையும், கௌமாரம் முருகனையும், சௌரம் சூரியனையும் முழுமுதல் தெய்வங்களாய்க் கொண்டுள்ளன. இப்பிரிவுகள் இன்று பெருமளவில் இல்லாமல் போயிற்று. வைஷ்ணவர்கள் மட்டும் இப்பிரிவில் இன்றும் உறுதிகாட்டி நிற்கின்றனர்.
  முதலில் இச்சமயப் பிரிவுகளுக்கான அடிப்படையைத் தெரிந்து கொள்ளுங்கள். மேற்சொன்ன சமயங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உறவானவை. மேற் சமயங்களின் செய்திகளை உரைக்கும் அவ்வச் சமயநூல்களில் மற்றைய தெய்வங்கள் பற்றிய செய்திகளும் பதிவாகியுள்ளன. அப்படியானால் உறவான இச்சமயங்களுக்குள் பிரிவுகள் ஏன் வந்தன எனக்கேட்பீர்கள்? நம் சமய மரபில் பரம்பொருள் கொள்கை என்ற ஒன்று உண்டு. பரம்பொருள் என்றால் மேலான பொருள் என்று அர்த்தம். ஒரு சமயம் பல தெய்வங்கள் பற்றிச் சொன்னாலும் எல்லாத் தெய்வங்களிலும் மேலானதாய்க் கருதப்படும் தெய்வத்தையே அச்சமயம் பரம்பொருளாய்க் கொள்ளும். அந்தவகையிலே மேற்சொன்ன சமயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வங்களை தத்தமது பரம்பொருளாய்க் கொண்டன. அதுவே மேற்பிரிவுகளுக்கும் காரணமாம். சைவம் சிவனைப் பரம்பொருள் என்றும் வைஷ்ணவம் விஷ்ணுவைப் பரம்பொருள் என்றும் மேற் சொன்ன மற்றைய சமயங்கள் தாம் தாம் வழிபடும் கடவுள்களையே பரம்பொருள் என்றும் சொல்லிக் கொள்கின்றன. இதுவே மேற் சமய வேறுபாடுகளுக்கான அடிப்படை.
     இது தேவையற்ற பிரச்சினை என்று கருதியே ஆதிசங்கரர் சன்மத சமரசம் செய்தார். ஆனாலும் வைஷ்ணவர்கள் இந்த விடயத்தில் விஷ்ணுவைத் தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம் என்று இன்றும் பிடிவாதம் பிடித்தே இருக்கின்றனர். சைவம் அப்படியானதல்ல. அது அனைத்து சமயங்களையும் அணைத்து நிற்பது. 'யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்பது சைவசாத்திர நூலாசிரியர்களின் முடிவு. நமது சைவசித்தாந்தம்  முப்பத்தாறு தத்துவங்களில் முதல் ஐந்தை சிவதத்துவங்கள் என்கின்றது. நாதம், விந்து, சதாசிவம், ஈஸ்வரம், சுத்தவித்தை என்பனவே அவ் ஐந்து தத்துவங்களாம். நாத தத்துவத்தில் இறைவன் சிவனாகவும், விந்து தத்துவத்தில் சக்தியாகவும், ஈஸ்வர தத்துவத்தில் ஈஸ்வரனாகவும் சதாசிவ தத்துவத்தில் சதாசிவனாகவும் இருப்பான் என்று சொல்லி சுத்தவித்தையில் மால், அயன், ருத்திரன் எனும் மூவடிவம் கொள்வான் என்றும் சித்தாந்தம் சொல்கிறது. இதுதவிரவும் சிவனது நவபேதங்களில் ஒன்றாகவே திருமால் சைவசாத்திர நூல்களில் உரைக்கப்படுகிறார்.
    உமாதேவியின் அண்ணனாகவும், முருகனின் மாமனாகவும் திருமாலை சைவபுராணங்கள் உரைக்கின்றன. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், தர்மசாஸ்திரம் என்பதே சைவநூல் வரிசையாம். இதிகாசங்களில் உள்ளடக்கப்பட்ட இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டிலும் திருமாலே கதாநாயகனாய் உரைக்கப்படுகிறார். திருமால் சைவத்தில் சொல்லப்படும் கடவுள்களில் ஒருவராவார் என்பது மேற்படி விடயங்களால் உறுதியாகிறது. திருமாலை சைவர்கள் பரம்பொருளாய் ஏற்கமாட்டார்களே தவிர தம் சமயம் சார்ந்த காவல் கடவுளாக ஏற்றனர் என்பது உறுதி. சிவனது ஆலய அமைப்புப் பற்றி உரைக்கும் ஆகமங்கள் திருமாலின் பத்தினியாகிய மகாலட்சுமிக்கு உட்பிரகாரத்தில் சன்னிதியை உறுதிப்படுத்துகின்றன. சைவர்களின் தலைமை ஆலயமாகிய சிதம்பரத்தின் உள்ளே மகாவிஷ்ணுவுக்கு தனிச்சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
    மேற்சொன்னவற்றால் சைவ ஆலயங்களில் திருமால் சிலையைப் பிரதிஷ்டை செய்வது தவறில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லை நாம் வைக்கமாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தால் சைவ ஆலயங்களுள் மேற்சொன்ன ஆறு சமயக்கடவுள்களையும் வைக்கமுடியாமல் போகும். சக்தி;யோ, வினாயகரோ, முருகனோ இல்லாமல் சிவன் கோயில் அமைக்கமுடியுமா?
    இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால்? விஷ்ணு சிலை வைக்கக்கூடாது என்று மறுக்கப்பட்ட கோயில் சிவன் கோயிலன்று முருகன் கோயில். முருகனுக்கு சிவன் தந்தை, திருமால் மாமன். மாமனுக்குச் செய்யப்படும் அவமரியாதையை மருமகன் பொறுப்பானா? மறுத்தவர்கள் தான் சொல்லவேண்டும்.

கூத்தாடியின் கொமென்ட்ஸ்: அடசாமி! சாமியைத்தன்னும் நிம்மதியாய்  இருக்க விடுங்கடாப்பா?

***

Post Comment

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...