•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, July 30, 2018

கண்பட்டுப் போனதுவோ? கலைஞர் ஐயா! கரிபட்ட நாக்கெதுவும் சபித்ததேயோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

லகெல்லாம் வாழுகிற தமிழர் தம்மின்
        உயர்ந்த பெரும் தலைவனென உயர்ந்துநின்று
கலையெல்லாம் இயல்பாகக் கற்றுத் தேர்ந்து
        கருத்தெல்லாம் தமிழரின உயர்வுக்காக்கி
நிலையாகப் பலகாலம் நிமிர்ந்து நல்ல
        நேரில்லாப் பணிசெய்த நேச! உன்னை
மலையாகப் பார்த்துநிதம் மகிழ்ந்த நெஞ்சம்
        மருண்டேதான் நோய் சேரப் பார்த்ததையோ!

தொலைக்காட்சிச் செய்தியிலே துயரம் பொங்க
        துவண்டு டலம் கட்டிலிலே சாய்ந்திருக்கும்
நிலைக்காட்சி கண்டுமனம் நூலாய்ப் போனேன்.
        நெஞ்சமெலாம் நெருப்பாக நெகிழ்ந்து போனேன்.
விலையில்லா வள்ளுவனை இளங்கோ தன்னை
        வீறுயர்ந்த காப்பியனை நிமிர்ந்தே நிற்க
தளர்ந்த பெரும் வயதினிலும் செய்த அன்ப!
        தளர்ச்சி உனக்கென்றிட்டால் தாங்காதுள்ளம்!


செந்தமிழின் கூறெல்லாம் சேர்த்துச் சேர்த்து
        சிறந்தபெரும் தலைவரென மண்ணில் வாழ
நம் தமிழர் நாட்டினிலே வேறார் உள்ளார்?
        நாம் மகிழத் தமிழ்ப்புலமை கைமேற்கொண்டு
முந்துதமிழ், எழுத்தினிலும் நாவின்மேலும்
        முப்போதும் மனத்தினிலும் கொண்டு வாழும்
உந்தனது சிறப்பெவரும் நினையலாமோ?
        உனையொக்க நினைந்தெவரும் அணையலாமோ!

தொண்ணூற்று நான்ககவை நிறைந்த போதும்
        தொலையாத முயற்சியுடன் இளைஞன் போல
உன் பற்றால் தமிழரின உயர்வுக்காக
        ஒரு நிமிடந்தனைக் கூட ஓய்வேயின்றி
விண்தொட்ட பணிகளெலாம் தூசாயெண்ணி
        விரல் நுனியால் அனைத்தையுமே ஆட்டிவைத்தாய்!
கண்பட்டுப் போனதுவோ? கலைஞர் ஐயா!
        கரிபட்ட நாக்கெதுவும் சபித்ததேயோ?

ஓங்குபுகழ் அறமெல்லாம் ஒன்றாய்ச் சொன்ன
        ஒப்பில்லா வள்ளுவரும் உலகம் போற்ற
வீங்குபுகழ் கொண்டேதான் குமரிதன்னில்
        விண்ணுயர நின்றதுவும் உன்னால் தானே!
‘பாங்குடனே எமக்கேதான் விளங்கும் இந்த
        பார் புகழும் காப்பியமாம்’ என்று கற்றோர்
தேங்கிடச்செய் இலக்கணத்தைத் தெளிவாய்ச் சொல்லி
        தெருவினிலே நிற்போர்க்கும் விளங்கச் செய்தாய்!

கற்பரசி கண்ணகியைக் கணிதம் பார்த்து
        களங்கத்தின் இருப்பிடமாய்ச் சொல்லி, நின்ற
நற்பதுமை தனைப் பெயர்த்து நல்லோர் வாட
        நலிவுபல செய்தவர்கள் நாணித் தாழ
பொற்பதுமை தனை மீட்டுப் புகழோடந்த
        புகழரசி தனை மீண்டும் தமிழர் மண்ணில்
நிற்பதற்கு வழிவகுத்த நிகரில்லாத
        நெடியவனே உனை நோயும் நெருங்கிட்டாமோ?

ஓயாது தனதுயர்வு எண்ணி என்றும்
        உழைத்திட்ட மகனுக்கு ஓய்வு நல்க
தாயாக நினைந்தாளோ? தமிழ்த்தாய் இன்று
        தயவால்தான் விளைந்ததுவோ நோயும் என்று
சேயாக நினைந்து மனம் சிறிது தேறி
        தெளிந்து துயர் நீக்கிடவே நினைந்தும் நெஞ்சம்
ஓயாத கண்ணீரால் உழல்வதுண்மை
        உத்தமனே, நோய் தீர ஓடி வாராய்!


நீளத்துப் புகழ் முன்னர் கொண்டுநின்ற
        நேசத்துப்படை என்ற பேரில் வந்தோர்
ஈழத்துத் தமிழரினம் இதயம் வாட
        எம்மண்ணில் பல துயரம் செய்து மீண்ட
காலத்தில் அவர்தம்மை ஏற்று இங்கு
        கனிவோடு வரவேற்க மாட்டேன் என்றாய்.
ஆழத்து உனதன்பைக் கண்டு ஈழ
        அன்பர்நாம் அதிசயித்தததுவோ உண்மை!

நெருப்புமழை பொழிந்ததென நீசர் எம்மை
        நெடுந்தூரக் குண்டுகளால் எறிந்து தாக்க
விருப்புடனே தமிழ்நாட்டில் நீயே நின்று
        விலக்கிடுவாய் அக்கொடுமை என்று எண்ணி
தருக்குடனே இருந்த எமை தாங்காவிட்டாய்
        தள்ளாடி எங்கள் இனம் வீழ்ந்ததய்யா!
பெருத்த துயர் அடிநெஞ்சில் இருந்தபோதும்
        பெரியனுனை வெறுத்திடவும் முடியுமாமோ!
                               
சங்கத்துத் தனிச்சபையில் தமிழைக் கேட்க
        தாழாது முகம்பொங்க தளரா நெஞ்சால்
அங்கத்து நோயதனை நினையாதன்று
        அமர்ந்தேதான் நாள்முழுதும் அறிஞர் தம்மின்
பொங்கித்தான் பொழிந்திட்ட தமிழே கேட்டாய்.
        புண்ணாகும் உடம்பென்றும் அறிந்தே கேட்டாய்.
வங்கத்துக் கடலுந்தான் தமிழ்த்தாய் மீது
        வற்றாத உனதன்பிற்கிணையதாமோ?

ஈழத்து நண்பனென மேடை தன்னில்
        இயம்பிய சொல் மறந்திடுமோ? இமயம்போன்ற
நீளத்துப் புகழ்கொண்ட நீதான் எங்கே?
        நினதருகில் புல்போன்ற நான்தான் எங்கே?
ஆழத்து உனதன்பை வார்த்தை சொல்ல
        அதிர்ந்தேன் நான், அன்றே உன் அன்பனானேன்.
நீளத்தான் நான் நினையும் இறையை வேண்டி
        நினதுடலின் நோய்தீரப் பணிந்து நின்றேன்!

செந்தமிழின் மேற்கொண்ட தீரா அன்பின்
        திறத்துக்குப் பல்லாண்டு! தெளிந்து என்றும்
அந்தமிலாப் பற்றோடு தமிழர் ஓங்க
        ஆற்றுகிற பணியதற்கும், ஒரு பல்லாண்டு!
நம் தமிழர் வாழ்வதற்கு தரணிமீதில்
        நானிருக்கப் பயமென்ன? என்று சொல்லும்
தெம்பு தரும் வார்த்தைக்கும், தீராவுந்தன்
        தெளிவு தரும் அறிவுக்கும் பல்லாண்டாக!
                                             ***

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...