•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, August 17, 2018

புதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

ங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன்.
அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா?
அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது.
என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று,
என்றும் எவரையும் நான் வலியுறுத்தியதில்லை.
ஆனால், இன்று இக்கட்டுரையைக் கட்டாயமாகப் படியுங்கள் என,
உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.
முக்கியமாக எம் இனத்தின் நாளைய தலைவிதியை நிர்ணயிக்கப்போகும்,
இளைய தலைமுறையினர் இக் கட்டுரையை கட்டாயம் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
அதைவிட முக்கியம் உயர்கல்வி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள்,
இக் கட்டுரையைப் படிப்பது.
அதற்கான ஒரு காரணம் உண்டு.
அது என்ன என்பதை பின்னால் சொல்கிறேன்.
அதற்கு முன்….நடந்து முடிந்த முப்பதாண்டு அவலங்களால்,
எம் இளையோரின் வாழ்வில் பல தேக்கங்கள்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக,
திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்ந்தாற் போன்ற அனுபவத்திற்கு,
ஆளாக்கப்பட்ட துரதிஷ்டசாலிகள் அவர்கள்.
உயிர்ப்பயம், உடைமைப்பயம், உலகத்தொடர்பின்மை, நிமிர முடியா நெருக்கடிகள் என,
பல விடயங்கள் அவர்களைப் பாதித்திருந்ததால்,
தமிழினத்தின் அறிவுலகப் புதிய தலைமுறை,
ஓர் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
அதென்ன பாதிப்பு என்கிறீர்களா?
ஆளுமையின்மை.
இதுவே மேற் கேள்விகளுக்கான ஒரே பதிலாம்.தனிமனித எழுச்சிக்கும் ஓர் இனத்தின் எழுச்சிக்கும்,
ஆளுமை என்பது மிக அவசியமானது.
கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை என,
பல்துறைப்பட்ட ஆற்றல்கள் தனிமனித, சமூக உயர்ச்சிக்கு அவசியமானவை.
ஆனால், இவற்றால் மட்டும் உயர்வுகள் கிட்டிவிடப்போவதில்லை.
ஒரு மரத்தை அதன் கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என,
பலவும் அழகு செய்யலாம்.
அன்றேல் பயன் செய்யலாம்.
ஆனால், இவையெல்லாவற்றின் உயிரோட்டம் தங்கியிருப்பது அம்மரத்தின் வேரில்தான்.
மேற்சொன்ன அனைத்தும் வேர் கருகின் கருகிப்போம்.
அதுபோலத்தான்,
கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை எனும்,
அனைத்துத் திறமைகளின் பின்னணியில் இருப்பது ஆளுமையே.
அது இன்றேல் இவையனைத்தும் இருந்தும் பயன் அன்றாம்.
அந்த உயர்ச்சியின் உயிரனைய ஆளுமையைத்தான்,
நம் இளையோர் இன்று இழந்து நிற்கின்றனர்.இன்றைய எமது இளைஞர்களிடம் மற்றைய திறமைகள்,
அனைத்தும் நிறைந்து கிடக்கின்றன.
ஆனால், ஆளுமையின்மையால் இவற்றின் பயனை அடையமுடியாமல்,
நம் இளைஞர்கள் தத்தளிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.ஒரு காலத்தில் நம் இனத்தில் அறிஞர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்,
ஆளுமைமிக்கவர்களாய் தலைமைப் பண்போடு செயலாற்றினார்கள்.
அதற்காம் சில உதாரணங்கள் சொல்கிறேன்.தமிழினத்தின் அன்றைய அரச அதிபர்கள்,
இன்றைய மத்திய அமைச்சர்களை விடப் பெரிதும்,
துணிவும் ஆளுமையும் மிக்கவர்களாய் கம்பீரத்துடன் வாழ்ந்தனர்.
பிரதமர், ஜனாதிபதி போன்றோரின உத்தரவுகளைக் கூட ஆராய்ந்து,
உடன்பாடின்றேல் அவற்றை நிராகரிக்கும் ஆற்றல் அவர்களிடமிருந்தது.
யாழ். நூலக எரிப்பின்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். இட்ட உத்தரவை,
எதிர்த்து நிற்கும் துணிவுடன் அன்றைய யாழ் அரசஅதிபர்,
இருந்ததாய்ப் பலரும் சொல்வார்கள்.
இது அன்றைய நிர்வாகிகளின் ஆளுமை.அதுபோலவே நம் கல்வியாளர்கள்,
உலக அரங்கைச் சமன் செய்யும் ஆற்றலோடும் ஆளுமையோடும் அன்று திகழ்ந்தார்கள்.
யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராய் இருந்த சபாலிங்கம்,
சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபராய் இருந்த ஆனந்தராஜா,
ஹாட்லிக் கல்லூரி அதிபர் பூரணம்பிள்ளை ஆகியோரின் ஆளுமையை,
இன்றும் யாழ்ப்பாணம் பேசுகிறது.
அதற்குப் பின்னர்கூட ஆளுமைமிக்க கல்வியாளர்கள் நம் மண்ணில் இருந்தார்கள்.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் அட்டூழியங்கள் செய்து முடித்திருந்த வேளையில்,
மூடியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்காய்,
அப்போதைய இலங்கைக்கான இந்திய இராணுவக் கட்டளைத்தளபதி மஞ்சித்சிங்,
யாழ்பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டியபோது,
'எங்கள் மண்ணில் அழிவுகளைச் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?" என்று,
அந்தப் பயச் சூழ்நிலையிலும் பேராசிரியர் டாக்டர் கூல் துணிந்து பேசியதைக் கேட்டு,
அந்த இராணுவ அதிகாரியே அதிர்ந்து பணிந்தாராம்.
இச் சம்பவத்தை பிறர் சொல்ல அறிந்து மகிழ்ந்திருக்கிறேன்.
இவை அன்றைய கல்வியாளர்களின் ஆளுமை.அன்றைய நம் அரசியல்வாதிகளைக் கண்டு,
பெரும்பான்மையின அரசியல்வாதிகளும், மற்றை நாட்டுத் தலைவர்களும் கூட,
மனதால் மரியாதை செய்யும் நிலை இருந்தது.
தந்தை செல்வாவின் இறுதிக்கிரியை முற்றவெளியில் நடந்தபோது,
அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்கள்,
உயர் மேடையில் நின்று உரையாற்றிய தொனியைக் கேட்டு,
அந்நிகழ்வுக்கு வந்திருந்த சிங்களத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதர்களும்,
மெய்சிலிர்த்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன்.
யு.என்.பி. கட்சி தேர்தலில் பெருவெற்றி பெற்று,
முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தபோது,
நமக்கு எதிரானவர் அவர் எனத்தெரிந்திருந்தும் ஜனநாயகத்திற்கு மாறான செயற்பாடு இதுவென,
அமிர்தலிங்கம் உரையாற்றியபோது இலங்கைப் பாராளுமன்று அதிர்ந்தது உண்மை.
அமரர் அமிர்தலிங்கம் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியுடன்,
பல உலகத்தலைவர்கள் சேர்ந்திருந்த விருந்தில் கலந்து,
அவர்களுக்குச் சமமாய் இருந்து உரையாடும் ஆற்றலும் தகுதியும் பெற்றிருந்தார்.
இது அன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமை.இன்று இவை ஏதும் எம் இனத்திடம் இல்லை.
நிர்வாகத்திலோ, அறிவுலகிலோ, அரசியலிலோ,
இத்தகைய துணிவுமிக்க ஆளுமையாளர்களை காண்பதென்பது
அரிதிலும் அரிதாகிவிட்டது.
அண்மைக்காலத்தில்,
எனக்குத் தெரிந்து சத்தியம் சார்ந்து துணிந்து ஆளுமை செய்பவர்களாய்,
மேல் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனையும்,
யாழ் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவையுமே காணமுடிகிறது.
அவர்கள் பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள்.
எவர் எதைச் சொன்னாலும் அவர்களது ஆளுமையை ரசிக்கவேண்டித்தான் இருக்கிறது.
வேறுவேறு துறைகளில் வெளிப்படாமல் ஒருசிலர் இருக்கக்கூடும்.
பெரும்பான்மை பற்றிச் சொல்வதானால்,
நம் இனம் ஆளுமையாளர்களை இழந்து நிற்பதே உண்மையாம்.வலியோரை வழிமொழியும் அறிஞர்களே,
கல்வியுலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.
மேலதிகாரிகள் காலால் இட்ட கட்டளையை,
தலையால் செய்யக் காத்திருக்கும் கோழைகளே,
நிர்வாக உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.
தம்மக்கள் மத்தியில் வீரவசனம் பேசிவிட்டு,
கொழும்பில் பேரின அரசியல்வாதிகளுக்கு கால்தடவிச்சலுகைபெறும்,
வேடதாரிகளே அரசியல் உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.
இந்த மூன்று வர்க்கத்தாரும்தான்,
இன்றைய நம் இளைஞர்களின் ஆளுமை இலட்சியங்கள்.
என்னே நம்விதி.எப்படி இருந்த இனம் இன்று எப்படி ஆகிவிட்டது?
மேற்சொன்ன மும்மூர்த்திகளின் ஆளுமையைப் பின்பற்றி வாழத்தலைப்பட்டால்,
ஓர் இளையதலைமுறை எப்படி நிமிரும்?
தாம் பொய்யர்கள் எனத் தெரிந்துகொண்டு,
அப்பொய்மை வெளிப்படாமல் இருப்பதற்காக,
இளையோரின் உணர்ச்சிகளை தேசப்பற்றின் பேரால் தூண்டி,
தம் மாயவலைக்குள் மடக்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
இப்பாரிய மாயவேலியை உடைத்துக் கொண்டு,
ஆளுமை மிக்கவர்களாய் நம் இளையோர் மாறுவது எங்ஙனம்?
அது பற்றி உங்களுடன் பேசத்தான் இக்கட்டுரை.இழந்த ஆளுமையின் மீட்சிக்காய்,
நம் இளையோர் செய்யவேண்டிய வேலைகள் எவை?
அவற்றைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
அவைபற்றி ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.நம் இளையோரின் ஆளுமையின்மையின் முதற்காரணம்,
இனத்துள் ஆளுமை முன்னுதாரணங்கள் இல்லாமை என்பது பற்றி முன்னர் பார்த்தோம்.
மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?
நாமே நம்மை நிமிர்த்தவேண்டியதுதான்!
நம் இளையவர்கள் ஆளுமைக்கான முதற்செயற்பாடாக,
பன்மொழித்திறமையை உடனடியாக வளர்க்கவேண்டும்.
நம்தமிழ் மண்ணைவிட்டு இலங்கை அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால்,
சிங்கள மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை.
அதுபோலவே உலக அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால்,
ஆங்கில மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை.
இவ்விரு மொழி பயிற்சியின்மையே,
நம் இளையோரின் ஆளுமையின்மையின் இரண்டாம் காரணம் என்பேன்.சிங்கள, முஸ்லிம், மலையக இனத்தார் இவ் உண்மையைத் தெரிந்துகொண்டு,
மும்மொழிப் பயிற்சி பெற்று இன்று ஆளுமையாற்றல் மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள்.
மொழியாற்றல் வந்ததுமே,
எவருடனும் தம் பிரச்சினையைப் பேசித்தீர்க்கும் ஆற்றல் வர,
ஆளுமையின் அரைப்பகுதி சாத்தியமாகிவிடுகிறது.
இன்றைய புதியதலைமுறை அரசியல்வாதிகள், அறிஞர்கள், நிர்வாகிகள் என,
பெரும்பான்மையினோர் இப்பன்மொழி ஆற்றலை இழந்திருப்பதால்த்தான்,
தம் கருத்தை மற்றவர்க்கு உரைக்கும் திறனின்றி,
ஆளுமை அற்று அடிமைப்பட்டு கூசிக்குறுகி நிற்கின்றனர்.
மற்றைய இனங்களின் இளையோர் இம் மொழியாற்றலால் ஆளுமைபெற்று,
நிமிர்ந்து நிற்பதைக் கண்டு வியக்கிறேன்.
தென்பகுதிகளில் கல்லூரிகள் முடியும் வேளையில்,
சில சந்தர்ப்பங்களில் வீதிவழியால் செல்ல நேரிடும்.
அப்போது கல்லூரி முடிந்து வரும் பேரின இளைஞர்களைக் காண்பேன் .
அவர்களின் கம்பீரம், இளமைக்கே உரித்தான உற்சாகம்,
மேன்மையுறும் நடையுடை பாவனை இவற்றையெல்லாம் காண்கையில்,
எம் இளைஞர்கள் சற்றுப்பின்தங்கி விட்டார்களோ என எண்ணி என் நெஞ்சம் வாடுவதுண்டு.பரீட்சைகளில் மற்றை இனத்தாரைவிட,
சிறந்த சித்திகளைப் பெற்ற எம்முடைய இளைஞர்கள்,
பன்மொழிப் புலமையின்மையால் மாணவர்கள் ஒன்றுகூடும் இடங்களில்,
கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கின்றனர்.
பல ஆற்றல்கள் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமையால் ஏற்படும் நாணத்தில்,
நம் இளையோரின் ஆளுமை அப்படியே நசிந்து போகிறது.ஆளுமையின்மையின் மூன்றாவது காரணியாய் இருப்பது,
நம் கடந்தகால வரலாறு.
கடந்த காலங்களில் நமது இயக்கங்களாலும்,
இடையிடை உள் நுழைந்த பிற இராணுவங்களாலும்,
நம் மக்களுக்கு உபதேசிக்கப்பட்ட ஒரே மந்திரம்,
கட்டளையை ஏற்றுப் பணிந்து போ! என்பதுவேயாம்.
இம்மந்திரக்கட்டிலிருந்து இன்றும் நம் இளையோர் விடுபடவேயில்லை.
இளையோர் என்ன இளையோர் முதியோரும்தான்!
சிறுமைகண்டு பொங்குதல் என்பதை நம் இனத்தார் மறந்து பலகாலம் ஆயிற்று.
சிலர் பொங்குவதாய்ப் பொய்மை செய்கிறார்கள்.
பின்னர் தம் சுயநலத்திற்காய்ப் பணிந்து திரைமறைவில் பாதம் வருடுகிறார்கள்.
அடங்கிப்போதல், நழுவிப்போதல், பிரச்சினைகளைத் தவிர்த்தல்,
நமக்கேன் என்று இருத்தல், சுயகருத்தின்மை போன்ற,
ஆளுமைக்கெதிரான செயற்பாடுகலெல்லாம்,
நற்பண்புகளாய் நம் மக்கள் மத்தியில் உபதேசிக்கப்படும் அவலம்,
இன்று நம் இனத்தில் வேரூன்றி இருக்கிறது.
பெரியவர்களின் இந்த ஆளுமையற்ற போக்கினையே,
இளையோரும் பின்பற்றுதல் இயல்பன்றோ!
அதனால்த்தான் நம் இளையோர் மேற் பண்புகளோடு,
நல்ல பிள்ளைகளாய்த் தம்மைக் காட்டி நிற்கின்றனர்.
இழிவை ஏற்றமாய்ப் பதிவு செய்யும் முயற்சி.மொத்தத்தில்,
முன்னுதாரணமின்மை, மொழிப்பயிற்சியின்மை, சுயசார்பின்மை என்பவையே,
பெரும்பாலும் நம் இளையோரின் ஆளுமையின்மையின் காரணங்களாயின.இவற்றை யார் நீக்குவது?
எங்ஙனம் நீக்குவது?
இளையோரை ஆளுமைமிக்கவர்களாய் எங்ஙனம் ஆக்குவது?
இவைதான் இன்று நம் இனத்தின் முன் இருக்கும் பெரிய கேள்விகள்.குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது.
பட்டிமண்டபம் பேசிப்பேசி கம்பன்கழகத்தார்க்கு,
பிழைபிடிப்பதில் வித்தகம் வந்துவிட்டது.
பிழைபிடித்து என்ன பயன்?
சரியைச் செய்யவேண்டாமா?
எல்லோரது பிழைகளையும் எடுத்துக் காட்டும் கம்பன்கழகம்,
மேற்படி பிழைகளை நீக்கவும் மாற்றவும் ஏதேனும் முயற்சி செய்யுமா?
உங்கள் மனக்கேள்விகள் எங்கள் செவிகளில் பதிவாகின்றன.உங்கள் கேள்விகள் நியாயமானவைதான்.
செய்யவேண்டும் என நாங்களும் விரும்பத்தான் செய்கிறோம்.
உங்களின் உதவியின்றி நாங்கள் தனித்து எதனைச் செய்யமுடியும்?
தாய் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் இனத்தார்,
தீமைகளை நடக்கவிட்டு பின் அதற்கான பிராயச்சித்தங்களைச் செய்வதையே,
தொண்டு என நினைக்கின்றனர்.
அத் தொண்டுகளுக்கே அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
'கருணையைக் காட்டுவதற்கு முன் நிபந்தனையே,
மற்றவர்கள் கஷ்டப்படவேண்டும் என்பதுதானே"
என்று முன்பு ஓருமுறை எங்கள் கவியரங்கில்,
கவிஞர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பாடியது நினைவிருக்கிறது.
தீமைகள் வருவதை முன் உணர்ந்து தடுக்கும் முயற்சிகளை,
நம்மவர்கள் தொண்டாய்க் கருதுவதில்லை.
அத்தொண்டுகளுக்கு உதவிபுரிய விரும்புவதுமில்லை.
காரணம், முன்னைய செயற்பாட்டில் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும்.
பின்னயதில் அது கிடையாது என்பதேயாம்.
பிழைகளும் அதற்கான பிராயச்சித்தங்களும் நடந்துகொண்டேயிருக்கவேண்டும்.
அப்பிழைகள் வாராமல் தடுத்து சரிகளைச் செயற்படுத்தும் முயற்சிகள் தேவையற்றவை.
இதுதான் இன்றைய ஈழத்தமிழர்களின் சித்தாந்தமாம்.கடந்த நாற்பதாண்டுகாலமாக கடுமையான போர்க் காலத்திலும்,
மக்கள் மனதை ஆறுதல்படுத்தி,
வாழ்வு மீண்டும் மலரும் என நம்பிக்கையூட்டி,
மொழிப்பற்றும் இனப்பற்றும் மதப்பற்றும் உருவாக்கி,
ஆளுமையும் அறமும் புகட்டி நாம் செய்த தொண்டுகளுக்கு,
நம் இனத்தாரிடமிருந்து இன்றுவரை போதிய ஆதரவு கிட்டவில்லை என்றே சொல்வேன்.
'நமக்கென்ன? எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்,"
என்றும் ஏனோ நம்மால் இருக்கமுடியவில்லை.
அதுதான் எங்கள் குறைபாடு.அதனால் எம் இளையோரின் வீழ்ச்சியின் அடிப்படையாயிருக்கும்
ஆளுமையின்மை எனும் பெரும் குறையை நீக்கி நிறைவுண்டாக்க,
கம்பன் கழகத்தால் புதிய முயற்சி ஒன்றை எடுக்க விரும்புகிறோம்.
அதற்கான ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறோம்.
அதென்ன புதிய முயற்சி என்கிறீர்களா?
அதுபற்றி விரிவாய்ச் சொல்கிறேன்.இளையோரிடம் ஆளுமை வளரவேண்டும்.
அவர்களால் நம் இனம் உயரவேண்டும்.
அதற்கான ஒரு சிறிய கதவை நாம் திறந்தால் என்ன? எனும் எண்ணம் தோன்றியது.
அவ் எண்ணம் என்ன? என்பதை சிறிது விபரிக்கிறேன்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வருவதற்கும்,
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கும் இடையில்,
கிட்டத்தட்ட ஆறுமாதங்களை நம் இளைஞர்கள் வீணே கழிக்கவேண்டியிருக்கிறது.
இந்த ஆறுமாதங்களைப் பயன்படுத்தி நம் இளையோர்க்கு,
ஆளுமை மற்றும் பன்மொழிப் பயிற்சிகளை வழங்கினால் என்ன? என்று தோன்றுகிறது.
அப்பயிற்சிக்கான வழிமுறைகளைப் பின்வருமாறு அமைக்கலாம் என கருதுகிறோம்.முதல் நிலையில்,
பரீட்சை முடிவுகளை வைத்தும் அவர்களது இயல்பாற்றலைப் பரிசோதித்தும்,
இருபது அல்லது முப்பது மாணவர்களை தேர்ந்தெடுப்பது.
பல்கலைக்கழகம் புகும் முழு மாணவர்களுக்கும்,
மேற்பயிற்சிகளை நடத்தும் பலம் இப்போதைக்குக் கம்பன்கழகத்திடம் இல்லை.
அதனாலேயே தேர்ந்தெடுக்கும் மாணவர் தொகையை எல்லைப்படுத்த நினைக்கிறோம்.
தேரந்தெடுக்கப்படும் மாணவர்களில் ஆண், பெண் என இருசாராரும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இப்பணிக்கு பொருளாதார ரீதியாகப் பலரும் துணை செய்ய முன்வந்தால்,
தேர்ந்தெடுக்கப்படும் மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும்.மேற்பயிற்சி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கொண்டதாய் அமையும்.
இவ் ஆறுமாதப் பயிற்சியிலும் மாணவர்கள் முழுமையாய்ப் பங்குபற்றவேண்டும்.
மாணவர்களுக்கு தங்குமிடவசதியும், உணவு முதலியவைகளும் வழங்கப்படும்.
தேவையேற்படும் பட்சத்தில் மாணவர்களிடம் அடிப்படை கட்டணம் பெறப்படும்.
கொழும்பு, மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு எனும் தமிழ் பிரதேகசங்களிலும்,
எவையாவது இரண்டு சிங்கள பிரதேசங்களிலும்,
மாதந்தோறும் இம்மாணவர்கள் இடம் மாற்றித் தங்கவைக்கப்படுவர்.
ஆண்களுக்குத் தனியிடமும் பெண்களுக்குத் தனியிடமும்,
அவர்களுக்கான ஆண், பெண் பராமரிப்பாளர்களும் ஒழுங்கு செய்யப்படுவர்.


மேற்கு நாடுகளிலிருந்து அழைக்கப்படும் ஆங்கிலேய விரிவுரையாளர்களே,
ஆங்கில மொழிப்பயிற்சியினை நடாத்துவர்.
அதுபோலவே சிங்கள மொழிப்பயிற்சிக்கு சிங்கள ஆசிரியர்களே நியமிக்கப்படுவர்.
தகுதிபெற்ற தமிழ் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் அறிவும் வழங்கப்படும்.
அதுபோலவே பன்மத அறிவும், அவ்வவ் மத அறிஞர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படும்.
இவைதவிர கணினிப்பயிற்சி, ஆளுமைப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி போன்றவைகளும்,
தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இவை எமது தற்போதைய அடிப்படை எண்ணங்கள்.கலாசார, இனபகிர்வுக்காக,
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள்,
குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவ்விரண்டு வாரங்கள்,
சிங்கள, முஸ்லிம், மலையக, பறங்கி இனங்களைச் சார்ந்த இல்லங்களில்,
தங்கவைக்கப்படுவர்.
மற்றைய இனங்களுடனான உறவு வளர்ச்சிக்காக,
இம் முயற்சி செயற்படுத்தப்படும்.பயிற்சியின் இறுதி மாதத்தில் இம்மாணவர்களுக்கு,
மிகப்பெரிய நிறுவனங்களில் ஓரிரு நாட்கள் நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும்.
உயர் அதிகாரிகளைச் சந்திக்கும் முறை,
வங்கி முதலிய நிறுவனங்களைக் கையாளும் முறை,
உயர் ஆளுமையாளர்களைச் சந்திக்கும் முறை,
நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்ணும் முறை போன்றவை
அனுபவபூர்வமாக மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
வசதிப்பட்டால் உயர் அரசியல்வாதிகளையும்,
பெரு நிறுவனத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து,
உரையாடும் வாய்ப்புக்கள் உண்டாக்கிக் கொடுக்கப்படும்.இவைதவிர,
தினம் ஒரு ஆளுமையாளரைச் சந்திக்கும் வாய்ப்பு,
ஆளுமையாளர்கள் பற்றிய உரை,
நவீன செயன்முறை ஊடான ஆளுமைப் பயிற்சி,
தனித்த சுய ஆற்றலுக்கான வெளிப்பாட்டுப் பயிற்சி,
ஊடகச் செயற்பாடுகள் பற்றிய பயிற்சி,
சட்ட, மருத்துவ, இராணுவ நெறிமுறைகள் பற்றிய அறிவு,
பல்லின கலை, (இசை, நாடகம்) இலக்கிய அடிப்படை அறிமுகம்,
விளையாட்டுத்துறைப் பயிற்சி,
பல நாட்டு உணவுவகை அறிமுகம்,
குறித்த சில நிகழ்வுகளில் பங்கேற்கும் முறை, மற்றும் உடையலங்காரம்,
அதிர்வுகள் தரும் விடயங்களை எதிர்கொள்ளும் முறை,
சமூகத்திற்கு உதவும் மனப்பாங்கு என்பனவான விடயங்களும்,
இம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.மேற்படி பயிற்சிகள்,
இராணுவ கட்டுப்பாட்டிற்கு நிகரான கட்டுப்பாட்டோடுதான்,
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இப்பயிற்சிகள் முடிந்து வெளிவரும் மாணவர்கள்,
சமூகத்தில் தனித்து இனங்காணப்படத் தக்கவர்களாய்த் திகழ்வார்கள்.இது ஒரு பெரிய கனவு.
கம்பன்கழகத்தின் இன்றைய பலத்தால் மட்டும்,
இக்கனவை நனவாக்க முடியும் என்று தோன்றவில்லை.
முதலில் எமது இந்த நோக்கத்தின் அவசியத்தை தக்கவர்கள் உணரவேண்டும்.
பின் அதற்குத் துணைபுரிய முன்வரவேண்டும்.
பாரதியார் சொன்னால் போல,
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர். 
என அனைவரையும் இத்திட்டத்திற்குத் துணைபுரிய வரவேற்று நிற்கிறோம்.
இவ்விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும்,
நம் அரசியல்வாதிகளின் ஆதரவையும்,
நம் நாட்டின் தாழ்விலாச் செல்வர்களின் ஆதரவையும் நாம் நாடி நிற்கிறோம்.
இவ் எண்ணம் பற்றிய புதிய சிந்தனைகளை,
அறிவுலகத்தாரும் ஆளுமையாளர்களும் மாணவர்களும் கூட எமக்கு வழங்கலாம்.அண்மையில் 'வேலைக்காரன்" என்ற தமிழ்ச்சினிமாவில்,
அதன் கதாநாயகன் அடிக்கடி ஒரு தொடரைச் சொல்வான்.
அத்தொடர் இன்று எம் இனத்திற்குத் தேவையானது.
அதைப் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.
சொற்களிலேயே சிறந்த சொல் 'செயல்" என்பதே
உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்குமாய்க் காத்திருக்கிறோம்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...