•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, October 26, 2018

கரணம் தப்பினால் மரணம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்


லகம் பரபரப்பாய் எதிர்பார்த்து,
ஏதோ தனிநாட்டையே பெற்றுவிட்டால்போல்,
கஷ்டப்பட்டு நாம் பெற்றுக்கொண்ட வடமாகாணசபை,
சாதனைகள் ஏதும் செய்யாமல்,
சப்பென்று தனது காலத்தை முடித்துக்கொண்டு விட்டது.
நிறைவு நாளில் முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டுகிறார்.
முதலமைச்சர் அவைத் தலைவரைக் குற்றஞ்சாட்டுகிறார்.
மொத்தத்தில்  மிஞ்சியது குற்றப்பத்திரிகைகள்தான்.
யார் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பதைவிட,
இவர்கள் நடத்தும் குற்றச்சாட்டு அஞ்சலோட்டத்தால்,
மாகாணசபையின் தோல்வி தெளிவாய் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாம்.
✜ ✜ ✜

வடமாகாணத்தவர்கள் அறிவாளிகள்.
வடமாகாணத்தவர் திறமைசாலிகள்.
வடமாகாணத்தவர் ஆளுமையாளர்கள்.
வடமாகாணத்தவர்கள் தீர்க்கதரிசனமிக்கவர்கள்
என்றெல்லாம் பலர் மனதிலும் இருந்த கற்பனைகள்,
நம் மாகாணசபையின் செயற்பாட்டால் சுக்குநூறாகியிருக்கிறது.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தரும்,
அவரது அடிப்பொடியான சுமந்திரனும்,
தம்மோடு இணைந்திருந்த மாற்றணியினரை அலட்சியம் செய்து,
கெஞ்சிக் கூத்தாடி முன்னைநாள் நீதியரசரை,
முதலமைச்சர் வேட்பாளாராய்க் கொண்டுவந்தபோது,
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பலரும்கூட,
தமிழரின் கெட்டித்தனத்தைப் பாருங்கள்.
கட்சியைக் கடந்து ஓர் அறிவாளியை உள்ளீர்த்திருக்கிறார்கள்.
இவர்கள் கையில் ஒரு நாடு போனால் இப்படித்தான் திட்டமிட்டு,
அந்த நாட்டை உயர்த்திவிடுவார்கள் என்றெல்லாம் பரவலாகப் பேசினார்கள்.
ஆனால் அத்தனை எண்ணங்களையும் வடமாகாணசபையின் தோல்வி,
சுக்குநூறாய் உடைத்துச் சிதறடித்திருக்கிறது.
தோற்றது வடமாகாணசபை அல்ல ஈழத்தமிழரினம்!
✜ ✜ ✜

கடும்போரால் பெரும் பாதிப்புற்று,
உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடைமையிழப்பு என,
பல்வகை இழப்புக்களையும் சந்தித்து,
'அலமந்து" நின்ற தமிழர்களை,
கைகொடுத்து நிமிர்த்தும் என பலரும் கருதிய வடமாகாணசபை,
சகோதர பகைக்களமாய் மாறி,
எவருக்கும் பயனின்றி வீணே வீழ்ந்திருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்த உட்கட்சிப் பூசலை,
(இனி அவரை சுருக்கமாய் மு.முதல்வர் என்றே அழைப்போமாக!,
இச்சுருக்கத்திற்கு எவரும் வேறு அர்த்தம் கற்பித்தால்,
அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.)
பல சகுனிகள் மெல்ல மெல்ல உசுப்பேத்தி,
குருஷேத்திரம் வரை கொண்டு வந்திருக்கிறார்கள்.
தலைமை ஆசையோடு துரியோதனனாய் மு.முதல்வர் அவர்கள்.
ஆத்திரம் காட்டும் வீமனாய் சுமந்திரன்.
பொ(ய்)றுமைபேசும் தர்மனாய் சம்பந்தர்.
நடுவுநிலைமை போல் காட்டி,
பிரிவை ஊதிவிடும் சகுனியாய் தமிழ்மக்கள்பேரவை,
உறவுகள் பகைவளர்க்க எதிலும் ஒட்டாமல்,
நடுநின்றால்போல் நபுஞ்சகம் செய்யும்,
கிருபர், துரோணராய் சித்தார்த்தனும் அடைக்கலநாதனும்,
தம்பிக்குக் கிடைத்த பதவிக்காய்,
நன்றி காட்டும் கர்ணனாய் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
ஏதும் இயற்றமுடியாது பிழைகளுக்காய் ஓலமிடும் விதுரனாய்,
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா.
நடுவுநிலைமை காட்ட பிழை உணர்ந்தும் பேசமுடியாத பீஷ்மராய்,
முன்னாள் சபை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம்.
இப்படியாய் என்றோ நடந்த பாரதப்போர்,
இன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது.
இவர்கள் மோதலில் பலியாகி துகிலுரியும் நிலையில்,
பாஞ்சாலியாய் நிற்கிறது நம் தமிழினம்.
அவளைக் காக்க அங்கு கண்ணன் வந்தான்.
ஈழத்தமிழினத்தைக் காக்க இங்கு எவர் வரப்போகிறார்?
எஞ்சி நிற்கும் கேள்வி இதுவேயாம்.
✜ ✜ ✜

முன்னைக் கட்டுரைகளில் பலதரமாய்,
மு.முதல்வர் மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறேன்.
திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லி என்ன பயன்?
அவரும் திருந்தப் போவதில்லை. 
நம் இனமும் திருந்தப் போவதில்லை.
வடமாகாணசபைக்குள்ளும் வெளியிலுமாய்,
மு.முதல்வரை நோக்கி கேள்விகள் குவிகின்றன.
எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தனது கடைசி உரையிலும்,
நியாயபூர்வமான தனது கேள்விகளால்,
மு.முதல்வரை மூச்சுமுட்ட வைத்திருக்கிறார்.
ஒன்றுமில்லாத மு.முதல்வரின் உரைக்கு முதலிடம் கொடுத்து,
உண்மை பேசும் எதிர்க்கட்சித் தலைவரின் உரையை இருட்டடிப்புச் செய்து,
தம் பத்திரிகா(அ) தர்மத்தைப் பறைசாற்றி நிற்கின்றன சில ஊதுகுழல் பத்திரிகைகள்.
'இவர்தான் இடையூறு செய்தார்" என்று,
மு.முதல்வர் விரல் நீட்டிய அவைத் தலைவர் சிவஞானம்,
தான் இடையூறு செய்யாது முதலமைச்சருக்கு உதவிய பட்டியலை உதறித்தள்ளியிருக்கிறார்.
இவர்களது இந்தக் கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில் சொல்லமுடியாது,
போரில் பலியான புண்ணியர்களின் பெயர் சொல்லி,
தமிழினத்தின் வேரில் விஷம் பாய்ச்சி நிற்கிறார் மு.முதல்வர் அவர்கள்.
✜ ✜ ✜

வந்தபோது தாடியும் பொட்டுமாய் தவமுனிவராய்க் காட்சி தந்த,
மு.முதல்வரின் தோற்றம் இன்று முற்றாய் மாறி,
வலைவிரிக்கும் வஞ்சக வடிவமாய் பலராலும் பார்க்கப்படுகிறது.
பதவி ஆசை,
அவ் ஆசைக்காய் இனத்தைப் பிரிக்க நினைக்கும் இழிசெயல்,
நிர்வாகத் தோல்வி,
ஊழல் ஒத்துழைப்பு,
செய்நன்றி மறத்தல்,
தன் உணர்வு நோக்கிய பிடிவாதம்.
முயற்சியின்மை என,
மு.முதல்வரின் மேல் மற்றவர்களால் சாட்டப்படும் குற்றங்களின் வரிசை,
அனுமார் வாலாய் நீண்டுகொண்டே போகிறது.
அதுபோலவே கேட்போர்க்குப் பதில் சொல்லமுடியாது,
ஆங்காங்கே நடக்கும் கூட்டங்களில்,
மு.முதல்வர் வாசித்து வரும் கட்டுரைகளின் நீளமும்,
அதே அனுமார் வாலாய் நீள்கின்றன.
மற்றவர்கள் தன்மேல் சாட்டும் குற்றங்களுக்கு,
பதில் இல்லாமலும், பதில் சொல்லாமலும் செயற்படும்,
மு.முதல்வரின் போக்கில் ஜனநாயகத்தன்மை சிறிதுமில்லை.
✜ ✜ ✜

கடும் போர்க்காலத்தில் அரச அரவணைப்பில் உயர் பதவிகள் வகித்திருந்து,
தமிழர் இழப்புப்பற்றி கருத்தேதும் கூட உரைக்காமலிருந்தவர்,
இன்று தன்னை சுதந்திரப்போராளியாய் வாயால் வளர்க்கிறார்.
அவரை ஊக்கப்படுத்தவும் ஒரு கூட்டம் சுழன்று செயற்படுகிறது.
அக்கூட்டத்தினரிடம் மு.முதல்வர் பற்றிய விசுவாசத்தைவிட,
தலைமைக்கனவுகளும் பதவிக் கனவுகளும்,
கூட்டமைப்பு மீதான தனிப்பகைகளுமே மேலோங்கி நிற்கின்றன.
✜ ✜ ✜

கூட்டமைப்பில் தனிக்கோலோச்சலாம் என நினைந்து,
மற்றவர்களை மதியாது செயற்பட்ட தமிழரசுக்கட்சியினருக்கு,
மு.முதல்வரை முன்னிறுத்தி மற்றவர்கள் வைத்திருக்கும் சதுரங்கச் 'செக்",
அவர்களை முழி பிரட்ட வைத்திருப்பதும் உண்மையே.
மொத்தத்தில்,
இவர்கள்தாம் நம் இரட்சகர்கள் என அப்பாவித் தமிழ்மக்கள் நினைத்திருந்த,
அரசியல் தலைவர்களால் மீண்டும் ஒருதரம் நம் இனம் வீழப்போகிறது.
✜ ✜ ✜

முன்பும் பலதரம் சொல்லியிருக்கிறேன்.
ஏமாறுகிறவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் போகிறார்கள்.
பொய்யான தலைவர்கள் உருவாகின்றார்கள் என்றால்,
மக்கள் பொய்யானவர்களாய் இருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்.
போராளிகள் காலத்திலும் நாம் இதைத்தான் செய்தோம்.
வன்னி வரையும் தாய்மண் பற்றும்,
வன்னி தாண்டியதும் வெளிநாட்டுப் பற்றுமாய் வாழ்ந்தவர்கள்தான் நாம்.
இனவிடுதலைபற்றி வீரியமாய்ப் பேசிய பலர்,
வெளிநாடு ஒன்று விசாவுக்காய் கதவு திறந்தவுடன்,
பாய்ந்தோடிய பரிதாபத்தை பல தரம் பார்த்திருக்கிறோம்.
இப் பொய்மையை உணர்ந்ததால்த்தானோ என்னவோ,
இயக்கங்களும் மக்களை  மந்தைகளாய் மேய்த்திருந்தன.
பொய் வளர்த்து நாம் பட்ட புன்மைகளுக்கு ஓர் அளவில்லை.
உலகமே அதிரும்வண்ணம் அழிவுகளைச் சந்தித்த பின்பும்,
இன்னும் நாம் திருந்தவில்லை.
இயக்கங்களைப் போலவே,
ஒற்றுமை குலைத்து தம் ஆணவ முனைப்போடு,
இன்றைய தலைவர்களும் செயற்படத் தொடங்கிவிட்டனர்.
நிறுத்தும்! இந்த அநியாயத்தை என்று,
உறுதியாய் உரைக்காமல் பொய்ச் சுதந்திர உணர்ச்சி காட்டி,
அவரவர்க்கு ஏற்றாற் போல்,
வால் பிடித்து வழிமொழிந்து நிற்கிறது நம் இனத்தில் ஒரு கூட்டம்.
✜ ✜ ✜

இனி என்ன நடக்கப்போகிறது?
எல்லோர் மனத்திலும் இக்கேள்வியே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அளவுக்கதிகமாக பொறுமை காத்து வாய் மூடி நின்ற,
சம்பந்தரையே மதிக்காத மு.முதல்வர்,
கஜேந்திரகுமாருடனும், சுரேஷ_டனுமா நல்லபடி உறவு பேணுவார்?
காலம் இக்கனவை விரைவில் பொய்ப்பிக்கும்.
விரும்பினால் தமிழரசுக்கட்சியும் தன்னோடு இணையலாம் என்ற,
மு.முதல்வரின் ஆணவச்சிகர அறிவிப்பு வந்த கையோடு,
கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
கையுதறிக் கழண்டுவிட்ட செய்தியை,
நேற்றைய ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இவர்கள்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபோது,
மு.முதல்வருக்கு 'முண்டு" கொடுத்தவர்கள். 
சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிற்றம்பலம் ஆகியோரும்,
ஒட்டாது நின்று தம் உணர்வைப் பதிவு செய்துவிட்டனர். 
மு.முதல்வர் கொழும்பு திரும்பும் நாள்,
அதிக தூரத்தில் இல்லை என்பதை அறியமுடிகிறது.
✜ ✜ ✜

ஒளிவு மறைவின்றி நம் கண்முன் நடக்கும் காட்சிகள் இவை.
எந்த ஆதாரமுமின்றி இன்னும் மு.முதல்வரை,
பிரபாகரனுக்கு நிகராய் உரைத்து மகிழும் ஒருசிலர்,
இருக்கத்தான் செய்கிறார்கள்.
இத்தகையோரால்த்தான் நம் இனம் அழிவு காணப்போகிறது.
✜ ✜ ✜

மேலும் கீழும் கோடுகள் போடு,
அதுதான் ஓவியம்.
நீ சொன்னால் காவியம் என்ற,
பழைய சினிமாப்பாட்டுத்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நன்மை, தீமைகளை சார்பின்றி ஆராய்ந்து,
உண்மைவழியில் என்று நடக்கப்போகிறோமோ,
அன்றுதான் நம் இனத்திற்கு உயர்வு!
அதுவரை மீண்டும் மீண்டும் நம்முள் மோதி,
நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு நாமே செங்கம்பளம் விரிப்போம்.
தமிழின வரலாற்றில் இது மூன்றாம் அத்தியாயம்.
மூன்றாம் அத்தியாயத்தின் முதல்பகுதியிலும்,
கடந்து வந்த பாதையைச் சிறிதும் கருதாமல்,
மூடநடைபோட முனைகிறோம்.
வடமொழியில் ஒரு தொடர் சொல்வார்கள்.
விநாசகாலே விபரீத புத்தி என்பதுவே அத்தொடர்.
அழிவுக்காலத்தில் புத்தி திரிபுபடும் என்பதே,
அத்தொடருக்காம் தமிழ் அர்த்தம்.
தமிழர்க்கு மீண்டும் புத்தி திரிபுபடத் தொடங்கிவிட்டது.
மீண்டும் ஒருதரம் பேரழிவைச் சந்தித்து,
அகிலமெலாம் சென்று அழ ஆயத்தம் செய்வோம்.
✜ ✜ ✜ ✜ ✜Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...