•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, November 9, 2018

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-1 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

லகம் உலகமாய் இருக்கக் காரணமாய் இருப்பவர்கள் உயர்ந்தோரே.
அதனாற்றான் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றனர் நம் சங்கச் சான்றோர்.
அந்த அடிப்படையிலேயே,
அரசியலாளர்க்கு நீதி சொன்ன நம் திருவள்ளுவர்,
பெரியாரைத் துணைக்கொள்ளலையும்
சிற்றினம் சேராமையையும்
அவர்க்கான அவசிய நெறியாய் உரைக்கிறார்.
இன்றைய அரசியலாளர்கள்,
சிற்றினம் சேர்தலையும் பெரியாரைத் துணை கொள்ளாமையையும்,
தம் நெறியாய்ப் போற்றி வருகின்றனர்.
அறம் மாறுபட்ட இவர்தம் அரசியல் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாம்.
◆◆◆

ஓர் தலைவன் பெரியாரை ஏன் துணைகொள்ள வேண்டும்?
சிறியாரோடு ஏன் சேரக்கூடாது?
என்ற கேள்விகளுக்கு வள்ளுவர் தெளிவுபடப் பதில் சொல்கிறார்.
தலைவனின் அருகில் பெரியோர்கள் எப்போதும் இருந்தால்,
அவர்கள் தலைவனின் அதிகாரத்திற்கும் சலுகைகளுக்கும் ஆட்படாது,
அவன் பிழைசெய்யும் போது அவனை இடித்துரைத்து நெறிசெய்வார்கள் என்றும்,
நிலத்தின் இயல்பால் நீரின் இயல்பு மாறிவிடுவது போல,
சிற்றினத்தினது தொடர்பால் தலைவனது அறிவு மாறுபட்டுவிடும் என்றும் கருதியதால்த்தான்,
அவ்விரண்டையும் வள்ளுவர் தலைவர்க்கான அறநெறியாய் வலியுறுத்துகிறார்.
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை அவர். 

நிலத்தின் இயல்பால் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு.
இவை தெய்வப்புலவரின் திருக்குறள்கள்.
◆◆◆

இவையெல்லாம் முடியாட்சி காலத்தில் தமிழர்கள் போற்றிய அரசநெறிகள்.
முடியாட்சி தவறென்று இன்றைய உலகம் மக்களாட்சியைப் போற்றிற்று.
அம்மக்களாட்சி படும்பாட்டை கண்கூடாக நம் நாட்டிலேயே பார்க்கிறோம்.
இன்றைய நிலையில் நம் தேச அரசியல் முடியாட்சி, மக்களாட்சி இரண்டும் கெட்டு,
சுயநலமிகளான அரசியல்வாதிகளால் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
காரணம் நெறி செய்வார் இலாமையேயாம்!
கேட்பார் இன்றேல் தம்பி சண்டப்பிரசண்டன்  என்ற நிலையில்த்தான்,
இன்றைய நம்நாட்டு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
தலைவர்களைச் சார்ந்தவர்கள் அவர்தம் பிழைகளையும் சரியென்கிறார்கள்.
சாராதவர்கள் சரிகளையும் பிழை என்கிறார்கள்.
உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளி தெரியாமல்,
பாவம், மக்கள் இவ்விருவர் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
இங்ஙனமாய் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவ் அரசியற் குதிரைகளை,
வினாக்கயிறெறிந்து நெறி செய்வார் யார்?
மக்கள்தான் துணிவோடு முன்வரவேண்டும்!
நம் தேசத்தில் இனங்களின் தலைவிதியை நிர்ணயித்து நிற்போரிடம்,
அம்மக்கள் சார்பில் சில கேள்விகள் கேட்க மனம் விரும்புகிறது.
◆◆◆

இன்றைய நிலையில் தெற்கின் அரசியல் தலைவிதி மூவர் கையில்.
மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
மாண்புமிகு மாஜி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்போரே அவர்களாம்.
வடக்கில் அரசியல் தேரின் கயிறுபிடித்து நிற்பவர் இரா. சம்பந்தர்.
கயிறுபிடிக்க நிற்பவர் மு.முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
இவ் ஐவரிடமும் மக்கள் மன்றிலிருந்து கேள்விகள் வந்தால்?,
மக்கள் சார்பாய் சில கேள்விகளை வரிசைப்படுத்துகிறேன்.
முதலில்,

மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்..
 1. 2015 இல் நாட்டைக் காக்கவென திடீரென்று புரட்சி செய்து விஸ்வரூபம் எடுத்தவர் நீங்கள். ஜனாதிபதியானதும் நாட்டுக்கு நல்லதோர் தலைவர் கிடைத்தார் என நினையும் வண்ணம் உங்கள் ஆரம்பச் செயற்பாடுகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தீர்கள். நாட்டுக்காக கட்சிகளைக் கடந்து சிந்திக்கத் தலைப்பட்டீர்கள். ஆனால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் சென்ற நல்லாட்சியில் தோல்வியில் முடிந்ததன் காரணம் என்ன? 
 2. 'என்னையே கொன்றுவிடுவார்கள்' என்று, மஹிந்த அணியின்மேல் அன்று பாரிய குற்றத்தைச் சாட்டிய உங்களால் அவர்கள்மேல் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒரு குற்றத்தைத்தானும் நிரூபிக்கமுடியாமற் போனது ஏன்? 
 3. ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களை முன்பு குறைத்துவிட்டு தற்போது இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்துவது நியாயமா? 
 4. உங்களுக்கும் ரணிலுக்குமான தேனிலவின் முடிவு எந்த இடத்தில் ஆரம்பித்து எந்த இடத்தில் முற்றி எந்த இடத்தில் வெடித்தது? 
 5. முதலில் மஹிந்த, பின்னர் 'றோ", இன்று ரணில் என அனைவர்மேலும் கொலைக் குற்றச்சாட்டுக்களைச் சுலபமாய் வைப்பதாய்ச் செய்திகள் வருகின்றன. இவை உண்மையா? அல்லது இயலாமைக்காகவோ அனுதாபத்திற்காகவோ இங்ஙனம் உரைத்து வருகிறீர்களா?
 6. ஒன்றாய் இருந்துவிட்டு திடீரென ரணிலுடன் இணைந்து மஹிந்தவின் முதுகில் குத்தியவர் நீங்கள். தற்போது, முன்பு குற்றம் சாட்டிய மஹிந்தவுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள். இனியும் மஹிந்த அணி முழுமையாய் உங்களை நம்பும் என்று கருதுகிறீர்களா?
 7. ரணிலும் மஹிந்தவும் இணைந்து ஜனாதிபதிமீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொணர்ந்தால் என்ன செய்வீர்கள்?
 8. ஒருவேளை இந்த ஆட்சிக்காலம் வரை உங்கள் பதவி நீடித்தாலும் இனி இத்தேசத்தில் உங்களுக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
 9. இன்றைய உங்களின் குழப்பமான முடிவுக்குக் காரணம் நாட்டின் மீதான அக்கறையா?, கட்சியின் மீதான அக்கறையா? உங்கள் பதவியின் மீதான அக்கறையா?
 10. ஜனநாயகத்தைத் தழைப்பிக்க வந்ததாய் கூறி, நாட்டின் தலைமையையேற்ற நீங்கள் ஜனநாயக நெறிக்குப் புறம்பாய் ஓர் அரசைக் கலைத்ததும், ஆதரிக்கும் அணியின் பெரும்பான்மைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசுவதும் நியாயம் என்று கருதுகிறீர்களா? 
 11. மஹிந்தகூட நாகரீகமாய்ப் பேசுகிறார். நீங்கள் ரணிலை அண்மையில் பலரும் வெறுக்கும் வண்ணம் தரக்குறைவாய்ப் பேசுயிருக்கிறீர்கள். இதுதான் உங்களது அரசியல் நாகரீகமா?
மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்..
 1. உங்களை வீழ்த்திய ஜனாதிபதியே மீண்டும் உங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மனந்திறந்து சொல்லுங்கள். இனி நீங்கள் அவரை நம்பி இயங்க முடியும் என்று கருதுகிறீர்களா?
 2. கட்சியின் தலைமையை திரும்பத் திரும்ப உங்கள் குடும்பத்தாரிடமே ஒப்படைக்க நினைப்பது ஜனநாயகமாகுமா?
 3. போர் வெற்றிமட்டும், வருங்காலத்தில் உங்கள் தலைமையின் வீரியத்திற்குப் போதும் என்று கருதுகிறீர்களா?
 4. இதுவரை சிங்களத் தலைவராகவே இயங்கி வந்த நீங்கள், இனியேனும் தமிழர்களதும் தலைவராக மாறுவீர்களா?
 5. இறுதிப்போரில் நடந்த இன அழிப்பிற்காக தமிழர்களிடம் மன்னிப்புக்கோர முன்வருவீர்களா?
 6. நீங்கள் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் முறை ஜனநாயக ரீதியானது என்று நினைக்கிறீர்களா?
 7. இவ் ஆட்சி நிலைக்கும் பட்சத்தில், பழைய கடும் போக்கில்லாத, மனித உரிமைகளை மதிக்கும் ஓர் அரசை தங்களிடம் எதிர்பார்க்கலாமா?
 8. உலக நாடுகளைப் புறக்கணித்து சீனாவின் தனி ஆதரவுடன் மட்டும் இலங்கையை தலைநிமிர்த்தலாம் எனக் கருதுகிறீர்களா?
 9. ஐக்கிய தேசியக்கட்சி உங்களுடன் இணைந்து ஒரு தேசிய அரசை அமைக்கவிரும்பினால் உடன்படுவீர்களா? அதன் தலைமையை எங்ஙனம் பகிர்ந்து கொள்வீர்கள்?
 10. ஜனாதிபதி, ஆரம்பத்தில் உங்களைக் குற்றம் சொன்னார், இன்று றணிலைக் குற்றம் சொல்கிறார். நீங்கள் இருவரும் சேர்ந்து அவரை வீழ்த்தும் வாய்ப்பிருக்கிறதா?
 11. கட்சிச் செல்வாக்கோ மக்கள் செல்வாக்கோ இல்லாத மைத்திரியை ஜனாதிபதியாய் ஏற்று அரசமைக்க உடன்படுவீர்களா? 
 12. இனி வரும் காலத்திலேனும், உலகம் சுமத்தும் போர்க் குற்றச்சாட்டை மானுடத்தோடு கையாள்வீர்களா?
 13. போர்ப்பாதிப்புகளிலிருந்து மீண்டுவர தமிழ்த்தலைமைகள் சலுகைகள் கேட்டால் எந்த அளவிற்கு அவற்றை ஏற்றுக்கொள்வீர்கள்?
 14. கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இந்நாட்டில் தமிழரின் வாழ்வுரிமையையும், சமஷ்டி ஆட்சி முறைமையையும் வடக்கு கிழக்கு இணைப்பையும்  அங்கீகரிக்க முன் வருவீர்களா?
 15. கூட்டமைப்பு நாடளவிலான முக்கிய அமைச்சுக்கள் சிலவற்றை கேட்டால் அவற்றைத் தங்களால் தரமுடியுமா?
 16. போர்க் குற்றவாளிகளின் விடுதலை, காணாமல் போனோர் பற்றிய உண்மை விசாரணை, போர்ப் பாதிப்புற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டம், வடக்குக் கிழக்கின் பொருளாதார வளர்ச்சிக்கான தனித்திட்டங்கள் போன்றவற்றை அவர்கள் கோரினால் முழுமனதோடு அவற்றை வழங்க முன்வருவீர்களா?
 17. கூட்டமைப்பு ஆதரவளிக்காத பட்சத்தில் அவர்கள் மீதான பகையை தமிழ்மக்கள்மீது காட்டுவீர்களா?
 18. உங்களுக்குப் பின்னான தலைமை தம்பியர்க்கா? தனயர்க்கா?
 19. கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் நாட்டைக் காக்க என்ன செய்வீர்கள்?
மாண்புமிகு மாஜி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்..
 1. ஜனாதிபதியின் கொலைமுயற்சி பற்றிய குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
 2. பெற்ற அரசை முழுமையாய் அனுபவிக்காமல், மூன்றாம் முறையாகவும் இடையில் இழப்பதன் காரணம் உங்கள் விதியா? மதியா?
 3. உங்களின் வெளிப்படைத் தன்மையில்லாத அதிபுத்திசாலித்தனம்தான் உங்கள் மீதான பலரது வெறுப்புக்கும் காரணம் என்கிறார்கள். அது உண்மையா?
 4. நடக்கும் பிரச்சினையில் நீங்கள் தோல்வியுற்றால் கட்சி முக்கியம் என்று கருதி அதன் தலைமையை வேறெவர்க்கும் விட்டுக் கொடுப்பீர்களா?
 5. ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்த நீங்கள் வந்தவுடனேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளானது தவறில்லையா?
 6. வங்கி ஊழல் பிரச்சினையில் நீங்கள் நேர்மையாய் நடந்ததாய்க் கருதுகிறீர்களா?
 7. உங்களை இயக்கும் உலக சக்தி எது?
 8. துறைமுக நகரத்திட்ட வேலையை நிறுத்துவேன் என்று சீனாவிற்கு சவால் விட்டு ஆட்சியைப் பிடித்த நீங்கள் பின்னர் அந்த முடிவை மாற்றியமைத்ததன் காரணம் என்ன? அங்ஙனம் சீனாவிற்கு விட்டுக்கொடுத்தும் சீனாவின் ஆதரவை முழுமையாய் பெறமுடியாமற் போனதன் ரகசியம் என்ன?
 9. சீனக் கடன்களிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா?
 10. நல்லாட்சி அமைத்தபின்பும் இன்றுவரை தமிழர் பிரச்சினையில் போதிய முன்னெடுப்புக்களைச் செய்யத்தவறியது ஏன்?
 11. சம்பந்தன் தன் அணியினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தும் பலதரம் உங்களுக்கு கைகொடுக்க முன்வந்தார். அப்படியிருந்தும் தமிழ்மக்களின் ஆதரவை அவர் பெறத்தக்கவகையில் சில சலுகைகளையேனும் அவர்க்கு நீங்கள் வழங்காதது ஏன்?
 12. சிங்கள அரசியலமைப்புச் சட்டப் பிரதியில் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்கிறார்கள். இது உண்மையா? பொய்யாயின் அதை இன்னும் நிரூபிக்காமல் இருப்பது ஏன்? 
 13. உண்மையாயின் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு அரசியல் சட்ட அமைப்பு இருக்க அனுமதித்தது ஏன்? 
 14.  ஜனாதிபதியின் முடிவு பிழையாயின் இதுவரை உயர் நீதிமன்றத்தை நீங்கள் நாடாது ஏன் இருக்கிறீர்கள்? 
 15. தமிழர் கூட்டமைப்பு இம்முறையும் உங்களை ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறது. அதற்குப் பிரதி உபகாரமாய் கூட்டமைப்பு இந்நாட்டில் தமிழரின் வாழ்வுரிமை, சமஷ்டி ஆட்சி முறை, வடக்கு கிழக்கு இணைப்பு, நாடளவிலான சிலமுக்கிய அமைச்சுக்கள், போர்க் குற்றவாளிகளின் விடுதலை, காணாமல் போனோர் பற்றிய உண்மை விசாரணை, போர்ப் பாதிப்புற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டம், வடக்குக் கிழக்கின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் போன்றவற்றை கோரினால் முழுமனதோடு அவற்றை வழங்க முன்வருவீர்களா?
 16. மாற்றுத்தலைமைக்கு குடும்ப உறுப்பினர்கள் என எவரும் இல்லாத நிலையில் சஜித் பிரேமதாசாவை முன்னிலைப்படுத்த நீங்கள் தயங்குவது ஏன்?
 17. ஜனாதிபதியை எதிர்த்து அலரிமாளிகையைவிட்டு வெளிவராமல் துணிந்து எதிர்த்து நிற்கிறீர்கள். உங்களின் பின்னால் அமெரிக்காவும் மஹிந்தவின் பின்னால் சீனாவும் நிற்பதாகச் சொல்கிறார்கள். உங்கள் பதவிப்போட்டியில் இலங்கையின் இறைமையை வெளிநாடுகளிடம் அடகு வைப்பது நியாயமா?
இவை தெற்கின் அரசியலார் நோக்கி,
மக்கள் எழுப்பும் கேள்விகள்.
மேற்கூறிய மூவரும் உண்மை ஜனநாயகவாதிகளாய் இருந்தால்,
மக்கள் மன்றில் இருந்து கிளம்பும் இக்கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிப்பார்கள்.
'ஜனநாயகமாவது மண்ணாவது" என்கிறீர்கள் போல!
எல்லோரும் சர்வாதிகாரத்தை நோக்கி,
மெல்ல மெல்ல நகர்கிறார்கள் போலத்தான் தெரிகிறது.
என்ன செய்ய?
இலங்கைத்தாயின் தலைவிதி அதுதான் போலும்.
இலங்கைத்தாயின் தலையில் சுதந்திரமணிமுடி,
இன்னும் எத்தனை நாட்கள் நிற்குமோ யாரறிவார்?
இன்று இலங்கைக்குள் மட்டுமன்றி, 
உலகம் பூராகவும் இலங்கையில் என்ன நடக்கப்போகிறது?
என்ற கேள்வியே விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
மஹிந்த வெல்வாரா? ரணில் வெல்வாரா? என்பதுதான்,
இன்றைய நிலையில் அனைவர் மனதிலும் நிறைந்து நிற்கும் கேள்வியாம்.
'வெல்லப்போவது யார்" என்று இந்த நிமிடம் வரையில்,
எவராலும் உறுதியாய்ப் பதிலுரைக்க முடியவில்லை.
ஆனால் ஒன்று.
தோற்கப்போவது ஜனநாயகம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது.
அவ்வளவே!
◆◆◆

என்ன உங்கள் முகத்தில் சந்தோஷத்தைக் காணோம்.
வடக்கின் அரசியலார் பற்றிய வினாக்களை கூறாமலே,
கட்டுரை முடிகிற கவலையாக்கும்.
பாராளுமன்றம் கூடி முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால்,
அவற்றை அடுத்தவாரம் பார்க்கலாம்.
அதுவரை பொறுத்திருங்கள்.
◆◆◆◆◆

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...