•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, December 14, 2018

எப்போது உனைக் காண்போம்? இதயம் வாடும் -கம்பவாரிதி இ. ஜெயராஜ்

அகில இலங்கைக் கம்பன் கழக மூத்த உறுப்பினரும், காரைநகர் நடராஜா முத்தமிழ் மன்ற இயக்குநரும் சிறந்த சமூகசேவகியுமான திருமதி இராசமலர் நடராஜா அவர்களின் மறைவுக்கு கம்பன் கழகம் செலுத்தும் அஞ்சலி.

ளம் அதிர அன்னை அவள் மறைவுச் செய்தி
         உள்நுழைய நெஞ்சமெலாம் உருகிற்றம்மா!
நிலம் முழுதும் நாம் நினைந்து தேடினாலும்
         நேசத்தில் அவர்க்கிணையாய் எவரே வாய்ப்பார்?
வளம் மிகுந்த தமிழ்தந்த உறவதாலே
         வாஞ்சையுடன் குழந்தைகளாய் எம்மைக் காத்த
நலம் மிகுந்த ராசமலர் அன்னை போனாள்
         நாமெல்லாம் துணையிழந்து வாடினோமே.

யாழ் மண்ணில் போரிடையே வாழ்ந்தவேளை
         யந்திரமாய்ச் செயலாற்றித் தன்னை வாட்டி
நீள் அன்பில் உணவு பல செய்து எங்கள்
         நிலந்தேடி வந்துண்ணச் செய்து தாயாய்
ஏழ் பிறவித் தொடர்பிதுவோ என்று எங்கள்
         இதயமெலாம் நெகிழ்ந்துருகக் கருணை செய்த
ஆழ் மனத்து அன்புநிறை அன்னை இன்று
         அவனிதனைக் கடந்தாளாம் அதிர்ந்து நின்றோம்.

பெண்ணாகப் பிறந்தாலும் பிறந்த மண்ணின்
         பெருமைதனை நிலைநாட்ட என்று தங்கள்
விண்ணார்ந்த குலப்பெருமை சிறிதுமெண்ணா
         வீதியெலாம் திரிந்து பல வீடு ஏறி
கண்ணான கலை வளர்க்கக் கைகள் நீட்டி
         கடைசிவரை உழைத்த மகள் காலன் தோற்க
விண்ணாளச் சென்றாளோ விரும்பி நின்ற
         வீறான மரணத்தால் புகழே கொண்டாள்.

அவ்வை இவளோ! என்று அயர்ந்து போக
         அற்புதமாம் வெள்ளை உடை தரித்துக் கையில்
பவ்வியமாய் தடிபிடித்து அசைந்து வந்து
         பார்த்ததுமே முகம் மலரச் சிரிக்கும் அன்னை
வெவ்விடமாய் நான் வார்த்தை வீசினாலும்
         வெறுப்பின்றி அன்பதனால் அணைத்துக் கொண்டு
எவ்விடத்தும் எனை உயர்த்திப் பேசுகின்ற
         ஏற்றமுடை அன்னையளை எங்கு காண்பேன்?

நெஞ்சுரத்தில் மலைக்கு நிகர் கொண்டு நின்றாள்
         நினைந்தேதான் பிறர் துணைகள் தவிர்த்து நின்று
சஞ்சரித்து நினைத்ததெல்லாம் முடிக்கும் அன்னை
         சலியாது தனக்கான 'சைக்கிள்' செய்து
வெஞ்சமரால் வினைகள் பல விளைந்த மண்ணில்
         வீறாக தனித்து உலா வந்து மற்றோர்
அஞ்சிடவே அவனியிலே நிமிர்ந்து நின்றாள்
         அவட்கு நிகர் அவரின்றி யாரே உள்ளார்?

கம்பனது கழகமதைக் கண்ணாய்க் கொண்டு
         காப்பதற்குப் பலகாலம் தனித்து நின்று
தெம்புடனே எம்கழகக் கோட்டம்தன்னை
         தெளிவுடனே காத்தமகள் தினமும் என்னை
தம்பியென அழைக்கையிலே தயவு பொங்கும்
         தானே என் தாயென்று நினைத்து நின்றாள்.
அம்புவியில் இவள் போல உறவு ஒன்று
         அகப்படுமோ? ஆரிவர்க்கு நிகரேயாவார்!

உன் கடமை நான் ஏதும் செய்யவில்லை
         உனக்காக எப்பொருளும் தந்ததில்லை
விண்ணளந்த உனதன்புக் கேதும் செய்யா
         வினை வருத்த வாடுகிறேன்-தாயே நீ போய்
இன்னுமொரு பிறவிதன்னில் பிறந்து நிற்பாய்
         ஏழை இவன் உன் மகவாய் அங்கு வந்து
தன்னிகரில் தாயே உன் தாள்கள் பற்றி
         தாளாது உன் கடமை முடித்து நிற்பேன்.

உன் உறவு அனைத்தையுமே என்னதாக்கி
         ஒப்பரிய பலம் செய்தாய் உறவாயன்றி
என் உயிராய் அவர்களெலாம் இணைந்து நின்று
         ஏற்றியெனை வளர்த்ததனை மறக்கலாமோ!
தன் உறவால் கழகமது பலமே கொள்ள
         தாயாக நின்றதனை ரசித்த அன்னாய்!
இன்று உனை அனைவருமே இழந்து நின்றோம்.
         எப்போது உனைக் காண்போம்? இதயம் வாடும்.
                       ***

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...