•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, May 3, 2019

காலம் கடத்தல்? -ஜெயம் கொண்டான் -லகம் காலத்தின் கையில்.
நேற்று நடந்தது,
இன்று நடக்கிறது,
நாளை நடக்கும்,
இந்த வார்த்தைகளுள்,
உலகின் இயக்கம் அடக்கம்.

நடந்தது, நடக்கிறது, நடக்கும்.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.
இம்முக்காலத்துள் சிறைப்பட்டவர்கள் மனிதர்கள்.
இது இலக்கண முடிவு.

காலம் என்றால் என்ன?
யுகம், மிலேனியம், நூற்றாண்டு,
வருடம், மாதம், வாரம், திகதி,
மணி, நிமிடம், வினாடி,
இங்ஙனம் நாம் வார்த்தைகளால் வரையறை செய்யும்,
இவைதானா?

காலத்தை வரைவு செய்ய,
நாம் அமைத்துக்கொண்ட கருவிகளின் கணிப்புத்தான் இவை.
காலமோ இவற்றைக் கடந்து நிற்பது.
காலத்திற்குள் நம் இயக்கம் அகப்பட்டுக்கிடக்கிறது.
நம் இயக்கத்திற்குள் காலம் அகப்படுவதில்லை.

ஆனாலும்,
கருவிகளமைத்துக் காலத்தைக் கணிப்பிடுவதாய்,
தொடக்க முடிவில்லாக் காலத்திற்கு,
தொடக்கமும் முடிவும் கொடுத்து,
காலம் நம் கைக்குள் வந்துவிட்டதாய்,
கனவு காண்கிறோம்.


நடந்து முடிந்தவை இறந்தகாலம்.
நடக்கப்போபவை எதிர்காலம்.
நடந்துகொண்டிருப்பவை நிகழ்காலம்.
முக்காலங்கள் எமக்குண்டா?

நம் காலக் கருவிகளின்படி,
காலம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு விநாடியிலும்,
எதிர்காலம் இறந்தகாலமாகி,
ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,
நிகழ்காலம் சாத்தியமா?
செய்தேன் - சரி.
செய்வேன் - சரி.
செய்துகொண்டிருக்கிறேன் - சரியா?

ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில்,
நேரத்தை நிறுத்திச் சிந்தித்தாலன்றி,
நிகழ்காலம் என்ற ஒன்று இல்லை.
இறந்தகாலமாகிக் கொண்டிருக்கும்,
எதிர்காலத்தின் நடுவில்,
நிகழ்காலம் என்ற ஒன்றை,
கற்பனை செய்கிறோம்,
அவ்வளவே!

ஓடிக்கொண்டிருக்கும் காலத்தோடு பொருந்தி,
நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம் மனமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
காலத்தோடு பொருந்தி மனமும் செயலும் ஓடுவதால்,
நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
கால ஓட்டத்திலிருந்து நம்மை விடுவிக்க முடிந்தால்,
காலம் நம்மைக் கட்டுப்படுத்தாது.
நாம் காலத்தைக் கட்டுப்படுத்தலாம்.
அது சாத்தியமா?

சாத்தியம் என்கின்றன சமயநூல்கள்.
மனதின் கட்டுப்பாட்டுள் ஆன்மா அகப்படாமல்,
ஆன்மாவின் கட்டுப்பாட்டுள் மனம் வருமானால்,
காலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மனம் விடுபடும்.
ஓடும் மனத்தை காலத்திலிருந்து விடுவிப்பதே யோகமாம்.

மனம் நின்றவனுக்குக் காலம் நிற்கும்.
காலம் நின்றவனுக்கே நிகழ்காலம் கிடைக்கும்.
காலங் கடந்தவன் காலனையும் கடப்பான்.
மனம் நின்றவன் ஞானி.
அவன் ஒருவனுக்கே நிகழ்காலம் சாத்தியம்.
நம் நிகழ்காலமோ வெறுங் கற்பனையேயாம்.

இறந்தகால எண்ணங்களும்,
எதிர்கால எதிர்பார்ப்புக்களுமே,
நம் நிகழ்கால வாழ்வு.
இவ்விரு காலங்களுக்குள்ளும்,
நிகழ்காலத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.
மனதை நிறுத்த முடிந்தாலே,
நிகழ்காலம் நமக்குச் சாத்தியமாகும்.

காலத்தின் கைக்குள் நாம்!
இது உண்மை.
காலம் நம் கைக்குள்!
இது வெறுங் கற்பனை.
உண்மையை விட கற்பனை சுகந்தருகிறது.
அச்சுகமும் கற்பனையே!

உண்மை சாத்தியமாகும்வரை,
அக்கற்பனையும், 
கற்பனைச் சுகங்களுமே நம்வாழ்வு.
ஆதலால் நம் சுகங்கள் என்றும் நிலைக்கப்போவதில்லை.
கற்பனைகள் நிலைப்பதெங்ஙனம்?
நிலைத்த சுகம் வரும்வரை,
நிலையாத கற்பனையில் காலங்கழிப்போம்!

வந்து கொண்டிருக்கும் எதிர்காலம்,
சென்று கொண்டிருக்கும் இறந்தகாலமாக,
இடையில் நிகழ்காலம் நிகழ்வதாய்க் கற்பனை பண்ணி மகிழ்வோம்!

இதற்குள்,
இப்பொய்யான காலக்கற்பனையை எல்லையாக்கி,
வெள்ளி விழா, மணிவிழா, பொன்விழா, வைரவிழா என,
ஆயிரம் விழாக்கள்.
அத்தனையும் கற்பனைகள்.

ஞானம் வரும்வரை,
அக்கற்பனைகள் சுகங்கள்தாம்.
காலங்கடக்கும்வரை,
அக்கற்பனைச் சுகத்தில்,
காலங்கழிப்போம்.
காலங்கடக்கும்வரை,
காலங் கடத்துவோம்.
                                      ✵✵

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...